அம்மா தாயே...யாருடா அது பதிவு போட்டு பிச்ச கேட்குறாங்கன்னு பார்க்கிறீங்களா? பிச்சைதாங்க இது ஒரு வகையான வேண்டுகோள் பிச்சைன்னே வச்சிப்போம்.

பசின்னா பத்தும் பறந்துடும்ன்னு படிச்சவங்க, பெரியவங்க சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த உலகத்துல பல பகுதில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாதவங்க எத்தனையோ சனங்க இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நம்ம வீட்டுல தின் பண்டங்கள, சமச்ச பதார்த்தங்கள வீணடிக்கிறோம். தெரிஞ்சா செய்றோன்னு கேள்வி வரும். தெரிஞ்சோ தெரியாமலோ மிச்சம் வைக்கிறீங்களா இல்லையா, அது தவறுன்னு நெனச்சு மட்டும் என்ன பிரயோசனம், எப்ப திருத்திக்கப் போறீங்க? பெரும்பாலும் சாப்பாட வீணாக்குறது குழந்தைங்கதான், அதற்கு காரணம் பெரியவங்க நீங்க தானே? இல்லையா பின்ன..

தாய்மார்களுக்கு எப்போதும் தன் குழந்தைகள் அதிகம் உண்டு ஆரோக்கியமா இருக்கணும்னு ஆவல். அதில் தவறில்லை. ஆனால் தன் குழந்தை இவ்வளவுதான் சாப்பிடுவாள்/ வான் என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். வீணாக்கும் அந்த உணவு வேறு குழந்தையின் பசியை தீர்க்கும் என்று அறிந்திருந்தாலே இந்த அலட்சிய போக்கு வராது.

ஒரு குழந்தை மிச்சம் வைக்கும் அந்த உணவு பண்டத்தை வீட்டில் யாராவது சாப்பிட்டு முடித்து விரயம் செய்யாமல், குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தாலே உத்தமம். நிறைய சமைத்து விட்டு மிஞ்சி, வீணாக்குவதற்கு பதிலாக அளவாக சமைத்தாலே போதுமானது.

சிலர் பழங்களை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக நிறைய வாங்குவார்கள். வீட்டில் ஆர்வமாக யாரும் சாப்பிடாததால் அழுகி, கடைசியில் குப்பைக் கூடைக்கு செல்லும். இப்படி வீண் விரயம் செய்வதை விட தேவையானவையை மட்டும் வாங்கி உண்ணலாமே?

வீட்டில், பார்க்கவே ருசியாக இருக்கும் உணவை, தட்டு நிறைய அள்ளிப் போட்டு நிரப்பிக் கொள்வோம், வாயில் வைத்த பிறகு 'நல்லாவே இல்ல வேண்டாம்' என்று ஒதுக்கி வைத்து விடுவோம். அப்படி செய்யாமல் கொஞ்சம் முதலில் வைத்து ருசி பார்த்து மீண்டும் வைத்துக் கொள்ளலாமே?விரயம் செய்வதை விட வீட்டில் வேலை செய்பவரிடம் தவறாக நினைக்கவில்லை என்றால் தரலாம், இல்லை பிச்சைக்காரர்களுக்கு தரலாம் அதுவும் வாய்பில்லை என்றால் குடியிருப்பு காவலாளியிடம் கொடுக்கலாம். இவர்களெல்லாம் ஏழ்மை அறிந்தவர்கள், பசி புரிந்தவர்கள் வீணாக்காமல் கண்டிப்பாக பசியோடு இருக்கும் வயிறுக்கு சேர்த்து விடுவார்கள். இதெல்லாம் முடியாவிட்டாலும் பூனை, நாய், பறவைகளுக்காவது போடலாம். ஆனால் தயவு செய்து யாருக்கும் பயனில்லாத வகையில் தூர எறிவது சரியில்லைதானே?

குற்ற உணர்வில் எழுதும் பதிவாகவும் இதை கொள்ளலாம். ஏனென்றால் துபாயில் பிச்சைக்காரனே இல்லை. அளவாக சமைத்தாலும் எஞ்சிவிடுவதை என்ன செய்வது? மறுநாள் வைத்து சாப்பிட முடியாமல் சமயங்களில் விரயமாகிவிடுகிறது.

அப்படித்தான் போன வாரம் அலுவலகத்திற்கு உணவு கொண்டு போனேன் எல்லோரும் சாப்பிட்டும் நிறைய மிஞ்சிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் கீழ் மட்டத்தில் வேலைப் பார்ப்பவரிடம் கொடுத்தேன். மறுநாள் நான் கொடுத்த பாத்திரத்தின் மீது ஒரு சீட்டு அதில் 'நன்றி. நான் மனிதன் கோழி அல்ல' என்று எழுதி இருந்தது. நிறையதானே தந்தோம் பற்றாமல் போய்விட்டதோ என்று எண்ணிக் கொண்டேன். மறுநாள் அதை விட கொஞ்சம் நிறைய மிஞ்சவே, எடுத்துக்குறீங்களான்னு அவரிடம் கேட்டேன். "நான் எழுதியத படிக்கலையோ நீங்க" என்று கேட்டதும். "கோழி சாப்பிடுற அளவை விட கூடத்தான் இருக்கு" என்றேன். அதற்கு அவர் சொன்னார் "நான் எழுதியது உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். எங்க ஊர்ல சாப்பிட்டுவிட்டு கையை நக்காம கோழிக்கு காட்டுவோம் அது கொத்திக் கொள்ளும், வயறு நிறைந்ததா நாங்க சந்தோஷப்படுவோம். அதுமாதிரி இருக்கு நீங்க செய்றது" என்று தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார். குத்தலாக இருந்தது எனக்கு. சாப்பிட்டு மிச்சம் வருவதை சாப்பிடமாட்டோம், எனக்கு என்று தனியாக எடுத்து வந்தால் சாப்பிடுவோம் என்று அவர் சொல்லவந்த செய்தி பிறகு புரிந்தது. என்ன செய்வது நாம ஒண்ணு நெனச்சா மத்தவங்க அதயே வேற மாதிரி நினைக்கிறாங்க.

சாப்பாடு வீணாகும் போதெல்லாம் இந்தப் படங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கிறது, மனசு பதறுகிறது. இப்பவெல்லாம் எல்லோரையும் மிச்சம் வைக்காதீங்க, வீணாக்காதீங்கன்னு சொல்லி விரட்டியே எல்லாத்தையும் சாப்பிட்டு முடிக்கச் செய்கிறேன், அதுவே பெரிய மன ஆறுதல். நீங்களும் செய்ய முயற்சிப்பீங்களா?

Blog Widget by LinkWithin