Wednesday, September 23, 2009
நம்மைப் போல் ஒருவன்
இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.
1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் நாட்டின் நாடாளுமன்றத் தாக்குதல், மும்பாய் குண்டுவெடிப்பு சம்பவங்கள், கோவை குண்டுவெடிப்பு அதிர்வு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், குஜராத் வன்முறை இப்படி நாம் கடந்து போன தீவிரவாத செயல்களை நாம் மறந்தே விட்டோம். ”மறதி ஒரு தேசிய வியாதியாகிவிட்டது” என்ற குற்றச்சாட்டை பிரதானப்படுத்தி, தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வென்ற சீற்றத்துடன் கிளம்பிய என்னைப் போல் உங்களைப் போல் ஒரு பொதுமக்களில் ஒருவனே ‘உன்னைப் போல் ஒருவன்’.
இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தைத் தமிழ் ஊடகம் தள்ளி நின்றே வேடிக்கை பார்க்கும். தனக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தமிழ்நாடு தனி நாடு போல அது ஒரு அமைதிப்பூங்கா என்று சொல்லிக் கொண்டு அந்தத் தீவிரவாத நிகழ்வில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்று மட்டுமே கணக்கில் கொள்ளும் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இது என்ன பெரிய விஷயம் நம் தமிழ் சகோதரர்கள் கோடிக் கணக்கில் ஈழத்தில் உயிரிழந்த போதே நீலிக் கண்ணீரை மட்டுமே வடிக்க முடிந்த நமக்கு இதெல்லாம் சகஜம்தானே?
காவல்துறையின் கடமையில் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகளைக் குறித்தும், அதனால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் வெளிச்சம் போடும் இயக்குனர் சக்ரி டொலெட்டிக்கு இது தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கமலின் தலையீடுகளே அதிகம் வெளிப்படுகிறது.
மிகவும் கூர்மையான வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதாக வசனங்கள் தொணித்தாலும் மிகவும் நெருடலாக இருப்பது ஆங்கிலக் கலப்பு. நிகழ்வில் ஆங்கிலத்தையே உயர்த்தி பிடிக்கும் தமிழ்நாட்டவர்களை யதார்த்தமாகக் காட்ட முயன்றிருந்தாலும் பாமரர்களுக்கும் போய் சேர வேண்டுமென்ற எண்ணமில்லாத வசனங்களை வடித்திருக்கிறார் இரா. முருகன். ஒரு காட்சியில் மலையாளியான கமிஷனர் மாரார் (மோகன்லால்) அதிகாரி சேதுவுக்கு (பரத்ரெட்டி) தமிழ் கற்றுத் தருவதாக காட்டும் போது கூடவா இடரவில்லை இவர்களுக்கு? ’பைனரியில்’ சொல் என்று கேட்கப்படுவது எத்தனை பேருக்குப் புரியப் போகுதோ! தலைமை செகரட்டரியாக வரும் லக்ஷ்மி தஸ்புஸ் என்று சரளமாக ஆங்கிலத்தில் கமிஷ்னரிடம் பேசும் காட்சியும் அதிலிருக்கும் மெல்லிய நகைச்சுவையும் எத்தனை பேர் இரசிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. திரையரங்கிற்கு அதிக அளவில் சென்று படம் பார்ப்பது மாணவர்கள்தான், அவர்களே ‘என்னப்பா படம் ஒரே பீட்டரா’ இருக்கு என்று சொல்லிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
என்னதான் எந்த மதத்திற்கும் ஆதரவில்லாதவராகவும், பெயர்களில் கூட கவனமாகக் கையாண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ’முஜே ஃபக்கர் ஹே’ (நான் பெருமைப்படுகிறேன்) என்று மார்தட்டிக் கொள்ளும் தீவிரவாதிகளை முஸ்லிமாகவும் தனது மார்க்கத்திற்காக அப்படி செய்வதாகவும் தேவையற்ற வசனங்களைப் புகுத்தியவர் ஒரு ஹிந்து தீவிரவாதி மட்டும் மிகவும் அப்பாவியாக ‘முஜே பக்கர் நஹி ஹே’ (எனக்குப் பெருமை இல்லை) என்று தான் அறியாமல் செய்த தவறாக ஒப்புதல் அளிப்பது இவர்களின் முகமூடியைக் கிழிக்கிறது. நான் அசலான ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காததால் கிழிந்தது இவர்கள் முகமூடியா அல்லது அசலிலும் அப்படித்தான் வருமா என்பது தெரியவில்லை.
குஜராத் கலவரத்தில் ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசிய கொடூரத்தை இரண்டு சொட்டு கண்ணீரால் நிரப்புகிறார் கமல். அதுவும் அந்தக் காட்சி ஏதோ இந்த படத்தில் கமலின் நடிப்புக்கு பஞ்சம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒரு சொருகல் போல் தெரிகிறதே தவிர மனதை அழுத்தும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியாகப்படவில்லை.
என்னதான் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவர் நேர்மையும் சந்தேகத்திற்குட்படுகிறது, கேள்விக்குள்ளாகிறது என்பதை அழகாக நிரூபிக்கும் யதார்த்த காட்சி - கமிஷ்னர் மாரார் அதிகாரி ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும் என்று சொல்வது. ஆரிஃபாக வரும் கணேஷ் வெங்கட்ராமனை ‘அபியும் நானும்’ படத்திலேயே மிகவும் பிடித்துப் போனது எனக்கு. அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்பு, தெளிவான துடிப்பான முகம். கொடுத்த பாத்திரத்தில் அம்சமாகப் பொருந்தியிருக்கிறார்கள் இவரும் சேதுவாக வரும் பரத்ரெட்டியும். இவர் கதாபாத்திரம் மட்டுமல்லாது படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் குறிப்பாக
* தலைமை செக்ரட்டரியாக வரும் லக்ஷ்மி அந்த கிழடுதட்டிய முகத்தையும் கிளோஸப்பில் காட்டும் போது பயமுறுத்தாதவர்,
* நம் பதிவுலகத்திற்கு மிகவும் தேவைப்படும் மின்னஞ்சல் திருடர் (hacker) ஆனந்த் - இவர் சிறு வயதில் ’மே மாதம்’, ’அஞ்சலி’ படங்களில் நடித்தவர் ஆள் உயரமாகியிருக்கிறார் தவிர முகம் இன்னும் அதே குழந்தை முகமாக அவரை காட்டிக் கொடுக்கிறது
* நத்தாஷா ராஜ்குமாராக வரும் அனுஜா ஐயர் - துணிச்சலான பெண்மணியென்று காட்டவா சிகரெட்டை பற்ற வைத்திருக்கிறார்கள்? கொடுமை.
இப்படியாக ஒவ்வொருவரும் தன் பங்கை மிக அற்புதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
கமல்ஹாசன்- மோகன்லால் என்ற இரண்டு இமயத்தின் நடிப்பை விவரிக்கத் தேவையில்லை. இருவரும் கடைசிக் காட்சியில் கைக்குலுக்கிக் கொள்வது ஒருவருக்கொருவர் நடிப்புக்கு சபாஷ் சொல்வதாகத் தோன்றியது. ’டைட்டில் கார்டில்’ இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.
படத்தில் மறக்க முடியாத ஒன்று அந்த முதல் காட்சி. விஜய் இரசிகர்கள் கண்டிப்பாக அதிருப்தி அடைய வைக்கும் அந்தக் காட்சியை விஜ்யின் நண்பர் ஸ்ரீமன் செய்தது மிகவும் சிறப்பு.
படத்தின் பலம் காட்சியமைப்புகள் அதிலும் மனோஜ் சோனியின் கேமிரா தேவையானதை மட்டும் கச்சிதமாக படம்பிடித்திருக்கிறது. அடுத்து என்னவென்ற எதிர்பார்ப்பை தூண்டும் விறுவிறுப்பை கொண்டு வரவே தேவையில்லாதவற்றை நெருக்கமாக நறுக்கிவிட்டிருக்கிறார் ராமேஷ்வர் பகத். காவல்துறையினரின் தினசரி நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்கள், அதில் ஊடகங்கள் ஆதாயம் தேடும் பாங்கு, ஆட்சித்துறையின் குடைச்சல் என்ற கலவை, நகலாக இருந்தாலும் அசத்தியிருக்கிறார்கள். பாடல்கள் இல்லாமல் அழகான பின்னிசையில் விளையாடியிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ‘பேஷ்’.
இந்தப் படத்தின் வெளியீட்டை இரத்து செய்ய வேண்டுமென்ற ’பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து, மூன்றரை கோடி வங்கி உத்தரவாதம் அல்லது சொத்து ஆவணம் தாக்கல் என்ற அடிப்படையில் வலியுடன் பிரசவித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ காட்டமான விஷயத்தை மிகவும் மென்மையாக்கி நமக்குள் செலுத்தும் முயற்சியை மட்டும் மேற்கொண்டிருந்தால் சர்ச்சைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்.
ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க விரும்புபவர்கள் சண்டைக்காட்சியில்லை, பாடல்களில்லை என்று புலம்பினாலும் வசனங்களில் நகைச்சுவை கலந்து காட்சியில் விறுவிறுப்பு சேர்த்திருப்பதால் பொழுதுபோக்கு பிரதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ‘எ வெட்னெஸ்டே’ பார்க்காமல் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. நானும் ‘எ வெட்னெஸ்டே’ பார்க்கவில்லை, சில கசப்புகளை மீறி எனக்கும் படம் பிடித்திருக்கிறது. இன்னும் நிறைய குறுகிய கால அளவு படங்கள் வந்து நம் நேரத்தை காப்பாற்ற வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
ஜெஸிலா, மிக நேர்த்தியான விமர்சனம். பல விசயங்களை உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள்.
//தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வென்ற//
இந்த வாக்கியத்தை நிறைவு செய்ய முற்றுப்புள்ளி எங்கே வைப்பது?
// ’டைட்டில் கார்டில்’ இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.//
கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..கமல் தயாரித்த எந்த படத்திலும் கலைஞானி ,உலகநாயகன் என்ற பட்டங்கள் போடுவதில்லை ..இதுவரை 'பதமஸ்ரீ' மட்டும் தான் போடுவார் ..அது கூட இனி இல்லையென சொல்லிவிட்டார்.
//என்னதான் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவர் நேர்மையும் சந்தேகத்திற்குட்படுகிறது, கேள்விக்குள்ளாகிறது என்பதை அழகாக நிரூபிக்கும் யதார்த்த காட்சி - கமிஷ்னர் மாரார் அதிகாரி ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்//
இந்த இடத்திற்கும் கடைசி காட்சியில் ஆரிஃப்பின் கையை சேது சுட்டு விட்டு “கமிஷ்னரின் ஆர்டர்” என்று கூறுவதற்கும் தொடர்பிருக்கிறது ஜெஸிலா. பார்வையாளனை ஒரு வித சந்தேகத்தில் ஆழ்த்தி கதையின் விறுவிறுப்பிற்காக சேர்க்கப்பட்ட வசனம் அது.
பல பதிவர்கள் & பார்வையாளர்கள் இதை கவனிக்காதது திரைக்கதையாசிரியரின் வெற்றியே.
விமர்சனம் அருமை.
ஆதவா, (என்ன மாதிரி) உனக்கு வேற வேலையே கிடையாதா? எல்லா பதிவையும் படிச்சு கமண்டு போட்டுட்டு இருக்க?
//என்னதான் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவர் நேர்மையும் சந்தேகத்திற்குட்படுகிறது, கேள்விக்குள்ளாகிறது //
சகொதரி இந்த காட்சியை தாங்கள் தவறாக புரிந்துகொண்டிர்கள், ஆரிப் கொஞ்சம் கோவம் கொண்ட பாத்திரம்,ஆதலால் சேதுவை கவனமாக கையாள சொல்லியிருக்கார். தாங்கள் கூறுவது போல் அவர் ஆரிப்பை சந்தொகப்பட்டியிருந்தால் இந்த நடவடிக்கைப் பொறுப்பை தரமாட்டார்.
தாங்கள் பதிவை நல்ல முறையில் எழுதியிருந்தாலும் சில கசப்புகள் என்பது தங்களின் தவறனா இந்த விளக்கத்தில் தெரிகிறது. ஆனால் இப்படி காட்டவேண்டிய கட்டாயம் என்ன என்பது தாங்கள் எளுதிய முதல் பத்தியில் உள்ளது. உலக அளாவிய இஸ்லாம் தீவிரவாதம் (ஜிகாத்)என்பது அவர்கள் அவர்களுக்கு தேடிக்கொண்ட கெட்டபெயர். ஆதலால் மற்றவர்கள் அதை விமர்சனம் செய்வது சுலபமாக அமைகிறது. இதற்கு காரனமானவர்கள் மீதுதான் வருத்தம் கொள்ளவேண்டும்.
//இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.
//
நானும் கவனித்த ஒன்று.
விருமாண்டியில் தூக்கு தண்டனையே கூடாது,இதில் தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே பதில்.முரண்
//ஜோ/Joe said...
// ’டைட்டில் கார்டில்’ இருவரின் பெயர்களுக்கு முன்பும் எந்த அடைமொழியும் வராதது பெரிய ஆச்சர்யம்.//
கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..கமல் தயாரித்த எந்த படத்திலும் கலைஞானி ,உலகநாயகன் என்ற பட்டங்கள் போடுவதில்லை ..இதுவரை 'பதமஸ்ரீ' மட்டும் தான் போடுவார் ..அது கூட இனி இல்லையென சொல்லிவிட்டார்.
//
ஆம்.மற்ற நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இது.போகிறபோக்கில் புயல்,சூறாவளி என்று போட்டுக்கொள்(ல்)வது எல்லாம் ஓவர்.
நன்றி செந்தில். விமர்சனத்திற்கு பிறகு கருத்தாடலாம் என்று எண்ணியதாலே நேற்று ’பதிவர்கள்’ குழுமத்தில் நுழைய முடியவில்லை. இன்று எழுதுகிறேன்.
நிறைவு செய்ய முற்றுப்புள்ளி சமயங்களில் தேவையில்லை :-) அது ஆச்சர்யக்குறியாகவோ கேள்விக்குறியாகவோக் கூட முடியும் :-)
உண்மை ஜோ. கமல் தயாரித்த படத்தில் அவருக்கே அடைமொழி போடுவது சங்கூஜமான விஷயம் தான். மோகன்லாலுக்குமில்லையே!
ஆதவன், நிசமாவா? //பார்வையாளனை ஒரு வித சந்தேகத்தில் ஆழ்த்தி // எதற்கு அப்படி? ஏன் சேதுவைக் கூட சந்தேகத்திற்கு ஆழ்த்துவதாக காட்டியிருக்கலாமே! ஏற்கெனவே நம்மவர்கள் மேல் நம் நாட்டவர்களுக்கு பொதுவில் நல்ல அபிப்ராயமில்லை அதற்கு முக்கிய காரணம் இந்த மாதிரியான காட்சிகள், ஊடகங்கள், சமுதாயம் எல்லாமும் தான் :-(
எவனோ ஒருவன்(ர்) வருகைக்கு நன்றி. எல்லா பதிவுகளையும் படிக்கும் போது பலத்தரப்பட்ட கருத்தை உள்வாங்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கே. நல்ல விஷயம்தான். அதிர்ஷ்டகாரர்கள், ஏன்னா அதற்கெல்லாம் நேரமிருக்கே.
பித்தன், நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை ஏற்கின்றேன், இருந்தாலும் இந்த படமென்றில்லை எல்லா படங்களிலும் பாரபட்சமில்லாமல் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று காட்டி காழ்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அப்படியான பிம்பத்தை நிரந்தரமாக்கும் முயற்சி. மறைமுகமாகவும் நேரடியாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கும், அவர்கள் மீதான வெறுப்பும் வேரூன்றி வளர இவர்களும் காரணமாக இருப்பது வருந்தக்கூடிய விஷயம். சரி, இந்த விஷயத்தை நான் தவறாக புரிந்துக் கொண்டதாகவே இருக்கட்டும். உ.போ.ஒ. ஒரு கட்டத்தில் வலியுடன் தன் மனைவியையும் குழந்தையையும் இழந்த கதையை சொல்லிக் கொண்டிருக்க இடையில் சந்தான பாரதி ’ஒரு மனைவிப் போச்சுதுன்னா என்ன, மிச்ச இரண்டு இருக்கே’ என்று நையாண்டி பேசுவது ஒரு இஸ்லாமிய உயிரின் மதிபீட்டை பேசுகிறது என்பதையாவது உணர்வீர்களா?
வாங்க நர்சிம். //நானும் கவனித்த ஒன்று.// ’தாரே ஜமீன் பரில்’ அந்த சிறுவனின் பெயருக்கு பிறகே ஆமிர்கானின் பெயர் வரும். இப்படியும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். ஜோ சொன்னது போல கமல் தயாரிப்பில் அவருக்கே அடைமொழி போட்டுக் கொள்வது நன்றாக இருக்காதுதான். வேறு தயாரிப்பிலும் போடாமல் இருக்கும் காலம் வரட்டும்.
//முரண்// காரணம் இது ‘எ வெட்னெஸ்டே’வின் நகல் தானே அதனால் கூட இருக்கலாம். :-)
அருமையான, நேர்த்தியான விமர்சனம் ஜெஸிலா. படத்தில் இருக்கும் குறைகளையும் தாண்டி படம் பார்க்க முடிகிறது.
// கமல் தயாரித்த படத்தில் அவருக்கே அடைமொழி போடுவது சங்கூஜமான விஷயம் தான். மோகன்லாலுக்குமில்லையே!//
கமல் தயாரித்த படங்களில் கமலுக்கு மட்டுமல்ல ,யாராயிருந்தாலும் 'பத்மஸ்ரீ' போன்ற அதிகார பூர்வ பட்டங்களை மட்டுமே போடுவது வழக்கம் ..ஒரே விதிவிலக்கு நடிகர் திலகமாக இருக்கலாம் .
// ’தாரே ஜமீன் பரில்’ அந்த சிறுவனின் பெயருக்கு பிறகே ஆமிர்கானின் பெயர் வரும். இப்படியும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.//
தேவர் மகன் ,படையப்பா இரண்டிலும் நடிகர் திலகத்தின் பெயருக்கு பின்னர் தான் கமல் ,ரஜினி பெயர்கள் வரும் ..ஆனால் அது முதல் மரியாதை நடிகர் திலகத்துக்கு என்பதால்.
//ஜோ சொன்னது போல கமல் தயாரிப்பில் அவருக்கே அடைமொழி போட்டுக் கொள்வது நன்றாக இருக்காதுதான். வேறு தயாரிப்பிலும் போடாமல் இருக்கும் காலம் வரட்டும்.//
கமல் அவ்வாறு போட சொல்வதில்லை என நினைக்கிறேன் ..அந்தந்த தயாரிப்பாளர் ,இயக்குநர்கள் போட்டுக்கொள்ளுகிரார்கள் ..'உலகநாயகன்' என்ற அர்த்தமில்லாத பட்டம் கே.எஸ்.ரவிக்குமார் போட்டுக்கொண்டது.
இன்னும் படம் பார்க்கவில்லை.
இதுவரை வலையில் மட்டுமே ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள்...
அதில் பெரும்பாலும் குறைகளை மட்டுமே முன் நிறுத்தி மொழியப்பட்டவை....
எதிர்மறை விமர்சனங்கள் எப்போதுமே நல்லது.
கூடுதல் மெருகு சேர்க்கின்றது.
கமல் ஒரு பழுத்த மரம்....கல்லடி படுவது இயற்கைதானே....
விமர்சனம் படித்ததும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.
செந்தில் சொன்னதுபோல் நிறைய விசயங்களை உள்வாங்கி எழுதியிருக்கின்றீர்கள்...
நன்றாக இருக்கின்றது....
வாழ்த்துக்கள்....
//குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.//
யக்கா...சூப்பரு...
//உன்னைப் போல் ஒருவன்’. இது என்ன பெரிய விஷயம் நம் தமிழ் சகோதரர்கள் கோடிக் கணக்கில் ஈழத்தில் உயிரிழந்த போதே நீலிக் கண்ணீரை மட்டுமே வடிக்க முடிந்த நமக்கு இதெல்லாம் சகஜம்தானே?//
அட்டகாசம்...
//படத்தில் மறக்க முடியாத ஒன்று அந்த முதல் காட்சி. விஜய் இரசிகர்கள் கண்டிப்பாக அதிருப்தி அடைய வைக்கும் அந்தக் காட்சியை விஜ்யின் நண்பர் ஸ்ரீமன் செய்தது மிகவும் சிறப்பு.//
கலக்கல்...
டக்கர் விமர்சனம்...
சகோதரி தாங்கள் கூறுவதும் உன்மைதான் நான் சந்தான பாரதியின் வசனத்தை மோடிப் பாசத்தால் கவனிக்கவில்லை. அப்படி ஒரு வசனம் உன்மையில் கண்டிக்கத்தக்கது. அது அந்த திரைப்படத்திற்கும் அழகு அல்ல. இந்தியாவில் நான் திரைப்படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கின்றேம், திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என உணரவில்லை, அவர்கள் உன்மையில் கூத்தாடிகள்.எந்த விசயம் சந்தையில் விலைபோகுதோ அதை வைத்து பணம் பண்ணுவார்கள். (இவர்கள் கார்கில் சண்டையில் பரம்வீர் சக்ரா விருது வாங்கினா படம் எடுக்க மாட்டார்கள்) ஆதலால்தான் அவர்கள் இஸ்லாம் தீவிரவாதமும், தாய் நாட்டுப்பற்றும் கடைச்சரக்காக வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதைப் பார்த்து கெட்டுப்போனார்கள் மாணவர்கள் (இப்ப பதிவர்கள்). ஆதலால் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என கவலைப்படுவது வீண். உன்மையான இஸ்லாம் நண்பர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உள்ளனர். இவர்களால் தான் பாரத்தின் ஒற்றுமை கட்டிக்காக்கப்படுகின்றது என்பது உன்மை. இதுபோன்ற காசுக்கு கூத்தடிக்கும் கூட்டத்தின் செயல்களை புறந்தள்ளுங்கள்.
\\நம்மைப் போல் ஒருவன்\\
நன்றாக சொல்லியிருக்கிங்க ! ;)
நன்றி சின்ன அம்மணி.
/நடிகர் திலகத்தின் பெயருக்கு பின்னர் தான் கமல் ,ரஜினி பெயர்கள் வரும் // அந்த மரியாதை கூட தரவில்லையென்றால் எப்படி ஜோ? இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
//அதில் பெரும்பாலும் குறைகளை மட்டுமே முன் நிறுத்தி மொழியப்பட்டவை....// மாதவ், என்ன இருக்கோ அதை தானே சொல்ல முடியும்? பழுத்த மரம் என்பதால் அடிவாங்கவில்லை நல்ல மரங்களிலும் நல்ல பழங்கள் வராததாலேயே ஆதங்கம். நன்றி மாதவ்.
நன்றி பிரதாப். படம் பார்த்தாச்சா? விமர்ச்சனத்தில் இன்னொரு விஷயம் விட்டுட்டேன்ப்பா அந்த முஷ்- புஷ்ன்னு கிண்டல் என்ற பெயரில் கிறுக்குத்தனம் பண்ணியிருப்பார்கள் கொடுமை.
//அப்படி ஒரு வசனம் உன்மையில் கண்டிக்கத்தக்கது. அது அந்த திரைப்படத்திற்கும் அழகு அல்ல// ஒப்புக் கொண்டமைக்கு நன்றி பித்தன். ஆனா சினிமா இன்னமும் பொழுதுபோக்கு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கவும் செய்கிறோம். நடிகர் நடிகை முதலமைச்சராகியிருப்பதை மறந்துவிட வேண்டாம். அப்படியிருக்க சினிமா என்பது பெரிய ஊடகம் என்பதை உணர மறுப்பது ஏன்?
//சினிமா இன்னமும் பொழுதுபோக்கு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கவும் செய்கிறோம். நடிகர் நடிகை முதலமைச்சராகியிருப்பதை மறந்துவிட வேண்டாம். அப்படியிருக்க சினிமா என்பது பெரிய ஊடகம் என்பதை உணர மறுப்பது ஏன்?//
விமர்சனமும்...
இந்த பதிலும்...
மிக மிக நேர்மையானது!
வாழ்த்துக்கள்ங்க!
அக்கா,நான் ரஜின்,வளைஞர்தளத்துக்கு புதுசு..ஆனா கொஞ்ச நாளா உங்களோட பதிவ படிச்சுகிட்டு வர்றேன்...நல்லா இருக்கு..
நேத்து தான் அந்த படத்த பாத்தேன்..படம் ஒக்கே...ஆனா இது கமல்லோட நடிப்புக்கு தீனி பொடுர படம் இல்ல..மத்தபடி இஸ்லாமிய தீவிரவாதம்கிரத மையமா வச்சு எடுத்துருக்காங்க..
அந்த தீவிரவாதியொட பேச்சு,இஸ்லாமிய மார்க்க கொள்கை பொல சித்தரிச்சு,அதற்கு தான் பெருமை படுவதாகவும்,அவன் பேசுவது,இஸ்லாமியர்களுக்கு எதிரான மற்றவர்களின் எண்ணத்தை வளர்க்கவெ உதவும்..ஆனா அந்த ஆரிஃப் கேரக்டர் மூலமாவது இஸ்லாம் இத சொல்லலன்னு சொல்லி முடிச்சு இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்..
அப்புரம் முதல் முறையா கமல் நடிப்புல போலித்தனத்த பார்க்கமுடிஞ்சது,அதான்,அந்த குஜராத் சம்பவத்த சொல்லும் பொது,அந்த நடிப்பு,செயற்க்கையாவே இருக்கு.,நல்லா பன்னிருக்கலாம்..ஆரிஃப்ப சந்தேக கண்ணோட பாக்குறது..ஓவ்வொரு இஸ்லாமியனோட நேர்மையையும்,கெள்விக்குறியாக்கி இழிவுபடுத்திவிடுகிறது.ஆதவன் சொல்ற காரணம் எல்லாம்,இல்ல..அதுவும் கமிஷ்னர் ஆடர்ன்னு செது சொல்லல,சொல்லி இருந்தாலும் டேலி ஆகாது.....மற்றபடி விஜய் காமெடி,நல்லா இருக்கு.ஸ்ரீமன் நல்ல இமிட்டேட் பன்னி இருக்காரு...படத்த ஒரு தரம் பார்க்கலாம்....
ம்ம்ம்...ஒங்க விமர்சனத்துக்கு பின்னூட்டம் இட வந்துட்டு நானெ விமர்சனம் பன்னிட்டு இருக்கேன்...கொஞ்சம் ஓவரா இருக்குல்ல......
இப்போதான் உங்கப் பதிவைப் படித்தேன். மிக சரியான பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது. பல நுணுக்கமான விஷயங்களைத் தொட்டுச் சென்றுருக்கிறீர்கள்.
//சினிமா இன்னமும் பொழுதுபோக்கு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கவும் செய்கிறோம். நடிகர் நடிகை முதலமைச்சராகியிருப்பதை மறந்துவிட வேண்டாம். அப்படியிருக்க சினிமா என்பது பெரிய ஊடகம் என்பதை உணர மறுப்பது ஏன்?//
இது முக்கியமானதும், மேற்கொண்டும் விவாதிக்க வேண்டியதுமான கருத்து.
நன்றி சுரேக. நேர்மையை வாழ்த்திய நேர்மையருக்கு வாழ்த்துகள். :-)
//.ஒங்க விமர்சனத்துக்கு பின்னூட்டம் இட வந்துட்டு நானெ விமர்சனம் பன்னிட்டு இருக்கேன்...கொஞ்சம் ஓவரா இருக்குல்ல.....// ரொம்பவே ரஜின் :-)
என் விமர்சனத்தின் முன்னோட்டம் மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம் :-)
நன்றி ஆழியூரான். ம்ம் விவாதிக்க வேண்டிய விஷயம் தான். விவாதிக்கலாம்தான் ஆனா அதன் முடிவு?
ஜெஸிலா, படத்தில் கமல்ஹாசனுக்கு பெயர் ஏதும் கிடையாது கவனித்தீர்களா?. அவர் வீட்டிலிருந்து வரும் தொலைபேசியில் பேசுபவர் கவுதமியின் குரலைக் கொண்டிருந்தார் என்பதைக் கவனித்தீர்களா?. திரைப்படங்கள் வெறும் வர்த்தகக் காரணங்களுக்காக எடுக்கப்படுவதில்லை. அது அந்த கலைஞனின் படைப்பாற்றல் திறமையை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் திரைப்படங்களை திறம்பட பயன்படுத்துவதில் கமல்ஹாசன் ஜித்தன். அதனாலேயே பல படங்கள் மக்களை சென்றடையாமல் போய் உள்ளது. இந்த படம் இந்தி படத்தின் தழுவல் என்பது தான் இந்த கலைஞர்களுக்கு உள்ள மிகப்பெரிய குறை. கமல்ஹாசனுக்கு பெயர் சூட்டாமல் போனதும் படத்திற்கு பலமூட்டும் நோக்கில் எழுதப்பட்டது. மற்றபடி டைட்டில் கார்டில் கமல்ஹாசன் எப்போதுமே கமல்ஹாசன் என்றுதான் குறிப்பிடுவார். சில படங்களில் மட்டும் பத்மஸ்ரீ என்று போட்டுள்ளார். மற்றபடி அது ஒரு பெரிய விவாதப்பொருள் அல்ல.
ஆரிப்பை நாம் சந்தேகப்படும் வகையில் திரைப்படத்தை கொண்டு போய் இருப்பது வியாபார உத்தி. ஆனால் ஆரிப்பை மிகவும் அருமையான நேர்மையான தேசப்பற்றுள்ள காவல்துறை இன்ஸ்பெக்டராக சித்தரித்திருப்பதைக் காண வேண்டும். அவரது கடுமையான நடவடிக்கைக்காக அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது, அப்ரூவர் ஆனவர் குடும்பத்தில் போலீஸ்காரர் சில்மிஷம் செய்யும் போது அவரை பின்னி எடுப்பது அவரது நேர்மையைக்காட்டுகிறது. இஸ்லாமிய நண்பர்களின் வலி எனக்கு புரிகிறது. ஆனால் பொதுவாக இந்தப்படம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானதாக நான் கருதவில்லை. தீவிரவாதத்திற்கு எதிரானதாகத்தான் நாம் இதைக்காண வேண்டும். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
நல்ல விமர்சனம்..
சரி! அடைமொழி என்பது தமிழ்ச் சினிமாவில் அனைவருக்கும் உள்ளது. கமலுக்கு போடுவதை மட்டும் ஏன் எல்லோரும் விவாதிக்க வேண்டும்? ரஜினி, விஜய்காந்த், பிரபு,கார்த்திக், சரத்குமார் இவர்களைப் போன்றவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர்களா?
சிதம்பரநாதன், உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கமலஹாசன் ’உலக நாயகன்’ அவர் டைட்டில் கார்ட்டில் பெயர் போடுவது போடாதது பெரிய விவாத பொருள் இல்லைதான். எலியெல்லாம் நடித்துக் கொண்டு பெரிய அடைமொழி வைத்துக் கொள்ளும் போது கமல் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்பதை நானும் உணர்வேன்.
//ஆரிப்பை மிகவும் அருமையான நேர்மையான தேசப்பற்றுள்ள காவல்துறை இன்ஸ்பெக்டராக சித்தரித்திருப்பதைக் காண வேண்டும்// என்னதான் அவன் தேசப்பற்றுள்ள நேர்மையாளராக இருந்தாலும் இஸ்லாமியர் என்றாலே அவன் சந்தேகத்திற்குட்படுகிறேன் என்ற நடைமுறை வருத்தத்தையே சொல்லியிருந்தேன். இந்தப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதா? தீவிரவாதிகளுக்கு எதிரானதா என்றால் பலரும் அவை இரண்டுமே ஒன்றுதானே என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதையே பதிவித்திருந்தேன். அவர் அவர் கண்ணோட்டம் அவர் அவர்களுக்கு :-)
தீப்பெட்டி அளவிலேயே சின்ன பின்னூட்டம். மிக்க நன்றி :-)
ஜாஃபர், யாருமே என் பார்வையில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. கமல் என்பதாலேயே நாசூக்காக சொல்லியிருக்கிறேன் என்பதை அறிக :-)
இந்தப்படத்தைப்பற்றி ஓர்குட்டில் நான் எழுதியிருந்த விமர்சனம் - ஜெஸிலாவிற்காக இங்கே மீண்டும்-
கமல் ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தைக்காணும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
கதாநாயகனுக்கு கதாநாயகி இல்லாத படங்களைப் பார்த்துள்ளோம். பாடல்கள் இல்லாத படத்தைப்பார்த்து உள்ளோம். இசையே இல்லாத படமும் வந்துள்ளது. ஆனால் கதாநாயகனுக்கு என பெயர்கூட இல்லாத படத்தை கமல் ஹாசன் வழங்கியுள்ளார்.
கதை இதுதான்.
சென்னை மாநகரில் 5 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகளை வைக்கிறார் கமல். வானுயர உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் மொட்டைமாடியில் தனது கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்திக்கொள்ளும் கமல் அங்கிருந்து கம்ப்யூட்டர் உதவியுடன் சென்னை மாநகர கமிஷனரிடம் (மோகன்லால்) தொடர்பு கொள்கிறார். அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற ஒரு நபரை தயாராக வைத்திருக்கும்படியும். அவரிடம் தான் இனிமேல் பேசப்போவதாகக் குறிப்பிடுகிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தலைமைச் செயலாளரை (லட்சுமி) தனது அலுவலகத்திற்கு அழைக்கிறார். அதன் பின் கமல் ஹாசனிடம் பேசும் அதிகாரம் பெற்றவராக கமிஷ்னர் மோகன்லால், மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது அணியினர் மேற்கொள்ளும் டீம்வொர்க் மீதமுள்ள கதை. வெடிகுண்டுகள் என்ன ஆகின்றன, அவர் கேட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதக் கடத்தல் காரர் ஆகியோர் கதை என்ன ஆனது என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை.
கதாநாயகன் மோகன் லாலா? கமலா என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள். சென்னை நகர கமிஷ்னராக இவ்வளவு பொருத்தமாக அவர் பொருந்தி இருப்பது நமக்கு தங்கப்பதக்கம் போன்ற காவல்துறையை பெருமைப்படுத்தும் படங்களை நினைவுபடுத்துகின்றன. எதார்த்தத்திற்காக கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீடு போன்றே செட் போட்டு முதலமைச்சர் வீட்டை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய தோட்டா தரணியை பாராட்டலாம். முதல்வராக கலைஞரே தலைமைச் செயலாளர் மற்றும் கமிஷ்னரிடம் தொலைபேசியில் பேசுவது, கமல் ஹாசனின் வீட்டில் இருந்து காய்கறி வாங்கி வருமாறு கூறும் குரலாக கவுதமியின் குரல் இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்களை கவனத்தில் கொண்டுவந்ததற்காக கமல்ஹாசனைப்பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திக்காட்டியே தீருவேன் என்ற கமல் ஹாசனின் முயற்சிக்கு இந்த படம் நிச்சயம் பெரிய திருப்பு முனையாக இருக்கும்.
இதனை சராசரி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பாக்ஸ் ஆபீஸ் வசூல் காட்டிக்கொடுக்கும். ஆனால் படித்த, ஆங்கிலப்படங்களைப் பார்த்து ரசித்து பிறருக்கு பரிந்துரைத்து மகிழும் தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக கமல் ரசிகர்களுக்கு, தாங்களும் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க இந்த படம் உள்ளது.
படம் பார்த்துவிட்டு திரும்பும்போது நம் மனதில் ஏற்படும் பிரமிப்பு அடங்கியபின் சில கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன.
குண்டுவெடிப்பிற்கு காரணமான 3 முஸ்லிம் தீவிரவாதி மற்றும் ஒரு இந்து வெடிமருந்து கடத்தல் காரனை மட்டும் சீட்டுக்குலுக்கிப்போட்டு தேர்வு செய்வதாக கமல் கூறுகிறார். இவர்களைக் கொல்ல தான் எந்த மதத்தைச்சேர்ந்தவனாகவும் இருக்கவேண்டியதில்லை, சாமான்ய இந்தியனாக இருப்பதே போதும் என்று வாதம் செய்கிறார். கமல் கூறும் இந்த காரணங்களை ஆயுதம் தூக்கி உணர்ச்சி மரத்துபோய் உள்ள தீவிரவாதிகளை எப்படி திருத்த உதவும்.
மற்றபடி, கமல் சராசரி ரசிகனை சீட் நுனிக்கே வரவைக்க பல சினிமாத்தனங்களை கையாள்கிறார். கமிஷ்னரின் நம்பிக்கைக்குரிய இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவர் முஸ்லிம். தொடக்ககாட்சியிலேயே அவரை சந்தேகப்படும் வகையில் அறிமுகப்படுத்தியது, இரண்டாவது இன்ஸ்பெக்டருக்கு மனைவி குழந்தை சென்ட்டிமென்ட், ரயிலில் சென்றுகொண்டிருக்கும் மனைவியின் இருக்கைக்கு மேலே கமல் வைக்கும் ஒரு வெடிகுண்டு பை என அனைவரையும் பதபதைக்க வைக்கிறரார்.
கமல் செய்த இந்த மா முயற்சிக்கு நாம் திருட்டு சி.டி. மூலம் படத்தைப்பார்க்காமல் தியேட்டரிலேயே பார்ப்பது தான் சரியான ஊக்கத்தை வழங்க முடியும். இந்த படத்தில் கமல் தனக்கு பெயர் எதையும் வைக்காததற்கு, அவர் பெயரை வைத்து அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவரா, எதிரானவரா, என்று நம்மை வேறு வகையில் சிந்திக்கவைக்காமல் பெயரே வைக்காமல் தான் சராசரி சாமான்யர்களில் ஒருவன் என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்துகிறார்.
படத்தின் இறுதியி்ல் அவர் இயங்கிக்கொண்டிருந்த இடத்தைக்கண்டுபிடித்து அங்கு வரும் கமிஷ்னரை பரிச்சியம் இல்லாமல் பார்க்கும் கமல், தான் தான் சென்னை மாநகர காவல் துறை கமிஷ்னர் என்று மோகன்லால் அறிமுகம் செய்யும் போது மெல்லிய அதிர்ச்சியை முகத்தில் காட்டுவது, கமல் ஹாசனுக்கு இதற்கு முன் கமிஷ்னரைத் தெரியாதா என்று நினைக்கத் தோன்றுகிறது.
இன்ஸ்பெக்டர்களாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பரத் ரெட்டி ஆகியோர் நீண்ட நாட்கள் மிடுக்கான போலீசாக நம்மை மிரட்டிக்கொண்டு இருப்பார்கள்.
படம் இந்தியில் வந்த படத்தின் தழுவல் என்பது கொசுறு செய்தி.
படத்தை இயக்கியவர் சக்ரி டொலட்டி.
அந்த தீவிரவாதிகளை சீட்டு குலுக்கி போட்டு தான் தேர்ந்து எடுத்தேன் என்பதன் முலம் சொல்ல வருவது நான்கில் மூன்று தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றுதானே :)
அப்பாடா எதோ என்னால முடிஞ்சது :)
நானும் படம் பார்த்துவிட்டேன்னு எப்படி சொல்லிகிறது :)
படம் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் துவைத்து காயப்போட்ட :-) உங்கள் இந்த திரைப்பார்வையை படித்த பிறகு படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
உடன்பாடாகவும் முரண்பாடாகவும் விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிற வேளையில் பல விஷயங்களை உள்வாங்கி நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி.. பாராட்டுகள்
என்ன அக்கா அதுக்கபுரம்,எதுவுமே எழுதக்காணேம்...வந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்....
நம்மைப் போல் ஒருவன் அல்ல வேண்டுமானால் என்னைப்போல் ஒருவன் என்று வைத்துக்கள்ளுங்கள்.
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
விமர்சனம் அருமை.
http://abu-noora.blogspot.com/2009/10/blog-post_15.html
ஜெஸிலா, இது கிறுக்கல் அல்ல..சித்திக்க வைக்கும் முயற்ச்சி..
உங்கள் எருத்துக்களை பத்தகமாக வெளியிடுங்கள்.
வாழ்த்துக்கள்.
மாரி மகேந்திரன்
www,cinemaanma.wordpress.com
விமர்சனம் வெகு விசேசம்..
என்ன ஜசீலாக்கா, இந்தப்பதிவுக்கு அப்புறம் ஒண்ணும் எழுதவேயில்லயா-?
கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.
Post a Comment