Monday, May 08, 2017

கடவுளின் கை - சாயிரா பானு

பொங்கி வரும் பாலை பாய்ந்து அனைக்கும் சாயிரா பானுவின் சம்பாஷனையோடு காலையில் நம் வீட்டில் நடக்கும் அதே வகையான பரபரப்புடன் தொடங்குகிறது படம். சாயிரா பேசுவது ஜோஷுவாவிடம். படத்தின் ஆரம்பத்தில் சாயிரா – ஜோ என்ன உறவு என்ற குழப்பம் எழுகிறது. ஜோஷுவா சாயிராவை எந்தக் கட்டத்திலும் ‘அம்மா’ என்று அழைக்கவில்லை. ஒருவேளை நண்பர்களா அல்லது சகோதர சகோதரியா என்பதற்கான விடையை நேரடியாகத் தராமல் மிக நேர்த்தியாகக் கதை வழியாகவே அவர்களின் உறவை விளக்கியுள்ளார் இப்படத்தின் கதையாசிரியர் ஷான்.

மீஜோ ஜோசஃபின் இசை வழியாகப் படத்தின் முதல் பாதியை கதாபாத்திரத்தின் அறிமுகமாகக் கொண்டு சென்றுள்ளனர். படத்தின் அறிமுகக் காட்சிகளாக வரும் முன் பகுதியை மிக அழகாக இரண்டாம் பகுதியோடு இணைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி சோனி. அதே போலவே அவருடைய கதாபாத்திர தேர்வுக்காகவே, இப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். காரணம் சாயிரா பானுவாக வரும் மஞ்சு வாரியார் மட்டுமல்ல ஆனி ஜான் தரவடியாக வரும் அமலாவுக்காகவும். பல வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் நல்ல ஒரு கதாபாத்திரமாக மிகப் பொருத்தமாக வக்கீலாகக் கால்பதித்துள்ளார் அமலா. இரண்டு பெண்களும் இப்படத்தைத் தம் முதுகில் சுமக்கின்றனர். படத்திற்கு வலு சேர்த்தது ஜோஷ்வாவாக வரும் ஷேன் நிகம். அலட்டல் இல்லாமல் கல்லூரி மாணவராக, தனக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்து இவரை வளர்தெடுத்த தாயின் வலிமையையும் அன்பையும் புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் வலம் வருவதை மிக இயல்பாக உடல்மொழியில் பதிவு செய்துள்ளார். புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற இன்பச் செய்தியை சாயிராவிடம் பகிரும் போது அவரது தலை லேசாகச் சுவற்றில் முட்டும்போது புரிந்திருக்கவில்லை எதற்காக அப்படியான காட்சியென்று, ஆனால் அந்தத் தடங்கலிலிருந்துதான் கதையின் பாதை மாறுவதைப் பின் வரும் காட்சிகள் விளக்குகிறது.

இப்படம் முழுக்கத் தாயின் பரிதவிப்பை வெவ்வேறு வகையில் நிரல்படுத்தியிருந்தாலும் எந்த இடத்திலும் தாயைப் பற்றியோ, அவர் அன்பைப் பற்றியோ, அவர் செய்த தியாகத்தைப் பற்றியோ எந்த ‘க்ளிஷே’வுடனான நாடகத் தன்மையில்லாமல் கதையைப் பதிந்துள்ளனர் ஆண்டனி மற்றும் ஷான். அதற்காகவே அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நீதி விசாரணை, வழக்குகளில் மாட்டிக் கொண்டால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தாய்- மகன் கதையாக விரிகிறது படம். பெறாத மகனுக்காகப் போராடும் தாயின் கதை இது. ஆனால் அந்தக் கதாபாத்திரம் ஏன் சாயிரா பானுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் புலப்படவில்லை. தலையில் துணி அணிவது, சமயங்களில் அவர் தொழுவதைக் காட்டியுள்ளனர் மற்றபடி அந்தப் பாத்திரப்படைப்பு ஏன் முஸ்லிம் பெண்ணாக இருக்க வேண்டுமென்று கதாசிரியர் விரும்பினார் என்று தெரியவில்லை. தற்கொலை செய்வது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அதனால்தான் புள்ளிவிரவப்படி இஸ்லாமியர்களின் தற்கொலை அரிது. ஆனால் இப்படத்தில் மகள் தலையில் துணியிடாமல் இருக்கும் மகளைக் கண்டிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர் பின்னாளில் ஏதோவொரு காரணத்திற்காக ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்கும்படியாக இல்லை. ஆனால் கதையென்று வரும்போது கதையாசிரியரே கர்த்தா என்பதால் விட்டுவிடலாம்.

மஞ்சு வாரியார் ‘போஸ்ட் உமனாக’ மிக இயல்பாக அவருக்கே உரிய மிடுக்கோடு அக்கதாப்பாத்திரத்தைச் சுமந்துள்ளார். அவர் ஸ்கூட்டீயில் போகும் போது தலையிலிருந்து துணி விலகாமல் இருக்க எப்படி ஒரு முஸ்லிம் பெண் அனாயாசமாகத் தலையைச் சுற்றி முக்காடிடுவாரோ அப்படியே இவரும் இயல்பாகச் செய்வது அழகாக இருந்தது. தமிழ் முஸ்லிம்கள் வணக்கம் சொல்வதே தவறு என்று பட்டிமன்றம் நடத்தும் வேளையில், சாயிரா நன்றி சொல்ல பல இடங்களில் இரு கைக்கூப்பியது இடறியது, ஆனால் மலையாள கலாச்சாரத்தில் அது இயல்பான செயல் என்று தெரிந்து ஆச்சர்யத்திற்குள்ளானேன்.

அதே போல அமலாவும் என்னதான் கண்டிப்பான வக்கீலாக இருந்தாலும் ஒரு மகனுக்குத் தாயாக வரும்போது அதற்குரிய உருமாற்றத்தை மெல்லிய முக மொழியில் சொல்லியுள்ளார்.

மஞ்சு, அமலா, ஷேன் இம்மூவரைத் தவிர்த்து வரும் மற்ற கதாபாத்திரங்களும் தனக்கான பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக, பிஜு சோபனம் கையாலாகாத எளிய வக்கீலாகத் தம் பங்கை சரியாகச் செய்துள்ளார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார் ‘யதார்த்த வாழ்க்கையும் சில நேரங்களில் நாடகத் தன்மை பூண்டிருக்குமென்று’ இன்னொரு இடத்தில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் ஜோஷ்வாவிடம் மற்றொருவரின் அறிவுரையாக வருவது ’வலிந்து திரிந்து சூழலை ஏற்படுத்திக் கொண்டு காட்சியைப் பதியாமல், கிடைக்கும் அரிய காட்சிகளை உள்ளடக்குவதே சிறந்த புகைப்படமாக அமையுமென்று’. இந்த இரு வசனங்களை முன்னிறுத்தித்தான் முழுப்படமும் அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைக் கொண்டு நிறைவுபெறும் படம் பல கேள்விகளை நம் முன்னே விட்டுச் செல்கிறது. இறுதி காட்சியில் சாயிரா, மகனுக்காகக் காத்திருக்கும் இன்னொரு தாயைப் பார்க்கச் செல்வது படத்தை முழுமைப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ‘ஹேண்ட்ஸ் ஆஃப் காட்’ பற்றிப் பேசப்படுகிறது. ஆண்டவனின் ஆயுதமாக நாம் மாறுவது ஹேண்ட்ஸ் ஆஃப் காட், பிறருடைய பிரச்சனைகளைப் படம் வழியாகப் பேசும் இப்படக்குழுவினரும் ‘ஹேண்ட்ஸ் ஆப் காட்’தானே?

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி