Tuesday, October 03, 2023

ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி - என் பார்வையில்

 ஹிந்தி படங்கள் என்று வரும்போது நான் மிகவும் தேர்ந்தெடுத்த படங்களையே பார்ப்பேன். அதில் எனக்குச் சொல்லி வைத்தாற்போல்  ‘குச் குச் ஹோத்தா ஹை’, ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’, ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’,  படங்களெல்லாம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. வரிசைப்படுத்திய அத்தனையும் கரண் ஜோஹர் இயக்கிய படங்கள். அவர் இயக்கியதால் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப்பிடித்தப் படங்கள் அவர் இயக்கியவையாக அமைந்துவிட்டன. சமீபத்தில் அவர் இயக்கி வெளிவந்த ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’யின் ட்ரைலர் பெரிய தாக்கத்தைத் தராததால் நான் பார்க்காமலே இருந்தேன். என் மகள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ‘ம்மா நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டும், your type movie’ என்றால். ஒரு வழியாக நெட்ஃப்லிக்ஸில் வெளியானதால் பார்த்தேன்…


உண்மையில் இது என் type movie தான். வணிகமயமான மசாலா படத்திலும் அழுத்தமான கருத்தைச் சொல்ல முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சத்திலும் எல்லா லட்சணங்களும் பொருந்தி வந்தாற்போல் தோன்றியது. அதாவது, நகைச்சுவையான ரொமாண்டிக் படத்தில் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து, உணர்வுகளையும் உணர்ச்சிவயமான காட்சிகளையும் ஒருங்கே சேர்த்து, வெவ்வேறு பின்னணியின் கலாச்சார இழைகள் பிணையும்போது ஏற்படும் சிக்கல்கள் என்று எல்லாம் சேர்ந்து மிகச் சிறப்பாக வந்துள்ளது. அதுவும் ரன்வீர்சிங் மற்றும் ஆலியா பட்டின் நடிப்பு மிக இயல்பாக இருந்தது.


ஆலியா பட், படத்திற்குப் படம் தன் திறமையை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார். ரன்வீர் சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர். இவர்தான் ’83’வில் கபில்தேவாக இருந்தவர் என்று இந்தப் படத்தை பார்த்தால் சொல்லவே முடியாதபடி ஒட்டுமொத்தமாக உருமாறியிருக்கிறார். ஷபானா ஆஸ்மி – தர்மேந்திராவின் காதல் காட்சிகள் உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது. கிழவன் – கிழவிக்கு என்ன காதல் காட்சி என்று குழம்ப வேண்டாம். அந்தக் காட்சிகளை பார்த்தால்தான் நான் சொல்வது புரியும்.


கதை என்னவோ பழைய சரக்குதான் ஆனால் அதைத் தாங்கிப்பிடிக்கும் கொள்கலன் புதியது. ராணியும் அவள் குடும்பத்தினரும் முற்போக்குவாதிகள். ராக்கியின் குடும்பத்தினர் பாரம்பரியத்தில் ஊறியவர்கள். முற்போக்கு மற்றும் பாரம்பரியத்திற்கான மோதலின் காரணமாக ராக்கியும் ராணியும் ஒவ்வொருவரும் மற்றவரின் வீட்டில் மூன்று மாதங்கள் கழிக்க முடிவு செய்து ஒப்புதல் பெற்று மனங்களை வெல்வதே முழுக்கதை. ஆனால் அதில் வரும் திரைக்கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளைக் காக்க உதவும் உணர்வுகளைத் தூவி சுவையைக் கூட்டியுள்ளார் கரண் ஜோஹர்.


