தமிழ் சாகடிக்கப்படுகிறது!?


என்னதான் பல்வேறு வகையான ஊடகங்கள் இருந்தாலும் வான் அலைகள் மூலம் கேட்கப்படும் விஷயங்கள் அப்படியே மனதில் பதியத்தான் செய்கின்றன. தொலைக்காட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். ஏழைகளுக்கும் எளிமையாகக் கிடைக்கக் கூடியது இந்த வானொலி சேவைதான்.

இலங்கையின் முதல்தர வானொலி சக்தி எப்.எம். அமீரகத்தில் தொடங்குகிறார்கள் என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். தரமான நிகழ்ச்சிகளை தரமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மூலம் கிடைக்கும் என்று நம்பியிருந்தேன். இலங்கைத்தமிழில் புகுந்து விளையாடுவார்கள் என்று கேட்க ஆவலாக இருந்தேன். ஆனால் எங்கிருந்துதான் பிடித்தார்களோ இவ்வகையான அறிவிப்பாளர்களை, அழகு சேர்த்து பேசுவதாக எண்ணிக்கொண்டு வார்த்தைகளைச் சிதைக்கிறார்கள், குரலின் ஏற்ற இறக்கம் தருவதாக நினைத்துக் கொண்டு கர்ணகொடூரமாக நிகழ்ச்சி தருகிறார்கள். இதில் ஒரு பெண் அறிவிப்பாளர் இருக்கிறார். ஒரு அறிவிப்பாளருக்கான எந்தத் தகுதியும் இல்லாதவர் என்றே சொல்லலாம். நல்ல குரல் வளமோ, மொழி வளமோ, உச்சரிப்போ, குரல் வசீகரமோ எதுவுமே இல்லாத வகையில் நிகழ்ச்சி நடத்துவார் - சகிக்கவே முடியாத தமிங்கிலத்தில். தாங்க முடியாமல் ஒருநாள் இதே விஷயத்தை கண்டித்துக் குறுஞ்செய்தியும் அனுப்பினேன்.

மற்றுமொரு உருப்படாத நிகழ்ச்சியில் வேறு ஒரு அறிவிப்பாளர் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து கேட்கிறார். உதாரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நேரம் தருகிறார்களா இல்லையா என்று. நேயர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து அவர்களது பெயர் மட்டும் சொல்லி 'தருகிறார்கள்' அல்லது 'இல்லை' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். ஏன் எதற்கு என்று ஒரு வார்த்தைக்கூட அதற்கு மேலே பேசிவிடக் கூடாதாம். இந்த நிகழ்ச்சியிலும் மக்கள் ஆர்வமாக கலந்துக் கொள்வார்கள் - கொடுமைதான்?!

ஒரு நேயர் அழைத்தார் அவர் பெயர் 'அறிவு அழகு' பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நேரம் தருவதில்லை ஏனென்றால் .... என்று இழுத்த உடனே அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்கிறார் "நேரம் தருவதில்லை, அவ்வளவுதான். உங்க பெயருக்கு ஏற்றாற்போல பேசுங்கள்" என்று வெடுக்கென்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அடுத்த நேயருக்குப் போய்விட்டார். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் மனதைக் காயப்படுத்தி கருத்துக் கணிப்பு நடத்தி என்ன சாதிக்கப் போறாங்கன்னு தெரியவில்லை?

நேற்று என் கோபம் உச்சகட்டமாகக் காரணம், செய்தி வாசிப்பில் மீண்டும் தலைப்பு செய்தி என்று உரக்க வாசிப்பவர் படிக்கிறார் 'பாப் உல்மரின் சாவில் மரணம் நீடிப்பு என்று. (மர்மத்தைத்தான் மரணமாக மாற்றியிருக்கிறார்கள் என்று மண்டையை உடைத்துக்கொள்ளாமலே புரிந்தாலும் கொடுமையாக இருந்தது) என்ன செய்வது இவர்களையெல்லாம்? தமிழ்ச்சேவை என்று வானொலி ஆரம்பித்து வாழும் தமிழைச் சாகடிக்கிறார்களே, இந்தக் கொடுமையை கவனிக்க ஆளில்லையா? கடவுள் காப்பானாக.

Blog Widget by LinkWithin