இதப் பார்த்தாவது திருந்துவாங்களா?

குறும்படமென்றாலே எனக்கு தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணி புரியும் போது என் சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான 'சும்மா', பள்ளி படிப்பின் பாரத்தை பற்றிய 'இந்த பாரம் தேவையா' போன்ற கருத்தாழமிக்க படங்கள்தான் நினைவுக்கு வரும். பல மாதங்களுக்கு முன்பு தமிழனில் ஒளிபரப்பிய குறும்படம் பற்றிய கருத்தரங்கம் மீண்டும் குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஒரு உந்துதலாகயிருந்து, அந்த கருந்தரங்கில் பேசப்பட்ட சில படங்களை இணையத்தில் தேடிப்பிடித்து பார்த்தேன். 'மனுஷி', 'தனியொரு மனிதனுக்கு', 'குப்பை', 'இளைஞா', 'ஒரு மரம் நிழலை தேடுகிறது', 'உயிரே உயிரே', 'செருப்பு', இன்னும் பல கிடைத்தது.

குறும்படம் ஏறத்தாழ ஒரு நல்ல கவிதை வடிவம் பொருந்தியது, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு அதனை அழுத்தமாக விளங்கச் செய்து நம்மை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் வல்லமைக் கொண்டது, சிலது விழிப்புணர்வூட்டும், சிலது மனிதத்தைத் தோண்டும். நான் பார்த்த அந்த தொலைக்காட்சி கருத்தரங்கில் குறும்படம் எடுத்தவர்களின் அனுபவங்களின் பகிர்வு, அவரவர்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றிய விவரிப்பு, விளம்பரப் படத்திற்கும் குறும்படத்திற்கும் உள்ள வேறுபாடு, குறும்படத்தைக் கையாளும் யுக்தி என்று சில பிரபலங்களால் விவாதிக்கப்பட்டது. அதில் 'விஷுவல் மீடியா' படிக்கும் ஒரு மாணவரும் அடக்கம். தமது படிப்பிற்கு இத்தகைய படங்கள் எங்ஙனம் உதவுகிறது என்றும் விளக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவாளர்களுக்காக மலைநாடன் நடத்திய குறும்படப் போட்டியில் எம் வலைப்பதிவர்களும் உற்சாகமாக கலந்துக் கொண்டு பரிசுப் பெற்றது பெருமைக்குரிய விஷயமாகப்பட்டது. பாலபாரதி தனது செல்பேசியிலேயே எடுத்து ஒலி சேர்த்திருந்த திறனும் அவர் கையாண்டிருந்த தலைப்பும் பிரமிக்க வைத்தது. அவரைப் போல பல பதிவர்கள். சமீபத்தில் மங்கையின் குறும்படம் பற்றிய பதிவும் மகிழ்ச்சியளித்தது. குறும்படம் பற்றி பேச, ஒரு பதிவாக எழுத துளிர் விடச்செய்தது இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்' தான் என்று சொல்லலாம்.


தனது வலைப்பூவை வடிகாலென்று பலர் சொல்லிக் கொண்டாலும் பின்னூட்டத்தின் எண்ணிக்கையில் பதிவின் எடையை நிறுத்திப் பார்க்கும் பலருக்கு மத்தியில் பின்னூட்ட பெட்டியே இல்லாமல் உண்மையிலேயே வலைப்பூவை வடிகாலாக வகுத்துக் கொண்ட இசாக்கை நமக்கெல்லாம் ஒரு சக பதிவராக நல்ல கவிஞராக தெரியும் ஆனால் குறும்படம் எடுக்கக் கூடிய ஆவலை தேக்கி வைத்து ஒரு நல்ல படத்தை தரக்கூடியவர் என்று நேற்று அந்த படத்தை வெளியிட்டு திரையிடும் வரையில் தெரிந்திருக்கவில்லை எனக்கு.

அமீரகத்தில் வாழும் ஒவ்வொருவரும் விடுமுறையை எதிர்நோக்கி வருடம் முழுவதும் உழைக்க, கிடைத்த ஒரு மாத விடுமுறை இடைவேளையையும் இதற்காக பயன்படுத்திய அவரைப் பாராட்டும் முன்பு அதனைப் பொறுத்தருளிய அவர் மனைவிக்குத்தான் பாராட்டுகள் அனைத்தும். கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இசாக்குக்கு சேர வேண்டிய பாராட்டை முழுவதுமாக அவர் மனைவிக்கு தந்தமைக்கு காரணமில்லாமலில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் மனதிற்கேற்ப சிறந்த படைப்பைத் தர தனது துணை அந்த படைப்பில் பங்குபெற வேண்டுமென்று அவசியமில்லை தேவையான மனநிம்மதியும் அவருக்கு பக்கபலமான இடையூறில்லாத வார்த்தையும்தான் அவரை உயரத்திற்கே அழைத்து செல்லும். அந்த வகையில் இசாக் அதிர்ஷ்டசாலிதான்.

பத்து நிமிடத்தில் தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதித்திருக்கிறார் - காட்சியாக மட்டுமில்லை நம் மனதிலும். ஒரு குடியின் பயணமென்றதும் பலரும் ஒரு குடிகாரன் குடித்தே தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு படத்தை எதிர்பார்ப்பார்கள். அப்படியில்லாமல் ஒரு குடிகாரனால் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பாதிப்பை அழகாக வடித்துள்ளார். குடியைவிட அந்த படத்தில் எனக்கு அதிகம் தென்பட்டது ஒரு பெண்ணின் அறியாமைதான். எப்படி ஒரு பெண் தன் கணவனைச் சார்ந்தவளாக இருப்பின் அவனுடைய குடியையும் தாங்கிக் கொண்டு தன் வாழ்வின் அர்த்தமாகக் கருதும் தன் குழந்தையையும் இழக்கிறாள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. குடிகார கணவனால் குழந்தையை இழந்த தருணத்தில் அவனை உதாசீனப்படுத்துவதற்கு பதிலாக, குடி வீட்டில் குடிபுகுந்தவுடன் அவள் அவனை அலட்சியப்படுத்தினாலே குடி எந்தக் குடியையும் கெடுத்துவிட முடியாது. இந்த படத்தைப் பார்க்கும் ஒரு குடிகாரனுக்கு தாக்கம் ஏற்படுமோ இல்லையோ குடிகாரர்களின் மனைவிமார்கள் அந்தப் பெண்மணியின் அழுகையின் ஓலத்தைக் காதில் வாங்கும் போது கண்டிப்பாக தனக்கும் இப்படியொரு கதி ஏற்படுமோ என்று ஈரக்குலை நடுங்கத்தான் செய்வார்கள். அதற்காகவாவது இந்தப் படத்தை அமீரகத்தில் வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் இசாக்.

அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் திரையிடவும் கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அமீரகத்தில் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடிகாரனாக குடியையே மறப்பவர்கள் அமீரகத்தில் சொற்பமென்பதால் அதனை இங்கு திரையிடுவதற்கு மாறாக தமிழகத்திலென்று மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் சமூகவியல், 'விஷுவல் கம்யூனிகேஷன்', 'மாஸ்மீடியா' துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்து அவர்கள் நடத்தும் கிராமப்புற பட்டறைகளிலும், நகர்புற சேவைகளிலும் போட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திவிடாமல் என்ன புரிந்தது என்று அவர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் நடத்தி விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அந்தப் படத்தை பார்க்கும் போது ஒரு இயக்குனராக நடித்த கதாபாத்திரத்திலிருந்து தேவையான திருப்தியான உணர்வுப்பூர்வமான நடிப்பை, சரியான முகபாவத்தை கரக்கவில்லையென்ற குறைபாடு இருந்த போதும் கூட அதனைப் பின்னணி குரல்களும் காட்சியமைப்புகளும் ஒவ்வொரு நகர்வுகளும் திருப்தியளித்து ஈடுகட்டுவதாக இருந்தது. அவர் பேசும் போதுதான் ஒரு பத்து நிமிட படத்திலும் இருக்கும் சிரமத்தை, கட்டுப்பாட்டை உணர முடிந்தது. பத்து நிமிட படத்திற்கே இப்படியென்றால் ஒரு முழு நீளப்படத்தையெடுக்க எவ்வளவு மேடு பள்ளங்கள் கடக்க வேண்டியிருக்கும்!?

பலகோடி மணிநேரங்கள், கோடிக் கணக்கில் பணமென்று செலவிடும் வீணாப்போன இயக்குனர்கள் கிடைத்த வாய்ப்பை ஒரு நல்ல படம் தர முயற்சிக்காமல் வியாபார மயமாக்கல் என்று மட்டும் மனதில் விதைத்துக் கொண்டு உருப்படாமல் ஒரு படம் தருவதற்கு பதிலாக இப்படிப்பட்ட நல்ல குறும்பட இயக்குனர்களைக் கொண்டு பல குறும்படங்களை தந்தால்தான் என்ன?

Blog Widget by LinkWithin