Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, June 25, 2020

சொர்க்கமே என்றாலும்

புத்தம் புதுச் சூழலில் இதமான தட்பவெப்பத்தில் எழிலுடன் கூடிய இடத்தில் ரம்யமான மணம் தன்னைத் தொட்டுச் செல்ல, சலீம் எழுந்தான். உடலில் எந்த வலியும் இல்லாததை உணர்ந்தான். கை, கால்களை உதறினான், தன் இளமை திரும்பி விட்டதாக அவனுக்கே தோன்றியது. அவன் வழக்கமாக அணிந்திருக்கும் கண்ணாடி இல்லை. ஆனாலும் கண் பார்வை மிகச் சிறப்பாகத் தெரிந்தது.

 

தன் பிறந்த மேனியில் வெள்ளைத் துணி சுற்றி இருப்பதைப் பார்த்தான். அவன் அருகில் எல்லா வண்ணங்களும் கொட்டிய குடுவையில் முக்கி எடுத்ததுபோன்ற சிறகுகளையும் அகல் போன்ற அலகையும் கொண்ட ஓர்அழகிய பறவை அவனுக்காகக் காத்திருந்தது. அதனுடன் புதுத் துணியைக் கண்டான், கையில் எடுத்தான். எங்கேயோ அதைப் பார்த்த நினைவு, அதனைத் தொட்டபோது உடனே உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. வான் வண்ணத்தில் மேகத்தையொத்த வடிவமைப்பிலிருந்த உடையை உடுத்திக்கொண்டான். அந்த உடை அவனுக்காகவே அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தது.

 

கால்களுக்குக் கீழ் இது மண் தானா என்ற சந்தேகத்தில் கையில் எடுத்துப் பார்த்தான். வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ள வேண்டும்போல, சிலிர்ப்பை உண்டாக்கும் அளவிற்கு அந்த மணல் வித்தியாசமான நிறத்தில் இருந்தது. அவன் இதுவரை கண்டிருந்த தேரிகாட்டு மணல் போலவோ பாலைவன மணல் போலவோ இன்றி புதுவித மணலாக இதமான குளிராகக் கால் புதையாமல் அதே சமயம் பறக்காமல் தன் உயிர் இப்போது வேறு வித ஆற்றலாக மாறியிருந்ததை உணர்ந்தான். நடக்கவும் இல்லாது பறக்கவும் இல்லாது நகர்வது சலீமுக்கு இன்பமாக இருந்தது. ‘இந்த மணலில் எப்படி இந்தப் பூ பூத்தது?’ என்ற யோசனையில் அருகில் சென்றால் வான் நட்சத்திரம் பூவாக மலர்ந்திருந்தது அதனை மினுமினுத்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இவனுக்கு ஒரே குழப்பம், ‘விண்மீன்கள் வாயுக்களினாலானவை, அது தரும் ஒளி, வெப்பம் மிகுந்தவை ஆனால் இந்த வகை வகையான கண்களுக்குச் சுகமான வண்ணங்களில் தென்படும் நட்சத்திரம் பரவசத்தை அளிக்கிறதே எப்படி?’ என்று ஆராய்ச்சியில் அங்கேயே நின்று உற்று நோக்கினான்.  அருகில் குளிர்ந்த நீரோடை இருந்தது. அதனைக் கண்டதும் அவன் எண்ணம் அங்கே குவிந்தது., நீரில் இறங்கி ஒரு குளியல் போடலாமா என்றும் அவனுக்குத் தோன்றியது. எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என்று வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு நுணுக்கங்களும் புதுமையாக இருந்தன.. வானம் மட்டும் எப்போதும்போல் ஓவியமாக இருந்தது.

 

யாருமில்லாத புத்தம் புது இடம்தான். சமநிலையில் ஒரே பரப்பில், சீரான அமைப்பில் எழில் கொஞ்ச, பார்த்திராத பறவைகளின் ஒலி சூழந்திருக்கும் அந்த ஆத்மார்த்த அமைதி அவனுக்குள் பயத்தை எழுப்பவில்லை மாறாக மனம் சாந்தமாக மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தான். கால் போன போக்கில் அடுத்து என்னவென்று அறியாமலே நகர்ந்தான். கொஞ்சம் தொலைவிலேயே தனக்குப் பழக்கமான ஒரு முகம் அவனை நோக்கி புன்னகைத்தபடி வந்தது. அடுப்படியில் கரிப்பிடித்த துணியை ஒத்த உருவத்தில் இருப்பான் சாகுல். இப்போது ஆஜானுபாகு உருவத்தில் அகன்ற மார்பு, வலிமையான புஜங்களுடன் “சலீம்”என்று உறுமிக் கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயில் அவதிப்பட்ட சுவட்டையே காணோமே.

 

அவரைக் கண்ட ஆச்சர்யத்தில் ஓடிச் சென்று, அதுதான் இளமை திரும்பிவிட்டதே அதனால் பறந்து நகர்ந்துஅவரைக் கட்டிக் கொண்டு "சாகுல், எப்படி இருக்கீங்க? உங்களை இங்க பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான்.

 

அதற்கு அவர் கம்பீரமான குரலில் "வா சலீம். எனக்கும் நீ வருவதா எந்தத் தகவலுமே இல்ல. ஏதோ மனசு இந்தப் பக்கம் வரணும்னு தள்ளுச்சு வந்தேன். நீ எப்போ இறந்த? நீ இறக்கப் போறதாகவோ, இங்க வரப் போவதாகவோ ஒரு துப்புமில்லயே!!" என்று ஆச்சர்யத்துடனும் சலீமை சந்தித்த மகிழ்ச்சியும் பொங்க, முகம் மலர்ந்து கேட்டார் சாகுல்.

 

சாகுலைப் பார்த்த மகிழ்ச்சி பொங்க மடை திறந்த வெள்ளமென சலீம் பேச நினைத்தாலும் ஏதோவொரு குழப்பத்திலேயே வார்த்தைகள் வெளிவந்தன. "நானே எதிர்பார்க்கல சாகுல் அசந்து தூங்கிட்டேன், நீண்டதூக்கம்போல அங்கிருந்து இங்க வந்துட்டேன். ஏதோ நான் ஒரு செடி மாதிரியும் என்னை வேரோடு பிடுங்கி போட்டா ஒரு வலி வருமே அப்படியொரு உயிர்போற வலி. அப்புறம் நான் என்னை இங்க பார்த்த போதுதான் புரியுது" என்று நிச்சயமற்ற தன்மையோடு சொன்னான் சலீம்.

 

சலிப்பான நமட்டு சிரிப்போடு விளக்கினார் சாகுல் "உயிர் போற வலின்னு சரியாதான் சொல்ற. ஆமா, உன் உயிர் போயிடுச்சு. இப்ப நீ மறுமைக்குள்ள நுழஞ்சுட்ட. ஆனா நீ அதிர்ஷ்டக்காரன்பா எவனையும் அந்த உலகத்துல நீ சுத்தல்ல விட்டுருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன், அதான் சட்டுன்னு என்னை பார்த்துட்ட. இங்க வந்த பிறகு ஒருத்தரை சந்திக்கிறதுக்கு அவ்வளவு நாளாகும்.

 

அதுவுமில்லாம புதுத் துணி வேற உடனே கிடச்சிட்டுது போல, இது நீ அங்க உடுக்கத் துணி கொடுத்து உதவின யாரோ உனக்காகக் கையேந்தி வேண்டியதாலதான் அது அமஞ்சிருக்கு, சரி வா உனக்குப் போகப் போகப் புரியும்” என்றபடி பேசி கொண்டே நகர்ந்தார்கள்.

 

“அட! நம்ம மாத்யூ வீடா அது?” என்று ஒரு பெரிய வீட்டைச் சுட்டிக் காட்டி வாய் பிளக்கக் கேட்டான் சலீம். “நீ வரேன்னு தெரிஞ்சி இங்க குடி பெயர்ந்திருப்பான்” என்று சாகுல், சலீம் முகம் பார்த்தபோது, சலீம் அவநம்பிக்கையில் சந்தேகப் பார்வை தந்தான்.

 

அதனைப் புரிந்து கொண்ட சாகுல் உடன் மறுத்து, ”நெசமாத்தான் சொல்றேன், நமக்கு வேண்டிய இடத்துல நம்ம வீட்டை நகர்த்திக்கலாம். அவனுக்கு வந்த வாழ்வ பார்த்தியா… ஒன்னுமில்லாத பையன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போது மாத்யூ, “சலீம், எப்படி இருக்க?” என்று எல்லாப் பற்களும் தெரிய புன்னகைத்தபடி வந்தார்.

 

எப்போதும் ஒரு சோகத்தில் மூழ்கியது போன்றே முகத்தை வைத்திருக்கும் மாத்யூ மிக பொலிவான, சாந்தமான முகத்துடன் தெளிவாகப் பேசியதை பார்த்தவுடன், “மாத்யூ, உன்ன இந்த நல்ல நெலமையில பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்குப்பா. நான் அப்பவே சொன்னேன்ல உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்னு” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சலீம்.

 

“எப்பவுமே சொல்வேனே சலீம், சமமான வாழ்வுன்னு அத நான் இங்கதான் பார்க்கிறேன். எந்தவித பாகுபாடுமில்ல, உயர்வு தாழ்வு இல்ல, நினைத்ததை வாழ முடியுது. சக மனிதன் சந்தோஷமா இருக்கான், சுற்றுப்புறம் நல்லா இருக்கு, யாரும் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. களவு இல்ல, வன்மம் இல்ல, பிரிவு இல்ல, பொறுப்பு இல்ல. விடுதலை உணர்வை முழுமையா சுவாசிக்கிறேன். தானதர்மம் செய்யணும்னு ஆசப்பட்டேன், ஆனா  அப்ப பணமில்ல. மனசார உதவணும்னு ஆசப்பட்டதுக்கே இப்படியான வாழ்க்க அமைந்திருக்கு. அப்ப மனசார கொடுத்து உதவுனவங்களுக்கு? இங்க எல்லாமே இப்படித்தான். எங்க வீட்டு பக்கத்துல பார்த்தியா ஓடை, அதுல நான் நெனைக்கிற பானம் கிடச்சிடும். நம்மூர்ல தான் தண்ணீர்ப் பஞ்சம். ஆனா இங்க ஆசை தீர குடிச்சுக்கலாம். ம்ஹும் ஆசை அந்த வார்த்தையே மறந்துடுச்சு சலீம்” என்று ஞானி மாதிரி பேசியவனை உடைக்கும் வகையில் சாகுல் “ஆமாமா ஆசை இல்லாததாலதான் மாத்யூ, அப்பப்ப கனவுபிரவேசம் பண்ணி உலக ஒட்டுதலிலேயே இருக்கான், அதுவும் அழியா வீட்டுக்குள் வந்துட்டு இன்னும் விழிக்காம இருக்கான்” என்றார் கிண்டல் தொனியில்.

 

மாத்யூ பேச்சை மாற்றும் விதமாக “என் கதைய விடு சலீம், நம்ம மொன வீடு சேகர சந்திச்சியா?” என்றார்.

 

அதற்கும் சாகுல் “சேகர் எப்படித்தான் இங்க வந்தான்னு தெரியல. ‘தான் தவறுதலா இங்க வந்துட்டேனோன்னு’ அவனுக்கே சந்தேகம் வர அளவுக்கு நல்லாயிருக்கான்” என்று எதையோ எதிர்பார்த்தவராகப் பொறாமையின் வெளிப்பாடில் கறுவலுடன் பேசுவதாக இருந்தது சாகுலின் பேச்சு.

 

‘இங்க வந்தும் சாகுலின் குணம் மாறலையே. அப்ப குணத்திற்கேற்ற சலுகையும் வசதி வாய்ப்புமா!? இங்க பொறாமை கிடையாதுன்னு மாத்யூ சொன்னாரே, அப்ப இது பொறாமையில் சேராதா?’ என்று சலீம் யோசித்தான்.

 

மூவரும் தெரிந்த நபர்களை பற்றியெல்லாம் பேசி கொண்டே நடந்தனர். ஆனால் உறவுகள் பற்றியோ சேகருக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் மனைவியை பற்றியோ அவர் பேசவில்லை. சலீமால் கட்டுப்படுத்த முடியாமல், “சேகர், உன் மனைவி செளமியாவ இங்க சந்திக்கலையா!?”  என்று கேட்டான்.

 

எந்த செளமியா என்ற முகபாவனையுடன் சேகர் “சலீம், ஆற்றலாக மாறிய நமக்கு தெரிந்தவர்களைக் கண்டால் மகிழ்ச்சி, ஆனால் மனைவி, மக்கள், என்னைச் சார்ந்து அவள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற எந்தவித உறவு பந்தங்களும் இங்கு இல்ல. இதனை ஒருவித சுதந்திரமா நான் பார்க்குறேன். நான் யாரையும் தேடி போறதுமில்ல, என்னை தேடியும் யாரும் வருவதில்ல. வழிப்போக்கரா சந்திப்பவருடன் மகிழ்ந்து பேசி நகர்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.

 

சிறிது தூரத்திலேயே சலீம் என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்த கடை மாதிரியான அமைப்புத் தென்பட்டது. ”இது என்ன கடை மாத்யூ? என் பெயரில்!!?” என்று கண்கள் விரிய சலீம் கேட்டான். "ஓஹ்! கடைத் தெருவா? உன் பெயரிலா? சரி போய்ப் பாரு, எங்க கண்களுக்குத் தெரியாத இடத்திற்குள்ள நாங்க வரவே முடியாது. அதுக்குள்ள நீ மட்டுந்தான் போக முடியும் சலீம். நாம இறந்த புதுசுல நமக்குப் பிரியமானவங்க செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும், மனசார நமக்குச் சொல்லும் வாழ்த்தும், நல்ல வார்த்தைகளும் நமக்குப் பிடிச்ச தின் பொருளா மாறி இப்படிக் கடையா விரிஞ்சிருக்கும். எதுவுமே கெட்டுப் போகக் கூடியதில்ல. எப்ப வேணும்னாலும் நீ போய் எடுத்துச் சாப்பிடலாம். பணமெல்லாமில்ல. இங்கதான் பணமென்ற ஒரு விஷயமே இல்லையே, நாம அங்க சம்பாதிச்ச குணம்தான் இங்க எல்லாமே” என்று தன் சரக்கில்லாத கடையை நினைத்துப் பேசினார் சாகுல்.

 

மாத்யூ உடனே அங்குள்ள யதார்த்ததைப் பற்றி சலீம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, “சலீம், நம்ம மக்கள், நாம் செத்த உடனே நம்மை நெனச்சு உருகி நமக்காகப் பிரார்த்திப்பாங்க, நம்ம பெயரில தானம் செய்வாங்க. ஆனா நாட்கள் போகப் போக பசங்க மறந்திடுவாங்க. அவங்க உண்டு அவங்க பொறுப்புகள் உண்டுன்னு இருப்பாங்க. அவங்கள நாம் குற்றம் சொல்ல முடியாது” சமாதானப்படுத்த முயன்றார்.

 

“நாம மட்டும் என்னவாம் நம்ம அம்மா அப்பாவுக்குச் சமீபத்துல எப்பவாவது தனியா பிரார்த்தனைச் செய்திருப்போமா? இல்ல அவங்க பேருல தர்மந்தாஞ் செஞ்சிருப்போமா?" என்ற சாகுலின் கேள்விக்குச் சலீம் பதில் சொல்லும் முன்பாகச் சாகுல் மீண்டும் தொடர்ந்தார்.

 

"நாம பேரன் பேத்தி கண்ட பிறகு நம்ம தாத்தா பாட்டியெல்லாம் நமக்கெங்க நெனவிருக்கு சொல்லு? நான் சாகக் கெடந்தப்ப பேரன் ஷாகிர் வந்து, ‘உங்க பேரு என்னான்னு கேட்டான். சொன்னேன். உங்க வாப்பா பேரு என்னன்னு கேட்டான் ரபீக்ன்னு சொன்னேன். அவங்க வாப்பா பேரு என்னான்னு கேட்டான். ஜாஹிருன்னேன். அவங்க வாப்பா பேரு தெரியுமான்னான்.. தெரியுல தம்பின்னு சொன்னேன். பழைய வீட்டு பத்திரத்த விரிச்சி காட்டினான். சுப்ரமணியின் மகன் ஜாஹிருன்னு இருந்துச்சு. சரி அதுக்கு இப்ப என்னடான்னு கேட்டேன். ‘இப்ப நான் காதலிக்கிற பொண்ணோட அப்பா பேரும் சுப்ரமணிதான், வாப்பாக் கிட்ட சொல்லி சம்மதிக்க வையுங்க’ன்னு கேட்டான். அப்ப தான் நான் இங்க வந்து சேர்ந்தேன். அப்புறம் நான் அங்க எட்டிக் கூடப் போய்ப் பார்க்கல.

 

இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது இசாக்குன்னாலும் எசக்கின்னாலும் ஐசக்குன்னாலும் ஒன்னுதான்னு. நான், போதும் போதும்னு வாழ்ந்தாச்சு இன்னும் அந்த உலகத்துலயே சுத்திக்கிட்டு இருக்கப் பிடிக்கல” என்று சலீமுடன் பேசிப் பல காலமாகிவிட்டதால் வசமாக மாட்டிக் கொண்டவனிடம் மூச்சுவிடாமல் பேசிவிட்டு இடைவெளி தராமல் தொடர்ந்தார் சாகுல்.

 

“எதையோ சொல்லப் போய் எங்கயோ போய்டேன்… ம்ம் ஆமா காலப் போக்கில் நம்ம பிள்ளைங்க நம்மல மறந்திடுவாங்க. அவங்களுக்கும் பல பொறுப்புகள்னு, உலக இன்பங்கள்னு கரஞ்சிடுவாங்க. நம்ம மாதிரிதானே நம்ம புள்ளைகளும் இருப்பாங்க?” என்று இடை இடையில் சிரித்துக் கொண்டார்.

 

அப்போது அங்கு வந்து சேர்ந்த இணையப் போராளி வேந்தன், “என்ன மாத்யூ, நட்பூக்களெல்லாம் சேர்ந்திருக்கீக போல. இப்பதான் “சிலர் வாழ்க்கை முழுக்கச் சொர்க்கத்துக்குப் போகணும்னு விரும்புவாங்க, ஆனால் சாவுன்னா பயப்படுவாங்க. எவ்வளவு முரண்!” அப்படின்னு ஒரு பதிவு போட்டுட்டு வரேன், என்று கடமையுணர்ச்சியோடு இளித்தார். நல்ல உயரம், உயரத்திற்கேற்ற பருமம், கருகருவென அலையலையான சுருள் முடியுடன் கலையான முகமுடையவரை சலீமுக்கு யாரென்று தெரியவில்லை. மாத்யூ அவரை மதுரை வேந்தன் என்று அறிமுகப்படுத்தியதுதான் தாமதம். “அட, நீங்கதான் வேந்தனா? நான் உங்கள் ஃபாலோவர், நீங்க எந்த பதிவு போட்டாலும் லைக் போடுவேன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, வேந்தன் புகைப்படத்தில் வழுக்கையாக இருந்ததை நினைவுப்படுத்தியும் பேசினான்.

 

“அட ஆமங்க, இங்க வந்ததும்தான் இயற்கையாக நான் தொலைச்சிருந்த எல்லாம் திரும்ப கெடச்சுது. முடி மட்டுமில்ல, இளமை, உடல் வலிமை, சந்தோஷம் எல்லாந்தான்” என்று மகிழ்ச்சியில் இருந்த வேந்தன் தன் அறிவுஜீவித்தனத்தைத் தத்துவங்களாக பொழிந்தார் “செத்த பிறகு என்னாகும்னு என்னைக்காவது  யோசிச்சிருக்கீகளா சலீம்? சில பேரு இங்க வந்த பிறகும் உலக ஒட்டுதலிலிருந்து வெளிய வர முடியாம சிக்கித் தவிக்கிறாங்க – அது ஏன்னா, இந்த உலகத்துல அவய்ங்களுக்கான எந்த வரவேற்புமில்ல. எப்படி இருக்குங்கிறேன்? பக்கத்து வீட்டுக்காரஞ்  சாப்பிடலானலும் எனக்கென்னானு கவலையில்லாம இருந்தவய்ங்களுக்கு இங்க என்ன வரவேற்பு இருக்கும்ங்றேன்? தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு சொன்ன பாரதியாரு பேச்சையும் கேக்கல பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்னு சொன்ன நா முத்துக்குமார் பேச்சையும் கேட்கல” என்று வழக்கமான மற்றவர்கள் மீதான தன் அக்கறையை பறைசாற்றினார்.

 

இந்த முறை சாகுல் குறுக்கிட்டு “சரி அதவிடு, இப்ப நீ கடைக்கு உள்ள போறியா இல்ல..." என்று அவர் இழுக்கும் முன்பாகவே சலீம். "இல்ல சாகுல் எனக்குப் பசி இல்ல. மகிழ்ச்சியில மனசு நெறஞ்சி இருக்கேன். எனக்காக மலையளவு பிரார்த்தனைகளான்னு மலச்சுப் போய் இருக்கேன்" என்று வராத கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தான்.

 

வேந்தன் சலீமின் வயிற்றைத் தட்டியவராக, "பசியா? நமக்கு உயிரே இல்ல அப்புறம் எங்கிட்டிருந்துய்யா பசிக்கும்? ஆனா நம்ம சாப்பிடுறதெல்லாம் எங்கிட்டுத்தான் மாயமா மறையுமோன்னு தெரியலப்பா. வெளியிலயே இறங்காதுய்யா சலீமு” என்று சொன்னபோது,

 

சலீமுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று இன்னும் விரிவாக விளக்கினார் சாகுல். “உன் ஆற்றலை இன்னுமா நீ புரிஞ்சிக்கல? ஒலியா சுற்றி திரியலாம் சலீம்” என்றார்.

 

அவரைத் தொடர்ந்து வேந்தன், “நமக்கு விடுதலை கெடச்சிருச்சுப்பா.  நீ எத தேர்ந்தெடுக்குறீயோ அதுவாத்தான் இருப்ப,  யாதுமாய் வாழலாம். ஆனா அதுக்கான  பக்குவமும் தகுதியும் மொத உனக்கு இருக்கணும்” என்று பக்குவத்தை சலீமின் உடல்மொழியில் தேடினார்.

 

கடுமையான முகத்துடன் கூர்ந்து கவனித்த சலீமை லேசாக்கும் விதமாக மாத்யூ “அடுத்தக் கிரகத்தைப் பார்க்கணும்னு இப்பவே கிளம்பிடாத, இங்க பார்க்க வேண்டியதே நிறைய இருக்கு” என்று நட்புணர்வுடன் பேசினார்.

 

எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சாகுல் சொன்னார் “நீ உலகத்துக்குத் திரும்பப் போகலாம்ன்னு நினைக்கலாம், போனாலும் அவங்களுக்கு உன்ன பார்க்க முடியாது. பார்த்தாங்கன்னா சலீம்ன்னா கூப்பிடுவாங்க? இல்லவே இல்ல.” என்று சிரித்தார்.

 

அவர் எதற்காகச் சிரிக்கிறார், வேறு நம்மை எப்படிக் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்த சலீமிடம் “உன்ன பேய்யுன்னு ஓட ஓட விரட்டுவாங்க, நீ வராதபடி என்னலாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வாங்க." ஏதோ அனுபவ வலியோடு பிடி கொடுக்காமல் பொடி வைத்தே கண்ணடித்தபடி பேசினார் சாகுல்.

 

கண்களுக்குக் குளிர்ச்சியாகவே எல்லாக் காட்சிகளும் விரிவதாக உள்வாங்கிய சலீம் ‘இதெல்லாம் இவர்களுக்கும் தெரியுதா? இல்ல தனக்கு மட்டுந்தானா?’ என்ற யோசனையில் இருந்த போது ஒரு மரத்தில் வித்தியாசமான கனியைக் கவனித்தான். "என்ன மரம் இது?" என்று கைகளுக்கு எட்டும் கனியை தடவி ’சுவைக்கலாமா கூடாதா’ என்று எண்ணிக் கொண்டே, முதல் மனிதர் ஆதாம் கதையாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு கேட்டான்.

 

"மரமா?" என்று தங்களுக்கு காட்சி தராத மரத்தைப் பற்றி கேட்கிறார் என்று உணர்ந்து மூன்று பேரும் சிரித்தார்கள். ஏதோ விளங்கி கொண்டவனாகச் சலீம், "சரி விடுங்க, உங்க வீடு ரொம்பத் தொலவா? யார் கூடத் தங்கியிருக்கீங்க?" என்று பேச்சை திசை திருப்பினான்.

 

வெண்கல குண்டாவில் சில்லரையைக் கொட்டிய சிரிப்போடு சாகுல், "சரியாப் போச்சு வீடா? வந்தவுடனே வீட்ட பத்தி கேட்குற... நான் வந்து எவ்வளவு காலத்திற்குப் பிறகு எனக்குத் தங்குறதுக்கு இடம் கெடச்சது தெரியுமா?” என்று அலுத்து கொண்டார்.

 

“என் வீட்டைத்தான் நீ பார்த்தியே, அப்படியான வீடு உனக்கும் விரைவில் அமையும்” என்றார் மாத்யூ.

 

வேந்தன் வீட்டைப் பற்றி கேட்டால் தன் முதல்நாளை நினைவுக் கூர்ந்தவராக “நான் வந்தப்ப முதல் முதலா நான் பார்த்தது, என் சீனியர் வீராவையும் பாலாவையும்தான். அவய்ங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமான சிநேகிதய்ங்க.எல்லாரையும் கிண்டலடிப்பாய்ங்க, புள்ளைகள கூட்டிவச்சு கத சொல்லுவாய்ங்க, பாடம் கத்துக் கொடுப்பாய்ங்க. மாமிகளுக்கு வரிசைல நிண்டு ரேஷன் வாங்கித் தருவாய்ங்க, வயசானாலும் அவங்களால முடிஞ்ச எல்லா உதவியும் எல்லாருக்கும் செஞ்சாய்ங்க, அவய்ங்க ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா இங்க வந்து சேர்ந்து இங்கயும் திண்ணையில உட்கார்ந்துகிட்டு அடிக்கிற லூட்டி இருக்கே, அடேங்கப்பா.  அதுமட்டுமில்ல அன்னைக்கு பொசுக்குனு ரெண்டு பேரும் அன்பை வெளிப்படுத்துறோம்னு வாயோட வாய் வச்சு முத்தம் கொடுத்துக்கிட்டாய்ங்க, அதைப் பாத்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆகிப் போச்சு… அப்படி எனக்கானது அந்த முதல் நாள் மட்டுந்தான். அப்புறம் நான் ஒரு முழுமையான ஆற்றலாக மாறுன பின்னாடி எந்தவித வேறுபாடும் இல்லப்பா” என்று வியந்து கூறியபடி, “உனக்கு இந்த மாதிரி எதும் அனுபவம் இருக்கா மாத்யூ” என்று கேட்டார்.

 

“அந்த உலகத்துலதான் எல்.ஜி.பி.டி.ன்னு பிரித்து பார்த்துக்கிட்டு இருந்தோம், நான் ஏற்கெனவே சலீம்கிட்ட அதான் சொல்லிட்டு இருந்தேன். இந்த உலகத்துல பாலினப் பிரிவுமில்ல, அதனால வர ஏற்றத் தாழ்வுமில்லன்னு. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல. இதெற்கெல்லாமா வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கோம்னு நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு” தன் உண்மையான உள்ளார்ந்த  குமுறலை வெளிப்படுத்தினார்.

 

“தப்புன்னு நெனச்சதெல்லாம் இங்க தப்பே இல்ல. இம்மையில யாருதான் தப்பு சரியெல்லாம் விதியாக்குனாங்களோ!? வாழ்க்கையை சரியாக வாழாமல் விட்டுவிட்டோமோ?” என்று மாத்யூவின் வேதனையில் இணைந்து கொண்டார் சாகுல்.

 

கையையே கைப்பேசி போல் பாவித்த வேந்தன், தான் பார்த்து வியந்த விஷயங்களை மறுமை இணையத்தில் மட்டுமல்ல, சலீமுக்கும் புரிய வைக்கும் முயற்சியில் தன் பங்குக்கு, “இங்க எனக்குப் பிடிச்ச விஷயமே, நம்ம ஊருல நாம் ஆன்னு பாத்த பிம்பங்கள், எல்லாம் இங்க அவன்பாட்டுக்கு சாதாரணமாத்தான் திரிவான், நம்ம வயித்துல அடிச்ச அரசியல்வாதிப்பயகளெல்லாம் நமக்காகச் செக்கிழுப்பான், விவசாயம் பார்ப்பான், வண்டி ஓட்டுவான், நம்ம சொல்ற எல்லா ஏவல் வேலையையும் செய்வான். ஏமாத்தி பொழச்ச அம்புட்டுப் பயகளும், பெட்டி பாம்பா அடங்கி, தொடர்ச்சியா இடத்தத் தூய்மைப்படுத்திக்கிடே திரிவான், செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவான், இயற்கையைப் பராமரிப்பான், ஏதாவது ஒரு வேலையைச் செஞ்சிக்கிட்டு சுத்திக்கிட்டே கெடப்பான். அவய்ங்கள பாக்கும் போது இதெல்லாம் தேவையாடா உனக்குன்னு சிரிப்பு சிரிப்பா வரும். ஆனா பார்த்துக்க, இங்க சாக்கடையில்ல, இல்லாட்டி அதை இந்த அயோக்கியப்பயகதான் தூய்மைப்படுத்தி இருப்பாய்ங்க, பார்க்க கண் கொள்ளா காட்சியா இருந்திருக்கும். அப்புறம் நீ வீட பத்தி கேட்டேல்ல, அதுக்கு நீ தகுதியாகிட்டா உன் பெயருக்கான அழியாத வீடு உனக்கே தெரியும். சிலருக்கு வந்ததும் கெடச்சிரும் அப்படியே செட்டிலாகிடுவாங்க. உள்ள போனதும் அவங்க மனசப் பொறுத்த எல்லாம் செமயா இருக்கும்” என்று வியக்கும் விதமாக சொல்லி வைத்தார்.

 

“போன வாரம் மன்னடி ஆலிம்ஸா தர்மர் சர்புதீன் மவுத்தாகி இங்க வந்ததும் அவருக்கான வீடு வாசல் கனி வகைகள் அது இதுன்னு தடபுடலா இருந்ததுன்னு பேசிக்கிட்டாங்க. யாரு பேசிக்கிட்டாங்கன்னு என்கிட்ட கேட்க கூடாது. அப்புறம் அந்தத் தடபுடலையெல்லாம் நான் எதையும் என் கண்ணாலப் பார்க்கல. ம்ஹூம் இதெல்லாம் இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா என் சொத்த பூராம் தர்மத்துக்கே கொடுத்திட்டு, உலக மக்களுக்காகவே உழச்சிட்டு வந்திருப்பேன்" என்று பெருமூச்சு விட்டார் சாகுல்.

 

’தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்களுக்கும் இவ்வளவுதான் தண்டனையா?’ என்ற யோசனையில் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்த சலீம் 'இதற்கு மேல் இவர்களை தம் கேள்வியால் தொந்தரவு செய்ய கூடாது' என்று முடிவெடுத்தான். அந்தக் கணமே அந்த மூவரும் அங்கிருக்கவில்லை. சுற்றித் தேடினான், யாரையும் காணவில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயங்கள் நடக்கிறதே என்ற மயக்கத்தில் இருக்கும் போது அவன் பூமியில் பார்த்திராத அதி அற்புதமான இயற்கை அழகுகள் கண் முன் விரிந்து கிடந்தது. 'எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு யுகமாகும், இங்கேதானே நிரந்தரமாக இருக்கப் போகிறோம் எவ்வளவு காலமென்றால்தான் என்ன' என்ற நினைப்பிலேயே இருந்தவனின் நெஞ்சை யாரோ அமுக்குவது போல் இருந்தது. உடல் வலிமை இழந்து பலகீனமாக படுக்கையில் கிடத்தி இருப்பதும். சுற்றி மனைவி மக்கள் அழுவதும் தெரிந்து, மூச்சை இழுத்துவிட்டான்.

 

“தேங்க் காட், ஹி இஸ் பேக் வித் அஸ்” என்று மருத்துவர் மகிழ்ச்சியாக கூறினார்.

 

சலீமின் மகிழ்ச்சிதான் முற்றும் வடிந்துவிட்டது.


Tuesday, October 01, 2013

அறிந்தும் அறியாமலும்...

மற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது பேசிவிட்டு அது தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டால் எனக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. ஆரம்பத்தில் மேலாளர் என்னுடன் இதற்காகவே மிகவும் சினம் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர் அவருக்கும் என் சுபாவம் புரிந்து அதன் பின் பிடித்தும் போய்விட்டது.


அதனால் என் பக்கத்தில் உட்கார்ந்தே பலகதைகளும் ரகசியங்களும் பகிர்வார்கள். அதன் பிறகு என்னை அழைத்து ”இவன பாருடா சரியான பேக்கு. இவன மாதிரி எதையுமே கண்டுக்காம இருந்துட்டா பிரச்சனையே இல்ல” என்று முடிக்கும்போதுதான் அங்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வேன். இப்படியான என் சுபாவம் என்னை பாதித்ததே இல்லை. நான் அதற்காக வருந்தியதுமில்லை. ஆனால் இன்று வருந்துகிறேன்.

ஆஷியின் தொலைப்பேசி சம்பாஷனையை கவனிக்காமல் போனதற்கு மனதிற்குள் குமுறுகிறேன். என்ன நண்பன் நான்? இல்லை, உண்மையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் இல்லை.ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம், அவ்வளவுதான். இருந்தாலும் எங்கள் அறையில் மொத்தம் மூன்றே பேர்தான் உட்காருகிறோம், இருந்தும் நாங்கள் மூவரும் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொள்வோமே தவிர நட்புரீதியாக சொந்தவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. ஜோசப்புக்கு திருமணம் நடந்தபோது சம்பிரதாய வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டோமே தவிர உரிமையாக ”ட்ரீட்தாடா” என்றோ ”திருமண புகைப்படத்தைக் காட்டு”என்பது போன்றோ பேசிக்கொண்டதில்லை. உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அப்படித்தான்.

இந்த அலுவலகத்தில் நான் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிகிறேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் ஆஷி வேலையில் சேர்ந்தார். அதற்கு முன்பு அவரிடத்தில் பணியில் இருந்த மணியிடம் கூட நான் அதிகம் வைத்துக் கொண்டதில்லை. ஜோசப் இதற்கு முன் லண்டனில் எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்தான். சமீபமாக ஒரு எட்டு மாதத்திற்கு முன்புதான் துபாய்க்கு அவனை மாற்றினார்கள். அலுவலகம் என்பது நான்கு அறைகள் கொண்ட சிறிய அலுவலகம்தான். முகப்பில் வரவேற்பறையில் வேலையில் இருந்த பெண் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒருவாரமாக அலுவலகத்திற்கு வரவில்லை.மேலாளர் துபாயில் இருப்பதே இல்லை. லண்டன், துபாய், இந்தியா என்று பறந்து கொண்டே இருப்பார். நானும் ஆஷியும்தான் பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்போம். ஜோசப் வெளி வேலைகள் அதிகம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வருவார் போவார்.

நானும் ஆஷியும் காலை 9மணிக்கு சரியான் நேரத்திற்கு வந்து விடுவோம். கதவைத் திறக்க எங்கள் கைரேகைகள்தான். ஆனால் சரியாக 5மணிக்கு வீட்டுக்குப் போக மாட்டோம். நாங்கள் மூவருமே அப்படித்தான். ஜோசப் திருமணமான பிறகும் கூட நேரத்திற்கு வீட்டுக்குப் போகிறவரில்லை. ஆனால் அன்று நான் கிளம்பும்போதே ஜோசப்பும் கிளம்பிவிட்டார். ஆஷி கண்ணாடிக்கு அந்தப்புறமிருந்து எதோ விவாதத்தில் இருந்தார். நாங்கள் ‘bye' என்று கையசைத்தோம் அதற்குக் கூட பதில் சொல்லவில்லை. அதை எதிர்பார்த்து சொல்லாததால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த ஒவ்வொரு விஷயமும் என் மண்டையைக் குடைகிறது.

முகம் சிவந்திருந்தவனை ”என்னஆச்சு” என்று கேட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு நினைவிருப்பதெல்லாம் யாருடனோ சத்தமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததுதான். எதையுமே கவனிக்காத எனக்கும் கூட அவன் பேசியது இடையூறாக இருந்தது. காரணம் அவ்வளவு சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘விஸ்வரூபம்’ பற்றி ஏதோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரியும். ஒருமுறை திரும்பிப் பார்த்ததுதான் தாமதம் தன் கைப்பேசியுடன் பேசிக்கொண்டே‘ மீட்டிங் ரூமுக்கு’ச் சென்று அங்கு உட்கார்ந்து பேசினார். ஜோசப் என்னைப் போல் இல்லை கொஞ்சம் விவரமானவன். அவன் கவனிக்க முற்பட்டிருக்கிறான். ஆனால் அவனுக்குதான் தமிழ் புரியாதே!அதனால் அவன் புரிந்து கொண்டது ஒரு படத்தைக் குறித்துத்தான் ’கேர்ள்பிரண்டுடன்’ ஏதோ சண்டை. இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, அதனால் ஒரு படத்தின் சர்ச்சை அவர்கள் உறவை உலுக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அது தொடர்பானவிவாதங்கள், சர்ச்சைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. அதுவும் இவனுக்குப் புரிய காரணம் இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசியதுதான். இதையெல்லாம் இப்போது ஊகித்துச் சொல்கிறான் ஜோசப். அவன் அப்போதே சொல்லியிருந்தாலும் நான் ஒன்றும் தலையிட்டிருக்க மாட்டேன்தான். எதற்காகவோ நான் திரும்பும்போது கண்ணாடிக்கு அந்தப் பக்கம் அவர் பேசிக் கொண்டிருப்பதும் அவர் கண்கள், காதுகள் முகமெல்லாம் சிவந்திருப்பதையும் கவனித்தேன். ஆஷி நல்ல நிறம். ரொம்பக் குளிரென்றாலும் சரி, ரொம்ப வெக்கையாக இருந்தாலும் சரி முகம் சிவந்து விடும். அதனால் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை நான். கருதியிருக்கவேண்டுமென்று இப்போது மனம் அழுத்துகிறது.

கொஞ்சம் ‘டென்ஷன்பார்ட்டி’ ஏதோவொரு காரணத்திற்காகவும் காரணமே இல்லாமலும் கூட அடுத்தடுத்து சிகரெட் ஊதித் தள்ளுவதில் வல்லவர். நேற்று காலையில் வேலைப்பளுவில் மண்டையை உடைத்துக் கொண்டு மூழ்கியிருந்தபோது’ஏதாவது தலைவலி மாத்திரை இருக்கா’ என்று என்னிடம் கேட்டார். இல்லையென்றேன். ச்சே!எங்காவது சென்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ, கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்றெல்லாம் இந்த நொடியில் நினைக்கிறேன். 34 வயதில் இப்படியெல்லாம் நடக்குமென்று யார் எதிர்பார்த்தார்கள்? நேற்று மாலை அவர் முகத்தைப் பார்க்கும்போது அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்று தெரியாமல் போய்விட்டது.

நான் இன்று காலையில் அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது ஆஷி தன் இருக்கையில் கண் மூடித் தலையைப் பின்புறமாகத் தொங்கவிட்டவனாகக் கிடந்தான். நான் ஏது இவர் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாரே என்று நினைத்துக் கொண்டே உள்நுழைந்து ‘குட்மார்னிங்’என்றேன். சத்தமே இல்லை.

“தூக்கமா?” என்றேன்.

அதற்கும் சத்தமில்லை. என் கணினியை ‘ஆன்’ செய்து விட்டு மனதிற்குள் ஏதோ ஒரு பயம் பிடிக்க ஆஷியைத் தட்டி எழுப்பலானேன்.

”........” அசைவுமில்லை.

அவர் மீளாஉலகத்தின் நித்திரையில் இருக்கிறார் என்றுஅறியாமல் உரக்கக் கத்திப் பார்த்தேன் தூக்கம் களையுமென்று. பலனில்லை. மெதுவாக நடுக்கத்துடன் என் விரல்களை அவர் நாசியில் வைத்துப் பார்த்தேன் ‘கடவுளே ஒன்றுமாகியிருக்ககூடாது’என்று பிரார்த்தித்தபடி. இறந்து விட்டிருக்கிறார்!! என்னால் நம்பவே முடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் பதற்றமானேன். முதலில் ஜோசப்பை அழைத்தேன். ‘எங்கிருக்கிறாய்’என்று கேட்டேன்.கீழேதான் என்றார். விரைந்து வரச் சொன்னேன் விஷயத்தை விவரிக்காமல். வந்து பார்த்தவுடன் ஒரு அடி பின்னால் ஒதுங்கி நின்று ஓலமிட்டார். ஆஷி காதிலிருந்து இரத்தம் கசிவதைகைக் காட்டித் திணறலுடன் ஏதோ சொன்னார். லண்டனில் இருக்கும் மேலாளரைத் தொடர்பு கொண்டு இது பற்றிச் சொன்னேன். அவரோ ‘இறந்துவிட்டாரா?’ என்று அதிர்ச்சி அடைவதற்குப் பதில்‘அலுவலகத்திலா’என்றுவியப்படைந்தார். உடனே போலிஸுக்கு அழைத்து விபரம் சொல்லி என்ன செய்வது என்று கேட்டு அதன்படி காரியங்களைச் செய்யச் சொன்னார். இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சம்பிரதாயங்களும் பரிசோதனைகளும்.

என்னையும் ஜோசப்பையும் இன்று முழுக்க போலீஸில் வைத்திருந்தார்கள்.

முகம் தெரியாத இணைய நண்பர்களுடன் முகநூலில் வளைய வரும் எனக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் பரிதவிப்பில், பிரச்சனையில் பங்கெடுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வில் இருந்தேன். ’பிரைன் ஹாமரேஜ்’அல்லது‘கார்டியாக்அரஸ்ட்’ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியுமென்று ஜோசப் ஊகித்துக் கொண்டிருந்தார்.ஆஷியுடன் பேசிய விஷயங்கள், அலுவலகம் தொடர்பாகப் போட்ட சண்டைகள், பொது விஷயத்தைப் பற்றிய எங்களது விவாதங்கள் எல்லாம் கண்முன் வந்து போய்க்கொண்டிருந்தது. ஆஷியின் முகம் என் கண்சிமிட்டலில் கூட களையவில்லை. ஒருவரின் மறைவு அல்லது பிரிவுக்குப் பிறகுதான் அவர் நம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பது புரியும் போலிருக்கிறது என் மரமண்டைக்கு.

ஆஷியின் மறைவுக்குக் காரணம் வேலைப்பளுவா? சிகரெட்பழக்கமா? அவருடைய முன்கோப டென்ஷனா? அல்லது விஸ்வரூமா? எதுவாக இருந்தாலும் அவர் நல் ஆத்மா சாந்தி அடைய மனதாரப் பிராத்தித்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, April 01, 2013

எங்கே அவள்?


'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். தனது மூன்று வயது மகள் ரோஷிமாவுக்கென்றால் கேட்கவே வேண்டாம் கேட்காமல் சகலமும் தந்திடுவாள் அவளுடைய நேரத்தைத் தவிர.

கணவன் - மனைவி இருவரும் வியாபாரம், வெளியூர் பயணமென்று இருப்பதால் ரோஷிமாவை பார்த்துக் கொள்ள சாந்தியை சொந்த ஊரிலிருந்து வரவழைத்திருந்தார்கள். ரோஷிமா மூன்று மாதமாக இருக்கும் போது அனிதாவிற்கு திருப்தி தரக்கூடிய, மனதிற்குப் பிடித்த, நம்பிக்கைக்குரிய, இவள் மகளை தன் குழந்தையாக பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப்பட்ட போது அவள் சகோதரி வீட்டில் வேலை செய்யும் சாந்திதான் அவள் நினைவுக்கு வந்தாள். பல வருடமாக அங்கு வேலை செய்யும் ஆதரவற்ற சாந்தியைக் கெஞ்சிக் கூத்தாடி தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள் அனிதா. தன் பெயருக்கேற்றாற் போல் சாந்தி அமைதியானவள். முப்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க களையான முக அமைப்பு கொண்ட பெண். வீட்டு வேலை செய்பவளாக இருந்தாலும் நேர்த்தியாக உடுப்பு உடுத்தி கொஞ்சம் மிடுக்கான தோற்றம் அளிக்கக் கூடியவள். குழந்தைப் பராமரிப்போடு, வீட்டைக் கவனித்துக் கொள்வது, சமையல் என்று எல்லாமும் சாந்திதான். மூச்சுக்கு முண்ணூறு தடவை “சாந்திமா சாந்திமா” என்று ரோஷிமா அவளையே சுற்றி வருவது சமயங்களில் அனிதாவுக்கே பொறாமையைத் தந்திருக்கிறது. அனிதாவும் மிகுந்த நேசத்துடன் ”சாந்தி அக்கா, சாந்தி அக்கா” என்று பழகி வேலை ஏவுவாள். கரனைப் பொருத்தவரை சரியான சம்பளத்திற்கு செம்மையாக வேலை செய்பவள்.

---000---

புது வருடத்திற்கு முன்பே தன் புது வீடு தயாராகிவிட வேண்டுமென்று அதிகம் மெனக்கெட்டு கரனுக்கும் தெரியாமல் பொறியாளருக்கும், மேஸ்தரிக்கும், வேலையாட்களுக்கும் தாராளமாக வழங்கி வீட்டை மிகக் கச்சிதமாக அமைத்த திருப்தியில் இருந்தாள் அனிதா. இது இவர்களுக்கு முதல் வீடல்ல. ஆனாலும் இந்தப் புதிய வீட்டை இவர்கள் தங்கும் இல்லமாக்கி மற்றதை வாடகைக்கு விடும் எண்ணத்துடன் எழுப்பப்பட்டது. அந்த இருபது மாடிக் கட்டடத்தில் ஒன்பதாம் தளத்தில் இருக்கும் இரண்டு வீடுகளில் 901-ஆம் வீடு அனிதா கரனுடையது. கரனுக்கு ’அப்பார்ட்மெண்ட் டைப்’ பிடிக்கவில்லை ஆனால் பில்டர்கள் இவர்களுக்குப் பிடித்த வகையில் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னதும் ஒப்புக் கொண்டார்கள். பெரு நகரத்தின் மத்தியில், பரபரப்பான வீதியில், எல்லா வசதிகளும் சூழ்ந்த, உயர்ந்த கட்டடத்தில், பலதரப்பட்ட சவுகரியங்களுடன், விசாலமான வீடு அமைவது அவ்வளவு சுலபமல்ல. எழுபது வீடுகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் இவர்களையும் சேர்த்து குடிவந்திருப்பதென்னவோ முப்பத்தியோர் பேர்தான்.

குடியேறி சில தினங்களே ஆனதால் பக்கத்துவீடு அக்கத்து வீடு என்று யாரையும் இவர்களுக்குப் பரிட்சயமில்லை. சாந்தி மட்டும் குழந்தையின் கைப்பிடித்து லிப்டில் மேலும் கீழும் சென்று எது எங்கே இருக்கிறதென்று அனிதாவிடம் சொல்லிக் கொண்டிருப்பாள். வீட்டில் உள்ளவர்களுடனே பேச அதிகம் நேரமில்லாத கரன் - அனிதாவுக்கு அயலார்கள் பற்றி அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை.

வீட்டில் மிச்ச வேலைகளான தச்சு வேலை, பெய்ண்ட் டச்சப், தரையில் படிந்த கரை துடைப்பு, குழாய் தண்ணீர் அழுத்தமாக வரவில்லை, பைப் கேஸ் தொடர்பு இன்னும் முழுமை பெறவில்லையென்று பல விஷயங்கள் கிடப்பில் இருந்ததால் விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களிலும் வீட்டிற்கு ஆள் வந்து வேலை செய்த வண்ணமிருந்தார்கள். இருநாட்கள் பெய்ண்டர் வந்தால், மூன்று நாட்கள் தச்சு வேலையாள் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்து போய் கொண்டிருந்தார்கள்.

அன்றும் அப்படித்தான் அனிதா உள்ளே நுழையும் போது கறை படிந்த பற்களுடன் கருத்த ஒருவன் ஸ்விட்ச் போர்டை தின்னர் வைத்து துடைத்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் இளித்தான். அனிதா ஒரு புன்முறுவல் தந்துவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். அதிசயமாக ஐந்தரை மணிக்கே வீடு திரும்பிய அனிதா கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு, பின்பு எழுந்து உடை மாற்றி சத்தமே இல்லாத வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் முகப்பில் வந்து ”சாந்தி” என்று குரல் கொடுத்தாள். அவள் குரல் அவளுக்கே எதிரொலித்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தாள். கழிப்பறையில் யாரோ தண்ணீர் திறப்பது போல் கேட்க உள்ளறை கழிப்பறைக்குச் சென்றாள் அங்கு உயரமான ஒருவன் பளம்பிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் இந்த பிரஷர் போதுமா மேடம் என்று தண்ணீரைத் திறந்துவிட்டு கேட்டான். ‘ம்ம்’ என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து மறுபடியும் ‘சாந்தி’ என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தினாள். பதிலில்லை. மீண்டும் உள்ளறைக்குச் சென்று ப்ளம்பரிடம் ”சாந்தி எங்கே” என்றாள்.

உங்க வீட்டாளை என்னிடம் கேட்கிறாயே என்பது போன்ற பார்வை தந்து, தெரியாது என்பது போல் உதட்டைப் பிதுக்கி இடதும் வலதுமாக தலையசைத்தான். இவள் அறைக்கு மீண்டும் வந்து இவளுடைய கைப்பேசியை கைப்பையில் தேடினால் கிடைக்கவில்லை. ‘காரிலேயே வைச்சிட்டேனோ’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, மீண்டும் ப்ளம்பரிடம் சென்று ”வேலை முடிந்ததா?” என்றாள். ”இல்ல ‘ஃபளஷ்’ வேலை செய்யலன்னு..” என்று இழுத்தான்.

கேட்டும் கேட்காதது போல் அவள் அவசரமாக வெளியே வந்து, கீழே காருக்குச் செல்ல லிப்ட் பட்டனை அழுத்திக் காத்திருந்தாள். ரோஷிமா அழும் குரல் எங்கோ தூரத்தில் கேட்பது போல் இருந்தது. அது ரோஷிமாவின் குரலேதான் என்று நினைத்துக் கொண்டு எந்தத் திசையென்று தெரியாமல் “ரோஷி ரோஷிமா” என்றாள். “_____” நிசப்தம்.

மீண்டும் வீட்டுக்குள் வந்தாள் தின்னர் அப்படியே மூடி திறந்தபடி அதே இடத்தில் இருப்பதைப் பார்த்து, மீண்டும் வெவ்வேறு அறைகளுக்குச் சென்று தேடினாள். கட்டிலுக்கு அடியில், அலமாரி, அடுப்பறை, தாழ்வாரமென்று எல்லா இடத்திலும் தேடிவிட்டு, மீண்டும் ப்ளம்பர் இருக்கும் இடத்திற்கு வந்து ”உங்க பேரென்ன?” என்றாள் கனிவாக. அவனோ எதிர்பாராதவனாக “என் பேரு ராமு மேடம்” என்றான். “கொஞ்சம் உங்க செல் தரீங்களா? என் ஃபோனை காரில் விட்டுட்டேன் குழந்தை சத்தம் எங்கேயோ கேட்குது...” என்று சொல்லி முடிக்கும் முன் அவன் செல்பேசியை நீட்டினான். “தாங்ஸ்” என்று வாங்கி, வேகமாக சாந்தியின் எண்ணுக்கு அழைத்தாள். “நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது....” என்று ஒலிக்கவே, உடனே கரனுக்கு அழைத்தாள். புதிய எண் என்பதாலோ என்னவோ கரன் அழைப்பிற்கு பதில் தரவில்லை. மறுபடியும் சாந்தியை அழைத்தால் மறுபடியும் அதே போல் ‘not reachable’ என்றே வந்து கொண்டிருக்க... பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

லிப்ட் பட்டனை 8 என்று அழுத்தினாள். எட்டில் வந்து நின்றதும் எட்டிப் பார்த்து ’ரோஷி’ என்று சத்தம் கொடுத்துவிட்டு அங்கே குழந்தையின் குரல் கேட்கிறதா என்று சோதித்துவிட்டு அடுத்து 7 என்று அழுத்தினாள். இப்படி ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கி பேஸ்மெண்ட் வரை பார்த்துவிட்டாள். குழந்தையின் சத்தமோ சாந்தியின் குரலோ கேட்கவே இல்லை. மறுபடியும் 9 அழுத்தி வீட்டுக்கு வந்தாள். கீழே சென்றும் மறுபடியும் காரிலிருக்கும் மொபைலை எடுக்க மறந்திருந்தாள்.

லிப்ட் அருகில் மீண்டும் வந்து “சாந்தி, ரோஷீமா” என்று குரல் கொடுத்தாள். பக்கத்து வீட்டிலிருந்து கூட யாரும் வெளியில் வரவில்லை. இவளாகச் சென்று பெல் அடித்தாள் இருட்டாக இருந்தது. யாரும் இருப்பதாக தெரியவில்லை. ’இந்த வீட்டில் குடிவந்துவிட்டதாகச் சொன்னாளே!’ என்று நினைத்துக் கொண்டே திரும்பும் போது கரன் வந்திருந்தான். “கரன், நீ, உனக்கு” என்று குரல் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாள்.

“ரிலாக்ஸ், என்ன ஆச்சு உனக்கு. உன் மொபைல் எங்க? சாந்தி ஃபோன் ஏன் ஆஃப்ல இருக்கு?” என்று எரிச்சலானான்.

“என் ஃபோன் கார்ல இருக்குன்னு நினைக்கிறேன். நான் வீட்டுக்கு வரும் போது யாருமே இல்ல... சாந்தி, ரோஷிமா வீட்ல இல்ல. உன் கிட்ட ஏதாவது சொன்னார்களா?” என்று பதட்டமான தொனியில் உளறலாக கேட்டாள்.

ப்ளம்பர் வீட்டிற்குளிலிருந்து வெளியே வந்தான். “சார், எல்லாம் சரி செய்துவிட்டேன்” என்று தலையைச் சொறிந்தான்.

பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தந்தபடி கரன் “ஆமா, நீ எத்தன மணிக்கு வந்த, நீ வரும் போது வீட்டுல யார் இருந்தாங்க?”

”சார், நான் ஒரு அஞ்சு அஞ்சேகால் மணிக்கு வந்திருப்பேன் அப்போ வீட்டுல ஒருத்தர் இருந்தாரு.” என்று யோசித்தபடி பதில் உரைத்துக் கொண்டே பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

“கருப்பா.... பல்லெல்லாம்...” என்று திடீர் மறதியிலிருந்து நினைவு திரும்பியவள் போல் பேசியவளைத் திரும்பிப் பார்த்தான் கரன். அவள் தொடர்ந்தாள் “பல்லெல்லாம் கறையா இருந்துதே, தின்னர் வைச்சு தொடைச்சிட்டு இருந்தானே... அவன் மட்டுமா இருந்தான்?”

”அவன் என்ன பண்ணிட்டு இருந்தான்னு தெரியாது. வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்தான், வீட்டுல ஆள் இல்லையா மெய்டெனன்ஸ் வெர்க் இருக்குன்னு சொன்னேன். ஆள் இருக்காங்க நீ உள்ள போய் வேலையப் பாருன்னு சொல்லிட்டு ஈரக் கைய அவன் சட்டையில் தொடச்சிட்டு எனக்குக் கதவத் திறந்துவிட்டான்” என்று சொல்லும் போதே அவனுக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. “இதோ வந்துட்டேம்மா, கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு “சார் அப்போ நான் கிளம்பட்டா?” என்றான்.

“கொஞ்ச இருங்க. அப்ப நீங்க பார்த்த ஆள் உங்க மெய்ட்டேனன்ஸ் ஆபீஸைச் சேர்ந்தவனில்லையா..?” என்று கரனும் கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான்.

“இல்ல சார். நாங்க பொதுவா நாலு மணிக்கு முன்னாடியே வேலையெல்லாம் முடிச்சிட்டு போயிடுவோம். ஆனா இந்த வீட்டு வேலைய நாலு மணிக்கு மேலதான் பார்க்கணும்னு ஆபீஸ்ல சொன்னாங்க. அதனால வீட்டுக்கு போய்ட்டு கொஞ்சம் லேட்டா அஞ்சரை கிட்டதான் வந்தேன்..” மீண்டும் கைகடிகாரத்தைப் பார்த்து தனக்கு நேரமாவதை காட்டிக் கொண்டான்.

“புரிஞ்சிக்கோங்க... வீட்டுல எங்க குழந்தையும், வேலை செய்ற அம்மாவும் இருந்தாங்க... இப்படி வீட்டைத் திறந்துப் போட்டுட்டு எங்கேயும் போக மாட்டாங்க. அப்ப நான் கார்ல செல்ஃபோன் எடுக்க லிப்ட் கிட்ட வரும் போது ரோஷிமா அழுகிற சத்தம் கேட்டுது... ஆமா அது ரோஷிமா குரல்தான் எனக்குத் தெரியும்...” என்று அழுகின்ற குரலில் பேசியவளை ப்ளம்பர் விசித்திரமாகப் பார்த்தான். கரன் தொடர்ந்து சாந்தியின் எண்ணுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். கரனுக்கு அனிதாவின் மீதும் கோபம். அவன் கோபத்தை வேறு எங்கு காட்டுவது? “நீ எத்தன மணிக்கு வந்த அப்போ அந்த ஆள பார்த்து நீ ஒண்ணுமே கேட்கலையா? அப்போ சாந்தி, ரோஷினி எங்கன்னு தேடலையா? என்று கடுகடுப்பான குரலில் கேட்டான்.

”நான் வரும் போது ஒருத்தன் தின்னர் வைச்சு ஸ்விட்ச் போர்ட் தொடைச்சிட்டு இருந்தான். நான் உள்ள போய் டிரஸ் மாத்திட்டு வெளியில் வந்தப்ப அவனில்ல. உள்ள ப்ளம்பர் மட்டும் இருந்தாரு...” என்று தெளிவாக்கினாள்.

இதற்கிடையில் கரன் மெய்டெனன்ஸ் ஆபீஸுக்குப் பேசி இன்று வெறும் ப்ளம்பரை மட்டும் தான் 901-க்கு அனுப்பியிருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டான். அவர்களுக்கு வேலையாள் பற்றியோ, இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது பற்றியோ தெரியவே தெரியாது என்றார்கள். அதனாலேயே மெய்டெனன்ஸுக்கு ஐந்து மணிக்கு மேல் போனால் போதுமானது என்று சொல்லியிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

என்ன செய்வதென்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது மறுபடியும் குழந்தையின் அழுகை கேட்டது. “கேட்குதா? அந்து நம்ம ரோஷிமாதானே?” என்று நம்பிக்கை வந்தவளாக அனிதா சொல்ல..

”ஆமா ரோஷி சத்தம் மாதிரிதான் கேட்குது என்று லிப்டில் போகாமல் படிக்கட்டுக்கு போகும் கதவைத் திறந்ததும் சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது. சத்தம் மேல் திசையிலிருந்து வந்ததையுணர்ந்து மூன்று பேரும் அதை நோக்கி நடந்தார்கள். பத்தாம் தளத்தில் யாருமே இல்லை. வந்த சத்தமும் நின்றிருந்தது. இன்னும் மேலே ஏறினார்கள், அங்கு ஒரு பாட்டியின் குரல் “அழாதே கண்ணு அம்மா வந்திருவா” என்று சமாதான்ப்படுத்திக் கொண்டு இருந்தது.... பதினொன்றாவது தளத்தில் ரோஷிமா.

ரோஷியைப் பார்த்ததும் வாரி அணைத்துக் கொண்டாள் அனிதா. பாட்டியின் வீட்டுக்குளிருந்து அனிதாவின் வயதொத்த பெண் வந்து ”இது உங்க குழந்தையா? பாவம் நாலு மணியிலிருந்து படியில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா. படிக்கெட்டில் மேலும் கீழும் போறாளே தவிர வீட்டுக்குள் வர மறுத்துட்டா. எங்களுக்கும் யார் வீட்டு குழந்தைன்னு தெரியல... சாந்திம்மான்னு அழுததால மெய்ட்டெனன்ஸ் ஆபீஸில் சாந்தின்னு இங்க யாராவது இருக்காளான்னு கேட்டோம். அவாளுக்கு தெரியலைன்னா... இன்னும் ஒரு மணி நேரம் பார்க்கலாம் இல்லாட்டி போலீஸில் சொல்லலாம்னு இருந்தோம்” என்று நிலையுணர்த்தியவளிடம் ”உங்களுக்கு சாந்தியை தெரியுமா?” என்று பைத்தியக்காரத்தனமாகக் கேட்டாள் அனிதா.

“யாரு சாந்தி? அச்சச்சோ அப்ப இது உங்க குழந்தை இல்லையா...?” என்று கேட்டு குழப்பிக் கொள்ள..

”இல்ல சாந்தி எங்க வீட்டுல வேலைக்கு.....” என்று அனிதா விளக்குமுன்...

“ரோஷி, சாந்தி எங்கடா?” அனிதாவின் கையிலிருக்கும் ரோஷியின் கண்களைத் துடைத்தபடி கேட்டான் கரன்.

மழலையில் ரோஷி “சாந்திமா சாந்திமா” என்று தெம்பில்லாமல் தேம்பினாள்.

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியிலும், சாந்தி பற்றி விவரம் தெரியாத பதற்றத்திலும் மேல் வீட்டினருக்கு நன்றி கூட சொல்லாமல் கீழே இறங்கி வீட்டுக்கு வந்தார்கள்.

----000----

ஒரு வருடமாகி இருந்தது. சாந்தியின் இடத்தில் இப்போது பார்வதி. சாந்தியை பற்றி இன்னும் எந்த தகவலுமில்லை. சாந்தியை யாரேனும் ஏதேனும் செய்துவிட்டார்களா அல்லது சொல்லாமல் ஓடிப்போய்விட்டாளா? என்று இவர்களால் ஊகிக்க முடியவில்லை. அவளுக்கு உறவில்லாததால் அவளை யாரும் தேடி வரவுமில்லை இவர்களும் தேடிப் போகவில்லை போலீஸிலும் புகார் தரவில்லை.

[நன்றி: அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா மலருக்காக நான் எழுதிய சிறுக்கதை]

Wednesday, August 17, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள்


மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும் திட்டத்தினாலும் நான் திக்கற்று நின்றேன்.

தனக்குச் சாதகமாக இருக்கும் வரை மனிதன் தான் சார்ந்த மதத்தைப் போற்றுகின்றான். அதனைப் பின்பற்றுவதைத் தம்பட்டமும் அடித்துக் கொள்கிறான். ஆனால் தனக்கு ஒத்துவராது என்று வந்துவிட்டால் 'முடிந்த வரை நான் கடைப்பிடிக்கிறேன் மற்றவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான்' என்று இறைவன் மீதே பழிபோட்டு விஷயத்தையே மூடிவிடுகின்றான்.

என்னுடன் வேலை பார்த்த ப்ரியா ஒரு சிரியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ள மதத்தை மாற்றிக் கொண்டாள். திருமணத்திற்காக மட்டுமே அந்த மதம் மாற்றமென்று கட்டிக்கொண்டவனுக்கும் தெரியும் சமுதாயத்திற்கும் தெரிய வேண்டுமென்ற வகையிலேயே இருந்து கொண்டாள். இது ஒரு ரகமென்றால் மற்றொரு ரகம் எனது அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ப்ரிஸ்லினா. இவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் இவள் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியரைக் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். ஆனால் காதலுக்காக மதம் மாற விரும்பவில்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வது பல நாடுகளில் தடையென்றாலும் இந்தியாவில் சில நெருக்கடிக்கப்பால் சுலபம்தான். ஆனால் இந்தியாவில் தேவையான கோப்புகளும், ஆவணங்களும் அதன் வரையறைகளும் சட்டதிட்டங்களும் சுலபமாக இல்லாத காரணத்தால் சீஷெல் நாட்டை அணுகித் திருமணம் செய்து கொண்டார்கள். மனதிற்குப் பிடித்தவரை கைப்பிடிக்க ஒருநாள் திருமண வைபவத்திற்காகக் கூட தன் மதத்தை விட்டு கொடுக்காதவள் வருங்காலத்தில் தன் சந்ததியினர்கள் அவள் மதத்தின் வழியில் வரப்போவதில்லை என்று அறியாமலா துணிந்திருப்பாள்? அதைப் பற்றியும் பேசி முடிவெடுத்திருப்பார்களாக இருக்கும்.

இப்படி மனம், திருமணம் என்று வந்துவிட்டால் எவ்வளவுதான் மத ஈடுபாடு உடையவராக இருந்தாலும் சரி அதிலிருந்து விலகியே நிற்கிறார்கள். காதலைப் புத்தியால் பார்த்து புரிந்து கொள்வதை விட மனதால் உணர்ந்து புரிந்து கொள்வதே சிறந்தது. புத்தி சமுதாயத்தை வைத்துப் பழகும் சூழலை வைத்து அதற்கேற்ப மாறிக் கொள்ளும் ஆனால் மனது அப்படியானதல்ல. அதனால் காதலைப் பொறுத்தவரை மனதால் முடிவெடுப்பதே சிறந்ததாக இருக்கும். `காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதைவிட புத்தியில்லை என்பதே பொருத்தம்` என்றும் கூட நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஏனெனில் காதலித்த அந்த ’ஒரு’ நபருக்காக பல ஆண்டுகாலம் கடைபிடித்துவரும் கோட்பாடுகளையும், சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையும், மத நம்பிக்கையையும் விட்டுக்கொடுக்க முடிகிறதென்றால் ஒன்று அவர்கள் காதல் இதை எல்லாவற்றிக்கும் மேலானதாக இருக்கும் அல்லது தன் மதம் மீது பெரிய ஈடுபாடில்லாதவராக இருக்க வேண்டும். இதெல்லாம் இப்படியிருக்க இன்று என் சிநேகிதி இப்படி கேட்டது மிகுந்த ஆச்சர்யமடைய வைத்தது. இவளுடைய விஷயம் மிகவும் வேறுபாடானது.

இவளும் காதல் வசப்பட்டவள் தான் அதுவும் தன்னுடைய பதினைந்தாம் வயதிலிருந்தேவாம். தன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தவனை யார் என்னவென்று அறியாமல் மிகத் தீவிரமாக ஒருவரையொருவர் காதலித்து விட்டு, தன் இருபதாம் வயதில்தான் அவனை யாரென்று தெரிந்து கொண்டாளாம்.

நிற்க!! நீங்கள் சந்தேகிப்பது தவறு, நீங்கள் நினைப்பது போல் அவன் மிகக் கெட்டவனுமல்ல, அவளை விட்டு விலக நினைப்பவனுமல்ல, மோசமான பின்னணியிலிருந்து வந்தவனுமல்ல, இவளை ஏமாற்றிவிட்டு ஓடிவிட துடிப்பவனுமல்ல. இத்தனைக்கும் இருவரும் ஒரே மதத்தையும் குலத்தையும் சாதியையும் சேர்ந்தவர்கள்தான், கிறிஸ்தவர்கள் தான். பரம்பரை பாரம்பரியத்திலும் சரி, பணத்திலும் சரி இருவரும் சமமானவர்களே. `அப்போ என்னப்பா பிரச்சனை` என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறீர்களா? பொறுமை பொறுமை. இவர்கள் காதல் கதையை முழுவதுமாகக் கேட்டுவிட்டு அதன் பிறகு இவன் யாரென்று புரிந்து கொள்ளுங்கள்.

இவளை இவன் முதலில் பார்த்த இடம் எது தெரியுமா? சொன்னால் சிரிக்கக் கூடாது. எனக்கு முதலில் கேட்கும் போது கொஞ்சம் எள்ளலாகத்தான் இருந்தது. இவன் இவளைப் பார்த்து இந்த ’இழவு’ காதலில் வசப்பட்டது ஒரு இழவு வீட்டில். உண்மைதான். அவளுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டிருக்கிறார். ஆனால் குடும்பப் பிரச்சனை காரணமாக இவள் தாய் தந்தை போக மறுத்த வீட்டுக்கு இவள் பாட்டி அதாவது அம்மாவின் அம்மாதான் இவளை அழைத்துக் கொண்டு அந்த இழவு வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு வைத்துதான் இவன் அவளைப் பார்த்திருக்கிறான். அப்போது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாளாம். அப்போது அவன் கல்லூரி முதலாமாண்டு மாணவன். அதன் பிறகு ஒரு வருட பின் தொடர்ச்சியாக வாழ்த்து மடல், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பேச்சாடல், காதல் தூதுகளென பல முயற்சிக்குப் பிறகு இவளுடைய பத்தாம் வகுப்பு பரீட்சைக்குப் பிறகு காதல் சம்மதம் தந்திருக்கிறாள். அதன் பிறகு வழக்கமான காதலர்களாகி விட்டாலும் இவர்கள் இருவருமே மிகவும் சாமர்த்தியமானவர்களாக இருந்திருக்க கூடும். அதனால் தான் இவர்களின் காதலைப் பற்றி வீட்டிற்கு ஐந்து வருடக் காலமாக தெரியாமலேயே இருந்திருக்கிறது. அதன் பிறகும் தெரியாமல்தான் இருந்திருக்கிறது. ஆனால் இவர்களே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள். ஆமாம், இவள் பாட்டியின் மறைவில் தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இவள் பாட்டி இறந்ததைச் சொல்பவர்களுக்கெல்லாம் சொல்லியாகிவிட்டது என்று சொல்ல உள்ளுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு நெருங்கிய உறவினர்கள் இவளின் வீட்டார்களுடன் பலர் வாக்குவாதங்கள் செய்திருக்கிறார்கள். பஞ்சாயத்து தொடந்திருக்கிறது. இதன் முடிவாக `வேண்டாதவர்களெல்லாம் பாட்டி சடலத்தைக் கடைசியாகப் பார்க்க வருவார்கள் அவர்களுடன் யாரும் பேச கூடாது` என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வந்த குடும்பத்தின் தலைவி பாட்டி காலை பிடித்துக் கொண்டு `அம்மா என்னிடம் கடைசி வரைக்கும் பேசாமலிருந்திட்டீர்களே அம்மா` என்று பயங்கரமாக அழுது புலம்பியிருக்கிறார்கள். அந்த நொடியில் தான் இவள் தன் வீட்டிற்கு வந்து அழும் அந்த பெண் தன் சித்தி என்று தெரிந்து கொண்டதோடு, தன் தாயின் சொந்தத் தங்கையாக இருந்தாலும் ஜென்ம பகையாளிகள் என்று அறிந்து கொண்டிருக்கிறாள். இவள் தாய் தந்தை மட்டுமல்லாது அவள் தந்தை வழி சொந்தங்களுக்கும், தன் தாயின் சகோதர்களுக்கும் கூட இவர்கள் எந்த விதத்திலும் ஒட்டுதல் இல்லை என்பதையும் தன் பாட்டி இறக்கும் தருவாயில் கூட இவர்களைப் பார்க்க விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறாள்.

`அப்படியென்ன ஜென்மப் பகையாம்?` என்று யோசிக்கிறீர்களா? இதே கேள்விதான் எனக்கும் வந்தது. அதுவும் ஒரு காதல் கதைதான். தன் சித்தி காலகாலமாக குடும்பப் பகையாக இருக்கும் வீட்டின் பிள்ளையோடு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்களாம். அதுவும் தன் அக்காளுக்கு திருமணமாகும் முன்பே. இதனால் சித்தியின் அக்கா அதாவது என் தோழியின் அம்மாவின் திருமணத்தடை, தாத்தாவின் மறைவு, சொத்துத் தகராறு, மாமா- அத்தை விவாகரத்து, என்ற பல பிரச்சனை பின்னணியில் `பகை` ஜென்ம பகையாக விசுவ௫பம் எடுத்துள்ளது. ஆமாம், என் சிநேகிதியின் காதல் கதையிலிருந்து எப்போது நாம் அவள் சித்தியின் காதல் பிரச்சனைக்கு மாறினோம்? தொடர்பில்லாமலாயிருக்கும்?

என் சிநேகிதி காதலிப்பது வேறு யாரையுமில்லை அப்படிப்பட்ட சித்தியின் அருமை புதல்வனைத் தான். இவள் சித்தியைத் தெரிந்து கொண்ட போதுதான் தான் தன் சகோதரன் அதாவது சித்தியின் மகனைக் காதலிப்பது அதுவும் பல சந்ததியாகத் தொடர் பகையை வளர்த்துவரும் குடும்பத்தில் ஒருவனை காதலிக்கும் விஷயம் இவள் மண்டையில் உறைத்திருக்கிறது. உரைத்தால் காதல் ஓய்ந்து விடுமா என்ன? பிரச்சனை எழும்பும் போது பார்த்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டார்களாம். இதெல்லாம் கேட்கும் போது எனக்கு கே.பாலசந்தர் படத்தைப் பார்ப்பது போல் உணர்வு. உங்களுக்குமா? நாம் குழம்புவது போல் அவர்களுக்குக் குழப்பமே இல்லை - மிகத் தெளிவாக இன்னும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது இவளுக்கு இருபத்தெட்டு வயதாகிவிட்டது இன்னும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

காதலர்களும் காதலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. குடும்பமும் பகையை மறப்பதாக இல்லை. அது மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களை பொறுத்தமட்டில் இந்த உறவு மிகப் பெரிய பாவமாம். இந்தத் திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்றெல்லாம் இருவீட்டாரும் பயமுறுத்தியும் பார்த்துவிட்டார்கள். இந்தக் காதலர்கள் தளராமல் இன்னும் உறுதியாகவே இருக்கிறார்கள். இவர்களே மதம் மார்க்கமெல்லாம் ஆராய்ந்து, பிஷப் பாதிரியார் என்று எல்லோரிடமும் பேசி விவாதித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அவர்களின் முடிவைத்தான் என்னிடம் கேள்வியாக இறக்கி வைத்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டாள். அவளுடைய தோழிகளில் நான் மட்டும்தான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவள், அதனால் தான் என்னிடம் இந்தக் கேள்வியையும் சந்தேகத்தையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் காதல் ஜோடிகளின் முடிவானது தாம் பிறந்த மதத்தை மாற்றிக் கொள்வதென்று.

கிறிஸ்துவ மதம் சித்தி மகனை அண்ணன் என்று சொல்வதால் திருமணத்திற்குத் தடையாக இருக்கும் மதத்தை தூக்கியெறிவதென்பது அவர்களின் தீர்க்கமான முடிவு. முடிவை கேட்கும் போதே `திக்`கென்றது என் மனம். அடுத்து அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள் ``ஆமாம், உங்க இஸ்லாம் மதத்தில் தாயுடன் பிறந்தவர்களின் புதல்வர்களையோ தந்தையுடன் பிறந்தவர்களின் புதல்வர்களையோ திருமணம் செய்து கொள்வது குற்றமாகாதாமே?``. அவள் கேள்வியிலிருந்து ஒன்று மட்டும் புரிந்தது. அவளுக்குத் தாம் பிறந்த மதத்தையும் தெரியவில்லை, இஸ்லாம் மதத்தையும் விரும்பவில்லை, ஆனால் தனக்குச் சாதகமான ஒன்றை தேடுகிறாளென்று நன்றாகவே விளங்கியது. நான் மிக நிதானமாக சொன்னேன் ”திருமணத்திற்காக மதத்தை வளைப்பது சரியல்ல” என்று.

``சரி- தவறு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் எங்கள் மதத்தில் தடை செய்யப்பட்டது உங்கள் மதத்தில் சாத்தியமென்றால் அது எங்களுக்கு சாதகமென்றால், எங்கள் திருமணத்திற்கு விமோச்சனமென்றால் நாங்கள் ஏன் அந்த மதத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது? எத்தனையோ காதலர்கள் தம் காதல், திருமணத்தில் முடிய காதலர்களில் ஒருவர் விட்டுக் கொடுத்து மதம் மாறுவார்கள். நாங்கள் ஏன் இருவருமே அதே விஷயத்திற்காக மதம் மாறக் கூடாது?`` என்று சூடாகக் கேட்டாள். பதிலளிக்க வார்த்தையில்லை. அவள் முடிவை என்னால் மாற்ற இயலாது. ஒருவேளை இவள் முடிவுக்கு அஞ்சி அவர்களின் குடும்பத்தினர் பிடிவாதத்தைக் கைவிடலாம் அல்லது அவர்களது கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளலாம். காலம் கனியுமென்று எனக்குள் நினைத்துக் கொண்டு் அவள் கேள்விக்கு புன்முறுவலைப் பதிலாகத் தந்தபடி மனிதர்களின் புது நிறத்தை புரிந்துக் கொண்டவளாக இறைவனிடம் முறையிடக் கிளம்பிவிட்டேன். அஸர் தொழுகைக்கு நேரமாகிவிட்டது.

Sunday, December 21, 2008

அவன் அப்படித்தான்

இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில் எங்கள் எதிர்காலத்தின் கேள்விக்குறிகளைப் பற்றி துளியும் கவலைக் கொள்ளாதவளாக இருக்கத் துணிகிறேன்.

எனது முதல் கருவின் சிதைவே என்னை இன்றும் உறுத்தும் இரணம். எந்தப் பெண்ணுமே கருவுற்ற அந்த இன்பகரமான செய்தியை முதலில் பகிர நினைப்பது கணவரிடம்தான். அந்த இன்பத்தையும் நொடிப் பொழுதில் இழந்து தவித்த துர்பாக்கியசாலி நான். கருவிலிருப்பது பெண் சிசுவென்றவுடன் கருச்சிதைவு செய்தாக வேண்டுமென்ற கட்டளை என் மூச்சைத் திணறடித்தது. அவருக்கு அப்படியொரு முகமிருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. படித்த, பகுத்தறிவுமிக்கவர்களுமா இப்படிப்பட்ட இழிசெயலில் ஈடுபடுவார்கள்? இதற்காக அவருடன் வாதம் ஏற்படும் போது, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் திடீரென கையையோங்கிக் கொண்டு "நிறுத்துடி தேவடியாமுண்ட. பெரிய புடுங்கி மாதிரி பேசிக்கிட்டே போற, இந்த மயிரெல்லாம் இங்க வேணாம். 'அது' வேணும்னா அப்படியே போயிடு" என்று ஒரே வரியில் வசைபாடி என் வாயை அடைத்துவிட்டார்.

பகுத்தறிவில்லாத கீழ்மட்டத்து ஆண்களில் சிலர் தெருவோரங்களில் போதையில் பெண்டாட்டியை அடித்து மிதிக்கும் போது இப்படிப்பட்ட கொடூர மொழிகளில் பேசுவதைக் கேட்டதுண்டு. அந்த வசைகளை நானே கேட்க வேண்டிய அவல நிலையில் தள்ளப்படுவேன் என்று நினைத்திருக்கவேயில்லை. இப்படிப்பட்ட அவச் சொற்களைக் கேட்டேயிராத எனக்கு என் நரம்புகள் சுண்டியிழுத்து சிசுவுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் கூட எழுந்தது.

என் சந்தோஷத்தில் மகிழ்ச்சியுறும் என் பெற்றோர்களுக்கு இதைப் பற்றி செல்லாமலேயே இருந்துவிட்டேன். வேறு நெருங்கிய நட்புகளுடனும் ஆறுதலுக்காகக் கூட குறிப்பிடவில்லை. 'நல்லவேள அம்மா கிட்ட உண்டானத சொல்லல' என்று நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, சகலமும் கணவர் என்று இருக்கும் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெண்களின் தலையெழுத்தே அப்படித்தான். என்னதான் படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் கணவன் வகுத்ததே வாய்க்காலென்று இருக்க வேண்டிய சூழ்நிலை. எங்களுக்கென்று என்றுமே தனி முகவரி வைத்துக் கொள்ள முடிவதில்லை.

ஆண்களைச் சார்ந்தே, அவர்களின் அடக்குமுறையில் அடங்கியே வாழ வேண்டிய கட்டாயம். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அதை மீறி நடக்கும் போது 'கெட்டவள்', 'திமிர் பிடித்தவள்', 'அகங்காரம் கொண்டவள்' என்ற பெயர்களுடன் வாழ வேண்டியிருக்கும். எங்கள் நடத்தை மீதும் பலி வரும் அபாயமும் உண்டு. ஊரோடு ஒட்டி வாழ எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் முகமூடியுடன் திரிய வேண்டியுள்ளது. கணவர் தவறான பாதையில் சென்றாலும் சரி, தவறான செயல் புரிந்தாலும் சகித்துக் கொண்டு வாழவே தலைப்படுகிறோம். நானும் அப்படித்தான் அவர் கட்டளைக்கு அடிபணிந்து அந்தக் கொடூர செயலுக்குத் துணை் போனேன்.

இந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதென்றாலும் அந்த பாதிப்பிலிருந்து மீளவே பல வருடங்களானது எனக்கு. இப்படிப்பட்டவரின் குழந்தைக்குத் தாயாக வேண்டுமா என்ற கேள்வி என்னை துரத்த கருவுறாமல் மிகப் பக்குவமாக சில ஆண்டுகளைக் கடத்தினேன். ஆனாலும் தாயாக வேண்டுமென்ற உந்துதல் ஒருபுறமிருக்க. உறவுகளின் நச்சரிப்பும் 'மலடி' என்ற பட்டமும் பயமுறுத்தவே மீண்டும் கருவுற்றேன்.

காலம் சென்று உண்டாகியிருந்தாலும் எந்தச் சலனமுமில்லாமல் மறுபடியும் கருத்தரித்த சிசு ஆணா- பெண்ணா என்ற பரிசோதனைக்கு உள்ளானேன். நல்லவேளையாக இந்த முறை ஆண் என்பதால் மற்றுமொரு பாவச் செயலிலிருந்து தப்பித்தேன். ஆனால் ஆண் கரு என்று தெரிந்ததும் என் கணவருக்குத் தலைகால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம். எக்களிப்பில் எகிறிக் குதித்தார். சும்மா சொல்லக் கூடாது மனுஷர் என்னை அந்த ஒன்பது மாதங்கள் மிக நன்றாகக் கவனித்துக் கொண்டார். என்னைக் கொண்டாடினார் என்று சொன்னாலும் தகும். எல்லாம் சரியாக நடந்தாலும் ஓரத்தில் எனக்கு ஒரு ஆசை இருந்து் கொண்டே இருந்தது. அது ஒரு பலி வாங்கும் வெறியென்று் கூடச் சொல்லலாம். 'கரு ஆண் என்று தெரிந்து அதனைச் சிதைக்காமல் வைத்துக் கொள்ள சம்மதித்து கொண்டாடுபவருக்கு பிறப்பது பெண்ணாக இருக்க வேண்டும், மருத்துவம், விஞ்ஞானமெல்லாம் பொய்யாக வேண்டும்' என்று வெறியின் வெளிப்பாடாகத் தீவிரப் பிராத்தனையும் செய்து கொண்டேன்.

