Sunday, November 23, 2008

கேள்விகளால் ஒரு வேள்வி

துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.

இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் அது கேள்வி- பதில் நேரம் என்று தெரிந்தது. முதல் கேள்வியை முத்துகுமரன் சுவாரஸ்யத்துடன் ஆரம்பித்தார். 'புதுக்கவிதை எழுதுபவருக்கு மரபுக் கவிதை தெரிந்திருக்க வேண்டுமா?' என்று கேட்க. ’இப்படி உங்களுக்கு தோன்றுவதே பெரிய விஷயம்தான்’ என்று தொடங்கிய கவிக்கோ புதுக்கவிதையை பெரும்பாலோர் வசனக்கவிதையாக கருத்தை முதலிடம் கொண்டு எழுதிவிடுகிறார்கள். கருத்தை மட்டும் கொண்டது கவிதையாகிவிடாது நயமும் அவசியமென்றார்கள்.


ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுத் துளைத்ததற்கெல்லாம் ஊற்றாக தனது அனுபவத்தை வடித்தார்கள் கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள். மனிதனை வரையறுக்க ஒரு கூட்டம் கூடியதாம் அதில் இரு கால் மிருகம் தான் மனிதன் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று ஒரு கோழியை கொண்டு வந்து ‘அப்ப இது மனிதனா’ என்று கேலி செய்ய, சரி இறகில்லாத இரண்டு கால் பிராணி தான் மனிதன் என்று முடிக்கும் முன் மறுபடியும் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இறகில்லாத கோழியை மறுபடியும் கொண்டு வந்து கேள்வி கேட்க - மனிதனை வரையறுக்க முடியாது என்று முடிவானதாம். அதே போல் தான் கவிதையையும் வரையறுக்க முடியாது என்று முடித்தார்கள்.

கூட்டத்தில் ஒருவர் நீங்கள் காக்கை பற்றி எழுதியிருந்தீர்கள் அந்த கருத்து இங்கிருக்கும் பலருக்கு ஒப்புதலாக இருக்காது அதனை கேட்க விரும்புகிறேன் என்றதும். பல விஷயங்களை பல தளத்தில் பல ஆண்டுகளாக எழுதித் தள்ளுபவருக்கு அது எப்படி நினைவிருக்கும் ஆகையால் என்ன எழுதியிருந்தேன் என்று கேட்டவரையே திரும்பி வினவ. அவரும் அவருக்கு நினைவூட்டுவதாக அதனை எடுத்து தர, புரிந்துக் கொண்ட கவிக்கோ அவர்கள் விவரித்தார்கள். அவர் கறி வாங்க சென்றிருந்த போது ஒரு காக்கை சக காக்கையை சாப்பிட விடாமல் கொத்துவதை கண்டு வியந்தவருக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றியதாம். காக்கையென்றாலே ஒரு வாய் சோறு கிடைத்தாலும் எல்லா காக்கைகளையும் அழைத்து உண்ணுமே இது என்ன வகையென்று யோசிக்கும் போது அவருக்கு பழங்காலத்தில் அரசர்களின் வினை நினைவுக்கு வந்ததாம். அரசர்கள் தான் உண்ணும் முன்பு அதில் விஷம் கலந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதற்காக நிறைய பொருட்களும் தங்கமும் தந்து தன்னுடனே ஒரு ஆளை தமக்காக முதலில் சாப்பிட்டு அதில் விஷமில்லாத பட்சத்தில் அரசர்கள் உண்ணுவார்களாம். சிலர் இந்த விஷயங்களுக்காக மைனாவையோ அல்லது வேறு பிராணிகளையோ வளர்ப்பார்களாம். விஷத்தை அருகில் கொண்டு சென்றாலே மைனாவின் கண்கள் சிவந்துவிடுமாம். அந்த விஷயம்தான் இந்த காக்கையின் செயலும் - காக்கை இயற்கையான பண்டத்தை பகிர்ந்து உண்ணாது மனிதன் படைத்த செயற்கையான உணவின் மீது நம்பிக்கையில்லாமல் சக காக்கைகளை அழைத்து உண்ணக் கண்டு பிறகு தின்று கொள்கிறதாக அவர் உணர்ந்ததாக கூறினார். அவர் கூற்றில் உண்மையிருக்கிறதோ இல்லையோ சிந்தனை மிகவும் வித்தியாசமாக தோன்றியது.

தமிழை செம்மொழியாக்குவதின் பயன்களை விளக்கும் போது இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும், பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் - தமிழ் இலக்கியங்கள், பண்பாட்டுக் கருத்துக்கள், கலாச்சாரம் இவற்றை விளக்குவதற்காக தமிழ் தெரிந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும். ஓய்வு பெற்றவர் தமிழ் அறிஞர்களுக்கு கூட நல்லவேளை வரக்கூடும் என்று நான் அறியாத விஷயங்களையும் அறிய வைத்தார்.

படிமம், குறியீடு பற்றி பேசும் போது ’பெண்ணே உன் கண்கள் மீன்கள்’ என்று வடித்த வாக்கியத்தில் கூட பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதை கூறினார். கண்கள் மீன் வடிவில் இருப்பதால் சொல்லியிருக்கலாம் அல்லது வலை வீசச் சொல்கிறதாக எடுத்துக் கொள்ளலாம், எப்போதுமே தண்ணீரில் இருக்கிறது என்பதாகவும் பொருட்கொள்ளலாம் என்று ஒரே விஷயத்திற்கு பல கோணங்கள் உண்டு வாசிப்பவரின் அனுகுமுறையை பொருத்தே குறியீடுகளை புரிந்துக் கொள்ள முடியுமே தவிர எழுதுபவர் எல்லாவற்றையும் விளக்கி எழுத முடியாது அப்படி விவரித்திருந்தால் அது கவிதையல்ல என்பதற்கு உதாரணமாக

‘என் மனம்
அவளை நினைப்பேனென
அடம்பிடிக்கிறது - நான்
அதட்டினால் அழுகிறது’

என்று சொல்லும் போது மனதை படிமமாக்கி குழந்தையாக்கி கவிஞர் சொல்ல வருவது சிறப்பே தவிர மனம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது நான் அதட்டினால் அழுகிறது என்று விளக்குவதில் கவிதை காணாமல் போய்விடுகிறது என்று அவர் பாணியில் விளக்கினார்.

கவிஞர்கள் என்றாலே கொஞ்சம் கோபம் இருக்கும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்தான் எழுத்தில் வீரியமிருக்கும், வார்த்தைகளில் உண்மையிருக்கும் என்பதற்கு கவிக்கோ ஒரு சிறந்த சான்று. ‘வணக்கம்’ பற்றி எழுந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் சொல்லும் போது அவரை பேசவிடாமல் இடைமறித்து பேசிக்கொண்டே போனவரிடம் ‘நான் பேசி முடிக்கும் முன்பே நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டு பேசிக் கொண்டே போனால் எப்படி’ என்று கண்டிப்பாக கேட்ட குரலில் நியாயமிருந்தது. அதையும் தொடர்ந்து விடாது இடைமறித்ததால் ஒலிவாங்கியை கீழே வைத்துவிட்டு ’நீங்களே பேசி முடியுங்கள்’ என்று சொன்னதில் அவர் கோபம் தெரிந்தது. அதனை தொடர்ந்து அவர் தந்த விளக்கம் அற்புதமாக அமைந்தது. எந்த ஒரு வார்த்தைக்கும் பல பொருள் புரிந்துக் கொள்ளலாம். ’கோ’ என்றால் அது மாடு என்றும் பொருள் தரும் அரசன் என்றும் பொருள் தரும். வீடு என்ற சொல் பின்னாட்களில் கண்டுபிடித்த சொல், ஆரம்பத்தில் கோவில் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரசன் வசிக்குமிடம் கோவில் ஆனது. அந்த காலத்தில் அரசரை தெய்வமாக கருதி வந்ததால் அரசர் வசிக்குமிடம் கோவிலானது பின்பு வேறுபடுத்த வீடு தோன்றியிருக்கலாம். மொழி என்பது காலத்தோடு வளர்ந்துக் கொண்டே உருமாறிக் கொண்டே போகும் விஷயம். ஆகையால் ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே அப்படியிருக்க ஏன் அந்த நிய்யத்தில்லாத வெறும் வார்த்தைக்கு புதிதாய் அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த சொல் பிடிக்கவில்லையா சொல்லாதீர்கள் ஆனால் மற்றவரையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீ தவறு செய்கிறாய் என்று எந்த அளவுக்கு தவறு என்று தெரியாமலே சுட்டிக் காட்டாதீர்கள். இஸ்லாத்தை முதலில் சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் பிறகு வாதிடலாம் என்றார்கள். அவர் சொன்னது சத்தியமான வார்த்தையாகப்பட்டது எனக்கு. ’கடவுளின் முகவரி’ அறிந்தவருக்கு இதைக் கூட புரிய வைக்க முடியாதா என்ன?

அவரிடம் கேட்க என்னிடம் இரண்டு கேள்விகள் இருந்தது. ஒன்று இக்காலத்து பெண்ணியவாதி என்ற பெயரில் சிலரும் மற்றவர்களும் படைப்பில் நாக்கூசப்படும் சொற்களைக் கூட பாவித்து எழுதுகிறார்களே, சர்ச்சைக்குரியவர்களாகி எளிதில் பிரபலமாகும் குறுக்கு வழி கொண்டவர்களை பற்றிய அவருடைய கருத்து. இதனை வேறு விதமாக அழகாக நண்பர் ஷாஜி கேட்க, கவிக்கோ அவர்கள் அதனை எதிர்த்து வருவதாகவே சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அது நிலைக்காது என்றும் ஆருடம் சொன்னவர்களை அய்யனார் நண்பர் என்று எங்களிடம் அறிமுகமான அசோக் ’அதில் என்ன தவறு? கவிஞர் அவர்களையே கொண்டாடிக் கொள்கிறார்கள்’ அவ்வளவுதான் என்று எதிர்வாதம் செய்ய. ’கொண்டாடிக் கொள்ளட்டும் ஆனால் உடல் உறுப்புக்கு அவசியமென்ன’ என்று கவிக்கோ கேட்டதற்கு. அவர் எதை சொல்கிறார் என்று தெரிந்தும் கவிஞர்கள் எல்லா உறுப்புகளை பற்றியும்தான் பேசுகிறார்கள் எது ஆபாசமென்று யார் தீர்மானிப்பது என்று கொதித்தெழுந்தார் அவர், அதன் பின் நிலைமை சீரானது.

என்னுடைய இரண்டாவது கேள்வி, 'தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிக்கோ மற்றவர்களை விட எப்படி தனித்து நிற்கிறார்கள்’ என்பது. இந்த கேள்வியை தனியாக கேட்க வேண்டிய அவசியம் வரவில்லை. அது சொல்லாமலே எனக்கு புரிந்துவிட்டது.

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க கவிக்கோ தான். கேட்டுவிட்டார்களே என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல் இரசிக்கும் படியானதாகவும் அமைந்திருந்தது அவருடைய ஒவ்வொரு பதிலும். கவிதை தெரியாதவர்கள் இக்கூட்டத்ததிற்கு வந்திருந்தால் கூட கவிதைப் பற்றிய ஆர்வம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

16 comments:

Anonymous said...

இலக்கிய விழா என்றாலே இரம்பம், அறுவையாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு நாமம் போடும் வகையில் மிக சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இந்த விழா.
எவ்வளவு அருமையாக சொல்லிக்கொண்டு வந்துவிட்டு கடைசியிலே கழனிப்பானையில் கையை விட்டிடீங்களே!! :-(

King... said...

பகிர்வுக்கு நன்றி...

Anonymous said...

சென்னையில் இருந்தபோது, இது போன்ற விழாக்களை நான் எப்போதுமே தவறவிட்டதில்லை. விழாவில் பலர் சொதப்பினாலும் யாராவது ஒருவர் அருமையாக பேசி, கஷ்டப்பட்டு பஸ்சுல வந்தது வீண்போகல என்ற எண்ணம் ஏற்படுத்துவார்கள்.

Anonymous said...

//துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள்.//

மிக்க நன்றி, பேரவை பொறுப்பாளர்கள்

அப்துல் குத்தூஸ் said...

// ‘வணக்கம்’ என்ற வார்த்தை வணங்குதலாகிவிடாது. தொழுகைக்கு நேரமாகிவிட்டது தொழுது விட்டு வருகிறேன் என்றுதானே சொல்கிறோம் மாறாக வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லையே//

கேள்விக்கு சம்பந்தமே இல்லாத கோவிலுக்கு சொன்ன விளக்கம் அளவிற்கு கூட வணக்கத்திற்கு கூறவில்லை.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையில் முதன்மையானது “வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்பதாகும். இதில் வணக்கம் வருகின்றதே? இதற்கு என்ன விளக்கம் கவிக்கோ தரப்போகின்றார்?

ஆனால், சம்பந்தம் இல்லாமல் தொழுகையைப் போற்று ஏன் குழப்பிக் கொண்டார்?

பதில் கிடைக்குமா?

(நிச்சயமாக நான் இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை, உங்களின் இந்த பதிவைக் கொண்டே எனது கேள்விகள் அமைந்துள்ளன).

Jazeela said...

கழனிப்பானையில் கையா? ஒழுங்கா படிங்க அனானி. இலக்கிய விழாவை அறுவை என்று சொல்பவர்களுக்குன்னு தானே சொல்லியிருக்கேன்? ஆமா, இந்த கருத்தை சொல்ல ஏன் அனானியா வரீங்க? எந்த கருத்தை சொன்னாலும் தைரியமாக தெளிவாக உங்க பெயரிலேயே வந்து சொல்லுங்க. நாங்க ஒண்ணுமே நினைச்சுக்க மாட்டோம்.

நன்றி கிங்.

வாங்க நிலோபர், உங்க பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே?

பேரவை பொறுப்பாளர்கள் வந்து வாசித்தமைக்கு நன்றி. :-)

அப்துல் குத்தூஸ், அந்த 'வணக்கம்' பற்றிய கேள்விக்கான பதில் விரிவாக நண்பன் பதிவில் இருக்கு http://nanbanshaji.blogspot.com/2008/11/blog-post_4029.html
படித்து தெளிவு பெறுங்கள்.

அப்துல் குத்தூஸ் said...

கீழ் காண்பவை நண்பர் தளத்திலிருந்து வணக்கம் என கூறுவதற்காக கேட்கப்பட்ட கேள்வி. இதைப்போன்ற கேள்வியும்தான் என்னுள்ளும் எழுந்தது. இதற்கு உங்களின் பதில் என்ன?

masdooka said...
இதற்கு முன்னரும் தங்கள் பதிவை பார்வையிட்டிருந்தாலும், இப்போது தங்கள் பதிவில் (இஸ்லாமிய)முன்னேற்றம் தெரிகிறது மகிழ்கிறேன்.
அடுத்து
//வணக்கம் குறித்து எனது நிலைபாட்டை ஏற்கனவே தெளிவு படத்திவிட்டேன்//
என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்கள் நிலைபாடு என்ன? என்பதல்ல பிரச்சினை. வணக்கம் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன? என்பது தான் கேள்வி.

இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை மற்றவர்களைப் பின்பற்றி மனிதனுக்கு மனிதன் செய்யலாமா? உடனே, 'வணக்கம்' செய்யப்படுவதில்லையே சொல்லாத்தானே படுகிறது எனத் தாங்கள் வாதிடலாம்.ஒரு பெண் அந்நிய ஆணிடம் 'நீங்கள் எனது கணவர் மாதிரி' என்று சொன்னாலோ அல்லது ஒரு ஆண் அந்நிய பெண்ணிடம் 'நீங்கள் எனது மனைவி மாதரி'என்று சொன்னாலோ இங்கு சொல்லத்தானே படுகிறது இல்லற வாழ்க்கையா நடத்துகிறார்கள் எனக் கேட்பது எப்படி எவ்விதம் தவறானதோ அப்படித் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாதத்தில் நீங்கள் என்னை ஒருகால் மிகைக்கலாம்.ஆனால் வணக்கம் எனக் கூறுவது ஓர் அந்நிய கலாச்சாரம் என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள். ஏனெனில் முகமன் கூறும் முறையாக இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருப்பது 'அஸ்லாமு அலைக்கும்' என்னும் அழகிய முகமன் தான. சரி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எப்படி சொல்வதாம் என அடுத்த வினாவைத் தாங்கள் தொடுப்பது புரிகிறது. பிறமதச் சகோதாரர்கள் நமக்கு சலாம் சொன்னால் நாமும் பதிலுக்கு அதே முறையில் அழகாக திருப்பி பதில் சொல்வோம். நமது ஸலாம் கூறும் முறையை விரும்பாத அல்லது தெரியாத பிற சமய சகோதர்களிடம் 'வாழ்த்துக்கள்' எனக் கூறலாமே.
அறிஞர் நன்னன் அழகாக இதை விளக்கியுள்ளாரே. அறிஞர் நன்னன் அவர்களுக்கு இருக்கும் பக்குவம் நமக்கு ஏன் இல்லாமற்போனது.
ஒரு நபி மொழியை தங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
' யார் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவர் அல்ல' என்பது நபிமொழி். மற்றொரு அறிவிப்பில் அவர்களையே சேர்ந்தவர் என்னும் வாசகமும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

1:37 AM

Jazeela said...

நானும் வாதம் வேண்டாமென்றுதான் உங்களுக்கு தெளிவான சுட்டியை தந்தேன். ஆனால் அப்துல் குத்தூஸ், நண்பரின் பதிவில் வந்த பின்னூட்டத்தை இங்கு போட்டு //ஒரு பெண் அந்நிய ஆணிடம் 'நீங்கள் எனது கணவர் மாதிரி' என்று சொன்னாலோ அல்லது ஒரு ஆண் அந்நிய பெண்ணிடம் 'நீங்கள் எனது மனைவி மாதரி'என்று சொன்னாலோ இங்கு சொல்லத்தானே படுகிறது இல்லற வாழ்க்கையா நடத்துகிறார்கள் எனக் கேட்பது எப்படி எவ்விதம் தவறானதோ அப்படித் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
// அப்படித்தான் இதையும் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடிப்பவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட விதண்டாவாதத்திற்கு பதில் கேட்டால் என்ன செய்வது? கவிக்கோ சொன்னதற்கும் இந்த அர்த்தமற்ற வாதத்திற்கும் பதில் வேண்டுமா என்ன? ஒரு முன்முடிவோடு இப்படித்தான் என்று தமக்கு தோன்றுவதை சரியென்று நினைத்துக் கொண்டால் என்னத்தான் எடுத்துரைத்தாலும் ஏறாது. நமது நாயகம் (ஸல்) அன்றே சொல்லிவிட்டார்கள். நம் இனத்தினரே பல கிளையாக பிரிந்து வலுவில்லாமல் போவார்கள் என்று அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு இப்படி தொங்குவதே தவறில்லையா? இஸ்லாமியர் என்றால் சகிப்புதன்மை முதலில் வேண்டும். அது யாருக்கும் இருப்பதில்லை. எப்படி உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம் என்று சொல்கிறோமோ அது போல எடுத்துக் கொள்ளுங்கள். 'வணக்கம்' சொல்பவர்கள் சொல்லிட்டு போகட்டுமே 'கூடாது' என்று சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். இறைவனின் தூதரே மறுபடியும் தோன்றி உங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை தந்தாலும் ஒத்துக் கொள்ளும் கூட்டமிங்கில்லை காரணம் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லை நாம். ;-(

c g balu said...

"கவிக்கோ. கவிதையை வரையறுக்கக் கேட்டதற்கு, அதை புரிய வைக்க ஒரு குட்டிக் கதை சொன்னார்கள்........"
கவிக்கோ நிகழ்சியில் தாங்கள் கலந்து கொண்டு அதை ஆர்வமாக எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். கவிதை என்பதை அப்துல் கலாம் அவர்கள் இப்படி விவரிக்கிறார்: "சந்தோஷமான சமயங்களில் துக்கத்தையோ அல்லது மகிழ்சியோ வெளிபடுத்துவது.

திங்கள் சத்யா said...

தலைப்பே கவிதையாக இருக்கிறது. மிகவும் ரசிக்கத்தக்க அள‌வில் ரசனையுடன் பரிமாறி இருக்கிறீர்கள். சிறு பத்திரிகைகளில் நீங்கள் கட்டுரைகள் எழுதலாம். அதற்கான தகுதி, நேர்மை(அரட்டை அரங்கம்) எல்லாமே உங்களிடம் அபரிமிதமாக இருக்கிறது. இன்றைக்கு இதைப் படித்து சற்று பொறாமையாகவும், ரொம்பப் பெருமையாகவும் இருக்கிறது.

அடுத்த முறை உங்களுடைய பதிவு யாரோ ஒருவரின் நேர்காணலாக இருக்கட்டும். நல்ல தமிழில் சொல்வதென்றால் அடிச்சி தூள் கிளப்புங்க...

அந்தப் பொறம்போக்கு அனானிமஸ் கமன்ட்டை நீங்கள் அனுமதித்திருக்கவே வேண்டாம். மேலும், "வணக்கம் குறித்து மீண்டும் மீண்டும் நீங்கள் வாதம் செய்ய வேண்டாம்" என்பது என்னுடைய கருத்து.

கவிக்கோ சொல்வதுபோல், வாசகனுக்கு எல்லாவற்றையும் ஒரு கவிஞன் புரியவைத்துக்கொண்டு இருக்க முடியாது. உங்களுடையது கவிதை. வெறுமனே உரைநடை இல்லை.

ஜெசிலா! எனக்கு எந்த நெருடலும் இல்லாமல் தெளிவாகச் செல்கிறது கட்டுரை. புரியாதவர்களை தினத்தந்தி வாசிக்கச் சொல்லுங்கள்.

இந்தப் பின்னூட்டத்திற்காக நன்றி போட்டு அனானிமஸ்களின் வாயைக் கிளற‌வேண்டாம்.

தேவன் மாயம் said...

ஒவ்வொரு நபருக்கும்
அவரவர் கவிதை
குழந்தை போன்றது!
குழந்தைகளின் அழ்குக்கு
அளவுகோல் ஏது?
உங்கள் பதிவு
அருமை.
தேவா.

தேவன் மாயம் said...

ஒவ்வொரு நபருக்கும்
அவரவர் கவிதை
குழந்தை போன்றது!
குழந்தைகளின் அழ்குக்கு
அளவுகோல் ஏது?
உங்கள் பதிவு
அருமை.
தேவா.

Jazeela said...

திங்கள் சத்யா - அதென்ன திங்கள் சத்யான்னு புதுப் பெயர்? ஆமா பாலா
//சிறு பத்திரிகைகளில் நீங்கள் கட்டுரைகள் எழுதலாம். // இப்படி எழுதியிருக்கீங்களே? அப்ப பெரிய பத்திரிகை பக்கமெல்லாம் வந்துடாதீங்கன்னு சொல்றீங்களா? :-)

//அடுத்த முறை உங்களுடைய பதிவு யாரோ ஒருவரின் நேர்காணலாக இருக்கட்டும்// இது என்ன கட்டளையா இல்ல வேண்டுகோளா? :-)

//இந்தப் பின்னூட்டத்திற்காக நன்றி போட்டு அனானிமஸ்களின் வாயைக் கிளற‌வேண்டாம்// இப்படி சொன்ன பிறகு நன்றி சொல்லாம இருக்க முடியுமா? ரொம்ப நன்றிங்கோ :-)

Jazeela said...

வாங்க தேவா. அப்ப கவிதை அழுமா? பலர் கவிதை அழ வைக்குதுன்னுல சொல்றாங்க :-)

Anonymous said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். நெடு நாள் கழித்து உங்கள் பதிவை வாசித்த அனுபவம் மிக நன்றாக இருந்தது.

நீண்ட நாட்களாக ஏன் எழுதவில்லை..

நிறைய எழுதுங்கள். படிபதற்கு நாங்கள் இருக்கின்றேம்.

ஒரே ஒரு வேண்டுகோள் : உங்கள் எழுத்துக்களை தமிலீழில் இணைத்தீர்கள் என்றால், எங்களை போன்றவர்கள் படிப்பதற்கு வசதியாக இருக்கும். நான் தமிலீழை தினமும் பார்ப்பேன் அதனால்தான். (வேண்டுகோள் மட்டுமே)

சிம்ம‌பார‌தி said...

இந்த அமீரகத்தில் 'வானலை வளர்தமிழ்' எனும் அமைப்பு கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்திற்கென்றே 'தமிழ்த்தேர்' என்ற இதழை
நடத்தி வருகிறது என்பதை இந்த நேரத்திலே நான் அந்த அமைப்பின் கலைச்செயலாளர் என்ற வகையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும் உங்களது
படைப்புகளையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-சிம்மபாரதி

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி