பெண்கள் தினமென்று ஊரெல்லாம் கொண்டாடுறாங்களே அது எப்படி வந்தது தெரியுமா?
உழைக்கும் மகளிர் தினமாக இருந்ததுதான் இப்ப வெறும் 'பெண்கள் தினம்' என்ற பெயரில் தொலைக்காட்சியில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், வானொலியில் பெண்கள் சம்பந்தப்பட்ட பாடல்களுமாகச் சுருங்கி விட்டது.. பெண் சம்பந்தப்பட்ட பாடலென்றால் பெண் ஒரு தாயாக, மனைவியாக, மகளாக, சகோதரியாக இருக்கும் பாடல்களை 'பெண்கள் தின'த்திற்கான சிறப்பு நிகழ்ச்சியாக தருகிறார்கள். அது போதாதென்று பத்திரிகைகளும் 'சிறப்பு மலர்கள்' அனுமதிக்கிறார்கள். இப்படிச் செய்வதால் பெண்கள் தினம் முழுமையடைந்து விடுகிறதா? அல்லது பெண்கள் தனிச்சிறப்பு பெறுகிறார்களா? இல்லை பெண்களுக்குத்தான் பெரிய திருப்தி கிடைத்து விடுகிறதா? இதையெல்லாம் பார்க்கும் போது ஆண்களுக்குச் சமமான பெண்களுக்கு எதற்குத் தனியாக சிறப்பு தினமென்று ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி யோசிக்கவே தோன்றுகிறது.
உழைக்கும் மகளிர்கள் கஷ்டப்பட்ட அந்த 19ஆம் நூற்றாண்டில் சுமார் 14-16 மணிநேரம் வேலையாக இருந்ததாம். ஆண்களுக்கு இது சாத்தியம் தான் ஏனென்றால் அவர்கள் பலசாலிகள், புத்திசாலிகள் வீரர்கள் என்று நினைத்து விட வேண்டாம். வெளி வேலையை மட்டும் செய்யும் ஆண்களுக்கு அது சாத்தியமாக இருந்தது. ஆனால் அலுவல் வேலை, வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என்று பல வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு 16 மணிநேர அலுவல் வேலை சிரமமாக இருந்ததால் போராடி வேலை நேரத்தை 16-லிருந்து 8 மணி நேரமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30000 பெண்களுக்கு மேல் போராடிய தினம்தான் மார்ச் 8. அதே தினத்தை பெண்கள் தினமாக்கலாம் என்று 1910ல் தீர்மானித்திருந்தாலும் அதனை 1975ல் தான் ஐ.நா. சபை 'பெண்கள் தினமாக' ஏற்றதாம். (பெண்கள் தீர்மானித்தால் மட்டும் அதை அமலுக்குக் கொண்டு வர எத்தனை வருஷமாகிறது பாருங்கள்).

வேலைக்குப் போகும் பெண்களென்றாலே பலருக்கும் சொகுசு அலுவல் வேலை மட்டும்தான் நினைவுக்கு வரும் ஆனால் வேலைக்குப் போனால்தான் வயிறு நிறையுமென்ற நிலையில், பயிற்சி தேவையில்லாத (unskilled labours) ஒருங்கிணைக்கப்படாத வேலையாளிகளாக, தினக்கூலியாக நமது நாட்டைச் சேர்ந்த எத்தனையோ லட்சம் பெண்கள் பணிபுரிகிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். கட்டிட வேலை, கூலி வேலை என்று கஷ்டப்பட்டுவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளிலும் குழந்தை வளர்ப்பிலும் ஈடுபடவேண்டிய கட்டாயம் கொண்டவர்களாகி விடுகிறார்கள். நடுத்தர பெண்ணிணத்தை விட இவர்கள் பாடு படு மோசம். சுய அங்கீகாரத்தைக் காட்டிலும் குடும்ப வருமானத்திற்காக, குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தவென்று வேலைக்குப் போய் சுமையைத் தோளில் சுமக்கும் பெண்களுக்காகக் கூட அவர்களின் வீட்டுச் சுமைகளை பகிர்ந்து கொள்ள ஆண்கள் முன்வருவதில்லை. எதிர்த்து கேட்கும் பெண்கள் மேல் 'வேலைக்கு போகும் திமிர்' என்ற முத்திரையும் விழுகிறது.
இப்போதுள்ள கணவன்மார்கள் குடித்த காப்பி குவளையையும் கொண்டு போய் உரிய இடத்தில் வைக்க சலித்துக் கொள்கிறார்கள். காரணம் அவர்கள் வளர்ந்த விதம்தான். இதிலும் ஆண்களைச் சொல்லிக் குற்றமில்லை காரணம் குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு வகிக்கும் பெண்களிடம்தான் ஆண் சுபாவத்தை வரப்போகும் காலத்திலாவது மாற்றும் மந்திரக்கோல் உள்ளது. குழந்தையை வளர்க்கும் போதே இந்தப் பாகுபாடு பிரிவினை ஆரம்பமாகிறது.
பெண் குழந்தைகளுக்கு வாங்கித் தரும் விளையாட்டு பொருட்கள் சோறு பொங்கும் செப்பு சாமான்களாக, குழந்தை வளர்க்கும் பொறுப்பு உன்னுடையது என்பதை அந்த பிஞ்சு மனதில் செதுக்கும் வகையில் பொம்மைகளும் அழகுப் பொருட்களும் வாங்கித் தருகிறோம். ஆண் குழந்தைகளுக்கு வாகனம், துப்பாக்கி, மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களென்று அங்கேயே பேதம் பார்த்து இன்னாருக்கு இது என்று பிரித்து விடுகிறோம்.. ஆண் - பெண் இரு குழந்தைகள் இருந்தால், அதில் பெண் சிறியவளாக இருந்தாலும் அவளிடமே குடும்பப் பொறுப்பு என்ற பெயரில் சமையலறை சரண் செய்யப்படுகிறது. "செல்லம், அண்ணன் வருவான் அவனுக்கு சோறு வச்சிக் கொடு தாயி" என்று பாசமாக ஏவிவிடுகிறாள் மகளிடம் தாய். 'சோறு வைத்துக் கொடுத்தால் குறைந்து விடுவாளா?' என்ற குதர்க்கம் வேண்டாம். அந்த பாகுபாடு பாரபட்சம் வேண்டாமென்கிறேன். ஏன் மகனிடமே "கண்ணா வீட்டுக்கு வந்த பிறகு சாப்பாடு வச்சி சாப்பிட்டுட்டு உன் தட்ட நீயே கழுவி வச்சிடு" என்று ஆண் மகனிடமும் சொல்லலாமே. இது போன்ற சின்ன வேலைகளைச் செய்ய பழகிக் கொடுத்தாலே பிற்காலத்தில் ஒருத்தியின் கணவனாகும் போதும் வீட்டு வேலைகளைப் பகிர்வதிலும், அந்தப் பொறுப்பு பெண்ணுகுரியது மட்டுமே என்ற சுபாவத்திலுமிருந்தும் விடுபட வாய்ப்புள்ளது.
'தாய் திருத்தினால் மட்டும் போதுமா? மொத்த சமுதாயமே ஆணாதிக்கத்தில் ஊறிப்போனதுதானே?' என்று சப்பைக்கட்டு கட்டித் தப்பிக்க வேண்டாம். வீட்டிலிருந்து துவங்குவோம் பிறகு ஊடகத்தையும், பாடப் புத்தகத்தில் அம்மா சமையல் செய்வது போலவும், அப்பா பத்திரிக்கை வாசிப்பது போலவும் வரும் படங்களைக் களைவோம், சமுதாயப் பார்வையை இனி வரும் காலங்களிலாவது மாற்றுவோம்.
*****************************************************************
மகளிர் தினத்தைப் பற்றி, அவர்கள் பிரச்னைகளப் பற்றி, பெண்ணியம் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அந்தப் பேருந்து பயணத்தில் தான் தொடங்கியதென்று சொல்லலாம். நான் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எங்கள் அலுவல் உபாயமே (project) குழந்தை வளர்ப்பு, குழந்தை கல்வி, பெண் பிரச்சனை, சமுதாய விழிப்புணர்வு படம் என்பவைகளைச் சார்ந்ததாகவே இருந்தது. அதனால் அவ்வப்போது இது குறித்து என் காதில் விழும். ஒருமுறை நானும் என் தோழியும் பல்லவன் பேருந்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தோம். அப்போது பெண்களுக்கான இருக்கையில் ஒரு ஜோடி உட்கார்ந்திருந்தது. என் தோழி, அமர்ந்திருந்த ஜோடி அருகில் சென்று "இது பெண்களுக்கான இருக்கை எழுந்திருங்கள்" என்று சொல்லி அவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்து கொண்டார். அவரது செய்கை எனக்கு கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஸ்ரீனிவாசபுரத்தில் இறங்கியதும் இது பற்றிக் கேட்டேன், "பெண்ணியம் பேசுற நீங்க, இரு பாலரும் சமம்னு பேசுற நீங்க, பெண்களுக்கான இருக்கைன்னு உரிமை கொண்டாடுவது மட்டும் சரியா?" என்று என் உறுத்தலை வெளிப்படுத்தேன். அதற்கு அவர் நிதானமாக, "ஒரு ஆண் பணி முடிஞ்சு வீட்டுக்குப் போனா ஒண்ணு தொலைக்காட்சி பார்ப்பான் அல்லது பத்திரிகை வாசிப்பான். ஆனா ஒரு பெண் பணி முடித்து வீட்டு வந்திருந்தாலும் கூட அவனுக்கு அவள்தான் தேநீர் போட்டுத் தரணும்..அலுவலகம் போய்ட்டு வந்தாலும் வீட்டுக்குப் போன பிறகும் அவள் வேலை முடிந்தபாடில்லை. வீட்டு வேலைகளை மொத்தமும் அவள்தான் செய்கிறாள், குழந்தைகள் படிப்பிலும் அவர்கள் தேவையிலும் பராமரிப்பிலும் அதிகம் கவனம் செலுத்துறதும் பெண்தான் அப்படியிருக்க வீட்டுக்குப் போய் என் பணியைத் தொடரப் போகும் என் கால்களுக்கு ஓய்வு தேவையா இல்ல வீட்டுக்கு போய் கால் மேல் கால் போட்டு சாவகாசமா உட்காரப் போகும் அவன் கால்களுக்கு ஓய்வு தேவையான்னு நீ சொல்லு?!" என்றார்கள். என்ன ஒரு 'பெண்ணியப் பார்வை' என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு இப்போது 45-50 வயதாகி இருக்கும், நட்புக்கு வயது முக்கியமா என்ன? ஆனாலும் பெயரை வைத்து விளிப்பதைதான் அவர் விரும்புவார். அவர் பெயர் எலிசபெத் நீஜி, பத்திரிகையாளர் (Freelancer) மற்றும் சமூக ஆர்வலர். இப்படிச் சிலரேனும் யோசிப்பதால்தான் பெண்களுக்குச் சமூகத்தில் கொஞ்ச மரியாதையாவது கிடைத்துவருகிறது.
**************************************
நிலைமை இப்படியிருக்க, நேற்று வீட்டுக்கு போகும் வழியில் 'சக்தி எப்.எம்.'யில் நிகழ்ச்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன் அப்போது 'பெண்மை போற்றும் பாடல்' என்று பலத்த அறிவிப்பு செய்யவே என்ன பாடலென்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். என்ன பாடல் வந்தது தெரியுமா? 'நான் வானவில்லையே பார்த்தேன்'. காதலன் காதலியை பாடுவது போல் வரும் சராசரி திரைப்பட பாடலை, பெண்மை போற்றும் பாடலாகக் கருதுகிறவர்கள் இருக்கிற வரையில் பெண்ணியமாவது புடலங்காயாவது??!!