Thursday, June 28, 2007

நாலிரெண்டு எட்டு


எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தற்பெருமை அடிச்சிக்கிறது, என்னைப் பத்தி நானே அளந்துக்கிறது (பின்ன தனியா அதற்கு ஆளா வைக்க முடியும்னு முணுமுணுக்கிறது புரியுது). அதனாலேயே இந்த எட்டு சமாச்சாரம் வேண்டாமென்று எட்டு பட்டிக்கும் முன் கூட்டியே அறிவிச்சிருக்கணும். ஆனா யார் நம்மளைக் கூப்பிட போறாங்கன்னு அலட்சியமா இருந்துட்டேன். துபாயோரமிருக்கும் அய்யனார் அரிவாளோடு நிற்கிறார் எழுத சொல்லி. நம்ம ப்ரசன்னா அன்போடு அழைச்சிட்டார். அதெல்லாம் போதாதுன்னு நம்ம நிலவு நண்பன் மாட்டிவிட்டுடேன்னு சந்தோஷப்படுகிறார். அதற்காகவேதான் இந்த பதிவு. அப்புறம் எட்டு மணி நேரம் யோசிச்சாலும் ஒண்ணுமே எழுத தோணலை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்? எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக்காங்கல? அப்ப எனக்கு 64 வயசாகும் போது கேட்டா ஏதாவது சாதனைன்னு அப்பவாவது செஞ்சிருந்தா சொல்லி வைப்பேன். இப்ப தான் நான் பொறந்து எட்டு பல்லு முளச்சிருக்கு என்கிட்டப் போயி...? அதற்கு பதிலா ஒரு 'விட்டு' சொல்லுங்கன்னா சொல்லியிருந்தா சந்தோஷமா ஒரு பிட்டு போட்டிருப்பேன். 'திட்டு'ன்னு 'குட்டு'ன்னு சொல்லியிருந்தாலும் லட்டு சாப்பிடுவது மாதிரி உடனே செஞ்சிருப்பேன். சரி உங்க ஆசையை கெடுக்க வேணாம்னு என் பெருமைக்குரிய விஷயங்களை சொல்லிடுறேன்.

* நான் பிறந்ததே சாதனைதான். மூன்று பெண்களைப் பெற்ற பிறகு, நாலாவதா ஆணாக பிறப்பேன்னு எதிர்பார்த்து பெண்ணாக பிறந்தது முதல் சாதனை.

* பத்திரிகையாளரின் மகள் என்பதால் சுலபமாக எல்லா பத்திரிகையிலும் சின்ன வயதிலிருந்தே என் முகம் வந்திருந்தாலும் அதனை பெரிய சாதனையாக வெட்டி எடுத்து வைத்துக் கொண்டதுகூட இல்லாத நான், ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார் உட்பட பலரின் கைகளிலெல்லாம் பரிசுளும் பாராட்டுகளும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நான், சென்னையில் அனைத்துப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடந்த 'கண் தானம்' குறித்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று நடிகர் கமலஹாசன் கையில் விருது வாங்கிய செய்தியோடு கூடிய படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் என் பள்ளியின் பெயர் போட்டு வந்தது, நான் படித்த சாதாரண அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கே பெருமை சேர்த்த விஷயமாக அமைந்ததால் பெருத்த மகிழ்ச்சியளித்தது.

* பதிவு எழுதுவது சாதனைன்னு சொல்லிக்க மாட்டேன், ஏன்னா எல்லா டாம் டிக் & ஹாரி செய்யும் சமாச்சாரமாப் போச்சு. ஆனா பக்கத்து விட்டுல ஞாநியையும், கலைமாமணி கவிஞர் அவினாசிமணியையும், மேல் வீட்டில் கலைமாமணி கவிஞர் மணிமொழியையும், எதிர் வீட்டில் எழுத்தாளர் நாகைதர்மரையும், அதே குடியிருப்பில் மு. மேத்தாவையும், பல பெரிய பத்திரிகையாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் பக்கத்திலிருந்து வளர்ந்த எனக்கு அப்ப எழுதணும், ஏதேனும் அவர்களிடமெல்லாம் கத்துக்கணும், தெரிந்து கொள்ளணும் என்ற ஆர்வம் கூட உதிக்காத எனக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லியிருப்பது போல் 'பள்ளிப் பருவத்திலே எழுத்தில் துளிர்விட்டுடேன்' என்றெல்லாம் சொல்லிக்க முடியாத எனக்கு, சாதாரண கதைப்புத்தகத்தையும் ஜனரஞ்சகப் புத்தகத்தையும் கூட "படிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியவங்க படிக்கிறது"ன்னு ஒடுக்கப்பட்டு, வாசிப்பனுபவமே இல்லாமல் வளர்ந்த எனக்கு, துபாய் வந்த பிறகு தமிழை விட்டு தூரம் போய்விடக் கூடாது என்ற ஞானோதயம் மிளிர்ந்தது போல் பற்றிப்பிடிப்பதற்காகவே திடீரென எழுதத் தோன்றி எழுதி, அதை நாலு பேர் படிக்கிறாங்க என்றால் என்னை நானே மெச்சிக்க வேண்டியதுதான்.

* எட்டுப் போடாமலே ஓட்டுனர் உரிமம் எடுத்தேன். எப்படின்னு கேட்கிறீங்களா உரிமம் எடுத்தது மோட்டார் காருக்கு. அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்த காலகட்டத்தில் முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து நெரிசலை நொந்து கொள்பவர்கள் மத்தியில் சந்தோஷமாக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கும். எத்தனையோ பேருக்கு நடப்பதற்கு செருப்பு கூட இல்லாமல் இருக்கும் போது காரில் பறப்பது பெருமையா இல்லையா?

* துபாயில் நல்ல வேலை கிடைப்பதே கடினம், கிடைத்தாலும் வேலை பிடித்திருக்க வேண்டும், வேலை பிடித்திருந்தாலும் நாளில் முக்கால்வாசி நேரத்தைச் செலவளிக்கும் அலுவலகத்தில் நம்மைச் சுற்றி நல்ல மக்கள் அமைய வேண்டும். இது இரண்டுமிருந்தாலும் தேவையான சம்பளம் கிடைக்க வேண்டும். சம்பளம் நிர்ணயித்தாலும் சொன்னபடி சொன்ன தேதியில் கைக்கு கிடைக்க வேண்டும்- இப்படி பல பிரச்சனைகளோடு இருப்பவர்கள் மத்தியில் எனக்கு நிறைவான வேலை, பிடித்தமான சக ஊழியர்கள் என்பது நம்பிக்கையூட்டும் பெருமிதம்.

* நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. எல்லோரும் துபாயில் - இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்குன்னு சொல்வீங்க, ஆனா பலரும் தன்னந்தனியா இந்த பூமியில் நிறையப்பேர் கஷ்டப்படுறாங்களே அப்ப இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில்லையா எனக்கு? குழந்தையில்லாம எத்தனையோ பேர் இருக்க அந்த வரம் கிடைத்தது பெரிய பாக்கியமில்லையா?

* என்னால் பேச முடியும், கேட்க முடியும், பார்க்க முடியும், நடக்க முடியும் அது இதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். இதெல்லாமும் சந்தோஷப்படும் விஷயம்தானே, எத்தனையோ பேருக்கு அந்த கொடுப்பினைகள் கூட இல்லாத போது? அப்புறம் மற்றவரைப் பற்றி குறை சொல்வதோ, புறம் பேசுவதோ அறவே பிடிக்காத விஷயம் எனக்கு. நாம முதல்ல ஒழுங்கா இருக்க வேண்டாமா மற்றவரை கை காட்டுவதற்கு முன்பு?

* கடைசியா நான் ரொம்ப புளங்காகிதமடையும் விஷயம் இன்னும் நான் உயிருடன் இருப்பது.

தெரியாத்தனமா இவளை எட்டுப் போட அழைச்சிட்டு இப்படி கேவலமா ரம்பம் போட்டிருக்காளே, தேவையான்னு உங்க தலையில நீங்களே அடிச்சிக்கிட்டு சிரமப்படாதீங்க. அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து இரண்டு குட்டுறேன்.

விதிகளில் ஒன்று என்பதால் விளையாட்டின் விதிகளைப் போட்டாச்சு:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும

தொடர்ந்து எட்டுப் பேரை அழைத்து நட்பு வட்டத்தை எட்டுக்குள் சுருக்க முடியாதுப்பா. அதனால் கண்டிப்பாக இந்த தொடர் பதிவில் பங்கேற்கவே மாட்டார்கள் என்று நான் நினைக்கும் ஒரு எட்டுப் பேரை குறிப்பிடுகிறேன், இவர்கள் எனக்காக எட்டுப் போட்டாலே பெரிய சாதனைதான்.

1. அப்துல் ஜப்பார் ஐயா
2. இராம. கி. ஐயா
3. மாலன்
4. பாமரன்
5. யுகபாரதி
6. பெயரிலி
7. இசாக்
8. கவிமதி

Monday, June 25, 2007

ஊர் சுற்றலாம் வாங்க!

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு அழைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி, போன வாரம் அவங்கெல்லாம் ஊருக்கு திரும்பியதும் வீடே 'வெறிச்'சுன்னு போயிடுச்சு, நானும் சுகவீனமாகிட்டேன். சுகவீனமாப் போனதற்கு காரணம் பிரிவா இல்ல வாரா வாரம் சுத்தித் திரிஞ்ச அலைச்சலான்னு தெரியலை. சரி அது முக்கியமில்ல இப்போ. நாங்க போன இடங்களையெல்லாம் பத்தி பதியலாம்னு நெனைக்கிறேன் ஆனா பார்த்தத, உணர்ந்தத அப்படியே எழுத்தில் கொண்டுவருவது எனக்கு சுலபமான விஷயமில்ல. முயற்சியின் முதல் படியா இந்த பதிவு.

துபாய் சுற்றுலாவில் மிக முக்கியமான ஒன்றான, இது இல்லாமல் சுற்றுலாவே நிறைவு பெறாதுன்னு சொல்லக் கூடியது. அதுதாங்க Desert Safari -தமிழில் இனிதான் பெயர் வைக்கணுமா அல்லது பெயர் இருக்கான்னு தெரியல. நம் நாட்டுலயும் ராஜஸ்தான்ல இது இருக்கு ஆனா இந்த அளவுக்கு இருக்குமான்னு அனுபவிச்சவங்கதான் சொல்ல முடியும்.

அரை நாள் முழுக்க ஒதுக்கிட்டா போதும் அந்த புது உலகத்திற்கு போயிட்டு வந்திடலாம். துபாயிலிருந்து அப்படியே அந்த தங்க மணற் குன்றுக்கு கூட்டிட்டுப் போவாங்க. எத்தனையோ முறை போயிருந்தாலும், இந்த முறை என் கணவருடைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்ததால் கிட்டத்தட்ட 200 பேர் 30 டயோட்டா லாண்ட் கிரூஸரில் -4WD போனது ஒரு புது அனுபவமா இருந்துச்சு. அலுவலகத்தில் எல்லோரும் கூடி, அங்கிருந்து ஒரு 45 நிமிடத்தில் அந்த பாலைவனக் கடலுக்குப் போய் சேர்ந்தோம். அங்கதான் தொடங்கியது இந்த மணற் குன்றை நொறுங்கடிக்கும் வேலை (dune bashing).
குதூகலம் ஆரம்பமாகி வண்டி மேலும் கீழும் உருளத் தொடங்கியது. ஏற்ற இறக்கத்தினால் ரோலர் கோஸ்டரில் போவது போல் இருந்தது. வண்டி தடம் புரண்டிடுமோன்னு நினைக்கும் அளவுக்கு வண்டியின் சக்கரம் மணலில் குத்திக்கிட்டு சாயும்படி நின்றது. மணல் வாரி வாரி இறைத்தது. இந்த மாதிரி ஒரு 25 நிமிஷம். அப்புறம் சரியா சூரியன் மறையும் நேரத்தில் அந்த அழகிய காட்சியைப் பார்க்க வண்டியை நிறுத்தினாங்க. நம்ம ஆட்கள் அதை ரசித்தார்களோ இல்லையோ மணலில் சறுக்கி சறுக்கி விழுந்துக்கிட்டு நம்ம வலையுலகம் மாதிரி ஒருவர் காலை மற்றவர் இழுத்துவிட்டுக்கிட்டு விழுபவர்களை இரசிச்சுக்கிட்டு இருந்தாங்க.

அதன் பிறகு கூடாரத்திற்கு அழைச்சுக்கிட்டு போனாங்க அங்க ஒட்டகச்சவாரி இருந்தது. ஆளாளுக்கு ஏறி சவாரி செஞ்சாங்க பாவம் ஒட்டகத்திற்கு நாளைக்கு முதுகு வலி வரப் போகுதுன்னு நாங்கள்லாம் பரிதாபப்பட்டாலும் நாங்களும் ஏறிக் கொண்டோம். இரண்டு ஒட்டகம் ஒன்றன் பின் ஒன்றாக, முன் நடக்கும் ஒட்டகத்தின் மீது நாங்கள் ஏறிக் கொண்டோம். அந்த ஒட்டகத்தின் முன்புறம் என் மகளையும் பின்புறம் என் அக்காவின் மகளையும் உட்கார வைத்துவிட்டு நடுவில் நான் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டேன். பின்னாடி நடந்து வந்த ஒட்டகம் எழும்பும் போது திடீரென்று எங்கள் காதுக்கு அருகில் வந்து கத்தியது. அதைக் கேட்டு பயந்து நாங்க ஒரு கத்துக் கத்த, பயங்காட்ட நினைத்த ஒட்டகம் பயந்து போய் வாயை மூடிக் கொண்டது. வேகமாக இரண்டும் நடக்க ஆரம்பித்து ஒரு வழியாக சவாரி முடிந்தது. சவாரியை விட ஒட்டகத்திலிருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் 'ஜெயிண்ட் வீலில்' மேலிருந்து இறங்கும் போது வயிற்றில் பயத்தில் ஒரு பிசை பிசையுமே அதே உணர்வு.

அங்கிருந்து நகர்ந்து வரும் போதுதான் ஒரு கூட்டமே 'பைக் ரைடு'க்காக வரிசையாக நின்றிருந்தார்கள். கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தோம். ஆண்- பெண்ணுக்கென்று தனி வரிசையெல்லாமில்லை காரணம் என்னைத் தவிர வேறு பெண்கள் பைக்கை ஓட்டவே முன்வரவில்லை அதனால் போன கொஞ்ச நேரத்தில் எனக்கு பைக்கை தந்துவிட்டார்கள். கிளப்பிக் கொண்டு பறந்தேன். 'ரொம்ப தூரம் போக வேண்டாமெ'ன்று எச்சரிக்கை. எங்கிருந்து போவது? அடுத்த பக்கத்தில் ஒட்டகம் முறைத்துக் கொண்டிருந்தது. அதனால் சின்னச் சின்ன வட்டமாக மணற்குன்றில் ஏறி ஏறி ஆசை தீர ஓட்டி காத்திருப்பவர்களை கருத்தில் கொண்டு வந்து சேர்ந்தேன்.

அப்புறம் படங்களெல்லாம் எடுத்துக் கொண்டு ஓய்ந்து உள்நுழைந்தால் அங்கே சின்ன சின்ன கடைகள் இருந்தன, அதில் எல்லாம் துபாயிலிருந்து போகும் சுற்றுலா பயணிகள் நினைவிற்காக வாங்கிக் கொள்ளும் பரிசு பொருட்கள் நிரம்பி இருந்தது. நிறைய கூட்டத்தை பார்த்ததும் கடைக்காரர்களுக்கு நல்ல வியாபாரம் இன்று என்று மகிழ்ச்சி. ஆனா ஒருவரும் அந்தப் பக்கம் வேடிக்கைப் பார்க்கக் கூட ஒதுங்காததால் சீக்கிரமே கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

ன்னொரு பக்கம் பார்பிக்கியூ (barbeque/barbecue) இரவு உணவுக்காக மணந்து கொண்டிருந்தது. அப்புறம் அரபி கலாச்சாரப்படி காப்பியும் பேரிச்சம்பழமும் சாண்ட்விச்சுகளும் இருந்தது. அதையெல்லாம் தின்று கொண்டே மருதாணிக்கு கையை நீட்டினோம். அங்கே அரபி கலாச்சார உடைகளும் வைக்கப்பட்டிருந்தன, அதை அணிந்துக் கொண்டு பயம் காட்டினர் சிலர் ஆனால் வேஷம் நல்லாயிருக்கவே அனைவரும் படமெடுத்துக் கொண்டோம். ஒருவர் கையில் அமீரகத் தேசியப் பறவையான வல்லூறை வைத்துக் கொண்டு திரிந்தார், பார்க்க அழகாக இருந்ததாலும் எனக்கு பிடித்தமான பறவையென்பதால் தொட்டு மகிழ்ந்தோம். படமெடுக்க ஆயுத்தமாகும் முன்பு, வேறு ஒருவர் வல்லூறை படமெடுக்க, வல்லூறு காப்பாளர் ஒரு படத்திற்கு 10 திர்ஹம் (ரூ.120) என்று கேட்டார். 'என் பெட்டியில் நான் படமெடுக்க ஏன் காசு தரவேண்டும்' என்று எடுத்தவர் சண்டைக்கு நின்றார். எடுத்தது என் பறவையை என்று சொல்லவே வேறு வழியில்லாமல் காசு கொடுத்துவிட்டு, 'தெரிந்திருந்தால் வெறும் பறவையை எடுத்ததற்கு பதிலாக நான் நின்று எடுத்துக் கொண்டிருப்பேன்' என்று புலம்பிக் கொண்டே சென்றுவிட்டார். அப்புறம் சில விளையாட்டுகள் வைத்தார்கள், இரசிக்கும் படியாக இல்லை.

பிறகு பலமான, சுவையான சாப்பாடு. ஒரு வெட்டு வெட்டி விட்டு உட்கார்ந்த போது தென்றலா புயலான்னு தெரியலை வேகமாக வந்து நடமாடினாள் அந்த அழகு பதுமை அரைகுறை ஆடையில். வேகமாகச் சுழன்று தொடர்ந்து அரை மணி நேரம் ஆடினாள். மூச்சிரைக்காமல், முகம் வாடாமல், பார்ப்பவர்களை கட்டிப் போடச் செய்யும் ஆட்டம். அதைப் பார்ப்பவர்களும் தங்களை அறியாமல் குலுங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்கு 'பெல்லி டான்ஸ்' என்று பெயர். ஆடியதெல்லாம் வார்தையில்லாத இசைக்கும் அரபிய பாடல்களுக்கும். நான் ஆட்டைத்தை பார்த்ததை விட மற்றவர்கள் ஆட்டத்தை எப்படி இரசிக்கிறார்கள் என்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததுதான் அதிகம். ஆட்டம் முடிந்து அவள் உள்ளே சென்று விட்டாலும் அதைத் தொடர்ந்து 'பல்லே லக்கா..' சிவாஜியிலிருந்து தமிழ் பாட்டு ஒலிக்கவே ஆட துடித்துக் கொண்டிருந்த ஆட்கள் கூத்தடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் எழுந்து வண்டிக்கு போய்விட்டோம், வீட்டுக்கு வரும் போது இரவு 11 ஆகிவிட்டது. மறுநாள் அலுவலகமென்றதும் எல்லோருடைய முகமும் வாடிவிட்டது. இருப்பினும் மன இறுக்கம் அகற்ற வார இறுதியில் இப்படி ஒரு தப்பித்தல் தேவையென்றே தோன்றியது.

Tuesday, June 19, 2007

சக பயணிகள்


எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். 'விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்' மேடையில் ஜெஸிலா அறிவித்தார். - அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை.
------------------------
விரகம் எழுப்பிய இரவுகளில்
மூடிய அறையின்
மெட்டியொலியும்
சக தோழியின் கடைசி மழலையின்
அழும் குரலும்
மறுநாள் வரை மண்டைக்குள் குடைந்து
உள்ளங்கை வியர்வைக்குள்
எண்ணங்களை அசைப் போட்டு
பயணச்சீட்டை கசக்கும்
நம்பிக்கையற்ற முப்பது

தாய்மைப் பெற தவமிருந்து
வரம் கிடைக்காமல் போனதற்கு
காரணம் இவள் இல்லை
என்று சான்று தந்தும்
இவள் இளமையையெல்லாம்
அள்ளித் தின்ற பிறகு
இவளை ஒதுக்கி வைத்து
அவன் புது மாப்பிள்ளையாகிப் போனான்
புது பொண்டாட்டியும்
'மலடி'யென இவளைப் போலவே
பெயரெடுப்பாளென
ஏளனச் சிரிப்பில் வேடிக்கை பார்த்தாலும்
பயண மிகுதியில் விட்டுச் சென்ற
ஒற்றைச் செருப்பாய் தன்னை உணரும்
ஓடாய் தேய்ந்தவள்

ஓடிப் போன கணவன் தந்த
ஒற்றைப் பிள்ளையை வீதியில் விட்டு
தனக்கென வாழ்வதற்காக
புது தாம்பத்தியத்தில் காலூன்றாமல்
பிள்ளை வளர்ப்பில்
அகம் மகிழ்ந்து
அவனுக்காக
தொண்டைக்குழியில் ஈரம் வற்ற
காய்கறிகளைக் கூவி விற்று
பிள்ளையின் எதிர்காலத்திற்காக
தமது நிகழ்காலத்தை மறக்கும்
கண்ணியத் தாய்

சீழ் வடியும் புண்ணில்
ஈபோல மொய்க்கும்
பணியிடத்து நிர்வாகிகள்
வறுமையை
உடுத்தும் ஆடையிலும்
எதிர்பார்க்கும்
சபலப் பார்வைகள்
சல்லடையாய் உடம்பை துளைக்கும்
நகைச்சுவை என்ற பெயரில்
கேட்கவே கூசும் சொற்களையும்
செவிமடுத்து வெளிவந்தால்.
பேருந்திலும்
கூடையிலிருந்து விழும் தக்காளி போல
மேலே விழுந்து உரசும்
பயண மன்மதன்களின்
நசுக்கல்கள்
வேறு வழியில்லாமல்
வலியோடு
இவற்றை
தாங்கிக் கொள்ளும்
பொறுமைசாலி-

கொட்டிக் கொடுத்து
கரை சேர்த்து
வாழும் முன்னே
வண்ணமிழந்து
மூளியாக முடக்கி விட்டு
'கைம்பெண்' என்றெழுதி
பொட்டு வைத்துக் கொண்டு
துருப்பிடித்த பிடிமானமும் தராமல்
அமங்கலியென ஒதுக்கி வைக்கப்படும்
சமூகக் கட்டுக்குள் அடைபட்டவள்-

ஒரே இடத்தில் நின்று
சிறகடித்துச் சுழலும்
மின்விசிறியைப் போல
கருவுற்ற களிப்பையும்
மனதில் அடக்கி
பக்குவமாக இருந்து
மாதங்கள் பல சுமந்து
பெற்றெடுத்தாள்
கண்ணிலும் காட்டாமல்
கள்ளிப் பாலுக்கு
கருகத் தந்த பெண்சிசுவை
கண்ணுக்குள்ளே வைத்து
கன்னங்களைக் கண்ணீரால்
தினம் கழுவி
மனதை கல்லாக்கி
கணவன் வீடு திரும்பும்
கதியற்ற மருமகள்

வீட்டு வேலை செய்வதற்கும்
படுக்கையில் வேசியாய் இருப்பதற்கும்
வரதட்சணையில் வெந்து வதங்குபவளை
பேருந்திலும் தன் முன்
உட்கார அனுமதிக்காமல்
மருமகளின் கால் கடுப்பில் இன்புறும்
முன்னால் மருமகளான
இந்நாள் மாமியார்

பெண்ணியவாதம்
பெண் விடுதலை
இந்த வார்த்தைகளையெல்லாம்
விசித்திரமாகப் பார்த்து
தங்கள் முகத்திரைகளை எடுக்கவும்
பழகிய வட்டத்திலிருந்து வெளிவரவும்
தயங்கும்
பல்முகம் கொண்ட
இதுபோன்ற பெண்கள்தான்
பெரும்பாலும்
பேருந்தில் மட்டுமின்றி
சமூகத்திலும்
என் சக பயணிகள்!

Tuesday, June 12, 2007

உண்மையான சூப்பர் ஸ்டார்

எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய சொல்லும். நம்மள, நம்ம வேலைய யாருமே கவனிக்கல சம்பளம்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கே உழச்சாத்தானான்னு இருந்துட்டா நிர்வாகம் திடீர்னு முழிச்சி 'நீ ஒன்னும் கிழிக்கிறா மாதிரி தெரியல உன்ன வேலைய விட்டு தூக்கிறோம்'னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டாவது ஓரளவுக்கு நியாயமா வேலையெல்லாம் முடிச்சிட்டு இல்லன்னா வேலையோட வேலையா வலைப்பதிவு பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்துக்கிட்டு நாமல்லாம் வேலப் பார்க்கிறோம். ஆனா சிலர் இருக்காங்க ரொம்ப நேர்மையா தன்னோட வேலை நேரத்துல சொந்த தேவைக்கு இடம் தரக் கூடாதுன்னு செல்பேசியக் கூட வேலைக்கு எடுத்துப் போக மாட்டாங்க. இப்படியும் இருப்பாங்களான்னு யோசிப்பிங்க, இருக்காங்களே இங்க துபாய் மாநகராட்சியில பணியாற்றும் ஒருத்தர் செல்பேசியக் கூட பணி நேரத்தில உபயோகிக்க மாட்டாராம். வீட்டுக்கு அழைச்சி பேசுறதுக்கு வெள்ளிக்கிழமையில மட்டும் உபயோகிப்பாராம். இவர பத்தி 'கல்ஃப் நியூஸ்'ல படிக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. 27 வருஷமா துபாயை அழகாக்க, பராமரிக்க துபாய் நகராட்சியில தோட்டக்காரர உழைச்சிக் கொட்டியிருக்காரு. இந்த 27 வருஷத்துல ஒரு நாள் கூட உடல்நில சரியில்லன்னு விடுப்பெடுத்ததில்லையாம். சின்ன வயசு ஆரோக்கியமான ஆளு அதான்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல இவருக்கு 63 வயசு, பெயர் நசீர், பாகிஸ்தானி.

அந்த செய்தியில இவரப் பத்தி மட்டுமல்ல இவர மாதிரி அடிமட்டப் பணியாட்களப் பற்றி பத்தி பத்தியா போட்டிருந்தாங்க.

துபாய்ல ரொம்ப சங்கடமான விஷயமே போக்குவரத்து நெரிசல்தான் அந்த நெரிசலிலும் சந்தோஷமா வண்டி ஓட்டுறேன்னு ஒரு 'துபாய்
டிரான்ஸ்போர்ட்'ல வேல பார்க்கும் 'ஏமானி' அஹமது சாலே (45) சொன்னா அவரும் பாராட்டுக்குரியவர்தானே? அதுவும் வெய்யில் நேரத்துல வெளியில் போகவே யோசிப்போம், இவரு அந்த மாதிரி வெய்யில டாக்ஸிக்காக யாரும் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரு. நல்ல மனசுக்கு சொந்தக்காரர்.

அப்புறம் இன்னொரு ஒருத்தர் என் மனதை தொட்டவர் -இரு கண்ணுமில்லன்னு துவண்டுப் போய்டாம, தன்னம்பிக்கை மிக்க பெண்ணான நஜீபா அமீரக பல்கலைகழகத்திலேயே பட்டப்படிப்பு முடிச்சவங்க. விஞ்ஞான மூலபொருள 'ப்ரெய்ல' மாத்தி படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு
சொல்றாங்க. இவங்க அரசாங்க உத்தியாகத்தில இருக்கிறாங்கன்னா பெருமைக்குரிய விஷயம்தான். அதுவும் 'நுழைமதி' தரும் பகுதியில வேலை. இவங்க அங்க என்ன செய்றாங்கன்னா பாஸ்போர்ட் விவரத்தை கணிணில பார்-கோர்ட் மூலமா வருடி சேகரிப்பதுதான் இவங்க பணி.

சரி இவங்கள பத்தியெல்லாம் ஏன் பத்திரிகையில எழுதினாங்கன்னு நீங்க கேட்கலாம், 'Dubai Government Excellence Programme awards'
நிகழ்ச்சியில துபாய் அரசாங்கம், எந்தெந்த அரசாங்க பிரிவு சிறப்பான சேவை செஞ்சிருக்குன்னு பார்த்து விருது வழங்கினாங்க. அதில இரவு முழுக்க விழிச்சிருந்து மக்களுக்கு பாதுகாப்பு தருகிற துபாய் போலீசுக்கு, துபாய் செய்தி நிறுவனமான 'எமிரேட்ஸ் நியூஸ்'னு 11 அரசாங்க பிரிவுக்கு விருது கிடச்சது. இதுல ஒவ்வொரு பிரிவில ரொம்ப சிறப்பா வேலை பார்க்கிற அடிமட்ட பணியாளார்கள்னு 'பல மரத்தக் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டானு' இல்லாம தன் வேலைய எவ்வளவு சிறப்பா முடியுமோ அவ்வளவு சிறப்பா தன்னையே அர்ப்பணிச்சி தனித்தன்மையோடு வேலை செய்றவங்கள 25 பேரை கண்டுபுடிச்சி The unsung heroesன்னு ஒரு பிரிவுல தேர்ந்தெடுத்து வருடா வருடம் விருது தராங்க. பாடுபடுறவங்கள பத்தி யாரும் பாடுறதில்லன்னு இந்த விருதுக்கு இப்படி பேரு போல. விருது கிடைச்ச ஒவ்வொருத்தரும் சேர்ந்தா மாதிரி சொல்லியிருக்கிற விஷயம் அமீரகத்துடைய பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்துமுடைய கையால் பரிசு வாங்கி பக்கத்தில் நின்னு படம் எடுப்போம்னு கனவுலக் கூட நெனச்சதில்லன்னு சொல்றாங்க.
பார்த்தீங்கன்னா எல்லோரும் அவங்களுக்காக பாடுபடல தங்கள சார்ந்தவங்கள, குடும்பத்த, பெத்த பிள்ளைகள நல்ல நிலைக்கு கொண்டுவரத்தான் மெழுகுவர்த்தியா உருகுறாங்க. விருதுன்னா சும்மா சான்றிதழ், பாராட்டு மட்டுமல்ல பதவி உயர்வும், திர்ஹம் 50,000 (நம்ம இந்திய ரூபாயில் 6 லட்சம்) பரிசு. அப்படி தன் சேவையைக் கொட்டி வேலைக்குன்னு தன்ன அர்ப்பணச்சிக்கிட்டு தனித்துவம் படைச்ச அந்த சிறப்புக்குரிய 25 பேருல மூணு பேரப்பத்திதான் மேல சொல்லியிருக்கேன். அமாவாசச் சோறு என்றைக்குமா அகப்படும்? எப்பவாவது இப்படி படிக்கும் போது தன்னம்பிக்கை ரொம்ப பொங்கி வரா மாதிரி இருக்கும் அதான் உங்களுக்கும்
பொங்கட்டும்னு எழுதி வச்சேன்.

இந்தச் செய்திய வாசிக்கும் போது நான் இங்க வந்த புதுசுல கேள்விப்பட்ட, அதாவது 10 வருஷத்திற்கு முன்னாடி நடந்த விஷயம் நினைவுக்கு வந்துச்சு. அப்போ உயர்திரு ஷேக் மக்தும் பின் ராஷித் அல் மக்தும் ஆட்சிக் காலத்தில் கண்ணெதிரே சிறப்பான வேலை செஞ்சு பார்த்த ஒரு வயதான தோட்ட வேலையாளுக்கு உடனே சந்தோஷத்துல திர்ஹம் 1 லட்சம் (ரூ. 12 லட்சம்) காசோலை தந்தாராம். ஒரு நாளாச்சாம் இரண்டு நாளாச்சாம் அந்த காசோலை வங்கில மாற்றலையாம். சரி இருக்கட்டும் பார்க்கலாம்னு விட்டார்களாம், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அந்த காசோலை வங்கிக்கு பணமாக்க வரவில்லையாம், சரி என்ன விஷயம்னு கேட்போம்னு கேட்டா அந்த உழைப்பாளி சொல்லியிருக்காரு "ஐயா அன்பா கையெழுத்துப் போட்டு தந்தத மாத்த மனசில்ல, சட்டம் போட்டு வீட்டு சுவத்துல மாட்டிவச்சிருக்கேன்னு". அப்புறம் கேள்விப்பட்டவங்க அந்த காசோலைய அப்படியே வச்சிக்கோங்க நாங்க வேறு காசோலை தந்து மாத்தியே தந்திடுறோம்னு பணம் கொடுத்தாங்களாம். இப்படியும் மனுஷங்கள பார்த்திருக்கீங்களா? இது அறியாமையில்ல, பேதைத்தனமில்ல பணம் காசவிட அன்பு பாசத்திற்கு முக்கியதுவம் தந்திருக்காரு, தன் தேவையையும் மறந்து.

'நானும்தான் என்னையே வேலைக்குன்னு சமர்ப்பிச்சுக்கிட்டேன் ஆனா என்னத்த கண்டேன்'னு சலிச்சிக்காம பொறுத்தார் பூமி ஆள்வார், நீங்க போட்டது கண்டிப்பா முளைக்கும்னு தன்நம்பிக்கையில உழைச்சாலே போதும். நீங்களும் ஒருநாள் பாடப்படுவீங்க.

Thursday, June 07, 2007

படம் காட்டுறோம் படம்!

சிக்குபுக்கு இரயிலு 1895



நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940



சீருந்து காட்சியகம் - சென்னை 1913


ஃபோர்ட் நிறுவனம் 1917


கொல்கத்தா 1915


அந்தமான் 1917


மத்ராஸ் வங்கி 1935


கராச்சி பல்சுவை அங்காடி 1917


கராச்சி திரையரங்கம் 1917


நம்மூரு கொத்தவாச்சாவடி 1939


லாஹூர் 1864


சென்னை நூலகம் 1913 - கல்லூரி கதாநாயகர்களை கவனியுங்க!


சென்னை மெரினா கடற்கரை 1913 - கடலப் போட ஆளில்லாமயிருக்கு


பரப்பரப்பில்லாத மும்பாய் 1894


விக்டோரியா டெர்மினஸ், பம்பாய் 1894


மாமிகள் இல்லாத மைலாப்பூர், சென்னை 1939


உறவில்லாத உதகை 1905


மின்சார உற்பத்தி தொழிற்சாலை 1917 (Power Plant)


தான் வேட்டையாடிய சிறுத்தை மீது சிரத்தையாக உட்கார்ந்திருக்கும் இந்திய வீர திருமகள்- 1920


நம்மவர்கள் அடிமையாக இருந்த காலத்தில் ;-(


மன்னர் அவையில் ஆடும் நாட்டிய மங்கைகள் 1830


தில்லி பாராளுமன்றம் (கட்டிட கலைஞர் எட்வின் லுட்யன்ஸ் & ஹெர்பெட் பேக்கர் வடிவமைத்ததாம்)


1910-லேயே மும்பாய் பெண்கள் விருந்து வைபவத்தில் பங்கேற்று குதூகலிக்கிறார்கள்.


ஷாஜகான் 1650-58ல் கட்டிய ஜுமா மஸ்ஜித், தில்லி


இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் 'ஹன்னு', ஷார்ஜாவில் எரிபொருள் நிரப்பும் காட்சி


இந்திய வீர திருமகள் படத்திலிருந்து கீழ் உள்ள அனைத்து படங்களும் 'India Then and Now' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்கள். அன்றைய இந்தியா பற்றி ருத்ரங்ஷூ முகர்ஜியும், இன்றைய இந்தியாவைப் பற்றி விர் சங்வியும் எழுதியுள்ளனர்.

Tuesday, June 05, 2007

வேற்று திசை - சிறுகதை

நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.

இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது, ஆகையால் அடி அடியென்று ஆளுக்காள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர், வாயிருந்தாலும் அழுதுவிடும். ஒருவேளை அதன் கண்ணீர் கலந்து வருவதால் கலங்கலாக தண்ணீர் வருகிறதோ என்று உற்றுப் பார்த்து, கலங்கலாக வந்தாலும் பரவாயில்லை புழங்க உதவும் என்று கடைசி சொட்டுவரை விடுவதாக இல்லை என்ற படி அடித்துக் கொண்டிருந்தனர் அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள். ராமசாமி தெருவில் குறுகிய அந்த முடுக்கு சந்தில் இரு பக்கமும் வீடுகள். ஒரே வாயிலுக்குள் நான்கு மாடி-வீடுகள் அதில் ஏழு குடித்தனங்கள் அதில் வீட்டுச் சொந்தக்காரர் ராஜன் வீடும் அடக்கம். வீட்டின் பெயர்-பலகை 'செம்பருத்தி' என்று காட்டியது.

ராஜனுக்கு அரசாங்க வேலை. அழகான அளவான குடும்பம். மனைவி அன்பான இல்லத்தரசி. மகன் திருலோகச்சந்தர் இந்திய நாட்டின் எல்லையில், ராணுவத்தில் பணி. அவன் விரும்பி எடுத்த வேலை என்பதால் யாரும் மறுக்கவில்லை. மகள் மீனலோச்சனி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றிருந்தவள் விடுமுறைக்கு வந்திருக்கிறாள். அந்த 'செம்பருத்தி'யே அவள் வருகைக்காக காத்திருந்தது. அவள் வந்ததுமே அவளைப் பார்க்க எல்லோரும் வீட்டிற்கு வரிசையாக வந்து போய் இருந்தார்கள். படிப்பிற்காகச் சென்றிருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் மற்ற சமயங்களிலும் கிடைத்த வேலையைச் செய்து, வரும் சொற்பப் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் யாரையும் மறந்துவிடாமல் எல்லோருக்கும் சின்ன பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து அன்பால் இணைத்து அவளைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள். அவள் பெற்றோருக்கு பெருமையாகவே இருந்தது.

ஒருமாதமே விடுமுறையில் வந்திருக்கும் மீனாவுக்கு தன் சிநேகிதிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. எல்லோரையும் ஒரே சமயத்தில் பார்க்க யாருடைய திருமணமும் ஏற்பாடாகவில்லை. ஆகவே அவள் சிநேகிதியும் சித்தி மகளுமான சுஜாவுக்கு தொலைபேசியில் அழைத்து மணிக்கணக்கில் பேசி சுஜா வீட்டில் எல்லா தோழிகளையும் கூட்டி சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அங்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

"அம்மா குங்குமம் எங்க இருக்கு" மேலே இருந்து படிக்கட்டின் கைப்பிடியை பிடித்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உரக்கக் கத்திக் கேட்டாள், கீழே சமையலறையில் இருக்கும் அம்மாவின் காதில் விழுமாறு.

"இரண்டாவது தட்டுல சாமி படத்துக் கிட்ட, அந்த குத்து விளக்குக்கு பின்னாடி இருக்கு பாரு" அம்மாவும் மீனா காதில் சென்றடையும் வகையில் பதிலளித்தார்.

"அப்பா வாடகை சீருந்துக்கு சொல்லிட்டீங்களா?" மீண்டும் உரக்க..

"ம்ம் சொல்லிட்டேம்மா இன்னும் 5-10 நிமிஷத்துல வந்துடும், நீ கிளம்பிட்டாயா இல்லையா?"

"கிளம்பிக்கிட்டே இருக்கம்பா.."

அமெரிக்கா வரை அனுப்பி வைத்தவர்களுக்கு நீலாங்கரையில் இருக்கும் சுஜா வீட்டிற்கு அனுப்ப தயக்கம். தெரிந்த வாடகை சீருந்து

நிலையத்திலிருந்து வண்டி எடுத்திருந்தார்கள். "தெரிந்த நல்ல ஓட்டுனரா அனுப்பி வைப்பா" என்ற வேண்டுகோளோடு வண்டி ஏற்பாடு.

வண்டி வந்து நின்றது, அமெரிக்காவிலிருந்து வந்த பெண் என்று ஏற்கெனவே சொல்லி அனுப்பப்பட்டிருந்தது.

"போய்ட்டு வரேம்மா, வரேன்பா" என்று சொல்லியபடி, படி இறங்கும் போது புடவை மடிப்புகள் கீழே பிறளாமலிருக்க மேலே தூக்கவும், உயரமான காலணி எட்டிப்பார்த்தது.

"போய் சேர்ந்ததும் கூப்பிடு" என்று கிசுகிசுத்தாள் அம்மா.

"சரிம்மா" என்று தாயின் அன்பைப் புரிந்தவளாக சீருந்தின் பின்கதவைத் திறந்து உட்கார்ந்தாள்.

ஓட்டுனர் தமிழரசனுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெண் என்று சொன்னதால் அவன் கால்சட்டை, கையில்லாத மேல் சட்டையில் அவளை எதிர்பார்த்ததால் அந்த வியப்பு. தளையத் தளைய சேலை கட்டி, அவள் நீளக் கூந்தலில் வீட்டில் கட்டின அடர்த்தியான மல்லிகையை முன் பக்கம் தெரியும் வகையில் வைத்து, ஒட்டு பொட்டுக்கூட வைக்காமல் குங்குமத்தில் தண்ணீர் விட்டு குழைத்து அதிலிருந்து வரைந்த பொட்டுக்கு கீழ் விபூதியும். தன் தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்பட்டு, ஆங்கிலத்தில் கொஞ்சம் தமிழும் கலந்து பேசும் சென்னை கல்லூரி பெண்கள் மத்தியில் இவள் அமெரிக்காவில் படித்தும் 'அம்மா, அப்பா' என்று அழகு தமிழில் அழைத்தது அவன் காதில் விழுந்தால் அவனுக்கு வியப்பாகத்தானே இருக்கும்?!

தமிழரசன், வாலிப வயதிலும் பொறுப்புணர்ச்சி மிக்கவன். கற்றது கையளவென்பதால் உலகளவை ஆராய்பவன். அமைதியானவன் ஆனால் ஒத்த ஆர்வமுடையவர்கள், நல்ல இரசனையுடையவர்கள் கிடைத்துவிட்டால் "விடுடா சாமி" என்றாலும் அன்புத் தொல்லையாக மொய்ப்பவன். தமிழ் விரும்பி. லட்சணமான முகவாகுடையவன். காதல் என்றால் காததூரம் ஓடுபவன்.

சீருந்தில் ஏறி, கையசைத்து விட்டு, வண்டி நகரும் போது மீனா மெல்லிய குரலில் தன்மையாக கேட்டாள் "எங்க போகணும்னு உங்களுக்கு தெரியும்ல?"

வியப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக அவள் குரல் காதில் தேனாக பாய்ந்ததால் திடுக்கிட்டு "தெரியும். நீலாங்கரை தானே?" என்றான். தேனாக அவனுக்குப் பாய்ந்ததின் காரணம் அவள் குரல் வளமில்லை மாறாக அவள் தமிழ் பேசியது. இவனை ஓட்டுனராக அனுப்பியது இவன் நல்ல ஆங்கிலமும் பேசுவான் என்ற காரணத்திற்காகவும்தான்.

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கும் மீனாவுக்கு சென்னை புதியதாகத் தோன்றியது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

"குளிர்மி வேண்டாமே, நான் இயற்கை காத்து வாங்கிக்கிறேன்" என்றபடி கண்ணாடியை இறக்கிக் கொண்டாள்.

மீண்டும் அதிசயப் பொருளாகவே மீனா தமிழரசுக்குத் தோன்றினாள். "வண்டில ஏசி வேலை செய்யலையா?" என்று அலுத்துக் கொள்ளும் உள்ளூர் ஆட்களின் குரல் அவனுக்கு எங்கோ ஒலித்து மறைந்தது.

நீலாங்கரை போய் சேரக் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும், அதுவரை வாயை அடக்க முடியாதவனாக மெல்ல பேச்சைத் தொடங்கினான் அரசு.

முன்னால் பார்த்தவாறே வண்டியை கவனமாக ஓட்டியபடி "நீங்க சென்னைக்கு வந்து எவ்வளவு நாளாகுதுங்க?" என்று தொடங்கினான்.

"ம்ம்.. என்ன கேட்டீங்க..?" கண்ணாடி தாழ்த்தி இருந்ததால் காற்றின் இரைச்சலில் சரியாகக் கேட்கவில்லை அதுமட்டுமில்லாமல் அவன் கேள்வியைச் சிறிதும் எதிர்பார்த்திராதவளுக்கு காதில் சரியாக விழவில்லை.

"நீங்க அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதா சொன்னாங்க, எத்தனை வருஷம் கழிச்சி சென்னைக்கு வரீங்க" என்று தெளிவாக கேட்டான்.

முன்னால் அவன் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்தாலும், அவனைப் பார்த்தபடி பதில் அளித்தாள் "இரண்டரை வருஷமாச்சு. ஆனா பல வருஷமான மாதிரி பல மாற்றங்கள் தெரியுது.." என்று சொல்லிவிட்டு புதிய இடத்தைப் பார்ப்பதுப் போல் கண்கொட்டாமல் வெளியே பார்த்து வந்தாள்.

"ம்ம்.. நிறைய மாற்றங்கள் இருக்கு, புதுப்புது மேம்பாலங்கள், சாலை விரிவுபடுத்தப்பட்டிருக்கு, இரு வழிப்போக்குவரத்து ஒருவழிப் பாதையாகி இருக்கு, மழை நீர் சேகரிப்பால் தண்ணீர் கட்டி நிற்கும் பிரச்சனையில்ல. ஆனா மாறாதது குடிநீர் பிரச்சனைதாங்க" தனக்கு நினைவில் இருந்ததை பட்டியலிட்டான்.

சில நிமிட அமைதிக்கு பிறகு "ஆமா, அமெரிக்கால தமிழ் பேசும் வாய்ப்பு கம்மி இல்ல?..." என்று இழுத்து அவள் பதிலுக்குக் காத்திருந்தான்.

சென்னையை இரசித்துக் கொண்டு வந்தவளுக்கு 'தமிழ்' என்று கேட்டவுடன் கேள்வியை உள்வாங்கிக்கொண்டு "யார் சொன்னா? அங்கு நிறைய தமிழர்கள் இருக்காங்க. எங்களுக்கு தமிழ்ச்சங்கமே இருக்கு. உலகெங்கும் மணப்பது தமிழ் மொழி" என்று பெருமிதத்துடன் சொன்னாள்.

மிகழ்ச்சியாக "அடேங்கப்பா, மொழிப் பற்று அதிகம் போல உங்களுக்கு. நீங்க தெரிந்துக் கொள்ள ஒரு விஷயம் சொல்றேன், நான் தமிழில் முதுகலை பட்டதாரி" என்றான் அவனும் பெருமிதத்தோடு.

வியப்பாக அவனைப் பார்த்தாள் மீனா.

போக்குவரத்து விளக்கு சிகப்பு என்று காட்டியவுடன் வண்டியை மெதுவாக நிறுத்தத்திலாக்கினான். வியப்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவின் பக்கம் தலை திருப்பி "என்னங்க நம்ப முடியவில்லையா? இப்போ நான் பி.எச்டி. பண்றேன் அதுவும் தமிழாராய்ச்சி பற்றிதான். நிறைய வாசிக்கிறேன், நிறைய எழுதித் தள்ளுறேன், செய்தி சேகரிப்பு கூடவே நடக்குது.." என்றான் சாதாரணமாக.

நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீனா கேட்டாள் "அப்ப ஏன் வண்டி ஓட்டுனரா இருக்கீங்க"

சிரித்துக் கொண்டே கண்களை சாலை விளக்கு பக்கம் திருப்பிக் கொண்டவன் கேட்டான் "ஏங்க வண்டி ஓட்டுனரா வேலை பார்ப்பது கேவலமா..?" அவள் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தான். "என் அப்பாவுக்கு அரசாங்க பணி, அம்மா பள்ளிக்கூட ஆசிரியை, என் அண்ணன் கப்பல் துறையில், அக்கா படிப்பு முடிஞ்சதும் கட்டிக் கொடுத்துட்டோம், அவள் கணவரும் அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியர். பின்ன நான் ஏன் வண்டி ஓட்டுறேன்னா, எனக்கு வாசிக்க எழுத நிறைய நேரம் தேவை. ஓய்வு நேரங்களில் என் சவுகரியத்திற்கு பணம் ஈட்ட நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தற்காலிகப் பணி இது" என்றான் விளக்கமாக.

"ம்ம், உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்" என்று சுருங்க முடித்துக் கொண்டாள்.

"நீங்க எழுதுவீங்களா? கதை, கவிதை இந்த மாதிரி.." என்று ஏதாவது பேசிக் கொண்டிருக்க புதிய தலைப்பைத் தொடங்கினான் வண்டியையும் நகற்றியபடி.

"ம்ம்.. எழுதுவேன்" என்றாள் ஒரே வார்த்தையில்.

"கதையா, கட்டுரையா, கவிதையா? எதை எழுதுவீங்க? எதில் ஆர்வம் அதிகம்?" அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை. எழுதுவேன் என்று சொன்னதும் ஊக்கத்தில் கேள்வியை அடுக்கினான்.

"தோன்றுவதை எழுதுவேன். என் கவிதைகள் சில வார ஏடுகளில், சில மின்னிதழ்களில் வெளிவந்துருக்கு" என்றாள் வெளியில் பார்த்தபடி.

அவளை பேட்டிக் காண்வது போல் தொடர்ந்தான் "எந்த மாதிரியான இதழ்களை படிப்பீர்கள்? வெறும் ஜனரஞ்சகமான இதழ்களா? அல்லது சுபமங்களா, கணையாழி, காலச்சுவடுன்னு கவிதாசரணெல்லாம் படிப்பீர்களா?"

சிற்றிதழ்கள் குறித்தும் அதன் தீவிர இலக்கிய நோக்கங்கள் பற்றியும் கேள்வி மட்டுமே பட்டிருந்தவளுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை அமைதியாக இருந்தாள்.

அவள் அமைதியை கலைக்க மறுபடியும் "என் தாய்மாமா நீதிபதியா இருக்காரு, அவர்கிட்ட நிறைய புத்தகங்கள் இருக்கும், ஒண்ணையும் விடாம படிப்பேன். கன்னிமரரா நூலகம் தெரியுமா? அதில் நான் ஆயுள்கால உறுப்பினர். அது லேசுப்பட்ட விசயமில்லீங்க அதற்கு எத்தனை பேர் சிபாரிசு செஞ்சி கையெழுத்துப் போட்டாங்க தெரியுமா? அப்புறம்தான் ஆயுள்கால உறுப்பினரா சேர்த்துக்கிட்டாங்க." என்று சொந்தக் கதைகளை அவிழ்த்துவிட்டான். வேகமாக ஓட்டினாலும் நிதானத்தைப் பிடித்திருந்தான்.

அவளைப் பேச வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், "கவிதை எழுதுற நீங்க கவிதைப் புத்தகங்களை வாசிப்பீங்களா?" என்றான் ஒரு கணம் முகம் திருப்பி அவளைப் பார்த்து.

"ம்ம்.. வாசிப்பேன்" என்று உற்சாகமாகப் பதில் வந்தது.

இடதுபக்க சன்னலருகே அமர்ந்திருந்த மீனா இடது பக்கமே பார்த்து வந்துக் கொண்டிருந்தவள் குளிர்ந்த காற்று மேலே தழுவியதும் வலது பக்கம் காற்றின் திசையை நோக்கிப் பார்த்தால், கடற்கரையை கடந்து கொண்டிருந்தது. சீருந்து இந்த அமைதியான கடலா சுனாமியை எழுப்பியது என்று திகைப்பாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வார்த்தையால் அவள் மவுனம் கலைத்தான் அரசு, "யாருடைய கவிதைகள் ரொம்ப பிடிக்கும்?.."

கடற்கரையை இரசித்தபடியே "யார் கவிதையானாலும் அழகானதாக இருந்தால் பிடிக்கும்" என்று வார்த்தைக்கும் வலிக்காத வண்ணம் கூறினாள்.

"சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வாசிச்சிருக்கீங்களா?" கருத்துப்பறிமாற்றத்தை தொடங்கினான்.

"வாசித்திருக்கிறேன்" கடற்கரையை கடந்து விட்டிருந்ததால் மறுபடியும் இடது பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"தேவையில்லாத விரசமான வார்த்தைப் பிரயோகம், ஒரு பெண் அப்படி எழுதி இருப்பது அநாகரிகமா இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க?" என்றான் அவன் கருத்தோடு அவள் ஒத்துப் போவாள் என்ற நம்பிக்கையில்.

"இல்ல. ஏன் பெண் எழுதினால் மட்டும் விரசம் என்று வித்தியாசப்படுகிறது.? அப்போ ஆண் எழுதினால் இரசிப்பீர்கள் அப்படித்தானே? அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை, ஏன் ஆண்- பெண் பேதம் எழுத்தில் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்" என்று அழுத்தமாக தன் கருத்தைச் சொன்னாள்.

சிறிதும் அந்த பதிலை எதிர்பாராதவன் கண்கள் விரிந்தன. ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் எந்தக் கலவரமும் இல்லாமல் யதார்த்தமாக சாதாரணமாக மறுபடியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக தடைப்பானை அழுத்தியதில் மீனா முன் பக்கம் வந்து மீண்டும் பின் பக்கம் தள்ளப்பட்டாள். வலது கையை இறுக்கமாக முன் இருக்கையை பற்றியிருந்தாள். என்னவென்பது போல் முன் பக்கம் தலையை தூக்கிப் பார்த்தாள்.

"மன்னிக்கணுங்க. ஒரு பூனை ஓடியது அதுதான்..." என்று சிறிதும் எதிர்பாராது குறுக்கே வந்த பூனைக்காக பதட்டமடைந்து வண்டியை அழுத்தி நிறுத்திய காரணத்தை தயக்கத்துடன் மீனாவிடம் கூறினான்.

இந்தத் திடீர் நிறுத்தம் காரணமாகப் பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி சீருந்தில் முட்டி விட்டது. கீழே இறங்கிய அரசு பின் பக்கம் போய் பார்த்தான். லேசான கீறல்,
"ஏன்யா இடைவெளிவிட்டு ஓட்டவேண்டியதுதானே" கையை நீட்டிக் கோபமாக கேட்டான். நியாயமாக அவன் தான் அரசைத் திட்டியிருக்க வேண்டும். வேகமாகச் சென்றவன் எதிர்பாராமல் தனது சீருந்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியது தமிழரசின் தவறுதான், இருப்பினும் முந்திக் கொண்டு அவனைத் திட்டிவிட்டு, மறுபடியும் வண்டிக்குள் ஏறி அமர்ந்தான். மூன்று சக்கர வண்டியின் முன் விளக்கில் பெரிய கீறல், இருந்தும் "வல்லவன் வகுத்ததே வாய்க்கால்" என்பதால் மூன்று சக்கர வாகன ஓட்டுனர் ஒன்றும் சொல்லாமல் முணுமுணுத்தபடியே வண்டியை இறங்கி பின்னால் தள்ளினான். ஆனால் வண்டியில் சவாரி ஒன்றுமில்லை.

வண்டியில் ஏறிய தமிழரசிடம் "ஒண்ணும் ஆகலையே" என்றாள் அக்கறையோடு.

அக்கறையின் ஆனந்தத்தில் மெல்லிய சிரிப்புடன் "ஒண்ணும் ஆகல" என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாகவே வண்டியை ஓட்டி வந்தவனுக்கு மறுபடியும் மீனாவிடம் ஏதாவது கேட்டுப் பேசிக் கொண்டு தொடர வேண்டும் போலிருந்தது.

"தி.ஜா. எழுத்துக்களெல்லாம் படிச்சிருக்கீங்களா?" என்று தொடர்ந்தான்.

"நீலங்கரைக்கு போக இன்னும் எவ்வளவு நேரமாகும்?" அவன் கேள்வியை கவனிக்காதது போல் மறு கேள்வி கேட்டாள்.

"இது திருவான்மியூர்.." விளக்க நினைத்தான்.

"தெரியுது, இன்னும் அதிக தூரமில்லையே?" ஏற்கெனவே தெரிந்திருந்ததால் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டாள்.

"கிட்டதான், வந்திடுச்சு.." என்று கொஞ்சம் வேகத்தைக் கூட்டியபடி கூறினான்.

அவள் 'பட்பட்'டென்று பேசும் சுபாவம் அவனுக்கு பிடித்திருந்தது. அவள் இலக்கிய ஆர்வமும் பிடித்திருந்தது. அவன் பேச்சுக்கு காது கொடுத்ததும் பிடித்திருந்தது. அவள் தமிழ் பேச்சும் பிடித்திருந்தது.

அவன் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் அவள் தெரியும்படி திருப்பி வைத்தான். புதியதாய் ஒரு உணர்வு அவனைப் பற்றிக் கொண்டிருந்தது.

அதைக் கவனிக்காமலேயே அவள் சேலையைச் சரி செய்துக் கொண்டாள். கோவிலைக் கடக்கும் போது கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அதையெல்லாம் இரசித்துக் கொண்டே வந்தான் தமிழரசு.

"எல்லா வகையான கவிதையும் பிடிக்கும் என்றீர்களே, காதல் கவிதைகள் யாருடையது பிடிக்கும்?" என்று பேச்சை மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான்.

அவன் கண்களை பார்க்காமல் வேடிக்கை பார்த்தபடி பதில் அளித்தாள் "ம்ம்.. குறிப்பிட்டு யாரையும் சொல்லத் தெரியலை, யதார்த்தத்தோடு ஒன்றி எழுதி, மனதைத் தொடும் எல்லா கவிதையும் பிடிக்கும். கவிதையாக படிப்பதைவிட பாட்டில் வரும் கவியரசின் வைர வரிகள், தாமரையின் கவிதை கலந்த பாடல்கள் எல்லாம் பிடிக்கும். பா. விஜயின் கவிதைகள், அறிவுமதி, யுகபாரதி, தபுசங்கர், நா. முத்துக்குமார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்."

"தேவதையின் தேவதைகள் படித்திருக்கிறீர்களா? ரொம்ப திகட்டலா தோன்றவில்லை?" என்றான் முகம் சுளித்தவாறு.

"அப்படியொன்றும் தோன்றவில்லை. அழகியல் அதிகமிருந்தாலும் அழகாகவே இருந்ததாக எனக்குப்பட்டது. நல்ல இரசனையோடு எழுதியிருக்கிறார் கவிஞர்" என்றாள் இரசித்தபடி.

என்ன இரசனையோ என்று சலித்துக் கொண்டவாறு "உரைநடை வீச்சுதானே அதிகம்? கவிதையாக ஒன்றுமே எனக்கு தென்படவில்லை."

"அது என்னவோ உண்மைதான், இருப்பினும் ஒரு பெண்ணை இப்படியெல்லாம் இரசிக்கலாமா என்று பிரம்மிப்பாக இருந்தது எனக்கு" என்று 'கலுக்'கென்று சிரித்தாள் நட்புணர்வோடு.

நீலாங்கரை நுழைந்ததும் அவள், "அடுத்த தெரு, இடதுப்பக்கம்" என்று வழியைக் கவனமாக பார்த்துக் கொண்டு வந்தாள்.

வண்டி இடதுபக்கம் திரும்பியதும் "மெதுவாப் போங்க.." வீடுகளை கவனித்தபடி தன்மையோடு. "இந்த வீடுதான்" என்று ஒரு புன்முறுவல் வைத்தாள் தோழிகளை காணப் போகும் மகிழ்ச்சியில்.

கதவைத் திறந்து இறங்கிக் கொண்டவள் தன் கைப்பையை மாட்டிக் கொண்டு வீட்டை ஒருமுறை மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டு, குனிந்து "போய்ட்டு வரேங்க, உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சிரித்த முகமாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் கதவை அடைத்தாள்.

உள்ளே இருந்து சுஜா வர, அவளை நோக்கி கைகளை விரித்து "சுஜி" என்று கூறி அரவணைத்துக் கொண்டாள்.

தமிழரசன் அவளைப் பிரிய மனமில்லாமல் சீருந்தின் ஒலியெழுப்பியை அழுத்தினான், முக மலர்ச்சியோடு திரும்பிப் பார்த்த மீனா "ம்ம்.." என்றாள் 'என்ன' என்பது போல்.

"சாயங்காலம் எத்தன மணிக்கு வரணும்?" என்று ஆவலாக கேட்டான்.

"நான் கூப்பிடுறேனே.." அவளுக்கே தெரியாது என்பதாலும் இவனுக்கேன் அப்படியொரு அக்கறை என்பது போலவும் பதில் வந்தது.

'சரி'யென்று தலையாட்டி அவளைப் பார்த்தபடியே வண்டியை திருப்பிக் கொண்டு போனவன் மனதில் மாலையின் சந்திப்பை நினைத்து பூரிப்பு. வண்டியில் இருந்து இறங்கினாலும், மனதில் ஏறிக்கொண்டவளை நினைத்துக் கொண்டு வண்டியில் நல்ல பாடல் ஒலிக்க செய்தான்.

உள்ளே வந்த மீனாவின் செல்பேசி ஒலித்தது. "அப்பா, இப்பதான் வந்து சேர்ந்து உள்ளே நுழையிறேன்."

நிம்மதி மூச்சுடன் "சரிம்மா. அப்ப சாயுங்காலம் எத்தன மணிக்கு வண்டி வேணும்னு முன்கூட்டியே சொல்லிடு" என்றார் சொல்லி வைத்தாற்போல.

"நானே சொல்லனும்னு நினைச்சேன்ப்பா... வண்டி எத்தன மணிக்குன்னு சொல்றேன் ஆனா இப்ப வந்த ஓட்டுனர் வேணாமே.." என்றாள் தயக்கத்தோடு.

"ஏம்மா ஏதாவது பிரச்சனையா" அப்பா உடனே பதறிவிட்டார்.

"அதெல்லாம் இல்லப்பா, ஆனா வேணாம். நீங்க ஒண்ணும் சொல்லிக்காதீங்க, வேற ஆளு மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்" என்றாள் மீனா.

மகளைப் புரிந்துக் கொண்டவனாக "சரிம்மா, வைக்கிறேன்" என்றார் அப்பா.

"சரிப்பா, அப்புறம் அம்மாக்கிட்ட பேசுறேன்னு சொல்லுங்க" அம்மாவின் மனதை அறிந்துரைத்தாள்.

இணைப்பு துண்டிக்கப்பட்டதும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சுஜா ஆவலாக "ஏண்டி, ஏதாவது பிரச்சனையா?" என்று மறுமுனையில் அப்பா கேட்டதையே கேட்டாள்.

"அதெல்லாம் இல்ல. சரியான தொணதொணப்புடி அந்தாளு. ஒரு நிமிஷம் வாய மூடல. எல்லாம் தெரிஞ்ச மேதாவின்னு நெனப்பு அவனுக்கு. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், பள்ளிக்கூட வாத்தியாரு மாதிரி கேள்விக்கேட்டுக்கிட்டே சாகடித்தான். மனம்புண்படுத்த வேண்டாமேன்னு பாவம்னு பதில் சொல்லிக்கிட்டே வந்தேன். முகம் கொடுத்து பேசல இருந்தும் விடாம.. அப்பப்பா.." என்று அந்த எரிச்சலை நினைவுப்படுத்தாதே என்பது போல முகம் சுளித்தாள்.

சரி இவள பேசவிட்டா அவ்வளவுதான்னு தோழிகள் கூடி இருக்கும் அறைக்குள் மீனாவை இழுத்துச் சென்றாள் சுஜா. அங்கே நுழைந்ததும் மகிழ்ச்சி சூடிக் கொண்டு எக்களிப்பில் திளைத்தனர்.

Tuesday, May 29, 2007

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?


இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி ஒலியை உருவாக்க முடியாதோ அது போல.. இந்நிலையில் குடும்பத்தின் பொருளாதாரத் திட்டங்களில் கணவனுக்கு மனைவி பக்கபலமாக இருந்து உதவுதலும், தேவையான பொழுதுகளில் கணவனுக்கு அறிவுறுத்துவதும் மிக மிக அவசியமாகும்.

இரண்டு மாடு சேர்ந்து இழுக்கும் வண்டியைப் போலத்தான் குடும்ப வாழ்க்கையும். கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து புரிந்து சேர்ந்து முடிவெடுத்து திட்டமிட்டால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழலும்.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும்போது தன் தேவையை மட்டும் கவனித்துக்கொள்வது, அனாவசியச் செலவுகள் செய்வது என்று பழக்கப்பட்டு விடுகிறான். அவனுக்குத் திருமணமென்று நேர்ந்து குடும்பப் பொறுப்புகள் கூடும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாக புது பொறுப்புகளை கடிந்துக் கொள்கிறான். என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் செய்வது எப்படி என்பதை ஒரு தனிப்பாடமாக இன்னும் கட்டாய கல்வியில் கொண்டு வரவில்லைதானே?! ஆனால் பெண்கள் அப்படி இல்லாமல் திருமணத்திற்கு முன்பிருந்தே தன் தாய்- தந்தையின் வாழ்வை கூர்ந்து கவனிப்பவளாக இருந்து, தந்தைக்கு கணக்கு வழக்குகளிலும், தாயாருக்குக் குடும்ப நிர்வாகத்திலும் உதவியாகப் பங்கேற்று பொறுப்புடன் தலைப்பட தொடங்கிவிடுகிறாள். அவளுக்குத் திருமணமாகி போன பிறகு தன் கணவன் ஈட்டி வரும் வருமானத்திற்குள்ளாக செலவு செய்து செவ்வனே குடும்பம் நடத்த இந்த அனுபவம் அவளுக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமா என்றால் போதாது? அடிப்படைச் செலவுகளைக் குறைப்பதில், தேவையறிந்து செலவு செய்வதில் மட்டுமே ஒரு மனைவியின் பங்கு இருந்தால் மட்டும் போதாது. மாறாக ஒட்டுமொத்தமாகக் குடும்பப் பொருளாதாரத் திட்டமிடுதலில் மனைவியும் ஈடுபடும்போதுதான் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதோடு, இந்த பங்கிடுதல் குடும்பத்தில் பாசப்பிணைப்பையும் அதிகமாக்குகிறது. எப்படி என்று பார்க்கலாமா?


பொதுவாகவே கணவன் - மனைவி இருவரில் ஏதேனும் ஒருவருக்குச் செலவு செய்ய அலாதிப் பிரியமிருக்கும் மற்றொருவருக்கோ வருங்காலத்திற்காகக் சேமிப்பதே நோக்கமாயிருக்கும். இப்படி இருவேறு துருவங்களாக இருவரும் இருந்தால் அதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் என்னவென்பது நமக்குத் தெரிந்ததுதானே?! இதைத் தவிர்க்க வேண்டுமானால் ஒரு கூட்டு முயற்சியும், அதற்காக இரண்டு மூளைகளும் சேர்ந்து செயல்படுவதும் அவசியமாகிவிடுகிறது.

உலகமயமாக்கல் காரணமாக திறந்த சந்தை வெளி பெருகி விட்ட இந்தக் காலத்தில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளைத் தூண்டி ஏதேனும் பொருளை எப்படியாகிலும் விற்றுவிடும் முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நுகர்வோர் சந்தை வெகு இலகுவாக செலவுகளை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையாகிறது. கணவன் - மனைவி இருவருமே வேலைக்குப் போக வேண்டிய தேவை இருப்பதால் இருவருமே மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டியதிருக்கிறது. முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியுமென்று ஒரு சொலவடை உண்டு அதன்படி வருமானத்தின் அருமை புரிந்து எந்தப் பொருள் தேவையோ அந்தப் பொருளை வாங்குவது, அந்தப் பொருளை எங்கு வாங்கினால் நியாயமான விலைக்கு கிடைக்கும் என்று மிகுந்த கவனத்துடன் செயல்படுவதும், குழந்தைகளுக்கு எந்த உணவுப் பண்டத்தில் சத்து அதிகம், தூய்மையான நல்ல தரமுள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது எங்கே என்று பார்த்துப் பார்த்து வாங்குவதும், அவசரமயமான பணிச்சூழல் காரணமாக உணவகத்தில் அன்றாடமாகவோ அடிக்கடியோ வாங்கிச் சாப்பிடுவதினால் உடலுக்குக் கேடு வராமலும் வரவு- செலவில் துண்டு விழாமலும் பாதுகாப்பதில் பெண்கள் இயல்பாகவே கெட்டிக்காரர்கள். எனவே, இந்த இயல்பை குடும்பப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால் அதனால் நன்மைகள் மட்டுமே விளையும்.

வேலைக்குப் போனாலும் வீட்டுப்பொறுப்பையும் கவனித்து, குடும்பத்தையும் நிர்வாகம் செய்து, குழந்தைகளிடமும் அக்கறையுடன் அன்பு செலுத்தும் பண்பும், மிகுந்த சகிப்பு தன்மையும் மிக்கவர்கள் பெண்கள் என்பதைப் புரிந்து கொண்டு நடக்காமல் 'நீ சொல்லி நான் என்ன கேட்பது' என்பது போல் நடந்து கொண்டால் வாழ்வு சுமூகமாகச் செல்லாது என்பது மட்டுமல்ல, அதனால் குடும்பப் பொருளாதாரத்திலும் பல சிக்கல்கள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்.

இரண்டு வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த, வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் திருமணத்தில் இணையும் போது பலவிதமான பிரச்சனைகள் எழும். ஆயினும் விட்டுக் கொடுத்து போதல், புரிந்து கொள்ள முயற்சித்தல் என்ற மந்திரங்களைக் கையாண்டால் பிரச்சனைகள் அதிகமாக வர வாய்ப்பில்லை. வரவு- செலவு கணக்கை தீர்மானித்து அதற்கேற்ப செலவு செய்து இந்த மாதம் இந்த பொருட்கள் வாங்குதல் கட்டாயம், இந்த பொருள் வீண் அல்லது வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று மனைவி எடுக்கும் தீர்மானங்களை கவனத்தோடு கேட்டு கணவர் ஆமோதித்தால் தேவைக்கேற்ற செலவுகளுடன் சிக்கனமாக வாழலாம். ஒருவருடைய கருத்தை மற்றவர் காது கொடுத்து கேட்பதென்பது மிக அவசியம். அப்போதுதான் ஆலோசித்து முடிவும் எடுக்க முடியும்.

கணவருக்குப் பலவிதமான அலுவல் வேலை இருப்பதனால் குடும்ப நிர்வாகத்தையும் சேர்த்து கவனிப்பது என்பது கடினமாக இருக்கலாம். ஆனாலும் எந்த வகையில் மனைவியால் உதவிட முடியும் என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்யும். ஓடும் வாகனத்தின் கதவு அரைகுறையாக மூடியிருப்பதைப் பார்த்தால் யாரென்றே தெரியாத போதும் அக்கறையுடன் குறிப்பாலோ சைகையாலோ சுட்டிக்காட்டுவோம். அப்படி முன் பின் தெரியாதவர்களுக்கு நாம் செய்யும் போது நம் குடும்பத்தைத் தலையில் சுமக்கும் மனைவிக்கு நம்மை விட அக்கறையுண்டு என்பதில் முதலில் நம்பிக்கை பிறந்து மனைவியை குடும்ப நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும். அவர்கள் முயற்சியெடுத்து செய்யும் சிறு சேமிப்பையும் ஆதரித்து மெச்சினால் இன்னும் திறம்பட செய்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு மாதம் முழுக்கக் கஷ்டப்பட்டு ஈட்டிவரும் சம்பாத்தியத்தை சிக்கனமாகச் செலவழித்துச் சேமித்து வைக்கும் பொறுப்புள்ள மனைவி மீது தானாகவே கணவனுக்கு ஒருவித ஈர்ப்பும் அன்பும் ஏற்பட இது நல்ல வாய்ப்பை உருவாக்கும்.

சிலர் இரகசியமாக வைப்பு நிதியை மனைவியறியாமல் சேமிப்பார்கள். ஏதேனும் காரணத்தால் அவருக்கு திடீர் மரணம் நிகழ்ந்தால் அப்படியொரு சேமிப்பு இருப்பதே தெரியாமல் 'நாய் பெற்ற தேங்காயாக' அது யாருக்கும் பயன்படாமல் போய்விடுவதையும் நாம் உலகில் பார்க்கத்தானே செய்கிறோம்? அப்படி நிகழாமல் இருக்க கணவருடைய கடன், வரவு, வைப்பு நிதி, காப்பீடு இவற்றையெல்லாம் பற்றி மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறிந்து கொண்டால் அதற்கேற்ப வரவு- செலவைக் கையாளலாம். வேறு வருமானம் இல்லாதபட்சத்திலும் மனைவி கணவருடைய கடனையும் வருமானத்தையும் தெரிந்து வைத்திருந்தால் விரலுக்கேற்ற வீக்கமாக சிக்கனமாகச் செலவிடலாம். இல்லாவிட்டால் வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனாதான். நாளை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். மாறாக, கணவரின் பொருளாதார நிலையை உணர்ந்து அவரது சேமிப்பிற்கும் இதரப் பிரச்சனைகளுக்கும் மதியாலோசனையுடன் தீர்வைச் சொல்லும் மனைவியாக நடந்துக் கொண்டால், கணவர் இறுக்கத்திலிருந்து விடுபட்டு மனைவியுடன் நெருக்கமாவார்.

வரவும், செலவுகளும் வெளிப்படையாகத் தெரியும் போது கணவர் மீது மனைவிக்கோ மனைவி மீது கணவருக்கோ தேவையற்ற சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி கணவர் செய்யும் அனாவசியச் செலவுகளை ஒடுக்க மனைவிக்கு அதுவே நல்ல வாய்ப்பாக அமையும். புகைப்பிடிக்கும் பழக்கமோ மற்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் பழக்கமோ கணவருக்கு இருந்தால் அதற்கான செலவுகளை அவருக்கே காட்டி பயமுறுத்தி அந்த பழக்கத்தை குறைத்துக் கொள்ளவோ கைவிடவோ செய்ய முடியும். இப்படி ஒளிவுமறைவற்ற அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருவித பரஸ்பர அன்பு நிலவுவதோடு தேவையற்ற பழக்கத்திலிருந்து விடுபடுவதோடு செலவையும் குறைக்க முடியும். ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்று கூடச் சொல்லலாம்.

கடன் அட்டைகள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பணத்தைக் கையில் சுமக்காமல் எளிதாக உபயோகிக்க அது ஒரு பெரும் ஆறுதல்தான். ஆனால், அது நெருப்பைப் போல. கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைக்கும்தான் அதனால் பயன் அதிகம். கட்டுப்பாட்டை மீறினால் உடம்பைச் சுட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆகவே கணவருக்கு எத்தனை கடன் அட்டைகள் உள்ளன, எந்தத் தேதியில் பணம் அடைக்க வேண்டுமென்று தெரிந்து வைத்துக் கொண்டால் அதைப் பற்றி கணவருக்கு நினைவுப்படுத்தவோ அல்லது தாமே நேரிலோ, கணிணியிலோ கட்டணத்தை செலுத்தி விடுவதனால் தாமதமாக பணம் செலுத்துவதால் வரும் அபராதத்திலிருந்து தப்பிக்கலாம். தவணை முறையில் பொருள் வாங்குவது, கடன் அட்டையில் கடனுக்குப் பொருளை வாங்குவதென வீண் வட்டி செலுத்துவதை விட உரிய நேரத்தில் முழு பணத்தையும் அடைத்துவிடுவதன் அவசியத்தை உணர்த்தி அவ்வாறு செய்ய கணவரைத் தூண்டலாம். அல்லது மனைவியே அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதே நேரம் கடனட்டைகள் மூலம் கிடைக்கும் வாணிபச் சலுகைகளையும் அனுபவிக்கலாம் என்று கணவரை வலியுறுத்தி செயல்பட செய்து கடன் அட்டையிருந்தும் கடனாளியாக இல்லாமல் இருக்கலாம். முடிந்தால் கடன் அட்டையையே ஒழிக்கவும் முயற்சிக்கலாம்.

முன்பெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறான் என்று சொல்வார்கள் இப்போதெல்லாம் தண்ணீருக்கும் பணம் என்ற நிலை அதனை அறிந்து தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகச் செலவழித்து நல்ல பெயர் வாங்குவதில் கணவர்- மனைவி இருவரும் போட்டி போட்டால் அவர்களை பின்பற்றும் பிள்ளைகளும் இயல்பாக சிக்கனமாக இருக்க கற்றுக் கொள்வார்கள். இது குடும்பத்திற்கு மட்டுமான திட்டமிடல் கூட இல்லை. இயற்கை வளம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான செயலும் கூட. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, பள்ளிக் கட்டணம் என்று மாதா மாதம் வரும் பட்டியலை தயார் செய்து எப்போது செலுத்த வேண்டுமென்று அறிந்தும் வைத்துக் கொண்டு பணத்தை உரிய நேரத்தில் கட்டிவிடலாம். விலைப்பட்டியல்களையும், ரசீதுகளையும், வங்கியிலிருந்து வரும் கணக்கு விபரங்களையும் சரி பார்த்து ஒழுங்காக ஒரு கோப்பில் அடுக்கிவைத்தால் இந்த மாதத்திற்கும் போன மாதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறியலாம். இவ்வகையான சின்ன விஷயமாகத் தெரியும் வேலைகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் கணவருக்கும் தன்னாலான உதவிகளை மனைவிக்கு செய்ய உந்துதல் வரும்.

என்னதான் ஞாபக சக்தி இருந்தாலும் தினப்படி நடக்கும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். இதன் மூலம் இது தேவையற்ற செலவு வரும் நாட்களில் இது இருக்கக் கூடாது என்பதை கண் கூடாகப் பார்த்து புத்திசாலித்தனமாக கையிருப்பை எப்படி புது முதலீட்டில் செலுத்தலாம் என்பதைப் பற்றியும் யோசிக்க அது உதவும். செலவு செய்யும் போது கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்குமான வேறுபாட்டை மனைவி கணவருக்கு எடுத்துச் சொல்லலாம். தேவையான பொருட்களையும் வாங்காமல் மிச்சப்படுத்துவது சிக்கனமல்ல லோபித்தனம், அதே போல் ஆடம்பரமென்று ஊதாரித்தனமும் கூடாது செலவு செய்வதை ஒரு கலையாக எண்ணி நடைமுறைப்படுத்தினால் எதுவும் கடினமாகவே இருக்காது என்பதை பொருளாதாரத் திட்டமிடுதலின் மூலமாக ஒரு மனைவியால் உணர்த்த முடியும்.

அன்றாடச் செலவுகளைத் தவிர மற்ற திடீர் செலவான மருத்துவ செலவு, விடுமுறை கொண்டாட்டம், பண்டிகை நாட்களுக்கான விசேஷ செலவு, எதிர்பாராமல் கார் பழுதடைந்தாலோ, விபத்து நேர்ந்தாலோ ஆகும் உபரி செலவு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைக்காமலிருந்தால் 'பட்ஜெட்'டில் துண்டென்ன வேட்டியே விழும். வரவு- செலவு பட்டியலிடாமல் இருந்தால் செலவுகள் கணக்கில்லாமல் போய்விடும். வரவு- செலவு எழுதிய படி செயல்பட முடியவில்லை என்று கைவிட்டுவிடாமல் அதற்கென்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணவர்- மனைவி இருவரும் நேரம் ஒதுக்கி சரியாக திட்டம் தீட்டினால் முடிவு பலன் தரும், சேமிப்பும் கூடும். இப்படி அடிக்கடி செலவுகளை விவாதிப்பதில் மனைவி முன்கையெடுப்பதன் மூலம் கணவருக்கும் குடும்பச் செலவுகள் குறித்த பூரணமான நிலை தெரிய வரும். இப்படி செய்வதனால் 'ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் திண்டாட்டம்' என்றெல்லாம் பாடத் தேவையே இருக்காது.. இப்படி அடிக்கடி விவாதிப்பதும், குடும்பம் தொடர்பான செலவுகளைப் பகிர்ந்து கொள்வதும் குடும்பச் செலவுகளுக்கு ஒரு வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்துவதோடு, பகிர்ந்துகொள்ளுதலும், புரிந்துணர்வும் கணவன் மனைவியிடையே அதன் மூலம் அதிகமாகிறது. இது குடும்பத்திற்கே ஒரு சாந்தமான சூழலை உருவாக்கித் தருகிறது என்பதும் உண்மை - உண்மையைத் தவிர வேறில்லை.

வாழ்க்கை என்பது கொஞ்ச காலம் மட்டும்தான். நாளை என்பதை யாரறிவார் என்று அலட்சியமாக இருந்தால் அதுவே வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அதனை கணவருக்குப் புரியவைத்து, கட்டுக்கோப்பான ஒரு பொருளாதாரச் சூழலை உருவாக்கி குடும்பப் பொறுப்புகளைக் கரிசனத்தோடு செயல்படுத்தும் பெண்களுக்கு அங்கீகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்படுதல் மிக அவசியம். இது போன்று தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு பெண்ணுக்கு தன் குடும்பம் சார்ந்த பொறுப்புணர்வை இன்னும் அதிகமாக்கவே செய்யும். இது சில வேளைகளில், ஆரம்ப காலங்களில் சில பிணக்குகளுக்கு வழி வகுத்தாலும் கூட நீண்ட காலத் திட்டமிடுதலுக்கு இது மிக முக்கியமானது என்பதை இருவருமே உணரும் நிலை ஏற்படும். அது கணவனுக்கும் மனைவிக்குமான உறவை வலுப்படுத்தும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றில்லாமல் அமைந்த மனைவியை வரமாக மாற்றி, இல்லாள் என்பவள் வாழ்க்கை துணை, அன்பு செலுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள என்பதை புரிந்துக் கொண்டு தலைப்பட்டு குடும்பத்தின் பொருளாதாரத் திட்டமிடுதலில் மட்டுமல்ல எல்லா விஷயங்களில் சேர்ந்து முடிவெடுத்தால் ஒரு பல்கலைகழகமாக நல்லதொரு குடும்பமாக வாழ்வே ருசிக்கும்.

Tuesday, May 22, 2007

பாரனாய்ட் - Paranoid

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க. காரணம் 'பாரனோயா'னாலே 'பைத்தியக்காரத்தனம்'னு பொருள். ஆங்கிலம், ஹிந்தி படங்கள அதிகம் பார்க்கிறவங்களுக்கும் இது புது வார்த்தையில்ல, ஏன்னா தமிழ்ல பைத்தியக்காரின்னு சாதாரணமா திட்டுறா மாதிரி அவங்க ரொம்ப சுலபமா உபயோகிக்கிற வார்த்த அது. ஆனா அந்த அளவுக்கு 'பாரனாய்ட்' சுலபமா குணப்படுத்திடக் கூடிய நோயான்னா இல்லன்னுதான் சொல்லனும்.

நீங்க தன்னம்பிக்கை மிக்கவரா? அதுல தப்பேயில்ல ஆனா மிதமிஞ்சி பொங்கி வழியுற அளவுக்கு நம்பிக்கையிருந்தா பிரச்சனைதான். என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்துல நம்பிக்கை வைக்கலாம் அதப்பத்தி உறுதியாவும் பேசலாம் ஆனா தெரியாத விஷயத்த பத்தி நீங்களே நினச்சுக்கிட்டு இப்படித்தான் இருக்கும்னு ஒரு முன்முடிவோட இருந்துக்கிட்டு சந்தேகப்படுவது முட்டாள்தனமா பைத்தியகாரத்தனமா? என்ன குழப்புறேனா? சரி தெளிவாவே சொல்லிடுறேன். ஒருத்தர் எப்போதும் மத்தவங்க மேல அவநம்பிக்க வச்சி சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்து, ஒவ்வொரு செயலிலும் குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டு இல்லாத பொருள தேடிக்கிட்டு 'நான் சொல்றதுதான் சரி, நான் புடிச்ச முயலுக்கு ஒன்றரைக் காலுன்னு' (மூணுகாலுன்னுதான் அடம்பிடிக்கணுமா என்ன?) அடம்பிடிச்சிட்டிருந்தா இந்த 'பாரனாய்ட்' குணக்கேடுல மாட்டிக்கிட்டாங்கன்னு அர்த்தம். 'பாரனோயா'வால் (Paranoia) பாதிக்கப்படுகிறவர்கள்தான் 'பாரனாய்ட்'. அடம்பிடிக்கிறது எல்லா குழந்தைங்கக்கிட்டயும் இருக்குற குணம். குழந்தைகளா இருக்கும் போது புரியாம அடம்பிடிப்பத நாம குழந்த குணம்னு விட்டுடுவோம். குழந்தையும் வளர வளர நாலுபேருக்கிட்டப் பேசிப் பழகும் போது, பெற்றோர் நடத்தையையும் மத்தவங்க வழக்கங்களையும் பார்க்கும் போது தன்னையே மாத்திக்கிற பக்குவம் வரும். ஆனா பெரியவங்களா ஆனா பிறகும் இப்படி இருக்கிறவங்களுக்கு எந்த உறவுமே நிலையாவோ நெருக்கமாவோ வர முடியாது. ஏன்னா 'பாரனாய்ட்' நோயாளி நெருங்கிப் பழகுறா மாதிரி இருக்கும் ஆனா மனசளவில தூரமாத்தான் இருப்பாங்க. உள்ளுக்குள்ள வஞ்சம் வச்சிக்கிட்டு இதுக்கு இப்படித்தான் அர்த்தம், எத பேசினாலும் நம்மளத்தான் குத்திக்காட்டி மறைமுகமா ஏதோ பேசுறாங்க, இவ செய்ற செயல் நம்மள கெடுக்கன்னு, தானே நினச்சுக்கிட்டு மனசுக்குள்ள எப்பவுமே போராடிக்கிட்டு இருப்பாங்க. சுருக்கமா சொன்னா கற்பனை திறன் இவங்களுக்கு அலாதி, கத கட்டுறதுல ஞானி, குதர்க்கமான சிந்தனைவாதி.

இதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லட்டா? ஒரு நெருக்கமான ஒருத்தரோட அழைப்புக்காக காத்திருக்கீங்க, அவங்களும் உங்கள அழைக்கிறதா சொல்லிருக்காங்க ஆனா தவிர்க்க முடியாத காரணத்தால அழைக்க முடியல. நீங்க அழைக்கும் போதும் எடுத்துப் பேசுற சூழ்நிலையில இல்லன்னு வச்சுக்கோங்க, சரி ஏதோ பிரச்சன அதான் பேச முடியல, அவங்க சூழ்நில அப்படின்னு நல்லவிதமா நினச்சுக்கிட்டா நல்லது. அப்படியில்லாம வேணும்னே எடுக்கலன்னு நினச்சுக்கிட்டு காரணம் கேட்டும் திருப்தியில்லாம அப்படியிருக்க முடியாது 'பொய்'னு தலையில ஒலிச்சுக்கிட்டே இருக்கிறதனால தையத்தக்கான்னு குதிச்சா 'பாரனாய்ட்'. இதுதான் எல்லாரும் செய்ற விஷயமாச்சேன்னு நீங்க கேட்கலாம். அதுக்காக எல்லாத்துக்கும் 'பாரனாய்ட்'னு சொல்ல முடியாது. இப்படி தோணும் போதே 'ச்சே நமக்கேன் இப்படி தப்பு தப்பா நினக்க தோணுது, அவங்க சொல்றதுல உண்மையிருக்குன்னு மனச நாமே சமாதனப்படுத்திக்க முடியும்னா தப்பிச்சோம். 'பாரனாய்ட்' வந்த பிறகு குணப்படுத்த மருத்துவர தேடுறத விட அதுல விழுந்திடாமப் பார்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம். நம்மள நாமே காப்பாத்திக்க முடியிலன்னா நெலம முத்திப் போயி கண்டதுக்கெல்லாம் குறுக்குக்கேள்வி வந்து வாழ்க்கையே போராட்டமாயிடும். இது நாய் குணம் மாதிரி. சில நாய் பார்த்திருக்கிறீங்களா காரைத் துரத்திக்கிட்டே போகும், அல்லது கண்ணுக்கு பயமா தெரியுற ஏதையாவது பார்த்து குரைக்கும் அந்த மாதிரிதான் இதுவும். இந்த சூழல் ஒரு நட்புக்கிடையே வந்துச்சுன்னா 'நம்பிக்க இல்லன்னா போடா'ன்னு சொல்லிட்டு அவங்களா மன்னிச்சி திரும்ப வர வரைக்குமிருக்கலாம். அப்படியில்லாம கணவன் - மனைவிக்குள் வந்திடுச்சுன்னா யோசிச்சு பாருங்க - வாழ்வே நரகம்தான். 'பாரனாய்ட்' நோயால கொலை செஞ்சக் கதையெல்லாம் கூடஇருக்கு. இப்படிப்பட்டவங்க நம்மக்கு நெருங்கின உறவா இருந்தா இவங்களப் பார்த்துப் பரிதாபப்படுறதா, கோபப்படுறதானே தெளிவாயிருக்கிறவங்களுக்கும் குழப்பமாப் போயிடும்.

பொதுவா இந்த 'பாரனாய்ட்' தாக்கம் இரு வேறுப்பட்ட தகுதிகளுக்கிடையே உள்ள உறவுக்குள்ள வர பிரச்சனை. இத 'இரொடொமேனியா' (Erotomania) அப்படின்னு சொல்லுவாங்க. ஒருவர் பிரபலமாயிருந்தா அவங்க நெருங்கிய உறவான அம்மா, தங்கை, நண்பர்னு யாருக்கு வேணும்னாலும் இந்த நோய் வரலாம். ஏன்னா அவங்கள மாதிரி நாம இல்லங்குற தாழ்வுமனப்பான்மையில அவங்க உதாசினப்படுத்துறாங்கன்னு, அவங்க செய்யுற செயல் ஒவ்வொண்ணும் நம்மள மட்டம் தட்டுறதுக்குன்னு தோணிக்கிட்டே இருந்தா 'பாரனாய்டா' வெடிக்கும். குறைகுடம் கூத்தாடுவது சகஜம்தானே? பாரனாய்டில் பலவகைகள் இருக்கிறது 'புரியாத புதிர்' ரகுவரன் ஒருவகைன்னா 'வல்லவன்' ரீமா சென், 'ஆளவந்தான்', 'அந்நியன்' எல்லாம் ரொம்ப முத்தின வேறு வகை. பாரனாய்ட்வாதிகளுடைய சிந்தனை சிதறல் எப்படியிருக்கும் தெரியுமா?

* காலிப் பாத்திரம் மிகுந்த சப்தமிடுறா மாதிரி சின்ன விஷயத்தையும் பிரம்மாண்டபடுத்திப் பெருசா யோசிப்பாங்க.
* நீ பெரியவளா நான் பெரியவனா என்கிற மாதிரி வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிற்பாங்க.
* தான் நினைக்கிறது, புரிஞ்சுக்கிறது மேல அவ்வளவு நம்பிக்க அவங்களுக்கு - தான் நினைப்பது சொல்றதுதான் சரின்னு உறுதியாயிருப்பாங்க.
* தன் தவறை மறைக்க மத்தவங்க மேல பழி போடுவாங்க. (உத. கணவனுக்கு மனைவி மேல சந்தேகம் என்பதையும் நேரடியாக் காட்டிக்காம அவ இப்படி உன்னப்பத்தி சொல்றா அப்படின்னு மத்தவங்க மேல பழி போட்டு கேள்வி எழுப்புவாங்க)
* நெருங்கியவங்க எப்போதும் ஏமாத்துறாங்க என்ற உணர்வோடு மறைகழண்டு ஆடுவாங்க.
* பிடிச்சபிடியா உரிமையென்ற பேருல உயிரெடுப்பாங்க, சந்தேகப் பிசாசுங்க.

இப்படில்லாமிருக்கிறதால உறவற்று போயிடுவாங்க, தனியாயிருப்பத ஆரம்பத்தில் நல்லாயிருக்குன்னு நெனச்சாலும் 'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை'யாச்சே ஏதாவது குழப்பிக்கிட்டே இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு கணக்குப் போட்டுக்கிட்டு வாக்குவாதத்தில் ஆரம்பிச்சு சண்டையிலப் போயி நிற்கும். தனிமைப்பட்டுப் போன மனசுக்கு பாதுகாப்பில்லாம பய உணர்வு கூடும் அதுவே தூக்கத்தக் கெடுக்கும், பிடிச்ச விஷயங்களக் கூட செய்யப்பிடிக்காமப் போகும். இப்படிப்பட்டவங்கள பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது, இவங்கள கையாள்வது ரொம்ப கஷ்டம்.

சாதாரணமா இருக்கிறவங்க திடீர்னு தாக்கத்தால சின்ன விஷயத்திற்குக் கூட குரல உயர்த்தி சண்டப்போடுவாங்க. தன்னிலை மறந்து நடந்துக்கிறவங்களும் இருக்காங்க, தான் இப்படியெல்லாம் பேசுறோம்னு தெரிஞ்சும் தன்னையே கட்டுப்படுத்த முடியாதவங்களும் இருக்காங்க. தன் மேல கவனம் வரணும் என்பதற்காகவே ரொம்ப விஷேசமா ஆடுவாங்க. இப்படி வித்தியாசமா ஆடும் போதுதான் அத சாமி வந்திடுச்சுன்னும், பேய் புடுச்சிடுச்சுன்னும் மந்திரிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

இந்தப் பிரச்சனை வர்றதுக்கு காரணம் மூளையில 'அமிக்டலா'ன்ற (Amygdala) ஒரு பகுதியில சரியா இருக்க வேண்டிய நரம்பணுக்கள் சிதறிப்போய் பாதிப்படைந்திருந்தாலோ, அல்லது சிறு வயதில் சில சம்பவங்களால் பாதிப்பிருந்தாலோ, அதுவுமில்லாம வேற நோய்க்கு சாப்பிடுற மருந்தோட பக்கவிளைவினாலோ இந்த 'பாரனாய்ட்' வரலாம்.

'பாரனாய்ட்' குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு நான் ஆரம்பத்திலேயே சொன்ன காரணம் பாதிக்கப்பட்டவங்களுக்கு மருத்துவர் மேல முதல்ல நம்பிக்கை வரணுமே? அந்த நம்பிக்கை வந்தாலும் அவர் கொடுக்குற மருந்து மேல நம்பிக்கையிருக்கணும். இந்த மருந்த சாப்பிட்டா நமக்கு அப்படிலாம் தோணாது பூரண குணமாயிடுவோம்னு உறுதியிருக்கணும். இல்லாட்டிப் போனா காசக்கொட்டி வைத்தியம் பார்த்தும் 'ம்ஹும் இந்த மருந்து என்னை மாத்த முடியாது'ன்னு சாப்பிடாம விட்டுட்டா கோவிந்தா கோவிந்தாதான்.

என்ன மண்டையப் பிச்சுக்கிறீங்களா? வேண்டாங்க. சமாதானத்த வெளியில தேடாம அவங்கவங்க மனசுலதான் இருக்குன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா 'பாரனாய்ட்' பின்னங்கால் பிடரில அடிச்சா மாதிரி பிறழ்ந்து ஓடிடும்.

Tuesday, May 15, 2007

நான் அவன் இல்லை - விமர்சனம்


எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய பாடல்களைப் புதுப்பித்து 'ரீமிக்ஸ்' என்ற பெயரில் தருகிறார்களோ அதே போன்ற ஒரு முயற்சிதான் இந்தப் படமும். இந்தப் படம் போலவே இன்னும் 'பில்லா', 'முரட்டுக்காளை' என்று வரிசையாக வரப்போகிறதாம். 'பில்லா', 'முரட்டுக்காளை'யெல்லாம் பரவாயில்லை வெற்றி மசாலாப் படங்கள், அதுவும் பிரபலமான கதாநாயகர்களை வைத்து எடுத்தால் ஓட வாய்ப்புள்ளது. ஆனால் முகவரியே இல்லாத ஓடாத அந்தக் காலத்து கே. பாலசந்தர் தந்த ஜெமினி கணேசன் தனது 54வது வயதில் அவரே தயாரித்து நடித்த படத்தை ரொம்ப தைரியமாகத்தான் திரும்ப தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் செல்வா. இதில் பிரபலமடைந்த பெரிய நடிகருமில்லை. 'யுனிவர்சிட்டி'யில் அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக கவர வைத்து 'திருட்டுப் பயலே'வில் தனக்கென முத்திரை பதித்த ஜீவனை கதாநாயகனாகப் போட்டு எடுத்த இந்தப் படத்தை வணிக ரீதியாக வெற்றி பெறும் என்ற முழு தைரியத்திற்கு காரணம் அவர் உபயோகித்த வலுவான ஆயுதம். யோசிக்காமல் புரிந்திருக்குமே? அதான் 'கவர்ச்சி'. பெண்களை ஏன்தான் போகப் பொருளாக எல்லோரும் காட்டுகிறார்களோ தெரியவில்லை. எல்லாப் படங்களிலும் அப்படித்தான் என்றாலும் இதில் கூடுதலாகவே. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காகவே தேடிப்பிடித்து எடுத்த படமா இது என்று எனக்கு சந்தேகமே வந்து விட்டது. காரணம் எல்லாப் பெண்களையும் ஆபாசமாக அலையவிட்டது மட்டுமல்லாமல் முட்டாள்களாக காட்டியிருக்கிறார்கள். ஓர் இரண்டு பேர் முட்டாள்களாக காட்டியிருந்தால் பரவாயில்லை, படத்தில் வரும் அத்தனை பெண்களும், நீதிபதியான லட்சுமி உட்பட அனைவரையும் முட்டாளாக சித்தரித்திருக்கிறார்கள்.

மன்மத லீலைகளால் பெண்களை கவர்ந்து, ஏமாற்றி, திருமணம் முடித்து, நகை- பணத்தை அபகரித்து மறைந்துவிடும் கதாநாயகன் மீது வழக்கு தொடர்ந்து கூண்டில் நிற்க வைத்து சாட்சிகள் சொல்வதை விரிவுபடுத்துவதுதான் கதை. ஜீவனுக்கு மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். படித்த மாடலிங் செய்யும் மாளவிகாவிடம் விக்னேஷாக, ஜோதிர்மயியிடம் மாதவன் மேனனாக, எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் திருந்தாத சமுதாயத்தை கண்டிப்பதற்காகவே கீர்த்தி சாவ்லாவிடம் போலிச் சாமியார் வேடத்தில் ஹரிதரதாஸாக, தொழிலதிபர் நமீதாவிடம் ஷாம் பிரசாத்தாக வருகிறார். ஆனால் உண்மையில் ஜோசப் பெர்னாண்டஸ், குற்றவாளி கூண்டில் நிற்கும் போது தான் அண்ணாமலை என்கிறார். ஒப்புக்கு சப்பாக சினேகா, அதுவும் வக்கீலுக்குப் படித்த பெண் ஜாகீர் ஹுசைனிடம் பணத்தை ஏமாறுகிறார் ஆனால் அந்த குற்றவாளிக்கே ரசிகையாகிறார், என்ன கண்றாவிடா சாமி! எல்லா சாட்சிகளின் குற்றச்சாட்டின் முடிவிலும் ஒரே மாதிரியான வசனம் 'நான் அவன் இல்லை' என்று. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் கோட்டைவிட்டிருக்கிறார். கதையில் பெரிய ஓட்டையிருக்கும் போது பாவம் அவரும் என்ன செய்வார்.

நமீதா வரும் இடங்களிலெல்லாம் என்னையறியாமல் நான் காட்சியை வேகமாக ஓடவிட்டேன் ஏனெனில் கைக்குட்டையை ஆடையாக உடுத்தி வருகிறார் அதுவும் மழையில் நனைகிறார் அதனை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? எல்லா நடிகைகளும் கவர்ச்சி காட்டுவதில் போட்டி போட்டிருப்பதால் நடிப்பை மறந்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் ஜீவன் ஆயிரங்காலத்து பயிரை எளிதாக மேய்வதாக தந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, தனக்கு தந்தப் பொறுப்பை நன்றாக முடித்திருக்கிறார்.

மாளவிகா திருமணத்தை நண்பர்கள் குடும்பம் சூழத்தான் செய்கிறார்கள் இருப்பினும் மாப்பிள்ளை புகைப்படத்தை புதுத்தொழில் நுட்பமான செல்பேசியில் அவரே எடுப்பதாகச் சொல்லுகிறார்களாம், எடுக்கிறார்களாம். ஏன் திருமணத்திற்கு வந்த வேறு யாரிடமும் புகைப்படம் எடுக்கும் செல்பேசியே இல்லையா என்ன? அதே போல் பழைய படத்தில் சினேகா வேடத்தில் லட்சுமி, இந்த படத்தில் லட்சுமியின் மகள் சினேகா. சினேகா ஜாகீர் உசேன் ஓவியத்தின் ரசிகையாம், அவருடைய கண்காட்சியைத் தேடிப்பிடித்துப் பார்க்க வருகிறார் ஆனால் ஜாகீர் உசேன் எப்படியிருப்பார் வயதானவரா இளைஞரா என்று கூட தெரிந்து வைத்துக் கொள்ளாமலிருக்கிறார். காதில் பூ சுற்ற ஒரு அளவு வேண்டாம்? திரைக்கதை எழுதி இயக்கிய செல்வா இந்த மாதிரி படம் முழுக்க பல ஓட்டைகள் தந்திருக்கிறார். இதனை தைரியமாக தயாரித்தவர் வி. சித்தேஷ் ஜபக். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினியின் பழைய படத்தில் வரும் 'ராதா காதல் வராதா' என்பதை ரீமிக்ஸ் செய்து புதுப்பொலிவு தந்திருக்கிறார். மற்றுமொரு பாட்டு துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. பழனி பாரதி மற்றும் பா. விஜயின் வரிகளானாலும் மனதில் நிற்கும்படி விஜய் ஆண்டனி தட்டவில்லை என்று சொல்லலாம்.

படம் பார்க்கும் போது அந்த பழைய படம் நினைவில் வராமலில்லை. அந்த பழைய படம் தொலைக்காட்சியில் போடும் போது 'இதெல்லாம் பெரியவங்க படம் பார்க்கக் கூடாது' என்று எங்க அம்மா விரட்டியடித்தது நினைவிலிருக்கிறது. இப்போதெல்லாம் 'பெரியவங்க' படமென்று தனியாக பிரிக்க முடியாது எல்லாப் படங்களுமே அப்படித்தானே? அந்தக் காலத்துக்கு இந்த கதை, புருடா எல்லாம் சரிதான் ஆனால் தொழில்நுட்பங்கள் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்தில் எடுபடவில்லை. சின்னத்திரை 'சீரியலிலேயே' பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு வருகிறார்கள் ஆனால் அத்தகைய விஷயங்கள் இதில் இல்லை. காவல் துறையின் விசாரணை, அரசு வழக்கறிஞர் வாதம் எதிலுமே காரசாரமில்லை. ஒரு இடத்தில் குற்றவாளியை வழக்கறிஞர் 'ஜீனியஸ்' என்கிறார் அபத்தமாக. முடிவுரையாக கதை மூலம் சொல்ல வந்தது பின்னணி தெரியாமல் பெண்கள் ஏமாற வேண்டாம் 'பேராசை பெரு நஷ்டம்' என்பதாக. அதற்காகப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

படித்த பெண்கள், ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டிக் காப்பாற்றும் பெண் என எல்லாரும் ஒரே மாதிரியாக ஏமாறுவார்களா? ஆளைக் கவிழ்க்கும் வார்த்தைஜாலங்களில் பயிற்சி பெற்றிருந்தாலே, தபு சங்கர் காதல் தொகுப்புகளை மனனம் செய்திருந்தாலே போதும் பெண்கள் எளிதில் மயங்கிவிடுகிறார்கள், பெண்கள் என்றாலே பணத்தையும் அந்தஸ்தையும் பார்த்துத்தான் காதல் வயப்படுகிறார்கள் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கும் விதமாகவே அமைந்துள்ளது இந்தத் திரைப்படம்.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார் இரண்டே வகையான பெண்கள்தான் உண்டு முதல் வகை பெண்கள் முட்டாள்கள். இரண்டாம் வகையினர் புத்திசாலியாக நடிப்பவர்கள் என்று.. அதே கொள்கையுடைவர்தான் இந்த செல்வாவும் போலும். என் நண்பர் அப்படிச் சொல்லும் போதெல்லாம் நான் பதில் தருவது ஆண்களில் 80% ஒழுக்கமில்லாதவர்கள், 10% வாய்ப்பு கிடைக்காதவர்கள், 10% ஒழுக்கமானவர் என்று பொய் சொல்கிறவர்கள் என்று. அதுதான் இந்தப் படத்தின் மூலம் உண்மையென புலப்படுகிறது.

திரைப்படம் என்றாலே 'real' அல்ல 'reel' என்பதை அறிவேன், இருப்பினும் கேட்கிறவன் கேணயனாய் இருப்பின் கேப்பையில் நெய் வடியும் என்பது போல் உள்ளது படம்.

Tuesday, May 08, 2007

வெர்டிகோ - Vertigo

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா? ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, 'நல்ல மருத்துவரா பாரு 'நீ முழுகாம இருக்கன்'னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு மயக்கமா வருதுன்னா, 'ரொம்ப 'அனிமிக்கா' இருக்க ஒழுங்கா சாப்பிடறதில்ல'ன்னு திட்டுவோம். மெலிஞ்ச ஒருத்தர் கடுமையா உழைச்சுக்கிட்டுருக்கிறப்போ தடுமாறினா 'பசி மயக்கம் சாப்பிட்டு வந்து தெம்பா வேலய பாரு' என்போம். அதனால மயக்கத்திற்கு பல வகையான காரணமிருக்கலாம் ஆனா இந்த 'சுழற்சி'க்கு (வெர்டிகோவிற்கு) ஒரே காரணம்தான் இருக்க முடியும்.

நம்முடை vestibular system ஆட்டம் கண்டுடுச்சுன்னா நாமும் ஆட்டம் கண்டிடுவோம். அதாவது காதின் உட்பகுதியில மூணு அரைவட்ட வளையமா வெட்டு கால்வா மாதிரி ஒருவகை திரவத்தால் சூழ்ந்திருக்குமே அதுக்கு பேருதான் 'லபிரிந்த்' (labyrinth). இதுக்குள்ள இரண்டு நுண்ணிய உறுப்பு இருக்கு 1. மகுல்லா 2. கிரிஸ்டா. இதுல மகுல்லா (maculae) தான் நாம நடக்கும் போது தடுமாறாம புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து நம்மள நடக்கச் செய்யுது. குடிகாரங்கள பார்த்தீங்கன்னா ஒழுங்கா நிற்க முடியாம தள்ளாடுவாங்க காரணம் மகுல்லாவுடைய செயல்பாட்டை உணர முடியாம போறதுதான். அதே மாதிரி சினிமால கதாநாயகி மேல பூ தூவும் போது அப்படியே சுத்துவாளே, சில நடனத்திலும் சில காட்சி அப்படி வருமே, அதே மாதிரி வேகமா நீங்களும் சுத்திப் பாருங்க கால் நின்ற பிறகும் அப்படி 'கிர்'ருன்னு சுத்திக்கிட்டே இருக்கிறா மாதிரி இருக்கும் அந்த மாதிரி நாம வேகமா நடக்கும் போது ஆச்சுன்னா என்ன செய்றது? அப்படி ஆகாம இருக்கத்தான் கிரிஸ்டா (cristae) உதவுது. மீன் தொட்டீல மீன் ஓடுறத பார்த்தீங்கன்னா இங்கேயும் அங்கேயும் வேகமா ஓடும், டக் டக்குன்னு திரும்பும் ஆனா இதுக்கு தல சுத்தாது காரணம் உடம்புலேயே நிறைய கிரிஸ்டா இருக்காம் அதுக்கு. இந்த இரண்டு நுண்ணிய உறுப்பாலான 'லபிரிந்த்' நாம தலைய அசைக்கும் போதோ கண் அசைக்கும் போதோ அந்த செய்திய vestibular நரம்பு மூலமா மூளைத்தண்டுக்கு (brainstem) கொடுத்து அப்புறம் சிறு மூளைக்கு (cerebellum) அனுப்புது. இப்படி ஒழுங்காக நடக்காமல் ஒரு காதும் இன்னொரு காதும் ஒரே மாதிரியான வேலயச் செய்யாம இரண்டுக்கும் சண்டைங்குற மாதிரி நடந்துக்கிட்டு சமநிலைய சமாளிக்க முடியாமப் போகும்போதுதான் இந்த சுழற்சி ஆரம்பமாயிடுது.




ஏன் அப்படி திடீருன்னு பிரச்சன வருதுன்னு நீங்க கேட்கலாம். நம்ம குடும்பத்துல யாருக்காவது இருந்தா நமக்கு வரலாம், மன அழுத்தத்தால இருக்கலாம், வேற நோய்க்கு மருத்துவரே கொடுத்த மாத்திரையோட பக்கவிளைவா வரலாம், திடீர் அதிர்ச்சியால நேரலாம், ரத்த அழுத்தம் சீராயில்லாம இருந்தாலும் ஒட்டிக்கலாம். பொதுவா வயசானவங்களுக்கு இந்த பிரச்சனை வருவது தவிர்க்க முடியாது இது அப்படியே கூடி ஞாபக மறதில கொண்டுபோய் விட்டுடும். வயசானவங்களுக்கு வந்தா ரொம்ப கவனமா இருக்கணும், கழிப்பறைக்குத் தனியாவெல்லாம் போனா கொஞ்சம் பார்த்துக்கணும் காரணம் அங்க வழுக்கி விழுந்துட்டா மண்டையில் அடிப்பட்டுட்டா அப்புறம் நேரா 'கோமா'தான்.

சுழற்சியினால (வெர்டிகோவினால) லேசான தலைவலி, கிறுகிறுப்பு, உடல் சோர்வு எல்லாமும் சேர்ந்து வரும். பூமி அதிர்ச்சி அங்கங்க கேள்விப்படும் போது இந்த சுழற்சி உங்களுக்கு இருந்தா 'அட பூமி அதிர்ச்சியோ'ன்னு யோசிக்கிற அளவுக்கு தடுமாற்றம் வரும், தல சுத்தும். இப்படி பார்த்துட்டு யாராவது கூப்பிடுவதக் கேட்டு, அப்படி திரும்புன்னா போச்சு அப்படியே தள்ளுற மாதிரி இருக்கும். உலகம் நிஜமாவே சுத்துதுன்னு ஒத்துக்குவோம். யாரோ ஏதோ செய்வினை வச்சிட்டாங்களான்னு சிலர் பயப்படவும் செய்வாங்க அப்படி ஒரு மாயை நிறஞ்சதுதான் இந்த சுழற்சி.

ஆரம்பத்திலேயே இப்படி பிரச்சன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டா ஸ்டூஜெரான் (Stugeron) அப்படின்னு ஒரு மாத்திர தருவாங்க அதிலயே சரியாப் போயிடும். முதல் வாரத்துல சாப்பிட்டும் சரியாகலன்னா ஒரு சோதனையெடுப்பாங்க 'ENG'ன்னு (electronystagmography), அப்புறம் தல சுத்துதா இன்னும்னு சோதிப்பாங்க அப்புறம் CDP எடுப்பாங்க (Computerized Dynamic Posturography). தலைக்காக சில பயிற்சியும் தருவாங்க. ஒழுங்கா பிரச்சனைய மருத்துவர் கிட்ட சொல்லணும், ரொம்ப மன அழுத்ததால ஆரம்பமாச்சா, தல சுத்து மட்டும்தானா இல்ல வாந்தி, காதடைப்பு, காதுல 'கூ'ன்னு கேட்டுக்கிட்டே இருக்கா, இல்ல காது கேட்காத மாதிரி ஒரு உணர்வுன்னு ஏதாவது மத்த விளைவுமிருக்கான்னு. ஆனா அலட்சியமா இந்த பிரச்சனைய விட்டுட்டா தல சுத்து அதிகமாகி எங்கேயாவது விழுந்து மண்டையில் அடிப்பட்டு நெலம இன்னும் மோசமாயிடும். கீழ விழாம தப்பிச்சாலும் இந்த பிரச்சன ரொம்ப முத்திப் போச்சுன்னா பக்கவாதம், 'டியூமர்' எல்லாம் வரும்.

ஒரு விமான ஓட்டுனருக்கு இந்த மாதிரி பிரச்சன இருந்தா என்னாகும்னு யோசிச்சு பாருங்க. ஆனா அவங்களுக்கு இந்த பிரச்சன வரவும் அதிக வாய்ப்பிருக்காம். கடல் மட்டத்துக்கு மேல போய்கிட்டு இருக்கிறப்போ வலது பக்கம் திரும்புறா மாதிரி மாயை தெரியும் நேரா போய்க்கிட்டு இருந்தாலும். அப்படி இருந்தா அவருக்கு மட்டும் பிரச்சனையில்ல அந்த விமானத்துல நாம பிராயாணம் செஞ்சுக்கிட்டு இருந்தா நமக்கும்தான். கவலைப்படாதீங்க அவங்களுக்கு பரிபூர்ண மருத்துவ பரிசோதனையெல்லாம் செஞ்ச பிறகுதான் ஓட்ட அனுமதிப்பாங்க. ஆனா நம்ம நல்ல நேரம் அவசரத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையுள்ளவர் மாட்டுனா அவரோடு சேர்ந்து நாமும் கதிகலங்க வேண்டியதுதான்.

என்ன படிச்சிட்டு தலச்சுத்துதா? அப்ப ஒரு நல்ல மருத்துவரா பாருங்க.

Monday, April 30, 2007

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?


ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான படிப்பு, அனுபவம், நல்ல மொழி வளம் எல்லாம் இருந்தது. அவங்க அழைப்புக்காக காத்திருந்தாங்க மேலாளர் அறைக்குப் போய் பொசுக்குன்னு ஒரு நிமிஷத்துல வெளியில வந்திட்டாங்க. வெளியில் வந்தவங்களை என்ன ஆச்சுன்னு கேட்டேன். 'இப்போதைக்கு ஆள் தேவையில்ல தேவைப்படும் போது அழைக்கிறோம்னு சொல்லிட்டாங்க'ன்னு சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, ஆள் தேவைப்பட்டதால்தானே நேர்முகத்திற்கே அழைத்தோம். எல்லா தகுதிகளும் பொருந்தி வந்தவர்களை ஒன்றுமே விசாரிக்காமல் கூட அனுப்பிவிட்டதால் எனக்கு விசித்திரமாக இருந்தது. மேலாளரிடம் நேரடியாக கேட்டேன் 'first impression is the best impression' என்று சிரித்துக் கொண்டார். குழப்பத்துடன் அவர்களுக்கு 'என்ன குறைச்சல்' என்று வக்காலத்தை தொடங்கினேன். 'நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உனக்கு, அவள் என் அறைக்கு வந்த போது ஒரு பந்து உள் வந்துவிட்டு வந்த வேகத்தில் அடித்து திரும்புவதாக இருந்தது எனக்கு' என்று மறுபடியும் சிரித்தார். அந்த பெண்ணின் உடல் வாகைக் கேலி செய்வது எனக்கு ரசிக்கும் படியாக இல்லை கோபத்தில் கதவை மட்டும்தான் வேகமாக சாத்த முடிந்தது.

இதே போல் பல வருடங்களுக்கு முன் நான் வேறு அலுவலகத்தில் இருந்த போது மனிதவள மேம்பாட்டு பிரிவில் சில மாதங்கள் இருந்தேன். அனுப்பிய பொழிப்புரைகளில் தகுந்தவற்றை பிரித்து தகுதியானவர்களை நேர்முகம் செய்து, வடிகட்டி, நான் சரி என்று நினைப்பவர்களை மட்டும் மேலாளரிடம் நேர்முகத்திற்கு அனுப்புவேன். அப்படி தகுதி பெறுபவர்களை வேலையில் அமர்த்துவார்கள். இப்படி வந்த பொழிப்புரையில் ஒரு காரியதரிசி வேலைக்கு எம்.சி.ஏ. படித்த நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல பிற தகுதிகள் கொண்ட ஒரு பெண் விண்ணப்பித்திருந்தார். தேவைக்கு அதிகமான தகுதியென்று ஒதுக்க இருந்தேன். கவனித்ததில் 'பாரதிதாசன் பல்கலைக்கழகம்' என்றதும் 'அட தமிழ் பொண்ணு' அழைத்தாவது பேசலாம், இவ்வளவு தகுதியுள்ளவர் சம்பந்தமில்லாத வேலைக்கு விண்ணப்பித்ததைப் பற்றிக் கேட்கலாம் என்ற ஆவல் பிறந்தது. அழைத்தேன். அழகான மொழி வளமும், குரல் வளமும் இருந்தது. என்னை அறிமுகம் செய்து கொண்டு காரணம் கேட்டேன். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய அப்பா பல வருடங்களாக அவரைப் பிரிந்து ஷார்ஜாவில் வேலைப் பார்த்திருந்திருக்கிறார். அவருடைய அம்மாவுக்குப் புற்றுநோய் இருந்ததாம் அதற்கே பல வருடங்கள் சம்பாத்தியம் தொலைத்து மனைவியையும் இழந்து உடல்நலம் சரியில்லாத போதும் இங்கு கஷ்டப்படுவதால், சுமையை பகிர்ந்துக் கொள்ள மகள் தயாரானாலும் அவள் தந்தை அவருடைய 'ஸ்பான்சர்ஷிப்பில்' மகளை அமீரகத்திற்கு அழைக்க முடியாததால் (மகளை தன் விசாவில் எடுத்துக் கொள்ள குறைந்தது 4000 திர்ஹம் அதாவது 45000ரூ. மாத சம்பளம் வேண்டும்) சுற்றுலா நுழைமதியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதங்கள் முடியப் போகிறது, தகுதிக்கேற்ற வேலையென்ற அவசியமில்லை ஏதாவது வேலை கிடைத்து நிறுவன நுழைமதி கிடைத்தால் போதும் அப்பாவுக்குத் துணையாக இருந்து கொள்வது மட்டுமே அவளது நோக்கம். கடைசியாக அவர் சொன்ன விஷயம் மனதைத் தின்றது - 'என்னதான் தகுதியிருந்தாலும் அழகும் வேண்டும் போல, நான் கருப்புங்க அதான் வேலையே கிடைக்கவில்லை' என்றார் உடையும் குரலில். பலவகையில் முயற்சி செய்தும் அவரை வேலையில் அமர்த்த முடியவில்லை. அதுவும் வரவேற்பாளினியாகவும் காரியதரிசியாகவும் இருக்க அழகு ரொம்ப முக்கியமாகப்பட்டது மேலாளர்களுக்கு. பழைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே என் கையாலாகாத்தனத்தை கடிந்துக் கொண்டிருந்தேன்.

அன்று மதியம் சாப்பிட உட்காரும் போது சக தோழிகள் கொண்டு வந்திருந்தைக் கவனித்தேன், சின்ன டப்பாவில் சின்ன துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் நிரப்பிக் கொண்டு வந்திருந்தாள், 'என்ன இது' என்றேன் 'நான் 'டயட்'டில் இருக்கிறேன்' என்றாள் பெருமையாக. மற்றொருத்தி எனக்கு ஒன்றுமே வேண்டாம் 'ஸ்லிம் டீ' மட்டும் குடிக்கப் போறேன் என்றாள். நான் மட்டும்தான் சாப்பாடு, குழம்பு, பொறியல் என்று எல்லாம் கொண்டு போய் ஒன்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி நின்றுக் கொண்டு 'எப்படிப்பா நீ மட்டும் இப்படிலாம் சாப்பிட்டாக் கூட அப்படியே இருக்கே', 'நீ சாப்பிடுவதெல்லாம் எங்கே போகுது', 'அவங்க குடும்பத்துல எல்லாருமே அப்படிதாம்ப்பா' என்று ஆளாளுக்கு தன் பங்குக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்றுக் கவனித்தால் சமூகக் கட்டாயத்திற்காக கல்லூரி மாணவி, வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல இல்லதரசிகளும் கூட தன்னை கனகட்சிதமாக வைத்துக் கொள்ள சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு பலவகைப்பட்ட பக்கவிளைவுக்கு உள்ளாகிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடலைப் பேணுவது இல்லை இவர்கள் தங்கள் கணவர்கள் கைவிட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள 'டயட்' என்ற பெயரில் தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறார்கள்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது யார்? ஒல்லி அழகா பருத்திருப்பது அழகா அல்லது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பது அழகா? கருப்பு அழகா சிவப்பு அழகா இல்லை இடைப்பட்ட நிறம் அழகா? பெண்கள் அழகைப் பற்றி பேச மன்மதன்களாக இருக்க தேவையில்லை ஆண் என்ற தகுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் பலர். பெண்ணின் தேவையென்பது மிகவும் சாதாரணமானது ஆனால் ஒரு ஆண் தன் மனைவியாக வரப் போகும் மனைவிக்கு வேண்டிய தகுதிகளை 'மாட்ரிமோனியலை' எடுத்துப் பார்த்தால் லட்சணம் தெரியும். எத்தனை பெண்கள் இந்த வகையான நிபந்தனைக்குள் வராததால் முதிர்கன்னிகளாக இன்றும் இருக்கிறார்கள்? சந்தையில் எப்படிப்பட்ட பொருள் நல்ல விலைபோகிறது, எந்த பொருட்களின் வியாபாரம் 100% லாபம் தருகிறது என்பதை கணக்கில் கொண்டு ஒரு வியாபாரி, தொழிலதிபரும் பொருளை தந்து அதன் பின் அதற்கேற்ப விளம்பரமும் செய்வான். அதுபோல ஆகிவிட்டது பெண்கள் நிலையும். இதற்கும் ஆண் ஆதிக்க சமுதாயம்தான் காரணம் என்று பொதுப்படையாக முத்திரை குத்தாமல் (அதுவே உண்மையாக இருந்தாலும்) ஆராய்ந்து பார்த்தால் ஊடகங்கள், சினிமா, இதிகாசம், காப்பியம் என்று எல்லாமும்தான் காரணமாகிறது.

'உடுக்கை போன்ற இடுப்பு' என்று அன்று மட்டுமல்ல, 'பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி', 'ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு', 'ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி' என்றெல்லாம் பாட்டும் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் குண்டான ஆணைப் பற்றி பாடினால் 'கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா... எந்த கடையில நீ அரிசி வாங்கின உன் அழகுல ஏன் உசுர வாங்குற' இப்படி அல்லது 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' அவன் பருமனாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும் இவளுக்கு அழகுதான், ஏன்னா எழுதுறது ஆண்கள் பாருங்க. அதனால் அது அப்படியே ஆகிவிட்டது. இந்த மாதிரியான சூழலில் ஊறிப் போன பெண்கள் நடிகைகளையும், விளம்பரத்திற்கு வரும் பெண்களையும் பார்த்து அதே மாதிரி தாமுமிருக்க முயல்கிறார்கள். ஒல்லி பெண்களுக்கு 'மாடல்' யார் தெரியுமா நம்ம 'பார்பி' பொம்மைதான். ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் காலத்திற்கேற்பவும் ஆண்கள் இரசனை மாறுகிறது. ஒரு காலகட்டத்தில் குண்டு குஷ்பு பிடித்தால் கொஞ்ச நாட்களுக்கு பின் ஒல்லி சிம்ரன் பிடிக்கும் இப்படி ஆண்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதற்கேற்ப பெண்களும் ஆட வேண்டிய கட்டாயம். ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.

ஒரு ஜான் வயிற்றை நிரப்ப முடியாமல் உலகின் பல பகுதியில் பட்டினியாலும் பிணியாலும் வாட, எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் தனக்குத்தானே கட்டுபாட்டை விதித்து சாப்பிட வேண்டிய வயதிலும் சாப்பிடாமல், நோயாளி போல் அளந்து சாப்பிடுகிறார்கள். மெலிந்து காணப்படுவது அழகா உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அழகா என்று இவர்களுக்கு யார் புரியவைப்பது? பெண்கள் விழித்துக் கொள்வார்களா அல்லது ஆண்களாவது புற அழகு தேவையில்லை அக அழகு போதும் என்று பெண்களுக்கு புரிய வைப்பார்களா?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி