Thursday, December 21, 2006

கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க.

கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' என்றார் (பட்டிமன்றம்தான் உட்கார்ந்து பேசுவாங்களா? - லியோனி உட்கார்ந்துதானே தீர்ப்பு சொல்வார், நாங்களும் தான் உட்கார்ந்து கொண்டே பாடுவோம் என்பது போல்). போட்டாச்சு உட்கார்ந்து பாடினார்கள் நாலு பேரும் சேர்ந்து மாறி மாறி பாட்டு 'மாரி' பொழிந்தார்கள்.

அதன் பிறகு கங்கை அமரன் சொன்னார், "நீங்க நுழைவு கட்டிணமெல்லாம் வைக்காம எப்படி இலவசமா இந்த நிகழ்ச்சிய நடத்துறீங்களோ அதே மாதிரிதான் நாங்களும் ஒரு பைசா வாங்காம வந்திக்கோம்" என்றார். (நான் உடனே எங்க குடும்பத்தினரிடம் சொன்னேன் எல்லோரும் சேர்ந்து அண்ணனுக்கு ஒரு 'ஓ' போடலாமென்று, 'ஓ' போட்டு கைத்தட்டினோம்.) பிறகு எஸ்.பி.பி. சரணை அழைத்தார், அவரிடம் "என்ன சரண் எத்தன கிலோ பையோட வந்தீங்க இப்ப எத்தன கிலோ பையோட ஊர் போகப் போறீங்க" என்றார், சரண் சொன்னார் "காசு வாங்காம நிகழ்ச்சி நடத்துறதால ஒண்ணும் வாங்கல, வாங்க காசுமில்ல" என்று. (பார்க்கவே பாவமாக இருந்தது). க.அமரன் தொடர்ந்து "சரண் காசில்லன்னா என்ன கடன் அட்டை வச்சிருப்பீங்களே தேய்க்க வேண்டியது தானே" என்று வம்பிழுத்தார். பாவம் சரண் "செலவாகிடும்னு வீட்டிலேயே வச்சிட்டு வந்திட்டேன்" என்றார். (நாங்களே ஒரு பதினோரு உருப்படி எங்க குடும்பதிலிருந்து போயிருந்தோம். அதனால் சொன்னேன் காசு வாங்காம வந்திருக்காங்க கடைசி வரை இருந்து கையையாச்சும் தட்டிட்டு போவோம்ன்னு). நிகழ்ச்சியில் சில பாடல் மட்டுமே முழுமையாக பாடினார்கள். மற்றவையெல்லாம் தொடர் பாட்டுதான். அப்புறம் நேயர் விருப்பம் தந்தார்கள். விரும்பிய பாடல் நான்கு வரி பல்லவி மட்டும். நான் விரும்பி கேட்டேன் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' மாயாவி படத்திலிருந்து. பாடினார் சரண். இப்படியே நிகழ்ச்சி பன்னிரெண்டு மணி வரை நடந்தது.

அதற்கு மறு வாரம் 'துபாய் தமிழ் சங்கம்' உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. விழாவைப் பற்றியும், அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். குறையாக முதலில் பேசியவர் என்னைப் போலவே கங்கை அமரன் மற்றும் குழுவினருக்கு எந்த கட்டணமும் தராமலிருந்தது குறித்து வருத்தப்பட்டார். அவருக்கு அமைப்பிலிருந்து அல்லது உறுப்பினர்கள் சேர்ந்தாவது ஏதாவது பணம் தந்திருக்க வேண்டுமென்று ஆதங்கப்பட்டார். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அமைப்பின் தலைவர் சபேசன் விளக்க ஆரம்பித்தார். அதன் பின் தான் புரிந்தது கங்கை அமரன் மற்றும் குழுவினர்கள் காசு வாங்கியிருக்கிறார்கள். அந்த ஒப்பந்த காகிதங்களையும், பணம் பெற்றுக் கொண்ட கையெழுத்துக்களையும் காட்டினார்கள். அதிர்ந்து போய் விட்டோம். பின்ன ஏன் அவர்கள் அப்படி பேசினார்கள் என்று கேள்வி வந்தது. தலைவர் சபேசன் சொன்னார் "அவங்க சின்னப்புள்ளதனமா நடந்துக்கிட்டாங்க அதற்கு நாம் என்ன செய்ய முடியுமென்று" வருத்தப்பட்டார்.

என்னா ஆளுய்யா இந்த கங்கை அமரன்?? என்னை டபாச்சா மாதிரி இத்தனை நூறு பேர்களை நம்பவச்சிட்டார். இப்ப சொல்லுங்க கங்கை அமரன் அரசியலுக்கு வர தகுதிப் பெற்றுவிட்டார்தானே?!

23 comments:

கதிர் said...

இந்த சினிமாக்காரங்களே இப்படிதான்!
விட்டுத்தள்ளுங்க.

Jazeela said...

எல்லா சினிமாக்காரங்களும் இப்படி இல்ல கதிர். ஆமா, அந்த விழாவுக்கு நீங்க வந்திருந்தீங்களா?

Boston Bala said...

கொடுத்த பணம் போதவில்லையோ? உரிய ஊதியத்தைப் பிரிப்பதில் ஏதேனும் தகராறா...

Jazeela said...

கொடுத்த பணம் போதவில்லையென்றால் மேடையே ஏறியிருக்க மாட்டார்களே? வந்தவர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மேடையில் அப்படி சொல்லியும் விட்டுவிட்டார்கள். நிகழ்ச்சி நல்ல முறையில் செல்ல வேண்டுமென்ற அக்கறையும் ஒரு காரணம். அவர்கள் மூக்கை அங்கேயே உடைக்க எவ்வளவு நேரமாகிவிடும்? இதெல்லாம் தெரிந்தே ரொம்ப சாமர்த்தியமாக பல பேர் முன்பு பச்சப்பொய் சொல்வது அவர்களுக்கு நாகரீகம் ;-(

உரிய ஊதியத்தைப் பிரிப்பதில் தகராறுக்கு வாய்ப்பே இல்லை ஏனெனில் ஒவ்வொருவருக்கும் தனிதனி ஒப்பந்தம்.

Anonymous said...

It is really disgusting to hear that the musician has said a lie in front of a large audience.

I don't know whether they practice to lie on a stage.

Even in one of the function i attended there was a concert by Sonunigam which started after all the introduction of our company. On the stage Sonu told he was waiting for 2-1/2 hours backstage for his programme to commence, after the programme when i enquired with others they told sonu came hardly 30 minutes before his programme.

So i think it is routine

Jazeela said...

நாஜராஜ், கதிர் தம்பி சொன்னா மாதிரி இந்த சினிமாக்காரர்களே இப்படித்தான் போல ;-) ஆனாலும் நம்ம மக்கள் சினிமாவைத் தொட்டு அரசியலில் குதிக்கிறவங்களுக்குதான் எப்போதும் ஓட்டு போட்டு பதவியில் அமர்த்துகிறார்கள். அதனால்தான் அரசியல் சாக்கடையானதோ?

Anonymous said...

அன்பு ஜெசிலா

சங்க உறுப்பினர் என்ற முறையில் அவர்களை பணம் கொடுத்து கூட்டி வந்தார்களா இல்லையா என்பதை நீங்கள் முதலிலெயே பொறுப்பாளர்களிடம் கேட்டிருக்கலாம்.

அடுத்து பொறுப்பாளர்கள் அப்படி அமைதியாக இருந்தது பெரும் தவறு.

நீங்கள் கமிட்டி உறுப்பினராக இருந்திருந்தால் கண்டிப்பாக பணம் கொடுத்தது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

அடுத்து முக்கியமான விசயம் கங்கை அமரன் போன்ற நபர்களுக்கு மேடையில் ஏறிவிட்டால் போதும் தாங்கள் என்னமோ வானத்திலிருந்து குதித்துவந்துவிட்டது போன்ற ஒரு நினைப்பு வந்துவிடும். இதை நான் பல கங்கை அமரன் நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்படித்தான் ஒரு நிகழ்வு. இங்கிருந்த பாட தெரிந்த சிலரை மேடையேற்றினர். ஒரு சிறுமி (எட்டாம் வகுப்பு படிக்கிறாள் என நினைக்கிறேன்), மேடையில் ஏறி பாட ஆரம்பிக்கும் போது சின்ன தடங்கல். உடனே அந்த சிறுமியை கீழே போ என்று அவமதித்து அனுப்பிவிட்டார். மிகவும் மனதிற்கு கஸ்டமாக இருந்தது. இன்னும் பலர் இப்படி இருக்கிறார்கள். வெளிநாடு என்றவுடனே அவர்களின் சுய குணம் மாறிவிடுகிறது. இப்பேற்பட்ட ஆட்களை வரவழைக்கவே கூடாது என்பது தான் எனது கருத்து.

Jazeela said...

உண்மை மஞ்சூர் ராசா. க.அமரன் இதே அமைப்புக்காக வருவது இரண்டாவது முறை. இந்த முறை இவர் தான் கெஞ்சி கூதாடி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. ஏர்போர்டில் இருந்து இறங்கியதுமே என் 'கவர்' எங்கே என்பதுதான் இவரது முதல் கேள்வியாக இருந்திருக்கிறது. போன முறை வரும் போது இப்படியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த முறை ஏதோ அவருக்கு தலைக்கு ஏறியிருக்கிறது.

//அடுத்து பொறுப்பாளர்கள் அப்படி அமைதியாக இருந்தது பெரும் தவறு// அப்படியில்லை பொறுப்பாளர்களுக்கு நிகழ்ச்சி எந்த தடங்கலுமில்லாமல் நிகழ்ழ்ச்சி நடந்தால் போதுமென்று இருந்தது. செயலாளர் சந்திரா கொதித்த போதுக் கூட தலைவர் சபேசன் தடுத்து, 'விட்டுடுங்க அவங்கள மாதிரியே நம்மளும் நடந்தால் சரியில்லை' என்றுவிட்டார்.

ramachandranusha(உஷா) said...

ஜெஸிலா, படித்து முடித்ததும் என்னை செருப்பால் அடித்தா மாதிரி இருந்தது. ஒண்ணு செய்யலாமா? இணைய நண்பர் திரு. வெங்கடேஷ்,
தற்சமயம் ஆனந்தவிகடன் குழுமத்தில் சேர்ந்திருக்கிறார் .அவர் மெயில் ஐடி என்னிடம் இருக்கிறது. அவருக்கும், பொதுவாய் ஆ.வி எடிட்டருக்கும் உங்கள் பிளாக் அதன் செய்தியை பார்வோர் செய்யட்டா? என்னால் பொறுத்துப்போக முடியவில்லை. என்ன
அயோக்கியதனம்? உங்கள் பிளாக் என்பதால் கேட்காமல் அனுப்ப மனம் ஒப்பவில்லை.
உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து,
உஷா

Jazeela said...

//ஜெஸிலா, படித்து முடித்ததும் என்னை செருப்பால் அடித்தா மாதிரி இருந்தது. // ஏன் உங்களை செருப்பால் அடித்த மாதிரி இருக்கனும்? கங்கை அமரனுக்கு உறவா நீங்க ;-) ?

உண்மை எவ்வளவு தூரமும் போகலாம் உஷா. நடத்துங்க நடத்துங்க.

Jazeela said...

என்ன செய்வது சாவித்ரி, நம்ம ஆட்கள் திரைப்பட துறை பிரபலங்கள் வந்தால்தான் வருவேன்னு அடம்பிடிக்கிறாங்க. கூட்டத்தை கூட்டவாவது திரை பிரபலங்களை அழைக்க வேண்டி இருக்கு. இந்த நிலை மாறனும்

Santhosh said...

என்ன ஜென்மங்களோ... நல்ல வேளை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் காசு தரவில்லை நீங்களாவது குடுங்கன்னு வந்தவங்க கிட்ட கேட்காம போனாறே...

VSK said...

படிக்க சங்கடமாக இருப்பினும், ஏன் அப்படி அவர் சொன்னார் என்பதை அறிந்து கொள்ளாமல், சகட்டுமேனிக்கு அனைவரும் சேர்ந்து விளாசித் தள்ளுவது கொஞ்சம் அதிகமெனத் தோன்றுகிறது!

இதற்குள் ஒருவர் இதைப் பத்திரிக்கைக்கு அனுப்பி நாறடிப்பேன் என்கிறார்!

உணர்ச்சிவசப்படுதல் தமிழனின் தலையெழுத்து போலும்!

இதில் இன்னும் சில விஷயங்கள் தெளிவு படுத்தப்பட வேண்டும் என நினைக்கிறேன்!

Jazeela said...

//நீங்களாவது குடுங்கன்னு வந்தவங்க கிட்ட கேட்காம போனாறே...
// கேட்ட விதம் அப்படித்தான் பரிதாபமாக இருந்தது. தத்ரூப நடிப்பு.

Jazeela said...

//அப்படி அவர் சொன்னார் என்பதை அறிந்து கொள்ளாமல், சகட்டுமேனிக்கு அனைவரும் சேர்ந்து விளாசித் தள்ளுவது கொஞ்சம் அதிகமெனத் தோன்றுகிறது!

// ஏன், எதற்கு சொன்னார் என்று காரணம் வேறு வேண்டுமா? சொன்னதே தவறில்லையா? அவர்தான் அப்படி சொன்னார், கூட சேர்ந்து சரணும் பாவமாக மூஞ்சை வைத்துக் கொண்டு படம் காட்டிவிட்டு போய்விட்டாரே!

VSK said...

மிகவும் பிரபலமான முன்னணிக் கலைஞர்களைத் தவிர, வெளிநாட்டிற்கு வரும், வரக் கெஞ்சும் மற்ற கலைஞர்களெல்லாருமே, இந்தப் "பிரபுக்களால்" பொதுவாக அவமானப்படுத்தப் படுவதுதான் , நிதரிசனமான உண்மை.

பேசிய தொகை ஒன்று, கொடுப்பது ஒன்று; கலெக்ஷன் ஆகவில்லையெனச் சொல்லி கிளம்பும்போது குறைத்துக் கொடுப்பது, வாக்களைத்த வசதிகளைச் செய்து கொடுக்காமல் இருப்பது, என இன்னும் பல வித பிக்கல் பிடுங்கல்கள் இவர்களுக்கு நேரிடுவதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ஒரு நாதசுரக்குழுவிற்கு கையை விட்டு பணம் கொடுத்தனுப்பி அவர்கள் மனவருத்தம் அடையாமல் அனுப்பியிருக்கிறேன்.

அதையும் மீறி, குடும்ப சூழ்நிலை, சற்று வருமானம், கலை ஆர்வம் இப்படி ஏதேனும் ஒன்றே இவர்களை இங்கெல்லாம் வரவைக்கிறது.
அதனால்தான் சொல்லுகிறேன், நிச்சயம் இது ஒரு பேசி வைத்துக் கொண்ட செய்த விளையாட்டோ, மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வாகவோதான் இருக்க வேண்டும் என!

இன்னும் சற்று ஆழமாக விசாரித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தவறாக எண்ணவேண்டாம்!

Santhosh said...

S.K.,
நீங்க சொன்ன மாதிரியான நிகழ்வுகள் சின்ன சின்ன கலைஞர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது கங்கை அமரன் போன்ற புகழ்பெற்றவர்களிடம் இது எடுபடுமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும்
//அதன் பிறகு கங்கை அமரன் சொன்னார், "நீங்க நுழைவு கட்டிணமெல்லாம் வைக்காம எப்படி இலவசமா இந்த நிகழ்ச்சிய நடத்துறீங்களோ அதே மாதிரிதான் நாங்களும் ஒரு பைசா வாங்காம வந்திக்கோம்" சரண் சொன்னார் "காசு வாங்காம நிகழ்ச்சி நடத்துறதால ஒண்ணும் வாங்கல, வாங்க காசுமில்ல" //
ஏதோ charityக்கு நிகழ்ச்சி செய்த மாதிரி இல்ல பேசி இருக்காரு. அதுலயும் நம்ம சரண் அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத மாதிரி இல்ல பேசி இருக்காரு. சாதாரணமா பாத்தா இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல ஆனா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் நிலையை யோசிக்கி பாருங்க நாளைக்கு யாரு sponsers களிடம் போயி பதில் சொல்லுவாங்க? அடுத்த நிகழ்ச்சிக்கு அவங்களிடம் போயி நின்னா போய்யா போன நிகழ்ச்சியில் எங்களிடம் எல்லம் பணம் வசூல் செய்து கங்கை அமரனுக்கு கூட பணம் கொடுக்காமல் ஊழல் செய்து விட்டீர்கள் என்று சொல்லுவாங்க இல்ல (இது எல்லாம் சொந்த அனுபவத்துல சொல்றேன் :)) ).

ramachandranusha(உஷா) said...

//ஏர்போர்டில் இருந்து இறங்கியதுமே என் 'கவர்' எங்கே என்பதுதான் இவரது முதல் கேள்வியாக இருந்திருக்கிறது//

எஸ்.கே ஐயா, உணர்ச்சிவசப்படுதல் என்பது என்பது எனக்கு வராத கலை. கொஞ்சம் கோபமும் எரிச்சலும் மட்டுமே வரும் :-)
அதுவும் பார்த்தீர்கள் ஆனால், பிறர் மீது பழி போடாமல், என்னை செருப்பால் அடித்ததுப் போல உணர்ந்தேன் என்று எழுதியிருந்தேனே தவிர, அவரை நாற அடிப்பேன் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. இங்கு பணக்கார என். ஆர்.ஐ
சதவீகிதத்தை விட, ஏழை தொழிலாளர்கள் வர்க்கம் மிக மிக அதிகம். அவர்கள் முன்னிலையில் ஏன் இந்த நாடகம்? அதை அம்பலப்படுத்த ஆ.வி போன்ற வெகு ஜன வாசகர்கள் கொண்ட பத்திரிக்கையில் போட வேண்டும் என்று ஜெஸிலாவிடம்
கோரிக்கை வைத்தேன். அவருடைய பதிவு என்பதால் அனுமதியில்லாமல் எடுத்து அனுப்புவது முறையில்லை என்பது என் கருத்து. பிறகு திரைப்பட துறையினர்களுக்கு அரிதாய் காணப்படும் பெருந்தன்மை மற்ற கலைஞர்களிடம் அதிகம் உண்டு

ஜெஸிலா, உங்கள் பிளாக் என்று குறிப்பிட்டு காப்பி, பேஸ்ட் செய்து நேற்று ஆ.விக்கு அனுப்பிவிட்டேன். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!

Jazeela said...

//வரக் கெஞ்சும் மற்ற கலைஞர்களெல்லாருமே, இந்தப் "பிரபுக்களால்" பொதுவாக அவமானப்படுத்தப் படுவதுதான் , நிதரிசனமான உண்மை.// உண்மை என்பது உங்கள் ஒருவரின் கணிப்பு என்று திருத்திக் கொள்ளுங்கள். எங்கள் அமீரகத் தமிழிணைய நண்பர்களுக்காக வந்த எந்த திரைப்பட பிரபலங்களும் இப்படி நடந்ததுமில்லை மாறாக வாய் நிறை புகழ்ந்து விட்டு, அங்கு போயும் உபசரிப்பின் மறுபெயர் நாங்கள் என்று கடிதம் எழுதியவர்களும் உள்ளனர் அறிக.

//பேசிய தொகை ஒன்று, கொடுப்பது ஒன்று; கலெக்ஷன் ஆகவில்லையெனச் சொல்லி கிளம்பும்போது குறைத்துக் கொடுப்பது, வாக்களைத்த வசதிகளைச் செய்து கொடுக்காமல் இருப்பது, என இன்னும் பல வித பிக்கல் பிடுங்கல்கள் இவர்களுக்கு நேரிடுவதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.// எங்கு பார்த்தீர்களோ தெரியாது இங்கு அமீரகத்தில் பார்க்க முடியாது. சொன்னதுதான் செய்வோம், செய்வதுதான் சொல்வோம், 'கலெக்ஷன்' அப்படியென்றால் என்னங்க? துபாய் தமிழ் சங்கம் மற்றும் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் நடத்தும் விழாக்களில் எப்போதும் நுழைவு கட்டணம் வசூளித்ததேயில்லை.

//நிச்சயம் இது ஒரு பேசி வைத்துக் கொண்ட செய்த விளையாட்டோ, மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வாகவோதான் இருக்க வேண்டும் என!// எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? இன்னும் எத்தனை எத்தனை அட்டகாசங்கள் நடந்தது என்று உங்களுக்கு தெரியாது. உறுப்பினர்கள் பாட வருவார்கள் என்று நிர்வாகிகள் சொல்லும் போதெல்லாம் ஆமாமா பாடட்டும் என்று கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு சென்னையில் இருந்து வந்தவர்கள் எல்லாம் போய் அமருங்கள் என்று ஒலிவாங்கி முன்பே கோபத்தில் கத்தினார். ஆசிப் மீரானும் மேடையில் பாடினார் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்களேன், மேடை பின்புறம் நடந்தது என்ன என்று பதிவு போட சொல்லுங்களேன். அதனால் ஆழமாக விசாரிக்கவென்று ஒன்றுமே இல்லை. விசாரித்த பிறகே பதித்தேன்.

Jazeela said...

//இங்கு பணக்கார என். ஆர்.ஐ
சதவீகிதத்தை விட, ஏழை தொழிலாளர்கள் வர்க்கம் மிக மிக அதிகம். அவர்கள் முன்னிலையில் ஏன் இந்த நாடகம்? //
அதானே!?

//என்னை செருப்பால் அடித்ததுப் போல உணர்ந்தேன் என்று எழுதியிருந்தேனே தவிர, அவரை நாற அடிப்பேன் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. //
உங்க பெருந்தன்மை யாருக்கு வரும் உஷா. நன்றி.

//இது எல்லாம் சொந்த அனுபவத்துல சொல்றேன் :)// சரியான அனுபவம்தான் சந்தோஷ், நன்றி.

✪சிந்தாநதி said...

//படிக்க சங்கடமாக இருப்பினும், ஏன் அப்படி அவர் சொன்னார் என்பதை அறிந்து கொள்ளாமல், சகட்டுமேனிக்கு அனைவரும் சேர்ந்து விளாசித் தள்ளுவது கொஞ்சம் அதிகமெனத் தோன்றுகிறது!//
எஸ்கே ஐயா நீங்கள் சொல்வது நியாயம்தான் என்றாலும் அவர் பொது மேடையில் அப்படிச் சொல்லியிருக்ககிறார். பலர் நம்பியிருக்கிறார்கள். எனவே பொது அரங்கான பத்திரிகை மூலம் உண்மை வெளிவருவது நல்லதுதானே?

விகடன் போன்ற பத்திரிகைக்கள் பொதுவாக பிளாக்கில் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்றெல்லாம் போட்டுவிட மாட்டார்கள். பெரும்பாலும் கங்கை அமரனிடம் இதற்கு விளக்கம் கேட்க முற்படுவார்கள். அவர் இதை மறுபடியும் வலியுறுத்தினால் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் ஆதாரம் கேட்ட பிறகே வெளியிடுவார்கள்.

நேரடியாக வெளியிட்டாலும் மறுப்பு, ஆதாரம் என்று
எப்படியும் உண்மை வெளிவரத்தானே வேண்டும்.?

நாடோடி said...

பேரிழப்பு நிகழ்வுகளுக்கே இவர்கள தங்களின் சட்டை பையிலிருந்து பணத்தை தரமாட்டார்கள். ஆனால் கலைநிகழ்ச்சி, சினிமா ஸ்டார் கிரிக்கெட் போன்ற வெட்டியான(ஆன சினிமாவில் காணாமல் போனவர்கள் இங்கு வந்து விளம்பரம் குடுப்பார்கள்) நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி தருகிறோம் என்பார்கள். இவர்கள எந்த சம்பந்தமும் இல்லாமல் பிரீயாக அமிரகம் வந்து கலைநிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்பது கேப்பையில நெய் வடிகிறது என்பது போல். அதை அங்கேயே நம்பிய நீங்கள்தான் முட்டாள்கள். திரும்பவும் அடுத்த வருடம் அவர்களிடம்தான் போய் நிற்கபோகிறீர்கள். அவர்கள் அல்ல சுயநலவாதிகள்.

VSK said...

"என்ன அயோக்கியத்தனம்! ஆ.வி.க்கு அனுப்புகிறேன்" என எழுதியதால் அப்படி சொன்னேன். தவறாக ஏதும் சொல்லவில்லை, உஷா அவர்கள் என்னை மன்னிக்கவும்.

மேலும், நானும் இரு பக்க நியாயத்தையும் கேட்கவேண்டும் என்ற பொருளில்தான் அதை எழுதினேன்.

நன்கு விசாரித்தபின்னரே எழுதியதாக 'ஜெஸிலா'வும், மேல்விவரம் கேட்கவே ஆவிக்கு அனுப்பியதாக "ரா.உஷா'வும் சொல்லிவிட்டபின், இதைல் சொல்ல ஒன்றுமில்லை.

எவர் மனமும் புண்பட நான் எழுதவில்லை.
நன்றி.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி