ஒரு மாலையும் சொதப்பல் சந்திப்பும்

சென்னை பயணம் இனிதாக நிறைவாக அமைந்தது. முப்பது நாள் செல்லும் பயணமெல்லாம் அம்மா வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்குமே மாற்றி மாற்றி போய் கொண்டு கடைசியில் எங்கும் ஒழுங்காக இல்லாத உணர்வோடு துபாய் வந்து சேருவேன். இந்த முறை அப்படியில்லாமல், 10 நாட்கள் விடுமுறையில் வந்த நான், ஹஜ்ஜிலிருந்து திரும்பி வந்த பெற்றோர்களையும் பார்த்துச் செல்வதற்காக விடுமுறையை 15 நாட்களாக நீட்டித்துக் கொண்டு நிறைவான பயணமாக மாற்றிக் கொண்டேன்.


வயோதிகர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என்று பார்க்கக் கடமைப்பட்ட எல்லாவரையும் பார்த்தது போக நெருங்கிய பந்தத்தின் திருமணத்தில் கலந்துகொண்டு எல்லா சொந்தங்களையும் ஒருசேர பார்த்து மகிழ்ந்து, ஊரையும் கொஞ்சம் சுற்றுகிறேன் பேர்வழியாக கடற்கரை, வள்ளுவர் கோட்டம், ராயல் சர்க்கஸ், இரண்டு திரையரங்குகள் (அபிராமியில் 'போக்கிரி',பிரார்த்தனாவில் 'தாமிரபரணி'), போத்தீஸ் என்று எல்லா பக்கமும் சுற்றி திரிந்தாச்சு.


இந்த சிறு விடுமுறையிலும் ஒருநாள் 'பெண் எழுத்தாளர்கள் சந்திப்பு' என்று 26ந் தேதி 3.30க்கு ஒதுக்கி வைத்தேன். தெரிந்தவர்கள் போக அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் சந்திக்க ஆவலாக இருந்து, துபாயிலிருந்து கிளம்பும் முன்பே கிட்டத்தட்ட 10 பேரை வருகிறேன், முயற்சிக்கிறேன் என்று எழுதவைத்து, ஏற்பாடுகளும் செய்திருந்தேன். சென்னை சேர்ந்த பிறகும் எல்லோரையும் அழைத்துப் பேசி நேரடியாக 'சரி' என்று வாங்கிக் கொண்டேன். நான்கு வலைப்பதிவர்கள், ஒரு கவிதாயினி, மூன்று சமூக ஆர்வலர்கள், மூன்று ஊடக மற்றும் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து வெவ்வேறு துறையில் பெண்களுக்கு உண்டான பிரச்னைகளையும், பெண்ணீயம் பற்றி பேசவும், பலதரப்பட்ட விஷயங்களின் கருத்தாடலாகவும் அமையும் என்று பெரிய பெரிய கற்பனையெல்லாம் செய்து 25ஆம் தேதி நினைவுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்து மறுநாள் சந்திப்புக்குக் காத்திருந்தேன்.


வழி கேட்டு முதல் அழைப்பாக அருணா ஸ்ரீனிவாசன். பிறகு சரியாகக் கண்டுபிடித்து வந்து சேர்ந்ததும் பேசத் துவங்கினோம். கொஞ்ச நேரத்தில் நிர்மலாவும் அவர்களைத் தொடர்ந்து வைகை செல்வியும் வந்து சேர்ந்தார்கள். 'திசைகளின்' தற்போதைய நிலவரம் குறித்து பேசத் தொடங்கி விரைவில் 'திசைகள்' தொடரும் என்ற நல்ல செய்தியோடு, வலைப்பூவில் நடக்கும் விஷயங்களைப் பற்றியும் அதன் நன்மை தீமைகளைப் பற்றியும் பேசி நொந்து கொண்டோம். வைகை செல்விக்கு வலைப்பூ பற்றி சுருக்கமாக விளக்கினார் நிர்மலா.


அருணா, வலைப்பூ ஆரம்பித்த காலங்களைப் பற்றியும், ஒருங்குறிக்கு முன்னால் வலைப்பூ இருந்த நிலவரம், மறுமொழி மட்டுறுத்துவதற்கு முன்னால் இருந்த நிலைப்பாடு, பயமுறுத்தும்/ அருவெறுப்பூட்டும் மறுமொழிகள் வந்த அனுபவம், தமிழ்மணத்தில் ஒரு பதிவைப் பற்றி புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாத தொழில்நுட்ப சிரமங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். வெளிப்படையாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார்கள்.


தமிழ்மணம் தேன்கூடு தளங்கள் எல்லா வலைப்பூவையும் சேகரிக்கும் நிரலிதானே தவிர இதை வெளியிடலாம் வேண்டாம் என்று வடிக்கட்ட முடியாத தொழில்நுட்ப அவலம் இருக்கத்தான் செய்கிறது. Spam filter போல் ஏதாவது செய்ய வேண்டும், அமீரகத்தில் நிறைய வலைத்தளங்கள் சேவை வழங்குனர்களால் 'தடை' செய்யப்படுவது போல் தமிழ்மணமும் தேன்கூடும் தடை செய்ய ஆரம்பித்தால், மக்களும் நமது வலைப்பூவை தடை செய்துவிடுவார்களோ என்று பயந்து ஒழுங்காக எழுத ஆரம்பித்து விடுவார்கள். கருத்துச் சுதந்திரம் என்று கண்டபடி எழுத சுதந்திரம் கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தடிசாக்கில் நான் சொன்னேன். அதே போல் பெண் வலைப்பதிவாளர்கள் புகைப்படம் போட்டால் சில அபாயம் இருப்பதாக அறிந்து நீக்கிவிட்டதையும் சொன்னேன். அதற்கு நிர்மலா 'இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்று. ஆண்கள் அவர்கள் படத்தைப் போட்டுக் கொள்ளலாம் சுதந்திரமாக. ஆனால் பெண்கள் படம் போட்டால் கூட பயப்பட வேண்டி இருக்கு' என்று வலையுலக நிலவரத்தைக் குறித்து வேதனைப்பட்டார்கள்.


நிர்மலா, வலைப்பூவை தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்து கடிந்து கொண்டார்கள். தேவையில்லாத குப்பைகளுக்கு நடுவே அவர்கள் எழுதியது வரும் போது இது தேவையா நமக்கு, தமிழ்மணத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போதெல்லாம் வளர்த்துவிட்ட ஏணியை விரட்டியடிக்க மனமில்லை என்று கவலைப்பட்டார்கள். (நிர்மலா முகத்தில் ஓடும் ரேகையை வைத்து அவர்கள் மனம் படித்து, அழைத்து பேசி, என்னைப் போலவே உங்களுக்கும் பெரிய ஏமாற்றம்தானே என்று கேட்டேன். 'அடடா, அப்படியே என் முகம் காட்டிக் கொடுத்துவிட்டதா' என்று உண்மையை ஒப்புக் கொண்டார்கள்).


வைகை செல்வி, பெண்ணாக ஒரு அரசு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள். பெண் என்பதால் ஏற்படும் அலட்சியத்தையும், இப்போதெல்லாம் நிறைய வாசிக்க எழுத முடியவில்லை, காரணம் வேலைப் பளு என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் சுற்றுப்புறச் சூழல் பிரிவில் இருப்பதால் அது தொடர்பான 'வானகமே வையகமே' இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் இதழை எல்லோருக்கும் தந்தார்கள். அது அவர்கள் தொழில் ரீதியான பத்திரிக்கை. நிறைய பேர் வருவார்கள் என்று நிறைய பிரதி எடுத்து வந்திருந்தார்கள்.


நால்வருக்குமே நிறைய பேர் கலந்து கொள்ளாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொருவரையாக அழைத்தேன் யாரும் பதிலளிக்கவில்லை. பொன்ஸ் சாவகாசமாக எடுத்து 'ஹலோ ஜெஸிலாவா, எங்க வீட்டுல உறவினர்களெல்லாம் வந்துவிட்டார்கள், சொல்லனும்னு நினச்சேன்...' என்று இழுத்தார்கள். 'ஆமா, தமிழ்நதி என்னாச்சு' என்றேன். 'அவங்க நேற்றே வரமுடியாதுன்னு என்கிட்ட சொன்னார்கள் நான்தான் சொல்ல மறந்துட்டேன்' என்று அலட்சிய பதில் தந்தார்கள். அழைக்கத்தான் முடியவில்லை ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பியிருக்கலாம் என்று நான் கடிந்து கொண்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டேன். "பெண்கள் பெரும்பாலும் 'professional'களாக நடந்து கொள்வதில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்" என்றார்கள் நிர்மலா.


மதுமிதா சென்னையில் இல்லாததால் மிகுந்த ஆர்வமிருந்தும் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்தியதோடு மட்டுமில்லாமல், சந்திப்பு முடிந்த பிறகும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் விசாரித்தார்கள்.


பொது இடத்தில் கூட்டம் வைக்காததும், நிறைய 'அஜெண்டா' வைத்திருந்ததும்தான் பெரும்பாலானவர்கள் வரத் தவறியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 'ரொம்ப சீரியஸான கூட்டம் போல' என்று பலரும் நினைத்திருக்கலாம். இதற்காகவா அவ்வளவு தூரம் போக வேண்டுமென்றும் எண்ணியிருக்கலாம். பெண்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாக வருவார்கள் என்றெல்லாம் பெரிதாகக் கற்பனை செய்தது என் தவறுதான். எழுத்தாளர்கள், பதிவர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரையும் அவியல் போல அழைத்தது கூட நிறைய பேர் வராமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சிலருக்கு நிஜமாகவே காரணங்கள் இருந்திருக்கலாம் எது எப்படியோ வரமுடியாததை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் எதிர்பார்ப்பால் 'பெரிய' ஏமாற்றம் இருந்திருக்காது.


இந்த கெட்ட அனுபவத்தால் அடுத்த முறை கண்டிப்பாக எல்லா பதிவர்களையும் சந்திப்பது என்று முடிவுசெய்துவிட்டேன். பெண்கள் வேஸ்ட். அதற்காக ஆண்கள் பெஸ்ட் என்று சொல்லமாட்டேன்.

Blog Widget by LinkWithin