எங்கிருந்தோ வந்தான் - The Man from Nowhere


நாளை என்பதை மறந்து இந்த நிமிடத்திற்காக மட்டும் வாழ்பவராக நாமிருந்தால் நம்மைப் பற்றி யோசிப்போமா அல்லது சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்திற்காகப் பாடுபடுவோமா? நம் சகோதரர்கள் உலகில் பல இடங்களில் இன்னல்களில் இருந்தாலும் அவர்களுக்காக நம் பங்கு என்னவாக இருந்துவிட முடியும்? பிற நாடு வேண்டாம் அண்டை மாநிலம்,, அதுவும் வேண்டாம் சொந்த ஊர் இல்லை, அடுத்த தெரு ம்ஹும் பக்கத்து வீட்டில் பிரச்சனை அல்லது வன்கொடுமை என்றாலும் கூட தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் நம்மிடையே ஏராளம். ஆனால் இந்தப் படத்தின் கதாநாயகன் தே-சிக் (வான் பின்) தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு அந்த நொடிக்காக வாழ்பவர், தனக்குத் தெரிந்த பக்கத்து வீட்டுக் குழந்தைக்காக தன் வாழ்வையே பணயம் வைக்கத் துணிபவர்.


தென் கொரியப் படம் ‘தி மேன் ஃபிரம் நோவேர்’ (The Man from Nowhere) 2010- ல் 47 பிலியன் சம்பாதித்து தந்த வெற்றிப்படம். பல விருதுகளைக் குவித்த இந்தப் படம் நடைமுறையில் சாத்தியக் குறைவான கதைதான்... இருந்தாலும் தனி மனிதப் பிரச்சனையைத் துரத்திச் சென்று பின் போதைப் பொருட்கள் மற்றும் உடல் உறுப்புகளை விற்கும் கும்பலையே பிடித்து தன் அன்புகுரிய சோ-மீ என்ற பக்கத்து வீட்டுக் குழந்தையை மீட்டெடுக்கும் கதையை அழகாகத் தன் தேர்ச்சிப் பெற்ற நடிப்பின் மூலம் வெற்றிப் படமாக மாற்றியிருக்கிறார் வான் பின்.


ரொம்ப அதிரடியாக இருக்கும் படங்களை நான் அதிகம் விரும்புவதில்லை. அதில் யதார்த்தமில்லை என்பதாலும், எப்படி ஒரு தனி நபர் இத்தனை பேரை அடிக்க முடியுமென்ற கேள்வி தொக்கி நிற்பதாலும். ஆனால் வன்முறை நிறைந்த இந்தப் படம் மனதில் ஒட்டிக் கொண்ட காரணம் அந்தப் படத்தின் கதாநாயகன் வான் பின்னும் அவர் நடிப்பை பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் லீ ஜியோன் பியூம்மும்.


அருமையாக நடித்திருக்கும் வான் பின்னுக்கு வசனமேயில்லை. கண்களால் பல மொழிகளைப் பேசியிருக்கிறார். நம்மூர் கதாநாயகர்கள் போல் ’பஞ்ச் டயலாக்’ இல்லை. ’பிளாஷ் பேக்’கின் போது கதாநாயகியுடன் ’டூயட்’ இல்லை. நொடிக்கு பத்து பேரை வீழ்த்தும் கதாநாயகன் சிறப்பு பயிற்சிப் பெற்ற கொரியன் ரகசிய நிறுவனத்தில் பணி புரிந்து பின் தன் கர்ப்பிணியான மனைவியை இழந்த பிறகு கசப்பான கடந்த காலத்துடன் இருட்டில் ஒரு அடகுக் கடை வைத்து தன்னை மறைத்து வாழ்பவர் என்று அவர் வீரத்திற்கும் பலத்திற்கும் தகுந்த காரணங்கள். அவன் மீது அன்பு செலுத்தும் புறக்கணிக்கப்பட்ட குழந்தை சோ-மீயின் நடிப்பு. சோ-மீ மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் ஒரு மனிதரில் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு நட்புக் கொள்ளும் நல்லுள்ளம் படைத்த சிறுமி. ‘உன்னையும் நான் வெறுத்துவிட்டால் இந்த உலகத்தில் நான் நேசிப்பவர்கள் என்று யாருமில்லாமல் போய்விடும்’ என்ற ஆழமான வசனமும் உடல்மொழியும் நம்மை கலங்க வைக்கிறது.


பிரசவ வலியுடன் குழந்தை வெளி வர ஒரு தாய் தன் உடலில் உள்ள அத்தனை சக்தியையும் பிரயோகித்து பிரசவிப்பாள். குழந்தை பிறந்தவுடன் அதன் முகத்தைப் பார்த்து முகம் மலர்வாள். அப்படியான கடைசி காட்சி - தன் உடலில் உள்ள வலுவைக் கொண்டு எதிரிகள் அத்தனைப் பேரையும் வீழ்த்தி விட்டு தன் கையாலாகாத்தனத்தை வெம்பி தற்கொலைக்கு முற்படும் போது சோ-மீயின் குரல் கேட்டு அவன் வெளிக்காட்டும் உணர்ச்சிகளை நீங்கள் படத்தில் பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ளவும் ரசிக்கவும் முடியும். சம்பந்தமே இல்லாத ஒருவன் ஒரு சக உயிருக்காகப் பாடுபடும் படம்.

5 மறுமொழிகள்

trichy syed சொன்னது...

"மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் ஒரு மனிதரில் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு நட்புக் கொள்ளும் நல்லுள்ளம் படைத்த சிறுமி. ‘உன்னையும் நான் வெறுத்துவிட்டால் இந்த உலகத்தில் நான் நேசிப்பவர்கள் என்று யாருமில்லாமல் போய்விடும்’ என்ற ஆழமான வசனமும் உடல்மொழியும் நம்மை கலங்க வைக்கிறது." - இந்த விமர்சனத்திற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கணும்!

சொன்னது...

மிக்க நன்றி. போன வாரம் செப்பரேஷ்ன் பற்றி எழுதியிருந்தேன் படித்தீர்களா? அதையும் பார்த்துவிடுங்கள்.

சொன்னது...

Illa neenga solla varathu dariya puriyala okva... paradesi paatheengala

சொன்னது...

Neenga solla vara visayam sariya puriyala neenga paradesi paatheengala eppadi irunthathu

சொன்னது...

என்ன புரியல கண்ணன்? பரதேசி இன்னும் பார்க்கலை. பார்த்துவிட்டு சொல்கிறேன். அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புண்டா?

Blog Widget by LinkWithin