நம்முடைய செயல்களில் மலிந்து கிடக்கும் பொய்களும் குற்றங்களும் யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை என்ற அலட்சியப் போக்கினாலேயே தவறுகள் தொடர்கின்றன. ஆனால் திடீரென ஒருவர் நம்மை நிறுத்தி நீ செய்யும் தவறுகளும் திருட்டுத்தனங்களும் எனக்குத் தெரியும், ஒரு வாய்ப்பு தருகிறேன் அதனை நீயே ஒப்புக்கொள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து மிரட்டுபவர்க்கு தேவையானதைத் தந்து வாயடைத்துவிடலாம், எதிர்பார்ப்பேயில்லாத ஒருவருக்கு? நம் இரகசியத்தைத் தெரிந்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், தண்டிக்க நினைப்பவர் இந்த தகுதிகளெல்லாம் கடவுளுடன் பொருந்திப் போனாலும் அதைப் பரம்பொருளாகப் பார்க்கவும் முடியாமல், குற்றங்களை ஒப்புக் கொள்ளவும் இயலாமல், இருந்த இடத்தை விட்டு நகரவும் முடியாத சூழலில்தான் மாட்டிக் கொள்கிறார் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரல்.
ஒரு பொதுத் தொலைபேசியின் மணி அடிக்கிறது, அது யாராகவும் இருக்கலாம் அந்த அழைப்பு யாருக்காகவும் இருக்கலாம். இருப்பினும் அதனை எடுத்து பேசத் தோன்றுகிறது. அப்படித் தோன்றிய தூண்டிலில் தான் மாட்டிக் கொள்கிறான் கதாநாயகன் ஸ்டூ.
கதாநாயகன்? ஒரு திரைப்படத்தில் நல்லவனாக வருபவர் கதாநாயகனா அல்லது அதிக காட்சியில் வருபவர் கதாநாயகனா? நல்லவர் கதாநாயகனென்றால் அழைப்பிற்கு மறுமுனையில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தகாரர் கீஃபர் சுதர்லாண்ட்டை கதாநாயகன் என்று சொல்லலாம். அதிகக் காட்சியில் வருபவர் கதாநாயகனென்றால் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரலாகவும் இருக்கலாம், அந்தத் தொலைபேசியாகவும் இருக்கலாம்.
குறிபார்த்து சுடுவதில் வல்லுனரான கீஃபரின் தூண்டிலில் மாட்டிக் கொண்டு ஃபாரல் தவிக்கும் தவிப்பே முழுப் படமும். ஆரம்பத்தில் கீஃபரின் மிரட்டலுக்கு அலட்சியம் காட்டும் ஃபாரல் பின்பு ஒவ்வொரு காட்சியிலும் வேறுபடுத்திக் காட்டும் உடல் மொழியும் அவர் முக அசைவுகளும், கண்களில் மட்டுமே நமக்கு காட்டும் பயம், கோபம், தவிப்பு என ஆயிர உணர்வுகளும் நம்மை திரைப்படத்தை விட்டு நகரச் செய்யாமல் இறுக்கிவிடுகிறது. இருக்கையின் நுனியில் அமர்ந்து நகம் கடிக்க வைக்கும் படமாக இல்லாவிட்டாலும், விறுவிறுப்பான திரைக்கதையும் காட்சியமைப்புகளும் ஒருவித திகில் உணர்வைக் கிளறிவிடுகிறது. குறிப்பாக கீஃபரின் குரல் வளம் ஃபாரலை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது.
’காதலியா? மனைவியா? மனைவியை காதலிக்கிறாயென்றால் காதலியெதற்கு?’ என்று உலுக்கும் கேள்விகளை அடுக்கி ஃபாரலின் உள்ளுணர்வுகளை தோலுரித்து அம்பலமாக்கி சோதனைக்குள்ளாக்கும் போது தன்னிலை உணர்ந்து கூனிக்குறுகி புழுவாகத் துடித்து தன் தவற்றை ஒத்துக் கொண்டு ஃபாரல் அழும் காட்சி நேர்த்தி. எதிர்பார்க்கவே முடியாத காட்சி நகர்வுகள். ’அடுத்து என்ன?’ என்ற போக்கிலேயே நேரம் போவதே அறியாமல் படம் முடிகிறது.
திரைப்படத்தின் கதைக் களம் நியூயார்க் நகரத் தெருவிலுள்ள ஒரு தொலைபேசிக் கூண்டு மட்டும் தான். அதில் ஃபாரல்- கீஃபர் இருவருக்கு இடையிலான சுவாரஸ்ய உரையாடலை அதுவும் இருவரில் ஒருவரின் முகத்தை காட்டாமலேயே படம் முழுக்க அதே தெரு அதே பொதுத் தொலைபேசி கூண்டை மட்டும் வைத்து இப்படியான ஒரு அசாத்திய கதையை வடித்துள்ள லாரி கோஹனுக்கும் அதை அழகாக இயக்கியுள்ள ஜோயல் ஷூமாக்கருக்கும் ஒரு சபாஷ் சொல்லியாக வேண்டும்.
ஹீரோயிஸம், அரை மணிநேரத்திற்கு ஒரு பாட்டு, வெளிநாட்டு காட்சியமைப்பு, கவர்ச்சி நடிகை, பறந்து அடிக்கு சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் கதையை மட்டும் வலுவாக்கினால் வெற்றி நிச்சயம் என்பதன் சாட்சியே ’ஃபோன் பூத்’ திரைப்படம். இந்த மாதிரியான நல்ல படங்களை பார்த்து முடித்த பிறகு எப்போது தமிழில் இப்படியான படங்கள் வருமென்ற எண்ணமே மேலோங்குகிறது.
21 comments:
jazeela, pesama neengale padam eduka vendiyathu thaane.....
//ஒரு திரைப்படத்தில் நல்லவனாக வருபவர் கதாநாயகனா அல்லது அதிக காட்சியில் வருபவர் கதாநாயகனா?//
அது யாராக இருந்தாலும் இப்படத்தில், கதைதான் கதாநாயாகனாக இருக்கிறதென்று சொல்கிறீர்கள்.
கதாநாயகன்? ஒரு திரைப்படத்தில் நல்லவனாக வருபவர் கதாநாயகனா அல்லது அதிக காட்சியில் வருபவர் கதாநாயகனா? நல்லவர் கதாநாயகனென்றால் அழைப்பிற்கு மறுமுனையில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தகாரர் கீஃபர் சுதர்லாண்ட்டை கதாநாயகன் என்று சொல்லலாம். அதிகக் காட்சியில் வருபவர் கதாநாயகனென்றால் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரலாகவும் இருக்கலாம், அந்தத் தொலைபேசியாகவும் இருக்கலாம்
/\*/\
ஆங்கிலத்தில் hero என்றும் protagonist என்றும் இருவிதமாக அழைக்கிறார்கள். ஆனால் நம் தமிழில் அது போல் இல்லை. உங்கள் இடுகையும் படத்தை போலவே நன்றாக இருக்கிறது
ஏற்கனவே லிஸ்டில் உள்ள படம் தான்..நல்ல விமர்சனம் செய்துயிருக்கீங்க.
எங்க இருந்து இதை இறக்கி பார்த்திங்கன்னு விபரம் அனுப்பின ரொம்ப புண்ணியாம போகும். ;)
ஹாலிவுட்டில் கதாநாயகன் என்று குறிப்பிடுவதில்லையே? லீட் ரோல் என்றே குறிப்பிடுகிறார்கள். அது ஆண்,பெண்,குழந்தை என எல்லாரையும் பொருந்தும்.
//எங்க இருந்து இதை இறக்கி பார்த்திங்கன்னு விபரம் அனுப்பின ரொம்ப புண்ணியாம போகும். ;)//
அட உங்ககிட்ட கொடுத்தேனே தல. பார்க்கலையா? இல்லைன்னா வாங்க. நம்மகிட்ட இருக்கு.
நேரம் எல்லாம் வீணாகல இந்த பதிவ படிச்சதுக்கு :)
//எங்க இருந்து இதை இறக்கி பார்த்திங்கன்னு விபரம் அனுப்பின ரொம்ப புண்ணியாம போகும். ;)//
சொர்கலோகத்தில் இருந்து, ஒரு தபா போய்ட்டு வாயேன் கோபி!
பெனு அக்கா, நான் படமெடுக்க தயார் நீங்க தயாரிப்பீங்கள?
வாங்க சுல்தான் ஐயா, நலம்தானே. நீங்க சொன்னது 100% சரி கதைதான் படத்தின் நாயகன் :-)
உயிரிலும் மேலான உடன்பிறப்பே, இப்படியான அழகான விளக்கத்தை தந்தமைக்கு நன்றி. தமிழில் அது போல இல்லையென்று ஏன் சொல்ல வேண்டும்? நாமாலே ஒரு ஒரு பெயர் வைத்துவிடுவோம். சரியா?
நன்றி கார்த்திகேயன். இப்பவே வந்து படிக்கிறேன் உங்க பதிவை.
கண்டிப்பா பாருங்க கோபி. யாரோ இறக்கியதை தந்தார்கள் பார்த்தேன். 1 ஜிபி தான் மொத்த படமும் மடலில் அனுப்ப முயற்சிக்கிறேன்.
எங்க இருந்து இதை இறக்கி பார்த்திங்கன்னு விபரம் அனுப்பின ரொம்ப புண்ணியாம போகும். ;)
//
சாரு விமர்சணம் பார்த்ததில்லையா..?
அதுமாதிரிதான்
:))
:)))
ஆங்கில படங்களுக்கு என் ஃபேவரைட் சைட் www.stagevu.com தான்
phone booth இங்கே :)
http://stagevu.com/video/tjawmdncraqp
//ஹாலிவுட்டில் கதாநாயகன் என்று குறிப்பிடுவதில்லையே? லீட் ரோல் என்றே குறிப்பிடுகிறார்கள். அது ஆண்,பெண்,குழந்தை என எல்லாரையும் பொருந்தும்.//
ஆமாம் ஆதவன் ஆனால் நான் தமிழ் பதிவு எழுதுகிறேனே அதில் ‘லீட் ரோல்’ என்று ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது? :-)
குசும்பரே! உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா? பாவம் கோபி. நீங்க பி.ப.வாக இருக்கலாம் அதற்காக இப்படியா :-))
'லீட் ரோல்' என்பதை முதன்மை பாத்திரமென்ரோ முதன்மை நாயகனென்றோ அழகு தமிழில் சொல்ல என்ன தயக்கம்?
சில வருடங்களுக்கு முன்பு டிவிடியில் பார்த்து இரசித்த படம். நம்ம ஊர் தியேட்டர்களில் வெளியானதா?
சினிமா பிசினஸ் முன்பு போலில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் Phone Booth போன்ற முயற்சிகள் நிச்சயம் தமிழிலும் விரைவில் வரும்.
இது என் நம்பிக்கை அல்ல. ஆரூடம்.
'Phone Booth'க்கு சுட்டி தந்துதவிய மின்னுது மின்னலுக்கு நன்றி. கோபி நல்ல நண்பர்தான் உங்களுக்கு கேட்டவுடன் தந்துவிட்டார் பார்த்தீர்களா.
உடன்பிறப்பு சொன்னா மாதிரி. Heroக்கு கதாநாயகன், protagonist ஐ முதன்மை நாயகன் என்று சொல்லிடலாம். சரிதானே ஆசிப்?
அழகான விமர்சனம் ஜசீலா!
கதையைப் போலவே உங்க விமர்சனமும் விறுவிறுப்பாக இருந்தது.
"படம் நல்லா இருக்கு.... ஆனா ஓடாது"ங்கற நிலைமை மாறினால் தான் நல்ல படங்கள் வரும். இல்லை என்றால் பொருளாதார ரீதியாக "அன்பே சிவம்" படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் நல்ல படங்களுக்கும் :))
//குறிப்பாக கீஃபரின் குரல் வளம் ஃபாரலை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது. //
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அந்த குரல் தான்.
வாங்க செல்வகுமார், படத்தின் வெற்றியென்பது படத்தின் வசூலை பொருத்தாகிவிட்டது. நம்மூர்ல பெரும்பாலும் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதே கல்லூரி வாண்டுகளும், கீழ்மட்டத்தவரும் நடுவகுப்பினரும் உழைத்து தேய்ந்து ஒரு பொழுதுபோக்குக்காக இளைப்பாறுவதக்காக போகிறார்கள். அப்படியானவர்கள் தடால்புடால் சண்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இரசித்து வர செல்வதனாலேயே இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தன் படத்தை வணிகமயமாக்க விரும்பியோ விரும்பாமலோ மசாலா படங்களையே அதிகம் எடுத்து தொலைக்க வேண்டியுள்ளது. :-(
நன்றி செந்தில்குமார். //பொருளாதார ரீதியாக "அன்பே சிவம்" படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் // செல்வகுமாருக்கு சொன்னதே தான் உங்களுக்கும்.
அன்பரசு பார்த்தேன் படித்தேன் உங்கள் விமர்சனத்தை. //கதை வலுவாக இருந்தால் எதுவும் சாத்தியம்// இந்த விஷயத்தில் நாம் ஒத்துப்போகிறோம் கவனித்தீர்களா?
இப்படி படங்களுக்கு விமர்சினம் எழுதி படம் பார்க்கும் ஆசையை தூண்டி விடுகிறீர்களே. சரி இதையும் என் பார்க்க வேண்டிய பட பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்.
//எப்போது தமிழில் இப்படியான படங்கள் வருமென்ற எண்ணமே மேலோங்குகிறது.
//
சாணக்யாங்கற ஒரு தமிழ் படத்துல இந்த படத்தை பத்து நிமிசம் காட்டி இருப்பாங்க. கொடுமையா இருக்கும் :(
கண்டிப்பாக சேர்த்து கொள்ளுங்கள் பாலு. இது புத்தம் புதிய படமல்ல அதனால் எளிதில் குறுந்தகடு கிடைக்கும்.
அப்படியா சென்ஷி. புது தகவல். 10 நிமிஷம் மட்டுமே காட்டியிருந்தா கொடுமைதான் :-)
\ஜெஸிலா said...
'Phone Booth'க்கு சுட்டி தந்துதவிய மின்னுது மின்னலுக்கு நன்றி. கோபி நல்ல நண்பர்தான் உங்களுக்கு கேட்டவுடன் தந்துவிட்டார் பார்த்தீர்களா.
\\
உங்களுக்கும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி ;))
மிஸ்டர் குசும்பன் அண்ணே...கிர்ர்ர்ர்ர்ர்ர்.
Post a Comment