பெண்களின் உள்ளாடையை வாங்க ராணியின் தாயாராக வரும் சுர்னி கங்குளி, ராக்கியை அழைத்துச் செல்ல, அவரோ இதையெல்லாம் பார்க்கவும் கூச்சப்படுவதாகச் சொல்ல, முற்போக்குவாதியானவர் ராக்கியிடம் ‘ஏன், இதை உன் பாட்டி, தாயார், சகோதரி எல்லாரும் அணிவார்கள்தானே?’ என்று கேள்வி எழுப்ப. அதற்கு அவர் ‘ஆம், நாங்கள் பெண்களுக்கு மரியாதை தருகிறோம், ஆகையால் அவர்கள் உள்ளாடைகளைத் தொடுவதோ உற்றுநோக்குவதோ இல்லை’ என்று பதிலளிப்பார். உடனே தாயார் ‘ஏன் காலம் காலமாகப் பெண்கள் ஆண்களின் உள்ளாடையைக் கூச்சப்படாமல் தொட்டு அழுக்குப்போகத் துவைக்கிறார்கள் ஆனால் உன்னால் பெண்ணின் 'ப்ரா’வைத் தொட முடியவில்லையா? அதற்கு வெட்கப்பட மாட்டீர்கள் அசிங்கமாக ‘சோலிக்கே பீச்சே கியா ஹே’ என்று பாடித் திரிவீர்கள், ஆனால் பெண்ணின் உள்ளாடையைக் கவர்ச்சிப் பொருளாக, அருவருப்பாக, விலக்கப்பட்டதாக அல்லது கூச்சத்தோடு பார்க்கவும் முடியாமல் போய்விடுகிறதா? பெண்களை ’மரியாதை’ என்ற போர்வையில் அந்நியப்படுத்தி ஒரு பீடத்தில் வைப்பதைவிட அவளும் உன்னைப் போல் சக உயிர்தான், உனக்குச் சமமானவள்தான்’ என்று இயல்பாக பேசிச் செல்லும் காட்சி பலருக்குப் பாடமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் வீட்டிலேயே பொதுவாகப் பெண் உள்ளாடையை மறைத்துக் காயப்போடுவதும், ’காய்ந்துவிட்டது அதனை மறைத்து எடுத்துச் செல்’ என்று சொல்லி வளர்க்கப்படுவதால்தான் இன்னும் ஆண்பிள்ளைகள் பெண்களை இனம்புரியாத வயதில் விசித்திரப் பொம்மைகளாகப் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல், சகஜமாக இயல்பாகப் பழகும்போதுதான் பெண்களை பால்பேதமில்லாமல் தவறாக பார்ப்பதிலிருந்து தடுக்க முடியும். பாலியல் பிரச்சனைகளும் குறையும்.


இந்தப் படத்தில் நிறைய ’ஸ்டீரியோ டைப்’ செய்திகளை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் திறமையான இயக்குநர். பாடிஷேமிங்கைப் பற்றியும், ஆங்கிலம் தெரியாததை எள்ளல் செய்வதையும், நம் வீட்டு வேலைகளைப்  பெண்களுக்கு என்று ஒதுக்காமல் இருபாலரும் சாதாரணமாக இயங்குவதையும், பிடித்த வேலையைச் செய்ய அல்லது திறமையை வெளிப்படுத்த பால்பேதம் தடையாக இருக்கக் கூடாது என்பதையும், இப்படிப் பல செய்திகளை உள்நிறுத்தி நகைச்சுவைக் கலந்த பொழுதுபோக்கு அம்சமான படமாக்கியுள்ளார். இதில் நடித்த ஒவ்வொருவரும் தனக்கான பணியை மிகச் சிறப்பாகவே செய்துள்ளனர். ஜெயபாரதி பாட்டியாக கர்ஜிப்பது, தோட்டா ராய் சௌத்ரியின் கத்தக் நடனம், வசனமே இல்லாத தர்மேந்திரா ‘குடும்பத்தை உடைத்துவிடாதே’ என்று எந்தப் பிரச்சனையானாலும் அனுசரித்துப் போ என்பதை அழுத்தமாகச் சொல்வது,  "நாங்கள் ஸ்டீயரிங் பிடிக்கலாம், ஆனால் எங்கள் குடும்பங்கள் பின்சீட் ஓட்டுனர்கள்" என்று மனதைத் தொடும் காட்சிகள் ஏராளம்.


பொதுவாக ஹிந்திப் படமென்றாலே வண்ணமயமாக இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இந்தப் படம் மிதமிஞ்சிய வண்ணங்களுடன் ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் (Cinematographer) நான் பார்த்து வளர்ந்த மனுஷ் நந்தன் என்பதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி. காட்சியமைப்புகளும் கச்சிதம் என்பது போலவே இசையும். பிரீதம் சக்கரபர்த்தி பட்டயைத் தீட்டியுள்ளார். ‘ஹாய் ஜும்கா’ பாடல் படம் வரும் முன்பே சூப்பர் ஹிட்டாகி வைரல் ஆனது. மொத்தத்தில் படமொரு பொழுதுக்குப் பெட்டகம். அவசியம் பார்த்துவிட்டு, என்னோடு உடன்படுகிறீர்களா என்று சொல்லுங்கள்.


#raniaurrockykipremkahani #hindimovie

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி