Thursday, September 06, 2007
விட்டு விலகி நின்று...
உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் தாயை இழந்த சிறு வருத்தம் கூட உன்னிடம் தென்படாதது எனக்கு வியப்பாக இருந்தது. என்னளவுக்கு அந்த வயதில் உனக்கு முதிர்ச்சியில்லை என்று நான் தவறாக விளங்கிக் கொண்டதை உன்னிடம் பழகிய பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.
எனக்கு நிறைய தோழிகள் உண்டு, உனக்கு நான் மட்டும்தான் தோழியாக இருந்தேன். அப்படியாக நீ ஏற்படுத்திக் கொண்டாய். யாரிடமும் எளிதில் ஒட்ட மறுத்துவிடும் உன் சுபாவம், உன் வித்தியாசமான மனப் போக்கு, விசித்திர கண்ணோட்டம், அதிசய சிந்தனை, கடிவாளமில்லாத உன் கற்பனை எல்லாவற்றிற்கும் உனக்குப் பொருத்தமான அலைவரிசையில் நான் மட்டுமே பொருந்திப் போனதாய் சொல்லிக் கொள்வாய். அதனால் உன்னையே என் நெருக்கமான தோழியென்று சொல்லச் சொல்லி அடம்பிடிப்பாய். நாம் சேர்ந்தே வளர்ந்தோம். பருவங்கள் மாறும் போது நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனதளவில் நாம் குழந்தையாகவே இருக்க விரும்பினோம். மாதவிடாயே வரக் கூடாது என்று பிராத்திக்கத் தொடங்கிவிட்டாய் நீ. அந்த மாற்றத்தில்தான் பெண்ணின் தலையெழுத்தே மாறிவிடுவதாக சொல்லி சாதித்தாய். அதெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியதல்ல என்பதை நாளடைவில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது உனக்கு. உன் தந்தையென்றாலே உனக்கு எப்போதும் அலட்சியம்தான். 'அவரைக் கண்டாலே ஏன் எரிந்துவிழுகிறாய்' என்று நான் ஒருநாள் உன் செயல் பொறுக்காமல் கேட்டதற்கு உன் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத தந்தையைப் பிடிக்கவில்லை என்றாய். உன் தாய்க்குப் பின் உன் தந்தை உனக்காகவே வாழ்ந்தாரே தவிர வேறு மனம் செய்துக் கொள்ளவில்லை என்று புரிய வைக்க முற்படும் போதெல்லாம் நீ பொருட்படுத்துவதில்லை. நானும் என் அறிவுரைகளைக் குறைத்துக் கொண்டேன்.
அழகாக வளர்ந்து வரும் நம்மை ஆண்கள் கண்களால் மேய்வதை உன்னால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பார்ப்பவர்களை நீ பார்க்காதே அலட்சியம் செய்' என்று எவ்வளவு சொல்லியும் யாராவது விழுங்குவது போல் பார்த்தால் போய் சண்டைக்கு நின்றாய். நான் துணையாக இருக்கும் தைரியத்தில்தான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாய். நீ தனியாகப் போகும் போது எதிர்பாராத விதமாக அந்த காமுகன் நடுவீதியில் உன்னைக் கட்டியணைத்த சம்பவத்திலிருந்து உன்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதை விபரமாகச் சொல்ல முடியாமல் நீ தேம்பியதும் விம்மியதும் உன் கண்களில் நான் கண்ணீர் கண்டதும் அதுதான் முதல் முறை. இறுக்கமாக அணைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்றவனை ஒன்றுமே செய்ய முடியாமல் ஒடிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் போது அனைத்துமே தெரிந்த முகமாக இருந்தும் கேட்க ஆளில்லாமல் போனதற்குக் காரணம் அவன் புதுக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாட்டசாட்டமான பலசாலியான தாதா. அன்றிலிருந்து கனவிலும் கயவர்களுடன் சண்டையிட்டு தூக்கத்தில் பேசுவதைப் பார்த்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் உன் அப்பா. ஆண்களை வெறுக்கும் உச்சக்கட்டத்திற்கே நீ சென்றுவிட்டதை உன் பேச்சிலிருந்து அறிந்துக் கொள்ள முடிந்தது. சில நேரங்களில் நீ வெறுப்பவர்களைப் பற்றிப் பேசும் போதே உன் நிலை மறந்து விசித்திரமாக நடந்துக் கொண்டாய். சில சமயங்களில் எனக்கு பயமாகக் கூட இருந்தது. நிறைய நாட்கள் உன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உன் அறையைத் தாளிட்டு வெளியில் இடிந்து உட்கார்ந்திருக்கிறேன். என் வற்புறுத்தலின் பேரில் மனநல மருத்துவரைச் சந்தித்து அறிவுரை எடுத்து வந்தது என்னை திருப்திபடுத்த மட்டுமே இருந்தாலும் பலன் இருப்பதாக நான் கருதினேன். அந்தக் காமுகன் மீண்டும் உன் கண்களில் படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
உன் முடிவே சரியென்று நினைக்கும் உன்னை யாரும் மாற்றிவிடவோ கலைத்துவிடவோ முடியாததால் ஆண்களை வெறுக்கும் உனது சுபாவத்தை மாற்ற முயற்சி செய்ததில் எனக்குத் தோல்விதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியல்ல என்று உனக்கு விளங்க வைக்க என் சில நல்ல நண்பர்களை நட்பாக இணைத்து வைத்தேன், அதில் உனக்கு ஆத்மியைத் தவிர வேறு யாரையுமே பிடிக்காமல் போனது. ஆத்மியை உனக்கு பிடிக்கும் காரணமும் அவனது கண்ணியமான சுபாவம் என்று நீயே சிலாகித்திருக்கிறாய். உன்னை ஓரளவுக்கு மாற்ற முடிந்ததில் மகிழ்ந்தேன். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு தமிழ்த்திரைப்படங்களே பிடிக்காமல் போனது. கல்லூரியில் உன்னைப் போலவே நான் மற்றவர்களுடன் சரியாக ஒட்ட முடியவில்லை காரணம் எல்லா மாணவிகளுக்கும் பேச பிடித்த தலைப்பு 'ஆண்கள்', 'காதல்', 'அந்தரங்கம்'. எல்லாவற்றையும் ஓரளவுக்கு என்னால் சகித்துக் கொள்ள முடிந்தளவுக்கு உன்னால் முடியவில்லை - கல்லூரி வாழ்வையே வெறுப்பதாகச் சொன்னாய். படிப்பு முடிந்த பிறகு எனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து நான் செல்ல ஆயத்தமான போது எல்லோரையும் விட மிகவும் வருத்தப்பட்டது நீதான் என்று எனக்குத் தோன்றியது. நான் அங்கு சென்று சூழல் சொன்ன பிறகு நீயும் என்னுடன் வந்துவிடுவேன் என்று கூறிக் கொண்டிருந்தாய். விமான நிலையத்திற்கு என் குடும்பத்தாரை தவிர்த்து வெளியாளென்றால் அது நீ மட்டும்தான். விமான நிலையத்தில் உன்னுடன் நான் ஆத்மியைப் பார்த்து ஆச்சர்யமாவதை கவனித்த நீ அவன் உன்னுடன் வரவில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் மூத்த சகோதரனை வரவேற்க வந்திருப்பதாக எனக்கு விளக்கமளித்தாய். எப்படியோ என்னைத் தவிர உனக்கு வேறு ஒரு துணையை விட்டுச் செல்லும் எக்களிப்பில் இருந்தேன்.
நான் இந்தியாவை விட்டுப் பறந்தது அக்டோபர் 26 காலையில். அவளிடமிருந்து அழைப்பு வராததால் அவளை நான் இரண்டு நாட்களுக்கு பின் தொடர்பு கொண்டேன். என் அழைப்பிற்கு அவள் பக்கத்தில் பதில் இல்லாததால் இரு தினங்கள் விட்டு மறுபடியும் அவளை நான் அழைத்தேன் ஆனால் மறுமுனையில் அவள் இல்லை, அவள் அப்பா பேச முடியாமல் அழுதார். நான் சென்ற அதே தினம் ஆரம்பமான அவளுடைய கொலை வெறி அடுத்த தினமே முற்றியிருக்கிறது. யாரையோ தேடிச் சென்று அவன் ஆண் உடைமையை அவள் வெட்டி வந்தது அக். 28 இரவு. அவள் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழிந்து. ஆத்மியின் சகோதரன் தான் அந்தக் காமுகன் என்று நான் தெரிந்து கொண்டது அவள் கைதுக்குப் பிறகு. மனநலம் சரியில்லாத காரணத்தால் அவளைச் சிறையில் வைக்காமல் சிகிச்சை தர வேண்டுமென்ற வாதத்தில் வெற்றி பெற இரண்டு வாரங்களானது. மனநல மருத்துவமனையை விட்டு அவள் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது நவம்பர் மாத இறுதியில். அவள் தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் வந்தது அவள் தப்பிக்க முயற்சி செய்த நாளுக்கு மறுநாள்.
நீ கண்டிப்பாகத் தற்கொலை போன்ற முடிவுக்கு வரமுடியாதவள் என்று உன்னை முழுதும் அறிந்த என்னால் மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் உனக்காக என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
ஏங்க இது உண்மைக்கதையா? கற்பனையா? இப்படி பயமுறுத்துறீங்க?!!!
செப்.12, 2007 நாளிட்டு இன்று வெளிவந்துள்ள ஆனந்தவிகடனில்
= = = = = = = = = = = = = = = = = ஜெஸிலாவின் கிறுக்கல்கள்
www.jazeela.blogspot.com
சென்னையில் பிறந்து வளர்ந்து தற்போது துபாயில் வசிக்கும் ஜெஸிலாவின் வலைப்பூ. வலைஞர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானது இது. கேட்ட பாடல்கள், பார்த்த சினிமாக்கள், படித்த புத்தகங்கள் என எல்லாவற்றைப் பற்றியும் தன் அபிப்பிராயங்களை சரளமான மொழியில் கிண்டலும் கேலியுமாகக் கொட்டியிருக்கிறார் ஜெஸிலா. சொந்தமாகக் கதை, கவிதைகள் எழுதும் ஜெஸிலாவுக்கு, சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தாமல் ரசிக்கச் செய்யும் நையாண்டி அழகாகக் கை வருகிறது. 'முன்பே வா, என் அன்பே வா' பாடலைப் பற்றி மட்டும் அவ்வளவு விரிவான ரசனைக் கட்டுரை. பாடலைக் காட்சியாகப் பார்ப்பதற்கும் இணைப்பு கொடுத்து, 'ஆனால் பார்த்தால் பிடிக்காமல் போகும்' என ஒரு கத்தி வைக்கிறார்
= = = = = = = = = = = = = = = = = =
வாழ்த்துகள்.
ஹாய் ஜெஸிலா,
படிக்கும் போது ஒரு வலி.நிஜம். இது போல நிறைய சம்பவங்கள் நடக்கிறது.
என்ன சொல்றதுன்னே தெரியல..
ஹாய்,
என்ன தான் இது கதையா இருந்தால் கூட நிஜத்திலும் இது போல நிறைய நடக்கத்தான் செய்கிறது.
//உண்மைக்கதையா? கற்பனையா?// இரண்டும் செய்த கலவை.
//இப்படி பயமுறுத்துறீங்க?!!!// பயமுறுத்துறா மாதிரி நாட்டுல நடக்குது ரவி, என்ன செய்ய சொல்றீங்க? :-)
நன்றி பாலராஜன்கீதா. ஆஹா எனக்கு தெரியாத நிறைய விஷயம் சொல்லியிருக்காங்களே :-)).
வாங்க சுமதி எப்படி இருக்கீங்க. உங்க மடல் முகவரி என்கிட்ட இல்ல தாங்களேன். ஆமா சுமதி, நிறைய உண்மை சம்பவங்கள் இது மாதிரி நடக்கத்தான் செய்யுது.
hi jezzila innaiku than muthal thadavai intha pakkatha pakkuren ... vallthukal .... ungaloda sirugathai vittu vilagi ... paduchen . nala irunthathu....vallthukal.. nanri
உங்கள் ப்ளாக்கைப் பற்றி ஆனந்த விகடனில் எழுதியிருக்கின்றதே...
வாழ்த்துக்கள் ஜெஸிலா...
என்ன கொடுமை சார் இது.. :)
//பாலராஜன்கீதா said...
செப்.12, 2007 நாளிட்டு இன்று வெளிவந்துள்ள ஆனந்தவிகடனில்
= = = = = = = = = = = = = = = = = ஜெஸிலாவின் கிறுக்கல்கள்
www.jazeela.blogspot.com//
அட பாலராஜன் கீதா அதுக்குள்ள முந்திக்கிட்டாருங்க...தகவல்கள் எவ்வளவு வேகமாக போகுது பாருங்க..?..
Adikadi eshuta aarambichiteenga, good,continue :-)
வருக பாஸ்கோ, வலையுலகிற்கு புது முகமா? நன்றி பின்னூட்டத்திற்கு.
'விட்டு விலகி நின்று'ன்னு தலைப்பு வச்சாலும் வச்சேன் எல்லாரும் கதைக்கு விலகி நின்றே பின்னூட்டமும் வாழ்த்தும் சொல்றீங்கப்பா. நன்றி நிலவு நண்பன் & ஹனீப்.
ஹனீப், நீங்கதானே நிறைய எழுத கேட்டீங்க. நான் சொன்னபடி கேட்கும் நல்லபிள்ளை :-))
நல்ல முயற்சி ஜெஸிலா
ஓ கொடுமை!
மனநலமில்லாத சில பேருக்கு இல்லாததெல்லாம் நடப்பதாகத் தோன்றும். இன்னும் சீக்கிரமே குணப்படுத்த முயற்சித்திருக்க வேண்டுமோ?
ஆனந்த விகடனில் வந்திருக்கிறீர்களாமே! வாழ்த்துக்கள்.
தொடரவைக்கும் நல்ல வீரிய நடை.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஜெஸி.ஆனந்த விகடன் மேட்டருக்கு:)
உங்க தோழி பண்ண காரியத்துக்கு இல்லை ;)
நன்றி அய்யனார்.
//ஆனந்த விகடனில் வந்திருக்கிறீர்களாமே! வாழ்த்துக்கள்.//
நன்றி சுல்தான் பாய்.
//ஓ கொடுமை!
மனநலமில்லாத சில பேருக்கு இல்லாததெல்லாம் நடப்பதாகத் தோன்றும். இன்னும் சீக்கிரமே குணப்படுத்த முயற்சித்திருக்க வேண்டுமோ?// மன நோயாளியாக மாற்றியதே சமூகம் தானே? உங்களோடு சேர்ந்து நானும் கதைக்கு சிகிச்சையளித்து... மன்னிக்கணும் விளக்கமளிச்சுக்கிட்டு இருக்கேன் :-)) இது கதைங்க.
நன்றி ஜோதிராமலிங்கம், அப்ப வலையுலக ஜோதியில் நீங்க ஐக்கியமாகிட்டீங்கன்னு சொல்லுங்க :-)
//வாழ்த்துக்கள் ஜெஸி.ஆனந்த விகடன் மேட்டருக்கு:)
உங்க தோழி பண்ண காரியத்துக்கு இல்லை ;)// நன்றி கண்மணி. என் தோழியா? எந்த தோழி? அட கதையில் வருவது நானுன்னே முடிவு பண்ணிட்டீங்களா? :-) நானுமில்ல என் தோழியுமில்ல - அது வெறும் கதை. "சூழல்கள் உண்மைத் தொட்டு இருக்கலாம் ஆனால் கதாபாத்திரங்கள், கதையின் கரு எல்லாம் கற்பனையே"ன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கணும்.
நல்ல கதை, நிஜமா கற்பனையா என்று சொல்ல முடியவில்லை!
//உங்களோடு சேர்ந்து நானும் கதைக்கு சிகிச்சையளித்து... மன்னிக்கணும் விளக்கமளிச்சுக்கிட்டு இருக்கேன் :-)) இது கதைங்க.//
இதுக்கே இப்படி அலுத்துகிட்டா எப்படி?
"அபிய சுட்டுட்டாங்களாமே!!!. த்சொ,த்சொ,த்சொ,த்சொ....
தொல்காப்பியனைப் பிடிக்கத்தான் இப்படியெல்லாம் பண்றானுங்க! விணாப்போனவனுங்க!!
கூட வர்ரானே ஒரு இன்ஸ்பெக்டர் இந்த திருட்டுப்பய பண்றதுதான் எல்லாம்"
இப்படியெல்லாம் பேசிக்கிறாங்க. (முடிவெட்டிக் கொள்ளும்போது கேட்டது)
நீங்க என்னான்னா?....
நன்றி குசும்பரே. உங்க பின்னூட்டத்தில் குசும்பில்லையே :-))?
//"அபிய சுட்டுட்டாங்களாமே!!!.
தொல்காப்பியனைப் பிடிக்கத்தான் இப்படியெல்லாம் பண்றானுங்க! //
அபி அப்பாவும் தொல்காப்பியரும் ஒரே ஆள்தானே? சுட்டுட்டாங்களா? என்ன சொல்றீங்க? புரியலையே?
\\பாலராஜன்கீதா said...
செப்.12, 2007 நாளிட்டு இன்று வெளிவந்துள்ள ஆனந்தவிகடனில்
= = = = = = = = = = = = = = = = = ஜெஸிலாவின் கிறுக்கல்கள்
www.jazeela.blogspot.com\\
யக்கோவ்...வாழ்த்துக்கள் ;-))
நல்ல கதை...ஆனா கடைசியில் கொஞ்சம் வேகம் இருக்கு....
Just read Vikatan and got hooked on to a 'Jezeelavin Kirukalgal'....read few post everything looks really good. Please let me know the type and size of the font u r using.....itz really looking nice
நன்றி கோபி, கடைசியில் வேகமா? ம்ம் ஆமாம் அவசரமா விமானம் பிடிக்க வேண்டியிருந்தது அதான் :-)
நன்றி ராஜா, ஆமா நீங்க எந்த ஊரு ராஜா?:-)) உங்க வலைப்பூ பார்த்து நீங்களும் என்னை மாதிரி சி.ஆர்.எம்.மை கட்டிக்கிட்டு அழுவுறீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எழுத்துரு:
லதா, இணைமதி, தேனீ. எப்ப நீங்க தமிழில் வலைப்பூ தொடங்க ஆரம்பிக்க போறீங்க?
இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் வலைபூ அறிமுகம் வந்திருக்கு.. பார்த்தீங்களாஆ..?
//இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் வலைபூ அறிமுகம் வந்திருக்கு.. பார்த்தீங்களாஆ..?//
எல்லோரும் அதே விஷயத்தைதான் பின்னூட்டமாகப் போட்டிருக்காங்க என்பதை நீங்க பார்க்கவில்லையா :-)?
hi jezzila mam
im Karthik frm Erode
kathai padithuvitu nangalum Mr.Sulthan polave ninaithom
piragiuthaan.......
ungalai arimugapaduthiya
vikadanku nandrigal
Thanks Regards
karthik
hello Jazeela akka..
Im Sudha frm Erode, vikatan parthu unga pages padichen. En frnd kude pesitu irukura unarvu vanthuchu.
Thanks
Bye Akka..
Sudha
hello Jazeela akka..
Im Sudha frm Erode, vikatan parthu unga pages padichen. en frnd kuda pesitu irukura unarvu vanthuchu.
Thanks
Bye Akka..
Sudha
எழுத்துரு பதிவிறக்கம் செய்தும் சரியாக தட்டச்சு செய்ய இயலவில்லை. உங்கள்
வளைத்தளத்தின் மேலே 'தமிழில் தட்டச்சு' எனும் இடத்தில் நீங்கள் கொடுத்துள்ள இணைப்பை காட்டிலும், http://quillpad.in/tamil/
எனும் இந்த இணையதளத்தில் மிகவும் இலகுவாக தட்டச்சு செய்யமுடியும்.முயற்சி செய்து பார்க்கவும்...
பிரச்னை பழசு.. டிரீட்மெண்ட் புதுசு. எழுத்துநடை புதிதாகவும், உள்ளிழுப்பதாகவும் இருக்கிறது. நன்றி.
நன்றி கார்த்திக். தமிழ் தட்டச்சு செய்து பழகுங்கள். உதவி வேணுமெனில் எழுதுங்கள்.
நன்றி சுதா, தோழியிடம் பேசும் உணர்வென்று சொல்லிவிட்டு 'அக்கா' என்று அழைத்தால் எப்படி? யாருப்பா அங்க வரவங்களையும் 'அக்கா'ன்னு அழைக்க சொல்லி பயமுறுத்துவது?
//எழுத்துரு பதிவிறக்கம் செய்தும் சரியாக தட்டச்சு செய்ய இயலவில்லை.// ஏன் ராஜா? ஈகலப்பை இருக்கிறதுதானே? எந்த இடத்தில் தட்டச்சு செய்து பார்த்தீர்கள்? ஈகலப்பை இருந்தால் அந்த எழுத்துரு பாவித்து ms-word, notepad எல்லாவற்றிலுமே தமிழில் தட்டச்சலாமே?
//உங்கள் வளைத்தளத்தின் மேலே 'தமிழில் தட்டச்சு' எனும் இடத்தில் நீங்கள் கொடுத்துள்ள இணைப்பை காட்டிலும், http://quillpad.in/tamil/
எனும் இந்த இணையதளத்தில் மிகவும் இலகுவாக தட்டச்சு செய்யமுடியும்.முயற்சி செய்து பார்க்கவும்...// நன்றி. தமிழில் தட்டச்ச என்று தந்தது, புதிதாக தட்டச்சு செய்ய வருபவர்களுக்கு. நீங்கள் தந்த தளமும் நன்றாக உள்ளது.
நன்றி ஆழியூரான்.
hi
you are in the right path.
keep it up.
congrajulations.
Old wine in a new coup!!!
Same old story (of love) between two sex , of same or oppsite . hope you understand and best wishes .
//you are in the right path.
keep it up. congrajulations.// நன்றி அனானி. அப்புறம் அது congratulations :-)
பிரபாகரன், ஓல்ட் இஸ் கோல்ட் இல்லையா? இந்த கதையில் காதல் எங்கிருந்து வருகிறது? ரொம்ப விலகி நின்றுதான் வாசித்திருக்கிறீர்கள் :-). வாழ்த்துக்கு நன்றி.
கதை படித்தேன் - நல்ல நடையில் எழுதப்பட்ட ஒரு அருமையான் சிறுகதை. பத்து பன்னிரண்டு வயதில் தாயை இழந்து - அந்த அருமைத்தாயை சரியாக கவனிக்காத தந்தையை வெறுக்கும் - அதனால் ஆண் சமுதாயத்தையே பிடிக்காத ஒரு பேதைப்பெண்ணை - கட்டியணைத்த ( கற்பழித்த அல்ல) ஒரு காமுகனை சில காலம் கழித்து அப் பெண் கண்டவுடன் - அக்காமுகனின் பெருமையை வெட்டி எறிந்து - கைதாகி - மன நலம் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு - தப்பிக்க முயன்று - தற்கொலை செய்து கொண்ட அவளின் மன நிலை - அவளின் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட (அனுபவித்து ரசித்து மனம் நெகிழ்ந்து) சிறுகதை - பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள் - தொடருங்கள் - வாழ்க வளமுடன்
dear madam,
really you are god blessed,
when i read about you you some thing special gift to your family.
congrates ,wishes, iam new to all thease .your writtings, comments, decitions all are perfect,
best wishes ,
zakkir
புல்லரிக்குது சாக்கிர் உங்க பின்னூட்டம் கண்டு. இருந்தாலும் ரொம்பவே சொல்லிட்டீங்க நன்றிங்க.
Post a Comment