’தனிமையிலே இனிமை காண முடியுமா?’ கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அழகிய பாடல். இந்தப் பாடலையே நிறைய பேர் தனிமையில்தான் இரசித்திருக்கக் கூடும். இப்போதெல்லாம் அலுவல் காரணமாக எனக்குத் தனிமையில் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு அமைகிறது.
எங்கேயாவது வெளியில் வேலை விஷயமாகச் சென்று விட்டு அவசரகதியில் ஒரு 'சாண்ட்விச்' எல்லாமில்லை. என்னதான் அவசரகதியில் இருந்தாலும் சாப்பிடும் நேரத்தை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். துபாய் மரினா மால் 'ஃபுட்கோர்ட்டில்' அமர்ந்திருந்து என்னைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் கவனிக்கும்படியான ஒரு இடத்தில் என்உணவுடன் அமர்ந்து சூழலை இரசிக்க ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு விதம். அதுவும் ’ஃபுட்கோர்ட்’ அனைத்து விதமானவர்களையும் ஒருங்கிணைக்கும் இடமாயிற்றே. அதனால் ஒரே இடத்தில் வெவ்வேறு நாட்டவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சாப்பிடும் விதம், அலட்டும் தொனி, சண்டை பிடிக்கும் அழகு, சக ஊழியர்களைக் கிண்டலடிக்கும் காட்சி, குழந்தைகளைப் பராமரிக்கும் கலையென்று அந்த ஓரத்தில் உட்கார்ந்து ஓராயிரம் விஷயங்களைச் சிந்தையில் படித்துத் தெரிந்து கொண்டேன்.
வேடிக்கை என்னவென்றால், அந்த இடத்தில் என்னைத் தவிர தனியாக என்று யாருமே வந்திருப்பதாக எனக்குத் தென்படவில்லை.காதலர்களாக, கணவர்- மனைவியாக, குடும்ப சகிதமாக, வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் அல்லது நண்பர்களுடன் மட்டுமே வந்திருந்தார்கள். ஒற்றையாளாக சாப்பிடும் நபர் கூட தனியாகவே இல்லை – ஒன்று கைப்பேசியில் பேசியபடி, அல்லது செல்பேசியில் சுவாரஸ்யமான விளையாட்டுடன், அல்லது செல்பேசியில் வேகமாக குறுஞ்செய்தி அதுவுமில்லையென்றால் மடிக்கணினியின் திரையில் ஏதோ இரசித்து சிரித்தபடி அல்லது பேச்சாடல் செய்தபடியென்று.
வீட்டில் கூட நம் கூடவே இருந்து நம்மைச் சிரிக்கவும் சமயங்களில் அழ வைக்கவும், நம் மனநிலையைக் கூட மாற்றும் வல்லமை படைத்ததாகிவிட்டது தொலைகாட்சியும், வானொலியும். பேச பக்கத்து வீட்டார் இல்லாவிட்டாலும் கையில் சிணுங்கிக் கொண்டு தவழும் கைப்பேசியென்று உலகமே சுருங்கிவிட்டது.
உண்மையில் இப்போதெல்லாம் யாருமே தனிமையில் இருப்பதில்லை. இனி உங்களுக்கு என்னைப் போல் என்றாவது தனிமையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததென்றால் அந்த நொடியை இரசித்து இனிமையுடன் இருங்கள் ஏனெனில் இப்போதெல்லாம் தனிமை அரிதாகிவிட்டது.
5 comments:
:)தனிமை அரிதாகிவிட்டது என்பது ரொம்ப உண்மை ஜெஸிலா.. ஒரு முறை பையனை ஒரு பர்த்டே பார்ட்டியில் விட்டுவிட்டு இதே போல் அந்த மால் இல் இருந்த ஃபுட் கோர்ட்ல் அமர்ந்து ஐபாடில் கதை படித்துக்கொண்டிருந்தேன்.. அவ்வப்போது நிமிர்ந்து சுற்றிலும் இருப்பவர்களை கவனித்தேன்..கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கும் காரணத்திற்கு..மற்ற தனியாக வந்தவர்களும் போனில் தான்...
முத்துலெட்சுமி, நலமா? இன்னும் டெல்லியில்தானா?
நலம்ங்க ..ஆமா வேறெங்க டெல்லியே தான்..:)
நீங்களும் தனிமையாக இருந்தீர்கள் என்று எப்படிச்சொல்வது ஜெஸிலா அவர்களே? வேறு நபரோ கைபேசியோ இல்லையென்றாலும் மக்களை ரசித்துக் கொண்டிருந்தீர்களே!
தனிமை... நீங்கள் சொல்வது போல் கிடைப்பது அரிதாகிவிட்டது...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
Post a Comment