நான் அவன் இல்லை - விமர்சனம்


எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய பாடல்களைப் புதுப்பித்து 'ரீமிக்ஸ்' என்ற பெயரில் தருகிறார்களோ அதே போன்ற ஒரு முயற்சிதான் இந்தப் படமும். இந்தப் படம் போலவே இன்னும் 'பில்லா', 'முரட்டுக்காளை' என்று வரிசையாக வரப்போகிறதாம். 'பில்லா', 'முரட்டுக்காளை'யெல்லாம் பரவாயில்லை வெற்றி மசாலாப் படங்கள், அதுவும் பிரபலமான கதாநாயகர்களை வைத்து எடுத்தால் ஓட வாய்ப்புள்ளது. ஆனால் முகவரியே இல்லாத ஓடாத அந்தக் காலத்து கே. பாலசந்தர் தந்த ஜெமினி கணேசன் தனது 54வது வயதில் அவரே தயாரித்து நடித்த படத்தை ரொம்ப தைரியமாகத்தான் திரும்ப தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் செல்வா. இதில் பிரபலமடைந்த பெரிய நடிகருமில்லை. 'யுனிவர்சிட்டி'யில் அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக கவர வைத்து 'திருட்டுப் பயலே'வில் தனக்கென முத்திரை பதித்த ஜீவனை கதாநாயகனாகப் போட்டு எடுத்த இந்தப் படத்தை வணிக ரீதியாக வெற்றி பெறும் என்ற முழு தைரியத்திற்கு காரணம் அவர் உபயோகித்த வலுவான ஆயுதம். யோசிக்காமல் புரிந்திருக்குமே? அதான் 'கவர்ச்சி'. பெண்களை ஏன்தான் போகப் பொருளாக எல்லோரும் காட்டுகிறார்களோ தெரியவில்லை. எல்லாப் படங்களிலும் அப்படித்தான் என்றாலும் இதில் கூடுதலாகவே. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காகவே தேடிப்பிடித்து எடுத்த படமா இது என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது. காரணம் எல்லாப் பெண்களையும் ஆபாசமாக அலையவிட்டது மட்டுமல்லாமல் முட்டாள்களாக காட்டியிருக்கிறார்கள். ஓர் இரண்டு பேர் முட்டாள்களாக காட்டியிருந்தால் பரவாயில்லை, படத்தில் வரும் அத்தனை பெண்களும், நீதிபதியான லட்சுமி உட்பட அனைவரையும் முட்டாளாக சித்தரித்திருக்கிறார்கள்.

மன்மத லீலைகளால் பெண்களை கவர்ந்து, ஏமாற்றி, திருமணம் முடித்து, நகை- பணத்தை அபகரித்து மறைந்துவிடும் கதாநாயகன் மீது வழக்கு தொடர்ந்து கூண்டில் நிற்க வைத்து சாட்சிகள் சொல்வதை விரிவுபடுத்துவதுதான் கதை. ஜீவனுக்கு மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். படித்த மாடலிங் செய்யும் மாளவிகாவிடம் விக்னேஷாக, ஜோதிர்மயியிடம் மாதவன் மேனனாக, எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் திருந்தாத சமுதாயத்தை கண்டிப்பதற்காகவே கீர்த்தி சாவ்லாவிடம் போலிச் சாமியார் வேடத்தில் ஹரிதரதாஸாக, தொழிலதிபர் நமீதாவிடம் ஷாம் பிரசாத்தாக வருகிறார். ஆனால் உண்மையில் ஜோசப் பெர்னாண்டஸ், குற்றவாளி கூண்டில் நிற்கும் போது தான் அண்ணாமலை என்கிறார். ஒப்புக்கு சப்பாக சினேகா, அதுவும் வக்கீலுக்குப் படித்த பெண் ஜாகீர் ஹுசைனிடம் பணத்தை ஏமாறுகிறார் ஆனால் அந்த குற்றவாளிக்கே ரசிகையாகிறார், என்ன கண்றாவிடா சாமி! எல்லா சாட்சிகளின் குற்றச்சாட்டின் முடிவிலும் ஒரே மாதிரியான வசனம் 'நான் அவன் இல்லை' என்று. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் கோட்டைவிட்டிருக்கிறார். கதையில் பெரிய ஓட்டையிருக்கும் போது பாவம் அவரும் என்ன செய்வார்.

நமீதா வரும் இடங்களிலெல்லாம் என்னையறியாமல் நான் காட்சியை வேகமாக ஓடவிட்டேன் ஏனெனில் கைக்குட்டையை ஆடையாக உடுத்தி வருகிறார் அதுவும் மழையில் நனைகிறார் அதனை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? எல்லா நடிகைகளும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டிருப்பதால் நடிப்பை மறந்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் ஜீவன் ஆயிரங்காலத்து பயிரை எளிதாக மேய்வதாக தந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, தனக்கு தந்தப் பொறுப்பை நன்றாக முடித்திருக்கிறார்.

மாளவிகா திருமணத்தை நண்பர்கள் குடும்பம் சூழத்தான் செய்கிறார்கள் இருப்பினும் மாப்பிள்ளை புகைப்படத்தை புதுத்தொழில் நுட்பமான செல்பேசியில் அவரே எடுப்பதாகச் சொல்லுகிறார்களாம், எடுக்கிறார்களாம். ஏன் திருமணத்திற்கு வந்த வேறு யாரிடமும் புகைப்படம் எடுக்கும் செல்பேசியே இல்லையா என்ன? அதே போல் பழைய படத்தில் சினேகா வேடத்தில் லட்சுமி, இந்த படத்தில் லட்சுமியின் மகள் சினேகா. சினேகா ஜாகீர் உசேன் ஓவியத்தின் ரசிகையாம், அவருடைய கண்காட்சியைத் தேடிப்பிடித்துப் பார்க்க வருகிறார் ஆனால் ஜாகீர் உசேன் எப்படியிருப்பார் வயதானவரா இளைஞரா என்று கூட தெரிந்து வைத்துக் கொள்ளாமலிருக்கிறார். காதில் பூ சுற்ற ஒரு அளவு வேண்டாம்? திரைக்கதை எழுதி இயக்கிய செல்வா இந்த மாதிரி படம் முழுக்க பல ஓட்டைகள் தந்திருக்கிறார். இதனை தைரியமாக தயாரித்தவர் வி. சித்தேஷ் ஜபக். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினியின் பழைய படத்தில் வரும் 'ராதா காதல் வராதா' என்பதை ரீமிக்ஸ் செய்து புதுப்பொலிவு தந்திருக்கிறார். மற்றுமொரு பாட்டு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. பழனி பாரதி மற்றும் பா. விஜயின் வரிகளானாலும் மனதில் நிற்கும்படி விஜய் ஆண்டனி தட்டவில்லை என்று சொல்லலாம்.

படம் பார்க்கும் போது அந்த பழைய படம் நினைவில் வராமலில்லை. அந்த பழைய படம் தொலைக்காட்சியில் போடும் போது 'இதெல்லாம் பெரியவங்க படம் பார்க்கக் கூடாது' என்று எங்க அம்மா விரட்டியடித்தது நினைவிலிருக்கிறது. இப்போதெல்லாம் 'பெரியவங்க' படமென்று தனியாக பிரிக்க முடியாது எல்லாப் படங்களுமே அப்படித்தானே? அந்தக் காலத்துக்கு இந்த கதை, புருடா எல்லாம் சரிதான் ஆனால் தொழில்நுட்பங்கள் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்தில் எடுபடவில்லை. சின்னத்திரை 'சீரியலிலேயே' பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வருகிறார்கள் ஆனால் அத்தகைய விஷயங்கள் இதில் இல்லை. காவல் துறையின் விசாரணை, அரசு வழக்கறிஞர் வாதம் எதிலுமே காரசாரமில்லை. ஒரு இடத்தில் குற்றவாளியை வழக்கறிஞர் 'ஜீனியஸ்' என்கிறார் அபத்தமாக. முடிவுரையாக கதை மூலம் சொல்ல வந்தது பின்னணி தெரியாமல் பெண்கள் ஏமாற வேண்டாம் 'பேராசை பெரு நஷ்டம்' என்பதாக. அதற்காகப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

படித்த பெண்கள், ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டிக் காப்பாற்றும் பெண் என எல்லாரும் ஒரே மாதிரியாக ஏமாறுவார்களா? ஆளைக் கவிழ்க்கும் வார்த்தைஜாலங்களில் பயிற்சி பெற்றிருந்தாலே, தபு சங்கர் காதல் தொகுப்புகளை மனனம் செய்திருந்தாலே போதும் பெண்கள் எளிதில் மயங்கிவிடுகிறார்கள், பெண்கள் என்றாலே பணத்தையும் அந்தஸ்தையும் பார்த்துத்தான் காதல் வயப்படுகிறார்கள் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கும் விதமாகவே அமைந்துள்ளது இந்தத் திரைப்படம்.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் இரண்டே வகையான பெண்கள்தான் உண்டு முதல் வகை பெண்கள் முட்டாள்கள். இரண்டாம் வகையினர் புத்திசாலியாக நடிப்பவர்கள் என்று.. அதே கொள்கையுடைவர்தான் இந்த செல்வாவும் போலும். என் நண்பர் அப்படிச் சொல்லும் போதெல்லாம் நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று. அதுதான் இந்தப் படத்தின் மூலம் உண்மையென புலப்படுகிறது.

திரைப்படம் என்றாலே 'real' அல்ல 'reel' என்பதை அறிவேன், இருப்பினும் கேட்கிறவன் கேணயனாய் இருப்பின் கேப்பையில் நெய் வடியும் என்பது போல் உள்ளது படம்.

Blog Widget by LinkWithin