வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே? பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.

என் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:

வெட்ட வெளியில் வெக்கையில் அவிய திட்டமிட்டே கரமா பூங்காவில் சந்திப்பு ஏற்பாடு. அந்த புல்வெளிக்குள் நான் நுழைந்து "எல்லோருக்கும் வணக்கம்" என்று சொல்ல எல்லோரும் எழுந்து நிற்க. "ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம் உட்காருங்க" என்று நான் சொல்ல, "இத முன்னாடியே சொல்லியிருந்தா எழுந்து நின்னுருக்க மாட்டோம்ல" என்று தன் பெரிய உடம்பை அசைத்ததற்கான சிரமத்தை தெரிவித்தார் அவர். அதே நபர் "உங்களுக்கு யார் யாருன்னு தெரியுமா, அறிமுகம்.." என்று ஆரம்பிக்க நான் 'டக் டக்' என்று எல்லார் பெயரையும் சொல்லி 'சரியா' என்றேன். ஆனால் அந்த ஒருவர் மட்டும் யார் என்று யோசித்த போது 'க்ளூ' வேண்டுமா என்று தொடங்கும் முன்பே "பெனாத்தல்..?" என்று சரியாக கேட்டுவிட்டேன். அறிமுகத்திற்கு பிறகு சுடான் புலி உரும தொடங்கியது.

ஆரம்பத்தில் உருமியது மட்டும்தான் அதன்பின் அடித்த குச்சிக் கோலாட்டத்தில் (கும்மி மட்டும்தான் சொல்லனுமா என்ன?) அவர் இருக்கும் இடமே இல்லாமல் போனது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அய்யனாரை சாடினார்கள். எதையும் தாங்கும் இதயமாக 'பதில் சொல்லியும் புரியாதக் கூட்டத்துக்கிட்ட என்ன பேசுறது' என்பது போல் மெளனம் காத்தார் அய்யனார். குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்) தனக்கே உண்டான குசும்புத்தனத்தோடு அய்யனாரிடம் இங்குள்ளவர்களில் யார் யாருடைய வலையை படிப்பீர்கள் யார் யார் நல்ல எழுதுவார்கள் என்று கேட்கும் போது சென்ஷியும் 'கோரஸாக' கேள்வியில் சேர்ந்துக் கொண்டார். அய்யனார் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள பயந்து சுதாரித்துக் கொண்டு "அப்படியெல்லாம் சொல்ல நான் பெரிய புடுங்கியில்ல, அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை எழுதுறாங்க. ஒருத்தர் எழுதுறது பிடிக்கலைன்னா படிக்க வேணாம் ஆனா அப்படி எழுதாதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்ல" என்று உள்குத்துடன் தன்னை மற்றவர்கள் சொல்வதை மனதில் வைத்து பேசினார். பெனாத்தலார் என்னிடம் "என் பதிவுகளை படிப்பீங்களா?" என்று கேட்க நான் திருட்டு முழியோடு "ஆரம்பத்துல படிச்சுக்கிட்டு இருந்தேன் - தேன்கூடு போட்டிக்கெல்லாம் எழுதும் போது ஆனா சமீப காலத்தில் படிக்கிறதில்லன்னு" உண்மையை ஒப்புக் கொண்டேன். "ஓஹோ ஆரம்பத்தில் அந்த தப்பெல்லாம் செஞ்சிருக்கீங்க அப்புறம் திருந்திட்டீங்க" என்று எடுத்துக் கொடுத்தார் சுடான் ஹீரோ.

சென்ஷியிடம் டெல்லியில் இருந்த அனுபவத்தை கேட்க, அவர் அங்குள்ள இடம், மொழி, கலாச்சாரம் பற்றி பேசுவார் என்று ஆர்வமானால் அவர் டெல்லி வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக முத்துலெட்சுமி, மங்கை, கார்த்திக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். மாலனை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதென்று சொன்னார் (அதற்காக வருந்தினாரா சந்தோஷப்பட்டாரா என்று அவர் முகபாவம் சொல்லவில்லை). நான் அவரிடம் 'சென்ஷி'யின் பெயர் காரணத்தை கேட்டு தெரிந்துக் கொண்டேன். தன் பெயருடன் தன் நண்பர் பெயரை இணைத்து வைத்துள்ளதாக சொன்னார். ஜாதி, மத பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்களெல்லாம் இப்படி வேறு பெயரில் எழுதுவதாகவும் சொன்னார் (என்னவொரு புத்திசாலித்தனம்). அவரிடம் நான் 'ரிப்பீட்டு' என்ற அவருடைய வழக்கமான பின்னூட்டத்தை தவிர வேறு என்ன உருப்படியாக எழுதுவீர்கள் என்று கேட்டு வைத்தேன். "உருப்படியில்லாத உங்க வலைப்பதிவுக்கெல்லாம் அந்த பின்னூட்டம் கூட கிடையாது உங்க பதிவுகளை படிப்பதே இல்ல, நல்லாவே இருக்காது" என்று சொல்ல. உடனே லொடுக்கு "இல்லப்பா நீ படிப்பதில்லையா நல்லாத்தான் எழுதுவாங்க" என்று எனக்கு ஆதரவாக திருவாய் மலர. "மொக்கையாவும் இருக்காது, ரொம்ப நல்லாவும் இருக்காது, அதனால் நான் படிக்கிறதே இல்லப்பான்னு" சலித்துக் கொண்டார் சென்ஷி.

என் கணவர் பாவம் போல லொடுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்திருந்தார் ஏற்கெனவே அறிமுகமான முகம் என்பதால். லொடுக்கு தன் மனைவி ஜெசிலாவை மகள் மரியமையும் (ஆமாங்க அவர் மனைவி பெயரும் ஜெசிலா) அழைத்து வந்ததால் ஒருவித துணையாக இருந்தது எனக்கு. ரொம்ப காலம் பழகிய நண்பர்களாக உணர்வதால் லொடுக்கு தம்பதியோடு பேசுவது மிகவும் வசதியாகவும் சுலபமாகவும் இருந்தது. இருவரின் மகள்களும் விளையாட அவர்களுக்கு 'சாக்லெட்' வாங்கி குஷிப்படுத்தினார் அனானி தியாகு. (என் மகள் இரண்டு விஷயங்கள் உள்ளவர்களிடம் உடனே ஒட்டிக் கொள்வாள் -ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்.) தியாகு என்னிடம் "உங்க மகள் ரொம்ப 'கியூட்' காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுட்டாங்க" என்றார் மிகவும் பரிதாபமாக. கோபி அறிவு பசியில் வந்திருப்பாராக இருந்திருக்கும் அய்யனார்- சுரேஷின் தீவிர வாசிப்பனுபவங்களை இரண்டு காதுகளையும் சமர்பித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்ப நல்ல சாந்தமான பையனாக தெரிந்தார் கோபி.

சுடானை பற்றி ஏதாவது சொல்லுங்க என்று சுடான் புலியிடம் கேட்க "இப்போதைக்கு அந்த நாடு அப்படியேதாங்க இருக்கும். எந்த முன்னேற்றத்திற்கான முயற்சியும் தெரியல" என்று சுருங்க முடித்தார். "அபி அப்பா பதிவை படிக்காம பின்னூட்டம் போடுவதை எப்போ நிறுத்த போறீங்க" என்று நான் கேட்க வழக்கம் போல அவர் எழுதுவதை போலவே ஏதோ தெளிவில்லாமல் பதில் அளித்தார். "தான் ஓட்டவாயில்லை ஒளிவுமறைவில்லாமல் இரகசியங்களை 575 பேரிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் சொல்லிவிடுவேன்" என்று ஒப்புதல் வாக்குமூலமளித்தார். அது மட்டுமில்லாமல் சொற்பிழை அதிகம் செய்வதால் அனானியாக பின்னூட்டம் போடமுடியவில்லை, கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்ற ஆதங்கம் வேறு (ரவிசங்கர், சீக்கிரமா ஒரு தமிழ் பிழை திருத்த மென்பொருளுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா- ரொம்ப அவசியப்படுது). "உங்கள மரமண்டையென்றா மாதிரி பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேனே கோபமில்லயே" என்று நான் கேட்டதற்கு. "இந்த வலையுலகுக்கு வரும் போதே ரோஷம், சூடு, சுரணை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுதான் வந்தேன். அதனால் தாராளமா இன்னும் நிறைய திட்டலாம்" என்று பெருந்தன்மையோடு அனுமதியளித்தவுடன் யாரோ 'சூடு, சுரணையெல்லாம் அதுக்கு முன்னாடி இருந்துச்சாக்கும்' என்று முணுமுணுத்ததுக் கேட்டது.

"நீங்க ரொம்ப சீரியஸான பதிவுகளை மட்டும்தான் படிப்பீர்களா? உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே?" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர். நடுவில் சென்ஷி "ஓஹோ, நீங்க அந்த 'பின்நவீனத்துவ வியாதி' பிடிச்சவங்களா, அதெல்லாம் கண்டாலே எனக்கு பிடிக்காது" என்று வெறுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார். அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் "அப்படியல்லா எல்லாம் படிப்பேன். ஆனால் நேரமே இல்லாத போது மொக்கை பதிவு மாட்டும் போது நேரவிரயமாக தெரியும். மற்றபடி மொக்கை பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்க 'விடை பெறுகிறேன்' பதிவையும் சந்தோஷமாக இந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் நடக்குதான்னு ஆர்வமாக படித்தேன் (சும்மாப்பா கோபிச்சுக்காதீங்க), அதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு புரியவில்லை" என்று சமாளித்தேன். "செந்தழல் ரவி நல்ல சரக்குள்ளவர் (இந்த இடத்தில் சரக்கு என்பது அறிவை குறிக்கிறது என்று அறிக! குசும்பர் சொன்னதற்காக வேறுவிதமாக நினைத்துவிட வேண்டாம்) ஆனால் சீரியஸான பதிவு எழுதுங்க என்றால் அப்படி எழுதினால் வேலைக்காவாதுப்பா என்கிறார்" இப்படி விஷயம் தெரிந்தவர்களும் கும்மி கோதாவில் இறங்குவதை சொன்னவுடன் நான் "ஆமா செந்தழல் நல்லா எழுதுவார், மொக்கை போடவும் திறமை வேண்டும் தெரியுமா?" என்று நான் கேட்டதை கிண்டல் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குசும்பர் "நிஜமாவே அவர் நல்லாதாங்க எழுதுவார்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல "அடடா நானும் நிசத்துக்குதானே சொன்னேன்" என்று சிரிக்க. உடனே சுரேஷ் "நீங்க 'விடை பெறுகிறேன்' என்று எழுதுவதற்கு கூட ஒரு தனி திறமை வேண்டும், அப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் தோணிடாது" என்று பாராட்டியவுடன் குசும்பர் உச்சி குளுந்து வெட்கப்பட்டார். "உங்க அரசியல் கட்டுரை ரொம்ப பிடிக்கும் நடுநிலையா இருக்கும்" என்று அய்யனார் சுரேஷிடம் சொல்ல. "அரசியல் கட்டுரையுல யாரும் நடுநிலைனெல்லாம் சொல்ல முடியாது" என்று உண்மை உரைத்தார். "மாயவரத்தான் கூட அரசியல் கட்டுரை நல்ல எழுதுவார். சன்னாசி படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு சுட்டிக் கூட அனுப்பினேனே" என்று என்னிடம் அய்யனார் ஆர்வமாக கேட்க "ஆமா படிச்சேன். நல்லா இருந்தது. நிறைய எழுத மாட்றார்" இப்படி நல்ல எழுதுபவர்கள் நிறைய எழுதாததை சோகமாக சொன்னேன். சுரேஷும் "ஆமாம். நானும் சன்னாசி வாசிப்பேன் நல்லா எழுதுவார்" என்றார்.

திடீரென்று சென்ஷி "நட்சத்திர பதிவரை எந்த அடைப்படை தகுதியில் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்று ஆவேசமாக கேட்க நான் விளக்கம் அளித்தும் திருப்திப்படாமல், "அதெப்படிங்க அந்த நிர்மலோ யாரோ நட்சத்திர வாரத்தில் ஒரே ஒரு பதிவு போட்டோ, ஒண்ணுமே எழுதாமலோ ஒரு பிரச்சனை வந்து எல்லாம் கிண்டல் செஞ்சாங்களே ஏன் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நட்சத்திரமாக்கணும்" என்று கேட்க. "தமிழ்மணம் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள் அதனை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி செய்யாதது தமிழ்மணத்தின் குற்றமாகாது" என்று சொல்லியும் 'இல்லை இல்லை' என்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தார் சென்ஷி. (அவருக்கு அய்யனார் நட்சத்திரமானதில் கடுப்போ என்னவோ!). "அபிஅப்பா திமுக பற்றிய அரசியல் கட்டுரை எழுத வேண்டாம் கண்டிப்பாக உங்க 'இமேஜுக்கு' யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று லொடுக்கு கருத்து சொல்ல, அந்த மாதிரி கட்டுரைகளை தனிமடலாக வலம் வர செய்கிறேன். அந்த உறவின் தீவிரத்தில்தான் லக்கிலுக் என்னை வந்து சந்தித்தார் என்று சொன்னார்.

என்னை விட மிக குறைவாக பேசியது இரண்டு பேர். 1) கதிர், பாவனா பற்றி பேசும் போது மட்டும் வாய் திறந்தார் (ஜொள்ளு விட இல்லப்பா, பேசுறதுக்கு). அவர் கடைசியாக எழுதிய நிராகரிப்பட்டவர்கள் பற்றி நான் சிலாகிக்கும் போது கொஞ்சம் இலச்சையில் முகம் சிவந்தார். 2) சுல்தான், வந்தவுடன் என்னை எங்கேயோ பார்த்த நினைவு இருப்பதாக சொன்னார். அதன் பிறகு 'எங்கே பார்த்திருக்கிறேன்' என்று சிந்தித்துக் கொண்டே இருந்தாரோ என்னவோ வாய் திறந்து பேசி நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் போகும் போது "நீங்க ஆவேசமா பேசி பார்த்த நினைவு எங்கன்னுதான் தெரியலை" என்றார் மறுபடியும். அதுவா ஏதாவது பட்டிமன்றத்தில் பார்த்திருப்பீர்கள் என்று நான் சொல்ல "ஆம்மாம்மாமா, லியோனி பட்டிமன்றத்தில் பேசினீங்கள, அதானே பார்த்தேன்" என்று முகம் மலர்ந்தார். தெளிவுப் பெற்றதால் தலை வெடிக்காமல் கண்டிப்பாக தூங்கியிருப்பார் என்று நம்புகிறேன்.

அப்புறம் இடையிடையே தமிழச்சி- செல்லா பிரச்சனை, லக்ஷ்மி- மோகன்தாஸ் வாதங்கள், எது சரி- எது தவறு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருமித்த கருத்தாக எல்லோரும் சொன்னது வலையில் கும்மி கூடிய பிறகு காட்டமான வாக்குவாதங்களும், புழுதி வாறி இறைக்கும் ச(சா)கதி சண்டைகளும் குறைந்துவிட்டதாக பலர் சந்தோஷப்பட்டாலும் சிலர் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.

இப்படியே பேசி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்தை ஓட்டிவிட்டு அபிஅப்பா தயவிலா யாரோட தயவிலென்று தெரியாது (யாராக இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர்) 'ஆர்டர்' பண்ணி சாப்பிட்டுவிட்டு பதிவர்களுடன் பேசி மகிழ்ந்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்.

Blog Widget by LinkWithin