வாழ்வே உனக்காக

கால காலமாக இயற்கையோடு
வளர்ந்த நான்
அதை இரசிக்க மறந்ததேனோ?
உன்னுடன் காலம் கடந்த போது
எல்லாம் புது உலகமாக மாறியதேனோ?
புல் நுனியில் பனிதுளியில் இருந்து
பூத்து குலுங்கும் பூக்கள் வரை
புதிதாக தோன்றியது ஏனோ?
புத்தம் புது பூமியாக
உன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?

பிரிவென்றால் புரியாது இருந்தேன்
பெற்றோரை விட்டு பிரிந்து
உன்னிடம் ஒப்படைக்கும் போது கூட
எனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?
உன்னை பிரிந்த நாள் முதல்
என்னைவிட்டு எல்லாம்
தூரம் சென்றதாக
உணரும் உணர்வுதான் ஏனோ?

உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்
பல சந்ததியை கடந்ததாக
பிறவிகள் பல கழித்தவளாக
பல நாட்கள் பழகிய சிநேகிதமாக
பலநூறு ஜென்மம் பேசியதாக
நூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாக
பிரியாத உன் பந்தம் வேண்டி
நிற்பதுதான் ஏனோ?

பூ தளிர்த்து விரியும் முன்பே
பூங்காற்று பூ பறித்து சென்றதேனோ?
இசைக்கு மட்டும் தலையசைத்த நான்
இசையோடு ஒன்றி உன்னோடு
இளைப்பாருவதேனோ?
பாட்டை கேட்டும் கேட்காத நான்
மகுடிக்கு மயங்கும் பாம்பாக
பாடல் வரிகளை உனக்காக
உச்சரிப்பது ஏனோ?

இமயம் கூட சுமையாக தோன்றாது
என் இதயத்தில்
உன் பிரிவின் சுமை
சொல்ல வார்த்தை தொலைத்ததேனோ?

நீ இருக்கும் இடத்தில் நான் வந்து
அவரை பார்க்க ஒரு வாய்ப்பு தருவாயா
என நிலவை கெஞ்சுவதேனோ?
தொட்டு விட்டு போகும் தென்றலை
ஆடையாக நான் அணிந்து
உன்னை தொட்டு செல்ல
தவம் செய்வதேனோ?
பறவைக்கு உணவளித்து
நான் பசியாறாமல் இருப்பதை
உன்னிடம் உணர்த்த கூறுவதேனோ?

நெஞ்சில் வலி இருந்தாலும்
அது அதிகமாவது
அப்படி உனக்கும் வலிக்கும் என
எண்ணும்போதுதானே.
கண்ணீர் துளிகள்
என் கன்னங்களை கழுவினாலும்
நிற்காது வழிவது
உன் கண்ணில் நீர் கண்டபோதுதானே

கனவுகளே இல்லை
உறக்கம் இல்லாததால்
கற்பனையில் வாழ்கிறேன்
உன் நினைவுகளே என் நேர போக்கு
தொலைபேசியே என் தெய்வம்
இது தொடர வேண்டாம்
நமது காதல் காவியமாக வேண்டாம்
காப்பியங்களாக கைமாற வேண்டாம்
நீண்ட ஆயுளும் வேண்டாம்
நிறைய செல்வமும் வேண்டாம்
இனி இந்த பிரிவு வேண்டாம்
சிறிது காலமாவது சேர்ந்து வாழ்வோமே?

Blog Widget by LinkWithin