என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் என்றால் என்னது, எப்படி இருக்கும்?" என்று அப்பாவியாக கேட்டாள். ஏனெனில் அவள் ஒரு ஐரோப்பிய லெபனான்காரி. விளக்கம் தரும் முன்பே அவள் "ஓ! அந்தக் கவர்ச்சி உடைதானே?" என்று நக்கலாகச் சிரிக்க. "என்ன சொல்கிறாய்?" என்றேன் ஆச்சர்யமாக. "ஆமாம், ஒரு நீளமான துணியைச் சுற்றிச் சுற்றி எதையுமே மறைக்காமல் கட்டுவீர்களே? அதுதானே!! " என்றாள் மறுபடியும் ஒரு புன்முறுவலுடன்.

இத காண்பிச்சா முடிவே கட்டிடுவான்னு தேடித் தேடி ஒரு ஒழுக்கமா புடவை கட்டியிருக்கும் பெண்ணை காண்பித்து தப்பித்துக் கொண்டேன்.

முன்பெல்லாம் 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்ற சொற்களை அடிக்கடி கேட்டிருப்போம் இப்போது அந்த சொற்கள் காணாமலே போச்சு. மற்றவர்கள்தான் அப்படின்னா தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ப்பெண்களும் இப்படித்தானே இருக்கிறார்கள்! சரி இங்கதான் இப்படியென்றால் சென்னையில் இதைவிட படு மோசம். உள்ளாடையை மறைக்கமட்டுமே முதுகில் சின்ன மறைவு, அதுவும் போய் முழுதுமாக திறந்தவெளி ஜன்னல், இறக்கமாக தொப்புள் தெரியும் படி அடுக்கிய சேலை. நம்ம தேசிய உடையே உருமாறி வருகிறது ரொம்ப வருத்தம்தான்.

சரி சேலைதான் அப்படியென்றால் மற்ற உடைகளும் அப்படித்தான் இருக்கிறது.
- இறுக்கமான மேல்சட்டை, புடைத்துக் கொண்டிருப்பதை கண்ணால் அளந்து கொள்ளுங்கள் என்பது போல.
- இறக்கமான கழுத்து வைத்து மேல் கோடு தெரிவது.
- தொப்புள் தெரிய மேல்சட்டையை குட்டையாக அணிவது
- எல்லாம் தெரியும்படி கண்ணாடி உடை அணிவது.
இப்படி 'பேஷன்' என்ற பெயரில் மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு அப்படியே மாறி வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் ஊடகம் மற்றும் திரைப்படங்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.
ஐரோப்பியர், அமெரிக்கர்களுக்கு நாம் இடுப்பு தெரிய சேலை கட்டுவது அதாவது வயிற்றைக் காட்டுவது கவர்ச்சி. இலைமறைவாய் காய்மறைவாய் தெரியாமல் மேலே அப்படியே காட்டுவது, தொடை தெரிய கவுன் போடுவது நமக்கு கவர்ச்சி. கேரளாவில் மேல் துண்டு போடாமல் இருப்பது கவர்ச்சியில்லை ஆனால் குட்டைப் பாவாடை போட்டால் கவர்ச்சியாம். இப்படி இடத்திற்கு இடம் வெவ்வேறு உறுப்புகள் கவர்ச்சி.
இதையெல்லாம் விட பெரிய கொடுமை, கீழ் உள்ளாடை தெரிய கால்சட்டையை இறக்கமாகப் போடுவது. உள்ளே 'ஜி' தெரிந்தால் அதிலும் இவர்களுக்குப் பெருமை. முதலில் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என் சக தோழியிடம் உள்ளாடை தெரிகிறது என்று சுட்டிக்காட்டினேன் (சேலையை கவர்ச்சி என்று சொல்லியவள் இல்லை இவள் இந்தியன் தான் ஆனால் இந்தி பேசுபவள்). அதற்கு அவள் "இப்ப இதுதான் பேஷன்" என்று 'பேஷனாக' சொல்லிவிட்டு சரி செய்யாமலே சென்றாள். கருமம் என்று நினைத்துக் கொண்டேன். இப்ப அந்த பேஷனும் போய் இன்னும் கொடுமையான 'பேஷன்', அதாவது கால்சட்டையை ரொம்ப கீழ் இறக்கிப் போட்டு கீழ் கோடு தெரிவது. மேல் கோடு காட்டியது போதாதென்று இப்போது கீழ் கோடு காட்டுகிறார்கள். எங்க போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.


இன்று என் மகளின் பிறந்தநாள். அவளுக்குச் சென்னையிலிருந்து வாங்கி வந்திருந்த கால்சட்டையும், கையில்லாத மேல் சட்டையும் அணிந்தேன். அந்தக் கால்சட்டை கீழே இறக்கமாக அவள் உள்ளாடை தெரியும் படி இருக்க. நான் ஒழுங்காகப் போட்டுவிட்டேன். அவள் கேட்கிறாள் "ஏன் ம்மா இந்த கால்சட்டை வாங்கினீங்க, ரொம்ப இறக்கமா இருக்கு என் ஜட்டிலாம் தெரியுது" என்று சலித்துக் கொண்டு தூக்கி தூக்கிவிட்டுக் கொண்டாள். அந்த மூன்று வயது சின்ன குழந்தைக்கு இருக்கும் அறிவும் கூச்சமும் துளியாவது 'பேஷன்' என்று அலையும் வளர்ந்த பெண்களுக்கு வராதா?