நாதர்- சிம்மின் ஒரு நடுத்தர படித்த ஈரானிய குடும்பம், அவர்களுக்கு ஒரு பத்து வயது மகள் தெர்மே. ஈரானை விட்டு செல்ல விசா கிடைத்திருக்கிறது போக வேண்டுமென்று துடிக்கிறார் சிமின் ஆனால் ஆல்சைமர் நோயால் அறிவாற்றல் இழந்த நிலையில் வயதான தன் தந்தையை விட்டு வர மனமில்லாமல் நாட்டைவிட்டு செல்ல மறுக்கிறார் நாதர், வழக்கமான பெண்களின் துருப்புச்சீட்டான பெற்றவர் வீட்டுக்கு பிரிந்து சென்று தன் தேவையை கணவருக்கு நிரூபிக்க பார்க்கிறார் சிமின். தந்தையைப் பார்த்துக் கொள்ளவும் பிற வீட்டு வேலைகளுக்கு மட்டுமே அவள் தேவையென்பது போல் வேலையாளாக ரஸ்யாவை நியமிக்கிறார் நாதர். கர்பினியான ரஸ்யா வறுமையின் காரணமாக அந்த முதியவரை கவனித்துக் கொள்ள தன் சிறிய மகளையும் கூட்டிக் கொண்டு வந்து வீட்டு வேலைகளையும் அந்த முதியவரின் தேவைகளையும் செய்து தருகிறார். ஒருநாள் நாதர் வீட்டிற்கு நேரத்தோடு வந்துவிடுகிறார், வீட்டில் ரஸ்யா இல்லை, தந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார் அவர் கைகள் கட்டிலில் கட்டியபடி. பத்து நிமிடம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த ரஸ்யாவை திட்டி தீர்த்து, திருட்டுப் பழியும் சுமர்த்தி வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார். மறுநாள் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று ரஸ்யாவின் வீட்டார் சிமினுக்குத் தெரிவிக்க, கணவன் -மனைவி இருவரும் சென்று பார்க்கிறார்கள். ரஸ்யாவின் கணவர் ஹோட்ஜாத் நாதர் தள்ளியதுதான் இதற்குக் காரணமென்று சினம் கொண்டு சண்டையிடுவதோடு வழக்கும் பதிவு செய்கிறார்.
ஈரானியன் படமான ‘எ செப்பரேஷன்’ நாதர்- சிமின் இருவரின் விவாகரத்தை மையமாகக் கொண்டு அதனை சுற்றி நிகழும் ஒரு கதைக் களம். வலுவான ஐந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு மிக நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார் அஸ்கர் ஃபர்ஹாதி. அற்புதமான திரைக்கதைகள் ஆங்கிலப்படத்திற்கு மட்டுமே என்று தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஆஸ்கர் வாங்கி வந்ததைத் தகர்த்தது இந்த ஈரானியப் படம். சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என்று கிட்டத்தட்ட நூறு விருதுகள் பெற்ற படம்.
இந்த கதையின் காட்சிகள் உண்மை- பொய் என்ற இரண்டுக்கும் இடையில் ஒரு இழையாக ஓடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் தேவைக்காக அல்லது பிழைப்பிற்காக எவ்வளவு சரளமாக பொய் சொல்கிறோம். இல்லை நாம் பொய் சொல்வதில்லை உண்மையை மறைக்க மட்டுமே செய்கிறோம் அல்லது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள இடத்திற்கேற்றாற்போல் நடந்து கொள்கிறோம். இதைத்தான் இந்த படத்தில் உடைத்தெடுக்கிறார் இயக்குனர். அதுவும் குழந்தைகளுக்குப் பொய் சொல்ல கூடாது என்று கற்றுக் கொடுக்கும் நாமே இந்த இந்தக் காரணங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லாமல் மறைப்பது சரியென்பதாக மறைமுகமாக சொல்லித் தருகிறோம். இதை இயல்பாக காட்டியிருக்கிறார் இயக்குனர் அஸ்கர்.
ஈரானிய வாழ்க்கை முறையை அவர்கள் உடுத்தும் உடைகளிலும் இருக்கும் இடத்தையும் வைத்தே சித்தரித்திருக்கிறார். படித்த, மேற்கத்திய கலாச்சாரத்தில் விருப்பமுள்ளவராக சிமினை காட்ட வெறும் அவரின் இறுக்கமில்லாத உயர் ரக தலைச்சீலையையும், வெளிநாட்டுக்குச் செல்லும் விருப்பத்தையும், ஒரே ஒரு காட்சியில் அவர் படித்துக் கொடுப்பவராக காட்டும் இயக்குனர், வீட்டு வேலைக்கு வரும் இறையச்சம் நிறைந்த ரஸ்யாவை கருப்பு அங்கியால் தன்னை இறுக்கிக் கொண்டு, வயதானவரின் கழிவுகளை அகற்றவும் முதியவரின் கால் உடுப்பை கழற்றவும் கூட ஒரு மார்க்க அறிஞரை அழைத்து ’இதில் தவறில்லையே’ என்று கேட்டு அறிந்து கொள்ளும் காட்சிகள் சான்றளிக்கும் அஸ்கர் சிறந்த இயக்குனரென்று. படத்தில் வரும் இரு குழந்தைகளின் நிலைப்பாட்டை முழுநீள வசனமில்லாத அவர்களின் முகபாவங்கள் பேசிவிடுகின்றன. பெண்களை அடிப்பவர் மிருகம் அப்படியானவன் நானில்லை என்று பேசும் ஹோட்ஜாத் இறுதி கட்டத்தில் மனைவி மீதுள்ள கோபத்தை தன்னைத் தானே அடித்து வெளிப்படுத்தி விளக்கும் கட்டுப்பாட்டை நம்மூர் ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். தன் மகளின் பாடத்தில் உதவும் தந்தை தம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுவதோடு, தமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையிடம் வெளிக்காட்டாது அவளுக்கு நேரத்தை ஒதுக்கும் நல்ல தந்தையென்று சின்னச் சின்ன காட்சிகள் ஹைகூ போல் உணர்த்தி நம்முள் ஒட்டிக் கொள்கிறது.
படத்தின் முடிவில் தெர்மே தம் எதிர்காலத்தை யாருடன் ஆரம்பிக்க போகிறார் தாயா தந்தையா, அதன் பின்னனி நியாயங்களை இயக்குனர் எப்படி நிரூபிக்கப் போகிறார் என்ற புதிரோடு முடிகிறது படம்.
இயக்குனர் ஒரு கவிஞராகத்தான் இருக்க முடியும் காரணம் கடைசி காட்சியில் சிமின், நாதர், தெர்மே மூவரும் கருப்பு உடை அணிந்திருப்பதை ஒரு படிமமாகக் காட்டி நாதர் தன் தந்தையை இழந்துவிட்டதை உணர்த்துவதோடு, பிரிவில் துக்கம் நீடிக்கிறது என்பதையும் உணர்த்துகிறார்.
மெய்யும்- பொய்யும் விளையாடும் வாழ்க்கை நாவலை படித்து முடித்த திருப்தியை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது ‘எ செப்பரேஷன்’.
2 comments:
நல்ல விமர்சனம்... படம் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...
திரு.திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி.
Post a Comment