யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். தேவைப்பட்டால் ஒரு தொலைபேசி அழைப்புதானே?!. அதுவும் வேலை, அலுவல், குடும்பம் என்ற வரிசையில் நம் நட்பு பின்னால் சென்றுவிட்டது. ஜூலை 2ஆம் தேதி உன் பிறந்தநாளுக்கு நானும் என் மகளும் சேர்ந்து

தொலைபேசியில் உனக்கு பிறந்தநாள் பாடல் பாடும் போது 'happy long life to you' என்று சொல்லும் போது விளையாட்டாக 'long life எல்லாம் வேண்டாம்ப்பா' என்றாயே அது விதியின் காதில் இப்படியா விபரீதமாக விழுந்துத் தொலைய வேண்டும்? நம் நட்பில் உள்ள பலதரப்பட்ட ரகசியங்களை புதைப்பதற்காகவா நீ குழிக்குள் சென்றுவிட்டாய்? உன் பிள்ளைகளைப் பார்த்தாலே உன் தாய்மையின் பிரதிபலிப்பு தெரியுமே! எங்களுக்காக இல்லாவிட்டாலும் அபி- ஜெஸிக்காக உன் உயிரைக் கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்க வேண்டாமா? எப்படி இவ்வளவு சுலபமாக விட்டுவிட்டு சென்றுவிட்டாய்?

அன்று ஃபாத்தின் 'யாஸ்மின் ஆண்ட்டி உங்களை இப்பவே பார்க்க வேண்டுமெ'ன்று அழுதவுடன் இன்ப அதிர்ச்சியாக வீட்டுக்கு வந்து நின்றாயே. இப்போதும் அவள் அழுகிறாள் உன்னைக் கேட்டு நான் என்ன சொல்லிப் புரிய வைக்க? உனது மனதைப் போன்ற மல்லிகைப்பூவை உனக்கு பிடிக்குமென்று ஊரிலிருந்து யார் வாங்கி வந்தாலும் உனக்குத் தரும் போது 'கொஞ்சம் வாடிப் போய்விட்டதே' என்று நான் வருத்தப்பட்டால் நீ முகம் மலர்ந்து 'பரவாயில்லைப்பா' என்று கொடுத்த அன்புக்காக ஆசையாக வாங்கி சூடிக் கொள்வாயே. இப்போது உனக்காக நிறையப் பூ வாங்கி வைத்துள்ளேன் எப்போது வந்து எடுத்துக் கொள்ளப் போகிறாய்? வாடுவதற்குள் சீக்கிரம் வந்துவிடு. உன் வீட்டுக்கு நான் வந்தால் காப்பி, டீ குடிக்க மாட்டேன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு என்னை பால் குடித்தே ஆக வேண்டும் என்று அன்பாகக் கட்டளையிட்டு உபசரிப்பாயே. அந்த அன்புக்காக ஏங்குகிறேன். எப்போது வருவாய்? உன் ஆங்கில புலமையைக் கண்டு வியந்து உனக்கு ஒரு வலைப்பூ பின்ன இருந்தது தெரியுமா உனக்கு? உன்னை வற்புறுத்தியாவது எழுத வைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இறைவன் வேறு விதமாக எழுதிவிட்டானே. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்: நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை அறிவேன் அதற்காக இவ்வளவு அவசரமாக நீ அவனிடம் சென்றிருந்திருக்க வேண்டாம் யாஸ்மின்.

என்னிடம் வந்து ஏன் மன்னிப்பு கேட்டாய் யாஸ்மின்? என்னிடம் சொல்லாமல் போனதற்காகவா அல்லது இறுதி மூச்சின் வழக்கமான நியதிக்காக சம்பிரதாயத்திற்காகவா? ஏன் நீ மட்டும் கேட்க வேண்டும் - நானும் கேட்டு விடுகிறேன். என்றேனும் ஏதாவது உன் மனம் காயப்படும் படி பேசியிருந்தால் கண்டிப்பாக அது என் தவறான வார்த்தையின் தேர்வு என்பதைப் புரிந்து என்னை மன்னித்தும், நான் பல விஷயங்களில் சொல்ல மறந்த நன்றியையும் இப்போது ஏற்றுக் கொள்வாயா?

யாஸ்மின், உனக்கு நினைவிருக்கிறதா நம்முடைய துருக்கி சுற்றுலா? அந்த படங்களில் நாம் இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை இப்போது எடுத்துப் பார்த்தால் என் கண்களில் முட்டிக் கொண்டு வருகிறது கண்ணீர், ஏன்? நீ என் வளைகாப்பில் அணிவித்த அந்த பிரத்யேக நிற வளையலைத் தேடிப்பிடித்து அணிந்து கொண்டேன். நான் அறிவிழந்து நடக்கிறேன் என்கிறார்கள் என் வீட்டார் - உன்னை இழந்ததால்தான் அப்படி என்று அவர்களுக்கு புரிய வைப்பாயா யாஸ்மின்? எதற்கும் தளராத நான் சமயங்களில் சோர்வாக இருந்தால் ஆறுதல் சொல்வாயே? இப்போது வாழ்நாளிலே இல்லாத தளர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறது, நீ எங்கே போனாய் என்னை தேற்றாமல்? மன உறுதி என்று மார்தட்டிக் கொண்டு திரியும் நான் இப்படி ஆனதைக் கண்டு என் தாயும் 'உன் தோழிக்காக வருந்துவது போல் எனது இறப்பில் வருந்துவாயா' என்று பரிதாபமாக கேட்கும் அளவுக்கு என்னை நொறுக்கிவிட்டாயே நியாயமா யாஸ்மின்? என்னிடம் ஒருவேளை நீ சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் மனதை திடப்படுத்தி இருந்திருப்பேன். உன் கடைசி முகத்தை பார்த்திருந்தால் கூட அமைதியாக நிரந்தரமாகத் தூங்கிவிட்டாய் என்று ஆறுதல் பெற்றிருப்பேன். அந்த கொடுப்பினையைக் கூடத் தராமல் சொல்லாமல் சென்றுவிட்டாயே.

உன் இழப்புக்கு பிறகு என் மகளுக்கு நான் சொல்லித் தர ஆரம்பித்துவிட்டேன் நான் இல்லாமல் இந்த உலகை அவள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று. நம்முடைய நெருக்கமானவர்களுக்கு முன்பே நாம் சென்று விட்டால் நன்றாக இருக்கும் பிரிவின் துயரைச் சந்திக்கவே வேண்டாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு, ஆனால் அந்த அதிர்ஷ்டம் உனக்குத்தான் வாய்த்திருக்கிறது. உன்னை பற்றிய செய்தியை நம்முடைய மற்ற தோழிகளுக்குச் சொல்லும் போதுதான் எங்கள் நட்பை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன். நம் நட்பின் ஆயுள் குறைவு என்று தெரிந்திருந்தால் கிடைத்த அற்ப நேரங்களிலும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.

உனக்கு எழுதிய பிறகுதான் எனக்குக் கொட்டி தீர்த்த மன ஆறுதல் கிடைத்திருக்கிறது யாஸ்மின். இந்த கடிதத்தை உன் ஜிமெயிலுக்குதான் அனுப்ப இருந்தேன். ஆனால் நான் என்றோ என் வலைப்பூவில் எழுதிய என் கதையைப் படித்துக் கிண்டல் செய்தாயே அப்போதுதான் தெரிந்து கொண்டேன் உன் மடல் பெட்டியைத் திறக்கிறாயோ இல்லையோ என் வலைப்பூவை படிக்கிறாயென்று, அதனால் எந்த மூலையில் இருந்தாலும் இந்த பாவியின் மடலை படித்துவிட்டு பதில் எழுதுவாய் என காத்திருக்கிறேன் உனக்காக பிராத்தித்தபடி.

Blog Widget by LinkWithin