அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.

மயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர்.

'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த சந்தோஷம் கிடைக்குமா, பொண்டாட்டி கூட வந்தா? அதான் அப்படி போல.

ஷார்ஜா கிரிக்கெட் அரங்கத்துல ஏப்ரல் 18 இசை விழா - ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், சித்ரா, சாதனா சர்கம், சிவமணின்னு இன்னும் நிறைய பெயர்கள். டிக்கெட்டில பெரிய பட்டியலை பார்த்ததுமே கண்டிப்பா போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அதற்கேத்தா மாதிரி அக்காவும் 2 வி.ஐ.பி. டிக்கெட் தந்தாங்க. 'உனக்கு ஏ.ஆர்.ஆர். பிடிக்குமே போயிட்டு வா'ன்னு. என்ன ஒரு நல்ல மனசு பாருங்க. சரி, நம்ம கதைய விடுங்க. நிகழ்ச்சி 8.30 மணிக்குன்னு போட்டிருந்தா மாதிரி சரியா நேரத்திற்கு ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. உள்ளே நுழையுறோம் ஏ.ஆர். ரஹ்மான் முதல் பாடலை தொடங்கிட்டார் 'கல்பலி ஹெய் கல்பலி'ன்னு 'ரங் தே பாசந்தி' படத்திலிருந்து. 'முதல் பாட்டு தமிழில் இருக்கும்னுல நினைச்சேன்னு' நான் முணுமுணுத்துக்கிட்டே உட்கார்ந்தேன்.


அடுத்த பாட்டே 'காதல் ரோஜா'வே ஹரிஹரன் குரலில். நான் சொன்னது கேட்டுடுச்சோன்னு பார்த்தா அந்த ஒரு பாட்டு மட்டுமில்ல. ஒரு ஹிந்தி, ஒரு தமிழ்ன்னு மாத்தி மாத்தி பாடி எல்லா வகையான இரசிகர்களையும் போட்டு இழுத்துட்டாங்க. 'என்னதான் சொல்லுங்க காதல் ரோஜாவே நம்ம எஸ்.பி.பி. குரலில் கேட்ட மாதிரி இல்ல ஹரிஹரன் தேவையில்லாம மெட்ட மாத்தி பாடி சொதப்புறார்'ன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்திலிருந்து என்ன வேண்டா வெறுப்பா கூட்டிப் போனவர் 'ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர், நீ பெரிய இவளா, அவர போய் சொதப்பல்னு சொல்றீயே'ன்னு சொன்னதும் நான் கப்சிப்ன்னு ஆகிட்டேன். அதன் பிறகு வந்த 'பூம்பாவாய் ஆம்பல்' ஹரிஹரன் - மதுஸ்ரீ பாடினார்கள். மதுஸ்ரீயை இரசிக்கும் அளவுக்கு ஹரிஹரனை இரசிக்க முடியவில்லை. மேடை பாடல்கள் என்றால் வித்தியாசம் காட்டுவதற்காக ராகம் மாற்றி பாடுவது, வரியை விட்டு பாடுவதெல்லாம் எஸ்.பி.பி. ஸ்டைல். அவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதாக மண்டையில் ஏறிடுச்சு போல அதனால் இவர் செய்தால் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடிய பாடலில் என்ன படமென்று தெரியவில்லை கவாலி பாடல் போல் இருந்தது, பாடலின் முடிவில் இருவரும் மாற்றி மாற்றி அந்த ஸ்வர வரிசைகளை வேகமாகப் பாட என்னை அறியாமல் கைத்தட்டவே தோன்றியது.

'நன்னாரே நன்னாரே'ன்னு 'குரு'வின் பாடலோடு இளமை துள்ள நீத்தி மோகன் ஆடத் தொடங்கியதும் பார்வையாளர்கள் கூட்டமும் ஆடத் தொடங்கிவிட்டது. அந்தப் பாட்டுக்கு மட்டுமல்லாமல் பாடிக்கிட்டே இருந்தா அலுப்பு தட்டிடும் என்பதற்காகவே நடன அமைப்புகளும் நிறைய பாட்டுக்கு அமைத்திருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகளாக இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப அழகா ஆடினாங்க. ஆடை அலங்காரமும் அற்புதமா இருந்துச்சு. நிழற்பட கருவி அனுமதியில்லன்னு சொன்னதால படம் எடுத்து தள்ள முடியல.

அடுத்து வரும் பாட்டு தமிழிலா ஹிந்தியிலான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது, ஒரு கிட்டார் ஸ்கோர் கொடுத்து என்ன பாட்டு என்று குழம்ப வைத்து யாரோ சின்ன பையன் மாதிரி வந்து தேனான குரலில் 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா'ன்னு சொன்னதும் தமிழ் தெரியாத அம்மணிகளும் எழுந்து குதித்தார்கள். யாருடா அந்த பையன்னு பார்த்தா கார்த்திக். அதில் நடுவில் வரும் 'வஹுவஹுவாஹா' ன்னு வருவதையும் பெண் குரலில் அமைவதாக பாடி கலக்கினார்.

தமிழ் பாட்டு பாடினா அது ஹிந்தியிலும் வந்திருந்தா தமிழோடு கடைசி பத்திய ஹிந்தில முடிக்கிறாங்க. ஆனால் ஹிந்தி பாட்டு பாடும் போது அது தமிழிலும் வந்திருந்தா தமிழை தொட்டு முடிக்கலைன்னு நான் புலம்பியவுடன், ஹிந்தில பாடிக்கிட்டு இருந்த மதுஸ்ரீ அதே பாட்ட டக்குன்னு தமிழில் 'கோழி கோழி இது சண்ட கோழி'ன்னு' என்னை பார்த்து பாடுறா மாதிரி இருந்தது. குரலிலே என்னமா ஒரு கிக் வச்சிருக்காங்க இவங்க.

அவங்க மட்டுமா சின்ன குயில் சித்ரா, அவங்க மேடைக்கு வந்ததும் என்ன ஒரு கர கோஷம். 'குமுசுமு குமுசுமு குப்புசே'ன்னு கோரஸ் தொடங்கியது அப்படியே கைத்தட்டு பிச்சிக்கிட்டு போச்சு. அப்படியே குயிலும் 'கண்ணாளனே எனது கண்ணை'ன்னு பம்பாயிலிருந்து அவிழ்த்துவிட அரங்கமெங்கும் உற்சாக ஒலிதான். தமிழில் மட்டுமா பாடுவேன் ஹிந்தியிலும்தான் பாடுவேன் என்பதாக 'ஜெயியா ஜலே'ன்னு லதா மங்கேஷ்கர் பாடிய தில் சே படத்து பாடலை யாருக்கும் சளைத்தவள் இல்லை என்பவராக ரொம்ப ரம்யமாக பாடினாங்க. அவங்க பாடி முடிச்சதும் அதே படத்திலுள்ள 'தில் சே' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாட பின் அசைவாக தீ டிஜிடல் கிராபிக்ஸில் நடனமாடியது. அதே மாதிரி 'அதிரடிக்காரன் மச்சான் - தீ தீ' என்ற சிவாஜி படப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் குரல் கணீரென்று ஒலிக்க எல்லா பாடகர்களும் மேடையில் அவருடன் கோரஸ். உண்மையில் அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.தான்.

சமீபத்தில் வந்த 'ஜோதா அக்பர்' படத்திலிருந்து 2-3 பாடல்கள். 'ஜஷ்-இ-பஹாரா' பாடலை மனம் ஒன்றி, என்ன அர்த்தமென்று புரியாத என்னை போன்றவர்களையும் அந்த பாட்டோடு ஒன்ற செய்தவர் ஜாவித் அலி. அழகா அடக்கமா அலட்டாமல் அற்புதமா பாடினார். ரொம்ப 'ஸ்மார்ட்'டாக வேற இருந்தார். சில பாடல்கள் புரியாமலே நம்மை சிலிர்க்க வைக்கவும், குரல் அடைத்து கண்ணில் தண்ணீர் வரவும் வைக்கும் - அப்படி நீங்கள் உணர்ந்ததுண்டா? சில தருணங்களில் சில பாடல்கள் அப்படி என்னை செய்ததுண்டு. அப்படியொரு பாடல்தான் அதே படத்தின் 'கவாஜா மேரே கவாஜா'
கசல் பாடல். ஏ.ஆர். ரஹ்மான் நம்மவர்கள் தொழும் போது தலையில் கைக்குட்டை கட்டிக் கொள்வார்களே அப்படி கட்டிக் கொண்டு ஈடுபாடோ பயபக்தியாக பாடினார். அப்போதும் அருகில் அவருடன் இணைந்து பாடியதும் ஜாவித்தான்.

'ஜலாலுதீன் அக்பர்...' என்று ஏ.ஆர். ரஹ்மான் குரல் ஓங்கி ஒலிக்க 'டிரம்ஸ்' வேகமாக வீசி தள்ளி தொடர்ந்தாற் போல் 'வீர பாண்டி கோட்டையிலே' தட்டி, கிடைக்கும் அன்றாட பொருட்களிலும் மயங்க வைக்கும் மந்திர இசை ஓசை வருமென்று விளங்க வைக்க தண்ணீர் பாட்டில், பெட்டி என்று எல்லாவற்றையும் தட்டி இசை உண்டாக்கினார் சிவமணி. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக. பிரம்மிக்க வைத்தது அவர் அளவற்ற இசை ஆர்வம், திகைக்க வைத்தது அவர் இன்ப இசை அதிர்வுகள், கை வலிக்கப் போகுதுன்னு நினைக்கும் அளவிற்கு மனுஷர் தட்டி உலுக்கிவிட்டார் - பார்வையாளர்கள் மனசையும் சேர்த்து. என்னமா வாசிக்கிறார். அவர் எதை எப்படி தட்டினாலும் இசை. அவர் டிரம்ஸுக்கு மட்டுமே எத்தனை ஒலிவாங்கிகள். மெல்லிய சத்தத்தையும் மனதிற்கு எடுத்து செல்லவாகவிருக்கும். அதே போல் புல்லாங்குழலை ஊதி காற்றில் கீதம் கலந்தார் நபீல். முன்பெல்லாம் டிரம்ஸ் யார், புல்லாங்குழல் யார் என்றெல்லாம் தெரியப்படுத்தக் கூட மாட்டார்கள். இசை கூட்டணியின் விதைகளை விருச்சமாக நமக்கு காட்டியது ஏ.ஆர். ரஹ்மான் என்றால் மிகையில்லை. திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிவமணி போன்றவர்களை தம் நிகழ்ச்சியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

பிளேஸ் 'ஒரு கூடை சன் லைட்' என்று பாடிவிட்டு இரண்டாவது முறை பாடும் போது பார்வையாளர்களிடம் வாத்தியார் கோடிட்ட இடங்களை நிரப்பச் சொல்வது போல் 'ஒரு கூடை .....' என்று கேட்க - எல்லோரும் ஒருமித்த குரலில் 'சன் லைட்' என்று கத்த அவரே தொடர்ந்து எல்லா வாத்தியக்காரர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். அதில் நினைவிருப்பது கல்யாண் -வயலின், சிவகுமார் -மியூசிக் சீக்குவன்ஸ், ரவிசங்கர் -கீபோர்ட், தாஸ் தாமஸ் -சாக்ஸ் அப்படின்னு நினைக்கிறேன். அதனைத் தொடர்ந்து அனைவரையும் செல்பேசியின் வெளிச்சத்தை தூக்கிக் காட்ட சொல்லி வழக்கமான பாடல்கள் பாடாமல் ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி அவர் சமீபத்தில் இசையமைத்த சேகர் கபூரின் எலிசபெத் (The Golden Age and the stage adaptation of The Lord of the Rings) 'பிரே பார் மீ பிரதர்ஸ், பிரே பார் மீ சிஸ்டர்ஸ்' (Pray For Me Brothers Pray for me sisters) என்று பிளேஸுடன் இணைந்து உருகிப் பாடி நம்மையும் கலங்கச் செய்து நிஜமாகவே ஒரு சகோதரனின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளச் செய்தது அந்த ஆங்கில பாடல்.

ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதே இந்தப் பாட்டுத்தான்னு ஊகித்து மக்கள் கைத்தட்டி வரவேற்க, பாடுபவர்களும் உற்சாகம் குறையாமல் அதுவும் நம்ம நரேஷ் 'ரூபாரூ'ன்னு வந்தாரு பாருங்க. யப்பா அதுக்கு கருப்பு ஆடையில வந்த பசங்களும் கலக்கலா ஆடினாங்க. ரங் தே பாசந்தி பட காட்சியவிட இது பிரமாதம்னு சொல்ல தோணுச்சு.

* வழக்கமான பாடல்களா இல்லாம புதுசு தரனும்னே குரு, ஜோதா அக்பர், சிவாஜி, அழகிய தமிழ் மகன்னு வந்த புதுப் படங்களிலிருந்து பாடல் தர தவறவே இல்ல.
* இடை இடையே அறிவிப்பாளர் பேசி அறுக்காமல், வித்தியாசமாக ஒரு நிமிஷம் கூட வீணடிக்காம தொடர்ச்சியா பாடல் குவிந்தது.
* பின்புறம் பாடலுக்கேற்ப டிஜிடல் கிராபிக்ஸ் ஸ்கிரீன், வண்ணமயமான விளக்குகள், அருமையான ஒலியமைப்பு எல்லாமே கண் கொட்டாம பார்க்க செய்தது.
* நிகழ்ச்சியின் பலம் எல்லா பாடல்களுக்குமே ஏ.ஆர்.ஆர். கூடவே இருந்து தமது கீ போட்டை தட்டிக் கொண்டிருந்தது.
* டிஜிடல் ஸ்க்ரீன் பிரம்மாண்டமாக வைத்ததால் காலரியில் இருப்பவர்களும் கொடுத்த 125 திர்ஹமுக்கு நிறையவே இரசித்து மகிழ முடிந்திருக்கும்.

நாங்க 11.30 மணிக்கே கிளம்ப வேண்டியிருந்ததால கடைசி பாடலான 'வந்தே மாதிர'த்தைக் கேட்க முடியவில்லை. வெளியில் வந்தால் டிக்கெட் யாராவது தரமாட்டார்களான்னு ஒரு கூட்டமே காத்துக் கிடந்தது. உபயோகித்த டிக்கெட்டை கொண்டு மறுபடியும் உள்நுழைய முடியும் போல அதனால் அதையும் கொடுத்து. டிக்கெட் காட்டினால் கையில் ஒரு வலையம் கட்டிவிட்டார்கள். அதையும் கழட்டிதாங்கன்னு கெஞ்சிக்கிட்டே வந்தார் ஒருத்தர். சரின்னு அதையும் கொடுத்துவிட்டு வந்தோம்.

இதே போன்ற ஒரு ஏ.ஆர்.ஆர். நிகழ்ச்சி சென்னையில் 20ஆம் தேதி கலகலத்ததாமே அதற்கு யாராவது போனீங்களா?

இந்தக் காலத்துல நிறைய பாடகர்கள் குவியுறாங்க ஆனால் அதிர்ஷ்டம்னு ஒண்ணு கூட இருந்தாதான் பலர் காதுகளில் அவர்கள் குரல் ஒலிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு பல புது பாடகர்களை துறைக்கு அழைத்து வந்திருக்கிறார். 'சலாம் நமஸ்தே' நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே அவர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ் இவர்களெல்லாம் ஹிந்தி பாடும் போது 'ஹிந்தி என்னா பாடுபடப் போகுது'ன்னு நினைச்சாங்களாம். ஆனா அந்த அளவுக்கு உடையல நல்லாவே உச்சரிக்கிறாங்கன்னு குறிப்பா சொன்னாங்க. ஆனா தமிழில் அதப்பத்தி யாருமே கவலைப்படுறதில்ல. ஏ.ஆர்.ஆர். கிட்ட எனக்குப் பிடிக்காதது தமிழ் தெரியாத பாடகர்களை தமிழ்க் கொலை செய்வதற்காகவே அழைத்து வந்து நல்ல வரி பாடல்களை கொலை செய்வதுதான். பாட்டு எழுதுபவர்கள் என் பாட்டை 'உதித்' மாதிரி ஆட்கள் கொலை செய்ய வேணாம்னு சொல்ல முடியாதுதான். ஆனால் ரஜினி மாதிரி கதாநாயகர்களாவது 'சஹானா சாரல்' போன்ற அழகிய பாடல்களை ஹிந்திக்காரர்கள் உச்சரிப்பு சிதைக்குதுன்னு சொன்னாத்தான் என்ன? ரஜினி மாதிரி கதாநாயகர்கள் தமிழ் உச்சரிப்பு சிதைவதைப் பற்றிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். யப்பா, நான் ரஜினியை கிண்டல் செய்யலப்பா அவர் சூப்பர் ஸ்டார் என்பதாலே அவர் எப்படி வேணாலும் பேசலாம்.

26 மறுமொழிகள்

சொன்னது...

##'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த சந்தோஷம் கிடைக்குமா, பொண்டாட்டி கூட வந்தா? அதான் அப்படி போல//

ஆகா, தங்க மச்சான் பேசவே காசு கேப்பாரு, அந்த பச்சகுழந்தைய விசில் அடிச்சு சந்தோஷப்படுவார்ன்னு சொல்லுதியலே யக்கா இது அடுக்குமா:-))

ப்ச், நல்ல நிகழ்ச்சிய விட்டாச்சு, சரி அடுத்த தடவை வராமயா போயிடுவாரு, அப்ப பார்த்துக்கலாம்!!

சொன்னது...

அபி அப்பா, குசும்பர் திருமண படம் அனுப்புறேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டீங்களே.

நிசமாலுமே அந்த பச்சகுழந்த விசில் அடிச்சா காது கிழிஞ்சிப் போகும். :-)

சொன்னது...

நிறைய பாடகர்களை அறிமுகப்படுத்திய பெருமை ஏ.ஆர்.ரகுமானுக்கு உண்டு!

ஸ்ரேயா கோஷல் வரவில்லையா? :(

சொன்னது...

ஜெஸீலாவைக் காணவில்லைன்னு போலீஸ்ல புகார் பண்ணலாம்னு பார்த்தேன். எங்க போனீங்க. அறுபது நாளா ஆளக்காணோமே.

இவ்ளோ நேரம் இருந்துட்டு முடிக்காம பாதியில வரலாமா?

C.M.HANIFF சொன்னது...

A R R concert partathillai, ungal pathivu ennai live aaga antha concertukku kondu senrathu :-)

Anonymous சொன்னது...

There is new going around that, ARR's concerts are fack (karoge type). Is it true? Anybody knows?

சொன்னது...

ஆமாம் ஆலியன். எனக்கு பிடித்த ஸ்ரேயா கோஷல் வந்தா மாதிரி தெரியல.

சுல்தான் பாய், உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. சரியான கணக்கெல்லாம் வச்சிருக்கீங்க போலிருக்கே. என்னை போன முறை பார்க்கும் போதே புரியலைய என்ன? ஓய்வில் இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை.

ஹனீப் பாய், வாங்க. ரொம்ப நாளாச்சுல்ல? என் பதிவு அங்க கொண்டு சேர்ததுன்னு சொல்றது உங்க பெருந்தன்மை :-). அவங்க நிகழ்ச்சிய கண்டிப்பா வார்த்தையில் அடக்க முடியாது. அடுத்த முறை கண்டிப்பா வாய்ப்பு கிடைச்சா போய் பாருங்க.

சொன்னது...

"ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடிய பாடலில் என்ன படமென்று தெரியவில்லை கவாலி பாடல் போல் இருந்தது, பாடலின் முடிவில் இருவரும் மாற்றி மாற்றி அந்த ஸ்வர வரிசைகளை வேகமாகப் பாட என்னை அறியாமல் கைத்தட்டவே தோன்றியது."

இது என்ன பாடல் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கிறது. ஒரு வரியாவது ஞாபகம் உள்ளதா?

"சில பாடல்கள் புரியாமலே நம்மை சிலிர்க்க வைக்கவும், குரல் அடைத்து கண்ணில் தண்ணீர் வரவும் வைக்கும் - அப்படி நீங்கள் உணர்ந்ததுண்டா? சில தருணங்களில் சில பாடல்கள் அப்படி என்னை செய்ததுண்டு. அப்படியொரு பாடல்தான் அதே படத்தின் 'கவாஜா மேரே கவாஜா' [Photo]
கசல் பாடல்."

உண்மை தான், இந்த அற்புத பாடலை ரஹ்மான் அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்களின் மேலுள்ள பிரியத்தில் தனக்காகவே இசையமைத்துள்ளார், படத்தின் இயக்குனர் இந்த பாடலை கேட்டு விட்டு இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்பி பயன்படுத்திக் கொண்டதாக ரிடீஃப் இணைய தளத்தில் படித்தேன்.

சொன்னது...

ஹாய் ஜெஸிலா,

நான் உலக எயிட்ஸ் தினத்தன்னிக்கி
த்ருவ்னந்தபுரத்தில ஹரிஹரனோட ஒரு இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். நானும் ரொம்ப ஆவாலாத் தான் போனேன், ஆனா இந்த ஹரிஹரன் அடிச்ச கூத்து, ஏனோ எனக்கு அந்த நிகழ்ச்சி பாதியிலேயே வந்துட்டென்.கொஞ்சம் கூட நல்லாவேயில்லை. பாடல்களை ரசிக்கவும் முடியவில்லை. கஷ்டமாயிருந்தது.

சொன்னது...

ஜெஸீலா, நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது சென்னையி நடந்த இசை நிகழ்ச்சிக்கும், அங்கே நடந்த இசை நிகழ்ச்சிக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.

சென்னை நிகழ்ச்சி பற்றிய என்னுடைய பதிவு,

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/b9b031a9d3d0e9ae#

சொன்னது...

ஆஹா சூப்பரா எழுதியிருக்கீங்க ஜெஸிலா..
அதிலும் கடைசிப் பத்தி சும்மா நச்... :)

சொன்னது...

மன்னிக்கணும் நாகூர் இஸ்மாயில். நான் பதிவு செய்தது கூட அந்த ஸ்வர வரிசை மட்டும்தான். இன்னொரூ பாட்டு இருவரும் குரு படத்தில் 'தம் தரா தம் தரா - அய் ஹைரத்தி ஆஷிக்கி' பாடினாங்க சூப்பரா இருந்தது. ஆனால் இது என்ன பாட்டுன்னு தெரியல. சாதனாதான் முழுக்க பாடினார்கள், ஹரிஹரன் கடைசியில் ஸ்வர வரிசையில் தான் பாடி அசத்தினார். ரிடிஃப்ல் படித்ததை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

சுமதி, புதுசா படமெல்லாம் போட்டிருக்கீங்க. உங்க படம்தானோன்னு கிளிக்கிப் பார்த்து ஏமார்ந்தேன் :-). உங்க அந்த இசை நிகழ்ச்சியை பற்றி ஒரு பதிவா போட்டா என்ன?

அட ஆமா நரேஷ். உங்க பதிவை படிக்கும் போது புரியுது. வேற என்ன செய்வாங்க பாவம் ஒரு நாள் இடைவெளியில் 2 இடத்தில் நிகழ்ச்சி என்பதே பெரிய விஷயமல்லவா. ஆனால் துபாய் இழந்தது எஸ்.பி.பி., சங்கர் மகாதேவன். அவர்கள் இருவரும் சென்னை நிகழ்ச்சியில் இருந்தது பலம்தானே?

நன்றி ரிஷான்.

சொன்னது...

ஜெஸீலா, உங்களை உஷா சந்திப்பின் போது ,அருணா சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி அப்படியே நேர ஒரு அசௌகரியம் இல்லாம கேட்ட உணர்வு:)
பாப்பா நல்லா இருக்காளா,.

சொன்னது...

எஸ்.பி.பி சென்னையிலும் பாடவில்லை. சங்கர் மகாதேவன் தான் இருந்தார். ஆனால் சங்கர் மகாதேவன் இருந்ததே ஒரு பெரிய பலம்தான். வராக நதிக்கரையோரம் பாடல் கூட்டத்திலுள்ள அனைவரையும் கவர்ந்தது.

சொன்னது...

ஒர நிகழ்ச்சி நேரா பாத்த மாதிரி இருந்துச்சு...எப்பிடிங்க இப்படி எழுதுறிங்க...

உங்களுக்காகவே பாடினாமாதிர் இருக்கு எல்லோருமே...:)

சொன்னது...

நன்றி வல்லி அம்மா. அனைவரும் நலம். அடுத்த முறை துபாய் வரும் போது தொடர்பு கொள்ளுங்கள்.

நரேஷ், ச.ம. ஒரே ஒரு பாடல் மட்டுமா பாடினார்? ஏன் நம்ம தலைவர் அங்கும் வரவில்லை. நலத்திற்கு ஒன்றும் பிரச்சனையிருக்காது என்று நம்புவோம்.

வாங்க தமிழன். சுகம்தானே? எனக்காவே எல்லோரும் பாடுறா மாதிரி நெனப்புல இரசிக்க வேண்டியதுதான் :-)

Anonymous சொன்னது...

ஹலோ, நான் சமீபத்தில்தான் உங்கள் வலைப் பதிவுக்குள் நுழைந்தேன், மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். அமீரகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்சிகளுக்கும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத என் போன்ற ரசிகர்களின் ஏக்கத்தை உங்கள் எழுத்து மூலம் கிடைக்கும் நிகழ்ச்சி வர்ணனை தீர்த்து வைக்கிறது என்றே நான் நினைக்கிறேன். வளர்க உங்கள் கலைத்தொண்டு, வாழ்த்துக்கள்.

அபூ இம்தியாஸ்
ஷார்ஜா.

சொன்னது...

அடடா,... ஜெசிலா அக்கா,,. கலக்கலா விவரிச்சிருக்கிங்க.. சூப்பரு:))))

சொன்னது...

அதிரடி எழுத்துங்க. ரஹமான் மியூசிகல் ஷோ பார்த்திருந்தாக்கூட இப்படி அனுபிவிசிருக்க முடியாதுங்க.

சொன்னது...

வாங்க இம்தியாஸ், நம்ம ஊருங்களா சந்தோஷம். வரும் மே 9-ஆம் தேதி கூட ஒரு அருமையான நிகழ்ச்சி துபாய் ஷேக் ராஷித் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நுழைவு சீட்டு சிவ்ஸ்டார் பவன் கராமாவில் உடனே அனுகினால் கிடைக்கும் -விலையும் 10திர்ஹம் மட்டும்தான். பி.எச்.ஹமீத் அவர்களின் பாட்டுக்கு பாட்டு, அசத்தப்போவது யாரு, மானாட மயிலாட என்று சின்னத்திரை அசத்த போகிறார்கள். கலந்து கொள்ள பாருங்கள்.

நன்றி ரசிகன். உங்களின் தவறாத பாராட்டுக்கு.

மகிழ்ச்சி மேட்ஸ்க்ரிப்ளர். விவரமே இப்படியிருந்தா நிகழ்ச்சி எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்க :-)

Anonymous சொன்னது...

மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் ஜெஸிலா..
வாழ்த்துக்கள்!!!!

I saw in 'blue-ray DVD', but your post is Magnificent

S.Ravi
Kuwait

சொன்னது...

வாங்க ரவி. பின்னூட்டத்திற்கு நன்றி ரவி. ஆமா அது என்ன 'ப்ளூ ரே டிவிடி'?

சொன்னது...

இல்லீங்க ஜெஸீலா, சங்கர் மகாதேவன் இல்லையில்லை சொல்ல, வராக நதிக்கரையோரம், மற்றும் பல பாடல்கள் பாடினார். சில இந்தி பாடல்கள் கூட பாடினார்.
இன்னும் சொல்லப் போனால் அன்று அதிகம் பாடியது ரகுமானும், சங்கர் மகாதேவனும் தான்.
ஆனால் அவற்றில் அனைவரையும் கவர்ந்தது வராக நதிக்கரையோரம் பாடல்தான், ஏனெனில் அவை கூட்டத்தையும் பாடவைத்தார்.
அன்று ஹரிஹரன் கூட நாம் எல்லாம் ஒன்றாக பாடலாம் என்று பலமான பீடிகை போட்டார். ஆனால் அவர் பாட்டுக்கு கஜலில் ஆரம்பித்து பெயர் தெரியாத இந்தி பாட்டுக்கு மாறி எல்லாரையும் கடுப்பேத்தினார்.

Anonymous சொன்னது...

///ஆமா அது என்ன 'ப்ளூ ரே டிவிடி'?////

Madam.ஜெஸிலா..
Its Next generation DVD.
Normally all our present DVDs are using red ray which gives less depth/width of recording.But Blue sorry Blu-ray gives you more capacity and depth in vision/audio.you have to use Blu-ray DVD player with Blu-ray CD

If you still seek more ...see site - http://www.blu-ray.com/info/

சொன்னது...

அன்புள்ள சகோதரி ஜசீலா வுக்கு,
பெண் என்றாலே வெறும் மண்தான் என்ற நினைப்பை உங்கள் எழுத்து மாற்றி விடுகிறது.
நன்றி.

சொன்னது...

நரேஷ் & ரவி - தகவலுக்கு நன்றி. உடன் நன்றி தெரிவிக்காமைக்கு வருந்துகிறேன்.

அன்பு, உங்கள் அன்புக்கு நன்றி ஆனால் பெண்ணென்றாலே மண் என்பது ரொம்ப அதிகம்ங்கோ. உங்கள் நினைப்பை அடியோடு மாற்றிடுங்கோ.

Blog Widget by LinkWithin