ஆனால் பரிசோதனையின் முடிவின்படியே ஆண் மகவைப் பெற்றெடுத்தேன். குழந்தையின் முகம் கண்டதும் சகலமும் மறந்தது. அவன் பிறப்பைக் கொண்டாடினோம், மகிழ்ந்தோம். அவன் எங்களின் ஒரே மகனானான். செல்லமகனுக்குப் பார்த்துப் பார்த்து அனைத்து தேவைகளையும் தந்தோம். அவன் எங்களுக்கு எல்லாமும் ஆனான். என் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த பொடியன் வளரத் தொடங்கிய பிறகு எங்களுடன் ஒட்டுவதே கிடையாது. தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திய பிறகு அவனை யாரும் அணுகக் கூடாது என்று உத்தரவிட்டான். பதின்ம வயதென்றும் அப்பாவைப் போலவே மூர்க்க குணம் என்று விட்டதும் என் தவறுதான். ஒரு நாள் அவன் இல்லாத வேளையில் நான் அவன் அறையின் பூட்டைத் திருட்டு சாவிக் கொண்டு திறந்து பார்த்ததில் நான் கண்டவை எனக்கு ஒன்றுமே புரியாத வகையில் புதிராக இருந்தது. அந்தக் காட்சி கனவாக இருக்கக் கூடாதா என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன்.

பெண்களின் சாதனங்களாக அடுக்கியிருந்தது. ஆனால் யாருமே சுத்தம் செய்ய அனுமதிக்காத அவன் அறை தூசியும் தும்புமாக குப்பை நிறைந்திருக்கும் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றம். அவ்வளவு பிரகாசமாக சுத்தமாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அறையின் ஒரு பகுதியில் புள்ளி வைத்த வண்ணக் கோலமும். அறை பளிச்சென்று இருந்தாலும் என் மனதினுள் ஏதோ இருட்டு பற்றிக் கொண்டதாக ஒரு பயம் எழுந்தது. இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது, நான் நினைப்பது நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவன் தந்தையிடம் முறையிட்டேன். அவர் அவருடைய உளவாளியை அழைத்து அவனைக் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டு எனக்கு ஆறுதலாகவும் பேசினார்.

முன் தினம் நடந்ததை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. பூட்டிய அறையில் அப்பாவும் மகனும். கண்ணாடி சன்னல் வழியாக அவர்கள் முக பாவங்களை கவனிக்க முடிந்ததே தவிர என்னவென்று யூகிக்க முடியவில்லை. என்றுமில்லாத திருநாளாக அவர் மகனைக் கையோங்கிவிட்டார். ஆனால் அடிக்க மனமில்லாமல் குலுங்கி அவன் கால் அருகே விழுந்து அழுததைக் கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக வீராப்புக் கொண்ட, யாருக்கும் அடி படியாத மனிதர் இவன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிக் கதவைத் தட்டும் முன், கோபமாகக் கதவு திறக்கப்பட்டு மகன் வெளியேறிவிட்டான். குழந்தையாக சுருண்டு் கிடந்தவரை நடுவீட்டில் கிடத்தி "என்னங்க? சொல்லுங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி. இந்தப் பாதகத்திக்கு ஒண்ணுமே புரியலையே. உங்கள நான் இப்படிப் பார்த்ததேயில்லையே, நான் உங்கள என்னான்னு சமாதானம் செய்வேன்" என்று விசும்பத் தொடங்கினேன். அவர் அவரையே கட்டுப்படுத்திக் கொண்டவராக 'வீட்டு வேலையாட்கள் முன்பு எதுவும் வேண்டாம்' என்ற வகையில் சைகை செய்து உள்ளறைக்குச் செல்ல நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

உள்ளறையில் கதவைத் தாளிட்ட பிறகு அவர் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களை மடமடவென்று கழுவிய அவர் முகத்தை நோக்கி நான் "என்னான்னு சொல்லுங்க" என்று பதற்றத்துடன் கேட்டேன்.

"என்னத்தடி சொல்லுவேன்... மகன் மகன்னு மார்தட்டிக்கிட்டு இருந்த பய என்னை மார்லயே குத்திப்புட்டான். ஆண் வாரிசு வேணும்னு ஆசப்பட்டேன் இப்ப அவன் நான் ஆணே இல்லன்னு சொல்றானே நான் என்ன செய்வேன்" என்று குரல் எழுப்பி அழுதவாறு அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பற்றி விளக்கினார்.

சில உயிரியல் மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அவன் உணர்கிறானாம். இந்தக் கொடுமையை நான் என்னவென்று வெளிப்படுத்த? சின்னக் குழந்தையில் பெண் குழந்தையில்லாத குறையை தீர்க்கும் விதமாக இவனுக்குப் பட்டுப்பாவாடை உடுத்தி பொட்டு வைத்து மகிழ்ந்திருக்கிறேன். அதையே இப்பவும் வேண்டுமென்றால் நான் என்ன செய்வது? பல உளவியல் சிக்கல்களைக் கடப்பதால் பித்துபிடித்தாற் போல் திரிவதை அறிந்து அவனைத் தொடர்ந்து சென்று என் கணவர் வினவவே, ஒப்புக் கொண்டவனாக, அதனை தொடர்ந்துதான் அவன் வாழ்க்கை முறையும் அமையும் என்று தீர்க்கமாக சொன்னவன் மறு பாலினமாக மாற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்குக் காசு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். இவரோ 'கட்டுப்படுத்தி இப்படியே வாழ பழகிக் கொள் இல்லையேல் குடும்பத்திற்கு பெருத்த அவமானம்' என்று சமாதானம் செய்தும் "முடியாது என் பிரச்சனை உங்களுக்கு புரியாது. இனி உங்களுடன் தங்கவும் என்னால் முடியாது நான் என் இனத்தவர்களுடன் போகிறேன்" என்று கூறிய மகனின் காலிலேயே விழுந்து கெஞ்சியிருக்கிறார். ஒன்றும் செய்வதறியாமல் அவன் வெளியில் போய்விட்டான்.

அதன்பின் நான் இவருக்கு ஆறுதல் சொல்ல, அவர் எனக்கு ஆறுதல் சொல்லவென்று அந்த இரவு கழிந்தது. நேற்று விடியற்காலையில் தான் வீடு திரும்பினான். நான் ஏதேனும் கேட்டுவிடுவேனோ என்று பயந்தானோ அல்லது என்னை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்ற கூச்சமோ தெரியவில்லை தலையைக் குனிந்தவாறு அவன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டான். அவன் மனது எனக்குப் புரியாமலில்லை. ஒரு தாயாக அவன் சொல்லாமலேயே அவன் விஷயங்கள் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியிருக்க கூடாது என்று எண்ணியவளுக்கு புலப்பட்டும் பொருட்படுத்தவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.

நேற்று முழுக்க நான் பலவாறு யோசித்தேன், எத்தனையோ பெற்றோர்களுக்கு மனநிலை குன்றியக் குழந்தைகள் இருந்தும், பிறவி ஊனமிருந்தும் அதனுடனே அன்பாகவே காலம் தள்ளும் போது இந்த உயிரியல் மாறுபாடு பெரிய விஷயமல்லவே?! எல்லோரும் இவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? சமுதாயக் கட்டமைப்பை நிர்ணயிப்பதும் நாம்தானே? சமுதாயத்திற்காக நாம் என்று வாழ்ந்தது போதும். சமுதாயம் எங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டுமே. இதனை ஒரு நோயாக பாவித்து அன்பை மருந்தாக்கி தருவோம். இவர் இப்படியாக அவர்கள் எப்படி காரணமாக முடியும்? அவர்களை ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்? இத்தனை நாள் வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரச்சனையை இப்போது வீட்டுக்குளிருக்கும் போது சமாளிப்பதுதானே புத்திசாலித்தனம்? இப்படி உளவியல் சிக்கலிருப்பவனை வெளியில் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அது ஒரு தவறான பாதைக்கு நாங்களே வழிவகை செய்வதல்லவா? வீதிக்குப் போய் ஒரு அலப்பறையாவது மட்டும் கவுரமா? அவன் விருப்பப்படியே தேவையான அறுவை சிகிச்சை செய்து கொள்ளட்டும். அவனை முழுக்க மகளாக மாற்றி அவன் உளவியல் பிரச்சனைகள் தீர அவனைப் போலவே இருக்கும் மற்றொருவரை தேடிப் பிடித்து துணையாக்கித் தருகிறேன். இல்லையேல் அவன் தனியாகவே வாழ முற்பட்டாலும் என் உயிருள்ள வரை துணை நிற்கப் போகிறேன். இதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? ஒரு தாயாக அவன் பக்கம் நின்று அவனுக்காக வாதாடி அவன் தந்தையையும் மாற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உறவினர்களைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் சிரித்தாலும் அழுதாலும் எட்டியிருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் உறவினர்கள் இதையும் பார்த்துவிட்டு போகட்டுமே. என் மனதை தெளிவாக்கிய பிறகு எனக்கு எதுவுமே தடையாகத் தெரியவில்லை. இது அவன் பிரச்சனை மட்டுமல்ல எங்கள் பிரச்சனையும் தானே? அப்படியிருக்க அவனை தனியாகத் தவிக்க அனுப்ப முடியுமா எங்களால்? எங்கள் முற்பகல் பாவம் பிற்பகலில் விடிந்திருக்கிறது. அதற்கு பாவம் அவனை பலிகடாவாக்க எனக்கு விருப்பமில்லை. கண்டிப்பாக என் கணவரும் இதனை உணர்ந்தேயிருப்பார்.

எங்கள் மகன் எங்களுக்கு புது மகளாவான். ஒருநாள் இந்தச் சமுதாயமும் எங்களுடன் கைகோர்க்கத்தான் போகிறது. அதில் எனக்குச் சந்தேமேயில்லை. முடிவுமெடுத்துவிட்டேன் அந்த முடிவிலிருந்து நாங்கள் மாறுபடப் போவதில்லை. எல்லா பின்விளைவுகளையும் யோசித்த பிறகு நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றேன்.

விடிந்தது, இன்றைய நாள் எனக்கு இன்னும் பிரகாசமாக.

Thursday, September 06, 2007

விட்டு விலகி நின்று...


உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் தாயை இழந்த சிறு வருத்தம் கூட உன்னிடம் தென்படாதது எனக்கு வியப்பாக இருந்தது. என்னளவுக்கு அந்த வயதில் உனக்கு முதிர்ச்சியில்லை என்று நான் தவறாக விளங்கிக் கொண்டதை உன்னிடம் பழகிய பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

எனக்கு நிறைய தோழிகள் உண்டு, உனக்கு நான் மட்டும்தான் தோழியாக இருந்தேன். அப்படியாக நீ ஏற்படுத்திக் கொண்டாய். யாரிடமும் எளிதில் ஒட்ட மறுத்துவிடும் உன் சுபாவம், உன் வித்தியாசமான மனப் போக்கு, விசித்திர கண்ணோட்டம், அதிசய சிந்தனை, கடிவாளமில்லாத உன் கற்பனை எல்லாவற்றிற்கும் உனக்குப் பொருத்தமான அலைவரிசையில் நான் மட்டுமே பொருந்திப் போனதாய் சொல்லிக் கொள்வாய். அதனால் உன்னையே என் நெருக்கமான தோழியென்று சொல்லச் சொல்லி அடம்பிடிப்பாய். நாம் சேர்ந்தே வளர்ந்தோம். பருவங்கள் மாறும் போது நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனதளவில் நாம் குழந்தையாகவே இருக்க விரும்பினோம். மாதவிடாயே வரக் கூடாது என்று பிராத்திக்கத் தொடங்கிவிட்டாய் நீ. அந்த மாற்றத்தில்தான் பெண்ணின் தலையெழுத்தே மாறிவிடுவதாக சொல்லி சாதித்தாய். அதெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியதல்ல என்பதை நாளடைவில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது உனக்கு. உன் தந்தையென்றாலே உனக்கு எப்போதும் அலட்சியம்தான். 'அவரைக் கண்டாலே ஏன் எரிந்துவிழுகிறாய்' என்று நான் ஒருநாள் உன் செயல் பொறுக்காமல் கேட்டதற்கு உன் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத தந்தையைப் பிடிக்கவில்லை என்றாய். உன் தாய்க்குப் பின் உன் தந்தை உனக்காகவே வாழ்ந்தாரே தவிர வேறு மனம் செய்துக் கொள்ளவில்லை என்று புரிய வைக்க முற்படும் போதெல்லாம் நீ பொருட்படுத்துவதில்லை. நானும் என் அறிவுரைகளைக் குறைத்துக் கொண்டேன்.

அழகாக வளர்ந்து வரும் நம்மை ஆண்கள் கண்களால் மேய்வதை உன்னால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பார்ப்பவர்களை நீ பார்க்காதே அலட்சியம் செய்' என்று எவ்வளவு சொல்லியும் யாராவது விழுங்குவது போல் பார்த்தால் போய் சண்டைக்கு நின்றாய். நான் துணையாக இருக்கும் தைரியத்தில்தான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாய். நீ தனியாகப் போகும் போது எதிர்பாராத விதமாக அந்த காமுகன் நடுவீதியில் உன்னைக் கட்டியணைத்த சம்பவத்திலிருந்து உன்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதை விபரமாகச் சொல்ல முடியாமல் நீ தேம்பியதும் விம்மியதும் உன் கண்களில் நான் கண்ணீர் கண்டதும் அதுதான் முதல் முறை. இறுக்கமாக அணைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்றவனை ஒன்றுமே செய்ய முடியாமல் ஒடிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் போது அனைத்துமே தெரிந்த முகமாக இருந்தும் கேட்க ஆளில்லாமல் போனதற்குக் காரணம் அவன் புதுக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாட்டசாட்டமான பலசாலியான தாதா. அன்றிலிருந்து கனவிலும் கயவர்களுடன் சண்டையிட்டு தூக்கத்தில் பேசுவதைப் பார்த்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் உன் அப்பா. ஆண்களை வெறுக்கும் உச்சக்கட்டத்திற்கே நீ சென்றுவிட்டதை உன் பேச்சிலிருந்து அறிந்துக் கொள்ள முடிந்தது. சில நேரங்களில் நீ வெறுப்பவர்களைப் பற்றிப் பேசும் போதே உன் நிலை மறந்து விசித்திரமாக நடந்துக் கொண்டாய். சில சமயங்களில் எனக்கு பயமாகக் கூட இருந்தது. நிறைய நாட்கள் உன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உன் அறையைத் தாளிட்டு வெளியில் இடிந்து உட்கார்ந்திருக்கிறேன். என் வற்புறுத்தலின் பேரில் மனநல மருத்துவரைச் சந்தித்து அறிவுரை எடுத்து வந்தது என்னை திருப்திபடுத்த மட்டுமே இருந்தாலும் பலன் இருப்பதாக நான் கருதினேன். அந்தக் காமுகன் மீண்டும் உன் கண்களில் படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

உன் முடிவே சரியென்று நினைக்கும் உன்னை யாரும் மாற்றிவிடவோ கலைத்துவிடவோ முடியாததால் ஆண்களை வெறுக்கும் உனது சுபாவத்தை மாற்ற முயற்சி செய்ததில் எனக்குத் தோல்விதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியல்ல என்று உனக்கு விளங்க வைக்க என் சில நல்ல நண்பர்களை நட்பாக இணைத்து வைத்தேன், அதில் உனக்கு ஆத்மியைத் தவிர வேறு யாரையுமே பிடிக்காமல் போனது. ஆத்மியை உனக்கு பிடிக்கும் காரணமும் அவனது கண்ணியமான சுபாவம் என்று நீயே சிலாகித்திருக்கிறாய். உன்னை ஓரளவுக்கு மாற்ற முடிந்ததில் மகிழ்ந்தேன். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு தமிழ்த்திரைப்படங்களே பிடிக்காமல் போனது. கல்லூரியில் உன்னைப் போலவே நான் மற்றவர்களுடன் சரியாக ஒட்ட முடியவில்லை காரணம் எல்லா மாணவிகளுக்கும் பேச பிடித்த தலைப்பு 'ஆண்கள்', 'காதல்', 'அந்தரங்கம்'. எல்லாவற்றையும் ஓரளவுக்கு என்னால் சகித்துக் கொள்ள முடிந்தளவுக்கு உன்னால் முடியவில்லை - கல்லூரி வாழ்வையே வெறுப்பதாகச் சொன்னாய். படிப்பு முடிந்த பிறகு எனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து நான் செல்ல ஆயத்தமான போது எல்லோரையும் விட மிகவும் வருத்தப்பட்டது நீதான் என்று எனக்குத் தோன்றியது. நான் அங்கு சென்று சூழல் சொன்ன பிறகு நீயும் என்னுடன் வந்துவிடுவேன் என்று கூறிக் கொண்டிருந்தாய். விமான நிலையத்திற்கு என் குடும்பத்தாரை தவிர்த்து வெளியாளென்றால் அது நீ மட்டும்தான். விமான நிலையத்தில் உன்னுடன் நான் ஆத்மியைப் பார்த்து ஆச்சர்யமாவதை கவனித்த நீ அவன் உன்னுடன் வரவில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் மூத்த சகோதரனை வரவேற்க வந்திருப்பதாக எனக்கு விளக்கமளித்தாய். எப்படியோ என்னைத் தவிர உனக்கு வேறு ஒரு துணையை விட்டுச் செல்லும் எக்களிப்பில் இருந்தேன்.

நான் இந்தியாவை விட்டுப் பறந்தது அக்டோபர் 26 காலையில். அவளிடமிருந்து அழைப்பு வராததால் அவளை நான் இரண்டு நாட்களுக்கு பின் தொடர்பு கொண்டேன். என் அழைப்பிற்கு அவள் பக்கத்தில் பதில் இல்லாததால் இரு தினங்கள் விட்டு மறுபடியும் அவளை நான் அழைத்தேன் ஆனால் மறுமுனையில் அவள் இல்லை, அவள் அப்பா பேச முடியாமல் அழுதார். நான் சென்ற அதே தினம் ஆரம்பமான அவளுடைய கொலை வெறி அடுத்த தினமே முற்றியிருக்கிறது. யாரையோ தேடிச் சென்று அவன் ஆண் உடைமையை அவள் வெட்டி வந்தது அக். 28 இரவு. அவள் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழிந்து. ஆத்மியின் சகோதரன் தான் அந்தக் காமுகன் என்று நான் தெரிந்து கொண்டது அவள் கைதுக்குப் பிறகு. மனநலம் சரியில்லாத காரணத்தால் அவளைச் சிறையில் வைக்காமல் சிகிச்சை தர வேண்டுமென்ற வாதத்தில் வெற்றி பெற இரண்டு வாரங்களானது. மனநல மருத்துவமனையை விட்டு அவள் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது நவம்பர் மாத இறுதியில். அவள் தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் வந்தது அவள் தப்பிக்க முயற்சி செய்த நாளுக்கு மறுநாள்.

நீ கண்டிப்பாகத் தற்கொலை போன்ற முடிவுக்கு வரமுடியாதவள் என்று உன்னை முழுதும் அறிந்த என்னால் மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் உனக்காக என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்?

Wednesday, August 15, 2007

சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா?

எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து ஒரு புள்ளியில் வந்து நிற்கிறதே மனது. அவன் மனைவி மக்களுடன் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்கிறான் கொடுத்து வைத்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்ப மட்டும் என்னவாம் எது எப்படியிருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் கொடுத்து வைத்தவன் தான். அவன் எவ்வளவு சுலபமாகத் தன் மனைவிக்கு வேறு ஒருவன் பிடித்திருக்கிறது அதனால் அவளுக்கு அவனையே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் என்கிறான். "எப்படிடா அப்படி முடியும்?" என்றால் 'சிவில்' என்கிறான். குழந்தையைப் பற்றி நான் தயக்கத்துடன் கேட்டால் அவனோ 'மாற்றி மாற்றி எங்கள் வசதிக்கேற்ப பார்த்துக் கொள்வோம், எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது' என்கிறான் சுலபமாக. புரிதல் இருந்தால் ஏன் பிரிய வேண்டுமாம்? இடம் மாறிவிட்டால் நம் கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை எல்லாமுமா மாறிப் போகும்? ...ஏன் மாறக்கூடாது? இருந்தால் அவனைப் போல் தான் இருக்க வேண்டும். இந்தத் திருமணம், கட்டமைப்பு, ஒழுங்கு, ஒருவனுக்கொருத்தி இதெல்லாம் எப்போது பிறந்தது? மதம் வந்து முளைத்த பிறகுதான் இந்த கருமாந்திரமெல்லாம் வந்திருக்கக் கூடும். பெரியாரை தீவிரமாக வாசிக்கும் போதெல்லாம் அவர் திருமணத்தைக் குறித்து சொல்லியிருப்பதைப் படிக்கும் போதெல்லாம் பெரியார் மீது பழியைப் போட்டு திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி. திருமணம் என்ற ஒன்று வந்தே இருக்கக் கூடாது பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்ந்து, எந்தப் பொறுப்புகளும் சுமந்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அப்படியே நாம் விரும்பியபடி அமைத்துக் கொண்டு நேசித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இந்த சென்னையில் இருந்துக் கொண்டு நானே இப்படியெல்லாம் சிந்திக்கும் போது நான் நினைப்பது போன்ற வாழ்க்கை வாழும் அமெரிக்கர்களை சூழ வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனுக்கு இதற்கு மேலேயும் தோன்றியிருக்குமாக இருக்கும். நான் ஒரு பயிற்சிக்காக சிறிது காலம் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தபோது நான் சந்தித்த ஆங்கிலேயர் அதிசயமாகக் கேட்டது 'உங்க மனைவி நீங்க 1-2 வருடம் கழித்து உங்க நாட்டுக்குச் சென்றாலும் உங்களுக்காகவே காத்து இருப்பார்களா?' என்று மனைவியை இந்தியாவில் விட்டு அமீரகத்தில் வாழும் ஒரு தமிழரைப் பார்த்து பிரம்மிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாரே. அந்த ஆங்கிலேயர் இந்திய திருமண முறையைப் பற்றி எவ்வளவு இரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாழுபவர்களுக்குத் தான் தெரியும் அதிலுள்ள கஷ்டம் என்பதை அவரிடம் சொல்லமலேயே வந்துவிட்டேன். ஐரோப்பாவிற்குச் சென்றேன் என்றுதான் பெயர். போனேன் வந்தேன் என்று இருந்துவிட்டேன் - எதற்கும் நேரமில்லாமல் போனது. அதற்கே சந்தேகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு மேலானது. இதற்கெல்லாம் பயந்தே என் மேலாளரிடம் நான் ஊரைவிட்டு எங்கும் எதற்காகவும் போவதாக இல்லை. அப்படியே போனால் குடும்பத்தோடுதான் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ச்சீ என்ன ஒரு கேவலம் அதையும் பெரிய பெருமிதமாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். குடும்பக் கட்டமைப்புக்குப் பயந்தே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அல்லவா தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன்.

கையாலாகாத் தனத்தோடு எத்தனை நாட்கள் தான் நான் இப்படி குழந்தையாகவே தலையணையை நனைப்பது? எத்தனை பேர் என்னைக் காதலித்தார்கள், ஏன் தான் நான் தவறான துணையைத் தேர்ந்தெடுத்தேனோ? நானா தேர்ந்தெடுத்தேன்? இணையத்தில் தொடர்ந்து பேச்சாடல் (Chatting) செய்ததில் வந்து விழுந்தது இந்தக் கண்றாவி காதல். அப்போதே யோசித்திருக்க வேண்டும் இவளுக்கு என்னை எதற்காகப் பிடித்தது என்று. காதலை என்னைவிடத் தயக்கமின்றி தெரிவித்தது அவள்தானே? கடல் கடந்த வேலையில், கைநிறைய சம்பளத்தில், கணினியியல் படித்த இந்தத் திறமையான வீசிகரிக்கும் ஆணை யாருக்குத்தான் பிடிக்காது? வாழ்க்கையின் பாதுகாவலுக்கு ஒரு ஆளை தேடியிருக்கிறாள், பெண்களுக்கே உண்டான சுயநலமென்று நன்றாக யோசித்திருந்தால் என் மரமண்டைக்கு அதெல்லாம் புரிந்திருக்கும். அப்போதிருந்த தனிமையில் இவள் பேச்சாடலுக்கு அடிமையாகிப் போய் கைப்பிடிக்கவும் நேர்ந்துவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான வசந்த காலம் தான். நினைத்தால் இன்றும் இந்த நொடியும் இனிக்கிறதே!

காதல் என்ற போதையில் மிதந்துக் கொண்டே கல்யாண நாளை வரவேற்றேன். பிரச்சனையில்லாத காதல் திருமணம் நம்முடையதாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சாடலில் அவள் பேசியதற்கும் இப்போதிருக்கும் பிசாசிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவளா இவள்? திருமணம் முடிந்து ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று முடிந்துவிடாமல் குறைந்தது 4 வருடம் என் வாழ்நாளிலேயே சந்தோஷமானதாகத் தான் இருந்தது. எப்போது அவளுக்கு என் செயல்களில் நம்பிக்கையின்மை வந்ததோ சந்தேகம் என்ற நோய் வந்ததோ அப்போதே நான் செத்துவிட்டேன். எங்கள் காதல் பேச்சாடலில் நிகழ்ந்ததால் முதலில் நான் கணினியில் பேச்சாடல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டாள். 'முடியாதுடி சனியனே, நான் அலுவலகத்தில் பேசினால் உனக்கு தெரியவா போகிறது' என்று அந்த நொடியே பளாரென்று ஒன்று கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்காது. ஒவ்வொரு நாளும் என் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு மட்டும் தானே ஏதேனும் தவறு கண்டுபிடிக்க முடிகிறது. ஏன் இப்படியாகிவிட்டாள்? எதற்காக என்னை வதைப்பதோடு அவளையும் வதைத்துக் கொள்கிறாள்?

என் நண்பனின் மனைவி போல இவளுக்கும் யாராவது பிடித்திருந்தால் 'போய் தொலை' என்று அனுப்பிவிடலாமே, ஆனால் இவளோ அலாதியான பாசப் பிணைப்பு என்று பிதற்றிக் கொண்டு என்னை ஒரு நாய் குட்டிப் போல் கட்டி இழுத்து தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள அல்லவா ஆசைப்படுகிறாள்? நான் என்ன ஜடப் பொருளா அல்லது வீட்டில் இருக்கும் ஒரு மேஜையா அவளுக்காக உபயோகித்துக் கொண்டு உணர்வுகளே இல்லாமல் ஒரு மூளையில் முடங்கி கிடக்க? எனக்கென்ற நட்பு வட்டாரங்கள் கூட இவளால் சுருங்கிவிட்டது. சுருங்கிவிட்டதென்ன சுருங்கிவிட்டது இல்லாமல் போனதென்று சொன்னால் ரொம்பப் பொருத்தம். போதும் போதும் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அழுவதைவிட ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான். நான் விவாகரத்து பிரிவு என்று நினைத்தாலே குழந்தை தான் என் கண் முன்னால் வந்து நிற்கிறாள். என் ஒரே பிடிப்பான என் மகள் என் கைவிட்டுப் போய்விட்டால்? அப்படி ஒன்றும் நடந்துவிடாது என் குழந்தை என்னிடம் இருந்து வளரவே விரும்புவாள். வருங்காலத்திற்காக இனியும் என் நிகழ்கால சந்தோஷத்தை இழக்க முடியாது. என் குழந்தையின் சந்தோஷத்திற்காக நான் ஏன் திருமணம் என்ற சிறையில் சிக்கிக் கொண்டு சிறகடிக்க முடியாமல் சிலுவையில் அறைந்தாற் போல் திண்டாட வேண்டும்? யோசித்து யோசித்தே தலையில் உள்ள பாதி முடியும் கொட்டிவிட்டது, வாழ்க்கையில் விரக்திதான் மிஞ்சியிருக்கிறது. போதும் போதும் இதற்கு ஒரு முடிவுக் கட்டியாகியே தீர வேண்டும்.

முடிவெடுத்தவனாக "போடி உங்க வீட்டுக்கு போய்விடு, விவாகரத்து நோட்டிஸ் வந்து சேரும்". மகளைப் பார்த்து "கண்ணா, இனி அப்பாதாண்டா உனக்கு எல்லாம். வா செல்லம் நீ தான் என் வாழ்வின் பிடிப்பே". "செல்லம், இனி நீ தான் என் வாழ்க்கையே" என்று அவள் சொல்லும் போதே தலையணையால் யாரோ அடிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.

"எவ அந்த செல்லம் உங்க வாழ்க்கையோட பிடிப்பு? இப்படி கன்னாபின்னான்னு தூக்கத்தில பேசுறது, கேட்டா நான் பிசாசாகி போறேன்ல? என்று 'உர்'ரென்ற முகத்தோடு அவனை உலுக்கிக் கொண்டே கேட்டாள். "உங்க கூட சண்டப் போட நேரமில்ல. இன்றைக்கு சுதந்திர தினம் எங்க பள்ளிக்கூடத்துல விழா, அதுக்கு ஆசிரியர்கள் சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல? சரி நான் கிளம்புறேன், பாப்பாவும் என் கூட வரா... இட்லி வச்சிருக்கேன் அத சாப்பிட்டுட்டு, உங்களுக்கு கட்டி வச்சிருக்கிற டிபன் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போங்க. அப்புறம் நீங்க போகும் போது எல்லா விளக்கும் விசிறியும் அணைச்சிருக்கான்னு பார்த்துட்டு, கதவெல்லாம் ஒழுங்கா மூடியிருக்கான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிடுங்க. உங்க ஷர்ட் இஸ்திரி பண்ணி அங்க மாட்டியிருக்கேன்... சரி நேரமாச்சு நான் வரேன்..." என்று மூச்சு விடாமல் முழங்கிவிட்டு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்துக் கொண்டிருந்தாள்.

'ச்சே! எப்போ தூங்கிப் போனேன் நான்? அவளை வெளியே 'போ'ன்னு சொன்னது கனவா? அதானே எனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வரும்? அவ்வளவு சீக்கிரம் எனக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்ன? ஆனா இவ இல்லாட்டி என் பாடு திண்டாட்டம்தான். இனி இப்படியெல்லாம் யோசிக்கக் கூட கூடாதுன்னு இந்த சுதந்திர நாளில் உறுதி மொழி எடுத்திட வேண்டியதுதான்'.

Sunday, July 15, 2007

சுகுணா என் காதலி

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )

இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல் வாரம் அவள் வீடு என்று தெரியாமலேயே இருந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தான் அவள் முகம் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். அவள் தானா அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் அவளாக ஒரு காலத்தில் தெரிந்துக் கொண்டிருந்த அதே நோய் மீண்டும் வந்துவிட்டதா என்று எனக்கே சந்தேகம். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அதே கணம் பாஸ்கரும் 'சுகுணா' என்று விளித்து என் அச்சத்தை தெளிவாக்கிவிட்டான். ஆமாம் அது என் சுகுணாவேதான். எப்படி அடுத்தவன் பொண்டாட்டியை 'என் சுகுணா' என்கிறேன் என்றெல்லாம் கேட்க கூடாது. இப்போது வேண்டுமானால் அவள் பாஸ்கரின் மனைவியாகி போகலாம், என் மனதளவில் இன்றும் அவள் 'என் சுகுணா'தான்.

லேசில் எந்த பெண்ணையும் பிடித்துவிடாது எனக்கு. சின்ன வயதிலிருந்தே அம்மாவை கண்டால் ஒருவகை வெறுப்பு, காரணம் அவள் என்னை பெற்றவள் அல்ல என்பதால் இல்லை அவள் என் தந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாததால். யாரிடமும் ஒட்டாமலேயே வளர்ந்துவிட்டேன். என் சிந்தனைகளையும் யோசனைகளையும் அவ்வப்போது எழுதுவேன் அதற்கு 'கவிதை' என்று நானே பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் அது எனக்கு மட்டுமே புரிந்தது. அதனால் அதனை இப்போது எவரேனும் வாசித்தால் 'பின் நவீனத்துவத்துடன்' சேர்த்து விடக் கூடும். அந்த வகையான எழுத்துக்கள். எழுதியதை வெறுப்பில் பறக்க விட்டுக் கொண்டிருந்த போது, இனி எழுதவே போவதில்லை என்று எல்லாவற்றையும் வீசிக் கொண்டிருந்த போது சில பக்கங்கள் சுகுணாவின் காலை சென்றடைய குப்பை என்று ஒதுக்காமல் ஒரு காகிதத்தை மட்டும் கையில் எடுத்தாள். முதலில் என் காகிதத்தை ஒரு பெண் தொட்டாள் என்றதும் கோபம்தான் பிளறியது, பறக்கவிட்டாலும் அந்த குப்பை எனக்கே சொந்தமானது. எடுத்தவள் முகம் மலர்ந்தது. தூரத்திலிருந்து கவனித்தேன். "ஹே சூப்பர் கவிதைடி" என்று தோழியிடம் இரசித்து சொல்லியது அந்த அமைதியான சூழலில் அவள் வார்த்தை மட்டும் என் காதில் எட்டவே அவளை நான் இரசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவளை அடிக்கடி காணவே முடியாது. என் சுகுணா மிகவும் அடக்கமானவள், அமைதியானவள், அழகானவள். பூமிக்கும் வலிக்காமல் நடப்பவள். பூமியை மட்டுமே பார்த்து நடப்பவள். எத்தனையோ முறை நான் அவளை கடந்து சென்ற போதும் அவள் என்னை கவனித்ததே இல்லை. நான் வசீகரிக்கும் ஆணாக இல்லாமல் போனதால் என்று சொல்லிவிடாதீர்கள். என்னை மட்டுமல்ல அவள் யாரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் அந்த பாவி பாஸ்கரை மட்டும் எப்படித்தான் கவனித்தாள் என்று இன்னும் எனக்கு புரியவேயில்லை. ஒரே ஒரு முறைதான் அவளை அவனுடன் பார்த்தேன், மனம் ஒப்பவேயில்லை. அதுவும் அவள் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில்தான் நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். என்ன உறவு என்று அவசரப்படாமல் தெரிந்துக் கொள்ளும் அவசரத்தில் நான் இருந்தேன். நானே அவள் வீட்டில் உள்ள ஒரு பெரியவரிடம் எதேச்சையாக ஏதோ காட்டுவதாக அவர்களை காட்டி விட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கே தெரியாது. ரொம்ப நாளாக அவளை வெளியில் பார்க்க முடியவில்லை. காட்டிக் கொடுத்ததால் அவளை வீட்டில் அடித்தார்களோ என்று எனக்கு நானே கற்பனை செய்துக் கொண்டு கொஞ்ச காலம் குற்ற உணர்ச்சியில் இருந்தேன்.

நான் கல்லூரியில் இறுதி ஆண்டு முடிக்கும் போதுதான் அவள் முதல் ஆண்டில் காலெடுத்து வைத்திருந்தாள். அதனால் இன்னும் அவளுக்கு மணமகன் தேட காலமிருக்கிறது என்று கணித்துக் கொண்டு வெளிநாடு வேலை கிடைக்கவே பறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய திருமண பேச்செழவே, அவள் இறுதியாண்டுக்கு இப்போதுதான் வந்திருப்பாள் என்று கணக்கிட்டு அவளை விசாரிக்க சொல்லும் போது தெரிந்துக் கொண்டேன் அவள் பாஸ்கருடன் ஓடிப் போய்விட்டாள் என்று. 'ஓடி போய்விட்டாள்' என்று யாரும் தெரிவிக்கவில்லைதான், ஆனால் வேற்று சாதி பாஸ்கர் என்ற பையனுடன் திருமணம் முடிந்து விட்டது என்று தெரிய வந்தது. அப்போதுதான் நான் என் வாழ்க்கையின் 'வில்லனின்' பெயரையே தெரிந்துக் கொண்டேன். அவள் தூரத்தில் அவனுடன் இருக்கும் போது அவள் முகம் தனியாக பளிச்சிட்டு தெரிந்தது, அப்போது அவனை நான் கவனிக்காததால் இப்போது அவர்கள் வீட்டிலேயே மேல் தளத்தில் வாடகைக்கு இருக்கிறேன். இருப்பினும் ஓரத்தில் ஒரு வகை ஆசை. அந்த ஆசையில் ஒருவகை வலி. அதனால் என் மனசு எனக்கு சொன்னதெல்லாம் 'இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதுவும் கடல் கடந்து, அவள் வாழ்க்கையில் உனக்கு இன்னும் இடம் இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே இருந்தது. கடிவாளமில்லாத மனது கண்டபடி அலைபாயத்தானே செய்யும்? ஆனால் சில நேரங்களில் அவர்களை கடந்து நான் மேலே ஏறும் போது, பாஸ்கரும் சுகுணாவும் அவர்களுடைய குட்டி தேவதையுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிகுந்த பொறாமையாக இருக்கும். நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் என்று நினைத்துக் கொள்வேன். குட்டி தேவதையின் பெயர் கூட தெரியாது எனக்கு. என்னை கண்டாலே ஓடி ஒளிந்துக் கொள்வாள். 'உனக்குமா என்னை பிடிக்கவில்லை' என்று நான் நினைத்துக் கொள்வேன். நான் கடக்கும் போது என்னை நிமிர்ந்தும் பார்த்ததில்லை என் சுகுணா. பார்த்தால் மட்டும் அவளுக்கு என்னை தெரிந்துவிடப் போகிறதா என்ன? இருப்பினும் கண்ணுக்குள் கலக்க மாட்டாளா என்ற அற்ப ஆசை இருக்கத்தான் செய்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்காதா என்று நான் பார்க்கும் போதெல்லாம் அவள் முதுகை மட்டுமே காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவர்கள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது 'ஒருவேளை அவள் என்னுடன் இருந்திருந்தாள் இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்க முடியாதோ' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும் என் அலைபாயும் மனம் 'இதை விட சந்தோஷமாக இருந்திருப்பாள். பிடிக்காத மனைவியென்பதாலேயே முன்னேற முயற்சிக்காமல் அவளையும் இங்கு அழைத்து வராமல் இருக்கிறாய். இவள் மனைவியாகியிருந்தால் நீ எங்கேயோ போயிருப்பாய்' என்று சொல்லி என்னை கற்பனை உலகிற்கு இழுத்து செல்லும்.

வாழ்க்கையில் எனக்கு காதல் என்று பூத்தது இவளுடன் மட்டும் தான் அதையும் தெரிவிக்காமலேயே என் வாழ்வு முடிந்து விட்டால், என் காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே? இவளுடன் பேசாமலேயே பழகாமலேயே பல நாட்கள் குடித்தனமே நடத்தியிருக்கிறேன் என் மனதளவில், என் உலகத்தில். இவளுக்காக குற்ற உணர்ச்சியில் இருந்த போது சோறு தண்ணியில்லாமல் என்னை நானே வதைத்திருக்கிறேன். 'நம் உலகம்' என்று ஒரு வலைதளமே அமைத்து இவளுக்காக எழுதுவதாக எழுதி தள்ளியிருந்திருக்கிறேன் ஏதாவது ஒரு மூலையில் இவள் படித்துவிடமாட்டாளா என்ற ஆவலுடன். 'உனக்காக எழுதித் தள்ளியதை எவன் எவனோ இரசித்துவிட்டு சென்றிருக்கிறான் சுகுணா. ஆனால் எழுதவே வேண்டாமென்றிருந்த என்னை எழுத வைத்த உனக்காக நான் எழுதும் போது நீ இல்லாதது எனக்கு எங்கோ நோவுகிறது. சுகுணா உனக்கான என் காதலை தெரிவிக்க வேண்டும், வேண்டும்' என்ற வெறியில் தான் அவளுக்காக அந்த கடிதத்தை நான் எழுதினேன். அந்த கணத்தில் எனக்கு 'நான் திருமணமானவன், ஒரு குழந்தையின் தகப்பன்' என்ற உணர்வே இல்லாமல் இருந்தது. மனைவியை காதலிக்காமலேயே மகன் எங்கிருந்து வந்தான் என்ற அசட்டுத்தனமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. காதலில் பிறப்பதல்ல உயிர், கலவியிலும் உருவாகும் என்பதால் பிறந்துவிட்டான். எழுதினேன் காதல் சொட்டும் கவிரசனையோடல்ல, மிகவும் சுருக்கமாக 'கற்பனையில் வாழ்ந்துவிட்டோம் சிறிது காலமாவது நிஜத்தில் வாழ்ந்து பார்ப்போமா, வாய்ப்பளிப்பாயா?' என்று மட்டுமே ஒரு அழகிய ஆங்கில வரிகள் பதித்த காதல் வாழ்த்து அட்டையில் என் கைப்படவும் எழுதிவிடாமல் தட்டச்சு செய்து அதை படிமமெடுத்து ஒட்டி எவ்வளவு நாசுக்காக அவள் 'யார் யார்' என்று யோசிக்கும் தவிப்பை அவளுக்கு தர நினைத்தேன்? இது வக்கரமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது என் காதலுக்கு நானே செய்துக் கொள்ளும் ஒரு வகையான சமாதானம். நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது இருப்பினும் காலம் கடத்தாமல் எழுதவே தோன்றியது எனக்கு. எழுதிவிட்டேன் அனுப்பியும் விட்டேன்.

என் கடிதம் கைக்கு கிடைத்து விட்டதா அல்லது வேறு சில காரணமா என்று தெரியவில்லை, நான் கடிதம் அனுப்பி இரண்டாவது நாளிலேயே அவர்கள் வீட்டில் ஏதோ பூகம்பம் வெடித்தது போல் பலத்த சண்டை நிகழ்ந்துக் கொண்டிருந்தது, அப்போது தான் நான் அலுவலகம் முடிந்து மாலை வீட்டுக்குள் நுழைகிறேன். உரையாடல்களின் சத்தம் கேட்காதது போல் படி ஏறினேன். சண்டையென்று அந்த சத்தத்தை வைத்து உணர்ந்து கொள்ள முடிந்ததே தவிர சொற்கள் சரியாக காதில் கேட்காததால் சம்பவம் புலப்படவில்லை. இருவர் குரலில் அவன் குரல் தூக்கலாக ஒலிக்கவே சுகுணாவின் குரல் கேட்காமலேயே இருந்தது. அடிக்கடி உரக்க தெளிவாக கேட்டதெல்லாம் 'கத்தாதே' என்ற ஒரே வார்த்தை மட்டும். சலசலப்புக்கு பிறகு பாஸ்கர் வெளிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, மேலிருந்து எட்டிப் பார்த்தேன். கோபத்தில் சிவந்திருந்தது பாஸ்கரின் முகம். எட்டிப் பார்க்கும் என்னையும் கவனிக்காமலேயே குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டான். கீழே சென்று அவளிடம் ஆறுதலாக ஏதேனும் பேசலாமா, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. இருப்பினும் பாஸ்கர் மறுபடியும் வந்துவிட்டால் என்ற அச்சத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். வேறேதும் சத்தம் கேட்கிறதா என்று காதை கூர்மைப்படுத்திதான் வைத்திருந்தேன் ஆனாலும் வேலையின் அலுப்பா என்று தெரியவில்லை, என்னையறியாமலேயே தூங்கிப் போனேன். கனவிலும் சுகுணாதான் என்னுடன். திடீரென, நடு இரவில் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். சத்தம் கீழிருந்துதான் என்று ஓடி இறங்கி சென்றேன், ஹாலில் பாஸ்கர் கையை தலை மேல் வைத்து அழுதுக் கொண்டிருந்தான். மகள் சோஃபாவில் படுத்திருந்தாள். சுகுணாவை என் கண்கள் தேடியது. அழுகைக்கான காரணமும் புரியவில்லை. அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தேன். என் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அக்கணம் என் மனதை பிசைந்தது, மிகவும் சங்கடமாகிப் போனது. "என்ன ஆச்சுங்க" என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அவன் மேலும் குரலுயர்த்தி அழுதான். ஒருவகையான பயம் என் மனதை பிடித்துக் கொண்டது காரணமேயில்லாமல். மறுபடியும் உலுக்கி "சொல்லுங்க" என்றேன். உள் அறையை கைக்காட்டி மறுபடியும் குரல் உயர்த்தி அழுதான். எனக்கு உள் அறைக்கு போக ஏதோ தயக்கமாக இருந்தது. வெளி கதவும் திறந்தே இருந்தது. கீழ் தளம் என்பதால், இவன் அழும் சத்தம் கேட்டிருந்திருக்கும் அந்த வில்லாவின் காவலாளிக்கு, ஓடிவந்தார், "கியா ஹுவா சாப்" என்றான். பிறகு அவனே உள் அறைக்கு தைரியமாக தயக்கமில்லாமல் ஓடிப் பார்த்துவிட்டு ஒரே ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் கண் விரிந்ததில் உள்ளே ஏதோ விபரீதம் நடந்திருக்கு என்பதை மட்டும் புரிந்துக் கொண்டேன்.

வெளியில் ஓடிவிட்டான் காவலாளி. கொஞ்ச நேரத்தில் காவல்துறை படையெடுத்து வந்திருந்தது. வில்லாவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி வீட்டின் வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். விடியும் நேரமும் நெருங்கிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள், கூடவே காவலாளி "யஹான் சாப்" என்று உள் அறையை கைக்காட்டினார். பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே பேசிவிட்டு, செல்பேசியில் யார் யாருக்கோ வேற்று பாஷையில் பேசிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகளிடமும் பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் அழுகையை மட்டும் பதிலாக தந்தார். என்னை கேட்டார்கள் 'who are you?' என்று. உள் அறையில் என்ன நேர்ந்திருக்கிறது என்று பார்க்கும் துணிச்சல் கூட இல்லாத நான் என்ன பதில் சொல்லிவிடப் போகிறேன். நான் யாரென்று சொல்லக் கூட பயந்துக் கொண்டு 'நான் பாஸ்கருடைய சிநேகிதன் மேல் அறையில் குடியிருக்கிறேன்' என்றேன். "எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்றார். எந்த சம்பவம் என்று புரியாத எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்பதான் புரிகிறதா எங்களுக்கு எப்பவோ புரிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா? எனக்கு புரிவதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே மழுங்கல் ராஜாவாக நின்றிருந்தேன். எந்த சம்பவம் என்று கேட்டால் அபத்தமாகி போகுமோ என்று யோசித்துக் கொண்டேன் "பாஸ்கர் அழும் குரல் கேட்டே கீழே வந்தேன், என்ன நடந்தது..." என்று இழுக்கும் முன்பே, பெரிய அதிகாரி மற்றவரிடம் வேற்று பாஷையில் ஏதோ சொல்ல. அது இவர்களிடம் 'ஸ்டேட்மெண்ட்' வாங்கிக் கொள் என்பதாக தொணித்தது, காரணம் 'ஸ்டேட்மெண்ட்' என்ற வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது.

மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குனிந்த தலை நிமிராத என் சுகுணா மொத்தமாக பூமி பார்த்தபடியே தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை என்னால். நான் மேலே உறங்கிக் கொண்டிருக்கும் போதா நீ மொத்தமாக உறங்கிவிட்டாய் என்று உலுக்கலாம் போல் இருந்தது. கனவா நிஜமா, என் சுகுணா ஆத்திரத்தில் அவசரத்தில் எடுத்த முடிவாக இருக்கும், இந்த நிகழ்வை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாதா? கணிணியில் இருக்கும் 'undo' போல் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. எங்கே அந்த கால இயந்திரம்... எங்கே.. என்று பித்து பிடித்து கத்த இருந்தேன். அப்போது என்னை நடுங்க வைக்கும் அளவுக்கு என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு அந்த உள் அறையில் நுழையும் போது நான் மீண்டும் சுதாரித்துக் கொண்டேன். அல்லது அந்த நிமிடமே பித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. என்னை இடித்து தள்ளி உள்நுழைந்தது காவல் துறை அதிகாரிகளோ யாரோ தெரியவில்லை, அந்த உடுப்பில் இல்லை, சுகுணாவை கீழே கிடத்தினார்கள். அதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவள் கையில் இருக்கும் காகிதத்தை எடுத்தார்கள். அதில் 'என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என்ற சுய வாக்குமூலம் இருந்ததாக பேசிக் கொண்டார்கள்.

அதன் பிறகு பாஸ்கரை தனியாக அழைத்து சென்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகள் எழுந்து "அம்மா, அம்மா" என்று அவள் கண்கள் தேடவே மற்ற அறையிலிருந்து அதை கேட்ட பாஸ்கர் 'ஓ' என்று அழ தொடங்கிவிட்டான். ஒரு குழந்தையின் தவிப்பிற்கு நான் காரணமா என்று குடைய ஆரம்பித்தது மண்டைக்குள்.

அவள் தற்கொலைக்கு எது காரணம் என்று எனக்கு தெரியவேயில்லை. 'ஆனால் நான் தான் காரணமா? என் கடிதம் தான் காரணமா' என்று தெரிந்துக் கொள்ள முடியவே இல்லை. எப்படி கேட்பேன் அது பற்றி. யாரிடம் கேட்பேன்? அப்படியே அந்த கடிதம் காரணமாக இருந்தாலும் அதை நான் தான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ளும் தைரியமில்லை எனக்கு. 'எப்படி ஒரு வாக்கிய கடிதம் ஒரு உயிரை பறிக்க முடியும்?' என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் 'அப்படித்தான் இருக்கும்' என்று என் கடிவாளம் இல்லாத மனது சொல்லி என் உயிரை உருக்குகிறது, பைத்தியக்காரனாக இன்னும் அலைய வைக்கிறது கால இயந்திரத்தை தேடி.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி