Tuesday, January 21, 2014

அறம்


பிரபலம் என்றாலே அவருடன் நட்பு பாராட்ட தோன்றும். ஆனால் எந்த வகை பிரபலமென்றாலும் பெரிய அளவில் உறவாடவோ அவர்களுடன் தொடர்பில் இருக்கவோ நான் முற்பட்டதில்லை. அது திரைத் துறையாகட்டும் அல்லது எழுத்துலகாகட்டும். எழுத்தாளர்கள் வருகிறார்களென்றால் அவர்கள் எழுதியதை வாசிக்காமல் புத்தகப் பெயர்களை மட்டும் தெரிந்துக் கொண்டு முக தாட்சண்யத்திற்காக இதை வாசித்தேன் அருமையென்று பொய்யாக பேசத் தெரியாது. ஜெமோ அமீரகம் வருகிறார் என்ற போதும் கூட அவருடைய எழுத்துக்களைத் தேடி வாசிக்கத் தோன்றியதில்லை. அமீரகத் தமிழ் மன்றத்திற்கு ஒருவரை விருந்தினராக அழைக்கும் போது அவரைப் பற்றிய பின்புலன்களை வாசித்துத் தெரிந்து கொள்வேன், அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை நல்லவிதமாகப் பேச வேண்டுமென்பதற்காக. ஜெமோ பற்றியும் அப்படித்தான் தெரிந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசி வரவேற்புரை நிகழ்த்தினேனே தவிர அவர் எழுத்துக்களை அதுவரை பெரிதாக நுகர்ந்ததில்லை. ஜெமோ இங்கு வந்திருந்த போது ஆற்றிய சொற்பொழிவு மிக அற்புதமாக அமைந்தது. சிவன் - பார்வதி தாயம் விளையாடும் ஓவியத்தின் பின் புலத்திலுள்ள கதையை விளக்கியதோடு அவர் பார்த்த, தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு அழகாகக் கடத்தத் தெரிந்த தொனியும் உடல்மொழியும் பேச்சுத் திறனும் இன்னும் என் கண் முன்னே நிறைந்திருக்கிறது. அதன் பிறகு அவர் எழுத்தை வாசிக்க முயற்சித்தேன். அவருடைய இணைய தளத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் மண்டையில் எதுவும் ஏறவில்லை. காரணம் மனத்தடையாகக் கூட இருந்திருக்கலாம். தெரியவில்லை. அவர் அண்ணாச்சிக்கு எழுதிய கடிதத்தை வாசித்த போது அவர் மீது மரியாதை சேர்ந்ததே தவிர அப்போதும் கூட அவர் எழுத்தைத் தேடத் தோன்றவில்லை.


கணவர் சென்னைக்குச் சென்றிந்த போது சாகித்ய அகாடமி விருது பெற்ற காரணத்திற்காக ஜோ.டி. குரூஸின் ’கொற்கை’ வாங்கி வரச் சொல்லியிருந்தேன். இவர்கள் சென்ற நேரத்தில் பனுவலில் ’கொற்கை’யில்லையென்று அங்கிருந்து என்னை தொலைபேசிய போது அண்ணாச்சி சொன்னதன் பேரில் ஜெமோவின் 'வெள்ளையானை', 'அறம்' மற்றும் சாரு எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருடைய புத்தகம் என்ன இருக்கிறது என்று கேட்டு வாங்கி வரச் சொல்லியிருந்தேன். சிவராமன் எழுதிய 'கர்ணனின் கவசம்' படித்துக் கொண்டிருந்ததால் வாங்கி வந்த புத்தகங்களைத் தொட்டும் பார்க்கவில்லை.

அண்ணாச்சி வீட்டுக்கு வரும் போதெல்லாம் 'அறம் வாசிச்சியா?' என்றே கேட்பார். 'பெரிய புத்தகம்ன்னாலே பீதியா இருக்கு, இத முடிச்சிட்டுத்தான் அத வாசிக்கனும்' என்றேன். பிறகு இன்னொரு தருணத்தில் ’அறம் தனித்தனி கதைகள் தானே அதை ஏன் இன்னும் தொடவில்லை?’யென்று கேட்க. 'அட அப்படியா? அதக் கூட பார்க்கலையே' என்றவுடன் கடுப்பாகிவிட்டார் அண்ணாச்சி.

நேற்றுதான் அறம் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதை 'அறம்' வீட்டில் பாதி வாசித்துவிட்டு கீழே வைக்க மனதில்லாமல் அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்று வாசித்து முடித்தேன். அலுவலகத்தில் சுற்றி ஆட்கள் இருந்தும் நிறுத்த முடியாத அளவிற்குத் தேம்புகிறேன் என்னையும் அறியாமல். நெருக்கமான சக ஊழியர் மட்டும் என்னிடத்தில் வந்து 'Is everything fine? Are you ok?' என்று கேட்டார். அதன் பின்னரே தன்னிலைக்குத் திரும்பியவளாக ஒன்றுமில்லையென்று விளக்கிவிட்டு மனதில் 'அறத்தை'யே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

'உண்மை மனிதர்களின் கதைகள்' என்றிருந்தது. அது மேலும் வலியை அதிகரித்தது. இது சாதாரண எழுத்தாகத் தோன்றவில்லை. எடுத்தோம் வாசித்தோம் வைத்தோம் என்றில்லாமல் அது மண்டைக்குள் சென்று தொண்டையை அடைக்க வைப்பது ஒரு சாதாரண எழுத்தால் முடியுமா என்ன? எதையோ யாருக்கோ எப்பவோ சொல்ல வேண்டுவதை தீர்க்கதரிசி போல உருமாறி அல்லது உருவெடுத்து எழுதியது போன்று தோன்றியது எனக்கு. கதையோட்டம் பிரமிக்க வைக்கிறது.

இந்தக் கதையில் சில வரிகள் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. சூடான அதிகமில்லாத காப்பியை ருசிப்பதை கூட 'பாய்ஞ்சு ஓடிட்டிருக்கிற பொண்ணை பாத்து ரசிக்கமுடியுமா? என்ன சொல்றேள்?’ என்று பெரியவர் சிரிக்க ‘குதிரைய ஓடுறப்ப மட்டும்தானே ரசிக்க முடியும்?' என்று எழுதிய அறிவுஜீவி சம்பாஷனைகளும், 'பொஸ்தக ஏவாரம் பன்றதுக்கு பொடலங்கா ஏவாரம் பண்ணலாம்னு சொல்றான். பொடலங்கா அழுகிரும்டா முட்டாள்' என்று 'அவர் கோளாம்பியை நோக்கி துப்பிவிட்டு' இப்படியான உள்குத்துகளும் மிக எளிமையாக போகிற போக்கில் நம்மை அழுத்திச் செல்கிற கதை.

ஒரு இடத்தில் இப்படி வரும் 'அத்தனை துயரம் நிறைந்த புன்னகையை சமீபத்தில் நான் கண்டதில்லை' அதை வாசிக்கும் போது எனக்கும் இத்தனை யதார்த்தம் நிறைந்த கதையை சமீபத்தில் எங்கும் வாசிக்கவில்லையென்றே தோன்றியது. மொத்தம் பன்னிரெண்டே கதைகள், சீக்கிரம் முடித்துவிட்டு மற்ற கதைகளைப் பற்றி எழுதுகிறேன். இனி ஜெமோவைத் தேடித் தேடி வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்குகிறது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.

சமீபகாலமாக 'ராயல்ட்டி' 'அறம்' என்று இணையத்தில் பிரளயமே ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பதிப்பகத்திற்காகப் பேசுபவர்கள் இந்தக் கதையைக் கண்டிப்பாகப் படித்திருப்பார்கள். எனக்கென்னவோ இந்த வரிகள் -- "கூட்டம் கூடிட்டுது. 'முதலாளி சொல்றதுதானே நியாயம், என்ன இருந்தாலும் ஏழு வருசமா சோறுபோட்ட தெய்வம்ல அவரு?"ங்கிறாங்க என்ற கூட்டமே இணையத்தில் அதிகம் ஒலிப்பதாக தோன்றியது. இந்தக் கதையை நீங்கள் வாசிக்கவில்லையென்றால் வாசித்துவிடுங்கள். என் கருத்தோடு இசைவீர்கள்.

Monday, January 06, 2014

பொய்மையில்லா வாய்மை - About Elly | Darbareye Elly


'அபவ்ட் எல்லி' விமர்சனம் மூலமாக மற்றவர்களை பார்க்கத் தூண்ட வைக்கும் எண்ணத்தில் எழுதியதல்ல. திரைப்பட விமர்சனங்களை முன் வைக்கும் போது எழுதுபவர்கள் தான் இரசித்ததை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள அல்லது தனக்கு புரிந்ததைச் சொல்லி மற்றவர்களை பார்க்கச் செய்து சரி பார்த்துக் கொள்ளவென்று எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் என்னுடைய காரணங்களாவது மறக்க முடியாத காட்சிகளை பத்திரப்படுத்துவதற்கான தளம்.
வாழ்க்கையில் யாரையாவது தொலைத்துவிட்டு தேடியது உண்டா? என் நெருங்கிய தோழி தன் பெற்றோரை பத்து வருடத்திற்கு முன்பு தொலைத்துவிட்டு கணவருடன் துபாயில் வாழ்ந்து வந்தாள். மறைக்க நினைத்த விஷயத்தை ஏதேச்சையாக என்னிடம் கூற, எப்படி உன்னால் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் நிம்மதியாக வாழ முடிகிறது என்று வாளைத் தூக்கிக் கொண்டு கண்டுபிடிக்க கிளம்பி, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் ஒரு தனி நபரை கண்டுபிடிப்பது வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம் ஒரு குடும்பத்தை அதுவும் கிருஸ்தவ குடும்பத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாகவே இருந்தது. காரணம் கிருஸ்தவர்கள் தாங்கள் வழிபடும் தேவாலயத்தோடு முறையான தகவலுடன் தொடர்பில் இருப்பார்கள், இவர்களும் அப்படி இருக்கவே கண்டுபிடித்து இரு குடும்பத்தையும் இணைத்து ஆனந்தத்தில் அவர்கள் திளைப்பதைக் காண அலாதியாக இருந்தது. ஆமாம் அந்த ‘தொலைந்த’ கதையை தொடர்பில்லாமல் இங்கு ஏன் பதிகிறேன்? தொடர்பில்லாமல் இருக்குமா? 'அபவ்ட் எல்லி' -- திரைப்படத்திலும் தொலைத்துவிட்டு தேடும் சம்பவம் என் மனதைவிட்டு அகலாமல் இன்றும் இருக்கிறது.

இந்தப் படத்தை தேடிபிடித்து பார்ப்பதற்கான காரணம் இயக்குனர் 'அஸ்கர் ஃபர்ஹதி'. இஸ்லாமியர்களை வைத்தோ, இஸ்லாமிய கதாபாத்திரம் படைத்தாலோ ஏதாவது ஒரு வகையில் சிக்கல் 'விஸ்வரூபம்' எடுத்துவிடும். ஆனால் ஈரான் நாட்டில் இருந்துக் கொண்டு இப்படியான பாத்திரப்படைப்புகளை கையாள்வதற்கு அசாத்திய தன்னம்பிக்கையும், தக்க கவனமும், எங்கும் எதிலும் தவறு நேராத வண்ணம் கையாளும் நேர்த்தியும் வேண்டும். அப்படி திறம்பட திரைக்கதையை செதுக்கியிருக்கும் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதிக்கு சபாஷ் போட வேண்டும். இல்லை ’சபாஷ்’ என்பது சாதாரண ஆட்களுக்கு போடுவது இப்படி தனித்துவம் மிகுந்த இவருக்கு அதே வார்த்தையை பயன்படுத்த விருப்பமில்லை வேறு நல்ல வார்த்தையைத் தேடிப் போட்டுவிடுவோம்.

’எ செப்பரேஷனில்’ நடித்த சில தெரிந்த முகங்கள் இந்த படத்திலும் நடித்துள்ளனர். மாற்றிச் சொல்கிறேனோ? இந்த படத்தில் நடித்தவர்கள் ‘எ செப்பரேஷனிலும்’ நடித்துள்ளனர். இந்த படம் 2009-லேயே வந்து விட்டது. ‘எ செப்பரேஷன்’ மீது மையல் வந்ததும் அது அந்த இயக்குனர் மீதும் வந்து அவரது மற்ற வெற்றிப் படங்களை தேடிப் பார்த்ததில் இதுவும் பிடித்து மையல் கூடிவிட்டது. :-) இவருடைய படங்களான 'அபவ்ட் எல்லி', 'எ செப்பரேஷன்', 'தி பாஸ்ட்' இந்த மூன்று படங்களுமே 'பொய்யை' மையமாக வைத்து செதுக்கப்பட்ட படங்கள். 'பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று வள்ளுவர் அழகாகச் சொல்லியதற்கு மாறாகப் 'பொய்' வாய்மைக்கு நேரெதிரானது. விளையாட்டாகச் சொல்லும் பொய்யும் வினையாக முடியும் என்று பொய்யின் வலிமையை அழுத்தமாகப் பதியவைக்கிறார் இயக்குனர்.

இளவேனில் அல்லது குளிர்காலத்தின் வார இறுதிகளில் அதுவும் இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை வந்துவிட்டால் எங்கேயாவது நெடும் பயணம் போயே ஆக வேண்டும் என்பது துபாயில் எழுதப்படாத சட்டம். சாப்பாடு, விரிப்பு, நாற்காலி, தண்ணீர், திசுத்தாள் முக்கியமாக 'பார்பிக்கியூ' செய்யத் தேவையானவையை எடுத்துக் கொண்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு நெடும் பயணம் சென்று, அங்கு சேர்ந்து உட்கார்ந்து ஒரு படப்பெயரை கையசைத்து நடித்துக் காட்டி கண்டுபிடிக்கும் விளையாட்டு என்று இப்படியான நெடும்பயணத்திற்கான விளையாட்டுகளை விளையாடி, கொண்டு வந்த சாப்பாட்டைப் பிரித்து, பார்பிக்கியூ செய்து சுடச்சுட சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்துவிடுவோம். "இதை வீட்டிலோ அல்லது துபாயிலேயே ஒரு பூங்காவில் செய்யலாமே" என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. இது துபாய் மக்களின் வழக்கமென்று நினைத்திருந்தேன் ஆனால் அதைத்தான் தெஹ்ரானிலும் செய்கிறார்கள்.

இந்தப் படத்தில் அச்சு அசலாக இப்படியான காட்சி இடம்பெற்றுள்ளது. விடுமுறை நாட்களுக்காக நகரத்தைவிட்டு தொலைவில் வந்து கடற்கரையோரத்தில் இருக்கும் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுக்கிறார்கள். இடத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்யாததால் விலையை கூட்டி சொல்பவரிடம் எல்லியும் அஹ்மத்தும் புதுமணத் தம்பதிகள் அவர்களுக்காகவே இங்கு வந்துள்ளோம் என்று ஒரு கதையை கிளப்பிவிட்டு வாடகைக்கு இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் எல்லி அந்தக் குடும்பத்தாருக்கு எந்தச் சம்பந்தமுமில்லாதவள். அவள் செப்பிடேவின் குழந்தைகளின் பகுதிநேர ஆசிரியர் அவ்வளவே. திருமணமுறிவின் காரணமாக ஜெர்மனியிலிருந்து அஹ்மத் தெஹ்ரானுக்கு வந்துவிடவும், எல்லியைப் பார்த்தவுடன் தன் நண்பன் அஹ்மத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பாளென்று நினைத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்படுத்த அல்லது ஒருவரையொருவர் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றே எல்லியை இந்தச் சுற்றுலாவிற்கு ஒருநாள் மட்டுமே என்று பொய் சொல்லி அழைத்து வருகிறாள் செப்பிடே. செப்பிடேவைத் தவிர எல்லி யாருக்குமே அறிமுகமில்லாத அழகான பெண். வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திலேயே எல்லோரின் மனதையும் அள்ளிச் செல்கிறாள் எல்லி. அஹ்மத்- எல்லியின் திருமணத்தைப் பற்றி எல்லி அறையில் இல்லாத நேரத்தில் கிண்டலடித்துப் பேசி நகைக்கின்றனர். அதை ஏதோ புரிந்து கொண்டவளாக தர்மசங்கட நிலையில் தவிப்புடன் கூடிய நிலையில் இருக்கிறாள் எல்லி. வந்த இரண்டாவது நாள் காலையே செப்பிடேவிடம் தான் வீட்டுக்குப் போயே ஆக வேண்டுமென்று கேட்கிறாள் எல்லி. வீட்டில் தன்னைத் தேடுவார்கள் என்கிறாள். ஆனால் செப்பிடேவோ கடற்கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை எல்லியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியில் செல்கிறாள். தான் வந்த பிறகு மற்றவற்றைப் பேசிக்கொள்ளலாமென்று எல்லியின் கைப்பையையும் ஒளித்துவைத்துவிட்டு சென்று திரும்பி வரும் செப்பிடேவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. எல்லியைக் காணவில்லை.

ஒரு இஸ்லாமியப் பெண் தெரியாத ஆண்களுடன் ஒரு இரவு தங்கிவிட்டது தெரிந்தாலும், அவள் பொய் சொல்லி சுற்றுலா வந்திருப்பது தெரிந்தாலும் அவள் வீட்டில் அவள் மீது தீராத அவச்சொல் வருமே... அவள் வீட்டாரிடம் என்ன தகவல் சொல்வது? என்று செப்பிடே சொன்ன ஒரு பொய்யின் விளைவால் ஏற்படும் அடுக்கடுக்கான சிக்கல்களும் கேள்விகளும் என்று நகர்கிறது காட்சிகள்.

எப்படிதான் இயக்குனர் ஃபர்ஹதியால் மட்டும் அவர் திரைப்படத்தைப் பார்க்கும் போது நம்மையும் ஒரு அங்கமாக்கிட விட முடிகிறதென்றே தெரியவில்லை. இந்தப் படத்தை பார்க்கும் போது குடும்ப நண்பர்கள் அடிக்கும் லூட்டியில் நாமும் ஐக்கியமாகிவிடுகிறோம். அவர்கள் விளையாடும் போது நாமும் சேர்ந்தே விளையாடுகிறோம். எல்லியைக் காணவில்லையென்றதும் செப்பிடேவைப் போல் நாமும் தவிக்கிறோம் அவளுக்கு ஒன்றுமாகியிருக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறோம். எல்லிக்கு அவச்சொல் ஏற்படும் போது, 'இல்லை அவள் மிகவும் நல்லவள்' என்று நாமும் சேர்ந்தே சாட்சி சொல்கிறோம். இப்படியாக நம்முள் ஒருவளாக கதாபாத்திரத்தை வாழ வைத்திருப்பதோடு ஒரு குழும நடிகர்களை முறையான சரியான கட்டுப்பாட்டோடு கையாண்டு தன்னுடைய வேறுபட்ட சிந்தனையை உறுதிப்படுத்தியுள்ளார் ஃப்ர்ஹதி. கதாபாத்திர தேர்வுகளும் அவர்களின் தத்ரூப நடிப்பும், ஒருவர் முக அசைவும் கண்களும் எதிரிலுள்ள காட்சிகள் துயரமானதா, தேடலா, தவிப்பா, கோபமா, எரிச்சலா, கையாலாகாத்தனமா என்று சொல்லிவிடுமளவுக்கு ஒவ்வொரு நடிகரிலிருந்தும் அவர்களின் அத்தனை உறுப்புகளையும் ஒருசேர நடிக்க வைத்துள்ளார். பெரியவர்களைத் தத்ரூபமாக நடிக்க வைப்பதையாவது ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் குழந்தைகளையும் எப்படித்தான் இயக்குனர் இவ்வளவு அழகாகக் கையாள முடிகிறதோ தெரியவில்லை. குழந்தைகளிடம் பொதுவாக நாம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி விசாரிக்கும் போது அதன் வீரியம் புரியாமல் குழந்தை அலட்சியமாகப் பதில் சொல்லும் போது இயல்பாக பொறுமை இழந்து நமக்கு எழும் கோபத்தையும் குழந்தையின் அந்த அலட்சியப் போக்கையும் துல்லியமாகப் பதிவாக்கியுள்ளார். குழந்தைகளிடம் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுத் தரும் நாமே பொய் சொல்ல வேண்டாம் 'தெரியாது' என்று உண்மையை மறைக்கக் கற்றுத் தருவதையும் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஒரு உண்மையின் தேடலின் போது பொய்யைத்தான் கேடயமாக்கிக் கொள்கிறோம் என்ற உண்மையை இயல்பாகச் சொல்லியுள்ளது இத்திரைப்படம். இந்த ஒரு படத்தை வைத்து மட்டும் ஈரானிய வாழ்வியலையும் கலாச்சாரத்தை, பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் தன்மையையும் எடை போட்டு விட முடியாதென்றாலும் குற்றச்சாட்டுக்களை சுய நியாயப்படுத்துதல், பொய்களின் வீரியத்தை உணர்த்துதல், நெறிமுறையின் சவால்களை லாவகமாகக் கையாளுதல், காட்சிகளை வித்தியாசமாக அடுக்கி புரியவைத்தல் அதோடு சஸ்பென்ஸ் எஸன்சையும் சேர்த்து சுவையான ஒரு உயர் ரகப் படத்தை தந்து மனதில் நீங்காத வலியையும் அழுத்தமான சிந்தனையையும் தூண்ட வைக்கும் படம். ஒரு வகையான ஈர்ப்புடைய உளவியல் சார்ந்த படமென்றால் மிகையில்லை. ஆஸ்கர் வரை சென்று எட்டிப்பார்த்துவிட்டு வெற்றி பெறாமல் வந்தப் படமென்றாலும், இந்தப் படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைக்காமலில்லை. இப்படத்தை பார்த்து பல மாதங்களாகிட்டாலும் இன்னும் அதன் பாதிப்புகள் என்னுள் பதிந்தே கிடக்கிறது.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி