Monday, August 31, 2009

குறையேதுமில்லை


புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி
வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்

மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்
மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி
மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்

அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்
அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று
அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்

உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
உலுக்கி பெறுகின்றாய்
உகந்ததை தரவே செய்கின்றேன்
உள்ளம் ஒன்றாமல்

எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்
உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்
பிடிக்காமல் போனாலும்

சொல்லத்தான் செய்கிறோம்
ஒன்றாய் வாழ்கிறோமென்று

Monday, August 24, 2009

எல்லாம் யாருக்காக?


என் வயதொத்த
பிள்ளைகள்
கனவின் நடுவிலிருக்க
நான் நித்திரை விட்டு
குளிர் நடுக்கத்தில்
முக்காடில் நுழைந்து
மதரஸா விரைந்தேன்
புரியாத அரபி கற்க
அம்மம்மா மெச்சுதலுக்காக.

அழைப்பு விடுத்தவுடன்
கண்ணாமூச்சியில்
கண்கட்டவும் மறந்து
புரியாமல் மனனம் செய்த
பாடங்களை ஒப்பித்தபடி
தொழுதேன்
அன்புடன் அணைத்துக் கொள்ளும்
அப்பாவுக்காக

விதவிதமான ஆடையில்
தோழிகள்
பள்ளி விழாவிற்கு
பவனி வர
வெதும்பிய மனதை
ஹிஜாபில் ஒளித்தேன்
பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்
அம்மாவுக்காக

விவரம் தெரியாத வயது ஓய்ந்து
பொருள் புரியாத மொழி
புலப்பட்டதும்
அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவுக்காக அல்ல
ஒழுக்கத்தை விரும்பும்
இறைவா எல்லாம்
உனக்காகவென்று.

Monday, August 17, 2009

இதென்ன கப்பிங் கலாட்டா?

'கப்பிங்' பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம்.

மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் என்று எது பலன் தருகிறதோ அதனை மனிதன் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப பின்பற்றிச் சென்றிருக்கிறான். சிகிச்சையும் மருந்துகளும் வித்தியாசப்பட்டாலும் அதன் இறுதி வடிவம் குணமடைவதாக இருந்தால் அதைக் கையாளுவதில் எவருக்கும் தயக்கமிருக்காது. அதன் அடிப்படையில் வழிபடுதல், நம்பிக்கை என்பதையும் கூட அந்தக் காலத்தில் மருந்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். தீக்காயத்திற்கு நெருப்பு வைத்தியம் என்ற முறை கூட இருந்திருக்கிறது.

தாவரங்கள், வேர்கள், பறவை, விலங்கு, வருடி பிடித்து விடுதல், சூடு, சிரிப்பு என்று எதையுமே நாம் விட்டு வைக்கவில்லை மருந்தாக்க. பறவையின் கூட்டை தலைவலி நிவாரணியாக, ஒரு வகை எலியின் பல்லை கழுத்தில் கட்டிக் கொண்டால் பல் வலி நீங்கும் என்ற நம்பிக்கை வைத்தியமாக, எலியின் தோலை முகர்ந்தால் கடும் தடுமலும் ஓடிவிடுமென்ற மருத்துவம் இப்படி பலவகையான நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் இருந்தே வந்திருக்கிறது. சில வகை வைத்தியத்தைத் தவிர மற்றதெல்லாம் விஞ்ஞானம் விரிவு பெற ஒவ்வொன்றாக அழிந்தும் இருந்திருக்கிறது.

ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யுனானி போன்றவைகளை தீவிரமாக இன்றும் நம்பத்தான் செய்கிறோம். என்ன, அலோபதியாட்கள் ஹோமியோபதி மருத்துவம் பெறுபவர் மாட்டுவண்டியில் பயணிப்பவர் என்றும் அலோபதியே வேக வைத்திய விமோசகரென்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இப்படியான வரிசையில் இப்போது ‘கப்பிங்’ வலுவாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சையுமில்லை, செலவும் குறைவாம்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று கண்ணதாசன் பாடினார். உண்மையில் ஒரு கோப்பையில் என் ஆரோக்கியம் என்று கப்பிங் முறையால் திருப்தியடைபவர்கள் பாடத் தொடங்கியுள்ளனர். 3000 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவம் நுரையீரல் பாதிப்பு, இரத்த அழுத்தம், நெஞ்சு சளி, முதுகு வலி போன்றவற்றின் நிவாரணி. வியாதிஸ்தர்களைப் படுக்க வைத்து ஒரு சிறிய கண்ணாடி அல்லது மூங்கிலான கோப்பையை வெறுமையாக்கி அதாவது அதிலுள்ள பிராணவாயுவான ஆக்சிஜனை எரித்து அந்த கோப்பையை சூடாக்கி, தோள்பட்டைக்குக் கீழ் பகுதி அல்லது முதுகின் கீழ் பகுதியில் கவிழ்த்துவிட்டாலே போதும் நம் உடலில் உள்ள நஞ்சை அப்படியே நீக்கிவிடுமாம்.

எலும்புகளால் நரம்பால் தோலாலான நம் உடலில் நான்கு வகையான திரவமுள்ளது அவை இரத்தம் (Blood), கொழுமை சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile). கடைசியில் குறிப்பிட்ட கரும்பித்தமே நஞ்சுத்தன்மையை உண்டாக்கி நம் உடல்கேட்டிற்கும், இயலாமைக்கும் காரணியாகிறது. ஒரு கப்பில் சுமார் 10- 15 மிமி நஞ்சு வெளியாகுமாம். அந்த நஞ்சை நீக்கும் போது அந்த இடத்தில் நல்ல இரத்தம் ஊறுவதால் உடல்நலக் குறைவு சீர் பெறுகிறதாம். சிகிச்சைக்குப் பிறகு கொஞ்ச நேரம் அப்படியே படுத்த நிலையில் இருக்க வேண்டுமாம். நெஞ்சு சளி, நுரையீரல் பிரச்சனை வைத்தியத்திற்காக நஞ்சை விலக்கியிருந்தால் உடனே கம்பளியால் நோயாளிகளைச் சுற்றி குறைந்த உஷ்ணத்திற்கு உடன் மாற்றிவிட வேண்டுமாம்.

கப்பிங் முறை சாதாரண விஷயம்தான் ஆனால் இதனை கைதேர்ந்த பயிற்சி பெற்ற மருத்துவர்களே செய்ய முடியுமாம். அதனால் உங்கள் மீது சோதனை செய்தவற்காக பயிற்சி பெறாத யாரும் அழைத்தால் 'ரிஸ்கெடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி'யென்று போய் விட வேண்டாம். அப்புறம் முக்கியமான இன்னொரு விஷயம் இந்த கப்பிங்கின் போது நஞ்சு நீங்கும் போது வலியிருக்காது ஆனால் உறிஞ்சிய இடத்தில் இரத்தம் கட்டியது போல் வடு ஏற்படும், எப்படி அட்டை உறிஞ்சிவிட்ட இடத்தில் சிகப்பாக இருக்குமோ அந்த மாதிரி. அந்த வடு கூட சில நாட்களில் மறைந்துவிடுமென்று சொல்கிறார்கள். `கப்` பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவமென்பதால் `கப்பிங்` என்ற பெயர் வந்தது என்று சின்னக் குழந்தைகளும் சொல்லிவிடும்.

இந்த கப்பிங் முறையின் பிறப்பிடம் எகிப்து. அதன் பின்னர் அதனை முழுமையாக இன்னும் சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். கப்பிங் மருத்துவ முறையை அரபியில் ஹிஜாமா என்று சொல்கிறார்கள். ஹிஜாமா என்ற பதம் ஹிஜாம் அதாவது உறிஞ்சுதல் என்று அரபியில் பொருட்படும். ஹிஜாமா மருத்துவம் சிறப்பு என்று நபிகள் முகமது (ஸல்) குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறதாம் அல் புகாரி 10/139. அதனால் இது இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்று தவறான புரிதல் கொள்ள வேண்டாம். கிவ்யினெத் பால்த்ரோ (Gwyneth Paltrow) என்ற ஹாலிவுட் நடிகைக்கு பல பேர் விசிறியென்றால் அவர் கப்பிங் மருத்துவ முறையின் விசிறியாம். சில வருடத்திற்கு முன்பு நடந்த நியூயார்க் படவிழாவில் அவர் முதுகில் தடயங்களுடன் வந்ததை பார்த்து கேள்விக்கணை தொடுக்கவே அவர் இதைப் பற்றி விளக்கியுள்ளார். அமீரகத்தில் ஷார்ஜாவில் இதற்கான மருத்துவர் இருப்பதாக `கல்ப் நியூஸ்` சொல்லியது மருத்துவக் குறிப்பு செய்தியோடு.

மருத்துவம் விஞ்ஞானம் என்று வளர்ந்தாலும் தினம் தினம் புது நோய்களும் உருவாகவே செய்கிறது. மருந்துகளும் சிக்கிச்சைகளும் வியாதிகளின் பாதிப்புகளையும் வலிகளையும் தள்ளிப் போட முடியுமே தவிர இழப்பையும் இறப்பையும் அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Monday, August 03, 2009

உயரே பறக்கும் காற்றாடி....

"இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது" என்று வாழ்வியல் விஷயங்களிலிருந்து விண்ணில் விடும் காத்தாடி வரை பற்றி பேசும் ஒரு நண்பராக, ஆசானாக, பாதுகாப்பாளனாக மகன் அமீரின் நலனுக்காகவே உயிர்வாழும் நல்ல தந்தைதான் ஆக்ஹா. இவர் ஆப்கானிஸ்தான் முல்லாக்களின் கையிலிருந்து வதைபட விரும்பாது சுதந்திர வாழ்வை தேடி, ரஷ்யாவை சபித்துக் கொண்டே பாகிஸ்தான் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல சரக்குந்தில் பயணம். வழியில் வண்டியை சோதனைக்காக நிறுத்தும் காவலாளி வண்டியில் இருக்கும் பெண்ணை 5 நிமிடம் அவருடன் ஒதுங்க கேட்டதைப் பொறுக்க முடியாமல் கொதித்து போகும் ஆக்ஹா மறுத்துப் பேசி வாதாடுகிறார். யாரோ ஒருவருக்காக நெஞ்சை நிமிர்த்தி குண்டை ஏந்தத் தயாராக இருக்கும் தந்தைக்கு நேர் எதிர் ஆமிர். தன் உயிர் தோழன் ஹஸன் அடிவாங்குவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்து உதவ முடியாத கோழை. ஆனால் ஆமிருக்கு ஏதேனும் ஒன்று என்றால் தன் உண்டி வில்லால் ஓங்கி விரட்டுவான் ஹஸன், ஆமிரின் வெற்றியைக் காண 'காத்தாடி'யை இயக்க உதவுவான், வானத்தையே பார்க்காமல் ஆமிரின் கையசைவுகளை வைத்தே காத்தாடியின் திசையையறிந்து காத்தாடி பந்தயத்தில் வெற்றியடைய உதவுவான், பந்தயத்தில் வென்ற காத்தாடி வரும் திசையறிந்து எடுத்து வரக் காத்திருப்பான். ஹஸாரா இனத்தைச் சேர்ந்த ஹஸனைக் கண்டாலே வெறுப்பை கக்கும் பஷ்தூன் இனத்தை சேர்ந்த ஆசெப் மற்றும் அவனது நண்பர்கள் ஆமிரை ஹஸனைவிட்டு விலகியிருக்க எச்சரித்ததோடு ஹஸன் தனியாக மாட்டும் போது அவனிடம் தகாத முறையிலும் நடந்துக் கொள்கிறார்கள். நண்பனைக் காப்பாற்ற முடியாத கோழை ஆமிர் ஹஸனை தற்காத்துக் கொள்ள முடியாத கோழையென்று தூற்றி ஒதுக்குவதோடு தன் குற்றவுணர்ச்சியை மறைக்க நண்பன் ஹஸன் மீது களவுக் குற்றத்தை சுமத்திப் பிரிகிறார்கள் சிறுவர்களாக.

கம்யூனிசக் கொள்கைகளையும், இஸ்லாம் மதத்தைத் தவறாக புரிந்துக் கொள்ளும் முல்லாக்களையும் விமர்சிக்கும் ஆக்ஹா தன் மகன் தனக்காகவே போராட முடியாதவனாக இருக்கிறானே இவன் பிறருக்காக எப்படி தட்டிக்கேட்பான் என்று அவர் நண்பர் ரஹீம்கானிடம் வருத்தப்படும் போது ’குழந்தைகள் வண்ணம்தீட்டும் புத்தகமல்ல தேர்ந்த வண்ணத்தை தீட்ட அவர்கள் இயல்பிலேயே விட்டுவிட வேண்டும். அவன் உன்னை மாதிரி இல்லாவிட்டாலும் அவன் விருப்பப்படி நல்ல கதையாசிரியராவான்’ என்ற நம்பிக்கைகேற்ப காலிபோர்னியாவில் எழுத்தாளராகிவிடுகிறான் ஆமிர். சிறிய வயதில் அவன் எழுதிய கதைகளை விரும்பிக் கேட்பவர்கள் ரஹீம்கான் மற்றும் ஹஸன் மட்டும்தான். ஆமிர் எழுதிய கதையை பாராட்டி ரஹீம்கான் அனுப்பும் கடிதத்தை மகிழ்ந்து படிக்க, ஹஸன் அந்தக் கதையின் விபரத்தை வினவுவான். ”ஒரு மாயக் கோப்பையில் கண்ணீர் சிந்தினால், கண்ணீர் முத்தாகிவிடும் கதையின் முடிவில் ஒரு முத்து மலைக்குவியலின் கீழ் கதைநாயகன் மனைவியைக் கொன்ற இரத்தக் கறையுடன்” என்று சொல்லும் போது ஹஸன் அப்பாவியாக ”கண்ணீர் வர ஏன் மனைவியைக் கொல்ல வேண்டும் ஒரு வெங்காயத்தை அவன் வெட்டினால் என்ன?” என்று கேட்கும் காட்சி நமக்கு புன்சிரிப்பை வரவழைக்காமல் இல்லை.


காலித் ஹுசைனியின் முதல் புதினமான ’தி கைட் ரன்னரை’த் தழுவி 2007 இல் அதே பெயரில் வெளிவந்த படம். கதையென்று பார்த்தால் இரு நண்பர்களான ஆமிர்- ஹசன் சிறு வயதில் பிரிந்து பின்பு ஹஸன் தன் தந்தைக்கும் ஹஸாரா இனத்தை சேர்ந்த வேலைக்காரிக்கும் பிறந்தவன் என்பதை அறிந்ததும் அவனை ஏற்க மனம் விரும்புகிறது. அதுவும் தன் வீட்டைக் காக்க தன் உயிரையும் தாலிபானரிடம் இழக்கிறான் என்று அறிந்து வேதனையடையும் ஆமிர் தன் கோழைத்தனத்தைத் துறந்து அவனுக்குக் கைம்மாறு செய்யும் வகையில் ஹஸனின் மகன் சோராபை தாலிபானிடமிருந்து மீட்பதே கதை.

ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, ரஷ்யப்படை ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, ஆக்ஹா ரஷ்யாவை வெறுக்கும் காரணம், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், தாலிபானின் அட்டூழியம் என்று சில விஷயங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் விளக்கியது படத்தை என்னுடன் சேர்ந்து பார்த்த ஆசிப் மீரான். உலக சினிமாக்களை உலகம் தெரிந்தவர்களுடன் உட்கார்ந்து பார்ப்பதின் சிறப்பு இதுதான்.

ஆமிர் காபுல் செல்லும் போது மத ரீதியில் அங்கு நடக்கும் கொடுமைகளும் அட்டூழியங்களும் பார்க்கும் போது இப்படியும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா என்ற பிரம்மிப்போடு மன அழுத்தத்தையும் தருகிறது. குறிப்பாக ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணை அவள் கற்பில்லாதவள் என்று குற்றம் சாட்டி, குற்றம் புரிந்த ஆண்- பெண் இருவரையும் முகத்தை மூடி ஒரு பொதுமக்கள் கூடியிருக்கும் அரங்கிற்குக் கொண்டு வந்து. இஸ்லாம் மத ஞானமேயில்லாத ஞானசூனியங்கள் மதகுருவாக ‘இறைவனுக்கெதிராகக் குற்றம் புரிந்த இந்தப் பெண்ணை கல்லால அடித்துக் கொல்வோம்’ என்று ஆணையிட எல்லோரும் தவறு செய்த இருபாலரில் அந்த பெண்ணை மட்டும் கல்லால் அடித்துக் கொல்லும் கொடூரத்தை சகிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மதகுரு அநாதை விடுதியில் இருக்கும் பெண் குழந்தைகளை இரகசியமாக கூட்டிச் செல்பவன். இது போன்ற உண்மைச் சம்பவங்கள் உலகில் நடக்கத்தான் செய்கிறது. மனித உரிமைக் குரல்கள் அங்கு ஒலிக்க விடுவதில்லை. மதமென்று மதம் பிடித்துத் திரிபவர்கள் சுத்த 'சூஃபி'களாக நடித்துக் கொண்டு பெண்களைப் பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்துவதே மதத்திற்குப் புறம்பானது என்று உணராதவர்கள்.

தந்தையும் மகனும் கனமான மனதுடன் புலம்பெயர்கையில் மகன் நினைவுக் கொள்ளும் ரூமியின் கவிதை (நம்ம நாகூர் ரூமியல்ல இவர் பாரசீக கவிஞர்), ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சை அள்ளியது. மொழியாக்கத்தில் தவறிழைப்பேன் என்பதால் அப்படியே:

If we come to sleep We are His drowsy ones.
And if we come to wake We are in His hands.
If we come to weeping, We are His cloud full of raindrops.
And if we come to laughing, We are His lightning in that moment.
If we come to anger and battle, It is the reflection of His wrath.
And if we come to peace and pardon, It is the reflection of His love.
Who are we in this complicated world?

ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டாம் பட்டம் விடும் விளையாட்டு. அந்த விருப்பத்தை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள் அதுவும் ஒவ்வொரு குழந்தையும் பட்டம்விடும் போது காட்டும் உற்சாகமும் அவர்களின் முகபாவங்களும் ஆர்வமும் நமக்கும் பட்டம் விடும் ஆசையை தூண்டுகிறது. சின்ன வயதில் என் தம்பியுடன் விட்ட முதல் பட்டம், மாஞ்சா செய்கிறேன் பேர்வழியென்று என் தம்பி நாய் கழிவை தேடிப் போய் அடி வாங்கிய சம்பவம், ’நெத்தியடி’ படத்தில் பட்டத்திற்காக முதல் காட்சியில் ஓடுவது, ‘கேளடி கண்மணி’ படத்தில் மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை விடுவித்து ஜனகராஜ் இறக்கும் காட்சி, என்று என்னையுமறியாமல் பட்டம் தொடர்பான சம்பவங்கள் வந்துகொண்டே இருந்தது.

பார்க்கும் எல்லாருக்கும் இந்தப் படம் பிடித்துப் போகுமென்று சொல்ல முடியாது. ‘இந்தப் படத்தில் என்ன சொல்ல வராங்க’ என்று கேட்பவர்களெல்லாம் தயவு செய்து இந்தப் படத்தை பார்த்துவிட்டு என்னை திட்டிக் கொண்டு இருக்க வேண்டாம். படத்தில் காட்சி அமைப்புகள் அருமை, படத்தைப் பார்த்த பிறகு பஷ்தூன் யார், ஹஸாரா இனத்தவர்களின் சரித்திர வேர் என்று வேண்டியவைகளை 'விக்கி'யை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.

மகன் சோராப் சுதந்திர ஆப்கானிஸ்தானில் வளர வேண்டும். ஓடித் திரிந்த தெருக்களைக் காண ஆமிர் வர வேண்டும். வண்ணப் பூக்கள் ஆப்கானிஸ்தான் சாலையெங்கும் பூக்கவேண்டும். மீண்டும் வானில் பட்டங்கள் உயர வேண்டுமென்பதே ஹஸனின் கனவு என்று ஆமிருக்கு எழுதுவார். ஹஸனுக்கு மட்டுமல்ல ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த பலருக்கும் இந்தக் கனவிருக்கும். படத்தின் முடிவில் வானத்தை நோக்கிப் பறக்கும் பட்டத்தைப் போல் சிறுவன் சோராப் மன இறுக்கத்திலிருந்து வெளிவருகிறான் என்று என்னால் நிம்மதி பெருமூச்சை விட முடியவில்லை. ஆப்கானிஸ்தான் என்ற சாப பூமியிலிருந்து ஒரு சோராப் காப்பாற்றப்பட்டுவிட்டான் ஆனால் மற்றவர்கள் என்ற வருத்தம் தொக்கி நிற்கிறது.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி