Tuesday, March 17, 2020

'எழுதாப் பயணம்' - என்னை எழுத வைத்த நூல்

வலைப்பதிவு காலத்திலிருந்தே அறிமுகமான லக்ஷ்மியின் எழுத்துகளை வாசிக்க மிகவும் பிடிக்கும். அவர் எழுதுவது என்னுடன் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

அவர் எழுதிய 'எழுதாப் பயணம்' ஆட்டிசம் பற்றியது என்றதும் படிக்க ஆவலானேன், காரணம் என் நெருங்கிய நண்பரின் குழந்தைக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருந்தது. 'இருந்தது' என்று இறந்தகாலப் பதத்தில் எழுதக் காரணம் உள்ளது.

என் நண்பருக்கு இரட்டைக் குழந்தைகள். அதனால் அந்தக் குழந்தையின் தாய் மிக எளிதாக, ஒரு குழந்தை போல் மற்றொரு குழந்தை இல்லை, ஒரு குழந்தை கொஞ்சம் பின் தங்கியிருப்பதைக் கணவரிடம் சொல்ல, அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கடும் மனவுளைச்சலில் இருந்தார். தன் மனைவி தன் குழந்தையைப் பற்றி இப்படிச் சொல்வதாக, புகாராகவே என்னிடம் சொன்னார். அதிக நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவளிக்கும் அவருக்குச் சந்தேகம் இருப்பின் மருத்துவரைக் கலந்தாலோசித்தால் நல்லது என்று நான் சொன்னபோது மனமில்லாலம் மருத்துவரை அணுகினார்கள். அவருடைய மனைவி சந்தேகித்தபடி ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை ஏழாவது மாதத்திலேயே தெரிந்து கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரும் பல பிரச்சனைகளுக்கும் பிணக்குகளுக்கும் உள்ளானார்கள். தேவையற்ற சண்டை, புரிதலின்மை, யார் இதற்குக் காரணம், இருவருக்கும் தங்களுக்கென்று செலவிட நேரமில்லாமல் தவித்தனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் குறைந்தது, இருவரும் வேலைக்குச் செல்வது குழந்தையை மேலும் பாதிக்கும் என்பதால் ஒருவர் வேலையை விடச் சம்மதித்தார். யார் வேலையை விடுவது என்ற விவாதம் வேறு. ஏன் எப்போதும் பெண்தான் தன் தொழில் முனைப்பை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பிளவு. பல பிரச்சனைகளைத் தாண்டி குழந்தையின் நலனை பிரதானமாக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தனர். அந்தக் குழந்தை சில மாதங்கள் மட்டுமே பின்னடைவில் இருப்பதாகத் தெரிந்ததால் அதிகம் கவனம் செலுத்தி இப்போது இரு குழந்தையில் யாருக்கு ஆட்டிசம் என்று தெரியாத வகையில் ஈடுகொடுத்க்ச் செல்கின்றனர். இப்போது குழந்தைகளுக்கு ஐந்து வயது. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருவரும் படிக்கின்றனர்.

ஆட்டிசம் குறைபாடு என்பது மூளை வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நிலை, இது ஒரு நபர் மற்றவர்களுடன் எவ்வாறு உணர்கிறார் என்பதும், சமூகத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புகளின் சிக்கல்களின் கோளாறாக வரையறுக்கப்படுகிறது. அதுவும் ஆட்டிசம் நோயல்ல குறைபாடு மட்டுமே என்றும் சொல்கின்றனர். அப்படியிருக்க, அதனைச் சரியாக்க முடியாத ஒரு நிலையென்று லக்ஷ்மி எழுதியிருக்கிறார். யாராவது குணப்படுத்த முடியும் என்று பொய் அறிக்கை தந்தால் நம்பாதீர்கள் என்றும் சொல்கிறார். ஆனால் ஆட்டிசம் நோயல்ல தன்முனைப்பு குறைபாடு என்று வரும்போது அதுவும் அதனை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து அதை ஏற்றுக் கொண்டு புரிந்து அதற்கேற்ற பயிற்சியும், முயற்சியும், செய்ய வேண்டியவைகளையும் செய்தால் சரியாகிவிடுவதைக் கண்கூடாகக் கண்டுள்ளேன்.

யார்தான் தனக்குப் பிறந்த குழந்தைக்குக் குறைபாடுள்ளதை ஏற்றுக் கொள்வார்கள்? ஆரம்பக் காலக் கட்டத்திலேயே புரிந்து செயல்படுவார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். அதற்காகவே லக்ஷ்மியின் நூலை ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமல்லாது, குழந்தையைப் பெற்ற அல்லது பெறப் போகிற அனைவருமே வாசிக்க வேண்டிய நூல் எனலாம். கருவுற்றபோது 'வாட் டு எக்ஸ்பெக்ட் வென் யு ஆர் எக்ஸ்பெக்டிங்' என்ற நூலைப் படிக்கும் பெண்களைப் போல் இந்த நூலை கணவர்- மனைவி இருவருமே வாசித்தல் அவசியம்.

அதிலுள்ள பயிற்சிகள், முக்கியமாகத் தொலைக்காட்சியும் செல்பேசியும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும் என்ற உண்மைகளைப் பலர் அறிந்திருந்தும் "கார்ட்டூன் பார்த்தால்தான் என் புள்ள சாப்பிடுவான்" என்று பெருமைப்படும் தாய்மார்கள் இருக்கவே செய்கிறார்கள்.

லக்ஷ்மி தன் மகன் கனிவமுதனை சிறப்புக் குழந்தை என்று குறிப்பிடுகிறார். எல்லாக் குழந்தைகளுமே ஒரு வகையான சிறப்புக் குழந்தைகள்தான் என்பது என் கருத்து. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகை, அதில் அவர் மகன் கனிவமுதன் ஒரு வகை அவ்வளவுதான். என் மகனும் குழந்தையைப் பார்த்துக் கொள்பவரிடம் நான் அவனை விட்டுவிட்டுச் செல்லும்போது மூச்சில்லாமல் அழுவான், பத்து நிமிடத்திற்கு ஒரு இடத்தில் உட்கார மாட்டான், சுற்றிக் கொண்டே வருவான். நெடும் பயணமல்ல சிறு பயணமென்றாலும் போய்ச் சேரும் வரை போரடிக்குது என்பான், தண்ணீர் வேண்டுமென்பான், தேவையில்லாமல் அழுவான். என் மகன் மட்டுமல்ல பல குழந்தைகளை இப்படிப் பார்க்கிறேன். படிக்க அல்லது எழுத உட்கார வைத்தால் கை வலிக்கிறது என்று முறுக்குவான், கழிப்பறை போக வேண்டும் என்பான், தூக்கம் வருது என்று சோம்பல் முறிப்பான். இதெல்லாம் செய்தால்தானே குழந்தை?. இந்த நூலில் குழந்தைகளுக்கு 'ப்ளாஷ் கார்ட்' வைத்து சொல்லி கொடுக்கும் முறை, பல் துலக்க 28 ஸ்டெப், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்த, அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சி, பேச்சுப் பயிற்சி, கைவிரலை பலமளிக்கும் வேலைகள் என்று சிறப்புக் குழந்தைக்கு என்று சொல்லப்பட்டவை எல்லாமும் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும், அவசியமும்.

ஆட்டிசக் குழந்தையின் தனிச் சிறப்பே அவர்கள் பல விஷயங்களில் வல்லுனர்களாக மற்ற குழந்தைகளை விட மிக விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன்மிக்கவர்கள். அதனை ஹைப்பர்லெக்ஸியா என்கின்றனர், அதையும் குறைபாடாகக் கொள்கின்றனர். காரணம் பொருளில்லாமல் எழுத்துருக்களையும் அதன் உச்சரிப்பையும் மட்டுமே கற்றுக் கொண்டு படிக்கக் கூடிய திறன். பொருளைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படுவதை அவர்கள் குறைபாடாகக் கருதுகின்றனர். ஆனால் குர்ஆன் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எழுத்துருக்களையும் உச்சரிப்பையும் மட்டுமே கற்கின்றனர். அதைச் சிறப்பாகச் செய்வதால் சர்வதேச அளவிலும் பரிசும் பெறுகின்றனர். இதை ஒப்பிட்டு பார்க்கும் போது அந்தக் குறைபாடு எனக்கு முரண்பாடாகத் தெரிந்தது.

கனியைக் கண்டபோது தூக்கிக் கொஞ்ச வேண்டுமென்று பரபரத்த கைகளைக் கட்டிப்போட்டு புன்முறுவலோடு நகர்ந்தேன். பொதுவாகக் குழந்தைகளைப் பார்த்தாலே கொஞ்சவும், கைக் குலுக்கவும், ஏதேனும் பேச்சு கொடுக்கவும் செய்யும் என் போன்றவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் லக்ஷ்மி சொல்வது 'ஆட்டிச நிலை குழந்தைகள் யாரையும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதனால் தள்ளி நில்லுங்க' என்பது. ஆனால் அதே லக்ஷ்மி அவர்களுக்கு நண்பர்கள் கிடைக்கவும் வழி செய்வதாகச் சொல்வது முரண்.

இயல்பாகவே சின்னக் குழந்தைகள் என்றில்லை பெரிய குழந்தைகளுமே இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள், அப்படியிருக்கச் சிறப்புக் குழந்தைகள் இன்னும் அதிகமாக எதிர்வினையாற்றுவதில் ஆச்சர்யமில்லை. பொதுச் சமூகம் இதையெல்லாம் புரிந்து கொள்ளாததால் கழிப்பறை அருகே இரவு முழுக்க நிற்க வேண்டிய அவலம் லக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ளது, இதில் குழந்தையின் குறைபாட்டை என்னால் பார்க்க முடியவில்லை, மாறாக இந்தச் சமூகத்தைத்தான் குறைசொல்ல வேண்டும்

'அடி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், 'அடி! அடி!' என்று கூறியபடி தன்னைத் தானே கைகளால் அடித்துக் கொள்ளும் குழந்தை, வலித்தால் வலிக்கிறது என்றும் அடித்தால் அடிக்கிறார்கள் என்றும் சொல்லத் தெரியாத குழந்தையை அடிக்கும் அந்த ஆசிரியரைதான் சாத்தவேண்டும்.

நூல் முழுக்க ஆசிரியர்கள், கற்றறிந்தவர்கள், பராமரிப்பாளர்கள் என்று எல்லாருமே குழந்தையைத் தவறாகக் கையாள்வதைக் காண முடிகிறது. ஆனால் லக்ஷ்மி- பாலா இருவருமே நல்ல பெற்றோர் என்பதால் கனி எதையாவது கற்றுக் கொள்கிறானா இல்லையா என்று கூர்ந்து கவனித்து, எதுவும் கற்கவில்லை அல்லது அங்கு ஏதேனும் தவறு நடக்கிறது எனில் உடனே அந்த இடத்திற்குச் செல்வதைத் தடுத்துவிடுவது சிறப்பு. கனி சிறப்புக் குழந்தையாக இல்லாவிட்டால் இப்படியான தனிக் கவனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இந்நூலில் எனக்கு அவருடைய எழுத்துநடை மொழிநடை மட்டுமல்ல, அவர் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்களைப் பயமுறுத்தாமல், அறிவுரைகளை அடுக்காமல், கட்டளைகளிடாமல் தான் அனுபவித்தது, எதையெல்லாம் எதிர்பார்க்கலாம், எப்படித் தவிர்க்கலாம், தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற பொறுப்புணர்வோடு, சமூக அக்கறையோடு தங்களைப் போல் போராடும் பெற்றோருக்காகப் பலவற்றை யோசித்து அவர்களையும் கரை சேர்க்க எழுதப்பட்ட நூலாகக் கருதுகிறேன்.

பொதுவாகப் பெற்றோர்கள் தான் கற்க முடியாததை, பயிலக் கிடைக்காததைத் தன் குழந்தைகள் கற்க வேண்டுமென்று திணிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். ஆனால் குழந்தைக்காகத் தன்னைத் தயாராக்கி கொண்டு, புதியவற்றைக் கற்ற தாய் லக்ஷ்மி சிறப்புக்குரியவர், அவருக்கு உறுதுணையாக ஆட்டிசம் பற்றித் தமிழில் நிறைய வாசிக்க வழி வகை செய்து ஆனந்த விகடன் விருது பெற்ற அவர் கணவர் பாலபாரதிக்கும் வாழ்த்துகள்

சர்வ சிக்ஷா அப்யான் என்னும் திட்டம் அனைவருக்கும் கட்டாயமாக இலவசக் கல்வி என்னும் இலக்கை கொள்கையாகக் கொண்டதாம். அதன் அடிப்படையில் எல்லாருக்கும் எந்நிலையிலும் கல்வி மறுக்கப்படலாகாதாம். சட்டங்களெல்லாம் சரியாக இருந்தும், கனியிடம் குறைபாடிற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டும், கனிவாக இயல்பாக நடந்து கொள்ள இவர்களுக்கு யார் சொல்லித் தருவது அல்லது எந்தப் பள்ளியில் இந்த ஆசிரியர்களை சேர்க்க வேண்டுமென்று தெரியவில்லை. குறைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு குழந்தைகளின் குறைபாடு பற்றிப் பேச இங்கு யாருக்கும் தகுதியில்லை.

அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய 'எழுதாப் பயணம்' நம் குழந்தை வளர்ப்பு பயணத்தைச் சீராக்க உதவும்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி