Tuesday, May 29, 2007

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?


இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி ஒலியை உருவாக்க முடியாதோ அது போல.. இந்நிலையில் குடும்பத்தின் பொருளாதாரத் திட்டங்களில் கணவனுக்கு மனைவி பக்கபலமாக இருந்து உதவுதலும், தேவையான பொழுதுகளில் கணவனுக்கு அறிவுறுத்துவதும் மிக மிக அவசியமாகும்.

இரண்டு மாடு சேர்ந்து இழுக்கும் வண்டியைப் போலத்தான் குடும்ப வாழ்க்கையும். கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து புரிந்து சேர்ந்து முடிவெடுத்து திட்டமிட்டால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழலும்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும்போது தன் தேவையை மட்டும் கவனித்துக்கொள்வது, அனாவசியச் செலவுகள் செய்வது என்று பழக்கப்பட்டு விடுகிறான். அவனுக்குத் திருமணமென்று நேர்ந்து குடும்பப் பொறுப்புகள் கூடும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாக புது பொறுப்புகளை கடிந்துக் கொள்கிறான். என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் செய்வது எப்படி என்பதை ஒரு தனிப்பாடமாக இன்னும் கட்டாய கல்வியில் கொண்டு வரவில்லைதானே?! ஆனால் பெண்கள் அப்படி இல்லாமல் திருமணத்திற்கு முன்பிருந்தே தன் தாய்- தந்தையின் வாழ்வை கூர்ந்து கவனிப்பவளாக இருந்து, தந்தைக்கு கணக்கு வழக்குகளிலும், தாயாருக்குக் குடும்ப நிர்வாகத்திலும் உதவியாகப் பங்கேற்று பொறுப்புடன் தலைப்பட தொடங்கிவிடுகிறாள். அவளுக்குத் திருமணமாகி போன பிறகு தன் கணவன் ஈட்டி வரும் வருமானத்திற்குள்ளாக செலவு செய்து செவ்வனே குடும்பம் நடத்த இந்த அனுபவம் அவளுக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமா என்றால் போதாது? அடிப்படைச் செலவுகளைக் குறைப்பதில், தேவையறிந்து செலவு செய்வதில் மட்டுமே ஒரு மனைவியின் பங்கு இருந்தால் மட்டும் போதாது. மாறாக ஒட்டுமொத்தமாகக் குடும்பப் பொருளாதாரத் திட்டமிடுதலில் மனைவியும் ஈடுபடும்போதுதான் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதோடு, இந்த பங்கிடுதல் குடும்பத்தில் பாசப்பிணைப்பையும் அதிகமாக்குகிறது. எப்படி என்று பார்க்கலாமா?


பொதுவாகவே கணவன் - மனைவி இருவரில் ஏதேனும் ஒருவருக்குச் செலவு செய்ய அலாதிப் பிரியமிருக்கும் மற்றொருவருக்கோ வருங்காலத்திற்காகக் சேமிப்பதே நோக்கமாயிருக்கும். இப்படி இருவேறு துருவங்களாக இருவரும் இருந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் என்னவென்பது நமக்குத் தெரிந்ததுதானே?! இதைத் தவிர்க்க வேண்டுமானால் ஒரு கூட்டு முயற்சியும், அதற்காக இரண்டு மூளைகளும் சேர்ந்து செயல்படுவதும் அவசியமாகிவிடுகிறது.

உலகமயமாக்கல் காரணமாக திறந்த சந்தை வெளி பெருகி விட்ட இந்தக் காலத்தில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி ஏதேனும் பொருளை எப்படியாகிலும் விற்றுவிடும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நுகர்வோர் சந்தை வெகு இலகுவாக செலவுகளை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையாகிறது. கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போக வேண்டிய தேவை இருப்பதால் இருவருமே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டியதிருக்கிறது. முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியுமென்று ஒரு சொலவடை உண்டு அதன்படி வருமானத்தின் அருமை புரிந்து எந்தப் பொருள் தேவையோ அந்தப் பொருளை வாங்குவது, அந்தப் பொருளை எங்கு வாங்கினால் நியாயமான விலைக்கு கிடைக்கும் என்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவதும், குழந்தைகளுக்கு எந்த உணவுப் பண்டத்தில் சத்து அதிகம், தூய்மையான நல்ல தரமுள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது எங்கே என்று பார்த்துப் பார்த்து வாங்குவதும், அவசரமயமான பணிச்சூழல் காரணமாக உணவகத்தில் அன்றாடமாகவோ அடிக்கடியோ வாங்கிச் சாப்பிடுவதினால் உடலுக்குக் கேடு வராமலும் வரவு- செலவில் துண்டு விழாமலும் பாதுகாப்பதில் பெண்கள் இயல்பாகவே கெட்டிக்காரர்கள். எனவே, இந்த இயல்பை குடும்பப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால் அதனால் நன்மைகள் மட்டுமே விளையும்.

வேலைக்குப் போனாலும் வீட்டுப்பொறுப்பையும் கவனித்து, குடும்பத்தையும் நிர்வாகம் செய்து, குழந்தைகளிடமும் அக்கறையுடன் அன்பு செலுத்தும் பண்பும், மிகுந்த சகிப்பு தன்மையும் மிக்கவர்கள் பெண்கள் என்பதைப் புரிந்து கொண்டு நடக்காமல் 'நீ சொல்லி நான் என்ன கேட்பது' என்பது போல் நடந்து கொண்டால் வாழ்வு சுமூகமாகச் செல்லாது என்பது மட்டுமல்ல, அதனால் குடும்பப் பொருளாதாரத்திலும் பல சிக்கல்கள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்.

இரண்டு வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த, வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் திருமணத்தில் இணையும் போது பலவிதமான பிரச்சனைகள் எழும். ஆயினும் விட்டுக் கொடுத்து போதல், புரிந்து கொள்ள முயற்சித்தல் என்ற மந்திரங்களைக் கையாண்டால் பிரச்சனைகள் அதிகமாக வர வாய்ப்பில்லை. வரவு- செலவு கணக்கை தீர்மானித்து அதற்கேற்ப செலவு செய்து இந்த மாதம் இந்த பொருட்கள் வாங்குதல் கட்டாயம், இந்த பொருள் வீண் அல்லது வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று மனைவி எடுக்கும் தீர்மானங்களை கவனத்தோடு கேட்டு கணவர் ஆமோதித்தால் தேவைக்கேற்ற செலவுகளுடன் சிக்கனமாக வாழலாம். ஒருவருடைய கருத்தை மற்றவர் காது கொடுத்து கேட்பதென்பது மிக அவசியம். அப்போதுதான் ஆலோசித்து முடிவும் எடுக்க முடியும்.

கணவருக்குப் பலவிதமான அலுவல் வேலை இருப்பதனால் குடும்ப நிர்வாகத்தையும் சேர்த்து கவனிப்பது என்பது கடினமாக இருக்கலாம். ஆனாலும் எந்த வகையில் மனைவியால் உதவிட முடியும் என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்யும். ஓடும் வாகனத்தின் கதவு அரைகுறையாக மூடியிருப்பதைப் பார்த்தால் யாரென்றே தெரியாத போதும் அக்கறையுடன் குறிப்பாலோ சைகையாலோ சுட்டிக்காட்டுவோம். அப்படி முன் பின் தெரியாதவர்களுக்கு நாம் செய்யும் போது நம் குடும்பத்தைத் தலையில் சுமக்கும் மனைவிக்கு நம்மை விட அக்கறையுண்டு என்பதில் முதலில் நம்பிக்கை பிறந்து மனைவியை குடும்ப நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும். அவர்கள் முயற்சியெடுத்து செய்யும் சிறு சேமிப்பையும் ஆதரித்து மெச்சினால் இன்னும் திறம்பட செய்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு மாதம் முழுக்கக் கஷ்டப்பட்டு ஈட்டிவரும் சம்பாத்தியத்தை சிக்கனமாகச் செலவழித்துச் சேமித்து வைக்கும் பொறுப்புள்ள மனைவி மீது தானாகவே கணவனுக்கு ஒருவித ஈர்ப்பும் அன்பும் ஏற்பட இது நல்ல வாய்ப்பை உருவாக்கும்.

சிலர் இரகசியமாக வைப்பு நிதியை மனைவியறியாமல் சேமிப்பார்கள். ஏதேனும் காரணத்தால் அவருக்கு திடீர் மரணம் நிகழ்ந்தால் அப்படியொரு சேமிப்பு இருப்பதே தெரியாமல் 'நாய் பெற்ற தேங்காயாக' அது யாருக்கும் பயன்படாமல் போய்விடுவதையும் நாம் உலகில் பார்க்கத்தானே செய்கிறோம்? அப்படி நிகழாமல் இருக்க கணவருடைய கடன், வரவு, வைப்பு நிதி, காப்பீடு இவற்றையெல்லாம் பற்றி மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறிந்து கொண்டால் அதற்கேற்ப வரவு- செலவைக் கையாளலாம். வேறு வருமானம் இல்லாதபட்சத்திலும் மனைவி கணவருடைய கடனையும் வருமானத்தையும் தெரிந்து வைத்திருந்தால் விரலுக்கேற்ற வீக்கமாக சிக்கனமாகச் செலவிடலாம். இல்லாவிட்டால் வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனாதான். நாளை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். மாறாக, கணவரின் பொருளாதார நிலையை உணர்ந்து அவரது சேமிப்பிற்கும் இதரப் பிரச்சனைகளுக்கும் மதியாலோசனையுடன் தீர்வைச் சொல்லும் மனைவியாக நடந்துக் கொண்டால், கணவர் இறுக்கத்திலிருந்து விடுபட்டு மனைவியுடன் நெருக்கமாவார்.

வரவும், செலவுகளும் வெளிப்படையாகத் தெரியும் போது கணவர் மீது மனைவிக்கோ மனைவி மீது கணவருக்கோ தேவையற்ற சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி கணவர் செய்யும் அனாவசியச் செலவுகளை ஒடுக்க மனைவிக்கு அதுவே நல்ல வாய்ப்பாக அமையும். புகைப்பிடிக்கும் பழக்கமோ மற்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் பழக்கமோ கணவருக்கு இருந்தால் அதற்கான செலவுகளை அவருக்கே காட்டி பயமுறுத்தி அந்த பழக்கத்தை குறைத்துக் கொள்ளவோ கைவிடவோ செய்ய முடியும். இப்படி ஒளிவுமறைவற்ற அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருவித பரஸ்பர அன்பு நிலவுவதோடு தேவையற்ற பழக்கத்திலிருந்து விடுபடுவதோடு செலவையும் குறைக்க முடியும். ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்று கூடச் சொல்லலாம்.

கடன் அட்டைகள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பணத்தைக் கையில் சுமக்காமல் எளிதாக உபயோகிக்க அது ஒரு பெரும் ஆறுதல்தான். ஆனால், அது நெருப்பைப் போல. கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைக்கும்தான் அதனால் பயன் அதிகம். கட்டுப்பாட்டை மீறினால் உடம்பைச் சுட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆகவே கணவருக்கு எத்தனை கடன் அட்டைகள் உள்ளன, எந்தத் தேதியில் பணம் அடைக்க வேண்டுமென்று தெரிந்து வைத்துக் கொண்டால் அதைப் பற்றி கணவருக்கு நினைவுப்படுத்தவோ அல்லது தாமே நேரிலோ, கணிணியிலோ கட்டணத்தை செலுத்தி விடுவதனால் தாமதமாக பணம் செலுத்துவதால் வரும் அபராதத்திலிருந்து தப்பிக்கலாம். தவணை முறையில் பொருள் வாங்குவது, கடன் அட்டையில் கடனுக்குப் பொருளை வாங்குவதென வீண் வட்டி செலுத்துவதை விட உரிய நேரத்தில் முழு பணத்தையும் அடைத்துவிடுவதன் அவசியத்தை உணர்த்தி அவ்வாறு செய்ய கணவரைத் தூண்டலாம். அல்லது மனைவியே அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதே நேரம் கடனட்டைகள் மூலம் கிடைக்கும் வாணிபச் சலுகைகளையும் அனுபவிக்கலாம் என்று கணவரை வலியுறுத்தி செயல்பட செய்து கடன் அட்டையிருந்தும் கடனாளியாக இல்லாமல் இருக்கலாம். முடிந்தால் கடன் அட்டையையே ஒழிக்கவும் முயற்சிக்கலாம்.

