Tuesday, May 15, 2007
நான் அவன் இல்லை - விமர்சனம்
எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய பாடல்களைப் புதுப்பித்து 'ரீமிக்ஸ்' என்ற பெயரில் தருகிறார்களோ அதே போன்ற ஒரு முயற்சிதான் இந்தப் படமும். இந்தப் படம் போலவே இன்னும் 'பில்லா', 'முரட்டுக்காளை' என்று வரிசையாக வரப்போகிறதாம். 'பில்லா', 'முரட்டுக்காளை'யெல்லாம் பரவாயில்லை வெற்றி மசாலாப் படங்கள், அதுவும் பிரபலமான கதாநாயகர்களை வைத்து எடுத்தால் ஓட வாய்ப்புள்ளது. ஆனால் முகவரியே இல்லாத ஓடாத அந்தக் காலத்து கே. பாலசந்தர் தந்த ஜெமினி கணேசன் தனது 54வது வயதில் அவரே தயாரித்து நடித்த படத்தை ரொம்ப தைரியமாகத்தான் திரும்ப தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் செல்வா. இதில் பிரபலமடைந்த பெரிய நடிகருமில்லை. 'யுனிவர்சிட்டி'யில் அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக கவர வைத்து 'திருட்டுப் பயலே'வில் தனக்கென முத்திரை பதித்த ஜீவனை கதாநாயகனாகப் போட்டு எடுத்த இந்தப் படத்தை வணிக ரீதியாக வெற்றி பெறும் என்ற முழு தைரியத்திற்கு காரணம் அவர் உபயோகித்த வலுவான ஆயுதம். யோசிக்காமல் புரிந்திருக்குமே? அதான் 'கவர்ச்சி'. பெண்களை ஏன்தான் போகப் பொருளாக எல்லோரும் காட்டுகிறார்களோ தெரியவில்லை. எல்லாப் படங்களிலும் அப்படித்தான் என்றாலும் இதில் கூடுதலாகவே. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காகவே தேடிப்பிடித்து எடுத்த படமா இது என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது. காரணம் எல்லாப் பெண்களையும் ஆபாசமாக அலையவிட்டது மட்டுமல்லாமல் முட்டாள்களாக காட்டியிருக்கிறார்கள். ஓர் இரண்டு பேர் முட்டாள்களாக காட்டியிருந்தால் பரவாயில்லை, படத்தில் வரும் அத்தனை பெண்களும், நீதிபதியான லட்சுமி உட்பட அனைவரையும் முட்டாளாக சித்தரித்திருக்கிறார்கள்.
மன்மத லீலைகளால் பெண்களை கவர்ந்து, ஏமாற்றி, திருமணம் முடித்து, நகை- பணத்தை அபகரித்து மறைந்துவிடும் கதாநாயகன் மீது வழக்கு தொடர்ந்து கூண்டில் நிற்க வைத்து சாட்சிகள் சொல்வதை விரிவுபடுத்துவதுதான் கதை. ஜீவனுக்கு மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். படித்த மாடலிங் செய்யும் மாளவிகாவிடம் விக்னேஷாக, ஜோதிர்மயியிடம் மாதவன் மேனனாக, எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் திருந்தாத சமுதாயத்தை கண்டிப்பதற்காகவே கீர்த்தி சாவ்லாவிடம் போலிச் சாமியார் வேடத்தில் ஹரிதரதாஸாக, தொழிலதிபர் நமீதாவிடம் ஷாம் பிரசாத்தாக வருகிறார். ஆனால் உண்மையில் ஜோசப் பெர்னாண்டஸ், குற்றவாளி கூண்டில் நிற்கும் போது தான் அண்ணாமலை என்கிறார். ஒப்புக்கு சப்பாக சினேகா, அதுவும் வக்கீலுக்குப் படித்த பெண் ஜாகீர் ஹுசைனிடம் பணத்தை ஏமாறுகிறார் ஆனால் அந்த குற்றவாளிக்கே ரசிகையாகிறார், என்ன கண்றாவிடா சாமி! எல்லா சாட்சிகளின் குற்றச்சாட்டின் முடிவிலும் ஒரே மாதிரியான வசனம் 'நான் அவன் இல்லை' என்று. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் கோட்டைவிட்டிருக்கிறார். கதையில் பெரிய ஓட்டையிருக்கும் போது பாவம் அவரும் என்ன செய்வார்.
நமீதா வரும் இடங்களிலெல்லாம் என்னையறியாமல் நான் காட்சியை வேகமாக ஓடவிட்டேன் ஏனெனில் கைக்குட்டையை ஆடையாக உடுத்தி வருகிறார் அதுவும் மழையில் நனைகிறார் அதனை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? எல்லா நடிகைகளும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டிருப்பதால் நடிப்பை மறந்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் ஜீவன் ஆயிரங்காலத்து பயிரை எளிதாக மேய்வதாக தந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, தனக்கு தந்தப் பொறுப்பை நன்றாக முடித்திருக்கிறார்.
மாளவிகா திருமணத்தை நண்பர்கள் குடும்பம் சூழத்தான் செய்கிறார்கள் இருப்பினும் மாப்பிள்ளை புகைப்படத்தை புதுத்தொழில் நுட்பமான செல்பேசியில் அவரே எடுப்பதாகச் சொல்லுகிறார்களாம், எடுக்கிறார்களாம். ஏன் திருமணத்திற்கு வந்த வேறு யாரிடமும் புகைப்படம் எடுக்கும் செல்பேசியே இல்லையா என்ன? அதே போல் பழைய படத்தில் சினேகா வேடத்தில் லட்சுமி, இந்த படத்தில் லட்சுமியின் மகள் சினேகா. சினேகா ஜாகீர் உசேன் ஓவியத்தின் ரசிகையாம், அவருடைய கண்காட்சியைத் தேடிப்பிடித்துப் பார்க்க வருகிறார் ஆனால் ஜாகீர் உசேன் எப்படியிருப்பார் வயதானவரா இளைஞரா என்று கூட தெரிந்து வைத்துக் கொள்ளாமலிருக்கிறார். காதில் பூ சுற்ற ஒரு அளவு வேண்டாம்? திரைக்கதை எழுதி இயக்கிய செல்வா இந்த மாதிரி படம் முழுக்க பல ஓட்டைகள் தந்திருக்கிறார். இதனை தைரியமாக தயாரித்தவர் வி. சித்தேஷ் ஜபக். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினியின் பழைய படத்தில் வரும் 'ராதா காதல் வராதா' என்பதை ரீமிக்ஸ் செய்து புதுப்பொலிவு தந்திருக்கிறார். மற்றுமொரு பாட்டு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. பழனி பாரதி மற்றும் பா. விஜயின் வரிகளானாலும் மனதில் நிற்கும்படி விஜய் ஆண்டனி தட்டவில்லை என்று சொல்லலாம்.
படம் பார்க்கும் போது அந்த பழைய படம் நினைவில் வராமலில்லை. அந்த பழைய படம் தொலைக்காட்சியில் போடும் போது 'இதெல்லாம் பெரியவங்க படம் பார்க்கக் கூடாது' என்று எங்க அம்மா விரட்டியடித்தது நினைவிலிருக்கிறது. இப்போதெல்லாம் 'பெரியவங்க' படமென்று தனியாக பிரிக்க முடியாது எல்லாப் படங்களுமே அப்படித்தானே? அந்தக் காலத்துக்கு இந்த கதை, புருடா எல்லாம் சரிதான் ஆனால் தொழில்நுட்பங்கள் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்தில் எடுபடவில்லை. சின்னத்திரை 'சீரியலிலேயே' பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வருகிறார்கள் ஆனால் அத்தகைய விஷயங்கள் இதில் இல்லை. காவல் துறையின் விசாரணை, அரசு வழக்கறிஞர் வாதம் எதிலுமே காரசாரமில்லை. ஒரு இடத்தில் குற்றவாளியை வழக்கறிஞர் 'ஜீனியஸ்' என்கிறார் அபத்தமாக. முடிவுரையாக கதை மூலம் சொல்ல வந்தது பின்னணி தெரியாமல் பெண்கள் ஏமாற வேண்டாம் 'பேராசை பெரு நஷ்டம்' என்பதாக. அதற்காகப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.
படித்த பெண்கள், ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டிக் காப்பாற்றும் பெண் என எல்லாரும் ஒரே மாதிரியாக ஏமாறுவார்களா? ஆளைக் கவிழ்க்கும் வார்த்தைஜாலங்களில் பயிற்சி பெற்றிருந்தாலே, தபு சங்கர் காதல் தொகுப்புகளை மனனம் செய்திருந்தாலே போதும் பெண்கள் எளிதில் மயங்கிவிடுகிறார்கள், பெண்கள் என்றாலே பணத்தையும் அந்தஸ்தையும் பார்த்துத்தான் காதல் வயப்படுகிறார்கள் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கும் விதமாகவே அமைந்துள்ளது இந்தத் திரைப்படம்.
என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் இரண்டே வகையான பெண்கள்தான் உண்டு முதல் வகை பெண்கள் முட்டாள்கள். இரண்டாம் வகையினர் புத்திசாலியாக நடிப்பவர்கள் என்று.. அதே கொள்கையுடைவர்தான் இந்த செல்வாவும் போலும். என் நண்பர் அப்படிச் சொல்லும் போதெல்லாம் நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று. அதுதான் இந்தப் படத்தின் மூலம் உண்மையென புலப்படுகிறது.
திரைப்படம் என்றாலே 'real' அல்ல 'reel' என்பதை அறிவேன், இருப்பினும் கேட்கிறவன் கேணயனாய் இருப்பின் கேப்பையில் நெய் வடியும் என்பது போல் உள்ளது படம்.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
//நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று.//
வெரிகுட். ஆணாதிக்க சாடலில் தொடங்கி பெண்ணீயத்தில் முடிந்திருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குனரை போலவே சிந்தனை. :)
//என் நண்பர் அப்படிச் சொல்லும் போதெல்லாம் நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று.//
தவறு மேடம்.
நீ ஒரு தவறு செய்தால், நானும் ஒரு தவறு செய்வேன் என்று இந்தக்கூற்றின் மூலம் மறைமுகமாகச் சொல்லி உங்கள் நண்பருக்குத்தான் வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்கிற ஆண்களில் நீங்கள் மதிக்கிற ஆண்கள் நிறைய பேரும் இருப்பார்கள் என்று உணர்ந்துக்கொள்ளுங்கள்.
(உங்கள் நண்பரின் கூற்றையெல்லாம் பொருட்படுத்தவே வேண்டியதில்லை என்பதும், அதற்கு அதுதான் பதில் என்பதையும் உங்களுக்குக்கூட சொல்லித்தர வேண்டியுள்ளதே :-)) )
தமிழ்படம் பார்ப்பதற்க்கு முன் யாரிடமாவது கேட்டுவிட்டு பிறகு பாருங்கள்..நமீதா படமென்றால் யாரையுமே கேக்க வேணாம்
:)
//இந்தப் படத்தின் இயக்குனரை போலவே சிந்தனை. :) // சீ சீ அவ்வளவு கேவலமான சிந்தனையெல்லாம் எனக்கில்லைப்பா.
வாங்க வாசகன் நீங்க இந்த பக்கம் வரது முதல் முறைன்னு நினைக்கிறேன்.
//தவறு மேடம்.
நீ ஒரு தவறு செய்தால், நானும் ஒரு தவறு செய்வேன் என்று இந்தக்கூற்றின் மூலம் மறைமுகமாகச் சொல்லி உங்கள் நண்பருக்குத்தான் வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள்.// அப்படியெல்லாம் மறைமுகமா ஒருக் கருத்துமில்லை. நீங்களா நெனச்சுக்கிட்டா நான் பொறுப்பில்லை.
///தமிழ்படம் பார்ப்பதற்க்கு முன் யாரிடமாவது கேட்டுவிட்டு பிறகு பாருங்கள்..// சரி அய்யனார் இனி உங்களிடமே கேட்கிறேன் ;-)
Naanum avan illai
vimarsanam nalla irukku!
நீங்கள் இப்படத்தை பார்த்தது முதல் தவ்று. அதற்கு விமர்சனம் எழுதியது இரண்டாவது தவ்று.பின்னூட்டத்தை படித்து பதி எழுதியது மூன்றாவது தவ்று. பெண்கள்தான் அதிகம் தவறு செய்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது
இந்த மாதிரி குப்பை படத்தை பார்த்ததும் அல்லாமல் விமர்சனம் வேறு செய்து உங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்களே ஜெஸிலா... ஏன், ஏன் ஏன்?
கீழுள்ள வரிகளில் உண்மை இருந்தாலும் ஒரு 10 சதவீதம் ஒழுக்கம் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என சொல்லியிருக்கலாம்.
//நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று.//
சடை படத்தில் பெண்ணியம் எதிர்பார்க்கும் உங்களை நினைக்கும்போது உங்கள் நண்பர் சொன்னது உண்மை போலத்தான் தோன்றுகிற்து.
போதாக்குறைக்கு இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரங்களின் பெயர் கூட தெரியுமளவுக்கு படத்தோடு ஒன்றிப்போய்விட்டு, மட்டமான படம் என்று சொல்வதும் உங்கள் நண்பர் புத்திசாலி என்பதை நிரூபிக்கிறது :-)
சடையன் நான் சொல்ல வந்ததைத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்
நான் அவன் இல்லை
நான் பதில் தருவது பெண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று.
இதற்க்கு தங்களின் விளக்கம் என்னவோ அதுவே எனதும்....:)
நன்றி அபி அப்பா ;-)
சாபத்தா நீங்க இந்த பதிவப் படிச்சதுதான் பெரிய தவறு ;-)
//இந்த மாதிரி குப்பை படத்தை பார்த்ததும் அல்லாமல் விமர்சனம் வேறு செய்து உங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்களே ஜெஸிலா... ஏன், ஏன் ஏன்?// நேரத்தை வீணடித்து படம் பார்த்துட்டேன் சுந்தர், அதான் ஆதங்கம் பதிவாக ;-).
//கீழுள்ள வரிகளில் உண்மை இருந்தாலும் ஒரு 10 சதவீதம் ஒழுக்கம் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என சொல்லியிருக்கலாம்.// 1 சதவீதம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
//சடை படத்தில் பெண்ணியம் எதிர்பார்க்கும் உங்களை நினைக்கும்போது உங்கள் நண்பர் சொன்னது உண்மை போலத்தான் தோன்றுகிற்து.
போதாக்குறைக்கு இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரங்களின் பெயர் கூட தெரியுமளவுக்கு படத்தோடு ஒன்றிப்போய்விட்டு, மட்டமான படம் என்று சொல்வதும் உங்கள் நண்பர் புத்திசாலி என்பதை நிரூபிக்கிறது :-)
சடையன் நான் சொல்ல வந்ததைத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்
நான் அவன் இல்லை // நீங்கதான் அவன் என்று தெளிவாக தெரிகிறது. ;-)சொன்ன நண்பரே அனானியாக வருவார் என்று எதிர்பார்த்ததுதான் ;-) மட்டமான படமென்றால் பெயர்கள் மறந்தா போய்விடும்? எத்தனையோ பழைய குப்பை படங்கள் மீண்டும் 'சன்'னில் போட்டால் கேவலமான வசனங்கள் கூட நினைவில் இருக்கத்தான் செய்கிறது என்ன செய்ய முடியும் அதற்கு? ;-(
மின்னுது மின்னல், நீங்க ரொம்ப புத்திசாலி கொயிந்தப் போல :-)
கருத்து
Oru aan thavaru seiyumbodu pennirkum pangu undu allava! idil aan, pen endru pedam yen. Irai acham [God fearing] ullavargal than nallavargal. Jaffar-KUL
இந்தப் படத்திற்கு நீங்கள் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் என்பதே எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நீங்கள் எழுதினால் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பதால் விமர்சனம் ஓகே..
அந்தக் கடைசியில் இரண்டு வரிகள் எழுதியிருக்கிறீர்களே.. //ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள்//
100 சதவிகிதம் உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை..
//முதல் வகை பெண்கள் முட்டாள்கள். இரண்டாம் வகையினர் புத்திசாலியாக நடிப்பவர்கள் என்று...//
இதை நடிகர் மம்மூட்டி, லட்சுமி, சுகாசினி போன்ற சக நடிகைகளிடம் சொன்னதாக படித்த நினைவு.
இந்த வகைப்படுத்துதல் இழிவு படுத்துதல்தான். உங்கள் அம்மாவும் சகோதரிகளும் அப்படியிருக்கும் அதனால்தான் நீங்கள் இப்படி தெளிவாய் வளர்ந்தீர்களோ என்று சொல்லி இருக்கலாம்.
//நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள்//
ஆண்களில் வாய்ப்பு கிடைக்காததாலும், வேறு வழியில்லாததாலும் ஒழுக்கமாயிருப்பவர்கள் 80 சதவீதம் என்று சொல்லலாம்தான் அதனால் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக கூறுவது சரியா?
//ஒரு இடத்தில் குற்றவாளியை வழக்கறிஞர் 'ஜீனியஸ்' என்கிறார் அபத்தமாக//
கிரிமினல்களில் பலர் உண்மையிலே 'ஜீனியஸ்' என்பதை குற்றப் பின்னனியை ஆய்ந்தால் தெரியும். எப்படி இந்த மாதிரியெல்லாம் திட்டமிட முடிந்தது என்ற திகைப்பு வரும். என்ன அவர்களின் அந்த 'ஜீனியஸ்'தனம் நல்ல வழிகளில் பயன்படவில்லை, நல்ல வழிகளில் பயன்பட்டிருந்தால் எத்தகைய சாதனையாக அது இருந்திருக்கும் என்றும் மனது சொல்லும்.
மற்றபடி படம் பார்க்கவில்லை. பார்க்கவும் எண்ணமில்லை.
சென்ஷி சொல்லவதத பாதியிலேயே விட்டுட்டா மாதிரி தெரியுதே ;-)
//நீங்கள் எழுதினால் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பதால் விமர்சனம் ஓகே..// ஓஹோ இதுக்கு மேல இவக்கிட்ட எதிர்பார்க்க முடியாது, வழக்கம் போல சொதப்பல்ன்னு சொல்ல வரீங்களா உண்மை தமிழன்? தைரியமா உண்மைன்னு ஒத்துக்கிட்டதற்கு நன்றிங்கோ.
//மற்றபடி படம் பார்க்கவில்லை. பார்க்கவும் எண்ணமில்லை. // 'மக்களே பார்த்துவிடாதீர்கள்!' என்று எச்சரிக்கவே இந்த பதிவு.
//ஜெஸிலா said...
சென்ஷி சொல்லவதத பாதியிலேயே விட்டுட்டா மாதிரி தெரியுதே ;-)//
இல்லியே.. உங்க பின்னூட்டப்பெட்டியில என்னத்த சொல்றது.. "சாரி டைப்பிங் மிஸ்டேக்" எண்ணத்த சொல்லுங்கன்னு போடலியே
வெறும் கருத்துச் சொல்லுங்க
அப்படின்னு இருந்தது.
அதான் கருத்து சொன்னேன்...
சாரி டைப்பினேன் :))
சென்ஷி
குப்பை - படத்தை சொன்னேன்.
நான் அவன் இல்லை பாக்க வேணாம் என் நண்பன் கெஞ்சி கேட்டுக்கிட்டான், அதை நீங்களும் சரியா சொல்லி இருக்கீங்க, அப்படியே போற போக்குல வம்படி அடிச்சுக்கிட்டே....
அதுக்கு பதில்.... நீங்க அவங்களே தான்......
இப்படியும் இருக்கும் பெண்கள் இப்படத்தைப் பார்த்தாவது திருந்தட்டும் என்ற வகையில் எடுக்கப்பட்ட படம் எனக் கருதுகிறேன்.
இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதி இந்தப் படத்திற்கு விளம்பரம் கொடுத்திருக்கீங்க...:(((((
நானும் இந்தப் படம் பார்த்தேன்.. கண்ணீர் விட்டேன்.. கதறினேன்... டேய் நான் அவன் இல்லை டா... அப்படின்னு கூடச் சொல்லிப் பார்த்தேன்.... ம்ம்ம்ம் முழு படத்தையும் பாக்க வைச்சுட்டு விட்டாங்க... அலுவலகத்தில் ட்ரீட் என்ற பெயரில்...
//இல்லியே.. உங்க பின்னூட்டப்பெட்டியில என்னத்த சொல்றது.. "சாரி டைப்பிங் மிஸ்டேக்" எண்ணத்த சொல்லுங்கன்னு போடலியே
வெறும் கருத்துச் சொல்லுங்க
அப்படின்னு இருந்தது.
அதான் கருத்து சொன்னேன்...// எண்ணத்த சொல்லுங்கன்னு போட்டிருந்தாலும் 'எண்ணம்' என்று எழுதியிருப்பீங்க ;-) -உங்க குறும்பை இரசித்தேன்.
//அப்படியே போற போக்குல வம்படி அடிச்சுக்கிட்டே....// அச்சச்சோ வம்படின்னா என்ன அர்த்தம் சிவா? நான் அப்பாவிப்பா அப்படிலாம் செய்வேனா?
//இப்படியும் இருக்கும் பெண்கள் இப்படத்தைப் பார்த்தாவது திருந்தட்டும் என்ற வகையில் எடுக்கப்பட்ட படம் எனக் கருதுகிறேன். // அதைத்தான் நானும் சொல்லியிருக்கேனே ஆனால் இவ்வளவு தூரம் கேவலப்படுத்தியிருக்க தேவையில்லைதானே?
//அலுவலகத்தில் ட்ரீட் என்ற பெயரில்... // நிறையப் பேருக்கு இந்த மாதிரி படங்கள் 'விருந்து'தான் அதான் இன்னும் இப்படிப்பட்ட படங்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது. ;-(
ssசகோதரி உங்கள் நேரத்தை ஏன் இவ்வாறான சினிமா விமர்சனங்களுக்கு செலவி டுகிறீர்கள்
Hai,
//ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள்.///
supper supper. ippadi sonna ungalai summa paaraata kudaathu,
maalai poottu paaraattanum.. xllent.
///ஜெஸிலா சொன்னது...
சென்ஷி சொல்லவதத பாதியிலேயே விட்டுட்டா மாதிரி தெரியுதே ;-)
//நீங்கள் எழுதினால் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பதால் விமர்சனம் ஓகே..// ஓஹோ இதுக்கு மேல இவக்கிட்ட எதிர்பார்க்க முடியாது, வழக்கம் போல சொதப்பல்ன்னு சொல்ல வரீங்களா உண்மை தமிழன்? தைரியமா உண்மைன்னு ஒத்துக்கிட்டதற்கு நன்றிங்கோ.///
நான் சொல்ல வந்தது அந்த அர்த்தத்தில் இல்லீங்க.. இ
'ச்சே.. இதுக்குத்தான் சொல்றது அங்க, இங்கன்னு போய் மூக்கை நுழைக்காதடா உண்மைத்தமிழா'ன்னு..
ஸாரி மேடம்.. கோபித்துக் கொள்ளாதீர்கள்.
//நமீதா வரும் இடங்களிலெல்லாம் என்னையறியாமல் நான் காட்சியை வேகமாக ஓடவிட்டேன் ஏனெனில் கைக்குட்டையை ஆடையாக உடுத்தி வருகிறார் அதுவும் மழையில் நனைகிறார் அதனை குடும்பத்துடன் பார்க்க முடியுமா?//
இப்படி யாரும் இந்தக் காலத்தில் விமர்சனம் எழுத மாட்டார்கள் மேடம்..
ஏனெனில் நமீதாவைப் பற்றி அகில உலகத் தமிழ் ஆண்களுக்கு நன்கு தெரியும்.
படம் பார்க்க வந்த நான்கு பேரில் இருவர், இவருக்காகத்தான் வந்திருப்பார். மற்ற இருவர் மாளவிகாவிற்காகத்தானாம்..
நோக்கமே இப்படியிருக்கும்போது இதை விமர்சனம் செய்து யாருக்கு என்ன புண்ணியம் மேடம்..
இந்த நேரத்தில் நீங்கள் அழகான சில கவிதைகளை எழுதியிருக்கலாம்.. நேரம் பொன் போன்றதாச்சே..
சுமதி நீங்களும் நம்ப கட்சிதானா. நன்றி.
உண்மை தமிழா உங்க விளக்கத்திற்கு நன்றி.
முஸ்லிமீன் கதம்பமாக இருக்கட்டும் என்று எல்லாவற்றையும் எழுதுகிறேன்.
திருட்டு பயலே படம் பார்த்து, அதன் வெற்றியில் வருத்தப்பட்டேன்.
சமூக விரோதிகளை நாயகர்களாக வலம் வரச்செய்து இரசிக்கவும் செய்ய வைப்பது சுத்த அயோக்கியத்தனம்.
தமிழ் திரைப்பட உலகில் காவியமாக சித்தரிக்கப்படும் 'பருத்தி வீரன்' கூட இந்த வகையில் தான் சேர்க்கமுடியும்.
தமிழ் இயக்குநர்களில் பலர், கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல், கேவலமாக படம் எடுப்பதில் போட்டி போடுகிறார்கள்.
பிறகு, 100% கணக்கெல்லாம் எதற்காக பயன்படும் என்று எனக்கு தெரியவில்லை. மாறாக, ஆரோக்கியமான விவாதத்திற்கு தடை செய்யும்.
Post a Comment