நம்மைப் போல் ஒருவன்


இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.

1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் நாட்டின் நாடாளுமன்றத் தாக்குதல், மும்பாய் குண்டுவெடிப்பு சம்பவங்கள், கோவை குண்டுவெடிப்பு அதிர்வு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், குஜராத் வன்முறை இப்படி நாம் கடந்து போன தீவிரவாத செயல்களை நாம் மறந்தே விட்டோம். ”மறதி ஒரு தேசிய வியாதியாகிவிட்டது” என்ற குற்றச்சாட்டை பிரதானப்படுத்தி, தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வென்ற சீற்றத்துடன் கிளம்பிய என்னைப் போல் உங்களைப் போல் ஒரு பொதுமக்களில் ஒருவனே ‘உன்னைப் போல் ஒருவன்’.

இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தைத் தமிழ் ஊடகம் தள்ளி நின்றே வேடிக்கை பார்க்கும். தனக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தமிழ்நாடு தனி நாடு போல அது ஒரு அமைதிப்பூங்கா என்று சொல்லிக் கொண்டு அந்தத் தீவிரவாத நிகழ்வில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்று மட்டுமே கணக்கில் கொள்ளும் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இது என்ன பெரிய விஷயம் நம் தமிழ் சகோதரர்கள் கோடிக் கணக்கில் ஈழத்தில் உயிரிழந்த போதே நீலிக் கண்ணீரை மட்டுமே வடிக்க முடிந்த நமக்கு இதெல்லாம் சகஜம்தானே?

காவல்துறையின் கடமையில் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகளைக் குறித்தும், அதனால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் வெளிச்சம் போடும் இயக்குனர் சக்ரி டொலெட்டிக்கு இது தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கமலின் தலையீடுகளே அதிகம் வெளிப்படுகிறது.

மிகவும் கூர்மையான வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதாக வசனங்கள் தொணித்தாலும் மிகவும் நெருடலாக இருப்பது ஆங்கிலக் கலப்பு. நிகழ்வில் ஆங்கிலத்தையே உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டவர்களை யதார்த்தமாகக் காட்ட முயன்றிருந்தாலும் பாமரர்களுக்கும் போய் சேர வேண்டுமென்ற எண்ணமில்லாத வசனங்களை வடித்திருக்கிறார் இரா. முருகன். ஒரு காட்சியில் மலையாளியான கமிஷனர் மாரார் (மோகன்லால்) அதிகாரி சேதுவுக்கு (பரத்ரெட்டி) தமிழ் கற்றுத் தருவதாக காட்டும் போது கூடவா இடரவில்லை இவர்களுக்கு? ’பைனரியில்’ சொல் என்று கேட்கப்படுவது எத்தனை பேருக்குப் புரியப் போகுதோ! தலைமை செகரட்டரியாக வரும் லக்ஷ்மி தஸ்புஸ் என்று சரளமாக ஆங்கிலத்தில் கமிஷ்னரிடம் பேசும் காட்சியும் அதிலிருக்கும் மெல்லிய நகைச்சுவையும் எத்தனை பேர் இரசிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. திரையரங்கிற்கு அதிக அளவில் சென்று படம் பார்ப்பது மாணவர்கள்தான், அவர்களே ‘என்னப்பா படம் ஒரே பீட்டரா’ இருக்கு என்று சொல்லிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

என்னதான் எந்த மதத்திற்கும் ஆதரவில்லாதவராகவும், பெயர்களில் கூட கவனமாகக் கையாண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ’முஜே ஃபக்கர் ஹே’ (நான் பெருமைப்படுகிறேன்) என்று மார்தட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளை முஸ்லிமாகவும் தனது மார்க்கத்திற்காக அப்படி செய்வதாகவும் தேவையற்ற வசனங்களைப் புகுத்தியவர் ஒரு ஹிந்து தீவிரவாதி மட்டும் மிகவும் அப்பாவியாக ‘முஜே பக்கர் நஹி ஹே’ (எனக்குப் பெருமை இல்லை) என்று தான் அறியாமல் செய்த தவறாக ஒப்புதல் அளிப்பது இவர்களின் முகமூடியைக் கிழிக்கிறது. நான் அசலான ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காததால் கிழிந்தது இவர்கள் முகமூடியா அல்லது அசலிலும் அப்படித்தான் வருமா என்பது தெரியவில்லை.

குஜராத் கலவரத்தில் ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசிய கொடூரத்தை இரண்டு சொட்டு கண்ணீரால் நிரப்புகிறார் கமல். அதுவும் அந்தக் காட்சி ஏதோ இந்த படத்தில் கமலின் நடிப்புக்கு பஞ்சம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒரு சொருகல் போல் தெரிகிறதே தவிர மனதை அழுத்தும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியாகப்படவில்லை.

என்னதான் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவர் நேர்மையும் சந்தேகத்திற்குட்படுகிறது, கேள்விக்குள்ளாகிறது என்பதை அழகாக நிரூபிக்கும் யதார்த்த காட்சி - கமிஷ்னர் மாரார் அதிகாரி ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும் என்று சொல்வது. ஆரிஃபாக வரும் கணேஷ் வெங்கட்ராமனை ‘அபியும் நானும்’ படத்திலேயே மிகவும் பிடித்துப் போனது எனக்கு. அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்பு, தெளிவான துடிப்பான முகம். கொடுத்த பாத்திரத்தில் அம்சமாகப் பொருந்தியிருக்கிறார்கள் இவரும் சேதுவாக வரும் பரத்ரெட்டியும். இவர் கதாபாத்திரம் மட்டுமல்லாது படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் குறிப்பாக
* தலைமை செக்ரட்டரியாக வரும் லக்ஷ்மி அந்த கிழடுதட்டிய முகத்தையும் கிளோஸப்பில் காட்டும் போது பயமுறுத்தாதவர்,
* நம் பதிவுலகத்திற்கு மிகவும் தேவைப்படும் மின்னஞ்சல் திருடர் (hacker) ஆனந்த் - இவர் சிறு வயதில் ’மே மாதம்’, ’அஞ்சலி’ படங்களில் நடித்தவர் ஆள் உயரமாகியிருக்கிறார் தவிர முகம் இன்னும் அதே குழந்தை முகமாக அவரை காட்டிக் கொடுக்கிறது
* நத்தாஷா ராஜ்குமாராக வரும் அனுஜா ஐயர் - துணிச்சலான பெண்மணியென்று காட்டவா சிகரெட்டை பற்ற வைத்திருக்கிறார்கள்? கொடுமை.
இப்படியாக ஒவ்வொருவரும் தன் பங்கை மிக அற்புதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன்- மோகன்லால் என்ற இரண்டு இமயத்தின் நடிப்பை விவரிக்கத் தேவையில்லை. இருவரும் கடைசிக் காட்சியில் கைக்குலுக்கிக் கொள்வது ஒருவருக்கொருவர் நடிப்புக்கு சபாஷ் சொல்வதாகத் தோன்றியது. ’டைட்டில் கார்டில்’ இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.

படத்தில் மறக்க முடியாத ஒன்று அந்த முதல் காட்சி. விஜய் இரசிகர்கள் கண்டிப்பாக அதிருப்தி அடைய வைக்கும் அந்தக் காட்சியை விஜ்யின் நண்பர் ஸ்ரீமன் செய்தது மிகவும் சிறப்பு.

படத்தின் பலம் காட்சியமைப்புகள் அதிலும் மனோஜ் சோனியின் கேமிரா தேவையானதை மட்டும் கச்சிதமாக படம்பிடித்திருக்கிறது. அடுத்து என்னவென்ற எதிர்பார்ப்பை தூண்டும் விறுவிறுப்பை கொண்டு வரவே தேவையில்லாதவற்றை நெருக்கமாக நறுக்கிவிட்டிருக்கிறார் ராமேஷ்வர் பகத். காவல்துறையினரின் தினசரி நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்கள், அதில் ஊடகங்கள் ஆதாயம் தேடும் பாங்கு, ஆட்சித்துறையின் குடைச்சல் என்ற கலவை, நகலாக இருந்தாலும் அசத்தியிருக்கிறார்கள். பாடல்கள் இல்லாமல் அழகான பின்னிசையில் விளையாடியிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ‘பேஷ்’.

இந்தப் படத்தின் வெளியீட்டை இரத்து செய்ய வேண்டுமென்ற ’பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து, மூன்றரை கோடி வங்கி உத்தரவாதம் அல்லது சொத்து ஆவணம் தாக்கல் என்ற அடிப்படையில் வலியுடன் பிரசவித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ காட்டமான விஷயத்தை மிகவும் மென்மையாக்கி நமக்குள் செலுத்தும் முயற்சியை மட்டும் மேற்கொண்டிருந்தால் சர்ச்சைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க விரும்புபவர்கள் சண்டைக்காட்சியில்லை, பாடல்களில்லை என்று புலம்பினாலும் வசனங்களில் நகைச்சுவை கலந்து காட்சியில் விறுவிறுப்பு சேர்த்திருப்பதால் பொழுதுபோக்கு பிரதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காமல் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. நானும் ‘எ வெட்னெஸ்டே’ பார்க்கவில்லை, சில கசப்புகளை மீறி எனக்கும் படம் பிடித்திருக்கிறது. இன்னும் நிறைய குறுகிய கால அளவு படங்கள் வந்து நம் நேரத்தை காப்பாற்ற வேண்டும்.

விளையாட்டாக விவசாயம்


முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் போட்டுக்கிட்டே இருந்தேன். நண்பர் சுபைரும் என்னை பக்கத்து தோட்டக்காரனா ஆக்கிக்கோங்கன்னு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். என் அக்கா மகன் வேறு ஒரு கோழி அனுப்பி வைத்தான். ஆஹா இதுக்கு மேல தாங்காது எல்லோரும் பரிசு அனுப்பிக்கிட்டே இருக்காங்கன்னா ஏதாவது விஷயமிருக்குமென்று போய் பார்த்தேன். பார்த்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு விவசாய விளையாட்டுன்னு. பொதுவா எனக்கு ஏதாவது ஒரு கணினி விளையாட்டு பிடிச்சிருந்தா விளையாடி விளையாடி கொஞ்ச நாள் பைத்தியமா இருப்பேன். அப்புறம் அந்த சீசன் முடிந்த பிறகு அடுத்த கணினி விளையாட்டு அல்லது வேறு பொழுதுபோக்குன்னு தொடரும். பொழுதை போக்கும் விதம் நேரமில்லாவிட்டாலும் மூச்சு முட்டும் அளவுக்கு அலுவல் வேலையிருக்கும் நேரம் எரிச்சல் ததும்பும் போது இளைப்பாறும் நிழல் ஒரு வகையான மாற்றம்தான் நமக்கு இந்த முகப்புத்தம் விளையாட்டெல்லாம்.

நான் விவசாய விளையாட்டுன்னு குறிப்பிட்டது ‘ஃபார்ம் வைல்’ (Farm Ville) பற்றி தான். முகப்புத்தகத்தில் இருப்பவர்கள் எனக்கு தெரிந்து அத்தனை பேரும் இதனை ருசிப்பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். பொதுவாக கணினி விளையாட்டு நம்மை மீண்டும் மீண்டும் விளையாட தூண்டும் நம் மனதில் குறிக்கும் இலக்கை எட்டும் வரை. சில வகை விளையாட்டின் மீது கிறுக்காகவே மாறுவோம். அப்படித்தான் நான் ஸ்கிராம்பிலில் கிடந்தேன். தூக்கத்தில் கூட இந்த வார்த்தை அந்த வார்த்தை என்று நினைத்து கோட்டை கட்டுவேன். கை பரபரக்கும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட தூண்டும், பொறுமை இழக்கவும் செய்யும் ஆனால் இந்த விவசாய விளையாட்டு மிகவும் மாறுபட்டது, நமக்கு பொறுமையையும் கற்பிக்கிறது என்றால் மிகையாகாது. நமக்கு தந்த நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டும், விதைக்க வேண்டும். விதை தேர்வு நம்முடையதே. ஒவ்வொரு விதைக்கும் கால அவகாசமுண்டு. விதையை வாங்கும் போது பணம் செலுத்த வேண்டும். மகசூலை உரிய நேரத்தில் அறுவடை செய்யவேண்டும் யாருடைய உத்தரவிற்கும் காத்திராமல், இல்லாவிட்டால் காய்ந்துவிடும் என்று நம் அரசாங்கத்திற்கு தெரியாத விஷயங்களெல்லாம் கணினி விளையாட்டுக்கு கூட தெரிந்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் பக்கத்து தோட்டத்தை பார்த்து காக்கா விரட்டினால், குப்பையள்ளிப் போட்டால், புல்லுருவி நீக்கினால் நமக்கு பொற்காசு வழங்கப்படுகிறது. நல்ல மகசூல் (மகசூல் என்பது ஒரு அரபி வார்த்தை) கிடைத்தால் அதற்கும் பாராட்டி பொற்காசுகள். இந்த நடைமுறை போல உண்மையாக இருந்தால் நம் நாட்டு விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து நாடும் நலம் பெருமில்லையா?

இந்த விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு விதைநெல்லுக்கும் நமக்கு கொடுக்கப்படும் குறுகியக் காலகட்டத்தில் காத்திருக்க கடினமாக இருக்கும் நேரத்தில், கண்டிப்பாக விளையாடும் ஒவ்வொருவரும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியும், துயரங்களை பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் கொஞ்சமாவது யோசிப்பார்கள் கவலை கொள்வார்கள் என்பது உறுதி. விளையாட்டில் கூட விவசாய விளைபொருட்களில் விலை அதிகமாகவே இருக்கிறது.

உண்மையில் விவசாய விளைபொருட்களின் தேவை எப்போதுமிருக்க அதன் விலை உயர்வுக்கு காரணமென்ன? இவர்கள் விளைச்சலுக்கு ஏன் வேறு நபர் விலை நிர்ணயிக்கிறார்கள்? பருத்தி பயிரீட்டின் நஷ்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நமக்கெல்லாம் வெறும் செய்தியாகவே இருந்திருக்கிறது. இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதுதான் யார்? விவசாயிகளுக்கு விளையவில்லையென்றாலும் இழப்பு, அதிக அளவில் எல்லோருக்கும் ஒரே விதமாக அதிகமாக விளைந்துவிட்டாலும் விலை சரிவு என்றாலும் பேரிழப்பு. அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்கள் வாழ்க்கை அமைவதேயில்லை என்பது பெரிய சோகம். என் நண்பர் ஒருவர் உர மருந்து வியாபாரியாக இருந்து பிறகு அந்தத் தொழிலின் துரோகத்தை உணர்ந்து கைவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியென்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான் உர வியாபாரிகளுடையதாம் நோயையும் உண்டாக்கி மருந்தையும் விற்பனை செய்வார்களாம். என்ன கொடுமை!

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்த மடலில் பூச்சிக் கொல்லி மருந்தை அந்த பகுதி மக்கள் சுவாசிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்கியிருந்தது. மருந்தை சுவாசிப்பதனாலேயே பிரச்சனையென்றால் அந்த விளைச்சலை சாப்பிடுபவர்களுக்கு என்ன நேரும்? வெளிநாட்டில் செய்ய முடியாத அபாய ஆராய்ச்சிகளை அந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து தந்திரமாக நமது நாட்டிற்கு யோசனைகளை அனுப்பி சோதனைகளை மேற்கொள்கிறார்கள். நம் மக்கள் உயிர் வழக்கம் போல் அவர்களுக்கு வெறும் மயிர் என்பதால்.

விவசாயிகளும் கூட்டுறவு சங்கமென்றெல்லாம் வைத்திருந்தாலும் அதன் மூலம் பால் பிரச்சனை ஓய்ந்ததே தவிர கரும்பு சாகுபடியாளர்களோ, பருத்தி பயிரீட்டாளரோ பயன் பெறவில்லை. இந்த விஷயத்தையெல்லாம் எல்லா வகையான ஊடகங்களும் கட்டம் கட்டி காசு பார்த்து நகர்ந்துவிட்டதே தவிர தீர்வை எதிர்பார்த்து யாரும் செயல்படுவதில்லை என்பது துரதிஷ்டமே. நான் மட்டும் எழுதி கிழித்து ஏதெனும் தீர்வு வந்துவிட போகிறதா என்ன? நம்முடைய பல வகையான கையாலாகாத்தனத்தில் மற்றொன்று.

ஒருவேளை நம்ம அரசியல்வாதிங்க இந்த விவசாய விளையாட்டு விளையாடினால் திருந்துவார்களோ? ம்ஹும் விளையாட்டையே மாற்றியமைக்க உத்தரவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. சரி, நீங்க Farm Ville விளையாடினால் மறக்காமல் எனக்கு பரிசு அனுப்பிவிடுங்கள்.

குறையேதுமில்லை


புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி
வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்

மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்
மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி
மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்

அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்
அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று
அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்

உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
உலுக்கி பெறுகின்றாய்
உகந்ததை தரவே செய்கின்றேன்
உள்ளம் ஒன்றாமல்

எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்
உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்
பிடிக்காமல் போனாலும்

சொல்லத்தான் செய்கிறோம்
ஒன்றாய் வாழ்கிறோமென்று

எல்லாம் யாருக்காக?


என் வயதொத்த
பிள்ளைகள்
கனவின் நடுவிலிருக்க
நான் நித்திரை விட்டு
குளிர் நடுக்கத்தில்
முக்காடில் நுழைந்து
மதரஸா விரைந்தேன்
புரியாத அரபி கற்க
அம்மம்மா மெச்சுதலுக்காக.

அழைப்பு விடுத்தவுடன்
கண்ணாமூச்சியில்
கண்கட்டவும் மறந்து
புரியாமல் மனனம் செய்த
பாடங்களை ஒப்பித்தபடி
தொழுதேன்
அன்புடன் அணைத்துக் கொள்ளும்
அப்பாவுக்காக

விதவிதமான ஆடையில்
தோழிகள்
பள்ளி விழாவிற்கு
பவனி வர
வெதும்பிய மனதை
ஹிஜாபில் ஒளித்தேன்
பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்
அம்மாவுக்காக

விவரம் தெரியாத வயது ஓய்ந்து
பொருள் புரியாத மொழி
புலப்பட்டதும்
அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவுக்காக அல்ல
ஒழுக்கத்தை விரும்பும்
இறைவா எல்லாம்
உனக்காகவென்று.

இதென்ன கப்பிங் கலாட்டா?

'கப்பிங்' பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம்.

மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் என்று எது பலன் தருகிறதோ அதனை மனிதன் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப பின்பற்றிச் சென்றிருக்கிறான். சிகிச்சையும் மருந்துகளும் வித்தியாசப்பட்டாலும் அதன் இறுதி வடிவம் குணமடைவதாக இருந்தால் அதைக் கையாளுவதில் எவருக்கும் தயக்கமிருக்காது. அதன் அடிப்படையில் வழிபடுதல், நம்பிக்கை என்பதையும் கூட அந்தக் காலத்தில் மருந்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். தீக்காயத்திற்கு நெருப்பு வைத்தியம் என்ற முறை கூட இருந்திருக்கிறது.

தாவரங்கள், வேர்கள், பறவை, விலங்கு, வருடி பிடித்து விடுதல், சூடு, சிரிப்பு என்று எதையுமே நாம் விட்டு வைக்கவில்லை மருந்தாக்க. பறவையின் கூட்டை தலைவலி நிவாரணியாக, ஒரு வகை எலியின் பல்லை கழுத்தில் கட்டிக் கொண்டால் பல் வலி நீங்கும் என்ற நம்பிக்கை வைத்தியமாக, எலியின் தோலை முகர்ந்தால் கடும் தடுமலும் ஓடிவிடுமென்ற மருத்துவம் இப்படி பலவகையான நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் இருந்தே வந்திருக்கிறது. சில வகை வைத்தியத்தைத் தவிர மற்றதெல்லாம் விஞ்ஞானம் விரிவு பெற ஒவ்வொன்றாக அழிந்தும் இருந்திருக்கிறது.

ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யுனானி போன்றவைகளை தீவிரமாக இன்றும் நம்பத்தான் செய்கிறோம். என்ன, அலோபதியாட்கள் ஹோமியோபதி மருத்துவம் பெறுபவர் மாட்டுவண்டியில் பயணிப்பவர் என்றும் அலோபதியே வேக வைத்திய விமோசகரென்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இப்படியான வரிசையில் இப்போது ‘கப்பிங்’ வலுவாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சையுமில்லை, செலவும் குறைவாம்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று கண்ணதாசன் பாடினார். உண்மையில் ஒரு கோப்பையில் என் ஆரோக்கியம் என்று கப்பிங் முறையால் திருப்தியடைபவர்கள் பாடத் தொடங்கியுள்ளனர். 3000 ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவம் நுரையீரல் பாதிப்பு, இரத்த அழுத்தம், நெஞ்சு சளி, முதுகு வலி போன்றவற்றின் நிவாரணி. வியாதிஸ்தர்களைப் படுக்க வைத்து ஒரு சிறிய கண்ணாடி அல்லது மூங்கிலான கோப்பையை வெறுமையாக்கி அதாவது அதிலுள்ள பிராணவாயுவான ஆக்சிஜனை எரித்து அந்த கோப்பையை சூடாக்கி, தோள்பட்டைக்குக் கீழ் பகுதி அல்லது முதுகின் கீழ் பகுதியில் கவிழ்த்துவிட்டாலே போதும் நம் உடலில் உள்ள நஞ்சை அப்படியே நீக்கிவிடுமாம்.

எலும்புகளால் நரம்பால் தோலாலான நம் உடலில் நான்கு வகையான திரவமுள்ளது அவை இரத்தம் (Blood), கொழுமை சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile). கடைசியில் குறிப்பிட்ட கரும்பித்தமே நஞ்சுத்தன்மையை உண்டாக்கி நம் உடல்கேட்டிற்கும், இயலாமைக்கும் காரணியாகிறது. ஒரு கப்பில் சுமார் 10- 15 மிமி நஞ்சு வெளியாகுமாம். அந்த நஞ்சை நீக்கும் போது அந்த இடத்தில் நல்ல இரத்தம் ஊறுவதால் உடல்நலக் குறைவு சீர் பெறுகிறதாம். சிகிச்சைக்குப் பிறகு கொஞ்ச நேரம் அப்படியே படுத்த நிலையில் இருக்க வேண்டுமாம். நெஞ்சு சளி, நுரையீரல் பிரச்சனை வைத்தியத்திற்காக நஞ்சை விலக்கியிருந்தால் உடனே கம்பளியால் நோயாளிகளைச் சுற்றி குறைந்த உஷ்ணத்திற்கு உடன் மாற்றிவிட வேண்டுமாம்.

கப்பிங் முறை சாதாரண விஷயம்தான் ஆனால் இதனை கைதேர்ந்த பயிற்சி பெற்ற மருத்துவர்களே செய்ய முடியுமாம். அதனால் உங்கள் மீது சோதனை செய்தவற்காக பயிற்சி பெறாத யாரும் அழைத்தால் 'ரிஸ்கெடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி'யென்று போய் விட வேண்டாம். அப்புறம் முக்கியமான இன்னொரு விஷயம் இந்த கப்பிங்கின் போது நஞ்சு நீங்கும் போது வலியிருக்காது ஆனால் உறிஞ்சிய இடத்தில் இரத்தம் கட்டியது போல் வடு ஏற்படும், எப்படி அட்டை உறிஞ்சிவிட்ட இடத்தில் சிகப்பாக இருக்குமோ அந்த மாதிரி. அந்த வடு கூட சில நாட்களில் மறைந்துவிடுமென்று சொல்கிறார்கள். `கப்` பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவமென்பதால் `கப்பிங்` என்ற பெயர் வந்தது என்று சின்னக் குழந்தைகளும் சொல்லிவிடும்.

இந்த கப்பிங் முறையின் பிறப்பிடம் எகிப்து. அதன் பின்னர் அதனை முழுமையாக இன்னும் சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். கப்பிங் மருத்துவ முறையை அரபியில் ஹிஜாமா என்று சொல்கிறார்கள். ஹிஜாமா என்ற பதம் ஹிஜாம் அதாவது உறிஞ்சுதல் என்று அரபியில் பொருட்படும். ஹிஜாமா மருத்துவம் சிறப்பு என்று நபிகள் முகமது (ஸல்) குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறதாம் அல் புகாரி 10/139. அதனால் இது இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்று தவறான புரிதல் கொள்ள வேண்டாம். கிவ்யினெத் பால்த்ரோ (Gwyneth Paltrow) என்ற ஹாலிவுட் நடிகைக்கு பல பேர் விசிறியென்றால் அவர் கப்பிங் மருத்துவ முறையின் விசிறியாம். சில வருடத்திற்கு முன்பு நடந்த நியூயார்க் படவிழாவில் அவர் முதுகில் தடயங்களுடன் வந்ததை பார்த்து கேள்விக்கணை தொடுக்கவே அவர் இதைப் பற்றி விளக்கியுள்ளார். அமீரகத்தில் ஷார்ஜாவில் இதற்கான மருத்துவர் இருப்பதாக `கல்ப் நியூஸ்` சொல்லியது மருத்துவக் குறிப்பு செய்தியோடு.

மருத்துவம் விஞ்ஞானம் என்று வளர்ந்தாலும் தினம் தினம் புது நோய்களும் உருவாகவே செய்கிறது. மருந்துகளும் சிக்கிச்சைகளும் வியாதிகளின் பாதிப்புகளையும் வலிகளையும் தள்ளிப் போட முடியுமே தவிர இழப்பையும் இறப்பையும் அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உயரே பறக்கும் காற்றாடி....

"இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது" என்று வாழ்வியல் விஷயங்களிலிருந்து விண்ணில் விடும் காத்தாடி வரை பற்றி பேசும் ஒரு நண்பராக, ஆசானாக, பாதுகாப்பாளனாக மகன் அமீரின் நலனுக்காகவே உயிர்வாழும் நல்ல தந்தைதான் ஆக்ஹா. இவர் ஆப்கானிஸ்தான் முல்லாக்களின் கையிலிருந்து வதைபட விரும்பாது சுதந்திர வாழ்வை தேடி, ரஷ்யாவை சபித்துக் கொண்டே பாகிஸ்தான் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல சரக்குந்தில் பயணம். வழியில் வண்டியை சோதனைக்காக நிறுத்தும் காவலாளி வண்டியில் இருக்கும் பெண்ணை 5 நிமிடம் அவருடன் ஒதுங்க கேட்டதைப் பொறுக்க முடியாமல் கொதித்து போகும் ஆக்ஹா மறுத்துப் பேசி வாதாடுகிறார். யாரோ ஒருவருக்காக நெஞ்சை நிமிர்த்தி குண்டை ஏந்தத் தயாராக இருக்கும் தந்தைக்கு நேர் எதிர் ஆமிர். தன் உயிர் தோழன் ஹஸன் அடிவாங்குவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்து உதவ முடியாத கோழை. ஆனால் ஆமிருக்கு ஏதேனும் ஒன்று என்றால் தன் உண்டி வில்லால் ஓங்கி விரட்டுவான் ஹஸன், ஆமிரின் வெற்றியைக் காண 'காத்தாடி'யை இயக்க உதவுவான், வானத்தையே பார்க்காமல் ஆமிரின் கையசைவுகளை வைத்தே காத்தாடியின் திசையையறிந்து காத்தாடி பந்தயத்தில் வெற்றியடைய உதவுவான், பந்தயத்தில் வென்ற காத்தாடி வரும் திசையறிந்து எடுத்து வரக் காத்திருப்பான். ஹஸாரா இனத்தைச் சேர்ந்த ஹஸனைக் கண்டாலே வெறுப்பை கக்கும் பஷ்தூன் இனத்தை சேர்ந்த ஆசெப் மற்றும் அவனது நண்பர்கள் ஆமிரை ஹஸனைவிட்டு விலகியிருக்க எச்சரித்ததோடு ஹஸன் தனியாக மாட்டும் போது அவனிடம் தகாத முறையிலும் நடந்துக் கொள்கிறார்கள். நண்பனைக் காப்பாற்ற முடியாத கோழை ஆமிர் ஹஸனை தற்காத்துக் கொள்ள முடியாத கோழையென்று தூற்றி ஒதுக்குவதோடு தன் குற்றவுணர்ச்சியை மறைக்க நண்பன் ஹஸன் மீது களவுக் குற்றத்தை சுமத்திப் பிரிகிறார்கள் சிறுவர்களாக.

கம்யூனிசக் கொள்கைகளையும், இஸ்லாம் மதத்தைத் தவறாக புரிந்துக் கொள்ளும் முல்லாக்களையும் விமர்சிக்கும் ஆக்ஹா தன் மகன் தனக்காகவே போராட முடியாதவனாக இருக்கிறானே இவன் பிறருக்காக எப்படி தட்டிக்கேட்பான் என்று அவர் நண்பர் ரஹீம்கானிடம் வருத்தப்படும் போது ’குழந்தைகள் வண்ணம்தீட்டும் புத்தகமல்ல தேர்ந்த வண்ணத்தை தீட்ட அவர்கள் இயல்பிலேயே விட்டுவிட வேண்டும். அவன் உன்னை மாதிரி இல்லாவிட்டாலும் அவன் விருப்பப்படி நல்ல கதையாசிரியராவான்’ என்ற நம்பிக்கைகேற்ப காலிபோர்னியாவில் எழுத்தாளராகிவிடுகிறான் ஆமிர். சிறிய வயதில் அவன் எழுதிய கதைகளை விரும்பிக் கேட்பவர்கள் ரஹீம்கான் மற்றும் ஹஸன் மட்டும்தான். ஆமிர் எழுதிய கதையை பாராட்டி ரஹீம்கான் அனுப்பும் கடிதத்தை மகிழ்ந்து படிக்க, ஹஸன் அந்தக் கதையின் விபரத்தை வினவுவான். ”ஒரு மாயக் கோப்பையில் கண்ணீர் சிந்தினால், கண்ணீர் முத்தாகிவிடும் கதையின் முடிவில் ஒரு முத்து மலைக்குவியலின் கீழ் கதைநாயகன் மனைவியைக் கொன்ற இரத்தக் கறையுடன்” என்று சொல்லும் போது ஹஸன் அப்பாவியாக ”கண்ணீர் வர ஏன் மனைவியைக் கொல்ல வேண்டும் ஒரு வெங்காயத்தை அவன் வெட்டினால் என்ன?” என்று கேட்கும் காட்சி நமக்கு புன்சிரிப்பை வரவழைக்காமல் இல்லை.


காலித் ஹுசைனியின் முதல் புதினமான ’தி கைட் ரன்னரை’த் தழுவி 2007 இல் அதே பெயரில் வெளிவந்த படம். கதையென்று பார்த்தால் இரு நண்பர்களான ஆமிர்- ஹசன் சிறு வயதில் பிரிந்து பின்பு ஹஸன் தன் தந்தைக்கும் ஹஸாரா இனத்தை சேர்ந்த வேலைக்காரிக்கும் பிறந்தவன் என்பதை அறிந்ததும் அவனை ஏற்க மனம் விரும்புகிறது. அதுவும் தன் வீட்டைக் காக்க தன் உயிரையும் தாலிபானரிடம் இழக்கிறான் என்று அறிந்து வேதனையடையும் ஆமிர் தன் கோழைத்தனத்தைத் துறந்து அவனுக்குக் கைம்மாறு செய்யும் வகையில் ஹஸனின் மகன் சோராபை தாலிபானிடமிருந்து மீட்பதே கதை.

ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, ரஷ்யப்படை ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, ஆக்ஹா ரஷ்யாவை வெறுக்கும் காரணம், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், தாலிபானின் அட்டூழியம் என்று சில விஷயங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் விளக்கியது படத்தை என்னுடன் சேர்ந்து பார்த்த ஆசிப் மீரான். உலக சினிமாக்களை உலகம் தெரிந்தவர்களுடன் உட்கார்ந்து பார்ப்பதின் சிறப்பு இதுதான்.

ஆமிர் காபுல் செல்லும் போது மத ரீதியில் அங்கு நடக்கும் கொடுமைகளும் அட்டூழியங்களும் பார்க்கும் போது இப்படியும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா என்ற பிரம்மிப்போடு மன அழுத்தத்தையும் தருகிறது. குறிப்பாக ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணை அவள் கற்பில்லாதவள் என்று குற்றம் சாட்டி, குற்றம் புரிந்த ஆண்- பெண் இருவரையும் முகத்தை மூடி ஒரு பொதுமக்கள் கூடியிருக்கும் அரங்கிற்குக் கொண்டு வந்து. இஸ்லாம் மத ஞானமேயில்லாத ஞானசூனியங்கள் மதகுருவாக ‘இறைவனுக்கெதிராகக் குற்றம் புரிந்த இந்தப் பெண்ணை கல்லால அடித்துக் கொல்வோம்’ என்று ஆணையிட எல்லோரும் தவறு செய்த இருபாலரில் அந்த பெண்ணை மட்டும் கல்லால் அடித்துக் கொல்லும் கொடூரத்தை சகிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மதகுரு அநாதை விடுதியில் இருக்கும் பெண் குழந்தைகளை இரகசியமாக கூட்டிச் செல்பவன். இது போன்ற உண்மைச் சம்பவங்கள் உலகில் நடக்கத்தான் செய்கிறது. மனித உரிமைக் குரல்கள் அங்கு ஒலிக்க விடுவதில்லை. மதமென்று மதம் பிடித்துத் திரிபவர்கள் சுத்த 'சூஃபி'களாக நடித்துக் கொண்டு பெண்களைப் பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்துவதே மதத்திற்குப் புறம்பானது என்று உணராதவர்கள்.

தந்தையும் மகனும் கனமான மனதுடன் புலம்பெயர்கையில் மகன் நினைவுக் கொள்ளும் ரூமியின் கவிதை (நம்ம நாகூர் ரூமியல்ல இவர் பாரசீக கவிஞர்), ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சை அள்ளியது. மொழியாக்கத்தில் தவறிழைப்பேன் என்பதால் அப்படியே:

If we come to sleep We are His drowsy ones.
And if we come to wake We are in His hands.
If we come to weeping, We are His cloud full of raindrops.
And if we come to laughing, We are His lightning in that moment.
If we come to anger and battle, It is the reflection of His wrath.
And if we come to peace and pardon, It is the reflection of His love.
Who are we in this complicated world?

ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டாம் பட்டம் விடும் விளையாட்டு. அந்த விருப்பத்தை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள் அதுவும் ஒவ்வொரு குழந்தையும் பட்டம்விடும் போது காட்டும் உற்சாகமும் அவர்களின் முகபாவங்களும் ஆர்வமும் நமக்கும் பட்டம் விடும் ஆசையை தூண்டுகிறது. சின்ன வயதில் என் தம்பியுடன் விட்ட முதல் பட்டம், மாஞ்சா செய்கிறேன் பேர்வழியென்று என் தம்பி நாய் கழிவை தேடிப் போய் அடி வாங்கிய சம்பவம், ’நெத்தியடி’ படத்தில் பட்டத்திற்காக முதல் காட்சியில் ஓடுவது, ‘கேளடி கண்மணி’ படத்தில் மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை விடுவித்து ஜனகராஜ் இறக்கும் காட்சி, என்று என்னையுமறியாமல் பட்டம் தொடர்பான சம்பவங்கள் வந்துகொண்டே இருந்தது.

பார்க்கும் எல்லாருக்கும் இந்தப் படம் பிடித்துப் போகுமென்று சொல்ல முடியாது. ‘இந்தப் படத்தில் என்ன சொல்ல வராங்க’ என்று கேட்பவர்களெல்லாம் தயவு செய்து இந்தப் படத்தை பார்த்துவிட்டு என்னை திட்டிக் கொண்டு இருக்க வேண்டாம். படத்தில் காட்சி அமைப்புகள் அருமை, படத்தைப் பார்த்த பிறகு பஷ்தூன் யார், ஹஸாரா இனத்தவர்களின் சரித்திர வேர் என்று வேண்டியவைகளை 'விக்கி'யை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.

மகன் சோராப் சுதந்திர ஆப்கானிஸ்தானில் வளர வேண்டும். ஓடித் திரிந்த தெருக்களைக் காண ஆமிர் வர வேண்டும். வண்ணப் பூக்கள் ஆப்கானிஸ்தான் சாலையெங்கும் பூக்கவேண்டும். மீண்டும் வானில் பட்டங்கள் உயர வேண்டுமென்பதே ஹஸனின் கனவு என்று ஆமிருக்கு எழுதுவார். ஹஸனுக்கு மட்டுமல்ல ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த பலருக்கும் இந்தக் கனவிருக்கும். படத்தின் முடிவில் வானத்தை நோக்கிப் பறக்கும் பட்டத்தைப் போல் சிறுவன் சோராப் மன இறுக்கத்திலிருந்து வெளிவருகிறான் என்று என்னால் நிம்மதி பெருமூச்சை விட முடியவில்லை. ஆப்கானிஸ்தான் என்ற சாப பூமியிலிருந்து ஒரு சோராப் காப்பாற்றப்பட்டுவிட்டான் ஆனால் மற்றவர்கள் என்ற வருத்தம் தொக்கி நிற்கிறது.

வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!

அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை.

நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் கிண்டலாகவும் கேலியாகவும் மட்டுமே பார்ப்பார்கள். அந்தக் கேலியின் உச்சமாக என்னை எனக்குப் பிடித்தமான அடையார் ‘ஷேக்ஸ் என்ட் கிரீம்ஸுக்கு’ அழைத்துச் சென்று எனக்குப் பிடித்த பனிக்கூழ்களை நான் பார்க்க அவர்கள் சாப்பிட்டு, என் சுய கட்டுப்பாட்டை நான் இழந்து, நோன்பை முறித்துக் கொள்வேனா என்று பரிசோனை செய்வார்கள். எதற்கும் அசராதிருந்த என்னைக் கண்டும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் 'இதெல்லாம் பெரிய கட்டுப்பாடில்லை' என்று விட்டுவிட்டார்கள். உலகத்தில் பல்வேறு பகுதியில் ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் இருக்கும் போது பட்டினி கிடப்பது மட்டும் எப்படி சுய கட்டுபாடாக இருக்க முடியும் என்பதே இவர்களது கேள்வி.

கட்டுப்பாடு என்பது என்ன? நாயைக் கூடத்தான் உணவில்லாமல் கட்டிப்போடலாம். அது குரைக்கும், சோர்ந்து போகும், கோபப்படும் அருகில் சென்றால் கடிக்கவும் செய்யும். இப்படிக் கட்டிப்போட்டு கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமலான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுய கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்த பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாக கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.

’ஒருவர் நபிகள் பெருமானாரிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்கலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், தாராளமாக நோன்பு நோற்கலாம். ”நான் பிறந்ததும் ஒரு திங்கள் கிழமை எனக்கு நபித்துவம் கிடைத்ததும் ஒரு திங்கள் கிழமை” என்று கூறினார்கள்’ என்பதைப் படித்ததிலிருந்து திங்கட்கிழமைகளில் நோன்பு வைக்க முற்பட்டேன். இடைப்பட்ட சில காலம் அந்த நோன்புகளை மறந்தே இருந்த வேளையில் இந்த வருடம் ரமலான் வரவிருக்கிறது என்பதால் போன வருடம் விடுபட்ட நோன்பை எல்லோரும் பிடிக்க ஆயத்தமாகும் போது நானும் என் திங்கட்கிழமை நோன்பை ஜூன் மாதக் கடைசியில் ஆரம்பித்தேன். முதல் திங்கள் ஒன்றும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக் திங்கள் தவறியது. இந்த ஜூலை மாத 20 ஆம் தேதி வைத்த நோன்பு என்னை மட்டுமல்ல எங்கள் வீட்டில் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. காரணம் இது கோடையின் உக்கிரமென்பதால் கிட்டத்தட்ட 17 மணி நேரம் ஆகாரம் தண்ணீரில்லாமல் மிகவும் தவிப்பாக இருந்தது. பொதுவாக ஒரு மாதம் தொடர்ச்சியாக நோன்பு இருப்போம். முதல் பத்து தவழ்ந்தாலும் அடுத்த பத்து நடக்க ஆரம்பித்து கடைசி பத்து ஓடிவிடும். ஆனால் இப்படி இடைப்பட்ட ஒருநாள் பயிற்சி மிகவும் கடினம் என்பதை உணர்ந்ததோடு ’நோன்பு திறக்கும் வேளையில் ஏற்படும் மகிழ்வு’ என்று படித்திருக்கிறேன், அதில் என்ன மகிழ்வு என்று யோசித்த விஷயம் தவித்த அன்றுதான் புலப்பட்டது.

அலுவலகத்தில் கேட்டார்கள் ’இதில் என்ன பெரிய விஷயம் காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறாய்’ என்று. கேட்பது சுலபம் காலையில் 4 மணிக்கு முன்பாக எழுந்து சாப்பிடுவது என்றால் எவ்வளவு கடினம், அதுவும் தண்ணீரை ஒருநாளுக்கு தேவையான அளவா உடலில் பதுக்கி வைக்க முடியும்? நாங்கள் என்ன ஒட்டகமா? காலையில் எழுந்து சாப்பிடவும் முடியாது. நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்ற உண்மையை அனுபவித்தால் தான் தெரியும். இந்த வருடம் ரமதானும் இனி வரப்போகும் 3-4 வருட ரமதானும் கோடையிலேயே வரவிருப்பதால் அமீரகத்திலிருந்து நோன்பு நோற்பவர்களுக்கு பெரிய சவாலாக இருக்குமென்றே தோன்றுகிறது. ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதை பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

ரமதானை எப்படி சுலபமாக்குவது என்னென்ன சாப்பிடுவது என்ற மடல்கள் வரத் தொடங்கிவிட்டது. நபியவர்கள் ரமலானைப் போன்றே ஷாபானிலும் அதிக நோன்பு வைத்துள்ளார்கள். அதனாலாவது ரமதானுக்கு முன்பே ஷாபானில் நோன்பு வைத்து பழகிக் கொள்வோம்.

தொலைபேசியில் வந்த ஆபத்து: 'Phone Booth'

நம்முடைய செயல்களில் மலிந்து கிடக்கும் பொய்களும் குற்றங்களும் யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை என்ற அலட்சியப் போக்கினாலேயே தவறுகள் தொடர்கின்றன. ஆனால் திடீரென ஒருவர் நம்மை நிறுத்தி நீ செய்யும் தவறுகளும் திருட்டுத்தனங்களும் எனக்குத் தெரியும், ஒரு வாய்ப்பு தருகிறேன் அதனை நீயே ஒப்புக்கொள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து மிரட்டுபவர்க்கு தேவையானதைத் தந்து வாயடைத்துவிடலாம், எதிர்பார்ப்பேயில்லாத ஒருவருக்கு? நம் இரகசியத்தைத் தெரிந்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், தண்டிக்க நினைப்பவர் இந்த தகுதிகளெல்லாம் கடவுளுடன் பொருந்திப் போனாலும் அதைப் பரம்பொருளாகப் பார்க்கவும் முடியாமல், குற்றங்களை ஒப்புக் கொள்ளவும் இயலாமல், இருந்த இடத்தை விட்டு நகரவும் முடியாத சூழலில்தான் மாட்டிக் கொள்கிறார் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரல்.ஒரு பொதுத் தொலைபேசியின் மணி அடிக்கிறது, அது யாராகவும் இருக்கலாம் அந்த அழைப்பு யாருக்காகவும் இருக்கலாம். இருப்பினும் அதனை எடுத்து பேசத் தோன்றுகிறது. அப்படித் தோன்றிய தூண்டிலில் தான் மாட்டிக் கொள்கிறான் கதாநாயகன் ஸ்டூ.

கதாநாயகன்? ஒரு திரைப்படத்தில் நல்லவனாக வருபவர் கதாநாயகனா அல்லது அதிக காட்சியில் வருபவர் கதாநாயகனா? நல்லவர் கதாநாயகனென்றால் அழைப்பிற்கு மறுமுனையில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தகாரர் கீஃபர் சுதர்லாண்ட்டை கதாநாயகன் என்று சொல்லலாம். அதிகக் காட்சியில் வருபவர் கதாநாயகனென்றால் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரலாகவும் இருக்கலாம், அந்தத் தொலைபேசியாகவும் இருக்கலாம்.

குறிபார்த்து சுடுவதில் வல்லுனரான கீஃபரின் தூண்டிலில் மாட்டிக் கொண்டு ஃபாரல் தவிக்கும் தவிப்பே முழுப் படமும். ஆரம்பத்தில் கீஃபரின் மிரட்டலுக்கு அலட்சியம் காட்டும் ஃபாரல் பின்பு ஒவ்வொரு காட்சியிலும் வேறுபடுத்திக் காட்டும் உடல் மொழியும் அவர் முக அசைவுகளும், கண்களில் மட்டுமே நமக்கு காட்டும் பயம், கோபம், தவிப்பு என ஆயிர உணர்வுகளும் நம்மை திரைப்படத்தை விட்டு நகரச் செய்யாமல் இறுக்கிவிடுகிறது. இருக்கையின் நுனியில் அமர்ந்து நகம் கடிக்க வைக்கும் படமாக இல்லாவிட்டாலும், விறுவிறுப்பான திரைக்கதையும் காட்சியமைப்புகளும் ஒருவித திகில் உணர்வைக் கிளறிவிடுகிறது. குறிப்பாக கீஃபரின் குரல் வளம் ஃபாரலை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது.

’காதலியா? மனைவியா? மனைவியை காதலிக்கிறாயென்றால் காதலியெதற்கு?’ என்று உலுக்கும் கேள்விகளை அடுக்கி ஃபாரலின் உள்ளுணர்வுகளை தோலுரித்து அம்பலமாக்கி சோதனைக்குள்ளாக்கும் போது தன்னிலை உணர்ந்து கூனிக்குறுகி புழுவாகத் துடித்து தன் தவற்றை ஒத்துக் கொண்டு ஃபாரல் அழும் காட்சி நேர்த்தி. எதிர்பார்க்கவே முடியாத காட்சி நகர்வுகள். ’அடுத்து என்ன?’ என்ற போக்கிலேயே நேரம் போவதே அறியாமல் படம் முடிகிறது.

திரைப்படத்தின் கதைக் களம் நியூயார்க் நகரத் தெருவிலுள்ள ஒரு தொலைபேசிக் கூண்டு மட்டும் தான். அதில் ஃபாரல்- கீஃபர் இருவருக்கு இடையிலான சுவாரஸ்ய உரையாடலை அதுவும் இருவரில் ஒருவரின் முகத்தை காட்டாமலேயே படம் முழுக்க அதே தெரு அதே பொதுத் தொலைபேசி கூண்டை மட்டும் வைத்து இப்படியான ஒரு அசாத்திய கதையை வடித்துள்ள லாரி கோஹனுக்கும் அதை அழகாக இயக்கியுள்ள ஜோயல் ஷூமாக்கருக்கும் ஒரு சபாஷ் சொல்லியாக வேண்டும்.

ஹீரோயிஸம், அரை மணிநேரத்திற்கு ஒரு பாட்டு, வெளிநாட்டு காட்சியமைப்பு, கவர்ச்சி நடிகை, பறந்து அடிக்கு சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் கதையை மட்டும் வலுவாக்கினால் வெற்றி நிச்சயம் என்பதன் சாட்சியே ’ஃபோன் பூத்’ திரைப்படம். இந்த மாதிரியான நல்ல படங்களை பார்த்து முடித்த பிறகு எப்போது தமிழில் இப்படியான படங்கள் வருமென்ற எண்ணமே மேலோங்குகிறது.

இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!

சுத்தம் சுகாதாரம்னு நான் ரொம்பவே பார்ப்பேன். யாராவது எச்சில் செய்து தந்தப் பண்டத்தைக் கூட சாப்பிட மாட்டேன். அது எங்க அம்மாவானாலும் சரி தோழிகளானாலும் சரி. ஆனால் நான் அம்மாவாகிய பிறகு கொஞ்சம் மாறியிருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். இந்த காரணத்தினாலேயே நான் உணவகத்திற்கு சென்று சாப்பிட ரொம்பவே யோசிப்பேன். நல்ல உணவகமா, சுத்தமா வைத்திருக்கிறார்களா, பரிமாறுபவர்கள் சுத்தமா இருக்கிறார்களா, தட்டை ஒழுங்கா கழுவியிருக்காங்களான்னு முடிந்த வரைக்கும் கவனிப்பேன். என்னை வீட்டில் ‘ஒஸ்வாஸி’ன்னு சொல்வாங்க. இந்த ‘ஒஸ்வாஸி’ என்ற வார்த்தையை நெல்லை இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள்னு நினைக்கிறேன். ஊரிலிருந்த வரைக்கும் அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியலை. ஆனால் இங்க வந்த பிறகு அது ஒரு அரபி வார்த்தை - பயத்தால் தவிர்ப்பது என்று பொருளென்று தெரிஞ்சிக்கிட்டேன். சரி, இது மொழி ஆராய்ச்சிக்கான பதிவில்லை, வந்த வழியே பயந்து ஓடிடாதீங்க. ஆமா எங்க விட்டேன், ம்ம் உணவகத்தில் சுத்தம் பார்ப்பது, என்னத்த தான் சுத்தம் பார்த்தாலும் சில சமயங்களில் மாட்டுவது நாமளாத்தான் இருக்கும். சென்னைக்கு சென்றிருந்த போது தி.நகர் ‘முருகன் இட்லிக் கடை’க்கு போயிருந்தோம். சாப்பிடும் போது அக்காவுக்கு ஏதோ தென்பட சொல்லாமல் மறைத்துவிட்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு “யாரும் கோபப்படாதீங்க, என் உணவில் இது இருந்தது” என்று காட்டினாள். பார்த்தவுடனே எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. உணவிலிருந்தது நகம் அதுவும் கை நகம் மாதிரி தெரியலைங்க கால் கட்டவிரல் நகம் மாதிரி பெரியதாக. உவ்வே! நினைச்சாலே இன்னும் குமட்டுது. எனக்கு பயங்கர கோபம் என்னை எல்லோரும் பொறுமையாக இருக்க சொல்லிட்டு, உணவகத்தவர்கள் அசிங்கப்பட்டுவிட கூடாதென்றும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் சகூஜப்படக் கூடாதென்றும் மெதுவாக அந்த பணம் செலுத்துமிடத்தில் இருந்தவரிடம் விஷயத்தைச் சொல்ல அவர் மேலாளரை அழைத்தார், வந்தவர் பார்த்துவிட்டு அவர் எந்த உணர்ச்சியுமில்லாதவராக ”ஆமாங்க நகம்தான். சாரி, என்ன செய்ய சொல்றீங்க”ன்னு என்னவோ தினம் நடக்கும் விஷயம் போல சர்வ சாதாரணமாக கேட்டுக் கொண்டார். உடனே அக்கா ”இதுவே துபாயாக இருந்தால் உங்க உணவகத்தை அடைத்து சீல் வைத்திருப்பார்கள். நல்ல உணவகமென்று வந்தோம் இனி யாரையும் இங்கு வர சிபாரிசு செய்ய மாட்டோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி: அபுதாபி ’எமிரெட்ஸ் பாலஸ்’ உணவகத்தில் தலைமை சமையற்காரருக்கு ரூ. 1104000/- (US$ 27,000) அபராதமாம். எதற்கு தெரியுமா அபுதாபி நகராட்சியர்கள் உணவகத்தை பரிசோதனை செய்ய செல்லும் போது குளிர் சாதனப்பெட்டியில் காலாவதியான தயிர் இருந்ததாம். இதற்கு விசாரனை, காவல், அபராதமெல்லாமும். இத்தனைக்கும் அந்த தயிரை யாருக்கும் பரிமாறவில்லை வெறும் குளிர் சாதனப்பெட்டியில் இருந்ததற்கு மட்டுமே இந்த அபராதம். போன மாதம் ஒரு சைனீஸ் உணவகத்தின் உணவை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு அமீரகத்தில் எல்லா உணவகத்தையும் சோதனை செய்து நகராட்சியின் கட்டளைகளுக்கும் சுத்த தரத்திற்கும் ஈடில்லாத சுமார் ஆயிரத்திற்கும் மேலான ஷார்ஜாவிலுள்ள உணவகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டாவது முறை சோதனைக்கு செல்லும் போதும் அவ்வாறே இருந்தால் உணவகத்திற்கு சீல் வைக்கும் அபாயமும் உள்ளதால் எல்லோரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம். எனவே உணவகம் நடத்துபவர்கள் கூடுமானவரை சுத்தமாக உணவக்த்தை வைத்துக் கொள்வதில் முனைப்பாயிருக்கிறார்கள்

போன வருடம் எங்கள் வீட்டுக்கு அருகே வழக்கமாக வாங்குமிடத்தில் ‘பெப்பர் சிக்கன்’ வாங்க விட்டோம். சாப்பிடும் போது அதில் ஒரு இறைச்சி துண்டு இருந்தது. நாங்கள் சிக்கன், இறைச்சி எல்லாமும் சாப்பிடுபவர்கள் தான் இருந்தாலும் சிக்கனில் இறைச்சி வந்தால் அது உணவகத்தின் கவனக்குறைவை குறிப்பதால் உணவகத்தை அழைத்து விஷயத்தை சொல்லி இனி இவ்வாறு நிகழலாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஒரு ஐந்து நிமிடத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பார்த்தால் உணவகத்திலிருந்து ‘பெப்பர் சிக்கன்’ மற்றும் ‘பட்டர் நான்’ அதுவும் இலவசமாக. வேண்டாம் சாப்பிட்டு முடித்துவிட்டோம் வீணாகிவிடும் எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்திய பிறகு எடுத்து சென்றார்கள். வாடிக்கையாளர் திருப்தி என்பதை விட எங்கே ஏதாவ்து புகார் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் அதன் மூலம் உணவகத்தை மூட வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சமுமே இதற்குக் காரணம் எனலாம். இந்த உணவக்ங்களை நடத்துபவர்களும் இந்தியர்கள்தான்.

சட்டங்கள் எல்லா இடத்திலும் தான் இருக்கிறது. ஆனால் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்யும்போதோ அல்லது அதன் கடுமைக்குப் பயந்து மட்டுமோதான் தவறுகள் திருத்தப்படுகிறது.

இங்கே நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் எப்போது தாயகத்திலும் முறையாக செயல்படத் துவங்கும்?

அழகான ‘கையெழுத்து’


They are providing us with the last meal
They would kill when the night is about to end
We shouldn't be there to die with pain when the sun rises
My dear love let's kill each other in this dark

அவசரமாக கடைசி உணவை பரிமாறினார்கள்
அந்த இரவு முடியும் முன் நம் உயிரை பறிக்க
வலியால் துடித்து சாக நாம் இருக்க கூடாது சூரியன் எழும்பும் முன்
என் பிரியமானவளே இந்த இருளிலேயே நாம் நம்மை முடித்து கொள்வோம்

ஆங்கிலத்தில் கீழே ஓடும் துணையெழுத்துக்களை பிடித்துக் கொண்டே படம் பார்த்து புரிந்துக் கொண்ட மலையாளப் படம் 'கையொப்பு' அதில் நான் புரிந்து கொண்ட கவிதையின் மொழிபெயர்ப்புதான் மேலே. இந்த படத்தில் மிக சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்வு. இதில் பாலசந்திரனாக மம்முட்டி, பத்மாவாக குஷ்பு, சிவதாஸனாக முகேஷ்.

பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது நம் உதடுகளுக்கு முன்பே அந்த உற்சாக மொழியை கண்கள் பேசிவிடும். இப்படி விருப்பத்தை விட்டுச் செல்லும் சுவடுகளை மிக நெருக்கமானவர்கள் கவனித்துவிடுவதால் மிகுந்த அடக்கமாக பேசுவது இயல்பென்றாலும் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பேசிவிட்டால் யூகமே வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அப்படித்தான் தனக்கு பிடித்தமான பாலனை குறித்து பத்மா பேசுகையில் அதுவும் பாலன் எழுதிய கவிதை பற்றி பேசுகையில் அவள் காட்டும் ஆர்வத்தை கவனித்த சிவதாஸன் அந்த செய்தியை பாலனிடம் கடத்தி அவரையே உயிர்ப்பிக்கிறார்.

பாலசந்திரன்- மனிதாபிமானி, தலைக்கனமில்லாத மெல்லிய உணர்வுள்ள கூறிய சிந்தனையுள்ள புத்திஜீவி மலையாள எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதில் காதல் கொண்ட கிளிப்பாட்டு பதிப்பகத்தின் உரிமையாளர் சிவதாஸன் அவரை எழுதி முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் வெற்று தாளைப் போல மனத்தடையில் இருந்து மீள விரும்பாதவராக ஆர்வம் காட்ட மறுக்கிறார் பாலசந்திரன். இந்த இயல்பு நம் பதிவுலகில் தினம் தென்படும் ஒன்றுதானே. எழுத நேரமின்மை, சோம்பல், நேரமிருந்தும் ஆர்வமிருந்தும் 'எழுதியென்ன' என்ற அலட்சியம் இப்படி ஒவ்வொருவருக்கும் எழுதாமைக்கு ஒவ்வொரு காரணங்கள். அதை போலவே தான் பாலனுக்கும். ஆனால் தொலைத்த காதலி கிடைத்த பிடிமான மகிழ்ச்சியில் முழு மூச்சாக முடிக்கிறார் குறிக்கோள் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த நாவலை.

'நட்பாக இருந்த உறவை தாண்டிவிட்டது எங்கள் உறவு, நீ தான் புரிந்துக் கொண்டு உதவ வேண்டும், விலக வேண்டும்' என்று கணவன் ஸ்ரீ வெளிப்படையாக மனைவி பத்மாவிடம் சொல்லும் சம்பவம், கணவரையும்- அவர் தோழியையும் குறித்து பத்மா ‘made for each other' என்று சொல்வதான காட்சிகள் ஹிந்திப் படத்தில் பார்த்ததுண்டு, மலையாளப் படத்தில் எனக்கு இதுதான் முதல் முறை. தென் இந்தியர்களென்றால் கலாசாரம், ஒழுக்கம், பண்பாடு என்று பேசிக் கொண்டு சமுதாயத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டு, கணவர் தவறான பாதையில் செல்ல முழுக்க மனைவிதான் காரணம் போன்ற வகைறாக்களையே படமாக, கதையாக வடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியான காட்சிகள் எனக்குப் புதியதுதான்.

முதிர்ந்த மனிதர்களின் கவிதையான விரசமில்லாத மெல்லிய காதலை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ரஞ்சித். விலாசத்தைக் கொடு 'மை லைஃபை' அனுப்பி வைக்கிறேன் என்ற வசனம் பாலச்சந்தரை நினைவுப்படுத்தியது. இங்கு வசனம் அம்பிகாசுதன். பாடல் அதிகமில்லை என்பதற்காக இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு வேலையில்லை என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் பின்னணியில் வரும் ரம்யமான இசைதான் காட்சிகளுக்கான பலமெனலாம். ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ரஞ்சித் கதாபாத்திரங்களை வடித்திருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றால் மிகையாகாது. மிகக் கவனமாக இந்த சுபாவமுள்ளவர் இப்படியான சூழலில் இவ்வாறே நடந்து கொள்வார் என்று அந்த கதாபாத்திரத்தின் நிலையில் நின்றே ஒவ்வொரு காட்சியையும் கதையையும் அமைத்திருக்கிறார் எனலாம். சொல்லாமலேயே விளங்கும் நடிப்பு திறன் கொண்ட மம்மூட்டியைப் பற்றி எழுத அவசியமேயில்லை, அவருக்கு இது 300வது படம். இப்படத்திற்காக குஷ்புவுக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதும் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரவே தாமதமாக படத்தைக் குறித்த என் பார்வை .

அமைதியான நல்ல மனநிலையோடு பார்க்க வேண்டிய நல்ல படம். அன்பே சிவம் என்று உணர்த்தும் மற்றொரு படம். இதே படத்தை குறும்படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோவென்று தோன்றியது. சர்வதேச படவிழாவில் திரையிட்ட இரண்டு மலையாளப் படங்களில் ‘கையொப்பும்’ ஒன்று. இந்தப் படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு ஆனால் இதே படம் தமிழில் வந்தால் கண்டிப்பாக ஓடாது என்பது என் யூகம்.

Slumdog Millionaire - என் பார்வையில்

இறைவனின் மிகச் சிறந்த படைப்பில் ஒன்றுதான் நம்முடைய மூளை. எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கும் போது, கேட்கும் போது, இரசிக்கும் போது, உணரும் போது அது தொடர்புடைய எல்லா விஷயங்களும் பதிந்துவிடுகிறது - மனித மூளையில். அந்தப் பதிவின் பிரதிபலிப்பே நம் நினைவுகள்.

அப்படிப்பட்ட நினைவுகளில் தங்கிவிட்ட விஷயங்களிலிருந்து தனக்குத் தேவைப்படும் பதில்களை தேடியெடுத்து கேட்ட கேள்விகளுக்கு, படிக்காத கீழ்மட்டத்திலிருக்கும் இளைஞன் சரியான பதில்களைத் தந்து அசத்தியதை ஒப்புக் கொள்ள முடியாத 'மில்லியனர்' நிகழ்ச்சி நடத்துனர்
அந்த இளைஞனை காவலாளிகளிடம் ஒப்படைத்து அவர்கள் உலுக்கி எடுக்கும் போது அந்த சந்தேக முடிச்சுகள் வலியுடன் அவிழ்வதாக விரிகிறது 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படம்.

பத்தே பத்து கேள்வியில் தலையெழுத்தே தலைகீழாக மாறிப்போகும், பணம் சம்பாதிக்கக் குறுக்கு வழியென்றெல்லாம் இல்லாமல். தன் காதலி இரசித்து பார்க்கும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள வேண்டும் அவளை நரகத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமென்ற காரணங்களுக்காக மட்டும் வாய்ப்பெடுத்து கொள்கிறான் நாயகன்.

மனதிற்குப் பிடித்த நடிகரை காண மலத்தில் குதித்தவனுக்கு அவர் குறித்தான முதல்கேள்வியைக் கேட்கும் போது சிரமமில்லாமல் பதில் சொல்கிறான் முஸ்லிமாக இருந்தாலும் இராமன் கையிலிருப்பது வில்லும் அம்பும் என்று தனக்கு எப்படித் தெரியும் என்பதை, ரத்த வெறியும் மதமும் பிடித்த மனித மிருகங்கள் தன் தாயைக் கொன்ற வலியிலிருந்து வெளிப்படுத்துகிறான். அநீதியே வெற்றி கொள்ளும் வேலைகளாகப் பார்த்துப் பழகியவனுக்கு 'சத்தியமே வெல்லும்' என்ற சொற்றொடர் மீது நம்பிக்கை வராமல் அதனை ஊர்ஜிதப்படுத்த அவையோர்கள் பதில் அவசியமாகிறது. 'தர்ஷன் தோ கன்ஷ்யாம்' வரிகளுக்கு சுர்தாஸ் சொந்தக்காரர் என்பதை தன் கண்ணை இழக்க நேரிட்டிருக்கும் தருணத்திலிருந்து உயிருக்குத் தப்பியோடிய தருணம் சொல்லித் தந்திருக்கிறது. அமெரிக்க டாலர் 100இல் இருப்பது பெஞ்சமின் ப்ராங்களின் என்று தனக்கு தன் குருட்டு நண்பன் சொன்னது எப்படி மறந்து போயிருக்கும்??!!.

இப்படி ஒவ்வொரு கேள்விக்கான பதிலுக்கும் அவனது வாழ்க்கையோடு ஒட்டிய ஒவ்வொரு பின்னணி. அதுவும் எந்த ஆங்கில படத்திலும் ஒலிக்காத புதுமை நம் ஏ.ஆர்.ஆர். கைவண்ணத்தில் அருமையான உணர்வுப்பூர்வமான இசையலை.

வித்தியாசமான கதை தான் ஆனால் வழக்கம் போல் ஆயிரம் ஓட்டைகளும். படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஆஸ்கர் வரை கொண்டாடப்படுவதன் காரணம்தான் புலப்படவேயில்லை. ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'கோல்டன் குளோப்' கிடைத்தது பெரிய ஆறுதல் என்றாலும் படத்தை வணிகமயமாக்கியதோடு நம் நாட்டின் மானத்தையும் விற்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாமல் இல்லை.

படத்தில் பெரிய குறையே மொழிதான்.

ஹிந்தி படமாகவே வெளிவந்திருக்கலாம். இந்திய அதிகாரி எழுதிய புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமானாலும் இயக்கம் டானி பொயில் திரைக்கதை சைமன் பியூஃபோய் என்றெல்லாம் ஆங்கிலேயர் என்பதால் ஆங்கிலப் படமாகிப் போனது போலும். படிப்பறிவில்லாத ஜமாலும் சலீமும் சிறுவயதில் ஹிந்தி பேசுபவனாகக் காட்டிவிட்டு பதின்ம வயதில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிளந்துக் கட்டுவதையாவது பொறுத்துக் கொள்ள முடிகிறது, அவன் வளரும் சூழல் அப்படியோ என்று. ஆனால் குழந்தைகளைப் பிச்சையெடுக்க தயார் செய்பவன் ஆரம்பத்தில் ஹிந்தியே பேசிக் கொண்டிருந்தவன், வளர்ந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் ஆங்கிலத்தில் மாறிய காரணம் என்னவென்றே புரியவில்லை. திருடனை முஸ்லீம்களாகக் காட்டி அவன் தொழுவதையும் ஒரு காட்சியாக வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். இதில் என்ன அற்ப திருப்தியோ இவர்களுக்கு?!.

நம் நாட்டில் நடக்கும் ஏமாற்றுவேலைகள், குழந்தைகளைக் கடத்தி கண்களை பிடுங்கி பிச்சையெடுக்க வைப்பது, ஜாதிக் கலவரங்கள், சேரியென்றால் நடத்தும் எகத்தாளங்கள்,
பிராத்தல் - சிகப்பு விளக்கு, ரவுடியிஸம் - குண்டாஸ், திரை ஊடகத்தில் வரும் போலி முகங்கள் என்று எல்லா அவலங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதை மட்டுமே
சார்பாகக் காட்டி இந்தியா இப்படித்தான் என்ற போலி முத்திரை பதியவைக்கும் ஒரு முயற்சி. இப்படியெல்லாம் வந்து விட்டால் மட்டும் நம் நாட்டின் பெருமைகளும் வளர்ச்சிகளும்
தடைப்பட்டுவிடுமா என்ன? கையை வைத்து சூரியனை மறைக்கும் சமாச்சாரம் எடுப்படாதுதானே?

நான் எழுதியது சொல்ல வந்தது சொல்லியிருப்பது எல்லாமே புரிய 'Slumdog Millionaire'ரை ஒரு முறையாவது பார்த்துவிடுங்களேன் என்னோடு ஒத்துப் போவீர்கள்.

Blog Widget by LinkWithin