Thursday, March 25, 2010

மெல்லத்தமிழினி சாகும்??


'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station' என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே.

தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? இதற்குக் காரணம் யார்? இரசிகர்களா? கண்டிப்பாக இருக்க முடியாது. கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும், ரசிப்பவர்களையும் கெடுப்பதே ஏன் சொல்லப்போனால் அவர்களின் ரசிப்புத் தன்மையைச் சிதைப்பதே இப்படியான கலப்படமான ஊடகம்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நாங்கள் என்ன செந்தமிழிலா நிகழ்ச்சி வழங்கக் கேட்கிறோம்? அல்லது ஆங்கிலமே கலக்காமல் முழுக்கத் தமிழில் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறோமா?

ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை மட்டும் தமிழைப் புகுத்துவதற்குப் பதிலாக 80% தமிழும் 20% ஆங்கிலமும் போனாப் போகுது என்று இருக்கட்டும் என்று விட்டது போக இப்போது நிலை தலைகீழாக 25% தமிழ் 75% ஆங்கிலமென்று பேசிக்கொண்டு ’ஒரே தமிழ் வானொலி’ என்று நாக்கூசாமல் சொல்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இவர்கள் பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகளை கேட்டதில்லையா? இல்லை பி.எச். அப்துல் ஹமீத்தின் நிகழ்ச்சிகள் வெற்றிப்பெறதான் இல்லையா? இன்னும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட வேண்டாம். அவரோடு ஒப்பிட இவர்கள் தகுதியற்றவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அவ்வாறான சிறு முயற்சிக் கூடயில்லையே!?

மலையாள அலைவரிசையை இவர்கள் கேட்டுப் பார்க்கட்டும் எவ்வளவு அழகாக தன் மொழி சிதைவு இருக்காத வகையில் கவனமாகக் கையாளுகிறார்கள் என்று. அவர்களிடமிருந்து படிக்கட்டும். ஹிந்தி 101.6 கேட்க இனிமையாக உள்ளது. ஆரோக்கியமான நல்ல நிகழ்ச்சிகள் தருகிறார்கள். வண்டி ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தகவல் பரிமாறுகிறார்கள். அவர்கள் மொழியில் இனிமையில்லாததாலோ என்னவோ ஆங்கிலம் கலக்கிறார்கள் அதுவும் ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு அப்படியான அவசியமில்லையே.

நம் மொழியில் ஒரு வகை ஓசையிருக்கிறது. அழகான ஒலியிருக்கிறது, ஆங்கிலமே கலக்கத் தேவையில்லைதான் இருப்பினும் சுலபமாக்கிக் கொள்ளக் கொஞ்சம் ஆங்கிலம் கலந்தால் இருந்துவிட்டுப் போகுது என்று சொல்லலாம் அதற்காக இப்படியா? சென்னையில்தான் ‘தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தத்திகினத்தோமோடு பேசுவதை நவநாகரீகமாகக் கருதுகிறார்கள். தமிழர்களிடம் தமிழில் பேசுவதை மரியாதை குறைவாகவோ, முகசுளிப்போடு பார்க்கிறார்கள் தமிழின் அருமை தெரியாதவர்கள். இருந்துவிட்டுப் போகட்டும்.

’சென்னை தமிழில்’ நிகழ்ச்சியென்று மிக நாராசமான நிகழ்ச்சியும் போகத்தான் செய்கிறது ரசிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்படியான மட்டமான ரசனையையும் அவர்கள் மூளைக்குப் பழக்கியதில் இவர்களுக்குப் பெரும்பாலான பங்குள்ளது என்பதை இவர்கள் மறக்க வேண்டாம். தமிழ்நாட்டில் தமிழுக்கு மரியாதை அவ்வளவுதான், ஏனெனில் தாய்மடி சுலபமாக கிடைக்கும் போது கசக்கத்தான் செய்யும்

எங்களுக்கு அப்படியல்ல அன்னிய நாட்டில், பல மொழிக் கலாசாரத்தில் வாழும் எங்களுக்கு எப்பவாவது தாயின் அரவணைப்பு கிடைக்கும் போது அதில் அலாதி சுவையிருப்பதாக நம்புகிறோம். தமிழ் நிகழ்ச்சியைத் தேடி கூட்டம் கூடுகிறது. ஊருக்குச் சென்றால் தவறாமல் தமிழ்ப் புத்தகம் வாங்கி வருகிறோம். புதிய தமிழர்களை பார்க்கும் போது புது உறவு கிடைத்ததாகக் கொண்டாடுகிறோம். தமிழ் வானொலி வருகிறது என்று சந்தோஷப்படுகிறோம், தமிழ் பாடல் கேட்டு ஆனந்தத்தில் திளைக்கிறோம். நடுநடுவே பேச ஆரம்பித்துவிட்டார்கள் அதில் தமிழை எங்கே என்று தேடுவதாக உள்ளது! ஏன் இப்படி? யார் இந்த கலாசாரத்தை உருவாக்கியது? சக்தி FM இப்படி பாடாவதியான நிகழ்ச்சி நடத்தி காணாமலே போய்விட்டார்கள். சென்னையில் தருவது போன்ற நிகழ்ச்சியை இங்கு தர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, இங்குள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு, அணுகுமுறைக்கேற்றவாறு, தேடலுக்கேற்றவாறு நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ள முனைவார்களா? எங்களைப் புரிந்துக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் அல்லது Hello கூடிய சீக்கிரத்தில் Bye Bye சொல்லிவிடும்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி