நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.
இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது, ஆகையால் அடி அடியென்று ஆளுக்காள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர், வாயிருந்தாலும் அழுதுவிடும். ஒருவேளை அதன் கண்ணீர் கலந்து வருவதால் கலங்கலாக தண்ணீர் வருகிறதோ என்று உற்றுப் பார்த்து, கலங்கலாக வந்தாலும் பரவாயில்லை புழங்க உதவும் என்று கடைசி சொட்டுவரை விடுவதாக இல்லை என்ற படி அடித்துக் கொண்டிருந்தனர் அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள். ராமசாமி தெருவில் குறுகிய அந்த முடுக்கு சந்தில் இரு பக்கமும் வீடுகள். ஒரே வாயிலுக்குள் நான்கு மாடி-வீடுகள் அதில் ஏழு குடித்தனங்கள் அதில் வீட்டுச் சொந்தக்காரர் ராஜன் வீடும் அடக்கம். வீட்டின் பெயர்-பலகை 'செம்பருத்தி' என்று காட்டியது.
ராஜனுக்கு அரசாங்க வேலை. அழகான அளவான குடும்பம். மனைவி அன்பான இல்லத்தரசி. மகன் திருலோகச்சந்தர் இந்திய நாட்டின் எல்லையில், ராணுவத்தில் பணி. அவன் விரும்பி எடுத்த வேலை என்பதால் யாரும் மறுக்கவில்லை. மகள் மீனலோச்சனி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றிருந்தவள் விடுமுறைக்கு வந்திருக்கிறாள். அந்த 'செம்பருத்தி'யே அவள் வருகைக்காக காத்திருந்தது. அவள் வந்ததுமே அவளைப் பார்க்க எல்லோரும் வீட்டிற்கு வரிசையாக வந்து போய் இருந்தார்கள். படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் மற்ற சமயங்களிலும் கிடைத்த வேலையைச் செய்து, வரும் சொற்பப் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாரையும் மறந்துவிடாமல் எல்லோருக்கும் சின்ன பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து அன்பால் இணைத்து அவளைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள். அவள் பெற்றோருக்கு பெருமையாகவே இருந்தது.
ஒருமாதமே விடுமுறையில் வந்திருக்கும் மீனாவுக்கு தன் சிநேகிதிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. எல்லோரையும் ஒரே சமயத்தில் பார்க்க யாருடைய திருமணமும் ஏற்பாடாகவில்லை. ஆகவே அவள் சிநேகிதியும் சித்தி மகளுமான சுஜாவுக்கு தொலைபேசியில் அழைத்து மணிக்கணக்கில் பேசி சுஜா வீட்டில் எல்லா தோழிகளையும் கூட்டி சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அங்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
"அம்மா குங்குமம் எங்க இருக்கு" மேலே இருந்து படிக்கட்டின் கைப்பிடியை பிடித்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உரக்கக் கத்திக் கேட்டாள், கீழே சமையலறையில் இருக்கும் அம்மாவின் காதில் விழுமாறு.
"இரண்டாவது தட்டுல சாமி படத்துக் கிட்ட, அந்த குத்து விளக்குக்கு பின்னாடி இருக்கு பாரு" அம்மாவும் மீனா காதில் சென்றடையும் வகையில் பதிலளித்தார்.
"அப்பா வாடகை சீருந்துக்கு சொல்லிட்டீங்களா?" மீண்டும் உரக்க..
"ம்ம் சொல்லிட்டேம்மா இன்னும் 5-10 நிமிஷத்துல வந்துடும், நீ கிளம்பிட்டாயா இல்லையா?"
"கிளம்பிக்கிட்டே இருக்கம்பா.."
அமெரிக்கா வரை அனுப்பி வைத்தவர்களுக்கு நீலாங்கரையில் இருக்கும் சுஜா வீட்டிற்கு அனுப்ப தயக்கம். தெரிந்த வாடகை சீருந்து
நிலையத்திலிருந்து வண்டி எடுத்திருந்தார்கள். "தெரிந்த நல்ல ஓட்டுனரா அனுப்பி வைப்பா" என்ற வேண்டுகோளோடு வண்டி ஏற்பாடு.
வண்டி வந்து நின்றது, அமெரிக்காவிலிருந்து வந்த பெண் என்று ஏற்கெனவே சொல்லி அனுப்பப்பட்டிருந்தது.
"போய்ட்டு வரேம்மா, வரேன்பா" என்று சொல்லியபடி, படி இறங்கும் போது புடவை மடிப்புகள் கீழே பிறளாமலிருக்க மேலே தூக்கவும், உயரமான காலணி எட்டிப்பார்த்தது.
"போய் சேர்ந்ததும் கூப்பிடு" என்று கிசுகிசுத்தாள் அம்மா.
"சரிம்மா" என்று தாயின் அன்பைப் புரிந்தவளாக சீருந்தின் பின்கதவைத் திறந்து உட்கார்ந்தாள்.
ஓட்டுனர் தமிழரசனுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெண் என்று சொன்னதால் அவன் கால்சட்டை, கையில்லாத மேல் சட்டையில் அவளை எதிர்பார்த்ததால் அந்த வியப்பு. தளையத் தளைய சேலை கட்டி, அவள் நீளக் கூந்தலில் வீட்டில் கட்டின அடர்த்தியான மல்லிகையை முன் பக்கம் தெரியும் வகையில் வைத்து, ஒட்டு பொட்டுக்கூட வைக்காமல் குங்குமத்தில் தண்ணீர் விட்டு குழைத்து அதிலிருந்து வரைந்த பொட்டுக்கு கீழ் விபூதியும். தன் தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்பட்டு, ஆங்கிலத்தில் கொஞ்சம் தமிழும் கலந்து பேசும் சென்னை கல்லூரி பெண்கள் மத்தியில் இவள் அமெரிக்காவில் படித்தும் 'அம்மா, அப்பா' என்று அழகு தமிழில் அழைத்தது அவன் காதில் விழுந்தால் அவனுக்கு வியப்பாகத்தானே இருக்கும்?!
தமிழரசன், வாலிப வயதிலும் பொறுப்புணர்ச்சி மிக்கவன். கற்றது கையளவென்பதால் உலகளவை ஆராய்பவன். அமைதியானவன் ஆனால் ஒத்த ஆர்வமுடையவர்கள், நல்ல இரசனையுடையவர்கள் கிடைத்துவிட்டால் "விடுடா சாமி" என்றாலும் அன்புத் தொல்லையாக மொய்ப்பவன். தமிழ் விரும்பி. லட்சணமான முகவாகுடையவன். காதல் என்றால் காததூரம் ஓடுபவன்.
சீருந்தில் ஏறி, கையசைத்து விட்டு, வண்டி நகரும் போது மீனா மெல்லிய குரலில் தன்மையாக கேட்டாள் "எங்க போகணும்னு உங்களுக்கு தெரியும்ல?"
வியப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக அவள் குரல் காதில் தேனாக பாய்ந்ததால் திடுக்கிட்டு "தெரியும். நீலாங்கரை தானே?" என்றான். தேனாக அவனுக்குப் பாய்ந்ததின் காரணம் அவள் குரல் வளமில்லை மாறாக அவள் தமிழ் பேசியது. இவனை ஓட்டுனராக அனுப்பியது இவன் நல்ல ஆங்கிலமும் பேசுவான் என்ற காரணத்திற்காகவும்தான்.
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கும் மீனாவுக்கு சென்னை புதியதாகத் தோன்றியது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
"குளிர்மி வேண்டாமே, நான் இயற்கை காத்து வாங்கிக்கிறேன்" என்றபடி கண்ணாடியை இறக்கிக் கொண்டாள்.
மீண்டும் அதிசயப் பொருளாகவே மீனா தமிழரசுக்குத் தோன்றினாள். "வண்டில ஏசி வேலை செய்யலையா?" என்று அலுத்துக் கொள்ளும் உள்ளூர் ஆட்களின் குரல் அவனுக்கு எங்கோ ஒலித்து மறைந்தது.
நீலாங்கரை போய் சேரக் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும், அதுவரை வாயை அடக்க முடியாதவனாக மெல்ல பேச்சைத் தொடங்கினான் அரசு.
முன்னால் பார்த்தவாறே வண்டியை கவனமாக ஓட்டியபடி "நீங்க சென்னைக்கு வந்து எவ்வளவு நாளாகுதுங்க?" என்று தொடங்கினான்.
"ம்ம்.. என்ன கேட்டீங்க..?" கண்ணாடி தாழ்த்தி இருந்ததால் காற்றின் இரைச்சலில் சரியாகக் கேட்கவில்லை அதுமட்டுமில்லாமல் அவன் கேள்வியைச் சிறிதும் எதிர்பார்த்திராதவளுக்கு காதில் சரியாக விழவில்லை.
"நீங்க அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதா சொன்னாங்க, எத்தனை வருஷம் கழிச்சி சென்னைக்கு வரீங்க" என்று தெளிவாக கேட்டான்.
முன்னால் அவன் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்தாலும், அவனைப் பார்த்தபடி பதில் அளித்தாள் "இரண்டரை வருஷமாச்சு. ஆனா பல வருஷமான மாதிரி பல மாற்றங்கள் தெரியுது.." என்று சொல்லிவிட்டு புதிய இடத்தைப் பார்ப்பதுப் போல் கண்கொட்டாமல் வெளியே பார்த்து வந்தாள்.
"ம்ம்.. நிறைய மாற்றங்கள் இருக்கு, புதுப்புது மேம்பாலங்கள், சாலை விரிவுபடுத்தப்பட்டிருக்கு, இரு வழிப்போக்குவரத்து ஒருவழிப் பாதையாகி இருக்கு, மழை நீர் சேகரிப்பால் தண்ணீர் கட்டி நிற்கும் பிரச்சனையில்ல. ஆனா மாறாதது குடிநீர் பிரச்சனைதாங்க" தனக்கு நினைவில் இருந்ததை பட்டியலிட்டான்.
சில நிமிட அமைதிக்கு பிறகு "ஆமா, அமெரிக்கால தமிழ் பேசும் வாய்ப்பு கம்மி இல்ல?..." என்று இழுத்து அவள் பதிலுக்குக் காத்திருந்தான்.
சென்னையை இரசித்துக் கொண்டு வந்தவளுக்கு 'தமிழ்' என்று கேட்டவுடன் கேள்வியை உள்வாங்கிக்கொண்டு "யார் சொன்னா? அங்கு நிறைய தமிழர்கள் இருக்காங்க. எங்களுக்கு தமிழ்ச்சங்கமே இருக்கு. உலகெங்கும் மணப்பது தமிழ் மொழி" என்று பெருமிதத்துடன் சொன்னாள்.
மிகழ்ச்சியாக "அடேங்கப்பா, மொழிப் பற்று அதிகம் போல உங்களுக்கு. நீங்க தெரிந்துக் கொள்ள ஒரு விஷயம் சொல்றேன், நான் தமிழில் முதுகலை பட்டதாரி" என்றான் அவனும் பெருமிதத்தோடு.
வியப்பாக அவனைப் பார்த்தாள் மீனா.
போக்குவரத்து விளக்கு சிகப்பு என்று காட்டியவுடன் வண்டியை மெதுவாக நிறுத்தத்திலாக்கினான். வியப்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவின் பக்கம் தலை திருப்பி "என்னங்க நம்ப முடியவில்லையா? இப்போ நான் பி.எச்டி. பண்றேன் அதுவும் தமிழாராய்ச்சி பற்றிதான். நிறைய வாசிக்கிறேன், நிறைய எழுதித் தள்ளுறேன், செய்தி சேகரிப்பு கூடவே நடக்குது.." என்றான் சாதாரணமாக.
நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீனா கேட்டாள் "அப்ப ஏன் வண்டி ஓட்டுனரா இருக்கீங்க"
சிரித்துக் கொண்டே கண்களை சாலை விளக்கு பக்கம் திருப்பிக் கொண்டவன் கேட்டான் "ஏங்க வண்டி ஓட்டுனரா வேலை பார்ப்பது கேவலமா..?" அவள் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தான். "என் அப்பாவுக்கு அரசாங்க பணி, அம்மா பள்ளிக்கூட ஆசிரியை, என் அண்ணன் கப்பல் துறையில், அக்கா படிப்பு முடிஞ்சதும் கட்டிக் கொடுத்துட்டோம், அவள் கணவரும் அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியர். பின்ன நான் ஏன் வண்டி ஓட்டுறேன்னா, எனக்கு வாசிக்க எழுத நிறைய நேரம் தேவை. ஓய்வு நேரங்களில் என் சவுகரியத்திற்கு பணம் ஈட்ட நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தற்காலிகப் பணி இது" என்றான் விளக்கமாக.
"ம்ம், உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்" என்று சுருங்க முடித்துக் கொண்டாள்.
"நீங்க எழுதுவீங்களா? கதை, கவிதை இந்த மாதிரி.." என்று ஏதாவது பேசிக் கொண்டிருக்க புதிய தலைப்பைத் தொடங்கினான் வண்டியையும் நகற்றியபடி.
"ம்ம்.. எழுதுவேன்" என்றாள் ஒரே வார்த்தையில்.
"கதையா, கட்டுரையா, கவிதையா? எதை எழுதுவீங்க? எதில் ஆர்வம் அதிகம்?" அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை. எழுதுவேன் என்று சொன்னதும் ஊக்கத்தில் கேள்வியை அடுக்கினான்.
"தோன்றுவதை எழுதுவேன். என் கவிதைகள் சில வார ஏடுகளில், சில மின்னிதழ்களில் வெளிவந்துருக்கு" என்றாள் வெளியில் பார்த்தபடி.
அவளை பேட்டிக் காண்வது போல் தொடர்ந்தான் "எந்த மாதிரியான இதழ்களை படிப்பீர்கள்? வெறும் ஜனரஞ்சகமான இதழ்களா? அல்லது சுபமங்களா, கணையாழி, காலச்சுவடுன்னு கவிதாசரணெல்லாம் படிப்பீர்களா?"
சிற்றிதழ்கள் குறித்தும் அதன் தீவிர இலக்கிய நோக்கங்கள் பற்றியும் கேள்வி மட்டுமே பட்டிருந்தவளுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை அமைதியாக இருந்தாள்.
அவள் அமைதியை கலைக்க மறுபடியும் "என் தாய்மாமா நீதிபதியா இருக்காரு, அவர்கிட்ட நிறைய புத்தகங்கள் இருக்கும், ஒண்ணையும் விடாம படிப்பேன். கன்னிமரரா நூலகம் தெரியுமா? அதில் நான் ஆயுள்கால உறுப்பினர். அது லேசுப்பட்ட விசயமில்லீங்க அதற்கு எத்தனை பேர் சிபாரிசு செஞ்சி கையெழுத்துப் போட்டாங்க தெரியுமா? அப்புறம்தான் ஆயுள்கால உறுப்பினரா சேர்த்துக்கிட்டாங்க." என்று சொந்தக் கதைகளை அவிழ்த்துவிட்டான். வேகமாக ஓட்டினாலும் நிதானத்தைப் பிடித்திருந்தான்.
அவளைப் பேச வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், "கவிதை எழுதுற நீங்க கவிதைப் புத்தகங்களை வாசிப்பீங்களா?" என்றான் ஒரு கணம் முகம் திருப்பி அவளைப் பார்த்து.
"ம்ம்.. வாசிப்பேன்" என்று உற்சாகமாகப் பதில் வந்தது.
இடதுபக்க சன்னலருகே அமர்ந்திருந்த மீனா இடது பக்கமே பார்த்து வந்துக் கொண்டிருந்தவள் குளிர்ந்த காற்று மேலே தழுவியதும் வலது பக்கம் காற்றின் திசையை நோக்கிப் பார்த்தால், கடற்கரையை கடந்து கொண்டிருந்தது. சீருந்து இந்த அமைதியான கடலா சுனாமியை எழுப்பியது என்று திகைப்பாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வார்த்தையால் அவள் மவுனம் கலைத்தான் அரசு, "யாருடைய கவிதைகள் ரொம்ப பிடிக்கும்?.."
கடற்கரையை இரசித்தபடியே "யார் கவிதையானாலும் அழகானதாக இருந்தால் பிடிக்கும்" என்று வார்த்தைக்கும் வலிக்காத வண்ணம் கூறினாள்.
"சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வாசிச்சிருக்கீங்களா?" கருத்துப்பறிமாற்றத்தை தொடங்கினான்.
"வாசித்திருக்கிறேன்" கடற்கரையை கடந்து விட்டிருந்ததால் மறுபடியும் இடது பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"தேவையில்லாத விரசமான வார்த்தைப் பிரயோகம், ஒரு பெண் அப்படி எழுதி இருப்பது அநாகரிகமா இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க?" என்றான் அவன் கருத்தோடு அவள் ஒத்துப் போவாள் என்ற நம்பிக்கையில்.
"இல்ல. ஏன் பெண் எழுதினால் மட்டும் விரசம் என்று வித்தியாசப்படுகிறது.? அப்போ ஆண் எழுதினால் இரசிப்பீர்கள் அப்படித்தானே? அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை, ஏன் ஆண்- பெண் பேதம் எழுத்தில் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்" என்று அழுத்தமாக தன் கருத்தைச் சொன்னாள்.
சிறிதும் அந்த பதிலை எதிர்பாராதவன் கண்கள் விரிந்தன. ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் எந்தக் கலவரமும் இல்லாமல் யதார்த்தமாக சாதாரணமாக மறுபடியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வேகமாக தடைப்பானை அழுத்தியதில் மீனா முன் பக்கம் வந்து மீண்டும் பின் பக்கம் தள்ளப்பட்டாள். வலது கையை இறுக்கமாக முன் இருக்கையை பற்றியிருந்தாள். என்னவென்பது போல் முன் பக்கம் தலையை தூக்கிப் பார்த்தாள்.
"மன்னிக்கணுங்க. ஒரு பூனை ஓடியது அதுதான்..." என்று சிறிதும் எதிர்பாராது குறுக்கே வந்த பூனைக்காக பதட்டமடைந்து வண்டியை அழுத்தி நிறுத்திய காரணத்தை தயக்கத்துடன் மீனாவிடம் கூறினான்.
இந்தத் திடீர் நிறுத்தம் காரணமாகப் பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி சீருந்தில் முட்டி விட்டது. கீழே இறங்கிய அரசு பின் பக்கம் போய் பார்த்தான். லேசான கீறல்,
"ஏன்யா இடைவெளிவிட்டு ஓட்டவேண்டியதுதானே" கையை நீட்டிக் கோபமாக கேட்டான். நியாயமாக அவன் தான் அரசைத் திட்டியிருக்க வேண்டும். வேகமாகச் சென்றவன் எதிர்பாராமல் தனது சீருந்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியது தமிழரசின் தவறுதான், இருப்பினும் முந்திக் கொண்டு அவனைத் திட்டிவிட்டு, மறுபடியும் வண்டிக்குள் ஏறி அமர்ந்தான். மூன்று சக்கர வண்டியின் முன் விளக்கில் பெரிய கீறல், இருந்தும் "வல்லவன் வகுத்ததே வாய்க்கால்" என்பதால் மூன்று சக்கர வாகன ஓட்டுனர் ஒன்றும் சொல்லாமல் முணுமுணுத்தபடியே வண்டியை இறங்கி பின்னால் தள்ளினான். ஆனால் வண்டியில் சவாரி ஒன்றுமில்லை.
வண்டியில் ஏறிய தமிழரசிடம் "ஒண்ணும் ஆகலையே" என்றாள் அக்கறையோடு.
அக்கறையின் ஆனந்தத்தில் மெல்லிய சிரிப்புடன் "ஒண்ணும் ஆகல" என்றான்.
கொஞ்ச நேரம் அமைதியாகவே வண்டியை ஓட்டி வந்தவனுக்கு மறுபடியும் மீனாவிடம் ஏதாவது கேட்டுப் பேசிக் கொண்டு தொடர வேண்டும் போலிருந்தது.
"தி.ஜா. எழுத்துக்களெல்லாம் படிச்சிருக்கீங்களா?" என்று தொடர்ந்தான்.
"நீலங்கரைக்கு போக இன்னும் எவ்வளவு நேரமாகும்?" அவன் கேள்வியை கவனிக்காதது போல் மறு கேள்வி கேட்டாள்.
"இது திருவான்மியூர்.." விளக்க நினைத்தான்.
"தெரியுது, இன்னும் அதிக தூரமில்லையே?" ஏற்கெனவே தெரிந்திருந்ததால் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டாள்.
"கிட்டதான், வந்திடுச்சு.." என்று கொஞ்சம் வேகத்தைக் கூட்டியபடி கூறினான்.
அவள் 'பட்பட்'டென்று பேசும் சுபாவம் அவனுக்கு பிடித்திருந்தது. அவள் இலக்கிய ஆர்வமும் பிடித்திருந்தது. அவன் பேச்சுக்கு காது கொடுத்ததும் பிடித்திருந்தது. அவள் தமிழ் பேச்சும் பிடித்திருந்தது.
அவன் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் அவள் தெரியும்படி திருப்பி வைத்தான். புதியதாய் ஒரு உணர்வு அவனைப் பற்றிக் கொண்டிருந்தது.
அதைக் கவனிக்காமலேயே அவள் சேலையைச் சரி செய்துக் கொண்டாள். கோவிலைக் கடக்கும் போது கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அதையெல்லாம் இரசித்துக் கொண்டே வந்தான் தமிழரசு.
"எல்லா வகையான கவிதையும் பிடிக்கும் என்றீர்களே, காதல் கவிதைகள் யாருடையது பிடிக்கும்?" என்று பேச்சை மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான்.
அவன் கண்களை பார்க்காமல் வேடிக்கை பார்த்தபடி பதில் அளித்தாள் "ம்ம்.. குறிப்பிட்டு யாரையும் சொல்லத் தெரியலை, யதார்த்தத்தோடு ஒன்றி எழுதி, மனதைத் தொடும் எல்லா கவிதையும் பிடிக்கும். கவிதையாக படிப்பதைவிட பாட்டில் வரும் கவியரசின் வைர வரிகள், தாமரையின் கவிதை கலந்த பாடல்கள் எல்லாம் பிடிக்கும். பா. விஜயின் கவிதைகள், அறிவுமதி, யுகபாரதி, தபுசங்கர், நா. முத்துக்குமார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்."
"தேவதையின் தேவதைகள் படித்திருக்கிறீர்களா? ரொம்ப திகட்டலா தோன்றவில்லை?" என்றான் முகம் சுளித்தவாறு.
"அப்படியொன்றும் தோன்றவில்லை. அழகியல் அதிகமிருந்தாலும் அழகாகவே இருந்ததாக எனக்குப்பட்டது. நல்ல இரசனையோடு எழுதியிருக்கிறார் கவிஞர்" என்றாள் இரசித்தபடி.
என்ன இரசனையோ என்று சலித்துக் கொண்டவாறு "உரைநடை வீச்சுதானே அதிகம்? கவிதையாக ஒன்றுமே எனக்கு தென்படவில்லை."
"அது என்னவோ உண்மைதான், இருப்பினும் ஒரு பெண்ணை இப்படியெல்லாம் இரசிக்கலாமா என்று பிரம்மிப்பாக இருந்தது எனக்கு" என்று 'கலுக்'கென்று சிரித்தாள் நட்புணர்வோடு.
நீலாங்கரை நுழைந்ததும் அவள், "அடுத்த தெரு, இடதுப்பக்கம்" என்று வழியைக் கவனமாக பார்த்துக் கொண்டு வந்தாள்.
வண்டி இடதுபக்கம் திரும்பியதும் "மெதுவாப் போங்க.." வீடுகளை கவனித்தபடி தன்மையோடு. "இந்த வீடுதான்" என்று ஒரு புன்முறுவல் வைத்தாள் தோழிகளை காணப் போகும் மகிழ்ச்சியில்.
கதவைத் திறந்து இறங்கிக் கொண்டவள் தன் கைப்பையை மாட்டிக் கொண்டு வீட்டை ஒருமுறை மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டு, குனிந்து "போய்ட்டு வரேங்க, உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சிரித்த முகமாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் கதவை அடைத்தாள்.
உள்ளே இருந்து சுஜா வர, அவளை நோக்கி கைகளை விரித்து "சுஜி" என்று கூறி அரவணைத்துக் கொண்டாள்.
தமிழரசன் அவளைப் பிரிய மனமில்லாமல் சீருந்தின் ஒலியெழுப்பியை அழுத்தினான், முக மலர்ச்சியோடு திரும்பிப் பார்த்த மீனா "ம்ம்.." என்றாள் 'என்ன' என்பது போல்.
"சாயங்காலம் எத்தன மணிக்கு வரணும்?" என்று ஆவலாக கேட்டான்.
"நான் கூப்பிடுறேனே.." அவளுக்கே தெரியாது என்பதாலும் இவனுக்கேன் அப்படியொரு அக்கறை என்பது போலவும் பதில் வந்தது.
'சரி'யென்று தலையாட்டி அவளைப் பார்த்தபடியே வண்டியை திருப்பிக் கொண்டு போனவன் மனதில் மாலையின் சந்திப்பை நினைத்து பூரிப்பு. வண்டியில் இருந்து இறங்கினாலும், மனதில் ஏறிக்கொண்டவளை நினைத்துக் கொண்டு வண்டியில் நல்ல பாடல் ஒலிக்க செய்தான்.
உள்ளே வந்த மீனாவின் செல்பேசி ஒலித்தது. "அப்பா, இப்பதான் வந்து சேர்ந்து உள்ளே நுழையிறேன்."
நிம்மதி மூச்சுடன் "சரிம்மா. அப்ப சாயுங்காலம் எத்தன மணிக்கு வண்டி வேணும்னு முன்கூட்டியே சொல்லிடு" என்றார் சொல்லி வைத்தாற்போல.
"நானே சொல்லனும்னு நினைச்சேன்ப்பா... வண்டி எத்தன மணிக்குன்னு சொல்றேன் ஆனா இப்ப வந்த ஓட்டுனர் வேணாமே.." என்றாள் தயக்கத்தோடு.
"ஏம்மா ஏதாவது பிரச்சனையா" அப்பா உடனே பதறிவிட்டார்.
"அதெல்லாம் இல்லப்பா, ஆனா வேணாம். நீங்க ஒண்ணும் சொல்லிக்காதீங்க, வேற ஆளு மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்" என்றாள் மீனா.
மகளைப் புரிந்துக் கொண்டவனாக "சரிம்மா, வைக்கிறேன்" என்றார் அப்பா.
"சரிப்பா, அப்புறம் அம்மாக்கிட்ட பேசுறேன்னு சொல்லுங்க" அம்மாவின் மனதை அறிந்துரைத்தாள்.
இணைப்பு துண்டிக்கப்பட்டதும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சுஜா ஆவலாக "ஏண்டி, ஏதாவது பிரச்சனையா?" என்று மறுமுனையில் அப்பா கேட்டதையே கேட்டாள்.
"அதெல்லாம் இல்ல. சரியான தொணதொணப்புடி அந்தாளு. ஒரு நிமிஷம் வாய மூடல. எல்லாம் தெரிஞ்ச மேதாவின்னு நெனப்பு அவனுக்கு. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி கேள்விக்கேட்டுக்கிட்டே சாகடித்தான். மனம்புண்படுத்த வேண்டாமேன்னு பாவம்னு பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். முகம் கொடுத்து பேசல இருந்தும் விடாம.. அப்பப்பா.." என்று அந்த எரிச்சலை நினைவுப்படுத்தாதே என்பது போல முகம் சுளித்தாள்.
சரி இவள பேசவிட்டா அவ்வளவுதான்னு தோழிகள் கூடி இருக்கும் அறைக்குள் மீனாவை இழுத்துச் சென்றாள் சுஜா. அங்கே நுழைந்ததும் மகிழ்ச்சி சூடிக் கொண்டு எக்களிப்பில் திளைத்தனர்.
6 comments:
கத சூப்பர் ( தேங்க்ஸ் அபிஅப்பா)
:)
ரொம்ப வேகமாத்தான் படிச்சிட்டீங்க ;-) நன்றி. ஆமா அபி அப்பாக்கு ஏன் நீங்க நன்றி ?
Nanraaga eshuti irukeenga , jazeela,
thodarnthu eshuthungal ;-)
மிக்க நன்றி ஹனீஃப்பா பாய்.
//படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் மற்ற சமயங்களிலும் கிடைத்த வேலையைச் செய்து, வரும் சொற்பப் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாரையும் மறந்துவிடாமல் எல்லோருக்கும் சின்ன பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து //
//இப்போ நான் பி.எச்டி. பண்றேன் அதுவும் தமிழாராய்ச்சி பற்றிதான். நிறைய வாசிக்கிறேன், நிறைய எழுதித் தள்ளுறேன், செய்தி சேகரிப்பு கூடவே நடக்குது.." என்றான் சாதாரணமாக.
நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீனா கேட்டாள் "அப்ப ஏன் வண்டி ஓட்டுனரா இருக்கீங்க"//
அப்படி இருப்பவர்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் ?
- - - - - - - - - - - - - - -
//"இல்ல. ஏன் பெண் எழுதினால் மட்டும் விரசம் என்று வித்தியாசப்படுகிறது.? அப்போ ஆண் எழுதினால் இரசிப்பீர்கள் அப்படித்தானே? அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை, ஏன் ஆண்- பெண் பேதம் எழுத்தில் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்" //
//அழகியல் அதிகமிருந்தாலும் அழகாகவே இருந்ததாக எனக்குப்பட்டது. நல்ல இரசனையோடு எழுதியிருக்கிறார் கவிஞர்" என்றாள் இரசித்தபடி.//
//பிரம்மிப்பாக இருந்தது எனக்கு" என்று 'கலுக்'கென்று சிரித்தாள் நட்புணர்வோடு.//
நான் "ஒரு மாலையும் இன்னொரு மாலையும் " மற்றும் "தேவதையின் தேவதைகள்" இரண்டையும் இன்னும் படிக்காததால் அவை குறித்து என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை
- - - - - - - - - - - - - - -
//ஆனா இப்ப வந்த ஓட்டுனர் வேணாமே.." என்றாள் தயக்கத்தோடு.//
//வேற ஆளு மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்" //
//சரியான தொணதொணப்புடி அந்தாளு. ஒரு நிமிஷம் வாய மூடல. எல்லாம் தெரிஞ்ச மேதாவின்னு நெனப்பு அவனுக்கு. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி கேள்விக்கேட்டுக்கிட்டே சாகடித்தான். மனம்புண்படுத்த வேண்டாமேன்னு பாவம்னு பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். முகம் கொடுத்து பேசல இருந்தும் விடாம.. அப்பப்பா.." என்று அந்த எரிச்சலை நினைவுப்படுத்தாதே என்பது போல முகம் சுளித்தாள்.//
- - - - - - - - - - - - - - - - -
//"தெரிந்த நல்ல ஓட்டுனரா அனுப்பி வைப்பா" //
அவர் நல்ல ஓட்டுனராக மட்டும்தான் இருக்கவேண்டும் இலக்கியம் குறித்தெல்லாம் அறிந்திருக்கக்கூடாது என்று மீனா நினைக்கிறார்களா ?
- - - - - - - - - - - - - - - - -
நான் புரிந்துகொண்டது வாடகைச் சீருந்து ஓட்டுனர் தமிழாராய்ச்சி செய்யும் முதுகலைப்பட்டதாரியாகவும் இலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் இருப்பதை (அல்லது the other way round ?) மீனாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ ?
என் புரிந்துகொள்ளல் தவறாகவும் இருக்கலாம்.
//அப்படி இருப்பவர்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் ? // அரசாங்க பணியில் இருக்கும் அப்பா இவளை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைக்கிறார் (பட்டபடிப்பாக இருக்கலாம்). ஆனாலும் சொற்ப வேலைகள் செய்து பணம் ஈட்டுகிறார் மீனா. வெளிநாட்டில் படிப்பிற்கு என்று செல்பவர்கள் வேலை செய்வது புதிதல்ல. ஆனால் உள்ளூரில் அப்பா- அம்மா, அண்ணன் என்று எல்லோருமே நல்ல நிலையில் உள்ளவர்கள். பட்ட படிப்பு முடித்து பிஎச்டி செய்பவர் அரசு, அப்படியிருக்க வேறு வேலை செய்யாமல் ஏன் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று கேட்கிறாள்.
//நான் புரிந்துகொண்டது வாடகைச் சீருந்து ஓட்டுனர் தமிழாராய்ச்சி செய்யும் முதுகலைப்பட்டதாரியாகவும் இலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் இருப்பதை (அல்லது the other way round ?) மீனாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ ? // அப்படியல்ல, தலைப்பே வேற்று திசை. இவன் அவளை முடிவில் வேறு விதமாக நினைக்கிறான் (பிரம்மிப்பாக, அவள் ஆர்வத்தை மெச்சுகிறான், ரசிக்கிறான்) ஆனால் அவள் நினைப்பு முற்றிலும் முரண்பாடு, இவனைப் பார்த்து இவளுக்கு பிரம்மிப்பில்லை மாறாக தலைக்கனம் பிடித்தவனாக, எல்லாம் தெரிந்தவன் என்று அலட்டிக் கொள்பவனாக மட்டும் தெரிந்திருக்கிறான்.
Post a Comment