Monday, May 08, 2017

கடவுளின் கை - சாயிரா பானு

பொங்கி வரும் பாலை பாய்ந்து அனைக்கும் சாயிரா பானுவின் சம்பாஷனையோடு காலையில் நம் வீட்டில் நடக்கும் அதே வகையான பரபரப்புடன் தொடங்குகிறது படம். சாயிரா பேசுவது ஜோஷுவாவிடம். படத்தின் ஆரம்பத்தில் சாயிரா – ஜோ என்ன உறவு என்ற குழப்பம் எழுகிறது. ஜோஷுவா சாயிராவை எந்தக் கட்டத்திலும் ‘அம்மா’ என்று அழைக்கவில்லை. ஒருவேளை நண்பர்களா அல்லது சகோதர சகோதரியா என்பதற்கான விடையை நேரடியாகத் தராமல் மிக நேர்த்தியாகக் கதை வழியாகவே அவர்களின் உறவை விளக்கியுள்ளார் இப்படத்தின் கதையாசிரியர் ஷான்.

மீஜோ ஜோசஃபின் இசை வழியாகப் படத்தின் முதல் பாதியை கதாபாத்திரத்தின் அறிமுகமாகக் கொண்டு சென்றுள்ளனர். படத்தின் அறிமுகக் காட்சிகளாக வரும் முன் பகுதியை மிக அழகாக இரண்டாம் பகுதியோடு இணைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி சோனி. அதே போலவே அவருடைய கதாபாத்திர தேர்வுக்காகவே, இப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். காரணம் சாயிரா பானுவாக வரும் மஞ்சு வாரியார் மட்டுமல்ல ஆனி ஜான் தரவடியாக வரும் அமலாவுக்காகவும். பல வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் நல்ல ஒரு கதாபாத்திரமாக மிகப் பொருத்தமாக வக்கீலாகக் கால்பதித்துள்ளார் அமலா. இரண்டு பெண்களும் இப்படத்தைத் தம் முதுகில் சுமக்கின்றனர். படத்திற்கு வலு சேர்த்தது ஜோஷ்வாவாக வரும் ஷேன் நிகம். அலட்டல் இல்லாமல் கல்லூரி மாணவராக, தனக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்து இவரை வளர்தெடுத்த தாயின் வலிமையையும் அன்பையும் புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் வலம் வருவதை மிக இயல்பாக உடல்மொழியில் பதிவு செய்துள்ளார். புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற இன்பச் செய்தியை சாயிராவிடம் பகிரும் போது அவரது தலை லேசாகச் சுவற்றில் முட்டும்போது புரிந்திருக்கவில்லை எதற்காக அப்படியான காட்சியென்று, ஆனால் அந்தத் தடங்கலிலிருந்துதான் கதையின் பாதை மாறுவதைப் பின் வரும் காட்சிகள் விளக்குகிறது.

இப்படம் முழுக்கத் தாயின் பரிதவிப்பை வெவ்வேறு வகையில் நிரல்படுத்தியிருந்தாலும் எந்த இடத்திலும் தாயைப் பற்றியோ, அவர் அன்பைப் பற்றியோ, அவர் செய்த தியாகத்தைப் பற்றியோ எந்த ‘க்ளிஷே’வுடனான நாடகத் தன்மையில்லாமல் கதையைப் பதிந்துள்ளனர் ஆண்டனி மற்றும் ஷான். அதற்காகவே அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நீதி விசாரணை, வழக்குகளில் மாட்டிக் கொண்டால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தாய்- மகன் கதையாக விரிகிறது படம். பெறாத மகனுக்காகப் போராடும் தாயின் கதை இது. ஆனால் அந்தக் கதாபாத்திரம் ஏன் சாயிரா பானுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் புலப்படவில்லை. தலையில் துணி அணிவது, சமயங்களில் அவர் தொழுவதைக் காட்டியுள்ளனர் மற்றபடி அந்தப் பாத்திரப்படைப்பு ஏன் முஸ்லிம் பெண்ணாக இருக்க வேண்டுமென்று கதாசிரியர் விரும்பினார் என்று தெரியவில்லை. தற்கொலை செய்வது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அதனால்தான் புள்ளிவிரவப்படி இஸ்லாமியர்களின் தற்கொலை அரிது. ஆனால் இப்படத்தில் மகள் தலையில் துணியிடாமல் இருக்கும் மகளைக் கண்டிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர் பின்னாளில் ஏதோவொரு காரணத்திற்காக ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்கும்படியாக இல்லை. ஆனால் கதையென்று வரும்போது கதையாசிரியரே கர்த்தா என்பதால் விட்டுவிடலாம்.

மஞ்சு வாரியார் ‘போஸ்ட் உமனாக’ மிக இயல்பாக அவருக்கே உரிய மிடுக்கோடு அக்கதாப்பாத்திரத்தைச் சுமந்துள்ளார். அவர் ஸ்கூட்டீயில் போகும் போது தலையிலிருந்து துணி விலகாமல் இருக்க எப்படி ஒரு முஸ்லிம் பெண் அனாயாசமாகத் தலையைச் சுற்றி முக்காடிடுவாரோ அப்படியே இவரும் இயல்பாகச் செய்வது அழகாக இருந்தது. தமிழ் முஸ்லிம்கள் வணக்கம் சொல்வதே தவறு என்று பட்டிமன்றம் நடத்தும் வேளையில், சாயிரா நன்றி சொல்ல பல இடங்களில் இரு கைக்கூப்பியது இடறியது, ஆனால் மலையாள கலாச்சாரத்தில் அது இயல்பான செயல் என்று தெரிந்து ஆச்சர்யத்திற்குள்ளானேன்.

அதே போல அமலாவும் என்னதான் கண்டிப்பான வக்கீலாக இருந்தாலும் ஒரு மகனுக்குத் தாயாக வரும்போது அதற்குரிய உருமாற்றத்தை மெல்லிய முக மொழியில் சொல்லியுள்ளார்.

மஞ்சு, அமலா, ஷேன் இம்மூவரைத் தவிர்த்து வரும் மற்ற கதாபாத்திரங்களும் தனக்கான பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக, பிஜு சோபனம் கையாலாகாத எளிய வக்கீலாகத் தம் பங்கை சரியாகச் செய்துள்ளார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார் ‘யதார்த்த வாழ்க்கையும் சில நேரங்களில் நாடகத் தன்மை பூண்டிருக்குமென்று’ இன்னொரு இடத்தில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் ஜோஷ்வாவிடம் மற்றொருவரின் அறிவுரையாக வருவது ’வலிந்து திரிந்து சூழலை ஏற்படுத்திக் கொண்டு காட்சியைப் பதியாமல், கிடைக்கும் அரிய காட்சிகளை உள்ளடக்குவதே சிறந்த புகைப்படமாக அமையுமென்று’. இந்த இரு வசனங்களை முன்னிறுத்தித்தான் முழுப்படமும் அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைக் கொண்டு நிறைவுபெறும் படம் பல கேள்விகளை நம் முன்னே விட்டுச் செல்கிறது. இறுதி காட்சியில் சாயிரா, மகனுக்காகக் காத்திருக்கும் இன்னொரு தாயைப் பார்க்கச் செல்வது படத்தை முழுமைப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ‘ஹேண்ட்ஸ் ஆஃப் காட்’ பற்றிப் பேசப்படுகிறது. ஆண்டவனின் ஆயுதமாக நாம் மாறுவது ஹேண்ட்ஸ் ஆஃப் காட், பிறருடைய பிரச்சனைகளைப் படம் வழியாகப் பேசும் இப்படக்குழுவினரும் ‘ஹேண்ட்ஸ் ஆப் காட்’தானே?

Monday, May 01, 2017

பறந்தெழு - டேக் ஆஃப்

எடிட்டராகக் கத்தரித்துத் தேவையானவற்றையும், சரியானவற்றையையும் மட்டுமே வெட்டி விளையாடியவர் இயக்குநரானால் என்னவாகும் - 'டேக் ஆஃப்' ஆகும் என்று சொல்லும் அளவிற்கு மஹேஷ் நாராயணன் தேர்ந்த இயக்குநராக இப்படத்தின் கலை மற்றும் கதை அம்சங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். பிரியாணி சாப்பிடப் போகிறோம் ஆனால் அதன் சுவை எப்படி இருக்கப் போகிறதோ என்பதைப் போல் உலகறிந்த 2014-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை எப்படிப் படைத்து விருந்து வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை முழுமைப்படுத்தியுள்ளார்.

திக்ரித்தில், ஈராக்கின் உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட இந்திய செவிலியர்களை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்ட கதைதான் 'டேக் ஆஃப்'. இப்படத்தைப் பார்க்கும்போது எனக்கு 'ஏர்லிஃப்ட்' நினைவுக்கு வந்தது. அது பல்லாயிரம் இந்தியர்களை ஈராக்- குவைத் போரின் போது இந்திய ராணுவம் போராடி மீட்ட கதை. இரண்டுமே மீட்கப்படுவதைப் பற்றிய கதையாக இருந்தாலும் அது காப்பாற்றிய அதிகாரியின் பார்வையில் வந்த கதை, இதுவோ மிகப் புத்திசாலித்தனமாகப் பிணைக்கைதியில் ஒருவருடைய கதையை விரிவுபடுத்தி, அவருடைய பின்னணி, அவருடைய கடன் சுமை, அவருடைய குடும்பத்தின் பின்புலமென்று சமீரா என்ற பாத்திரப்படைப்பை சுற்றி நிகழும் காட்சிகளிலிருந்து தொடங்கி அவருடன் நாமும் ஈராக் வரை பயணித்து, சமீராவை நமக்குப் பிரியப்பட்ட பெண்ணாக மாற்றி, அந்தச் சமீராவிற்கு நிகழும் துயரங்களை நம் துயரமாகச் சுமக்க வைத்திருப்பதே இயக்குநரின் வெற்றி. திரைக்கதையை மஹேஷுடன் இணைந்து எழுதியிருக்கிறார் பி.வி. ஷாஜி குமார்.
இப்படத்தின் பலமே இயக்குநருடைய கதாபாத்திர தேர்வு எனலாம். சிறிய கதாபாத்திரத்திலிருந்து பிரதான பாத்திரப் படைப்பு வரை நடிப்பென்றே சொல்ல முடியாதபடி அடித்து ஆடி தூள் கிளப்பியிருக்கிறார்கள். சமீராவாக வரும் பார்வதி நம்மோடு ஒட்டிக் கொள்கிறார். அவர் சிரித்தால் நாம் அகம் மகிழ்கிறோம், அவர் அழுதால் நாம் விசனப்படுகிறோம், அவர் கோபம், ஏமாற்றம், எரிச்சல் என்று மாறிக் கொண்டே இருக்கும் அவர் முகபாவம், உடல்மொழி, உடை தேர்வு என்று சின்னச் சின்ன நுணுக்கங்களையும் கவனமாகக் கையாண்ட படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். ஓர் இஸ்லாமியப் பெண் தன் தாய் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்கும், கணவர் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்குமான வித்தியாசத்தைச் சிறிய காட்சியில் போகிற போக்கில் பலமாக நாம் இடறும் அளவிற்குத் தட்டிவிடுகிறார். அந்நியர்கள் வீட்டிற்குள் வந்தால் இயல்பாகத் தலை முக்காடை இட்டுக்கொண்டு வந்து நிற்பது, செவிலியாகப் பலரோடு சேர்ந்து வேலை பார்த்தாலும், ஓர் இஸ்லாமியப் பெண்ணாக அறையிலிருந்து வெளியில் வரும்போது மேலாடையெடுத்து மூடிக் கொண்டு மற்றவரிடம் வந்து அதட்டலாக, பயமின்றித் தன் தேவைகளை வெளிப்படுத்துவது என்று அந்தக் கதாபாத்திரத்தை சுவையுடன் பறிமாறியுள்ளனர். இஸ்லாமிய வாழ்வியல் பின்புலத்தைச் சரியாக அவதானித்தால் மட்டுமே இப்படியான நுணுக்கங்களைக் கையாள முடியும். இதில் படக்குழுவினரின் அர்ப்பணிப்புத் தெரிகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்தான் ஆனால் ஈராகின் மொசூல் இப்படிதான் இருக்குமென்று நம்மை நம்ப வைத்துவிடும் அளவிற்குச் சானு வர்கீஸின் ஒளிப்பதிவு காட்சிப்படுத்தியுள்ளது.

சமீரா - விவாகரத்தான பெண், எட்டு வயது குழந்தைக்குத் தாய், கடன் சுமையுடையவள், செவிலியாக இருப்பவள், பணத் தேவைக்காக ஈராக்கில் வேலைக்கு விண்ணப்பிக்கிறாள். அவள் மீது 'காதல்' என்ற காரணத்திற்காக மட்டும் செவிலியான ஷஹீதும் விண்ணப்பிக்கிறான். ஈராக் பயணத்திற்கு முன்பாகவே காதலை வெளிப்படுத்திக் கரம் பிடிக்கிறான். இரண்டாவது கணவரின் குழந்தையுடன் இரண்டாவதாகத் தாய்மை அடையும்போது தனது மூத்த மகன் அதனை எப்படி எடுத்துக்கொள்வான் என்ற உள்ளத் தவிப்பை ஒரு தாயாக, புது மனைவியாக, செவிலியாகச் சமநிலைப்படுத்தி அந்தந்த காட்சிக்கு தகுந்த முகபாவத்தை அழகாக வெளிப்படுத்துகிறார் பார்வதி. ஷஹீதாக வரும் குஞ்ஞாக்கோ போபனும் எங்கும் அலட்டாமல் இயல்பாக நடித்துள்ளார். இஸ்லாமின் பெயரில் செய்யும் அட்டூழியங்களை, 'தீவிரவாதம் இஸ்லாமே அல்ல' என்பதைப் பறைசாற்றும் விதமாக, ஐஎஸ்களிடம் மாட்டிக் கொண்டு அடி வாங்கி, அங்குச் சந்திக்கும் மலையாளியிடம் ஷஹீத் "எனக்குத் தெரிந்த இஸ்லாமில் வன்முறை இல்லை" என்று சொல்லும் காட்சியில் முத்திரைப் பதிக்கிறார் இயக்குநர்.

தாய்- தந்தை பிரிவின் குழப்பத்தையும், புதியவரை தன் தாயுடன் பார்க்கும்போது ஏற்படும் எரிச்சல், யுத்தபூமி ஏற்படுத்திய பயம் எல்லாவற்றையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் குழந்தையாக வரும் இப்ராஹிம். அதே போல் சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் கொடுக்கப்பட்ட இடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார் ஆசிஃப் அலி. சொல்லியே ஆக வேண்டிய முக்கியக் கதாப்பாத்திரம் ஃபஹத் ஃபாசில், ஈராக் இந்திய தூதராக, கம்பீரமாக, விவேகத்துடன் செயல்படும் புத்திசாலி அதிகாரியாக, கவுரவ வேடத்தில் சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கலக்கியிருக்கிறார். அவரிடம் சமீரா தன் கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி கெஞ்சுமிடத்தில், அதனை ஓர் அதிகாரியாக எப்படி உள்வாங்கிக் கொள்கிறார் என்பதைத் தனது கண்களாலேயே நமக்கு உணர்த்திவிடும் நடிப்பாற்றல் கொண்டுள்ளார் மனோஜாக வரும் ஃபஹத்.

ஷான் ரகுமான் மற்றும் கோபி சுந்தர் இருவரின் பின்னணி இசையும் பின்னிபெடலெத்து இறுதி காட்சியில் தேசிய கொடியை பார்த்தவுடன் செவிலியர்களுடன் சேர்ந்து நாமும் ஆவலாக ஓடவில்லையென்றாலும் நம் இருக்கைக்கு முனைக்கே வந்து வாய் பிளந்து உட்கார வைத்துவிடுகிறார்கள்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் அப்படியாகக் காதலின் வலியில் கணவரை பிரிந்த சமீராவின் அழுகையில் ஐஎஸ் ஆட்களும் உருகி ஷஹீத்தை கரம் சேர செய்யும் உணர்ச்சியூட்டும் காட்சியையும் இயல்பாக மிக நுட்பமாக மட்டுமே காட்டியிருப்பதும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்தக் காதலின் மெல்லிய இழைதான் பிணைக்கைதிகள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்ற கதைச்சொல்லலில் ஒளிந்துக் கிடக்கும் சூட்சமம்.

'நாம் எவ்வளவு பாதுக்காப்பான இடத்தில் வாழ்கிறோம்' என்ற உள்ளுணர்வை படம் பார்த்த எல்லோரிடமும் விட்டுச் செல்கிறது 'டேக் ஆஃப்'.

Wednesday, March 08, 2017

பெண்கள் தினம்

பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று
வேலி கட்டுவதில்லை
மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள்
தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை
எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு
வரையறை வகுப்பது அவர் தம் மீதான
நம்பிக்கையின்மையல்ல
கேள்விப்படும் சமூக சங்கடங்கள்
வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள்

என் போன்ற தாய்மார்கள்
பெண் பிள்ளைகளை வளர்க்கும்
பீதியிலிருந்து விடு்படும்
பாதுகாப்பான நாளே
பெண்கள் தினம்

Wednesday, October 12, 2016

Pink & Parched - இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்


இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது.

‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக மிகத் தெளிவாகத் தமது பாத்திரப்படைப்புக்கான முகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தில் ஒரு கதாநாயகி கதாநாயகன் என்றில்லை. ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் முதிர்ந்த வழக்கறிஞராகக் கலக்கியிருக்கிறார். அவரது நடையுடை பாவனை அத்துனையும் முதிர்ச்சியையும், இயலாமையும் சேர்த்து அமைத்த பிம்பமாக வருகிறார். மினலாக வரும் தாப்ஸி கதாபாத்திரத்திற்கேற்ப எந்த அதிர்வுமில்லாமல் தொலைந்து போனவராக, தனது கையாலாகத்தனத்தை உடல்மொழியில் சொல்லியிருப்பது இயக்குநர் கேட்டுக் கொண்டபடியா அல்லது இதற்கு மேல் அந்தக் கதாபாத்திரம் எதையும் வெளிப்படுத்தக் கூடாதா என்பது விளங்கவில்லை. 'தைரியமான பெண்மணி' என்று ஃபலக் மினலை குறிப்பிட்டாலும், அந்தத் தைரியத்தை வெளிப்படுத்தாமல் அதிர்ந்தும் பேசாமல் அடக்கப்பட்ட சமுதாயத்தால் நசுக்கப்பட்டவராய் எல்லாக் கட்டத்திலும் காட்சி தருகிறார் தாப்ஸி.

மினலாக வரும் தாப்ஸியைவிட, ஃப்லக்காக வரும் கிர்த்திக் குல்ஹரி மிக நேர்த்தியாக நடித்துள்ளார். குறைந்த வசனங்கள் என்றாலும் சரியான தருணத்தில் முறையாக, தேவைக்கேற்பப் பொருந்தி நடித்துள்ளார். அப்படியே ஆண்ட்ரியாவும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இப்படத்தில் இம்மூன்று கதாபாத்திரங்களும் பிரதானம் என்பதை வலியுறுத்த அவர்களின் பெயருக்குப் பிறகே அமிதாப்பின் பெயர் ‘டைட்டில் கார்டில்’ வருகிறது. நம்மூர் சூப்பர் ஸ்டார்கள் இப்படியான விஷயத்திற்கெல்லாம் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். பாலிவுட்டிலிருந்து இப்படியான நல்ல விஷயங்களை எப்போது கற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

நம் நாட்டில் சக்தி வாய்ந்த இடத்தில் அல்லது பண பலத்துடன் கூடியவர்கள் பெண்களை எப்படி மடக்குகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பிடிக்காத பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு எளிதாக அவள் வேலையை இழக்க வைக்கிறார்கள் என்று படத்தில் காட்சிகளாகப் பார்க்கும் போதே மனம் பதறுகிறது.

ஆண்களுடன் ஒரு பெண் சகஜமாகக் கொஞ்சம் சிரித்துப் பேசினால், அவனுடன் வெளியில் சென்றால் அல்லது பார்ட்டிக்குப் போனால் அல்லது குடித்தால் அல்லது இரவு உணவகத்திற்குச் சென்றால் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் இச்சமூகம் பார்க்கிறது என்பதையும் படித்த பண்பான ஆண்களும் கூட இப்படியான கறுப்பு எண்ணங்களுடன் இருப்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இயக்குனர்.

‘பிங்க்’கில் நகரத்தில், படித்த பெண்களின் குரலாக வழக்கறிஞர் இருந்து பேசுகிறார் ஆனால் ‘பார்ச்ட்’ படத்தில் வறண்ட பூமியில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான தேவைகளை, விருப்பங்களை அவர்களே பேசுகிறார்கள். சிக்கலின் தீர்வுகளைத் தேடுகிறார்கள், தமக்கான சந்தோஷத்திற்காகப் போராடுகிறார்கள் இறுதியில் விடுதலையும் பெறுவதாக முடிகிறது படம்.

‘பார்ச்ட்’ படத்தில் வரும் பெண்கள் ஏனோ எனக்கு இஸ்லாமியப் பெண்களையே நினைவுபடுத்தினார்கள். அதற்குக் காரணம் படத்தின் முதல் காட்சியாகவும் இருக்கலாம். இறுக்கமான தலை முக்காட்டை ஒதுக்கி தலையைப் பேருந்தின் ஜன்னலில் நீட்டி சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறார்கள் லஜ்ஜுவாக வரும் ராதிகா ஆப்தேவும் ராணியாக வரும் தனிஷ்தா சாட்டர்ஜியும். அதுமட்டுமின்றிப் பொருள் கொடுத்து பெண் எடுப்பது இஸ்லாமியர்களின் முறையென்பதாலும் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். பெண்ணை ஆட்டை விலை பேசுவதுபோல் மிகச் சரியாகவே காட்டியுள்ளனர். செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் வலியும் வலிமையும் நிறைந்து நிற்கிறது. இதில் மதிக்கப்படாத பெண்களின் உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசியுள்ளார் இயக்குனர் லீனா யாதவ். ‘பார்ச்ட்’, படத்தைத் திரையில் பார்ப்பது போலில்லை புதியதொரு உலகத்தைச் சுற்றிப் பார்த்து வந்ததுபோல் மனதிற்கு மிக நெருக்கமான ஓர் உணர்வை ஏற்படுத்தியது. யாருமே இப்படத்தில் நடிக்கவில்லை மாறாகக் கதைமாந்தர்களாக மாறியுள்ளனர். லஜ்ஜு, ராணி, பிஜ்லியுடன் நாமும் தோழமையுடன் சுற்றி திரிந்து வரும் வகையில் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் கார்பென்டர்.


இரு படங்களின் முடிவுகளும் நமக்குத் திருப்தியையும் நியாயமான தீர்ப்பையும் தந்தாலும் நிஜ வாழ்க்கையில் பொசுக்கப்படும் உண்மைகள் சுடவே செய்கின்றன.

Wednesday, March 30, 2016

மண(ன) முறிவு - Gett: The Trial of Viviane Amsalem

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?"
"வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை."
"மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?"
"இது விவாதத்திற்குரியது"
"என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?"
"இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்."
"கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று ஏதேனும்?"
"இல்லை"
"கணவர் ஏதாவது ஒரு வகையில் அவரது மனைவியை அச்சுறுத்துகிறாரா?"
"இல்லை"
"இவரால் இந்தப் பெண்ணின் வாழ்வில் ஆபத்து உண்டு என்று நம்புகிறாரா? "
"பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக் கொள்வதுமில்லை."
கணவன் இடைமறித்து: "நான் பேச விரும்புகிறேன். அவளுக்குத் தான் என்னுடன் பேச விருப்பமில்லை."
"எல்லாம் சரியாகத்தானே இருக்கு பிறகு விவாகரத்திற்கான காரணம்தான் என்ன?"
"அவள் தன் கணவரை விரும்பவில்லை."
-இப்படி நீதிமன்ற விசாரணையோடு துவங்குகிறது இஸ்ரேலிய திரைப்படமான Gett: The Trial of Viviane Amsalem.

ஒரு பெண்ணின் தேவையை அறிய முற்படாமல், அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கான மரியாதையைத் தராமல் அவள் கணவரின் விருப்பத்தை மட்டுமே பிரதானமாக்குகிறார்கள். முடிந்த வரை அவருக்குச் சாதகமாக விசாரணையைக் கொண்டு செல்கிறார்கள். இரண்டு மணிநேர முழுத் திரைப்படமும் விசாரணையாக, நீதிமன்ற காட்சிகளாக மட்டுமே இருப்பினும், அயர்ச்சியில்லாமல், பல கேள்விகளுடன், வாழ்வியல் சிக்கலுடன், ஆண் ஆதிக்க நீதிபதிகளின் அமைதியான அட்டூழியங்களாக விரிகிறது.

இப்படத்தின் மூலம் இஸ்ரேலின் வாழ்வியல் முறையை விளங்க முடிகிறது. இஸ்ரேலில் எந்த உள்நாட்டு திருமணமும் அல்லது விவாகரத்தும் மதக்குருக்களால் மட்டுமே சட்டப்பூர்வமாக்க முடியுமாம், அதுவும் 'கணவரின்' முழு ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாகுமாம். மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களில் மாட்டிக் கொண்ட கதாநாயகி வீவியன், கணவர் எலிஷா ஆம்சலெமிடமிருந்து விவாகரத்து கோருகிறார். அவர் தர மறுக்கிறார். வீவியன் தன் தரப்பு நியாயங்களை விவரிக்க அழைத்து வரும் சாட்சியங்களும், எலிஷா நல்லவர் என்று சான்றிதழ் தருகிறார்கள். அவர் நல்லவர்தான் ஆனால் அவர் தனக்கு நல்ல கணவரில்லை என்பதைத் தனது வழக்கறிஞர் மூலம் விளங்க வைக்கப் பாடுபடுகிறார் வீவியன். சாட்சிகளாக வரும் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு பெண்ணை அவர்கள் பார்க்கும் வெவ்வேறு பார்வைகளின் பிம்பங்களாக உரு தந்திருக்கிறார் இயக்குனர். இந்தச் சமுதாயத்தில் பலருக்கு, ஏன் பெண்கள் உட்பட பலருக்கு, கணவர் அடிக்கவில்லை, குடிக்கவில்லை, வேறு பெண் தேடி செல்லவில்லை, உண்ண உணவு, இருக்க இடம் இதெல்லாம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இவ்விதமான மனநிலை இருப்பதால்தான் வீவியன் போன்ற பெண்களின் மனம் இவர்களுக்குப் புரிவதில்லை. இதையெல்லாம் மீறி திருமண வாழ்வில் ஒரு பெண் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி இவர்களுக்கு விளங்குவதில்லை. அதே போல ஒரு மனைவியின் கடமையாகப் பொதுவாகப் பலர் சிந்திப்பதும், அதுவே இந்தப் படத்தில் சொல்லப்படுவதும், கணவருக்குப் பிடித்ததைச் சமைத்துப் போடுதல், கணவரின் பெற்றவர்களைக் கவனித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கணவரின் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சியாக இருத்தல், கணவரின் தேவைக்கு இணங்குதல் இதைத் தவிர வேறில்லை. அந்தப் பெண்ணுக்கென்று ஒரு மனம் உண்டு, அதில் அவளுக்கும் ஆசைகள், கனவுகள், தேவைகள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் உண்டு என்பதை நியாயப்படுத்த முற்படும் போது அதைப் புரிந்து கொள்ளாமல் அதனையும் தவறாகப் பார்க்கும் சமுதாயமும், மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களும் அவளுக்கு விவாகரத்து என்ற விடுதலை கிடைக்கச் செய்யாமல் செய்கிறது.

இந்தப் பெண் கதாபாத்திரத்தின் மொத்த வலியையும் பணிவையும் செருக்கையும் சேர்த்து அதன் முழு வடிவமாகவே மாறுகிறார் கதாநாயகி வீவியனாக வரும் ரோனித் எல்காபெட்ஸ். அவரே தன் சகோதரர் ஷலோமி எல்காபெட்ஸோடு இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை பெரிய ஆறுதலானது இஸ்ரவேலர்களின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் 'Ophir Award' இப்படத்திற்குக் கிடைத்தது மட்டுமல்லாது ஜெருசலேம் திரைப்பட விழாவில் 'பார்வையாளர்களுக்குப் பிடித்த படம் பிரிவுக்கான விருதும் இப்படத்திற்கே கிடைத்துள்ளது ஒரு வகை நம்பிக்கையைத் தருகிறது.

யூதர்களும் பிற மத அடிப்படைவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதைப் பறைசாற்றும் படம். கடவுளின் பெயரில் ஆண்கள் மாறு செய்யும் ஒரு பெண்ணின் கதை.

Wednesday, September 09, 2015

அறிவின் ஆரம்ப எழுத்து - அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் போது திணறல் ஏற்பட்டு, அவளை நசுக்கி வாழ்வின் எல்லைக்கு ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தாலும், இன்னல்களைத் தாண்டி வாழ தலைப்படுகிறாள் இப்படத்தில் ஃபாத்திமா. இப்படம் பெண்களுக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இங்கு ஆண்களையோ மதத்தையோ குற்றம்பிடிக்கவில்லை மாறாக மதத்தின் பெயரில் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை நேரடியாகச் சாடியுள்ளது. ஃபாத்திமா ஒரு கட்டத்தில் 'இன்று என் கணவர் என்னைக் காரணங்கள் காட்டி விவாகரத்துச் செய்கிறான் என்றால் அதற்கு முழுப் பொறுப்பு நீதான்' என்று மதபோதகரைக் கை காட்டுவது - இப்படியாகப் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

ஒரு விபச்சாரி, நாவறட்சியுடன் இருந்த நாய்க்குத் தண்ணீர் கொடுத்து அந்த நாயின் தாகத்தைத் தணித்ததற்காக அவளது பாவக் கறைகளை மன்னித்து இறைவன் சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தது பற்றி ஃபாத்திமா மதபோதகரிடம் கேள்வி எழுப்பும் போது "அது தவறு... பெண்களோட சப்தம் சபையில் எழுந்தால் அது மறுமை நாளின் வரவென்று" தவறாகப் போதிக்கிறார். மார்க்கம் சொல்வதெல்லாம் பிற உயிர்களுக்குக் காருண்யம் காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிடச் சிறந்த கருணையைக் காட்டுகிறான் என்பதுதானே? ”பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள், வானில் ’அர்ஷில்’ உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்” என்று போதிக்கும் மார்க்கத்தின் உண்மைகளை மறைத்து அவர் அவர்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மதகுருக்கள் முழங்குவதை நிரல்படுத்தியுள்ளது 'அலிஃப்'.

பிரமாதமான இயக்கமென்று சொல்வதை விடத் திரைகதையால், வீரியமான வசனங்களால் கேள்விகளைக் கொண்டு நிரப்பிக் கண்ணாடியை நம் முன் நிறுத்தி, சமீபகாலமாகத் தூய்மைவாதம் என்ற பெயரில் திரிந்து கொண்டு இருக்கும் சூழல்களையும், நமக்கே தெரியாமல் விதைக்கப்பட்ட விஷத்தினால் வார்த்தெடுக்கப்படும் சமுதாயக் கட்டமைப்பையும் கண் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் என்.கே. முகமது கோயா. எவ்வளவு பாகுபட்டுக் கிடந்தாலும் பெண்கள், அவர்களின் ஆடைகள், ஒழுக்கங்கள் என்று வந்துவிட்டால் அனைவரும் கைகோர்த்துக் கொண்டு சாடுகின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். திருமணத்தில் அழைக்கப்படாத விருந்தாளியாக வரும் சிறுவன் அலியை அடித்து விரட்டுபவர்கள், திருமணம் முடிந்து குப்பையில் சாப்பாட்டைக் கொட்டுவது, பெரியவர்கள் பிரச்சனையில் குழந்தைகளின் படிப்பு பாதிப்பு அடைவது, சடலத்தை அடக்கம் செய்யவும் வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருத்தலை எதிர்த்து வீட்டின் பின்புறத்தில் புதைக்க, தன் அயலார் சந்திரனாக வரும் கலாபவன் மணியை அழைக்க, 'மோண்டா கழுவாத இவனா அடக்கம் செய்யப் போறான்?' என்று கேட்பவர் வாயை மூடும் வகையில் 'அவன் மனசு சுத்தமானது அது போதும்' என்று பதிலுரைப்பது என்று மனிதத்திற்காகத்தான் மதமே தவிர, மதத்தைத் தாங்கிப் பிடித்து மனிதத்தைச் சாகடிக்கிறார்கள் என்பதை அழகாகச் சின்னச் சின்னக் காட்சிகளில் நெஞ்சை நிறைக்கிறார்.

தொலைக்காட்சியைத் தன் தோழியோடு இருக்கையில் அமர்ந்து பார்க்கும் குற்றமற்ற சிறுவனை அதட்டி கீழே உட்காரச் சொல்லும் போது கேள்வி கேட்காமல் கீழே நகர்பவனோடு அவன் தோழியும் கீழே உட்கார்ந்து உதிக்கும் புன்னகை, ஃபாத்திமா வேலை கேட்டு உதிர்க்கும் கண்ணீருக்கு, உடன் வேலை தர முயற்சிப்பவருக்கு நன்றியில் உயரும் கை என்று தத்தளிக்கும் குடும்பத்தை மதத்தின் பெயரில் எவ்வளவு அலைக்கழிக்கலாமோ அவ்வாறெல்லாம் சீண்டிப்பார்த்துப் படம் முழுக்க வேதனை நிரம்பிய காட்சிகளாக இருந்தாலும் அதன்னூடே நம்பிக்கை ஒளிக்கீற்றை விட்டுச் செல்லும் இயக்குனர், கம்யூனிசத்தின் அப்பட்டமான ஆதரவை வெளிப்படையாக அதிகப்படியாகச் சொல்வதாகத் தென்பட்டது. கம்யூனிசமிருக்கும் வீட்டில்தான் பெண் போராளிகள் உதிப்பார்களா என்ன?

"பெண் என்பவள் ஒரு பொருள் மட்டும்தானே? யாரும் வாங்கி உபயோகிக்கலாம், அவளுக்கென்று மனசு, ஆசைகள், உணர்வுகள் என்று எதுவுமே இருக்கக்கூடாது அப்படித்தானே? இந்தச் சமுதாயமும் முசலியார்களும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், 'பெண்களுக்கென்று நபிகளார் பல உரிமைகளும் சலுகைகளும் மொழிந்ததுண்டு. மஸ்ஜித்திற்குச் செல்லலாம், தந்தையின் சொத்தில் உரிமை பெறலாம், பொது மேடையில் பேசலாம், யுத்தத்திலும் பங்கெடுக்கலாம்...' ஆண் ஒரு பெண்ணுக்கு விவாகரத்தை (தலாக்) மூன்று முறை சொல்ல வேண்டும் ஆனால் பெண் ஒர் ஆணுக்கு விவாகரத்தை ஒரே முறை சொன்னால் போதுமென்றும் உண்டு" என்று தைரியமாகப் பேச அவள் போராளியாகவோ, கம்யூனிட்டாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மார்கத்தைச் சரியான புரிதல்களுடன் எதிர்கொள்பவளாக இருந்தால் போதும்.

ஃபாத்திமா மூலம் ஒவ்வொரு பெண்களும் வேண்டி நிற்பதெல்லாம் இலகுவான சுவாசம், நிறைவாய் உணவு, உடுத்திக் கொள்ள உடை, மரியாதையான ஒரு வாழ்வு அவ்வளவுதான். அதன் பிறகுதான் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க முடியுமென்று நேரடியாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் முகமது கோயா. இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

எல்லாக் கதாமாந்தர்களும் அலட்டிக்கொள்ளாமல் கதையைச் சரியாகப் புரிந்து கொண்டு தம் பங்கை செவ்வனே செய்துள்ளனர் குறிப்பாக ஆட்டாவாக வரும் ஃபாத்திமாவின் தாய் ஜீனத் இயல்பான நடிப்பில் மிளர்கிறார். ஜாய் மாத்தியூ ஹாஜியாராகக் கலக்கியுள்ளார். இரண்டே பாடல்கள் என்றாலும் அதன் வரிகளில் பொதிந்த அர்த்தங்களைத் தன் இசையில் நம்மிடம் கொண்டு சேர்க்கிறார் ரமேஷ் நாராயண்.

இப்படத்தில் பிரச்சாரமுமில்லை எந்தத் தீர்வும் தரவில்லை, நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் சிந்திக்கத் தூண்டவுமே இப்படம்.

இறுதி காட்சியில் கருப்பு அங்கி அணிந்த கூட்டத்தை அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் இன்னல்களாக சித்தரித்து அவர்களை விடுப்பட்டவளாக வீர நடையும் நேர் கொண்ட பார்வையும் வீசி செல்கிறார் ஃபாத்திமா.

எனது போன பதிவான 'தி ஸ்டோனிங் ஆப் சொரயா'வில் கேள்வி கேட்டவளை கற்களால் எதிர்கொண்டு சாகடித்தார்கள். இந்தப் படத்தில் வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டுகிறாள் ஃபாத்திமா. அலிஃப் பேசப்பட வேண்டிய படம்.

Tuesday, September 01, 2015

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல.

உண்மை சம்பவம், மிகவும் வலி மிகுந்த சம்பவம். அதைப் படமாக விவரித்ததில் எந்தத் தவறும் நிகழாதவாறு சரியான சூழலில், ஒலி- ஒளிகளைக் கச்சிதமாகப் பிடித்து, தேவையான ஒப்பனைகளோடு, பொருத்தமான நடிகர்களோடு ஒரு நிகழ்வை நாம் அருகிலிருந்து சாட்சியாகப் பார்க்க மட்டும் செய்திருக்கிறார் இயக்குனர் சைரஸ் நவ்ராஷ்தே. நான் சொல்வது 'ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்' படத்தைப் பற்றி. அத்தோடு அவர் கடமை நிறைவடைந்து விட்டிருக்கிறது. படத்தின் தலைப்பே முழுக் கதையையும் சொல்லிவிடுகிறது. கல்லெறி தண்டனைகள் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று படம் முடிவில் ஓடவிடும் வரிகள், நம்மைப் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

அந்த நிகழ்வு நடந்தது 1986 ஆம் ஆண்டில், ஈரானில். தன் பயணத்தின் போது அறிந்து கொண்ட உண்மையைப் பிரெஞ்ச் பத்திரிகையாளர் ஃபிரைஜோன் சஹெப்யாம் (Freidoune Sahebjam) புத்தகமாக 1990-ல் வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதின் விளைவு, திரைப்படமாக அப்புத்தகம் 2008 'தி ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்.' என்று அதே பெயரில் சைரஸ் நவ்ராஷ்தே (Cyrus Nowrasteh) மற்றும் அவரது துணைவியார் பெட்ஸி கிஃப்ஃபனின் வலிமையான திரைக்கதையுடன் வெளியானது.

ஒரு தனி நபரை ஒழுங்கீனமென்று அடையாளப்படுத்தி அவள் பிறந்து வளர்ந்த மண்ணில், அவளுக்குத் தெரிந்த முகங்கள், பழகிய உறவுகள் சூழ, குழியில் தள்ளி இடுப்புவரை புதைக்கப்பட்டு, கைகளைப் பின்னால் கட்டி, தன் தந்தையும் தன்னிடம் அது குறித்து ஒரு வார்த்தையும் கேட்காமல், அவள் கணவரின் குற்றச்சாட்டை மட்டும் முன்னிறுத்தி 'இவள் ஒழுக்கம் கெட்டவள். இவள் என் மகளே இல்லை' என்று கல்லெறி தண்டனையில் முதல் நபராகக் கல்லெறிய தயாராகும் போதே அப்பெண் மனம் நொறுங்கிச் செத்துவிடுகிறாள். அந்தக் காட்சியிலெல்லாம் கண்களிலேயே பேசி தன் வலியை வெளிப்படுத்துகிறார் சொரயாவாக வரும் மோஸன் மார்னோ (Mozhan Marnò). தன் தந்தை எறியும் கல் அவள் மீது படாதபோது 'அவள் கலங்கமற்றவள் என்று உனக்கு இறைவன் காட்டும் அறிகுறி'யென்று அவையிலிருக்கும் ஒரு பெண் கூக்குரலிடுகிறாள். 'இறைவன்' என்று ஒருவன் இருந்திருந்தால் அவள் குற்றமற்றவளோ இல்லையோ தன் படைப்பை இப்படி அவமானப்படுத்திக் கொடூரமான முறையில் கொலை செய்வதை தடுத்திருப்பான் இல்லையா? அந்த நிமிடத்திலும் இவர்கள் "காத்தருள்வான், உன்னை சொர்க்கத்தில் அவன் வரவேற்பான்" என்று சொல்லும் சொற்கள் இறைநம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

ஈரானில் ஒரு கிராமத்தில் அரசாங்க அதிகாரத்தில் இருக்கும் அலிக்கு பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்யும் ஆசையில், தன் மனைவி சொரயாவையும் நான்கு குழந்தைகளையும் விட்டுவிலக நினைக்கிறான். விவாகரத்து தர மறுக்கும் மனைவி மீது களங்கத்தை ஏற்படுத்துகிறான், அதற்கு அந்த ஊர் முல்லாவும் துணை செல்கிறார். அவள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன தெரியுமா? 'கணவனிடம் மட்டுமே சொல்லக்கூடிய உடல் உபாதையைப் பற்றி அவள் வேறொரு ஆணிடம் சொல்லிவிட்டாள்' என்பது. அது மாதவிடாய் பற்றியதாக இருக்கலாம். அதற்காகக் கல்லெறி தண்டனையா? அதற்கும் அந்தப் பெண் 'அப்படி நான் சொல்வேயில்லை' என்று வாதிடுகிறாள். 'அதற்கு சாட்சியங்கள் இருக்கிறதா?' என்று ஊரின் மேயர் கேட்க, 'குற்றம் சுமத்தியவர்கள் குற்றத்தை நிரூபிக்கட்டும்' என்கிறாள். அதற்குப் பதிலாக வருவது "ஒர் பெண் களங்கமானவள் என்று கணவன் கை நீட்டிவிட்டால், அதை இல்லை என்று அந்தப் பெண்தான் நிரூபிக்க வேண்டும். அதே போல் ஓர் ஆண் தவறானவன் என்று ஒரு பெண் கை நீட்டினாலும் அந்தப் பெண்தான் அதற்கான சாட்சியங்களைத் தர வேண்டும்". இது எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை. அவள் விபச்சாரமே செய்திருந்தாலும் அந்தப் பெண் மட்டுமா அங்குத் தண்டனைக்குரியவள்?

'ஆண் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவன் தேவையை நிறைவேற்றுபவள் தான் நல்ல மனைவி' என்ற வசனங்களும் வருகிறது. அதே போல அந்த முல்லா சொரயாவிடம் வந்து 'உன் கணவனுக்கு விவாகரத்து கொடுத்துவிடு... அதன் பிறகு என்னுடன் பேசிப் பழகு, நமக்குள் ஒரு தற்காலிக திருமண ஒப்பந்தம் அதாவது சிகேஹ் செய்து கொள்ளலாம். இது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது' என்பார். ஆண்களுக்குச் சாதகமான எல்லா விஷயங்களையும் ஓட்டைகளையும் தேடிப்பிடித்து நிறைவேற்றிக் கொள்ளும் ஈரானியர்களின் வாழ்க்கை முறையைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இப்படியாக சொரயா மீது களங்கத்தை பகிரங்கப்படுத்த முதலில் அவளைப் பற்றிய வதந்திகளைப் பரப்புரை செய்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கான காரியங்கள் நடந்தேறிவிடுகிறது.

இந்தப் படத்தில் இந்த நிகழ்வைக் கேட்டு அதனை நமக்குக் கடத்தும் அந்தப் பத்திரிகையாளரைத் தவிர மற்ற எல்லா ஆண்களும் மிக மோசமான சுயநலவாதிகளாகக் காட்டப்படுகிறார்கள். இவ்வுலகம் ஆண்களுக்கானது என்று தந்தையால் சொல்லி வளர்க்கப்படும் சொரயாவின் மகன்களும் தன்னைப் பெற்று வளர்த்த தாய் என்று கருதாமல், தனக்குரிய ஆண் செருக்கில், தாய் மீது கல்லெறிகிறார்கள். 'தாயின் காலடியில் சொர்க்கம்' என்று போதிக்கும் மார்க்கத்தில் இப்படியான தண்டனைகளை இவர்கள் எப்படி கண்டறிந்தார்கள்!?

ஆதி காலத்திலிருந்தே பல நாடுகளில் இருந்து வந்தது பெண்ணுக்கு எதிரான கல்லெறி தண்டனை. விபச்சாரியை கல்லெறிந்து கொல்லத் துணியும் மக்களை நோக்கி இயேசு பிரான் உங்களில் பாவம் செய்யாதொருவர் முதல் கல்லை வீசட்டுமென்று வரும் பைபிள் வாசகத்திலிருந்து நாம் தெளிவாக இது பழங்காலத்தில் ஆணாதிக்கவாதிகள் ஏற்படுத்திய கொடூரச் சட்டமென்று அறியலாம். அதை இன்னும் பிடித்துத் தொங்கும் நாடுகளைப் பற்றியும் பெண்கள் மீதான வன்முறை குறித்தும் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு, அந்தச் சமயத்தில் ஈரானில் கல்லெறி தண்டனை பட்டியலில் இருந்தவரின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டதாம். இப்படத்தை ஈரான் அரசாங்கமும் பிறநாடுகளிலும் தடைசெய்திருந்தாலும் உலக மனித உரிமைகளின் கண்டனங்களுக்குச் செவிசாய்த்ததே இப்படத்திற்கான வெற்றி எனலாம்.

சொரயாவின் மீது அபாண்ட பலி சுமத்தி கணவரின் கயமையால் கல்லெறி தண்டனைக்குத் தள்ளப்படும் சொரயாவை காட்டும் அதே கிராமத்தில்தான் அவளுக்காகக் குரலை உயர்த்தி, மேயரிடம் வாதிடும், ஒரு கட்டத்தில் மேயரின் கன்னத்தில் பளீர் அறைவிடும், தான் உயிரிழந்தாலும் பரவாயில்லையென்று சொரயாவிற்கு நடந்த கொடுமைகளை தைரியமாக பிரெஞ்ச் பத்திரிகையாளரை அழைத்துத் தம் குரலை பதியச் சொல்லி அதனை உலகுக்குக் கடத்திய ஸஹ்ராவும் வாழ்கிறாள். ஸஹ்ராவாக உருமாறியது ஷொஹ்ரெஹ் அக்தாஷ்லூ (Shohreh Aghdashloo) என்பவர். தனக்குத் தந்துள்ள கனமான பாத்திரப் படைப்பை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

தண்டனையை தெரிவித்த பிறகு அவள் சொரயாவிற்கு தலைவாரிவிடும் போது இருவரும் பாடுவார்கள். அவர்கள் பாடும் வார்த்தைகளின் பொருள் புரியாமலே அந்தக் காட்சியில் நம் கண்களை நிரம்பச் செய்துவிடுகிறார்கள். இறுதியாக விடைபெறும் தாய், என்ன நிகழவிருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியாத மகள்களை முத்தமிட்டு கட்டியணைக்கும் காட்சி நம்மை உலுக்கியெடுத்துவிடுகிறது. கல்லெறிவதற்காக சின்னப் பொடியன்களும் கற்களைத் தேடி அலைவதும், சரமாரியாகக் கல் மழை பொழிந்து இரத்த வெள்ளத்திலிருக்கும் சொரயாவின் அருகில் அலி சென்று அவள் கண்கள் அசைவதை பார்த்து 'இந்த விபச்சாரி இன்னும் உயிருடன் இருக்கிறாள்' என்று ஓலமிடுவதும் மனதில் அழியா ரனங்களை ஏற்படுத்துகிறது.

அதிகாரத்தை பயன்படுத்தி மதமெனும் போர்வையில் எளிதாக அடுக்குமுறைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு 'The Stoning of Soraya M' ஒரு உதாரணம். இன்னும் பல நாடுகளில் பெண்களுக்கெதிரான கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வலிகளுக்கு எங்கே எப்போது விடை கிடைக்கும்??

மனதிடமுடையவர்கள் படத்தை இங்குப் பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=HEKDnGn9Bw0
திரைப்படத்தின் டிரெய்லரை மட்டும் பார்க்க விரும்பினால்: http://www.thestoning.com/flash.php

Thursday, August 20, 2015

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'.

எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் வராததால் ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு நண்பர் முரளி அதற்கான சுட்டியை அனுப்பியிருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்திருப்பதன் பின்னணி இயக்குனர் தாமிரா. படம் முழுக்கத் தெளிக்கப்பட்ட வசனங்களும், கலைகளும், ஒப்பனைகளும் அசல் இஸ்லாமிய குடும்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கவே, இது எப்படி சாத்தியம்? தாமிரா என்பவரால் எப்படிச் சிறிய தவறும் நிகழாது முழுநீளப்படத்தை இஸ்லாமை உள்வாங்கி செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை இன்று அவரைப் பற்றிப் படிக்கும் போது கிடைத்தது. தாமிரா ஒர் இஸ்லாமியர் என்று அறிந்ததும், அந்த இயல்பான விஷயத்தில் எந்த ஆச்சர்யமுமில்லை என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. வசனங்கள் எல்லாமே இயக்குனரால் பார்க்கப்பட்ட கேட்கப்பட்ட அல்லது கேட்க விரும்பியவைகளின் பிரதிபலிப்பாகவே வந்ததால் அதன் உஷ்ணத்தை உணர முடிகிறது. பணத்தைக் குறித்துச் சொல்லும் போது 'துரு பிடிக்காதுனு பணம் சேர்க்கிறான், பணம் சேர்ந்ததும் அவன் மனசு துரு பிடிச்சுப்போகுது', 'பணம் சிலருக்கு அவசியம் சிலருக்கு அலட்சியம்', 'பணம் இருக்கிறவங்க மனசு இரும்புப் பூட்டால பூட்டியிருக்கு' போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.

அதே போல இயக்குனரின் பாத்திரத் தேர்வு மிக அற்புதம். கவிஞர் சல்மாவிற்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக 'மெஹர்' பேசப்பட்டிருக்காது. தாயாக சரண்யா போன்ற சிறந்த நடிகை நடித்திருந்தாலும் கூடத் தமிழ் முஸ்லிம்களின் வட்டார வழக்கை மிகச் சரியான உச்சரிப்பில், இயல்பாகப் பேசுவதற்கு ஒரு தேர்ந்த நடிகை தேவையில்லையே, மாறாக அந்த இடத்தில் மகள் யாஸ்மீனின் சூழலில் வளர்ந்த சல்மா போன்றவரே சரியென்று அறிந்து, நடிக்க வைத்திருக்கிறார். அவர் கணிப்பை சல்மாவும் உறுதி செய்யும் வகையில் ஒரு கவலை ரேகையோடு தாயின் சாயலில் மிக அமைதியாக பாத்திரப்படைப்பை உள்வாங்கி நிகழ்த்தியுள்ளார். ’ஒது’ செய்யும் முறை, தலையில் சீலை நழுவ விடாமல் தலையை வைத்துக் கொள்ளும் முறை, அதனை ஒதுக்கிவிடும் முறை என்று அமர்க்களப்படுத்தியவர், தொழுகையின்போது தலைமுடி தெரியாமல் முந்தானையைச் சுற்றிக்கட்டாமல் விட்டுவிட்டார். சல்மாவின் மகனாக வரும் ரஷீத் எல்லா கதாபாத்திரங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக அற்புதமாக உலா வந்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது இங்கு பொருந்தாமல் போய்விடும். அவ்வளவு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். கணுக்கால் தெரிய கட்டிய கைலி, தவறு செய்துவிட்டதால் தாயை எதிர்கொள்ள முடியாத திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி, 'அடுத்தவர் பொருளை அபகரிப்பவன் மறுமையில் கைகளை இழப்பான். என் அக்காவின் வாழ்வுக்காக என் கைகளை இழந்தாலும் பரவாயில்லை' என்று கண்களில் காட்டிய உறுதி, அவருடைய தவிப்பு, கலக்கம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா.

கதை சொல்லி கதையை முடிவில் ஆரம்பித்து, பின்னோக்கி சென்று கதையை விவரித்து அதில் ஆங்காங்கே இந்து- முஸ்லிம் ஒற்றுமையாக தாய்- பிள்ளைகளாக வாழ்ந்த காலத்தை நினைவுப்படுத்தி, 'இல்லாதவன் புலம்பல் எல்லாமே ஒருவிதத்துல கம்பூனிசம்தான்' என்று எள்ளலாக முதலாளி- தொழிலாளி தர்மத்தைத் தொட்டு, அமைதியான மார்க்கத்தை அச்சுறுத்தல் மார்க்கமாகப் பார்ப்பவர்களுக்கு நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் சரியான முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாதவரை இப்படியான நெறிகள் வெறும் மதக்கோட்பாடுகளாக ஏடுகளில் மட்டுமே இருக்கும் என்பதை மிக நாசூக்காகத் தெளிவுப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு. இச்சித்திரம் மார்க்கத்தை பின்பற்றாமல் ஊர் தப்பாகப் பேசுமென்று ரொக்கமும் நகையும் கேட்பவர்களைப் பார்த்து நகைக்கும்.

பெண்ணாகப் பிறந்தவளுக்கு பலநூறு கனவுகளும் ஆசைகளும் இருக்கும், ஆனால் யாஸ்மீன் போன்ற பெண்களுக்கு கனவானது, அவர்கள் சுதந்திரம் என்று விரும்புவது "பட்டபகலுல தெருவுல இறங்கி நடக்கணும், இந்த சந்தத்தாண்டி இருக்கிற உலகத்த நான் பார்க்கணும், மனசு குளிரப் பாட்டுக் கேட்கணும், சத்தமா பாடிப் பார்க்கணும்" என்பது மட்டுமே. ஆனால் அப்படியான ஆசைகள் நிறைவேற அவர்கள் வழியாக நினைப்பது திருமணம் மட்டும்தான். பூப்படைந்த பெண்களை வீட்டிலேயே வைத்து, திருமணம் நடக்கும் வரை நாலு சுவற்றைத் தவிர வேறு எதையுமே பார்க்க அனுமதிக்காமல், யாருடனும் பேச வழி வகுக்காமல், உலக அறிவும் வாசமும் தெரியாமல் முடங்கிப் போக வைக்கும் அவலம் இன்னும் நடந்தேறிக் கொண்டேயுள்ளது. அவர்களை திருமணத்திற்குத் தகுதிப் பெற செய்வது கைத்திருத்தமான சமையலும், அழகும், பிரதானமாகப் பணமும்தான். இதற்குக் காரணம் மதமில்லை, இஸ்லாமிய மார்க்கமில்லை எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்பதில் ஐயமில்லை.

இறுதிக்காட்சியில் 'இஸ்லாத்தைப் பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக இருக்கு' என்பது பெண் விடுதலைக்காகவும் - பெண்களுக்குத் திருமணம் மட்டுமே விடிவு என்றில்லாமல் - அவளுக்குத் தேவையான கல்வி, உலக அறிவு, விசால சிந்தனை எல்லாமும் கிடைக்கப் பெறவும் இந்தத் தலைமுறையினரே உதவிடவும் வழிவகை செய்யத் தலைப்படுமா?

Tuesday, February 17, 2015

நான் ஒரு இனப் பாகுபாடாளர் அல்ல...

அலுவலக வாசலில் உள்நுழையுமிடத்தில் ஏதோ கொட்டிக்கிடந்தது, அது வெள்ளை பளிங்குத் தரையில் பளிச்சென்று தெரிந்தது. நான் வரவேற்பாளினியிடம் "என்னது இது?" என்றேன். அவள் அலட்சியமாக "யாரோ கொஞ்சம் காபிக் கொட்டிட்டாங்க" என்றாள். "துடைத்துவிடலாம், இல்லாவிட்டால் அதை மிதித்து மற்ற இடமும் அழுக்காகிவிடும்" என்றேன். அவள் வேலையைப் பார்த்தப்படியே "இன்னும் ஒரு மணி நேரத்தில் பணியாளர் வந்துவிடுவார், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்" என்றாள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை கடந்த எங்கள் பொது மேலாளர் ஒரு திசுத்தாளை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்து அந்த இடத்தை துடைக்கலானார். இதைப் பார்த்த உடனே வரவேற்பாளினி விறுட்டென எழுந்துச் சென்று "கொடுங்க நான் துடைக்கிறேன்" என்று கேட்க, காத்திருந்ததுப் போல் கொடுத்துவிட்டு சென்றார் மேலாளர்.

அவர் செய்வார் இவர் செய்வார் என காத்திராமல் நாமே உடனே செய்ய வேண்டும் என்பது நன்றாக உரைத்தது.

பெரும்பாலான ஆசியர்கள் வேலைகளில் பாகுபாடுப் பார்க்கிறோம். வெகு சிலரே எதையுமே தரக்குறைவான வேலையாகப் பார்க்காமல் செய்ய முன் வருகிறார்கள்.

(வரவேற்பாளினி ஃபிலிப்பினோ, மேலாளர் லெபனியர், நான் இந்தியர் என்பதை சொல்லத்தான் வேண்டுமா..?).

Monday, September 22, 2014

தாய்மைக்குப் பின் திருமணம்

உலகத்தில் இந்தப் பகுதியில் வாழ்வதால் நிறையவே கலாச்சார அதிர்வுகளைச் சந்தித்துள்ளேன். நேற்றும் இப்படித்தான், என் பிலிப்பினோ தோழி ஷேன் தாயாகவிருப்பதைச் சொன்னாள். என்னையும் மீறிய கலவரம் முகத்தில் தொற்றிக் கொண்டதை அவள் கவனித்திருக்கக்கூடும் அதனால் அவளாகவே "ஷேனுக்கு அடுத்த வாரம் திருமணம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களெல்லாம் சரியாகிவிட்டது, அதனால் பிரச்சனையில்லை" என்றாள். அவளே மறுபடியும் "ஷர்மாவின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்தாயா? மணப்பெண் அழகாக இருந்தாளல்லவா?" என்று தொடர்ந்தாள்.

எங்களுடன் வேலை பார்த்த ஷர்மாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமணப் படத்தை முகநூலில் பதிந்திருந்தார். அதில் அவருடைய மணப்பெண் நிறைமாத கர்ப்பிணி. இரண்டு வாரத்திற்கு முன்பு குழந்தை பிறந்ததையும் பதிவிட்டிருந்தார். இந்த வாரம் முழுவதும் தந்தையான மகிழ்வைப் பகிர்ந்திருந்திருந்தார். திரைப்படம் போல எல்லாம் சட்டென்று நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. குடும்பப் பொறுப்பை ஏற்க, இல்லற வாழ்க்கையில் தன்னை ஒப்படைக்க முடிவு எடுப்பதற்கே அவருக்கு 8-9 மாதமாகியுள்ளது என்ற எண்ணங்களை அசைபோட்டபடி வாழ்த்தும் அனுப்பியிருந்தேன். இவர் இந்தியர், அந்த அம்மணி ஐரோப்பாவைச் சேர்ந்தவர். சரி அதெல்லாம் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதி அதைப் பற்றிய சிந்தனை நமக்கெதற்கென்று விட்டுவிட்டேன். இப்போது இவள் இது பற்றிச் சொன்னதும் எல்லாச் சிந்தனைகளும் மீண்டும் எட்டிப் பார்த்தது.

அனிச்சையாக நான் "இப்போதெல்லாம் தாய்மைக்குப் பின் திருமணம் நவநாகரீகமாகிவிட்டது போலும்" என்றேன் எள்ளலாக.
அவளுக்குக் கோபம் வந்துவிட்டது... "இதில் என்ன தவறு? எங்க ஊரில் இதெல்லாம் தவறில்லை. நான் கூடத் தாய்மைக்குப் பின் தான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் கூட முகம் சுழிப்பதில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பில் இதற்கான ஒப்புதல் இல்லை என்பதை அறிவேன். நேற்று ஒரு செய்தி படித்தேன் - 'மகள் கர்ப்பமானதை அறிந்த தந்தை மகளை வெட்டிக் கொன்றதாக'. ஏன் இப்படி?" என்றாள் எரிச்சலுடன்.

என்னைப் பேச விடாமல் அவளே மறுபடியும் "எங்க ஊரில் கர்ப்பமாகியவன் திருமணம் செய்து கொள்ள முன் வராவிட்டாலும் அவள் கருவைச் சிதைப்பதில்லை. அதில் அவளுக்கும் பங்குள்ளது என்பதால் மனதார அந்தக் கருவைச் சுமப்பாள். காதலில்லாமல் கருவுற்றாலும் அப்படித்தான். ஒற்றைத் தாயாக இருப்பதில் அவளுக்குப் பிரச்னையிருக்காது. உற்றார் உறவினர்களும் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். அவள் வீட்டார் அவன் ஓடிவிட்டான் என்பதைக் கூடப் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் கருச்சிதைவை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாங்கள் 'அவல் போட்டு மெல்பவர்களுக்குப்' பயப்படுவதில்லை மாறாக ஒர் உயிர்கொலைக்குப் பயப்படுகிறோம்" என்றாள்.

என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவள் சொல்வதிலும் நியாயமிருப்பதாகவே தோன்றியது. ஷேனை அழைத்து வாழ்த்துத் தெரிவித்தேன்.

Wednesday, August 27, 2014

ரெக்கை கட்டிப் பறக்குது பாயம்மா பொண்ணோட சைக்கிள்

யுவகிருஷ்ணா ஆல்தோட்டத்தை நினைவுப்படுத்தினாலும் படுத்தினார் மலரும் நினைவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலிருந்து ஒரு சம்பவத்தையாவது பதிவிட நினைத்ததே இது.

பீட்டர்ஸ் காலனி குடியிருப்புப் பகுதியில் வளர்ந்த எனக்கு ஆல்தோட்டம் மிகவும் பழக்கப்பட்ட இடம். வண்ண மீன்கள் வாங்குவதற்கும் வாடகை சைக்கிள் எடுப்பதற்கும் அடிக்கடி சென்று வரும் இடம்.

அப்போதெல்லாம் வாடகை சைக்கிள் ஒருமணி நேரம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய். இப்போது 'வாடகைக்கு சைக்கிள்' உண்டா என்று தெரியவில்லை. அந்த இரண்டு ரூபாய் சேர்க்க நான்கு முறையாவது நான் கடைக்குப் போக வேண்டும்.

எனக்குப் பிடித்த தேங்காய் பிஸ்கெட்டை வாங்காமல் காசை சேமித்து, இரண்டு ரூபாயான பிறகு ஒரு மணி நேரம் சைக்கிளை ஆல்தோட்டத்திலிருந்து வாடகைக்கு எடுத்தோம். நான் சைக்கிளை மிதிக்க, சைக்கிளின் முன் கம்பியில் அனுராதாவும், பின்னாடி 'கெரியரில்' கவிதாவும். சந்தோஷம் பொங்க ஓட்டிக் கொண்டு வரும் வழியில், எதிர்பார்க்கவேயில்லை ஒரு குழந்தை நடுவீதியில் ஆழ்ந்த உறக்கத்தில். சைக்கிள் தடுமாறியது. "ஹையோ கடவுளே ஏற்றிவிடக்கூடாது" என்று நினைத்து முடிப்பதற்குள் ஒரு கணப்பொழுதில் முடிந்துவிட்டது. ஆமாம் குழந்தை மீது சைக்கிளை ஏற்றிவிட்டேன். அதுவும் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கும் சைக்கிள். நாங்கள் சிறுமிகள் என்றாலும் மூவர் உட்கார்ந்திருந்தால் கனமாகத்தானே இருக்கும்?

ஏற்றிவிட்டேனா? ஏற்றிவிட்டதாகத்தான் நான் உணர்ந்தேன். திரும்பிப் பார்க்கையில் குழந்தை கண்விழித்துப் பார்த்து மீண்டும் கண் மூடியது. உறக்கத்தில் கண் மூடியதா அல்லது குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டதா? பதட்டம். குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் நிறுத்தி பார்த்துக் கொண்டே இருக்கையில் அங்கு அடுத்த நொடியில் கூச்சல், சத்தம், எங்கிங்கிருந்தோ ஆட்கள் ஓடி வந்தார்கள். பெரிய கூட்டம் திரண்டது. எங்களை நோக்கி வருகிறார்கள். இது மன்னிக்கும் கூட்டமல்ல சண்டைக்கு வருகிறார்கள்.

"அது பாயம்மாப் பொண்ணு எனக்கு வீடு தெரியும்" என்று ஒரு பெண்மணி சொல்வது என் காதில் தெளிவாகக் கேட்க அங்கிருந்து தெறித்து ஓடினோம். சைக்கிளை ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு, வீட்டுக்குப் போகாமல் வேறொரு மாடியில் நின்று வேடிக்கை பார்த்தோம். அந்த கூட்டத்திற்கு 'சொர்ணாக்கா' மாதிரியான தலைவி குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வழியெல்லாம் திட்டியபடியே... என்னைத்தான் வசைபாடியபடியே என் வீடு அடைந்தார். கைகளை, உடலை அசைத்து ஏதேதோ சம்பாஷணை செய்தார் உரத்த குரலில். நான் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அந்தக் கூட்டம் வந்த காரியம் நல்லபடியாக முடிந்தது போல் திரும்பிச் சென்று விட்டார்கள். நான் நன்றாக உற்றுக் கவனித்தேன் அந்தக் குழந்தைக்கு
ஒன்றுமாகவில்லை. குழந்தை என்றால் பச்சக்குழந்தை இல்லை, குழந்தைக்கு 3-4 வயதிருக்கும். குழந்தை அழக்கூட இல்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குழந்தையைத் துயில் கலைத்து அழைத்து வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் காலனி வாயிலைவிட்டு வெளியேறும் வரை காத்து கவனித்து ஒளிந்திருந்த நான் தயக்கத்துடன் வீட்டுக்குச் சென்றேன்.

என்னை அடிக்கக் காத்திருந்த உம்மா பிரம்பெடுத்து சாத்த வர, பிரம்பு என் கை வளையலில் பட்டுத் தெறிக்க நான் அலறினேன், வளையல் உடைந்ததற்காக. பிறகு ம்மா கண்டிப்புடன் "இந்த சைக்கிளை முதலில் விட்டுட்டு வா" என்றார்கள்.

எப்படித் திரும்பவும் ஆல்தோட்டத்திற்குப் போவேன்? அதுவும் நான் 'பாயம்மா பொண்ணு' ரொம்பப் பிரபலமாச்சே... போக முடியுமா? என் தோழி அனுராதாவிடம் ஒரு மணிநேரத்தையும் அவளையே ஓட்டி மகிழ்ந்துவிட்டு சைக்கிளை கொடுத்துவிடச் சொன்னேன்.

அன்று ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் வாடகை சைக்கிள். இன்று வீட்டில் நான்கு பேருக்கு நான்கு சைக்கிள் ஆனால் அதனை உடற்பயிற்சிகாக, வியர்வை வெளியேற, குழந்தைகளுக்கு வெளிப்போக்குக் காட்டவென்று சில மைல்கள் சைக்கிள்களைக் காரில் சுமந்து சைக்கிள் 'டிராக்கிற்குச்' சென்று நல்ல தட்பவெட்பமிருந்தால் மட்டுமே ஓட்டுகிறோம். என்னதான் சொல்லுங்க வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்த சந்தோஷம் இந்த சொகுசு சைக்கிளில் கிடைக்கவில்லை.

Sunday, August 03, 2014

இந்நாளில் உன் நினைவு...

சின்ன வயதிலிருந்தே எனக்கு நட்பு வட்டம் அதிகம். எல்லோரும் நெருங்கி வந்தாலும் ஒரு அடி தள்ளி இருப்பதே என் வழக்கம்.

நான் ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எனக்கு முனீரான்னு ஒரு தோழி. என் மீது ரொம்ப பாசமா, அன்பா என்னை அவள் குழந்தை போல பாவிப்பா. ஆனா அதே அன்பும் அக்கறையும் எனக்கு அவளிடமில்லை. நான் சொல்றதெல்லாம் அவ செய்வாள்..ஆனாலும் அந்த நட்போட ஆழம் அப்போ புரியலை. அவளுக்கு என்ன பொருள் கிடைச்சாலும் அது எனக்குக் கொடுத்திடுவா. நானும் அதன் மதிப்பு தெரியாம அவள் நட்பை விளையாட்டா பயன்படுத்திக்கிட்டேன்னுதான் சொல்லணும். நல்ல படிக்கிற அந்த நட்பு வட்டத்துல அவ மட்டும் நல்ல படிக்கமாட்டா. ஆனா அவளை நல்ல படிக்க வைக்கணும்னோ இல்ல சொல்லித்தரணும்னோ எனக்குத் தோன்றியதே இல்ல.

பல வருடம் தொடர்ந்த நட்பு... எப்பவுமே சிரிச்ச முகமா மட்டுமே என்கிட்ட பேசுவா. என்ன சிரிக்க வைத்து பார்க்கவே ஆசைப்படுவா... என் புத்தகத்திற்கு அட்டைப்போட்டு தருவா. நான் முடிக்க மறந்த வீட்டுப் பாடத்தை நினைவுப்படுத்துவா. ஆனா இந்த மாதிரியான விஷயங்களை கூட நான் அவளுக்கு பண்ணதில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பது வரை அப்படியே போச்சு. ஒன்பதாம் வகுப்பு இறுதிப் பரிட்சையில் வடிகட்டுவார்கள் அப்போதான் பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ் ரிசல்ட்' தர முடியும்.

அப்படிச் செய்ததில் முனீரா பாடங்களில் தோல்வி. நாங்களெல்லாம் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிப் பெற அவள் மீண்டும் ஒன்பதாம் வகுப்பில். இதை எதிர்பார்க்காத எனக்குக் குற்ற உணர்வு. அவளுடைய வகுப்பறைக்குச் சென்றேன் - அவளைச் சந்திக்க. தொலைவிலிருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் முகம் மலரும் முனீரா, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். என்னிடம் பேசவில்லை. உனக்கு என்ன சந்தேகமென்றாலும் கேள் என்று மிகவும் தாமதமாக கேட்க வந்துள்ளேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுக்கு ஆறுதல் சொல்ல செல்லவில்லை. அதே நட்பை நாடியே சென்றேன்... ஆனால் அவள் தோல்விக்கு நான் காரணம் என்பதாக அவளுக்குத் தோன்றியது போலும் அதனால் என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. என்னை எங்குப் பார்த்தாலும் என்னைத் தெரியாதவள் போலவே நடந்து கொண்டாள். அன்றுதான் அவளுடைய நட்பின் ஆழத்தைப் புரிந்து கொண்டேன். நான் எந்த தவறும் செய்யாவிட்டாலும் 'மன்னிப்பு' என்று ஒரு கடன் பாக்கியே உள்ளதாக உணர்கிறேன்.

Saturday, June 28, 2014

மனம்தான் வயது | How old are you?

'இந்தப் படம் வந்தா நாம இருவரும் கண்டிப்பாக போகணும்' என்று என் தோழி கட்டளையிட, இந்தப் படம் வருவதற்காக காத்திருந்தோம். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் 'மஞ்சுவாரியார்'. அதற்காக அடித்துப் பிடித்து முதல் நாளோ அல்லது முதல் வாரமோ செல்லவில்லை. எல்லோரும் பார்த்து முடித்த திரையரங்கில் காலியான இருக்கைகளுடன் நாங்கள் இருவர் மட்டுமே பார்த்து ரசித்த படம். பின்ன அலுவலக நேரத்தில் 'கட்' அடித்துவிட்டு போக சாக்குப்போக்கு சொல்லணும்ல?

'How old are you?' கண்டிப்பா நான் உங்க வயதை கேட்கவில்லை. என்னைப் பொறுத்த வரை வயது எதற்கும் ஒரு தடையே இல்லை. அதையே தான் இந்தப் படமும் அழுத்தமாக உணர்த்துகிறது. கனவுலகத்தில் வசிக்கும் பெண்களைத் தரையிறக்குவது திருமணம்தான். பல சமயங்களில் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என்றெல்லாம் நானும் நினைத்ததுண்டு. ஆனால் யோசித்துப் பார்த்தால் திருமணம் கனவுகளுக்குத் தடையல்ல மாறாக மட்டம் தட்டும் கணவர்களே அதன் பிரதான காரணம் எனலாம்.

இந்தப் படத்தில் முதல் பகுதியில் கணவராக வரும் குஞ்சாக்கோ போபன் 'ஆல் இந்தியா ரேடியோவில் பணி புரிபவர் கடுப்பாக சொல்லும் வசனம், 'என் நண்பர்களின் மனைவிகளெல்லாம் அரசியல், விளையாட்டு என்று பேசுகிறார்கள். கணவர் செய்யும் நிகழ்ச்சி பற்றியும் சொல்ல அவர்களுக்கு ஏதாவது இருக்கிறது. ஆனால் உனக்குத் தெரிந்ததெல்லாம் காய்கறிகள், சாப்பாடு இதெல்லாம்தான், இதில் அவர்கள் என்னைப் பார்த்து நீ அதிர்ஷ்டசாலி 'happily married' என்கிறார்கள் ஆனால் எனக்கு வாய்த்தது' என்று அலுத்துக் கொள்வார். பிறிதொருநாளில் மனைவியான மஞ்சுவாரியார் கேட்பார் 'வாழ்க்கை 'happily married'ஆக இருக்க வேண்டுமென்று நினைப்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான்' என்று. இதை எத்தனை ஆண்கள் உணர்கிறார்கள்?

தனக்கு என்ன வேண்டும், தனக்கு என்ன பிரச்சனை, தன்னுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்று சொல்லாமல் பலர் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தனக்கான 'ஒரே வாழ்க்கை' அதில் எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையவில்லை என்று தனக்குத் தெரிந்தவிதத்தில் தலைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை அதே உணர்வுகளும், கனவுகளும் அவனைச் சார்ந்த பெண்ணுக்கும் இருக்குமென்று. பெண்களின் பிரச்சனையே சார்ந்திருப்பது தான். திருமணத்திற்குப் பிறகு தனக்கான கனவுகளும் லட்சியங்களும் என்னவென்பதை மறந்து அல்லது இப்படியான கனவுகளைக் கண்டவள் என்று கூட கணவனிடம் சொல்லாதவள். தன் குடும்பம், என் கணவன், நம் குழந்தை என்று சிறிய வட்டத்திற்குள் தன்னை மறந்து வாழ்ந்துவிட்டு. அவள் மரியாதையை இழக்கும் போதுதான் தன் சுயத்தைப் பற்றியே நினைத்துப் பார்க்கிறவள். தன்னுடைய சக்திகளை திரட்டுவதற்குக் கூட அவளுக்கு ஒரு புல்லுருவி தேவைப்படுகிறது. இந்தப் படத்திலும் இந்த மையப்புள்ளியை கொண்டுதான் முழுக்கதையும். தன்மீது எறியப்படும் கற்களைக் கொண்டு படிகளமைத்துக் கோட்டைக்குள் நுழையும், தன்னம்பிக்கை தரும் கதை இது.

'இங்கிலிஷ் விங்கிலிஷ்' எப்படி ஸ்ரீதேவிக்கு திரையுலகிற்கு ரத்தனக்கம்பளமாக அமைந்ததோ அதே விதமாக மஞ்சுவாரியாருக்கு அதே சாயலில் ஒரு படம் 'How old are you?' மஞ்சுவுக்குரிய துள்ளல், அழகு, மிடுக்கு என்று தொலைந்த எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று கூடுதலாக சாயம் பூசி, முகம் தூக்கி வித்தியாசப்படுத்தியிருப்பது அவர் நிஜ அழகை மறைத்துள்ளது கொஞ்சம் ஏமாற்றமே. இருப்பினும் அவருடைய அபார நடிப்பு அதையெல்லாம் யோசிக்க வைக்காமல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

படத்தில் முதல் பகுதியில் அப்பாவியாக ஒன்றுமே தெரியாதவளாக இருக்கும் நிரூபமா, கணவரும் மகளும் அயர்லார்ந்துக்குத் தன்னைவிட்டு இடம்பெயரும் போது, காயப்பட்டவளாக, தன்னம்பிக்கை இழந்தவளாக, தன்மானம் குறைந்தவளாக, மரியாதை தொலைத்தவளாக, அவமதிப்பில் திளைப்பவளாக இருக்கும்போது தனக்கான சக்தியை மீண்டும் அடையாளம் காட்டி திரட்டித்தரும் தோழி சூசனை பிடித்துக் கொண்டு தொலைந்து போன தனக்கான அடையாளத்தை மீட்டெடுத்து முன்னேறும் போது அதைப் பார்க்கும் நமக்குள்ளும் ஏதோ ஒரு சக்தி பிறக்கிறது. சூசனாக வரும் கனிகா இவளிடம் பேசப் பேச நிரூபமாவான மஞ்சுவின் கண்களில் தெரியும் மாற்றங்கள், உடல்மொழியில் ஏற்படும் கம்பீரமென்று தனது மூச்சுக் காற்றையும் நடிக்கச் செய்துள்ளார் மஞ்சுவாரியார். அப்படி அவரை நடிக்கச் செய்தவர் இத்திரைப்படத்தின் இயக்குனர் ரோஷன் அன்ட்ரியூஸ். இப்படியான திறமையான நடிகைகள் ஏன் திருமணத்திற்குப் பிறகு தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகும் தன் திறமைகளைத் தொலைத்துவிடாமல் அப்படியே மஞ்சுவாரியார் கிடைத்திருப்பது திருப்தியளிக்கிறது.

சினிமாத்தனமாக சில காட்சிகள் இருந்தாலும் கணவன் - மனைவியின் சம்பாஷனைகள், மகள் ஒரு தாயை தன்னையறியாமல் அவமதிக்கும் விதம், அலுவலகக் காட்சிகள், சமூக வலைத்தளம் ஏற்படுத்தும் மன அழுத்தமென்று பல உண்மை காட்சிகள் நிறைந்துள்ளன.

பேருந்தில் பெயர் தெரியாத, முகம் மட்டுமே பரிட்சயமான, தினம் பார்த்து சினேகித்து, அவரின் உடல்நலக் குறைவைக் கேட்டு, விசாரிக்க வீட்டுக்கே செல்லும் போது அதுவும் யாருமற்ற வயது முதிர்ந்த பெண்மணியை நலம் விசாரிக்கும் காட்சியில் அந்த உடல்நிலையற்ற வயது முதிர்ந்த பெண்மணி மனம் நெகிழும் போது நமக்குள்ளும் அப்படியான உணர்வை விட்டுச் செல்கிறார் நிரூபமா. இத்திரைப்படத்தின் காட்சிகள் நம் மனதிற்குள் நிற்கக் காரணமானது அதன் திரைக்கதையும் வசனமும். 'Too many cooks spoil the broth' என்பார்கள் ஆனால் இந்தப் படத்திற்கு பாபி- சஞ்சய் இருவரும் சேர்ந்து திரைக்கதையை தூக்கியே பிடித்துள்ளனர். இதில் எனக்கு மிகப் பிடித்த வசனம் "தோல்வியை கண்டுப் பயப்படாதவர்தான் வாழ்வின் வெற்றியை நோக்கி நடக்க முடியும்". எத்தனை சத்தியமான வார்த்தைகள் இது? அதே போல இந்தப் படத்தின் ஒளிபதிவாளர் திவாகர், சின்ன இடத்தில் கேமராக்களை வைத்து அடுக்கி சரியான வெளிச்சத்தில் 'கிரீன் ஹவுஸை' மனதை ஈர்க்கக் கூடிய வகையில் அதைப் பற்றி பேசும் முன்பே அந்த சூழலை கவனிக்கச் செய்து கலக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மஞ்சுவுக்கு ஈடுகொடுத்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கணவருக்கேயுரிய அலட்சியப் பார்வையுடன் வலம் வரும் குஞ்சக்கோ போபன் தனக்கு கொடுத்தப் பாத்திரப்படைப்பை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார்.

கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் அடிப்படையில் பல கருத்தாடல்களும், சில பகுதிகளில் எழுந்த புதிய மாற்றங்களுமென்று வரும் செய்திகள் சிலர்க்க வைக்கிறது.

பெண்மணிகள் தனக்கான கனவுகளையும் இலக்குகளையும் நோக்கி நடக்க வயதோ உறவுகளோ தடையில்லை என்பதை உணர்த்தும் படம். பார்த்துவிட்டு நீங்கள் உணர்ந்ததையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Tuesday, May 13, 2014

ஆனந்த யாழை மீட்டிய சாதனா

சாதனை படைத்த சாதனாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். 'தங்க மீன்கள்' திரைப்படத்திற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற குழந்தை சாதனாவின் வசிப்பிடம் துபாய். இந்தத் திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பே அதன் முன்னோட்டத்தை 'அமீரகத் தமிழ் மன்றத்தின்' ஆண்டு விழாவில் அரங்கேற்றியிருந்தோம். 'தங்க மீன்களை'த் திரையில் காண ஆவலாக இருந்த துபாய் மக்களுக்குப் பெரிய ஏமாற்றம். காரணம் இப்படம் துபாய் திரையரங்கிற்கு வரவேயில்லை. தேசிய விருது அதுவும் மூன்று விருதுகள் என்றதும் அவளுடைய பெற்றோரைப் போலவே எனக்கும் பெரிய மகிழ்ச்சி. உடன் அழைத்து வாழ்த்தை தெரிவித்தேனொழிய அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

அவளுக்கான பாராட்டு விழா மிகச் சிறப்பாக இயக்குனர் பாரதிராஜா மற்றும் கலை இயக்குனர் தோட்டா தரணி தலைமையில் 'விப்ஜியார் ஈவன்ட்ஸின்' நிகழ்ச்சியாக மே 10-ஆம் தேதி 'பிரின்ஸஸ் ஹயா அரங்கில்' நடைபெற்றது. அந்த அரங்கத்தை அவள் படிக்கும் பள்ளியே ஏற்பாடு செய்திருந்தனர். அது ஜெம்ஸ் வெலிங்டன் பள்ளி வளாகத்திலுள்ள அழகிய அரங்கம். இப்படியான நிகழ்ச்சி ஏற்பாட்டில் பேச வேண்டுமென்பதாலும், அதுவும் என்னால் சத்தியத்தை மட்டுமே பேச முடியும் என்பதாலும், ஒப்புக்காக ஆஹா ஓஹோ என்று ஜல்லியடிக்கவே முடியாது என்பதாலும் பதிவர் சென்ஷியின் தயவில் 'தங்க மீன்களை'த் துல்லியமான பதிவாக வீட்டு முகப்பையே திரையரங்காக்கி பார்த்து மகிழ்ந்தேன்.

பொதுவாகவே குழந்தைகளுக்குப் பல கேள்விகள் உண்டு. அப்படியான கேள்விகளுக்கு எத்தனை பெற்றோர்கள் காது கொடுத்துள்ளோம்? குழந்தைக்குப் படிப்பு வரவில்லையென்று ஆசிரியர்கள் கூறும் கூற்றை வைத்து வீட்டில் சாமியாடுகிறோமே தவிர அதில் எத்தனை உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா? எப்படி நம் குழந்தைக்குப் படிப்பு வராமல் இருக்க முடியுமென்று எத்தனை பேர் யோசிக்கின்றனர்? அப்படி யோசிக்க வைக்கும் படம் இது. எந்தக் காலகட்டத்திலும் எந்தக் குழந்தையும் படிப்பு வராதவர், மக்கு, திறமையற்றவர் என்பதே இல்லை. ஒரு விஷயத்தைக் கற்றுத் தந்து அது அவர்களுக்குப் புரியவில்லையென்றால் கற்றுக் கொடுக்கும் முறை சரியில்லையென்று பொருள். எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியில்லையே. சிலருக்கு சொல்லிக் கொடுக்கும் போது புரியலாம், சிலருக்குப் படிக்கும் போது புலப்படலாம், இன்னும் சிலருக்கு காட்சிப்படுத்தும் போது அல்லது படங்கள், காணொளி, செயலிகள் என்று சில கருவிகள் மூலமாக விஷயங்கள் தென்பட வைக்கலாம். படித்தவுடனேயே சிலருக்கு மனதில் ஒட்டிக் கொள்ளலாம், எழுதிப் பார்த்து படிக்கும் குழந்தைகளும் உள்ளனர், சிலர் வகுப்பில் மட்டும் கவனித்தே வீட்டில் படிக்காமல் நன்மதிப்பெடுப்பவரும் உள்ளனர். வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அவர்களின் மதிப்பீட்டில்லை என்பதைத் தந்தை- மகள் பிணைக்கப்பட்ட பாசத்தின் இழையோடும், தனி நபராகப் பொருளாதாரத்தில் வெற்றி பெற முடியாத இளைஞரின் கதையோடும் சுவைபட இப்படத்தைப் படைத்துள்ளார் இயக்குனர் ராம்.

எனக்கென்னவோ இந்தப் படம் இயக்குனர் ராமின் முதல் படமான 'கற்றது தமிழ்' படத்தின் இரண்டாம் பாகமாகவே தோன்றியது. காரணம், 'கற்றது தமிழில்' பதின்ம வயது காதலோடு ஆரம்பித்துத் தமிழ் கல்வி கற்றலையும் சமுதாயம் அதனைப் பார்க்கும் பார்வையையும் அதன் பின்னணி அரசியலையும் இயல்பாகச் சொல்லியிருப்பவர். அதன் தொடர்ச்சியாகத் 'தங்க மீன்கள்' படத்தில் காதலித்துத் திருமணம் புரியும் ஒருவன், பொருளாதார ரீதியில் வெற்றி பெறாதவனுக்குத் தந்தையென்ற அந்தஸ்தும் முழுமை பெறாமல் இருப்பதை அழுத்தமாகச் சொல்லுபவர், படத்தில் முழுமையாகப் பேசுவது இன்றைய கல்வி முறையின் அவலத்தை, அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை, பணித் திருப்தியில்லாத ஆசிரியர்களால் விரட்டியடிக்கப்படும் குழந்தைகளின் பொதுச் சிந்தனையை, தன் குழந்தையைத் தானே 'மக்கு' என்று நம்பும் பெற்றோர்களை என்று, பல விஷயங்களைப் பற்றிப் பேசி நம் மனதை ஊசியால் குத்தி ரணமில்லாமல் ஊசியை நம்முள் இறக்கி நம்மைச் சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர் ராம்.

இயக்குனர் என்பவர் திரைக்குப்பின் நின்று இயக்குபவர் ஆனால் அவரே முக்கியக் கதாபாத்திரத்தில் கல்யாணியாக வலம் வருகிறார். இயக்குனராகவும் அதே சமயத்தில் நடிப்பதும் மிகச் சிரமமான காரியம் என்று நாம் அறிந்ததே. ஆனால் அதனைத் தன் அழகிய நடிப்பால் சமன் செய்துள்ளார் இயக்குனர் ராம். ஒரு புது முகமென்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் பரிச்சயமாகத் தென்படுவதற்குக் காரணம் அந்தப் பாத்திரப் படைப்பு. இந்தப் படத்தின் வெற்றிக்கு முழுக் காரணம் அவர் மட்டுமல்ல அந்த மொத்தக் குழுவும் தான் என்பது என் கணிப்பு. ஒரு இயக்குனர் மனதில் நினைப்பதை, அந்தக் கற்பனைக் கருவை, அழகாக நம்மிடம் சரியாகக் கடத்திவிடுகிறார் ஒளிப்பதிவாளர் அரபிந்து சாரா. சரியான இடத்தில் கத்தரித்துப் படத்தை முழுமையாக்குகிறார் ஶ்ரீகர் பிரசாத். இப்படிச் சரியான குழு அமைத்தவர் கதாபாத்திர தேர்வில் மட்டும் கோட்டை விடுவாரா என்ன?

'தங்க மீன்களுக்காக'ச் சாதனாவா அல்லது சாதனாவைப் பார்த்த பிற்பாடு 'தங்க மீன்கள்' பிறந்ததா என்று குழப்பம் ஏற்படும் அளவிற்குக் கனகச்சித்தமாகச் செல்லமா என்ற கதாபாத்திரத்தில் பிணைந்திருக்கிறார் குழந்தை சாதனா. அவளுடைய உடல்மொழி, கண்கள் பேசும் காவியம், புன்னகை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிரிப்பு, வலியை வெளிகொணரும் முறை, ஏமாற்றத்தின் ஏக்க நிலை, வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமென்று அத்தனை உணர்வுகளையும் தேர்ந்த நடிகருக்கு ஒப்பாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்பதே சரியாக இருக்கும். ஒரு குழந்தை நட்சத்திரத்திற்குள் இத்தனை திறமையா என்று வியக்கும் வேளையில் தேசிய விருது கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஈரானிப் படமான 'சில்ரன்ஸ் ஆஃஃப் ஹெவன்' அரபிய படமான 'வஜ்தா' நம் இந்திய ஹிந்திப் படமான 'தாரே ஜமீன் பர்' போன்ற படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் தமிழில் குழந்தைகளை வைத்துப் படம் பேசப்படுவதில்லை, பலமான கதைகள் சொல்லப்படுவதில்லை என்று நினைக்க தோன்றும். நம்மிடம் அப்படியான திறமையான குழந்தை இல்லை அல்லது கண்டுபிடிக்கப்படவில்லை என்ற குறையைத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது செல்லமாவாக வரும் சாதனாவின் நடிப்பு. சில நல்ல படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் தேசிய விருது போன்ற அங்கீகாரம் கிடைப்பதே ராம் மாதிரியான இயக்குனர்களைத் தட்டிக் கொடுத்து இன்னும் மேல் எழச் செய்யும் என்று நம்பலாம்.

சாதனாவைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து மிகவும் பொருந்தி நடித்துள்ளனர். குறிப்பாகச் செல்லமாவின் தாயாக வரும் ஷெல்லி கிஷோர். இவர் எனக்கு இயக்குனர் பாலுமகேந்திராவின் கதாநாயகிகளை நினைவுபடுத்தினார். இப்படத்தில் சாதனாவின் தாய் லட்சுமி ஆசிரியையாகவும் தந்தை வெங்கடேஷ் தலைமை ஆசிரியராக நடித்துள்ளதும் சிறப்பு. இத்திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் - சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர் நா. முத்துகுமாருக்கு. 'ஆனாந்த யாழ்' பாடலுக்குக் கிடைத்திருந்தாலும் இப்படத்தின் அத்தனை பாடல்களும் காட்சிக்கு பொருத்தமான வரிகளோடு இரசித்து எழுதியிருப்பவருக்கு இது கூட இல்லையென்றால் எப்படி? ஆனால் இந்தப் படத்தின் பெரிய பலமான இசையமைப்பாளர் யுவன் சங்கரை தேசிய விருதுக் குழு எப்படி மறந்ததென்று புரியவில்லை. படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அவருடைய இரம்மியமான பின்னணி இசை இப்படத்தைத் தூக்கிப் பிடித்துள்ளதென்றால் மிகையில்லை.

இத்திரைப்படத்தை நான் கவிதை என்பேன் காரணம் நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகப் படிமங்களோடு விளையாடியுள்ளார் இயக்குனர். ஒரு காட்சியில் செல்லம்மா ஆசிரியரிடம் ஆர்வமாகத் தன் உடையைக் காண்பிப்பாள். அவளை அதட்டி அடக்கும் ஆசிரியை அவள் மனதையும் பூட்டி அவள் ஆட்டத்தில் கவனம் சிதைக்கச் செய்வதையும் உணராமல் "உனக்கு நடனம் வராது" என்று முத்திரையும் குத்திவிடுவார். இந்தக் காட்சியில் தடுமாறும் குழந்தையையும் பூட்டிய கதவையும் மாறி மாறிக் காட்டி அவளது மனத்தடையைப் பூடகமாகச் சொல்லும் இயக்குனர், பல காட்சிகளில் குழந்தையின் உணர்வுக்கேற்ப இலை, வாடிய கிளையென்று காண்பித்துப் படிமங்களோடு காட்சியை விளங்க வைத்துப் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கு எழுதியதைத்தான் நான் பேசவும் செய்தேன். நிறைவாகச் சாதனாவை வாழ்த்தி விடைபெற்றேன். ஆனால் பேசும் போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டது. சிறப்பு விருந்தினர் இயக்குனர் பாரதிராஜாவின் சிறப்புரையில் என்னைக் குறிப்பிட்டு நான் சரியாகப் பேசியதாகவும் ஒரு தேர்ந்த விமர்சகரின் பேச்சு போலவே இருந்தது என்றும் பாராட்டியது மகிழ்ச்சியளித்தது. நிகழ்ச்சியின் முடிவில் தோட்டா தரணியைச் சந்தித்த போது அவரும் "ரொம்ப நல்ல பேசுனீங்க" என்றார். நான் "நன்றி"யுரைக்க அவர் தொடர்ந்து "உங்கள மாதிரியெல்லாம் நல்ல தமிழில் எனக்குப் பேச வராது" என்றார் தன்னடக்கத்தோடு. நான் அவரை மறுத்து "நீங்க பொய் சொல்றீங்க, நீங்க நல்லதமிழில் பண்பலையில் அளித்த பேட்டியைக் கேட்டுள்ளேன்" என்றேன். அதற்கும் சளைக்காமல் அவர் "அது முகம் தெரியாமல் பேசுவது. ஆனால் இப்படி மேடையில் நின்று சரளமாக எனக்குப் பேச வராது" என்று மெய்யுரைத்தது மெய்சிலிர்க்க வைத்தது.

தேசிய விருதுக்குப் பிறகுதான் சில நல்ல படங்கள் கவனிக்கப்படுகின்றன. அப்படிக் கவனிக்கப்படும் போது மறுபடியும் அது திரைக்கு வந்தாலென்ன? வணிக ரீதியாக அப்பவாவது இம்மாதிரியான நல்ல படங்கள் அங்கீகரிக்கப்படுமே!!

Thursday, April 10, 2014

பிள்ளை மனம்

'அபுதாபியில் கில்லர் கரோக்கே' என்ற விளம்பரத்தைப் பார்த்து, "இதில் நான் பங்கேற்க போகிறேன்" என்று சொன்ன உடன் என் மகள் ஃபாத்தின் "ம்மா பாம்பு உங்க உடம்ப சுத்தும், பச்சோந்தி உங்க தலையில ஏறும், தவளை மேலே குதிக்கும்" என்றெல்லாம் அடுக்க அடுக்க நான் "பரவாயில்ல பரவாயில்ல கடிக்காதுல" என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். உடனே என் மகன் ஃபாதில் "அப்போ எங்கள 'ஸ்கூலுக்கு' யாரு கிளப்புவாங்க" என்றான், "அதுக்கென்னப் பார்த்துக்கலாம்" என்றேன். "எங்களுக்கு யார் சமச்சித் தருவாங்க" என்றான்.. அவன் சொல்ல வருவதைப் புரிந்ததென்றாலும் தெரியாதது போலக் காட்டிக் கொண்டு கோபமாக இருப்பது போல நான் "ஆமாண்டா, உங்களுக்கு சமைக்கவும், கிளப்பவும் தானே ம்மா வேணும்? பரவால அதுக்கெல்லாம் ஆள் வைச்சிக்கலாம்" என்றதுதான் தாமதம். பெரும் குரலெடுத்து அழுது கொண்டே ஃபாதில்.. "ம்மா அதுலப் போனீங்கன்னா நீங்க செத்துப் போய்டுவீங்க அப்புறம் நாங்க தனியா இருக்கனும். எங்களுக்கு யார் இருப்பாங்க?" என்று கண்கள் வேர்க்கச் சொன்னதும் என் மனம் குளிர்ந்து நெகிழ்ந்தது.

இதற்கு ஒரு தினத்திற்கு முன்புதான் குழந்தைகளுக்கு பிரிவின் துயர், இல்லாமையின் வலி, இருப்பின் அருமை தெரிவதில்லை என்று புகார் வாசித்தேன். அப்போது அதை அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள் ஒட்டி ஒட்டாமல் அசட்டையாக இருக்கிறார்கள் என்ற என் கவலையை உடைக்கும் விதமாக அமைந்தது அவன் அழுகை.

கில்லர் கரோக்கே என்றால் இதுதான் http://www.youtube.com/watch?v=uKRlEJqI1mg

Thursday, March 27, 2014

Queen: மனதை ஆளும் “ராணி”

வேற்று மொழியில் நல்ல படங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'ம்ஹும் தமிழுக்கு இது சரிப்படாது' என்றே தோன்றுகிறது. ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் அடைபடுவது போல் தான் நமது படங்களையும் காட்சிப்படுத்த வேண்டிய அவசியமென்ற ஒரு பொய் முகத்தை அணிந்து கொள்கின்றனர் அல்லது மக்களுக்கு இப்படியானதுதான் பிடிக்குமென்று நினைத்துக் கொள்கின்றனரா? குறிப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் போது அதுவும் அவள் கதாநாயகியென்றால் 'ஒழுக்கம்' என்ற வளையத்திற்குள் அவளை அடைத்து விடுகின்றனர். அதில் மிகுந்த சோகம் என்னவென்றால் 'ஒழுக்கத்திற்கு' அவர்களே வரையறைகளையும் வகுத்துவிடுகின்றனர்.

தேன்நிலவிற்கு நீங்கள் தனியாக சென்றிருக்கிறீர்களா? தேன்நிலவிற்குப் போக வேண்டும் அதில் இந்தெந்த இடத்தை கணவருடன் கைக்கோர்த்துப் பார்க்க வேண்டுமென்ற சராசரி ஆசைகளைப் பூண்டவளாக தன் மருதாணி விழாவில் நிகழும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இரசித்தபடி, திருமணத்திற்கு பிறகு ஏற்படப்போகும் புதிய அனுபவங்களுக்காக காத்திருப்பவளுக்கு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அவளை துரத்தி காதலித்த விஜய் திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு அவளை வேண்டாம் என்கிறான். திருமணம் நின்று விடுகிறதென்று அழுதாலும் மருதாணியை விழியிலேற்றினாலும் புலம்பாமல் தேன்நிலவிற்கு தனியாக சென்று திரும்புகிறவள் தான் 'குயின்'.

இந்த ஹிந்தி திரைப்படத்தை என் தோழிகளுடன் சென்று பார்த்தேன். முடிவில் நாங்கள் அனைவருமே சொல்லிக் கொண்டது 'குயின்' திரைப்படத்தில் என்னை நானே பார்த்தேன் என்பதாக. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு 'குயின்' கண்டிப்பாக ஒளிந்திருக்கவே செய்கிறாள். இப்படத்தில் ராணியாக கங்கனா ரெனாட் மிக அற்புதமாக தனக்கு தந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். படித்த நடுத்தர குடும்ப மிட்டாய் கடை பஞ்சாபி பெண் எப்படி சுதந்திரத்தை சுவாசித்து அதன் மூலம் மெருகேறுகிறாள் என்பதே கதை. கங்கனாவுடன் சேர்ந்து நாமும் பாரிஸ், ஆம்ஸ்டிரடாமை சுற்றிப் பார்க்கிறோம். 'சுதந்திரம்' இந்தியாவில் இல்லை என்பது திண்ணம். அதனை பெற அவள் பாரிஸ் வரை தனியாக செல்ல வேண்டியுள்ளது. அவள் அங்கே சென்று சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு நட்பாகிவிடுவதோடு கதையில் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்துகிறது. அதில் விஜயலட்சுமி என்பவரை பாரிஸில் சந்தித்து அவளுடன் சேர்ந்து பாரிஸை பார்த்து இரசிக்கும் ராணிக்கு இப்படியும் வாழலாம் அதில் தவறில்லை என்று எண்ணினாலும் அவளுடைய அடிப்படை குணங்களிலிருந்து அவள் விடுபடவில்லை என்பதையும் பூக்களின் மீது பன்னீர் துளிகளாகக் காட்டியிருப்பது அழகு.

ஒரு பெண் தான் செய்ய வேண்டுமென்று விரும்புவதை பெரியவர்களுக்காக, பெற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து, அவர்கள் விருப்பப்படியே எல்லாம் நடக்க அனுமதித்து அதையே தன் விருப்பமாக்கிக் கொண்டு தன் விருப்பத்தையே மறந்தும்விடுகிறாள். என்ன படிக்க வேண்டும், என்ன உடுக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று பெண்களுக்கென்று ஒரு தனி பட்டியலே நீள்கிறது. அந்த பட்டியலிலுள்ள ஒவ்வொன்றையும் தகர்க்கிறாள் ராணி. யார் என்னை எப்படி பார்க்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையெல்லாம் கொள்ளாமல் கிடைத்ததை உண்கிறாள், பிடித்ததை உடுக்கிறாள், மனம் விட்டு சிரிக்கிறாள், மதி சொல்படி நடக்கிறாள். அதைப் பார்க்க்கும் போது நம்மையறியாமல் அந்த குதூகலத்தில் நாமும் ஐக்கியமாகிவிடுகிறோம். இந்த படத்தில் ஒரு காட்சியுண்டு 'Why fart and waste it when you can burp and taste it?' என்று விஜயலட்சுமி சொன்னதும், ராணி 'எங்கூரில் ஏப்பத்தை பெண்கள் சத்தமாக விடுவதே தவறு, நீங்கள் அதை சுவைக்கவும் செய்வீர்களா?' என்று ஆச்சர்யப்பட்டு அடுத்த நிமிடமே சத்தமாக ஏப்பமிட்டு சிரித்துக் கொள்ளும் காட்சி மிக இயல்பாக காட்டியிருந்தாலும் அதில் உள்ள சாராம்சம் எத்தனைப் பேர்களை நெருடுமென்று யோசித்தேன்.

ஒரு ஆணுக்கு வேலை கிடைத்தால் அது ஒரு தகவல் அவ்வளவுதான். ஆனால் ஒரு பெண்ணுக்கு வேலை கிடைத்தால் பல விஷயங்களை அவள் யோசிப்பதோடு அதற்கான அனுமதியும் பெற வேண்டியுள்ளது. அந்த வேலைக்குச் செல்லலாமா வேண்டாமா அது பாதுகாப்பானதா என்றெல்லாம் யோசித்து பிறகு தந்தையிடம் அல்லது கட்டிக் கொள்ளப் போகிறவனிடம் அனுமதி பெற்றே செல்லும் ஒட்டுண்ணிகளாக திகழுவதை உணராதிருக்கிறோம். மற்ற நாட்டில் தனக்கான தீர்மானத்தை தானே முடிவெடுப்பதில் தவறில்லை அது அவளுடைய வாழ்கை அதைப் பற்றி அவள்தான் முடிவெடுக்க வேண்டும், அது சாத்தியமென்பதை அவள் உணர்ந்து செயல்படுத்தி அதில் கிடைக்கும் ஆனந்தத்தை முகத்தில் மிளிரவிடும் கங்கனா தனது இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக பாலிவுட்டில் ஒரு மைல்கல்லை பதித்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. 'காதல்', 'மன்னிப்பு' என்ற வார்த்தையில் பொதுவாக மயக்கமுறும் பெண்களை, இல்லை மகுடிக்கு மயங்காது உருகாது தனியாக திடமாக தன் காலில் நிற்க முடியுமென்று ஒரு தெம்பைத் தந்துள்ளது இந்தப் படம்.

ஒரே அறையில் ஆண்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலையில் தயங்குவது, பின்பு நண்பர்களாகி அவர்களுக்குக் காலை உணவு பரிமாறுவது, ஆட்டம்- பாட்டம், ஆண்- பெண் என்ற பேதமில்லாமல் சகஜமாக பழகுதல், நட்புக்கு மொழி அவசியமில்லை என்பதாக ஜப்பானிய நண்பர் பேசுவதை காது கொடுத்து கேட்டு தானும் ஹிந்தியில் அவருக்குப் புரியுமோ புரியாதோ என்ற எதிர்பார்ப்பில்லாமல் உரையாடுவது. அணைப்பதில், தொடுதலில் காமம் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அது அன்பாக நட்பாக பாசத்தின் வெளிப்பாடாக இருக்கலாமென்று தனது மன இருக்கத்தை தளர்த்துவதெல்லாம் மிக லேசாகச் சொல்லி சென்று மனதை அள்ளிச் சென்ற படம்.

தனியாகப் பயணிப்பதால் சில பல இடர்களை ராணி சந்தித்தாலும் எல்லாவற்றிலுமிருந்து மீண்டு தனியாக வாழப் பழகிக் கொள்வதோடு. அதைப் பற்றி அவளுக்கே ஆச்சர்யம் என்பதையும் மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த காட்சிகளுக்கு ஏற்ற வகையில் கங்கனா வளைந்திருப்பது நேர்த்தி. பல இடங்களில் கங்கனா ரெனாட் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' ஸ்ரீதேவியை நினைவுபடுத்தினாலும் இவருக்கென்ற ஒரு தனி உடல்மொழியோடு அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் சில வசனங்களை கங்கனாவே தனக்கேற்ப எழுதிக் கொண்டார் என்பதை அறிவதன் மூலம் அந்த பாத்திரத்தில் தன்னை எவ்வளவு ஈடுபடுத்திக் கொண்டார் என்பது புலப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திர படைப்பையும் மிக அற்புதமாகச் செய்திருக்கிறார் இயக்குனர் விக்காஸ். அதற்கேற்ப திரைக்கதையை பர்வீஸ், சைத்தாலி, விக்காஸ் சேர்ந்து 100 சதவீத உழைப்பைக் கொட்டி படத்தை முழுமையடைய வைத்துள்ளனர். இதில் நடித்த பலருக்கு இது முதல் படமாம். ஆனால் அந்த சாயலே எங்கும் தெரியவில்லை. ஒலெக்சான்டராக வரும் மிஷ்பாய்கோ அழகுடன் கூடிய கம்பீரத்துடன் வலம் வரும் நண்பராகிவிடுகிறார். அதே போல மார்செல்லோவாக வரும் மார்கோவின் மீது கங்கனாவிற்கு மட்டுமல்ல நமக்கும் நேசம் பிறந்துவிடுகிறது. அவருடைய கண்களில் மின்னும் சிரிப்பு எனக்கு 'ஈட் பிரே லவ்'வில் பிலிப்பாக வரும் சேவியர் பார்டமை போலத் தோன்றியது.

ஒரு ஆண் மகனால் தனக்கு வேண்டுமென்பதை உடனே நிறைவேற்றிக் கொள்ள இயலும். அது பயணமென்றாலும் சரி அல்லது தேவையான பொருளென்றாலும் சரி. ஆனால் ஒரு பெண் தனியாகப் பயணம் செல்வதோ தேவையான பொருட்களைத் தனக்காக வாங்குவதோ இன்னும் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட பெண்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அப்படியான பெண்களின் கனவுகளில் கற்பனைகளில் 'இப்படியெல்லாம் இருந்தால் எப்படியிருக்கும்' என்று நினைப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு பிரதிபலிப்பாக, வடிகாலாக அமையும்.

பெண்கள் நாங்கள் இரசித்தது போல் ஒரு ஆண் இப்படத்தை இவ்வளவு ஆழமாக இரசிக்கவும் நேசிக்கவும் முடியுமா என்று தெரியவில்லை. 'குயின்' மகுடம் சூடிக் கொண்டாள்.

Wednesday, February 26, 2014

தவிக்க வைத்த 'நூறு நாற்காலிகள்'

'அறம்' என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழலும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையைப் படித்து முடிப்பதற்குள் பலநூறு பரிமாணங்களை நானே எடுத்துவிட்டிருக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவுக்குச் சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் பிரயாணித்தது.
எல்லாச் சிந்தனைகளை அலசிப் பார்த்ததிலிருந்தும் என்னுடைய வாழ்வியல் அனுபவங்களின் நினைவுகளிலிருந்து தேடிப் பார்த்ததிலிருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், நான் இப்படியான மனிதர்களைச் சந்தித்ததேயில்லையென்று. யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள், மிகவும் ஆடம்பரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கிறேன், அப்படியான சூழலை மட்டுமே கடந்து வந்திருக்கிறேன். ஒரு வேளை சென்னையில் வளர்ந்ததால்தான் இப்படியா என்று என் நண்பரிடம் வினவுகையில் 'இல்லை, விபரம் தெரியாமலே வளர்ந்திருப்பாய்' என்றார். இருபது வயது வரை சென்னை காற்றையே சுவாசித்தவளுக்குச் சாதி பாகுபாடு, தீண்டாமை, கீழ் சாதி- மேல் சாதி பிரிவினை, அலட்சியப் பார்வைகள், ஒதுக்கி வைத்தல் போன்ற எதையுமேவா நான் சந்தித்ததில்லை? நான் வளர்ந்த 'பீட்டர்ஸ் காலனி' சூழலில் எல்லோருமே தாய்- பிள்ளை உறவுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தோமென்றால் மிகையில்லை. அஃது அன்றைய 'சொர்க்க பூமி'. அதைப் பற்றி வேறொரு சூழலில் தனிப் பதிவே எழுதியாக வேண்டும்.

இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்களைப் போல் என் வாழ்வில் நான் யாரையுமே சந்தித்ததே இல்லை. 'நாயாடி' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. நல்லவேளையாக அப்படியான ஒரு சூழல் இன்று இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்கிறேன். 'நாயாடி'களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட துயர சூழலை அறிந்ததுண்டா? நாயாடிகளைக் கண்ணால் பார்த்தாலும் தீட்டுப்பட்டுவிடுமென்ற எண்ணம் அப்போது இருந்ததாம். எப்படி ஒரு மனிதரைப் பார்த்தாலே தீட்டு? தீட்டென்றால் என்ன? எனக்குத் தெரிந்து அசுத்தம் என்பதே அதன் பொருள், எப்படி அது பார்வையால் உண்டாகும்? சகமனிதரை எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக நடத்த முடியும்? இப்படி பற்பல கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. என்னால் இதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்க முடியாத இந்தத் துயரைக் கண் முன் விரியச் செய்து ஒவ்வொரு கதை மாந்தரின் முகத்தையும் என் கண்களில் காட்சியாக்குகிறார் தனது எழுத்தாளுமையால் ஜெ.மோ.

காப்பன் என்ற கதைநாயகன் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவர் வடுக்களைக் கைகளால் நானே தடவிப் பார்த்துவிட்டேன். அவருடைய வலியை என் விரல்கள் தொட்டு வருடி சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கிறது. இப்படியெல்லாமுமா ஒர் உயிருள்ள ஆத்மாவை வதைப்பது? 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். ஆனால் மனிதப் பிறவியும் இன்ன சாதியில்தான் பிறத்தல் நன்று என்பதாக நம் வாழ்வியல் இருந்துள்ளது. நாமெல்லாம் அதன் சாட்சிகள் என்றெண்ணும் போது பதைபதைக்கிறது மனது.

ஆஸ்கர் நாயகர் இயக்குனர் அஸ்கர் பர்ஹதியின் படத்தில் ஒரு காட்சிப்படுத்தலில் ஏற்படும் வலிமையை, தாக்கத்தை எப்படி இவர் எழுத்தின் மூலம் ஏற்படுத்த முடிகிறது என்று திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்கிறார். காப்பனின் தாயைப் பன்றி என்கிறார், தெருநாய் என்று விளிக்கிறார், முலைகளை அழுக்கு மூட்டை என்கிறார், 'யானை டாக்டரில்' புழுவை கைக்குழந்தையென்றார். இதிலும் 'நகரம் நாயாடிகளைக் குப்பைகளாக ஒதுக்கினாலும் அவர்கள் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்' என்று குறிப்பிடுகிறார். வயதானால் வார்த்தைகளும் சுருங்கிவிடும் என்பதை மிக அழகாக 'சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன்' என்று பிரிக்கிறார். இப்படிக் கதை முழுக்க ஒவ்வொரு வரிகளிலும் வலியோடு பேசியுள்ளார் எழுத்தாளர். இதை எழுதும் போது, அதுவும் பாதிக்கப்பட்ட காப்பனாக தன்னை நினைத்துக் கொண்டு எழுதும் போது மன ஆழத்தில் ஏற்பட்ட உணர்வின் வெடிப்பாக இக்கதை விரிகிறது.

படிக்கும் போது பேசும் ஒவ்வொரு பாத்திரமும் நாமாகிவிடுகிறோம். சாக்கடையிலும் அழுக்கிலும் ஊறிய அந்தத் 'தாய்ப்பன்றி'யின் முகத்தையும் அவரின் புரிந்து கொள்ள முடியாத பதற்றத்தையும் நமக்கு கடத்திவிடுகிறார். தாயைச் சமாதானப்படுத்தும் போது காப்பனாகவும் நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம். விளிம்புநிலைக்கு நாமும் தள்ளப்படுகிறோம். கையாலாகாதக் கழிவிரக்கத்தோடு நாமும் அவமானமாய் உணர்கிறோம். ஆனால் அலட்சியப்படுத்தும் மக்களோடு நாமும் ஒர் அங்கமாக இருக்கிறோம் என்பதில் மட்டும் எனக்குப் பெரிய சங்கடம்.

வித்தியாசமான, நான் எங்கேயுமே கேட்காத சொல்வழக்கு இந்தக் கதை முழுக்கச் சிதறிக் கிடக்கின்றன. அந்தப் புரியாத மொழியையும் நமக்குப் புரிய வைக்கிறார் விளக்காமலே. எப்படி இதெல்லாம் சாத்தியம்? இந்தக் கதையை ஆழமாக வாசித்தால் தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக உணர்ந்து நாற்காலியில் உட்காருவது கூடாது, மேல் அங்கி உனக்கு வேண்டாம், மேல்மட்டத்தாரை பார்த்தாலே ஓடி ஒதுங்குபவரும் கூட ஒரு மேல்மட்ட பெண்ணைப் பார்த்தால் பயப்படாமல் கோபத்தை வெளிப்படுத்துவது, பொருட்களைத் தூக்கி வீசுவதும் சுலபமாகிவிடுகிறாது. "சுபா மீது அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது, எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு" என்று தன் தாயின் கோபத்தை புரிந்துக் கொள்பவராக வரும் சொற்களைப் படிக்கும் போது எந்த சாதியென்றாலும் எல்லாவற்றையும் விட மிகத் தாழ்ந்த சாதி ஒரு பெண் என்ற உண்மை வலிக்கவே செய்கிறது.

பிறப்பையும் அதன் பின்னணியையும் வைத்து ஒதுக்கப்படும் ஒருவர் திக்கித் திணறி நீந்தி மேலே வரும் போது மூச்சடைக்க வைத்து மீண்டும் அழுத்துவதைக் கதையாக 'நூறு நாற்காலிகள்' என்று தலைப்பிட்டுள்ளார். கடைசியில் "அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன்" என்று வாசிக்கும் போது "இல்லை, நீ போராடு உன்னால் முடியுமென்று' 'திக் பிரம்மைப்' பிடித்தவளாக எனக்கு நானே பிதற்றிக்கொண்டிருந்தேன். என்னவோ என் தவிப்புக்காகவே 'நூறு நாற்காலிகளை' வேண்டி நிற்கிறார் என்பது போல் முடிந்தது கதை. அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தக் கதையை வாசித்தாக வேண்டும். எப்படியான சமூதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது இருந்தோம் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காகவாவது.

படித்து முடித்துவிட்டிருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் இருந்தேன். ஆசிப்பிடம் இதைப் படித்தீர்களா? இந்தக் கதையே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அறத்தை எடுத்து அவர் கையில் திணித்து இந்தக் கதையைப் படியுங்களேன் என்றேன். எல்லாம் ஒரு சுயபரிசோதனை செய்துக் கொள்வதற்காகத்தான். எனக்கு மட்டும்தான் இப்படிக் கிறுக்கா அல்லது படிக்கும் எல்லாருக்கும் ஏற்படுமாவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஜெ.மோ.வை தொலைபேசியில் அழைத்து இது பற்றிச் சொல்லி கைப்பேசியை என்னிடம் தந்தார். நானும் திடீரென்று தந்துவிட்டாரே என்று திக்கித் திணறாமல் மிகச் சரளமாக மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லி முடித்தேன் அவரைப் பேசவிடாமல். மிக நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தந்த அவதாரமெடுத்து அந்தந்தக் கதையை எழுதியதாகச் சொன்னார். மிகவும் பரிச்சயப்பட்டவர் போல பேசினார். எனக்கும் அப்படியே இருந்தது. நான் எப்போதும் கதையிலும் எழுத்திலும் ஏற்படும் பிரமிப்பை எழுதுபவர் மீது செலுத்துவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்.

Monday, February 17, 2014

விடைகாகக் காத்திருக்கும் கேள்விகள் | 101 சோதியங்கள்

அறிவியல், விஞ்ஞான, தொழிற்நுட்பமென்று எல்லாம் வளர்ந்திருந்தாலும் விடையில்லாத கேள்விகள் நம்முன் நிறைந்தே நிற்கின்றன. அப்படியான கேள்விகளில் ஒன்றுதான் '101 சோதியங்களின்' 101-வது கேள்வி. ஒருவரி கதையை மிக நுட்பமான கவிதையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்த சிவா. குழப்பங்களோ, திருப்பங்களோ, அதிர்வுகளோ இல்லாத மிக சாதாரணப்படம் கதை சொல்லலில் சிறந்து நிற்கிறது. தனித்தன்மை என்ற பாசாங்கேதுமில்லாமல் தனது வலுவான கதாபாத்திரத்தை வைத்து படத்தைத் திறமையாக ஈர்ப்புடன் நகர்த்தியுள்ளார்.

குழந்தையை கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம். குழந்தைகள் நமக்குத் தெரியாத விஷயத்தை குறித்துக் கேள்வி எழுப்பினாலோ, அல்லது நம்மையே கேள்விக்குள்ளாக்கினாலோ, அல்லது அவன் தெரிந்து கொள்ளக்
கூடாது என்று நாம் எண்ணும் அந்த விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்டாலோ உடனே நாம் அவர்களை அதட்டி அடக்குகிறோம். 'வயசுக்கு மிஞ்சியப் பேச்சு', 'வாய் நீளம்', 'அதிகப்பிரசங்கி' என்றெல்லாம் சொல்வதும் அதனால்தான். இப்படியான கேள்வியைக் கேட்கும் சிறுவனான அனில் குமார் பொக்காரோவை 101 கேள்விகள் எழுதித்தர கேட்கிறார் அவன் ஆசிரியர். அதில் அவனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த ஒவ்வொரு கேள்விக்கும் 1 ரூபாய் தருவதாகவும் சொல்கிறார்.

- ஏன் சிலந்தி தன் வலையில் தானே சிக்கிக் கொள்வதில்லை?
- வானத்தின் நிறம் மாற்றத்தின் காரணமென்ன?
- மீன்கள் மூச்சுவிடுவது எப்படி?

இப்படியாக தான் பார்க்கும் விஷயங்களை, தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வின் சந்தேகங்களை தன் முதுகில் கேள்விகளாகச் சுமந்தபடி ஒரு பட்டாம்பூச்சி அமிழ்தத்தைத் தேடி திரிவது போல் அவனும் தேடித் திரிகிறான். அதற்காக எல்லா 'ஃபிரேமிலும்' பட்டாம்பூச்சியைக் காட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், செலவில்லாத சொற்ப கதாபாத்திரங்களைப் படைத்து அதில் ஒவ்வொருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

கேள்விகளைச் சேகரிக்கும் பொக்காரோவின் உடல்மொழி, உணர்ச்சி பொங்கப் பேசும் அவன் கண்கள், அழுத்தத்தை அழகாக காட்டியுள்ள விதம், அவன் அலட்சியப் புன்முறுவல் என்று அந்த கதாபாத்திரத்திற்கு அத்தனை பொருந்தியிருக்கிறார் பொக்காரோவாக வரும் மினோன். இதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசிரியர் என்றாலே மதிப்பும் மரியாதை என்ற சொற்களும் கூடவே வந்து நிற்கும். அந்த மரியாதைக்குரிய இடத்தை சரியாக நிரப்புகிறார் இந்திரஜித். வகுப்பறையில் ஆசிரியரே தெய்வம், அவர் சொல்வதே வேத வாக்கு, அவர் ஏதும் கேட்டுவிட்டால் உடனே தந்து அவருடன் நெருக்கமாக வேண்டுமென்ற பண்பு பொதுவாக எல்லோரிடமும் உண்டு. நான் படிக்கும் போதும் அப்படித்தான் இருந்தது. இந்தக் காலத்து குழந்தைகள் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். 'தனியொருவருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதி போல் இந்த படத்தில் வரும் ஆசிரியர் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவர்களால் முடிந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு மற்றொன்றையும் எடுத்து வர கேட்கிறார். அவர் கேட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக வீட்டில் அடம்பிடிக்கிறான். அவன் பள்ளிக்குத் தயாராகிவிட்டு பொட்டலத்தை எதிர்பார்த்து நிற்கிறான். அம்மா அதனை நீட்டியதும் இயல்பாக கட்டி அணைத்துக் கொள்கிறான். இப்படி எந்தெந்த வயதில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்தால் தான் அந்த தாய்க்கு மகிழ்ச்சி. பசிக்கிறது என்று குழந்தை அழ வேண்டும். கேட்ட பொருள் கிடைக்கும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அடித்தால் அழ வேண்டும் என்ற இயற்கை மரபிலிருந்து சிறிது விலகி நின்றாலும் அந்தத் தாயுள்ளம் பதறும்.

பொக்காரோ கேள்விகளைத் தேடி நேரத்தோடு வீடு திரும்பாததால் அழுகையுடன் உட்கார்ந்திருப்பாள் அவன் தாய். அவன் திரும்பி வந்ததும் "எங்கே சென்றாய்?" என்ற கேள்வியுடன் கம்பெடுத்து விலாசிவிட்டு "என் குழந்தை அழவில்லையே இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று குரலெடுத்து அழும் தாய். வேலையில்லாத தந்தை, நோயுற்றவர் என்று தன்னை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பறிபோன வேலைக்காக போராடும் அன்பான அப்பா. மனவளர்ச்சி குன்றிய தங்கைக்கு வார்த்தைகளை கோர்க்க சொல்லிக் கொடுக்கும் காட்சியில் மினோன் மிகச் சிறப்பாக அழுத்தம் திருத்தமாக உண்மையிலேயே அந்தக் குழந்தைக்கு உச்சரிப்பு சொல்லிக் கொடுப்பது போலவும், அவளை முதுகில் சுமந்துக் கொண்டு 'பரோட்டா' என்ற வார்த்தைகளைச் சொல்லித் தருவதும், அவள் ஏன் மற்ற குழந்தை போல் இல்லை என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையில்லாமல் தவிக்கும் போதும் தெரிந்து கொள்கிறான் சில கேள்விகளுக்கு சரியான விடைகளை இன்னும் கண்டறியவில்லையென்று. இப்படி ஒவ்வொரு பாத்திரப் படைப்புகளும் அபாரம்.

உலகப்பட தரத்தில் மலையாளப் படங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இப்படியான படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கே இடமில்லை. நம் இரசனை அப்படி. நமக்கு வாய்த்தது நமக்கு கிடைக்கவே செய்கிறது. அதனால் ஆதங்கமும் பொறாமையும் பட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். முடிந்தால் '101 சோதியங்களை' கேள்விகள் கேட்காமல் பார்த்துவிடுங்கள்.

Thursday, February 06, 2014

யானை டாக்டர்

நீங்கள் யானையை எப்போதாவது பார்த்ததுண்டா? பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? நான் சமீபத்தில் பார்த்ததில்லை, சென்ற ஆகஸ்ட் தாய்லாந்திற்கு செல்லும் போது சாகசம் செய்துகொண்டிருந்த யானைகளைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்ட யானையின் கண்களைப் பார்த்தால் மிக எளிமையாக என்னிடம் சம்பாஷனை செய்வதாக 'நான் ரொம்ப நல்லவன்' என்று சொல்வதாகத் தோன்றியது. பாசத்தில் செல்லமாக ஒரு அடி அடித்து வைத்தால் என்ன செய்வது என்று பயந்து, அருகே செல்லவில்லையே தவிர யானை மீது அன்பு உண்டு. ஜெ.மோ.வின் 'யானை டாக்டர்' படித்த பிறகு அந்த அன்பு காதலாகிப் போனதென்றால் மிகையில்லை.

'யானை டாக்டர்' படிக்கும் போது என்னமா எழுதுறாருப்பா என்று பிரம்மிக்க வைக்கும் எழுத்துநடை. நமக்கே தெரியாமல் நம்மை காட்டுக்குள் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி, சூழல் புரிய வைத்து, ஒவ்வொன்றையும் வேறு கோணத்தில் இரசிக்கச் செய்து, சராசரி மனிதர்களான நம்மையே சுயம் வெறுக்கச் செய்து, மிருக உலகத்தை படிக்கச் செய்து அசர வைத்திருக்கிறார் ஜெ.மோ. கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே வேகத்தில் பயணிக்கிறது. கதையல்ல வாழ்வுதான், நடந்த உண்மைதான், ஆனால் அந்த சம்பவங்கள் ஆழ் மனதில் பதிய வைக்க அவருடைய கதையோட்டமும் சொற்பிரயோகங்களும் கிறங்க வைக்கிறது.

ஒவ்வொரு கதைக்கரு பிறப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா? இந்தக் கதை பிறப்பதற்கான காரணத்தைக் கதையிலேயே கண்டு கொண்டதாக உணர்ந்தேன். மிருக உலகைப் பற்றியோ, அதன் இயல்பைப் பற்றியோ, காட்டின் வாழ்வும் சூழலைப் பற்றியும் பள்ளியிலேயோ கல்லூரிலேயோ படித்திருக்க மாட்டோம். நம் தலைமுறையில் பெரும்பாலோருக்கு லட்சியமெல்லாம் படிப்பதும், வேலைக்குப் போய் சம்பாதிப்பதும்தானே தவிர கனவுகளோ இப்படியான தெய்வீக உலகை அணுகவோ இரசிக்கவோ தெரிந்துக் கொள்ளவோ நேரமில்லாததால் கடந்து செல்கிறோம். அந்த உலகைக் கொஞ்ச நேரமாவது அனுபவிக்கச் செய்திருக்கிறார், ஜெ.மோ. அதைக் குறிப்பிட்டும் உள்ளார்.

குளிர்காலமென்பதால் தோல் உலர்ந்தால் உடனே 'மாய்ஸ்ச்சரைசரை' எடுத்துத் தடவிக் கொள்ளும் நான் 'யானை டாக்டரில்' அவர் வலியை கவனிப்பது நல்ல பழக்கமென்றும் அது ஒரு தியானமென்றும் வலியென்பது சாதாரண நிலையில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிற நிலை என்றும் சுலபமாக சொல்லிச் சென்றது ஆழ் மனதில் பதிந்து ஒவ்வொரு விஷயத்தையும் வேறு விதமாகப் பார்க்கவும் கையாளவும் ஆரம்பித்துவிட்டது மனது. நமக்கு வலி ஏற்படும் போது உடனே அந்த நிலையிலிருந்து மாறத் துடிக்கும் நாம், மாத்திரை மருந்தை உட்கொள்கிறோம். அதுவே தேவையில்லாத பல புதிய நோயை உண்டு பண்ணுகிறது என்ற சிந்தனை எனக்குச் சத்தியமாகப்பட்டது. அந்த சத்தியமான வார்த்தைகளைச் சோதித்தும் பார்த்தேன். என் காது மடலில் வந்த சின்ன பருவை ஒன்றுமே செய்யாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன், அதற்கே வெறுப்பாகிப் போய்விட்டது வடுவில்லாமல்.

எனது பிரசவத்தின் போது 'ஐயோ அம்மா' என்று கூக்குரலிடும் பெண்களுக்கு மத்தியில் நான் மிகவும் அமைதியாக வலியை தாங்கிக் கொண்டு மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு நெளிந்தேன். காரணம் 'புஷ்' செய்வதற்கு மிகுந்த சக்தி வேண்டும் அந்த வகை 'எனர்ஜியை' கத்தி அலறி வீணாக்காமல் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று படித்திருந்ததை மனதில் வைத்து செயல்படுத்தினேன். ஆனால் மிருகங்கள் எதைப் படித்து இதையெல்லாம் தெரிந்து கொண்டது என்ற பிரம்மிப்பு ஏற்பட்டது இந்தக் கதையை வாசிக்கும் போது.

"யானையை கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…" என்பவர் "உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்" என்றும் சொல்கிறார். இந்தக் கதை நம் வாழ்வியலோடு இயைந்து நிற்பதால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடக் காட்டிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கிறது நமக்கு.

பல்லி என்றால் எனக்கு பயம். புழுவைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும். இந்த அற்ப ஜந்துகளைப் பற்றி இந்தக் கதையில் சிலாகிக்கிறார். புழுவை கைக்குழந்தை என்கிறார், குழந்தை மீது என்ன அருவருப்பு என்று கேள்வி எழுப்புகிறார், ஒப்பீடாக புழு கைக்குழந்தை போல் நடக்க முடியாது, பறக்க முடியாது, தவழும், சாப்பிடும் என்கிறார். ஒரு விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்து வர்ணிப்பது எனக்கு அற்புதமாகத் தோன்றியது. இனி இந்த அற்பப் படைப்புகளைப் பார்த்தால் குழந்தையென்று கொஞ்சுவேனா? கண்டிப்பாக முடியாது ஆனால் அருவருக்காது என்று நினைக்கிறேன்.

மனிதனைப் பற்றிச் சொல்லும் போது "உனது அன்பு ஆசை மட்டுமே. உனது நட்போ ஏமாற்று. உனது புன்னகை போலி, உனது சொற்கள் வெறும் மோசடி" என்று சொன்னவர் மற்றொரு இடத்தில்..."அந்தா நிக்கிறானே செல்வா…அவனை மாதிரி வேற ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும், அந்த கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்த கடல்மாதிரி மனசும்…அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்கப்போறான்?" என்ற கேள்வியில் உண்மையில்லாமலில்லை. எதிர்பார்ப்பில்லாத, ஆசைகள் துறந்த, கருணையும் அன்பையும் மட்டும் சொரியும் மனிதர்களைக் காண்பது அரிதாகிவிட்டதாலா இந்தக் கதையை மிக நெருக்கமாக உணர்ந்தேன், பரவசமடைந்தேன்...?

நீங்களும் படித்துவிட்டு... நானே மிக தாமதமாகப் படித்துள்ளேன், ஆதலால் நீங்களாவது தாமதிக்காமல் படித்துவிட்டு நான் உணர்ந்ததைப் போல் நீங்களும் உணர்ந்தீர்களா என்று பகிர்ந்து கொள்ளுங்கள். 'யானை டாக்டர்; நன்றாகவே வைத்தியம் பார்த்துள்ளார். இனி யானையைப் பார்க்கும் போது இந்தக் கதை கண்டிப்பாக நினைவுக்கு வரும். அதோடு யானையை பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.

Tuesday, January 21, 2014

அறம்


பிரபலம் என்றாலே அவருடன் நட்பு பாராட்ட தோன்றும். ஆனால் எந்த வகை பிரபலமென்றாலும் பெரிய அளவில் உறவாடவோ அவர்களுடன் தொடர்பில் இருக்கவோ நான் முற்பட்டதில்லை. அது திரைத் துறையாகட்டும் அல்லது எழுத்துலகாகட்டும். எழுத்தாளர்கள் வருகிறார்களென்றால் அவர்கள் எழுதியதை வாசிக்காமல் புத்தகப் பெயர்களை மட்டும் தெரிந்துக் கொண்டு முக தாட்சண்யத்திற்காக இதை வாசித்தேன் அருமையென்று பொய்யாக பேசத் தெரியாது. ஜெமோ அமீரகம் வருகிறார் என்ற போதும் கூட அவருடைய எழுத்துக்களைத் தேடி வாசிக்கத் தோன்றியதில்லை. அமீரகத் தமிழ் மன்றத்திற்கு ஒருவரை விருந்தினராக அழைக்கும் போது அவரைப் பற்றிய பின்புலன்களை வாசித்துத் தெரிந்து கொள்வேன், அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை நல்லவிதமாகப் பேச வேண்டுமென்பதற்காக. ஜெமோ பற்றியும் அப்படித்தான் தெரிந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசி வரவேற்புரை நிகழ்த்தினேனே தவிர அவர் எழுத்துக்களை அதுவரை பெரிதாக நுகர்ந்ததில்லை. ஜெமோ இங்கு வந்திருந்த போது ஆற்றிய சொற்பொழிவு மிக அற்புதமாக அமைந்தது. சிவன் - பார்வதி தாயம் விளையாடும் ஓவியத்தின் பின் புலத்திலுள்ள கதையை விளக்கியதோடு அவர் பார்த்த, தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு அழகாகக் கடத்தத் தெரிந்த தொனியும் உடல்மொழியும் பேச்சுத் திறனும் இன்னும் என் கண் முன்னே நிறைந்திருக்கிறது. அதன் பிறகு அவர் எழுத்தை வாசிக்க முயற்சித்தேன். அவருடைய இணைய தளத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் மண்டையில் எதுவும் ஏறவில்லை. காரணம் மனத்தடையாகக் கூட இருந்திருக்கலாம். தெரியவில்லை. அவர் அண்ணாச்சிக்கு எழுதிய கடிதத்தை வாசித்த போது அவர் மீது மரியாதை சேர்ந்ததே தவிர அப்போதும் கூட அவர் எழுத்தைத் தேடத் தோன்றவில்லை.


கணவர் சென்னைக்குச் சென்றிந்த போது சாகித்ய அகாடமி விருது பெற்ற காரணத்திற்காக ஜோ.டி. குரூஸின் ’கொற்கை’ வாங்கி வரச் சொல்லியிருந்தேன். இவர்கள் சென்ற நேரத்தில் பனுவலில் ’கொற்கை’யில்லையென்று அங்கிருந்து என்னை தொலைபேசிய போது அண்ணாச்சி சொன்னதன் பேரில் ஜெமோவின் 'வெள்ளையானை', 'அறம்' மற்றும் சாரு எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருடைய புத்தகம் என்ன இருக்கிறது என்று கேட்டு வாங்கி வரச் சொல்லியிருந்தேன். சிவராமன் எழுதிய 'கர்ணனின் கவசம்' படித்துக் கொண்டிருந்ததால் வாங்கி வந்த புத்தகங்களைத் தொட்டும் பார்க்கவில்லை.

அண்ணாச்சி வீட்டுக்கு வரும் போதெல்லாம் 'அறம் வாசிச்சியா?' என்றே கேட்பார். 'பெரிய புத்தகம்ன்னாலே பீதியா இருக்கு, இத முடிச்சிட்டுத்தான் அத வாசிக்கனும்' என்றேன். பிறகு இன்னொரு தருணத்தில் ’அறம் தனித்தனி கதைகள் தானே அதை ஏன் இன்னும் தொடவில்லை?’யென்று கேட்க. 'அட அப்படியா? அதக் கூட பார்க்கலையே' என்றவுடன் கடுப்பாகிவிட்டார் அண்ணாச்சி.

நேற்றுதான் அறம் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதை 'அறம்' வீட்டில் பாதி வாசித்துவிட்டு கீழே வைக்க மனதில்லாமல் அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்று வாசித்து முடித்தேன். அலுவலகத்தில் சுற்றி ஆட்கள் இருந்தும் நிறுத்த முடியாத அளவிற்குத் தேம்புகிறேன் என்னையும் அறியாமல். நெருக்கமான சக ஊழியர் மட்டும் என்னிடத்தில் வந்து 'Is everything fine? Are you ok?' என்று கேட்டார். அதன் பின்னரே தன்னிலைக்குத் திரும்பியவளாக ஒன்றுமில்லையென்று விளக்கிவிட்டு மனதில் 'அறத்தை'யே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

'உண்மை மனிதர்களின் கதைகள்' என்றிருந்தது. அது மேலும் வலியை அதிகரித்தது. இது சாதாரண எழுத்தாகத் தோன்றவில்லை. எடுத்தோம் வாசித்தோம் வைத்தோம் என்றில்லாமல் அது மண்டைக்குள் சென்று தொண்டையை அடைக்க வைப்பது ஒரு சாதாரண எழுத்தால் முடியுமா என்ன? எதையோ யாருக்கோ எப்பவோ சொல்ல வேண்டுவதை தீர்க்கதரிசி போல உருமாறி அல்லது உருவெடுத்து எழுதியது போன்று தோன்றியது எனக்கு. கதையோட்டம் பிரமிக்க வைக்கிறது.

இந்தக் கதையில் சில வரிகள் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. சூடான அதிகமில்லாத காப்பியை ருசிப்பதை கூட 'பாய்ஞ்சு ஓடிட்டிருக்கிற பொண்ணை பாத்து ரசிக்கமுடியுமா? என்ன சொல்றேள்?’ என்று பெரியவர் சிரிக்க ‘குதிரைய ஓடுறப்ப மட்டும்தானே ரசிக்க முடியும்?' என்று எழுதிய அறிவுஜீவி சம்பாஷனைகளும், 'பொஸ்தக ஏவாரம் பன்றதுக்கு பொடலங்கா ஏவாரம் பண்ணலாம்னு சொல்றான். பொடலங்கா அழுகிரும்டா முட்டாள்' என்று 'அவர் கோளாம்பியை நோக்கி துப்பிவிட்டு' இப்படியான உள்குத்துகளும் மிக எளிமையாக போகிற போக்கில் நம்மை அழுத்திச் செல்கிற கதை.

ஒரு இடத்தில் இப்படி வரும் 'அத்தனை துயரம் நிறைந்த புன்னகையை சமீபத்தில் நான் கண்டதில்லை' அதை வாசிக்கும் போது எனக்கும் இத்தனை யதார்த்தம் நிறைந்த கதையை சமீபத்தில் எங்கும் வாசிக்கவில்லையென்றே தோன்றியது. மொத்தம் பன்னிரெண்டே கதைகள், சீக்கிரம் முடித்துவிட்டு மற்ற கதைகளைப் பற்றி எழுதுகிறேன். இனி ஜெமோவைத் தேடித் தேடி வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்குகிறது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.

சமீபகாலமாக 'ராயல்ட்டி' 'அறம்' என்று இணையத்தில் பிரளயமே ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பதிப்பகத்திற்காகப் பேசுபவர்கள் இந்தக் கதையைக் கண்டிப்பாகப் படித்திருப்பார்கள். எனக்கென்னவோ இந்த வரிகள் -- "கூட்டம் கூடிட்டுது. 'முதலாளி சொல்றதுதானே நியாயம், என்ன இருந்தாலும் ஏழு வருசமா சோறுபோட்ட தெய்வம்ல அவரு?"ங்கிறாங்க என்ற கூட்டமே இணையத்தில் அதிகம் ஒலிப்பதாக தோன்றியது. இந்தக் கதையை நீங்கள் வாசிக்கவில்லையென்றால் வாசித்துவிடுங்கள். என் கருத்தோடு இசைவீர்கள்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி