Wednesday, March 29, 2023

ஒரு காதல் கதை

 சினிமா பார்த்து அழுத அனுபவம் உங்களுக்கிருக்கலாம், கதை வாசித்து அழுத அனுபவம் உண்டா? எனக்கு என்னவாகிவிட்டதென்று தெரியவில்லை, முதல் முறை வாசிக்கும் போது கலங்கினால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் அப்படியே நிகழ்ந்தது. எழுத்தாளர் Mitheen மீரான் மைதீன் அவர்களின் எழுத்துக்கு அப்படியான சக்தியுள்ளது என்றால் மிகையில்லை. பயமுறுத்த வேண்டுமென்ற ஆற்றல் கொண்டு எழுதுவாரோ என்னவோ 'கயிறுகள் உருவங்களாயின' கதையை வாசிக்கும் போது காரணமில்லாமல் பயம் தொற்றிக் கொண்டது. அவ்வாறே இந்தக் கதையில் அழுவதற்கு ஒன்றுமில்லாமல் அழ வைத்துவிட்டது. இந்தக் கதையை வாசிக்கும் போது எல்லாருக்கும் அப்படியான உணர்வு கண்டிப்பாக ஏற்படாது. ஆனால் இஸ்லாமிய பின்புலத்தைச் சேர்ந்த பெண்மணிக்குக் கண்ணீர் துளிர்ப்பதில் ஆச்சர்யமில்லை. நான் சொல்வது 'ஒரு காதல் கதை' நெடுங்கதையைப் பற்றி.

வஸீலா அவள் வாப்பாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அவருடைய கையை மெல்லப் பிடித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. 'எனக்குத் தனிமை வாய்த்திருந்தால் நான் விபரீதமான முடிவை எடுத்திருக்கக்கூடும்'. 'நடு இரவில் முழிப்பு வந்து சட்டென மொத்தமாய் நடுங்கி, பூஜையறை இருக்கிற வீட்டில் நாம் எப்படி வந்தோமென்று நிலைகொள்ளும்' இடமெல்லாம் என்னால் அந்த உளவியலை புரிந்து கொள்ள முடிந்தது. 'அந்த ஊரே கூடி ஏதோ ஒரு வெற்றியைப் போல எங்கள் திருமணத்தைக் கொண்டாடியது' - இந்த ஒற்றை வரியில் அரசியல் வெளுத்தது.
இருபது வருடங்களாக இரயில் பயணமே செய்யாத என்னைக் கேகே எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டு பயணியாக்கி அவர்கள் பேசுவதை அருகில் உட்கார்ந்து கவனிக்கச் செய்துவிட்டது இந்தக் கதை. எளிமையான
அருமையான
இயல்பான எழுத்து. உரையாடல்களின் மூலம் பல உள்ளடுக்குகளைச் சாமர்த்தியமாக நெருடல் வந்துவிடாதவாறு சேர்த்துள்ளார் கதாசிரியர்.
ஒன்று மட்டும் சத்தியம், கலப்புத் திருமணத்தில் மிகவும் பாதிக்கப்படுவது பெண்தான், 'மதம்' அல்ல. கதையை வாசித்து முடிக்கும்போது நல்லவேளை இப்படியான தவறை நான் செய்ய என்றுமே துணிந்ததில்லை என்ற நிம்மதி பெருமூச்சுவிட முடிந்தது.
'புலம்' பதிபகத்தின் வெளியிடூ. 56 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். விலை 80 மட்டுமே. கேலக்ஸி நூல் விற்பனையாளர்களிடம் வாங்கலாம்.


No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி