Tuesday, May 13, 2014

ஆனந்த யாழை மீட்டிய சாதனா

சாதனை படைத்த சாதனாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். 'தங்க மீன்கள்' திரைப்படத்திற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற குழந்தை சாதனாவின் வசிப்பிடம் துபாய். இந்தத் திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பே அதன் முன்னோட்டத்தை 'அமீரகத் தமிழ் மன்றத்தின்' ஆண்டு விழாவில் அரங்கேற்றியிருந்தோம். 'தங்க மீன்களை'த் திரையில் காண ஆவலாக இருந்த துபாய் மக்களுக்குப் பெரிய ஏமாற்றம். காரணம் இப்படம் துபாய் திரையரங்கிற்கு வரவேயில்லை. தேசிய விருது அதுவும் மூன்று விருதுகள் என்றதும் அவளுடைய பெற்றோரைப் போலவே எனக்கும் பெரிய மகிழ்ச்சி. உடன் அழைத்து வாழ்த்தை தெரிவித்தேனொழிய அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

அவளுக்கான பாராட்டு விழா மிகச் சிறப்பாக இயக்குனர் பாரதிராஜா மற்றும் கலை இயக்குனர் தோட்டா தரணி தலைமையில் 'விப்ஜியார் ஈவன்ட்ஸின்' நிகழ்ச்சியாக மே 10-ஆம் தேதி 'பிரின்ஸஸ் ஹயா அரங்கில்' நடைபெற்றது. அந்த அரங்கத்தை அவள் படிக்கும் பள்ளியே ஏற்பாடு செய்திருந்தனர். அது ஜெம்ஸ் வெலிங்டன் பள்ளி வளாகத்திலுள்ள அழகிய அரங்கம். இப்படியான நிகழ்ச்சி ஏற்பாட்டில் பேச வேண்டுமென்பதாலும், அதுவும் என்னால் சத்தியத்தை மட்டுமே பேச முடியும் என்பதாலும், ஒப்புக்காக ஆஹா ஓஹோ என்று ஜல்லியடிக்கவே முடியாது என்பதாலும் பதிவர் சென்ஷியின் தயவில் 'தங்க மீன்களை'த் துல்லியமான பதிவாக வீட்டு முகப்பையே திரையரங்காக்கி பார்த்து மகிழ்ந்தேன்.

பொதுவாகவே குழந்தைகளுக்குப் பல கேள்விகள் உண்டு. அப்படியான கேள்விகளுக்கு எத்தனை பெற்றோர்கள் காது கொடுத்துள்ளோம்? குழந்தைக்குப் படிப்பு வரவில்லையென்று ஆசிரியர்கள் கூறும் கூற்றை வைத்து வீட்டில் சாமியாடுகிறோமே தவிர அதில் எத்தனை உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா? எப்படி நம் குழந்தைக்குப் படிப்பு வராமல் இருக்க முடியுமென்று எத்தனை பேர் யோசிக்கின்றனர்? அப்படி யோசிக்க வைக்கும் படம் இது. எந்தக் காலகட்டத்திலும் எந்தக் குழந்தையும் படிப்பு வராதவர், மக்கு, திறமையற்றவர் என்பதே இல்லை. ஒரு விஷயத்தைக் கற்றுத் தந்து அது அவர்களுக்குப் புரியவில்லையென்றால் கற்றுக் கொடுக்கும் முறை சரியில்லையென்று பொருள். எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியில்லையே. சிலருக்கு சொல்லிக் கொடுக்கும் போது புரியலாம், சிலருக்குப் படிக்கும் போது புலப்படலாம், இன்னும் சிலருக்கு காட்சிப்படுத்தும் போது அல்லது படங்கள், காணொளி, செயலிகள் என்று சில கருவிகள் மூலமாக விஷயங்கள் தென்பட வைக்கலாம். படித்தவுடனேயே சிலருக்கு மனதில் ஒட்டிக் கொள்ளலாம், எழுதிப் பார்த்து படிக்கும் குழந்தைகளும் உள்ளனர், சிலர் வகுப்பில் மட்டும் கவனித்தே வீட்டில் படிக்காமல் நன்மதிப்பெடுப்பவரும் உள்ளனர். வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அவர்களின் மதிப்பீட்டில்லை என்பதைத் தந்தை- மகள் பிணைக்கப்பட்ட பாசத்தின் இழையோடும், தனி நபராகப் பொருளாதாரத்தில் வெற்றி பெற முடியாத இளைஞரின் கதையோடும் சுவைபட இப்படத்தைப் படைத்துள்ளார் இயக்குனர் ராம்.

எனக்கென்னவோ இந்தப் படம் இயக்குனர் ராமின் முதல் படமான 'கற்றது தமிழ்' படத்தின் இரண்டாம் பாகமாகவே தோன்றியது. காரணம், 'கற்றது தமிழில்' பதின்ம வயது காதலோடு ஆரம்பித்துத் தமிழ் கல்வி கற்றலையும் சமுதாயம் அதனைப் பார்க்கும் பார்வையையும் அதன் பின்னணி அரசியலையும் இயல்பாகச் சொல்லியிருப்பவர். அதன் தொடர்ச்சியாகத் 'தங்க மீன்கள்' படத்தில் காதலித்துத் திருமணம் புரியும் ஒருவன், பொருளாதார ரீதியில் வெற்றி பெறாதவனுக்குத் தந்தையென்ற அந்தஸ்தும் முழுமை பெறாமல் இருப்பதை அழுத்தமாகச் சொல்லுபவர், படத்தில் முழுமையாகப் பேசுவது இன்றைய கல்வி முறையின் அவலத்தை, அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை, பணித் திருப்தியில்லாத ஆசிரியர்களால் விரட்டியடிக்கப்படும் குழந்தைகளின் பொதுச் சிந்தனையை, தன் குழந்தையைத் தானே 'மக்கு' என்று நம்பும் பெற்றோர்களை என்று, பல விஷயங்களைப் பற்றிப் பேசி நம் மனதை ஊசியால் குத்தி ரணமில்லாமல் ஊசியை நம்முள் இறக்கி நம்மைச் சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர் ராம்.

இயக்குனர் என்பவர் திரைக்குப்பின் நின்று இயக்குபவர் ஆனால் அவரே முக்கியக் கதாபாத்திரத்தில் கல்யாணியாக வலம் வருகிறார். இயக்குனராகவும் அதே சமயத்தில் நடிப்பதும் மிகச் சிரமமான காரியம் என்று நாம் அறிந்ததே. ஆனால் அதனைத் தன் அழகிய நடிப்பால் சமன் செய்துள்ளார் இயக்குனர் ராம். ஒரு புது முகமென்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் பரிச்சயமாகத் தென்படுவதற்குக் காரணம் அந்தப் பாத்திரப் படைப்பு. இந்தப் படத்தின் வெற்றிக்கு முழுக் காரணம் அவர் மட்டுமல்ல அந்த மொத்தக் குழுவும் தான் என்பது என் கணிப்பு. ஒரு இயக்குனர் மனதில் நினைப்பதை, அந்தக் கற்பனைக் கருவை, அழகாக நம்மிடம் சரியாகக் கடத்திவிடுகிறார் ஒளிப்பதிவாளர் அரபிந்து சாரா. சரியான இடத்தில் கத்தரித்துப் படத்தை முழுமையாக்குகிறார் ஶ்ரீகர் பிரசாத். இப்படிச் சரியான குழு அமைத்தவர் கதாபாத்திர தேர்வில் மட்டும் கோட்டை விடுவாரா என்ன?

'தங்க மீன்களுக்காக'ச் சாதனாவா அல்லது சாதனாவைப் பார்த்த பிற்பாடு 'தங்க மீன்கள்' பிறந்ததா என்று குழப்பம் ஏற்படும் அளவிற்குக் கனகச்சித்தமாகச் செல்லமா என்ற கதாபாத்திரத்தில் பிணைந்திருக்கிறார் குழந்தை சாதனா. அவளுடைய உடல்மொழி, கண்கள் பேசும் காவியம், புன்னகை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிரிப்பு, வலியை வெளிகொணரும் முறை, ஏமாற்றத்தின் ஏக்க நிலை, வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமென்று அத்தனை உணர்வுகளையும் தேர்ந்த நடிகருக்கு ஒப்பாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்பதே சரியாக இருக்கும். ஒரு குழந்தை நட்சத்திரத்திற்குள் இத்தனை திறமையா என்று வியக்கும் வேளையில் தேசிய விருது கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஈரானிப் படமான 'சில்ரன்ஸ் ஆஃஃப் ஹெவன்' அரபிய படமான 'வஜ்தா' நம் இந்திய ஹிந்திப் படமான 'தாரே ஜமீன் பர்' போன்ற படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் தமிழில் குழந்தைகளை வைத்துப் படம் பேசப்படுவதில்லை, பலமான கதைகள் சொல்லப்படுவதில்லை என்று நினைக்க தோன்றும். நம்மிடம் அப்படியான திறமையான குழந்தை இல்லை அல்லது கண்டுபிடிக்கப்படவில்லை என்ற குறையைத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது செல்லமாவாக வரும் சாதனாவின் நடிப்பு. சில நல்ல படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் தேசிய விருது போன்ற அங்கீகாரம் கிடைப்பதே ராம் மாதிரியான இயக்குனர்களைத் தட்டிக் கொடுத்து இன்னும் மேல் எழச் செய்யும் என்று நம்பலாம்.

சாதனாவைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து மிகவும் பொருந்தி நடித்துள்ளனர். குறிப்பாகச் செல்லமாவின் தாயாக வரும் ஷெல்லி கிஷோர். இவர் எனக்கு இயக்குனர் பாலுமகேந்திராவின் கதாநாயகிகளை நினைவுபடுத்தினார். இப்படத்தில் சாதனாவின் தாய் லட்சுமி ஆசிரியையாகவும் தந்தை வெங்கடேஷ் தலைமை ஆசிரியராக நடித்துள்ளதும் சிறப்பு. இத்திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் - சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர் நா. முத்துகுமாருக்கு. 'ஆனாந்த யாழ்' பாடலுக்குக் கிடைத்திருந்தாலும் இப்படத்தின் அத்தனை பாடல்களும் காட்சிக்கு பொருத்தமான வரிகளோடு இரசித்து எழுதியிருப்பவருக்கு இது கூட இல்லையென்றால் எப்படி? ஆனால் இந்தப் படத்தின் பெரிய பலமான இசையமைப்பாளர் யுவன் சங்கரை தேசிய விருதுக் குழு எப்படி மறந்ததென்று புரியவில்லை. படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அவருடைய இரம்மியமான பின்னணி இசை இப்படத்தைத் தூக்கிப் பிடித்துள்ளதென்றால் மிகையில்லை.

இத்திரைப்படத்தை நான் கவிதை என்பேன் காரணம் நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகப் படிமங்களோடு விளையாடியுள்ளார் இயக்குனர். ஒரு காட்சியில் செல்லம்மா ஆசிரியரிடம் ஆர்வமாகத் தன் உடையைக் காண்பிப்பாள். அவளை அதட்டி அடக்கும் ஆசிரியை அவள் மனதையும் பூட்டி அவள் ஆட்டத்தில் கவனம் சிதைக்கச் செய்வதையும் உணராமல் "உனக்கு நடனம் வராது" என்று முத்திரையும் குத்திவிடுவார். இந்தக் காட்சியில் தடுமாறும் குழந்தையையும் பூட்டிய கதவையும் மாறி மாறிக் காட்டி அவளது மனத்தடையைப் பூடகமாகச் சொல்லும் இயக்குனர், பல காட்சிகளில் குழந்தையின் உணர்வுக்கேற்ப இலை, வாடிய கிளையென்று காண்பித்துப் படிமங்களோடு காட்சியை விளங்க வைத்துப் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கு எழுதியதைத்தான் நான் பேசவும் செய்தேன். நிறைவாகச் சாதனாவை வாழ்த்தி விடைபெற்றேன். ஆனால் பேசும் போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டது. சிறப்பு விருந்தினர் இயக்குனர் பாரதிராஜாவின் சிறப்புரையில் என்னைக் குறிப்பிட்டு நான் சரியாகப் பேசியதாகவும் ஒரு தேர்ந்த விமர்சகரின் பேச்சு போலவே இருந்தது என்றும் பாராட்டியது மகிழ்ச்சியளித்தது. நிகழ்ச்சியின் முடிவில் தோட்டா தரணியைச் சந்தித்த போது அவரும் "ரொம்ப நல்ல பேசுனீங்க" என்றார். நான் "நன்றி"யுரைக்க அவர் தொடர்ந்து "உங்கள மாதிரியெல்லாம் நல்ல தமிழில் எனக்குப் பேச வராது" என்றார் தன்னடக்கத்தோடு. நான் அவரை மறுத்து "நீங்க பொய் சொல்றீங்க, நீங்க நல்லதமிழில் பண்பலையில் அளித்த பேட்டியைக் கேட்டுள்ளேன்" என்றேன். அதற்கும் சளைக்காமல் அவர் "அது முகம் தெரியாமல் பேசுவது. ஆனால் இப்படி மேடையில் நின்று சரளமாக எனக்குப் பேச வராது" என்று மெய்யுரைத்தது மெய்சிலிர்க்க வைத்தது.

தேசிய விருதுக்குப் பிறகுதான் சில நல்ல படங்கள் கவனிக்கப்படுகின்றன. அப்படிக் கவனிக்கப்படும் போது மறுபடியும் அது திரைக்கு வந்தாலென்ன? வணிக ரீதியாக அப்பவாவது இம்மாதிரியான நல்ல படங்கள் அங்கீகரிக்கப்படுமே!!
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி