Friday, December 22, 2023

ஆட்டிசம் என்னும் ஆற்றல்


 துபாய் 'நம்ம பசங்க' கிரிக்கெட் குழுமத்தின் நான்காம் ஆண்டு விழாவில் என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அந்தக் குழுமத்தினர்க்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததைவிடப் பத்தொன்பது வயது ஃபஹீமை சிறப்பு விருந்தினராக அழைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் ஆற்றல் மிகுந்த ஆட்டிசம் ஆட்கொண்டவர். என்னைப் பொருத்தவரையில் ஆட்டிசம் நோயுமல்ல, குறைபாடுமல்ல, பாதிப்புமல்ல. நம் கண்ணோட்டைத்தைதான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. ஃபஹீம் 'சிட்டி ரோபோ' மாதிரி அவருக்குப் பிடித்த விஷயத்தைத் தந்தால் வருடிவிட்டு அதன் உட்பொருள் தருபவர். 


எந்தத் தேதியை சொன்னாலும் அந்த நாளின் கிழமையை 'அசால்டாக'ச் சொல்பவர். ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால், அந்த நாட்டில் இப்போது என்ன நேரம் என்று கணினியைவிடச் சரியாகக் கணக்குப் போட்டு உடனே சொல்வார். எல்லா நாட்டின் நாணயங்களைப் பற்றியும் அத்துப்படியாக வைத்திருப்பவர். இதற்காகப் பல விருதுகள் பெற்றவர். குறிப்பாகத் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் சாதனையாளர் விருது. இவருக்குக் கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென்று ஆசை. 


இதுவரை கின்னஸில் ஐந்தாயிரம் ஆண்டுகளின் தேதி- கிழமைகளே சாதனையாகி உள்ளதாம். இவருக்கோ பத்தாயிரம் ஆண்டுகளின் தேதி- கிழமை தெரியும். எப்போதும் ஆட்டிசம் ஆற்றலாளர்களை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை மட்டுமே பறைசாற்றுவார்கள். ஆனால் இந்த மேடையில் ஃபஹீமின் கையால் கிரிக்கெட் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அவரும் மகிழ்ச்சியாக ஒவ்வொருவருக்கும் அளித்தார், மகிழ்ந்தார். அவருடன் மேடையில் இருப்பதே எனக்குப் பெருமையாக இருந்தது. இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் மிக்க நன்றி. நிறைவான விழா. அல்ஹம்துலில்லாஹ். விழாவில் நான் பேசிய காணொளியை இன்னொரு நாள் வலையேற்றி சுட்டியைத் தருகிறேன்.


ஃபஹீமின் ஆற்றலைப் பற்றி அவரே பெற்றோர்களிடம் சிறு வயதிலேயே தெரிவித்ததோடு, தன்னைச் சோதித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார். ஃபஹீமின் ஆற்றல் வெளியுலகத்திற்கு தெரிய உறுதுணையாக அவருடைய பெற்றோரும் சகோதரரும் மிகவும் பொறுமையாக, புரிதலுடன் அன்புடனும் ஃபஹீமை கையாளுகிறார்கள்.


ஃபஹீம் கின்னஸ் சாதனை புரிய யாராவது வழிகாட்ட முடியுமா?


 #austism #autismacceptance

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி