வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே ஆசிப் இனிப்பு வழங்கி 'படம் குப்பையாம்; வாழ்த்துகள்!' என்று வரவேற்றார். கொஞ்சம் கல்வரமாக இருந்தது - ஆனாலும் காத்திருந்த. நம்பிக்கை வீண் போகவில்லை.

பொதுவாகவே கவுதமிடமிருந்து விறுவிறுப்பான, அதிர்ச்சிகள் அடங்கிய, திகில் நிறைந்த, புதிர் புகுத்திய படத்தைத்தான் எதிர்பார்ப்போம். இதுவோ நேர்மாறாக மெல்லிய உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் படமாக.

படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது. ஆனால் படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'கவிதை'. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப 'கதை என்ன சொல்ல வருது' என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை. நெருக்கமான தகப்பன் மகன் உறவு குறித்த ஒரு வாழ்க்கைப் பயணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


இரட்டை வேடத்தில் சூர்யா என்று தோன்றாதபடி அப்பட்டமான இரு உருவம் கொண்டவராக மாறியிருக்கிறார். முதிர்ந்த சூர்யா ஒப்பனையில் மட்டும் முதிர்ச்சியை காட்டாது தனது உடல் மொழியிலும் அற்புதமாக வித்தியாசம் காட்டியுள்ளார். மகன் சூர்யா அந்த வயதிற்கொப்ப காதல் நாயகனாக அப்பாவை தன் நாயகனாக கொண்ட அடக்கமான புதல்வன் என்ற ஒரு வேடம் மட்டுமில்லாமல் அதிலும் வயது வித்தியாசங்களை காட்ட ஒப்பனையை மட்டும் நம்பாமல் உடல் அசைவில், குறும்பு பார்வையில், இளமை துள்ளல் சொட்ட நடித்துள்ளார். அதுவும் அவர் மேகனாவை காணும் போதெல்லாம் மனதின் அதிர்வுகளை கண்களில் காட்டி அந்த இரயில் தடதடக்கும் வேளையில் ஒளித்து வைக்க முடியாமல் உடனே கொட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் தருணத்தில், அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் அப்பப்பா சூர்யா - 'சூர்யா' என்றாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாக்கியத்திற்கு பொருந்தும் அளவிற்கு நடிப்பை கொட்டி, வானம் பல வர்ணங்களை காட்டுவது போல் சூர்யாவும் பல்முக நடிப்பில்.

கதாநாயகி சமீரா - பார்த்தவுடன் பிடித்து போகும் முகமில்லை. ஏ.ஆர். ரஹ்மான் பாடல் கேட்க கேட்க பிடித்து போகுமே அதுபோல சமீராவின் முகமும் அந்த கதாபாத்திரத்தோடு நாம் ஒன்றும் போது பார்த்து பார்த்து பிடித்து போகிறது.

ரம்யா (திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்) கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியாக அமைந்திருக்கிறது. அவள் காதல் தெரிவிக்கும் தருணமும் அதன் நேர்த்தியும் மிக அழகு.

நெடுங்காலமாக ஒப்பனை போட்ட முகமென்பதால் சீக்கிரமே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிட்டதால் சிம்ரனுக்கு வயதானவருக்கான ஒப்பனைக்கு அவசியமில்லாத அளவுக்கு கிழடுதட்டிவிட்டது. அவருடைய மலரும் நினைவுகளில் இளம் சிம்ரனாக மாற்றத்தான் ஒப்பனையாளர் கொஞ்சம் சிரமம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பாடல் வரிகள் தாமரை என்பதாலும் அதற்கு ஹாரிஸ் இசையமைத்திருப்பதாலும் கேட்வே வேண்டாம், எனக்கெல்லாம் கேட்காமலே பிடித்து போகும். அதுவும் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' உண்மையில் மனதில் மழைத்துளி சொட்டும் பாடல்தான்.

இன்னும் முயன்றிருந்தால் நிறைய கத்திரித்திருக்கலாம். தமிழக திரையரங்கில் குழந்தை கடத்தல் விஷயத்தை மொத்தமாக கத்தரித்துவிட்டார்களாம் - அதுவும் நல்லதுதான். தேவையற்ற சாயம் பூசிய நிஜமில்லாத கதாநாயக சாகசம் இந்தப் படத்திற்கு தேவையற்றதுதான்.

படம் முழுக்க ஆங்கிலம் கதைத்துவிட்டு கடைசி காட்சியில் 'வாரணம் ஆயிரத்திற்கு' பொருள் சொல்லும் பாங்கு சிரிப்பை வரவழைத்தது.

படத்திற்கு என்னவோ என்னால் கதைச் சுருக்கம் சொல்ல முடியவில்லை - சுருக்கும் படியாக இல்லையப்பா மிக நீளப்படம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.

இப்படி நம் தந்தை இருந்திருக்க கூடாதா என்று சிலருக்கும், என் குழந்தைக்கு இப்படி ஒரு தகப்பனாக இருப்பேன் என்று சிலருக்கும் தோன்றினாலே இயக்குனருக்கு வெற்றிதான். பார்க்க வேண்டிய படம்தான், ஒரு முறையாவது.

Blog Widget by LinkWithin