முன்பெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறான் என்று சொல்வார்கள் இப்போதெல்லாம் தண்ணீருக்கும் பணம் என்ற நிலை அதனை அறிந்து தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகச் செலவழித்து நல்ல பெயர் வாங்குவதில் கணவர்- மனைவி இருவரும் போட்டி போட்டால் அவர்களை பின்பற்றும் பிள்ளைகளும் இயல்பாக சிக்கனமாக இருக்க கற்றுக் கொள்வார்கள். இது குடும்பத்திற்கு மட்டுமான திட்டமிடல் கூட இல்லை. இயற்கை வளம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான செயலும் கூட. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, பள்ளிக் கட்டணம் என்று மாதா மாதம் வரும் பட்டியலை தயார் செய்து எப்போது செலுத்த வேண்டுமென்று அறிந்தும் வைத்துக் கொண்டு பணத்தை உரிய நேரத்தில் கட்டிவிடலாம். விலைப்பட்டியல்களையும், ரசீதுகளையும், வங்கியிலிருந்து வரும் கணக்கு விபரங்களையும் சரி பார்த்து ஒழுங்காக ஒரு கோப்பில் அடுக்கிவைத்தால் இந்த மாதத்திற்கும் போன மாதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறியலாம். இவ்வகையான சின்ன விஷயமாகத் தெரியும் வேலைகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் கணவருக்கும் தன்னாலான உதவிகளை மனைவிக்கு செய்ய உந்துதல் வரும்.

என்னதான் ஞாபக சக்தி இருந்தாலும் தினப்படி நடக்கும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். இதன் மூலம் இது தேவையற்ற செலவு வரும் நாட்களில் இது இருக்கக் கூடாது என்பதை கண் கூடாகப் பார்த்து புத்திசாலித்தனமாக கையிருப்பை எப்படி புது முதலீட்டில் செலுத்தலாம் என்பதைப் பற்றியும் யோசிக்க அது உதவும். செலவு செய்யும் போது கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்குமான வேறுபாட்டை மனைவி கணவருக்கு எடுத்துச் சொல்லலாம். தேவையான பொருட்களையும் வாங்காமல் மிச்சப்படுத்துவது சிக்கனமல்ல லோபித்தனம், அதே போல் ஆடம்பரமென்று ஊதாரித்தனமும் கூடாது செலவு செய்வதை ஒரு கலையாக எண்ணி நடைமுறைப்படுத்தினால் எதுவும் கடினமாகவே இருக்காது என்பதை பொருளாதாரத் திட்டமிடுதலின் மூலமாக ஒரு மனைவியால் உணர்த்த முடியும்.

அன்றாடச் செலவுகளைத் தவிர மற்ற திடீர் செலவான மருத்துவ செலவு, விடுமுறை கொண்டாட்டம், பண்டிகை நாட்களுக்கான விசேஷ செலவு, எதிர்பாராமல் கார் பழுதடைந்தாலோ, விபத்து நேர்ந்தாலோ ஆகும் உபரி செலவு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைக்காமலிருந்தால் 'பட்ஜெட்'டில் துண்டென்ன வேட்டியே விழும். வரவு- செலவு பட்டியலிடாமல் இருந்தால் செலவுகள் கணக்கில்லாமல் போய்விடும். வரவு- செலவு எழுதிய படி செயல்பட முடியவில்லை என்று கைவிட்டுவிடாமல் அதற்கென்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணவர்- மனைவி இருவரும் நேரம் ஒதுக்கி சரியாக திட்டம் தீட்டினால் முடிவு பலன் தரும், சேமிப்பும் கூடும். இப்படி அடிக்கடி செலவுகளை விவாதிப்பதில் மனைவி முன்கையெடுப்பதன் மூலம் கணவருக்கும் குடும்பச் செலவுகள் குறித்த பூரணமான நிலை தெரிய வரும். இப்படி செய்வதனால் 'ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் திண்டாட்டம்' என்றெல்லாம் பாடத் தேவையே இருக்காது.. இப்படி அடிக்கடி விவாதிப்பதும், குடும்பம் தொடர்பான செலவுகளைப் பகிர்ந்து கொள்வதும் குடும்பச் செலவுகளுக்கு ஒரு வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்துவதோடு, பகிர்ந்துகொள்ளுதலும், புரிந்துணர்வும் கணவன் மனைவியிடையே அதன் மூலம் அதிகமாகிறது. இது குடும்பத்திற்கே ஒரு சாந்தமான சூழலை உருவாக்கித் தருகிறது என்பதும் உண்மை - உண்மையைத் தவிர வேறில்லை.

வாழ்க்கை என்பது கொஞ்ச காலம் மட்டும்தான். நாளை என்பதை யாரறிவார் என்று அலட்சியமாக இருந்தால் அதுவே வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அதனை கணவருக்குப் புரியவைத்து, கட்டுக்கோப்பான ஒரு பொருளாதாரச் சூழலை உருவாக்கி குடும்பப் பொறுப்புகளைக் கரிசனத்தோடு செயல்படுத்தும் பெண்களுக்கு அங்கீகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்படுதல் மிக அவசியம். இது போன்று தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு பெண்ணுக்கு தன் குடும்பம் சார்ந்த பொறுப்புணர்வை இன்னும் அதிகமாக்கவே செய்யும். இது சில வேளைகளில், ஆரம்ப காலங்களில் சில பிணக்குகளுக்கு வழி வகுத்தாலும் கூட நீண்ட காலத் திட்டமிடுதலுக்கு இது மிக முக்கியமானது என்பதை இருவருமே உணரும் நிலை ஏற்படும். அது கணவனுக்கும் மனைவிக்குமான உறவை வலுப்படுத்தும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றில்லாமல் அமைந்த மனைவியை வரமாக மாற்றி, இல்லாள் என்பவள் வாழ்க்கை துணை, அன்பு செலுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள என்பதை புரிந்துக் கொண்டு தலைப்பட்டு குடும்பத்தின் பொருளாதாரத் திட்டமிடுதலில் மட்டுமல்ல எல்லா விஷயங்களில் சேர்ந்து முடிவெடுத்தால் ஒரு பல்கலைகழகமாக நல்லதொரு குடும்பமாக வாழ்வே ருசிக்கும்.

Tuesday, May 22, 2007

பாரனாய்ட் - Paranoid

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க. காரணம் 'பாரனோயா'னாலே 'பைத்தியக்காரத்தனம்'னு பொருள். ஆங்கிலம், ஹிந்தி படங்கள அதிகம் பார்க்கிறவங்களுக்கும் இது புது வார்த்தையில்ல, ஏன்னா தமிழ்ல பைத்தியக்காரின்னு சாதாரணமா திட்டுறா மாதிரி அவங்க ரொம்ப சுலபமா உபயோகிக்கிற வார்த்த அது. ஆனா அந்த அளவுக்கு 'பாரனாய்ட்' சுலபமா குணப்படுத்திடக் கூடிய நோயான்னா இல்லன்னுதான் சொல்லனும்.

நீங்க தன்னம்பிக்கை மிக்கவரா? அதுல தப்பேயில்ல ஆனா மிதமிஞ்சி பொங்கி வழியுற அளவுக்கு நம்பிக்கையிருந்தா பிரச்சனைதான். என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்துல நம்பிக்கை வைக்கலாம் அதப்பத்தி உறுதியாவும் பேசலாம் ஆனா தெரியாத விஷயத்த பத்தி நீங்களே நினச்சுக்கிட்டு இப்படித்தான் இருக்கும்னு ஒரு முன்முடிவோட இருந்துக்கிட்டு சந்தேகப்படுவது முட்டாள்தனமா பைத்தியகாரத்தனமா? என்ன குழப்புறேனா? சரி தெளிவாவே சொல்லிடுறேன். ஒருத்தர் எப்போதும் மத்தவங்க மேல அவநம்பிக்க வச்சி சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்து, ஒவ்வொரு செயலிலும் குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு இல்லாத பொருள தேடிக்கிட்டு 'நான் சொல்றதுதான் சரி, நான் புடிச்ச முயலுக்கு ஒன்றரைக் காலுன்னு' (மூணுகாலுன்னுதான் அடம்பிடிக்கணுமா என்ன?) அடம்பிடிச்சிட்டிருந்தா இந்த 'பாரனாய்ட்' குணக்கேடுல மாட்டிக்கிட்டாங்கன்னு அர்த்தம். 'பாரனோயா'வால் (Paranoia) பாதிக்கப்படுகிறவர்கள்தான் 'பாரனாய்ட்'. அடம்பிடிக்கிறது எல்லா குழந்தைங்கக்கிட்டயும் இருக்குற குணம். குழந்தைகளா இருக்கும் போது புரியாம அடம்பிடிப்பத நாம குழந்த குணம்னு விட்டுடுவோம். குழந்தையும் வளர வளர நாலுபேருக்கிட்டப் பேசிப் பழகும் போது, பெற்றோர் நடத்தையையும் மத்தவங்க வழக்கங்களையும் பார்க்கும் போது தன்னையே மாத்திக்கிற பக்குவம் வரும். ஆனா பெரியவங்களா ஆனா பிறகும் இப்படி இருக்கிறவங்களுக்கு எந்த உறவுமே நிலையாவோ நெருக்கமாவோ வர முடியாது. ஏன்னா 'பாரனாய்ட்' நோயாளி நெருங்கிப் பழகுறா மாதிரி இருக்கும் ஆனா மனசளவில தூரமாத்தான் இருப்பாங்க. உள்ளுக்குள்ள வஞ்சம் வச்சிக்கிட்டு இதுக்கு இப்படித்தான் அர்த்தம், எத பேசினாலும் நம்மளத்தான் குத்திக்காட்டி மறைமுகமா ஏதோ பேசுறாங்க, இவ செய்ற செயல் நம்மள கெடுக்கன்னு, தானே நினச்சுக்கிட்டு மனசுக்குள்ள எப்பவுமே போராடிக்கிட்டு இருப்பாங்க. சுருக்கமா சொன்னா கற்பனை திறன் இவங்களுக்கு அலாதி, கத கட்டுறதுல ஞானி, குதர்க்கமான சிந்தனைவாதி.

இதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லட்டா? ஒரு நெருக்கமான ஒருத்தரோட அழைப்புக்காக காத்திருக்கீங்க, அவங்களும் உங்கள அழைக்கிறதா சொல்லிருக்காங்க ஆனா தவிர்க்க முடியாத காரணத்தால அழைக்க முடியல. நீங்க அழைக்கும் போதும் எடுத்துப் பேசுற சூழ்நிலையில இல்லன்னு வச்சுக்கோங்க, சரி ஏதோ பிரச்சன அதான் பேச முடியல, அவங்க சூழ்நில அப்படின்னு நல்லவிதமா நினச்சுக்கிட்டா நல்லது. அப்படியில்லாம வேணும்னே எடுக்கலன்னு நினச்சுக்கிட்டு காரணம் கேட்டும் திருப்தியில்லாம அப்படியிருக்க முடியாது 'பொய்'னு தலையில ஒலிச்சுக்கிட்டே இருக்கிறதனால தையத்தக்கான்னு குதிச்சா 'பாரனாய்ட்'. இதுதான் எல்லாரும் செய்ற விஷயமாச்சேன்னு நீங்க கேட்கலாம். அதுக்காக எல்லாத்துக்கும் 'பாரனாய்ட்'னு சொல்ல முடியாது. இப்படி தோணும் போதே 'ச்சே நமக்கேன் இப்படி தப்பு தப்பா நினக்க தோணுது, அவங்க சொல்றதுல உண்மையிருக்குன்னு மனச நாமே சமாதனப்படுத்திக்க முடியும்னா தப்பிச்சோம். 'பாரனாய்ட்' வந்த பிறகு குணப்படுத்த மருத்துவர தேடுறத விட அதுல விழுந்திடாமப் பார்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம். நம்மள நாமே காப்பாத்திக்க முடியிலன்னா நெலம முத்திப் போயி கண்டதுக்கெல்லாம் குறுக்குக்கேள்வி வந்து வாழ்க்கையே போராட்டமாயிடும். இது நாய் குணம் மாதிரி. சில நாய் பார்த்திருக்கிறீங்களா காரைத் துரத்திக்கிட்டே போகும், அல்லது கண்ணுக்கு பயமா தெரியுற ஏதையாவது பார்த்து குரைக்கும் அந்த மாதிரிதான் இதுவும். இந்த சூழல் ஒரு நட்புக்கிடையே வந்துச்சுன்னா 'நம்பிக்க இல்லன்னா போடா'ன்னு சொல்லிட்டு அவங்களா மன்னிச்சி திரும்ப வர வரைக்குமிருக்கலாம். அப்படியில்லாம கணவன் - மனைவிக்குள் வந்திடுச்சுன்னா யோசிச்சு பாருங்க - வாழ்வே நரகம்தான். 'பாரனாய்ட்' நோயால கொலை செஞ்சக் கதையெல்லாம் கூடஇருக்கு. இப்படிப்பட்டவங்க நம்மக்கு நெருங்கின உறவா இருந்தா இவங்களப் பார்த்துப் பரிதாபப்படுறதா, கோபப்படுறதானே தெளிவாயிருக்கிறவங்களுக்கும் குழப்பமாப் போயிடும்.

பொதுவா இந்த 'பாரனாய்ட்' தாக்கம் இரு வேறுப்பட்ட தகுதிகளுக்கிடையே உள்ள உறவுக்குள்ள வர பிரச்சனை. இத 'இரொடொமேனியா' (Erotomania) அப்படின்னு சொல்லுவாங்க. ஒருவர் பிரபலமாயிருந்தா அவங்க நெருங்கிய உறவான அம்மா, தங்கை, நண்பர்னு யாருக்கு வேணும்னாலும் இந்த நோய் வரலாம். ஏன்னா அவங்கள மாதிரி நாம இல்லங்குற தாழ்வுமனப்பான்மையில அவங்க உதாசினப்படுத்துறாங்கன்னு, அவங்க செய்யுற செயல் ஒவ்வொண்ணும் நம்மள மட்டம் தட்டுறதுக்குன்னு தோணிக்கிட்டே இருந்தா 'பாரனாய்டா' வெடிக்கும். குறைகுடம் கூத்தாடுவது சகஜம்தானே? பாரனாய்டில் பலவகைகள் இருக்கிறது 'புரியாத புதிர்' ரகுவரன் ஒருவகைன்னா 'வல்லவன்' ரீமா சென், 'ஆளவந்தான்', 'அந்நியன்' எல்லாம் ரொம்ப முத்தின வேறு வகை. பாரனாய்ட்வாதிகளுடைய சிந்தனை சிதறல் எப்படியிருக்கும் தெரியுமா?

* காலிப் பாத்திரம் மிகுந்த சப்தமிடுறா மாதிரி சின்ன விஷயத்தையும் பிரம்மாண்டபடுத்திப் பெருசா யோசிப்பாங்க.
* நீ பெரியவளா நான் பெரியவனா என்கிற மாதிரி வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிற்பாங்க.
* தான் நினைக்கிறது, புரிஞ்சுக்கிறது மேல அவ்வளவு நம்பிக்க அவங்களுக்கு - தான் நினைப்பது சொல்றதுதான் சரின்னு உறுதியாயிருப்பாங்க.
* தன் தவறை மறைக்க மத்தவங்க மேல பழி போடுவாங்க. (உத. கணவனுக்கு மனைவி மேல சந்தேகம் என்பதையும் நேரடியாக் காட்டிக்காம அவ இப்படி உன்னப்பத்தி சொல்றா அப்படின்னு மத்தவங்க மேல பழி போட்டு கேள்வி எழுப்புவாங்க)
* நெருங்கியவங்க எப்போதும் ஏமாத்துறாங்க என்ற உணர்வோடு மறைகழண்டு ஆடுவாங்க.
* பிடிச்சபிடியா உரிமையென்ற பேருல உயிரெடுப்பாங்க, சந்தேகப் பிசாசுங்க.

இப்படில்லாமிருக்கிறதால உறவற்று போயிடுவாங்க, தனியாயிருப்பத ஆரம்பத்தில் நல்லாயிருக்குன்னு நெனச்சாலும் 'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை'யாச்சே ஏதாவது குழப்பிக்கிட்டே இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு கணக்குப் போட்டுக்கிட்டு வாக்குவாதத்தில் ஆரம்பிச்சு சண்டையிலப் போயி நிற்கும். தனிமைப்பட்டுப் போன மனசுக்கு பாதுகாப்பில்லாம பய உணர்வு கூடும் அதுவே தூக்கத்தக் கெடுக்கும், பிடிச்ச விஷயங்களக் கூட செய்யப்பிடிக்காமப் போகும். இப்படிப்பட்டவங்கள பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது, இவங்கள கையாள்வது ரொம்ப கஷ்டம்.

சாதாரணமா இருக்கிறவங்க திடீர்னு தாக்கத்தால சின்ன விஷயத்திற்குக் கூட குரல உயர்த்தி சண்டப்போடுவாங்க. தன்னிலை மறந்து நடந்துக்கிறவங்களும் இருக்காங்க, தான் இப்படியெல்லாம் பேசுறோம்னு தெரிஞ்சும் தன்னையே கட்டுப்படுத்த முடியாதவங்களும் இருக்காங்க. தன் மேல கவனம் வரணும் என்பதற்காகவே ரொம்ப விஷேசமா ஆடுவாங்க. இப்படி வித்தியாசமா ஆடும் போதுதான் அத சாமி வந்திடுச்சுன்னும், பேய் புடுச்சிடுச்சுன்னும் மந்திரிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

இந்தப் பிரச்சனை வர்றதுக்கு காரணம் மூளையில 'அமிக்டலா'ன்ற (Amygdala) ஒரு பகுதியில சரியா இருக்க வேண்டிய நரம்பணுக்கள் சிதறிப்போய் பாதிப்படைந்திருந்தாலோ, அல்லது சிறு வயதில் சில சம்பவங்களால் பாதிப்பிருந்தாலோ, அதுவுமில்லாம வேற நோய்க்கு சாப்பிடுற மருந்தோட பக்கவிளைவினாலோ இந்த 'பாரனாய்ட்' வரலாம்.

'பாரனாய்ட்' குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு நான் ஆரம்பத்திலேயே சொன்ன காரணம் பாதிக்கப்பட்டவங்களுக்கு மருத்துவர் மேல முதல்ல நம்பிக்கை வரணுமே? அந்த நம்பிக்கை வந்தாலும் அவர் கொடுக்குற மருந்து மேல நம்பிக்கையிருக்கணும். இந்த மருந்த சாப்பிட்டா நமக்கு அப்படிலாம் தோணாது பூரண குணமாயிடுவோம்னு உறுதியிருக்கணும். இல்லாட்டிப் போனா காசக்கொட்டி வைத்தியம் பார்த்தும் 'ம்ஹும் இந்த மருந்து என்னை மாத்த முடியாது'ன்னு சாப்பிடாம விட்டுட்டா கோவிந்தா கோவிந்தாதான்.

என்ன மண்டையப் பிச்சுக்கிறீங்களா? வேண்டாங்க. சமாதானத்த வெளியில தேடாம அவங்கவங்க மனசுலதான் இருக்குன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா 'பாரனாய்ட்' பின்னங்கால் பிடரில அடிச்சா மாதிரி பிறழ்ந்து ஓடிடும்.

Tuesday, May 15, 2007

நான் அவன் இல்லை - விமர்சனம்


எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய பாடல்களைப் புதுப்பித்து 'ரீமிக்ஸ்' என்ற பெயரில் தருகிறார்களோ அதே போன்ற ஒரு முயற்சிதான் இந்தப் படமும். இந்தப் படம் போலவே இன்னும் 'பில்லா', 'முரட்டுக்காளை' என்று வரிசையாக வரப்போகிறதாம். 'பில்லா', 'முரட்டுக்காளை'யெல்லாம் பரவாயில்லை வெற்றி மசாலாப் படங்கள், அதுவும் பிரபலமான கதாநாயகர்களை வைத்து எடுத்தால் ஓட வாய்ப்புள்ளது. ஆனால் முகவரியே இல்லாத ஓடாத அந்தக் காலத்து கே. பாலசந்தர் தந்த ஜெமினி கணேசன் தனது 54வது வயதில் அவரே தயாரித்து நடித்த படத்தை ரொம்ப தைரியமாகத்தான் திரும்ப தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் செல்வா. இதில் பிரபலமடைந்த பெரிய நடிகருமில்லை. 'யுனிவர்சிட்டி'யில் அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக கவர வைத்து 'திருட்டுப் பயலே'வில் தனக்கென முத்திரை பதித்த ஜீவனை கதாநாயகனாகப் போட்டு எடுத்த இந்தப் படத்தை வணிக ரீதியாக வெற்றி பெறும் என்ற முழு தைரியத்திற்கு காரணம் அவர் உபயோகித்த வலுவான ஆயுதம். யோசிக்காமல் புரிந்திருக்குமே? அதான் 'கவர்ச்சி'. பெண்களை ஏன்தான் போகப் பொருளாக எல்லோரும் காட்டுகிறார்களோ தெரியவில்லை. எல்லாப் படங்களிலும் அப்படித்தான் என்றாலும் இதில் கூடுதலாகவே. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காகவே தேடிப்பிடித்து எடுத்த படமா இது என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது. காரணம் எல்லாப் பெண்களையும் ஆபாசமாக அலையவிட்டது மட்டுமல்லாமல் முட்டாள்களாக காட்டியிருக்கிறார்கள். ஓர் இரண்டு பேர் முட்டாள்களாக காட்டியிருந்தால் பரவாயில்லை, படத்தில் வரும் அத்தனை பெண்களும், நீதிபதியான லட்சுமி உட்பட அனைவரையும் முட்டாளாக சித்தரித்திருக்கிறார்கள்.

மன்மத லீலைகளால் பெண்களை கவர்ந்து, ஏமாற்றி, திருமணம் முடித்து, நகை- பணத்தை அபகரித்து மறைந்துவிடும் கதாநாயகன் மீது வழக்கு தொடர்ந்து கூண்டில் நிற்க வைத்து சாட்சிகள் சொல்வதை விரிவுபடுத்துவதுதான் கதை. ஜீவனுக்கு மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். படித்த மாடலிங் செய்யும் மாளவிகாவிடம் விக்னேஷாக, ஜோதிர்மயியிடம் மாதவன் மேனனாக, எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் திருந்தாத சமுதாயத்தை கண்டிப்பதற்காகவே கீர்த்தி சாவ்லாவிடம் போலிச் சாமியார் வேடத்தில் ஹரிதரதாஸாக, தொழிலதிபர் நமீதாவிடம் ஷாம் பிரசாத்தாக வருகிறார். ஆனால் உண்மையில் ஜோசப் பெர்னாண்டஸ், குற்றவாளி கூண்டில் நிற்கும் போது தான் அண்ணாமலை என்கிறார். ஒப்புக்கு சப்பாக சினேகா, அதுவும் வக்கீலுக்குப் படித்த பெண் ஜாகீர் ஹுசைனிடம் பணத்தை ஏமாறுகிறார் ஆனால் அந்த குற்றவாளிக்கே ரசிகையாகிறார், என்ன கண்றாவிடா சாமி! எல்லா சாட்சிகளின் குற்றச்சாட்டின் முடிவிலும் ஒரே மாதிரியான வசனம் 'நான் அவன் இல்லை' என்று. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் கோட்டைவிட்டிருக்கிறார். கதையில் பெரிய ஓட்டையிருக்கும் போது பாவம் அவரும் என்ன செய்வார்.

நமீதா வரும் இடங்களிலெல்லாம் என்னையறியாமல் நான் காட்சியை வேகமாக ஓடவிட்டேன் ஏனெனில் கைக்குட்டையை ஆடையாக உடுத்தி வருகிறார் அதுவும் மழையில் நனைகிறார் அதனை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? எல்லா நடிகைகளும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டிருப்பதால் நடிப்பை மறந்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் ஜீவன் ஆயிரங்காலத்து பயிரை எளிதாக மேய்வதாக தந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, தனக்கு தந்தப் பொறுப்பை நன்றாக முடித்திருக்கிறார்.

மாளவிகா திருமணத்தை நண்பர்கள் குடும்பம் சூழத்தான் செய்கிறார்கள் இருப்பினும் மாப்பிள்ளை புகைப்படத்தை புதுத்தொழில் நுட்பமான செல்பேசியில் அவரே எடுப்பதாகச் சொல்லுகிறார்களாம், எடுக்கிறார்களாம். ஏன் திருமணத்திற்கு வந்த வேறு யாரிடமும் புகைப்படம் எடுக்கும் செல்பேசியே இல்லையா என்ன? அதே போல் பழைய படத்தில் சினேகா வேடத்தில் லட்சுமி, இந்த படத்தில் லட்சுமியின் மகள் சினேகா. சினேகா ஜாகீர் உசேன் ஓவியத்தின் ரசிகையாம், அவருடைய கண்காட்சியைத் தேடிப்பிடித்துப் பார்க்க வருகிறார் ஆனால் ஜாகீர் உசேன் எப்படியிருப்பார் வயதானவரா இளைஞரா என்று கூட தெரிந்து வைத்துக் கொள்ளாமலிருக்கிறார். காதில் பூ சுற்ற ஒரு அளவு வேண்டாம்? திரைக்கதை எழுதி இயக்கிய செல்வா இந்த மாதிரி படம் முழுக்க பல ஓட்டைகள் தந்திருக்கிறார். இதனை தைரியமாக தயாரித்தவர் வி. சித்தேஷ் ஜபக். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினியின் பழைய படத்தில் வரும் 'ராதா காதல் வராதா' என்பதை ரீமிக்ஸ் செய்து புதுப்பொலிவு தந்திருக்கிறார். மற்றுமொரு பாட்டு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. பழனி பாரதி மற்றும் பா. விஜயின் வரிகளானாலும் மனதில் நிற்கும்படி விஜய் ஆண்டனி தட்டவில்லை என்று சொல்லலாம்.

படம் பார்க்கும் போது அந்த பழைய படம் நினைவில் வராமலில்லை. அந்த பழைய படம் தொலைக்காட்சியில் போடும் போது 'இதெல்லாம் பெரியவங்க படம் பார்க்கக் கூடாது' என்று எங்க அம்மா விரட்டியடித்தது நினைவிலிருக்கிறது. இப்போதெல்லாம் 'பெரியவங்க' படமென்று தனியாக பிரிக்க முடியாது எல்லாப் படங்களுமே அப்படித்தானே? அந்தக் காலத்துக்கு இந்த கதை, புருடா எல்லாம் சரிதான் ஆனால் தொழில்நுட்பங்கள் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்தில் எடுபடவில்லை. சின்னத்திரை 'சீரியலிலேயே' பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வருகிறார்கள் ஆனால் அத்தகைய விஷயங்கள் இதில் இல்லை. காவல் துறையின் விசாரணை, அரசு வழக்கறிஞர் வாதம் எதிலுமே காரசாரமில்லை. ஒரு இடத்தில் குற்றவாளியை வழக்கறிஞர் 'ஜீனியஸ்' என்கிறார் அபத்தமாக. முடிவுரையாக கதை மூலம் சொல்ல வந்தது பின்னணி தெரியாமல் பெண்கள் ஏமாற வேண்டாம் 'பேராசை பெரு நஷ்டம்' என்பதாக. அதற்காகப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

படித்த பெண்கள், ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டிக் காப்பாற்றும் பெண் என எல்லாரும் ஒரே மாதிரியாக ஏமாறுவார்களா? ஆளைக் கவிழ்க்கும் வார்த்தைஜாலங்களில் பயிற்சி பெற்றிருந்தாலே, தபு சங்கர் காதல் தொகுப்புகளை மனனம் செய்திருந்தாலே போதும் பெண்கள் எளிதில் மயங்கிவிடுகிறார்கள், பெண்கள் என்றாலே பணத்தையும் அந்தஸ்தையும் பார்த்துத்தான் காதல் வயப்படுகிறார்கள் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கும் விதமாகவே அமைந்துள்ளது இந்தத் திரைப்படம்.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் இரண்டே வகையான பெண்கள்தான் உண்டு முதல் வகை பெண்கள் முட்டாள்கள். இரண்டாம் வகையினர் புத்திசாலியாக நடிப்பவர்கள் என்று.. அதே கொள்கையுடைவர்தான் இந்த செல்வாவும் போலும். என் நண்பர் அப்படிச் சொல்லும் போதெல்லாம் நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று. அதுதான் இந்தப் படத்தின் மூலம் உண்மையென புலப்படுகிறது.

திரைப்படம் என்றாலே 'real' அல்ல 'reel' என்பதை அறிவேன், இருப்பினும் கேட்கிறவன் கேணயனாய் இருப்பின் கேப்பையில் நெய் வடியும் என்பது போல் உள்ளது படம்.

Tuesday, May 08, 2007

வெர்டிகோ - Vertigo

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா? ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, 'நல்ல மருத்துவரா பாரு 'நீ முழுகாம இருக்கன்'னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு மயக்கமா வருதுன்னா, 'ரொம்ப 'அனிமிக்கா' இருக்க ஒழுங்கா சாப்பிடறதில்ல'ன்னு திட்டுவோம். மெலிஞ்ச ஒருத்தர் கடுமையா உழைச்சுக்கிட்டுருக்கிறப்போ தடுமாறினா 'பசி மயக்கம் சாப்பிட்டு வந்து தெம்பா வேலய பாரு' என்போம். அதனால மயக்கத்திற்கு பல வகையான காரணமிருக்கலாம் ஆனா இந்த 'சுழற்சி'க்கு (வெர்டிகோவிற்கு) ஒரே காரணம்தான் இருக்க முடியும்.

நம்முடை vestibular system ஆட்டம் கண்டுடுச்சுன்னா நாமும் ஆட்டம் கண்டிடுவோம். அதாவது காதின் உட்பகுதியில மூணு அரைவட்ட வளையமா வெட்டு கால்வா மாதிரி ஒருவகை திரவத்தால் சூழ்ந்திருக்குமே அதுக்கு பேருதான் 'லபிரிந்த்' (labyrinth). இதுக்குள்ள இரண்டு நுண்ணிய உறுப்பு இருக்கு 1. மகுல்லா 2. கிரிஸ்டா. இதுல மகுல்லா (maculae) தான் நாம நடக்கும் போது தடுமாறாம புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து நம்மள நடக்கச் செய்யுது. குடிகாரங்கள பார்த்தீங்கன்னா ஒழுங்கா நிற்க முடியாம தள்ளாடுவாங்க காரணம் மகுல்லாவுடைய செயல்பாட்டை உணர முடியாம போறதுதான். அதே மாதிரி சினிமால கதாநாயகி மேல பூ தூவும் போது அப்படியே சுத்துவாளே, சில நடனத்திலும் சில காட்சி அப்படி வருமே, அதே மாதிரி வேகமா நீங்களும் சுத்திப் பாருங்க கால் நின்ற பிறகும் அப்படி 'கிர்'ருன்னு சுத்திக்கிட்டே இருக்கிறா மாதிரி இருக்கும் அந்த மாதிரி நாம வேகமா நடக்கும் போது ஆச்சுன்னா என்ன செய்றது? அப்படி ஆகாம இருக்கத்தான் கிரிஸ்டா (cristae) உதவுது. மீன் தொட்டீல மீன் ஓடுறத பார்த்தீங்கன்னா இங்கேயும் அங்கேயும் வேகமா ஓடும், டக் டக்குன்னு திரும்பும் ஆனா இதுக்கு தல சுத்தாது காரணம் உடம்புலேயே நிறைய கிரிஸ்டா இருக்காம் அதுக்கு. இந்த இரண்டு நுண்ணிய உறுப்பாலான 'லபிரிந்த்' நாம தலைய அசைக்கும் போதோ கண் அசைக்கும் போதோ அந்த செய்திய vestibular நரம்பு மூலமா மூளைத்தண்டுக்கு (brainstem) கொடுத்து அப்புறம் சிறு மூளைக்கு (cerebellum) அனுப்புது. இப்படி ஒழுங்காக நடக்காமல் ஒரு காதும் இன்னொரு காதும் ஒரே மாதிரியான வேலயச் செய்யாம இரண்டுக்கும் சண்டைங்குற மாதிரி நடந்துக்கிட்டு சமநிலைய சமாளிக்க முடியாமப் போகும்போதுதான் இந்த சுழற்சி ஆரம்பமாயிடுது.




ஏன் அப்படி திடீருன்னு பிரச்சன வருதுன்னு நீங்க கேட்கலாம். நம்ம குடும்பத்துல யாருக்காவது இருந்தா நமக்கு வரலாம், மன அழுத்தத்தால இருக்கலாம், வேற நோய்க்கு மருத்துவரே கொடுத்த மாத்திரையோட பக்கவிளைவா வரலாம், திடீர் அதிர்ச்சியால நேரலாம், ரத்த அழுத்தம் சீராயில்லாம இருந்தாலும் ஒட்டிக்கலாம். பொதுவா வயசானவங்களுக்கு இந்த பிரச்சனை வருவது தவிர்க்க முடியாது இது அப்படியே கூடி ஞாபக மறதில கொண்டுபோய் விட்டுடும். வயசானவங்களுக்கு வந்தா ரொம்ப கவனமா இருக்கணும், கழிப்பறைக்குத் தனியாவெல்லாம் போனா கொஞ்சம் பார்த்துக்கணும் காரணம் அங்க வழுக்கி விழுந்துட்டா மண்டையில் அடிப்பட்டுட்டா அப்புறம் நேரா 'கோமா'தான்.

சுழற்சியினால (வெர்டிகோவினால) லேசான தலைவலி, கிறுகிறுப்பு, உடல் சோர்வு எல்லாமும் சேர்ந்து வரும். பூமி அதிர்ச்சி அங்கங்க கேள்விப்படும் போது இந்த சுழற்சி உங்களுக்கு இருந்தா 'அட பூமி அதிர்ச்சியோ'ன்னு யோசிக்கிற அளவுக்கு தடுமாற்றம் வரும், தல சுத்தும். இப்படி பார்த்துட்டு யாராவது கூப்பிடுவதக் கேட்டு, அப்படி திரும்புன்னா போச்சு அப்படியே தள்ளுற மாதிரி இருக்கும். உலகம் நிஜமாவே சுத்துதுன்னு ஒத்துக்குவோம். யாரோ ஏதோ செய்வினை வச்சிட்டாங்களான்னு சிலர் பயப்படவும் செய்வாங்க அப்படி ஒரு மாயை நிறஞ்சதுதான் இந்த சுழற்சி.

ஆரம்பத்திலேயே இப்படி பிரச்சன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டா ஸ்டூஜெரான் (Stugeron) அப்படின்னு ஒரு மாத்திர தருவாங்க அதிலயே சரியாப் போயிடும். முதல் வாரத்துல சாப்பிட்டும் சரியாகலன்னா ஒரு சோதனையெடுப்பாங்க 'ENG'ன்னு (electronystagmography), அப்புறம் தல சுத்துதா இன்னும்னு சோதிப்பாங்க அப்புறம் CDP எடுப்பாங்க (Computerized Dynamic Posturography). தலைக்காக சில பயிற்சியும் தருவாங்க. ஒழுங்கா பிரச்சனைய மருத்துவர் கிட்ட சொல்லணும், ரொம்ப மன அழுத்ததால ஆரம்பமாச்சா, தல சுத்து மட்டும்தானா இல்ல வாந்தி, காதடைப்பு, காதுல 'கூ'ன்னு கேட்டுக்கிட்டே இருக்கா, இல்ல காது கேட்காத மாதிரி ஒரு உணர்வுன்னு ஏதாவது மத்த விளைவுமிருக்கான்னு. ஆனா அலட்சியமா இந்த பிரச்சனைய விட்டுட்டா தல சுத்து அதிகமாகி எங்கேயாவது விழுந்து மண்டையில் அடிப்பட்டு நெலம இன்னும் மோசமாயிடும். கீழ விழாம தப்பிச்சாலும் இந்த பிரச்சன ரொம்ப முத்திப் போச்சுன்னா பக்கவாதம், 'டியூமர்' எல்லாம் வரும்.

ஒரு விமான ஓட்டுனருக்கு இந்த மாதிரி பிரச்சன இருந்தா என்னாகும்னு யோசிச்சு பாருங்க. ஆனா அவங்களுக்கு இந்த பிரச்சன வரவும் அதிக வாய்ப்பிருக்காம். கடல் மட்டத்துக்கு மேல போய்கிட்டு இருக்கிறப்போ வலது பக்கம் திரும்புறா மாதிரி மாயை தெரியும் நேரா போய்க்கிட்டு இருந்தாலும். அப்படி இருந்தா அவருக்கு மட்டும் பிரச்சனையில்ல அந்த விமானத்துல நாம பிராயாணம் செஞ்சுக்கிட்டு இருந்தா நமக்கும்தான். கவலைப்படாதீங்க அவங்களுக்கு பரிபூர்ண மருத்துவ பரிசோதனையெல்லாம் செஞ்ச பிறகுதான் ஓட்ட அனுமதிப்பாங்க. ஆனா நம்ம நல்ல நேரம் அவசரத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையுள்ளவர் மாட்டுனா அவரோடு சேர்ந்து நாமும் கதிகலங்க வேண்டியதுதான்.

என்ன படிச்சிட்டு தலச்சுத்துதா? அப்ப ஒரு நல்ல மருத்துவரா பாருங்க.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி