Tuesday, January 31, 2023

டார்லிங்ஸ் - பல பெண்களின் கதை

 அன்பு செலுத்தும் ஒருவரை எப்படித் தகாத வார்த்தையில் பேச முடியும், அடித்துத் துன்புறத்த முடியும்? காயப்படுத்துபவர்களுக்குத் தெரிவதுமில்லை வெளிக் காயத்தை விட உள்காயமாக மன கசப்பும் வெறுப்பும் அதிகரிக்கும் என்று. செய்வதெல்லாம் செய்துவிட்டு மறுநாள் கொஞ்சி கெஞ்சி சமாதனப்படுத்த நினைக்கும் ஆணுடன் எப்படிதான் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழ முடிகிறது? அவள் அந்த வாழ்விலிருந்து வெளியில் வர நினைத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளை இருண்ட நகைச்சுவையாக (டார்க் காமெடி) சொல்லப்பட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறதுடார்லிங்ஸ்திரைப்படம்.


தொடக்கக் காட்சிகளில் ஆலியாபட்டாக வரும் பத்ருநிசா மீது நமக்கு அவ்வளவு கோபம் வருகிறது. தினமும் குடித்துவிட்டுக் காரணமில்லாமல் அல்லது ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அடிக்கும் கணவருக்கு மறுநாள் சமைத்து போட்டு அலுவலகத்திற்கு வழி அனுப்பும் ஒரு கதாபாத்திரம்.

மகள் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் இருக்கும் பத்ருநிசாவின் தாயார் ஷம்சுநிசா (ஷெஃபாலி ஷெரிஃப்) மகள்படும் கொடுமைகளைத் தாங்க இயலாமல், கொடுமையான திருமண வாழ்விலிருந்து துன்புறுத்தும் கணவரை விட்டு வந்துவிடும்படி மகளிடம் கேட்கிறார். ஆனால் பத்ரு தன் கணவனின் 'காதலில்' அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், கணவரை அவளால் சரி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் சொல்லிக் கொண்டு தினமும் அடிவாங்குகிறாள்.


நிறையப் பெண்கள் கொடுமையான திருமண வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணம் குழந்தைகள். அந்தக் குழந்தைக்காகச் சகித்துக் கொண்டு இருந்துவிடலாமென்று பிடிக்காத திருமண வாழ்விலும் தொடர்கிறாள். இன்னும் சில பெண்கள், கணவன் தன்னை குழந்தை இல்லாததால் துன்புறுத்துகிறான், பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. குழந்தையென்று வந்துவிட்டால் சரியாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். ஆனால் பத்ரு போன்றவர்கள் பிரிந்துவிட்டாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பிற்காவது குழந்தை வேண்டும் அதுவும் அந்தக் கொடுமைகார கணவரின் குழந்தை வேண்டுமென்று வேண்டி ஒட்டிக் கொண்டிருப்பதில் கண் மூடித்தனமான அவளது காதலே காரணமாகிவிடுகிறது. இதில் பெரிய ஆறுதலே பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படையாகத் தன் தாயாரிடம் எல்லாமும் பேச முடிகிறது. சமூகத்தில் அப்படியான சூழலும் பெரும்பாலான இடத்தில் இல்லை என்பதும் அவலம்.

பிரதான பாத்திரமென்று பார்த்தால் 4-5 பேர்தான். சின்னப் பட்ஜெட்டில் அவ்வளவு சிறப்பான கதையை நகைச்சுவையாகச் சொல்ல முடிந்திருக்கிறது பெண் இயக்குநர் ஜஸ்மீட் கே. ரீனால். இந்த இளம் இயக்குநருக்கு இது முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கனமான கதைக்கருவை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ஆனால் அது நகைச்சுவையாக நம்மை வந்து அடையவில்லை. உறவுகளில் சிக்கியிருக்கும் பெண்களின் பலவீனத்தை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆண்களைத் திருத்துவதற்காகத் திருமணக் கட்டமைப்பு இல்லையே, கெட்டவன் தரங்கெட்டவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே, அவள் நல்லவளாக ஒதுங்கி வாழ்துவிடலாமே என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருப்பதாக நான் உணர்கிறேன்.

ஆலியாபட்டைவிட ஹெஃபாலி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கொடூர கணவன் ஹம்ஸாவாக வரும் விஜய் வர்மா மீது ஏற்படும் கோபத்திலிருந்தே வெளிபடுகிறது அவருடைய அபார நடிப்பு. ஸுல்ஃபீயாக வரும் ரோஷன் மாத்யூவின் பாத்திர படைப்பும் சிறப்பு. மலையாளத்தில் பார்த்த ரோஷன் இங்கு நன்றாகவே பொருந்தி நடித்திருக்கிறார்.

இறுதி முடிவு நமக்குத் தெரிந்ததாக இருந்தாலும் பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. பலடார்லிங்ஸின்கதை இது ஆனால் எல்லா முடிவுகளும் இப்படி அமைவதில்லை.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி