Tuesday, May 10, 2005

தமிழ் இனி...

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும
அம்மா என்பதை பசுக்கள் மறவாது!
காற்று நுழையாத குகையிலும்
குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!

புயலுக்கு மடிந்து சரியும்
வாழைத்தரு அல்ல
நூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்
ஆலமரம் நீ!

வெள்ளையர்கள் வந்தாலும்
மொகலாயர்கள் மேய்ந்தாலும்
ஆரியர்கள் ஆண்டாலும்
செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!

சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்
உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்த
முத்தாகவே கோர்த்து வைப்பேன்.
பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!

சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்
திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்
ஐந்திணையை வியக்க வைத்தாய்
உன் புகழை அளந்தால்
அந்த இமயம் கூட குட்டையே!

உன்னைக் கொண்டு
வெள்ளை நிலவை தங்கமாக்கலாம்
வெள்ளரியையும் விரலாக்கலாம்
கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!

இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளே
இசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றி
நாவிற்கும் சுவை சேர்ப்பவளே
நாடகமாக மேடையில் அரங்கேறி
வெள்ளித்திரையில் வெளிச்சம் பெற்றவளே!

எவ்வினம் அழிந்தாலும்
வல், மெல், இடை என
மூன்றினத்தோடு கூடி நிற்பவளே!
உயிரில்லா சொற்களுக்கும்
உயிர்மெய் தந்தவளே!

செல்லரித்துப் போகும் புத்தகமா நீ?
பத்திரமில்லாத சொத்தல்லவோ!
வெடித்துப் பறந்து போகும் பஞ்சா நீ?
பாறையாகிய மனதையும் கரைக்கும்
வல்லமை பெற்றவள் அல்லவோ நீ!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
என ஐந்து நிலங்களிலும் தங்கியவளே
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு
என நான்கு திசைகளிலும் திரிந்தவளே
த-மி-ழ் என்ற மூன்று எழுத்துக்களில் விரிந்தவளே
உன்னை பார்க்க, கேட்க, இரண்டு கண்கள் இரண்டு காதுகள் போதாதே

நீ எங்கள் கண்கள்
இனி வரும் நாட்களில் நாங்கள்
குருடர்களாக இருக்க விரும்பவில்லை

பூமி பிளந்து தேடினாலும
'ழ'கர எழுத்துக் கிடைக்கப் பெறுமோ?

எந்நாட்டில் மழை விழுந்தாலும
உன் மீது விழாது தப்பிடுமோ?

தமிழ் அழியும்
ஆம், பிறந்த குழந்தை
தாய்ப்பால் சுவைக்க மறந்தால்

தமிழ் அழியும்
ஆம், காற்றினை 'பொடா' சட்டத்தில்
கைது செய்ய முடிந்தால்

பறவைகள் தூதாக
உன்னைச் சுமந்த காலம் போக
இக்கால கணினிக்குள்ளும் ஊடுருவி
இனி பிறக்கபோகும்
இயந்திர மனிதனையும் சென்றடைவாய்!

தமிழ் இனி - இது கேள்விக்குறி
தமிழ் இனிமை - இது முற்றுபுள்ளி

புரியாதவனுக்கு தமிழ் இனி??
புரிந்தவனுக்கு "இனியும் தமிழ்"...

தமிழ் இனி
என்பது முடியாத வாக்கியம்
முடித்தேன் அதனை
தமிழ் இனிது வளரும் எனக் கூறி.

(கவிஞர் அறிவுமதியின் தலைமையில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை)

7 comments:

Jazeela said...

டெஸ்ட்

Anonymous said...

kalakkal kavithai

- யெஸ்.பாலபாரதி said...

உங்கள் வரவு நல் வரவாகட்டும்.. வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

எனக்குப் பிடித்த வரிகள்
வாழ்த்துக்கள்.

//எவ்வினம் அழிந்தாலும்
வல், மெல், இடை என
மூன்றினத்தோடு கூடி நிற்பவளே!//

//தமிழ் அழியும்
ஆம், காற்றினை 'பொடா' சட்டத்தில்
கைது செய்ய முடிந்தால்//

வலை உலகிற்கு அடியெடுத்து வைக்கும் தங்களை வரவேற்கின்றேன்.

Unknown said...

Nice, I just want to e mail you, drop a mail to my address amjad.amjad83@gmail.com

ஆதவன் said...

hi there is no link in thamizhstudio.com logo.. please check it... and provide link..thanks for your support.

thanks,
arun m.

திருச்சி சையது said...

அறிவுமதியின் தலைமையில் நடந்த கவிதையில் வாசித்த அறிவான கவிதை இது!

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி