பீமா - அப்படியொண்ணும் மோசமில்லை

'ஒருவன் தன் பாதையை தேர்ந்தெடுக்கும் போதே அவனது முடிவு எழுதப்பட்டுவிடுகிறது' என்ற முடிவை நோக்கி நகர்வது 'பீமா'. ஆயுதத்திற்கு நண்பர்- பகைவர், நல்லது- கெட்டது என்று எதுவுமே தெரியாமல் 'என் கடன் பணி செய்துக் கிடப்பதே' என்று தன் அழிக்கும் பணியை ஆயுதம் செய்தே விடுகிறது என்று உணர்த்தும் படம். கதாநாயகனின் பெயர்தான் பீமா என்று நினைத்திருந்தேன் ஆனால் விக்ரமிற்கு மகாபாரதத்தில் வரும் பீமனின் தோற்ற அடிப்படை தருவதால் சேகர் 'பீமா'வாகிறார். எதையுமே புதுசாக சொல்ல முயற்சிக்காத, ஏற்கெனவே பார்த்த பல படங்களின் சாயல். ஒட்டுமொத்த 'ரவுடியிஸ' படங்களின் கலவைன்னு சுருக்கமா சொல்லிடலாம். இயக்குனர் லிங்குசாமியின் 'சண்டைகோழி', 'ரன்' வரிசையில் மற்றுமொரு அடிதடி படம் அவ்வளவே. கொஞ்சம் 'தளபதி' சாயலை தொட முயற்சித்திருக்கிறார்கள் என்று நான் கிசுகிசுக்க, "ச்சீ ச்சீ இல்லவே இல்ல" என்று ஒரு விக்ரம் ரசிகர் பதிலளித்தார் படத்தை சிலாகித்தபடி.

சென்னையைப் பற்றிய ஒரு முகவுரையோடு படம் ஆரம்பிக்கும் போது பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பெரிய ஏமாற்றங்கள் இல்லையெனலாம். என்னவொரு முரணான வாக்கியமென்று நீங்கள் நினைக்கலாம். எழுதிய எனக்கும் அப்படித்தான். பூசிமெழுகும் காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன். பீமா கதாபாத்திரத்திற்கு விக்ரம் சரியானவர்தான். படத்தில் மிகப் பெரிய ஆறுதல் எந்த 'பஞ்ச்' வசனங்களுமில்லை. கதாநாயகன் என்று எந்த 'பில்டப்'பும் இல்லாமல் சாதாரணமாகப் படத்தில் நுழையும் விக்ரம், ஒரே நபர் பலரைச் சுற்றிச் சுற்றி அடிப்பது எரிச்சலைத் தந்தாலும் சண்டை போடுவது 'பீமா' விக்ரம் 'சுள்ளான்' இல்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். படத்தை வண்ணமயமாக மாற்ற ஆங்காங்கே ஒரு பெண்ணைக் கொண்டு நிரப்பும் தமிழ்த்திரை உலகிற்கு இந்தப் படம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? அதனால் திரிஷா அப்பப்ப எட்டிப்பார்க்கிறார். ஒரு அடிதடி மன்னனைக் காதலிக்கும் கல்லூரி மாணவியின் 'டிரெண்ட்' எப்பதான் மாறுமோ தெரியவில்லை. பார்த்தவுடன் காதல் என்ற கண்றாவி வேறு - பரவாயில்லை ஏ.எம். ரத்தினத்திற்காக சகித்துக் கொள்ளலாம். பிரகாஷ்ராஜ் வழமையான கதாபாத்திரமாக வராமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதால் நல்லாவே பொருந்தியிருக்கிறார். சுஜாதாவின் வசனமாக இருந்தாலும் எந்த அசிங்கமான இரட்டை வசனங்களுமில்லை - ஒருவேளை எனக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை. எனக்கு ஏனோ ரகுவரனை பார்த்தால் சுஜாதாவைப் பார்ப்பதாகத் தோன்றியது - மிகப் பரிதாபமான கதாபாத்திரம். என் மகள் கண்களுக்கு ரகுவரன் தோற்றம் எப்போதும் ஷாருக்கானாகவே தெரியும் - இதை ஷாருக்கான் கேட்டால் அழுதுவிடுவார். விக்ரம் படமென்றால் ஆஷிஷ் வித்யார்த்தி தொற்றிக் கொள்வாரோ? கமிஷனராக சில காட்சிகள் வந்தாலும் அவர் நுழைந்த பிறகுதான் 'டுமீல்' சத்தம் அதிகரிக்கிறது.

படத்தின் ஒலிநாடா ரொம்ப காலத்திற்கு முன்பே வந்துவிட்டதால் கேட்டு அலுத்துப் போன நல்ல பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜ் நல்லாவே தட்டியிருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகள் மெனக்கெட்டு வேறு நாட்டில் தேவையில்லாமல் படமாக்கி ஏம். ரத்தினத்திற்கு செலவு வைத்திருக்கிறார்கள் தவிர பிரம்மாண்டமெல்லாமில்லை. சில படங்களில் கதாநாயகியாக வலம் வந்த ஷெரின் பாவம் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு மட்டும். ஒவ்வொரு பாடல் வரும் போதும் எனக்குப் பிடித்த 'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற யுகபாரதியின் வரிகள் சாதனாசர்கம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலை தேடிக் கொண்டே இருந்தேன். வந்தது கடைசியாக, எதிர்பார்ப்பை தகர்த்து.

இந்தக் குழுவிடம் வேற என்ன புதுமையை எதிர்பார்க்கச் சொல்றீங்க? ஒரு சண்டை, ஒரு பாடல் கொஞ்சம் வசனமென்று மாறி மாறி சரியான தமிழ் மசாலா படங்களில் ஒன்று. பொழுதை மட்டும் போக்க, மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி. விறுவிறுப்பான 'போர்' அடிக்காத படம். என்ன, திரைகதையை சொதப்பியிருக்கிறார் லிங்குசாமி. போகட்டும் அதையும் பொறுத்துப் போகலாம்- யாருக்காக எல்லாம் ஏ.எம். ரத்தினத்திற்காக. விக்ரம், லிங்குசாமி தங்கள் சம்பளத்தையே விட்டுக் கொடுத்து வெளிவந்துள்ளது 'பீமா'. 'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக் கொண்டிருந்த ரத்தினம் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தால் விழுந்த அடி இந்த அடிதடி படத்தில் மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் ஜீவி நிலை வந்துவிடும் அபாயமுள்ளது. அவர் வறுமையை ஈடுகட்டவாவது படம் 'ஆஹா ஓஹோ' என்று ஓட வேண்டும். 'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே பெரிய அளவில் ஓட வைத்த நம் மக்கள் இதைச் செய்துவிட மாட்டார்களா என்ன? 'பீமா' படத்தில் 'சுப' முடிவு இல்லாததை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்த முடிவுதாம்பா சரி. ஓடாதோன்னு பயந்து இன்னொரு முடிவை ஒட்டவைத்தால் அபத்தமாகிப் போகும். மொத்த படமே அபத்தம் இதுல தனியா இதுவேறயான்னு கேட்காதீங்க நான் ஜூட். ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க.

21 மறுமொழிகள்

சொன்னது...

//மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி.//
இப்படி சொன்ன பிறகு படத்தை தியேட்டரில் போய் பார்க்கச் சொல்ல எப்படி மனம் வருகிறது?.
'யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்' என்கிற பாணி நல்லதே இல்லை.

சொன்னது...

என்ன சுல்தான் பாய் இப்படி புரிஞ்சுக்கிட்டீங்க. துன்பமெல்லாம் பெற மாட்டீங்க. 'சிவாஜி' பார்த்தீங்க தானே? அதை பார்க்கிற மன பக்குவம் வந்துட்டுதுல வேறென்ன :-)

சொன்னது...

\\பீமா - அப்படியொண்ணும் மோசமில்லை"\\

சரி..பார்த்துட்டா போச்சு :))

சொன்னது...

இதெல்லாம் உங்களுக்கே நியாயமா பட்டுதுன்னா சரிதான். நான் ஒண்ணும் சொல்ல விரும்பலை :-(

Anonymous சொன்னது...

wonderful critics, but
i wana to see the movies b'cse of Kasi/Peethamagan vikram

S.Ravi
kuwait

சொன்னது...

//ஆனா மறக்காம படத்தை திரையரங்கில் பார்த்துடுங்க//

மத்தது எல்லாம் புரிஞ்சிருச்சி. இதுதான் புரியல. படத்தோட விநியோக உரிமை எதுவும் வாங்கியிருக்கீங்களா என்ன?

சொன்னது...

பாருங்க கோபி. பார்த்துட்டு எழுதுங்க.

பினாத்தல் ரொம்பவே நொந்து நூடில்ஸா போயிட்டீங்க போல. பாலிசி எடுத்துக்கோங்க 'டெக்கிட் ஈஸி'ன்னு. :-)

ம்ம் விக்ரம்காக பார்க்கலாம் ரவி.

எந்த உரிமமும் வாங்கலங்க, எல்லாம் ஒரு நல்லெண்ணம்தான் :-0

சொன்னது...

//'இந்தியன்', 'தூள்', 'கில்லி' என்று தூள் படுத்திக் கொண்டிருந்த ரத்தினம் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தால் விழுந்த அடி இந்த அடிதடி படத்தில் மீட்டெடுக்க வேண்டும்//

பாய்ஸ் மட்டுமே காரணமில்லை. முதல்ல இந்தி "முதல்வன்" எடுத்து ஷங்கர் ஒழிச்சாரு. பின்னே அதுலேர்ந்து உங்களை மீட்க்கிறேன்னு சொல்லி பாய்ஸ் எடுத்து மீண்டும் ஒழிச்சாரு. பிறகு அவரோட சிரேஷ்ட புத்திரன் "அடுத்தவன நம்பாதிங்க அப்பா, என்னைய நம்புங்க, உங்கள கரை சேக்குறேன்"னு சொல்லி "எனக்கு 20 உனக்கு 18" எடுத்து ஒழி ஒழின்னு ஒழிச்சாரு. அது மட்டும் போதாதுன்னு சின்னக்கொழுந்து ரவிகிருஷ்ணாவை வச்சு பெரிய கொழுந்து திரும்பவும் "கேடி"ன்னு ஒரு படமும் எடுத்து அப்பனை ஒண்ணும் இல்லாத ஓட்டாண்டி ரேஞ்சுக்கு ஆக்கினாங்க. இப்போ ஏ.எம்.ரத்னம் பெரிய கொழுந்தைப் பாத்து பாடுற பாட்டு "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?"

Anonymous சொன்னது...

சுல்தான் பாய்

//மூளையை கழற்றி வைத்து படத்தைப் பார்ப்பவர்களுக்கு நல்ல தீனி.//

அப்படின்னு சொல்லிட்டு படத்தை திரைய்ரங்கத்துல பார்க்கவும் சிபாரிசு செய்றாங்கன்னா உங்களுக்குப் புரியலையா? கழற்றி வச்சுட்டு படம் பார்த்துட்டு திரும்ப மாட்டாமலேயே விமர்சனமும் எழுதியிருக்குறது?!!

ஏ.எம் ரத்னத்துக்காகவாவது படம் ஓடணுமாம். என்னமோ அவரு தமிழ் திரைப்படத்துறைக்கு நல்ல படமா எடுத்துக் கொடுத்து ஓய்ஞ்சு போன மாதிரி இவங்க ஓய்ஞ்சு போறது ஏன்னுதான் எனக்குப் புரியலை.

விட்டா, 'ஐயோ பாவம்! பணக்காரரா இருந்தாரு. ரேசுல எல்லாப் பணத்தையும் விட்டுட்டாரு. இவர் நல்லா இருக்குறதுக்காகவாவது இவர் இப்ப பணம் கட்டியிருக்குற குதிரை ஜெயிக்கணும்'னு சொல்வாங்க போல. தேவுடா! காப்பாத்துப்பா - பீமா படத்துலேருந்தும் பட விமர்சனங்கள்ல இருந்தும்

சாத்தான்குளத்தான்

சொன்னது...

//'சிவாஜி' பார்த்தீங்க தானே? அதை பார்க்கிற மன பக்குவம் வந்துட்டுதுல வேறென்ன//
தியேட்டரில் போய் பார்க்கலையே. ஏதோ ஒரு பேருந்தில் பார்த்தேன்.
பில்லா, சிவாஜி எல்லாம் தியேட்டரிலா - ஊஹூம்.

சொன்னது...

ஆமா கேவிஆர் மீட்டெடுக்கிறேன்னு எல்லாரும் சேர்ந்து முக்காடு போட வச்சிட்டாங்க பாவம்.

வாங்க ஆசிப் எல்லாமே உங்க பயிற்சிதானே. அப்ப இந்த மாதிரிதானே எழுத முடியும் ;-)

அப்ப இந்த படத்தையும் ஓடுற பேருந்திலேயே பார்த்திடுங்க சரியாப் போச்சு.

சொன்னது...

//'எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்' என்ற யுகபாரதியின் வரிகள் சாதனாசர்கம் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலை தேடிக் கொண்டே இருந்தேன். வந்தது கடைசியாக, எதிர்பார்ப்பை தகர்த்து.//

முதல் மழை பாடலை பற்றி பதிவிடுவீர்கள்னு எதிர்பார்த்தேன்.
நல்லபதிவு.

சொன்னது...

எல்லாம் சரி ஆனால் வசனம் சுஜாதா இல்ல...
எஸ். ராமகிருஷ்ணன்..
வழக்கம் போல இந்த படத்திலும் சொதப்பி விட்டார்...

சொன்னது...

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. 7 கோடி பணம் போட்டு 10 கோடி லாபம் கிடைக்க படம் எடுக்கிறார்கள். 10 கோடி கிடைத்துவிடும். சும்மா இருக்கவேண்டியது தானே. அடுத்து 15 கோடி இலக்கு வைத்து 10 கோடி செலவளித்து படம் எடுப்பார். அது மேற்கொண்டு 3 கோடி நட்டத்தில் வந்து விடும். இதெல்லாம் தேவையா? என்னிடம் 7 கோடி இருந்தால் கண்டிப்பாக படம் தயாரிக்கமாட்டேன். ஆனால் இப்போது என்னிடம் உள்ளெதெல்லாம் 4700 ருபாய் கடன் மட்டுமே.

சொன்னது...

ஆமாம் கார்த்திக் 'முதல் மழை'யும் நல்ல பாடல்தான். பா.விஜய் எழுதியதுன்னு நினைக்கிறேன். தாமரை எழுதிய ஒரு அழகிய பாடலும் உண்டு.

கணேசன், நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். ஆனா சுஜாதான்னு பார்த்த நினைவு.

சரியா சொன்னீங்க தமிழ் முகம். என்ன செய்றது திரைத்துறையே ஒரு சூதுதானே.

maravantu சொன்னது...

//'சந்திரமுகி', 'சிவாஜி', 'பில்லா' என்ற படங்களையே பெரிய அளவில் ஓட வைத்த நம் மக்கள் இதைச் செய்துவிட மாட்டார்களா என்ன? //

சந்திரமுகி நல்ல படம் தான்.
சிவாஜி & பில்லா இன்னும் பார்க்க வில்லை.

சிவாஜி பெரிய அளவில் ஓடியது என்று உங்களுக்கு யார் சொன்னது ?

ஒரு புளோல அடிச்சி விடக்கூடாது :P

Anonymous சொன்னது...

//7 கோடி பணம் போட்டு 10 கோடி லாபம் கிடைக்க படம் எடுக்கிறார்கள். 10 கோடி கிடைத்துவிடும்//

அன்புள்ள தமிழ்முகம்

7 கோடி பணம் போட்டால் , படம்
வெளிவருவதற்குள் அது வட்டியுடன் சேர்த்து 12 கோடிக்கு மேல் போய்விடும்.

சொன்னது...

உங்களுக்கு மனசு என்ன கல்லா? கூப்பிட்டு ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்!!!

சொன்னது...

//சந்திரமுகி நல்ல படம் தான்.// அப்படியா மரவண்டு? எனக்கு தெரியாதே.

//சிவாஜி & பில்லா இன்னும் பார்க்க வில்லை.// நல்லது.

//சிவாஜி பெரிய அளவில் ஓடியது என்று உங்களுக்கு யார் சொன்னது ? // ஓடியது என்று சொல்வதைவிட ஓட்டினார்கள் என்று சொல்லலாமா? விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை மீட்க பல காட்சிகளை அதிக விலைக்கு நுழைவு சீட்டை விற்று பணம் பண்ணினார்கள்.

ஒரு புளோல அடிச்சி விடக்கூடாது :P// அப்படியெல்லாம் அடிச்சி விட மாட்டோம்ல - கூகிள் ஆண்டவர் கிட்டயும் கேட்டு பாருங்க சொல்வார்.

//7 கோடி பணம் போட்டால் , படம்
வெளிவருவதற்குள் அது வட்டியுடன் சேர்த்து 12 கோடிக்கு மேல் போய்விடும்.// அனானி வட்டியில் ரொம்ப அனுபவம் போலிருக்கே :-)

//உங்களுக்கு மனசு என்ன கல்லா? கூப்பிட்டு ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்!!!// உங்கள தேடி பார்த்தேன் கையில் மாட்டல அதான் ;=)

Anonymous சொன்னது...

well and wish the same iam new to these .commanly all your comments are perfect and acceptable

zakkir.
ksa

சொன்னது...

படத்தை முதல் நாள் பாத்துப்புட்டு நொந்து நூடுல்ஸ் ஆனது எனக்குத்தான் தெரியும்...

Blog Widget by LinkWithin