சென்னை பயணம் இனிதாக நிறைவாக அமைந்தது. முப்பது நாள் செல்லும் பயணமெல்லாம் அம்மா வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்குமே மாற்றி மாற்றி போய் கொண்டு கடைசியில் எங்கும் ஒழுங்காக இல்லாத உணர்வோடு துபாய் வந்து சேருவேன். இந்த முறை அப்படியில்லாமல், 10 நாட்கள் விடுமுறையில் வந்த நான், ஹஜ்ஜிலிருந்து திரும்பி வந்த பெற்றோர்களையும் பார்த்துச் செல்வதற்காக விடுமுறையை 15 நாட்களாக நீட்டித்துக் கொண்டு நிறைவான பயணமாக மாற்றிக் கொண்டேன்.
வயோதிகர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என்று பார்க்கக் கடமைப்பட்ட எல்லாவரையும் பார்த்தது போக நெருங்கிய பந்தத்தின் திருமணத்தில் கலந்துகொண்டு எல்லா சொந்தங்களையும் ஒருசேர பார்த்து மகிழ்ந்து, ஊரையும் கொஞ்சம் சுற்றுகிறேன் பேர்வழியாக கடற்கரை, வள்ளுவர் கோட்டம், ராயல் சர்க்கஸ், இரண்டு திரையரங்குகள் (அபிராமியில் 'போக்கிரி',பிரார்த்தனாவில் 'தாமிரபரணி'), போத்தீஸ் என்று எல்லா பக்கமும் சுற்றி திரிந்தாச்சு.
இந்த சிறு விடுமுறையிலும் ஒருநாள் 'பெண் எழுத்தாளர்கள் சந்திப்பு' என்று 26ந் தேதி 3.30க்கு ஒதுக்கி வைத்தேன். தெரிந்தவர்கள் போக அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் சந்திக்க ஆவலாக இருந்து, துபாயிலிருந்து கிளம்பும் முன்பே கிட்டத்தட்ட 10 பேரை வருகிறேன், முயற்சிக்கிறேன் என்று எழுதவைத்து, ஏற்பாடுகளும் செய்திருந்தேன். சென்னை சேர்ந்த பிறகும் எல்லோரையும் அழைத்துப் பேசி நேரடியாக 'சரி' என்று வாங்கிக் கொண்டேன். நான்கு வலைப்பதிவர்கள், ஒரு கவிதாயினி, மூன்று சமூக ஆர்வலர்கள், மூன்று ஊடக மற்றும் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து வெவ்வேறு துறையில் பெண்களுக்கு உண்டான பிரச்னைகளையும், பெண்ணீயம் பற்றி பேசவும், பலதரப்பட்ட விஷயங்களின் கருத்தாடலாகவும் அமையும் என்று பெரிய பெரிய கற்பனையெல்லாம் செய்து 25ஆம் தேதி நினைவுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்து மறுநாள் சந்திப்புக்குக் காத்திருந்தேன்.
வழி கேட்டு முதல் அழைப்பாக அருணா ஸ்ரீனிவாசன். பிறகு சரியாகக் கண்டுபிடித்து வந்து சேர்ந்ததும் பேசத் துவங்கினோம். கொஞ்ச நேரத்தில் நிர்மலாவும் அவர்களைத் தொடர்ந்து வைகை செல்வியும் வந்து சேர்ந்தார்கள். 'திசைகளின்' தற்போதைய நிலவரம் குறித்து பேசத் தொடங்கி விரைவில் 'திசைகள்' தொடரும் என்ற நல்ல செய்தியோடு, வலைப்பூவில் நடக்கும் விஷயங்களைப் பற்றியும் அதன் நன்மை தீமைகளைப் பற்றியும் பேசி நொந்து கொண்டோம். வைகை செல்விக்கு வலைப்பூ பற்றி சுருக்கமாக விளக்கினார் நிர்மலா.
அருணா, வலைப்பூ ஆரம்பித்த காலங்களைப் பற்றியும், ஒருங்குறிக்கு முன்னால் வலைப்பூ இருந்த நிலவரம், மறுமொழி மட்டுறுத்துவதற்கு முன்னால் இருந்த நிலைப்பாடு, பயமுறுத்தும்/ அருவெறுப்பூட்டும் மறுமொழிகள் வந்த அனுபவம், தமிழ்மணத்தில் ஒரு பதிவைப் பற்றி புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாத தொழில்நுட்ப சிரமங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். வெளிப்படையாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார்கள்.
தமிழ்மணம் தேன்கூடு தளங்கள் எல்லா வலைப்பூவையும் சேகரிக்கும் நிரலிதானே தவிர இதை வெளியிடலாம் வேண்டாம் என்று வடிக்கட்ட முடியாத தொழில்நுட்ப அவலம் இருக்கத்தான் செய்கிறது. Spam filter போல் ஏதாவது செய்ய வேண்டும், அமீரகத்தில் நிறைய வலைத்தளங்கள் சேவை வழங்குனர்களால் 'தடை' செய்யப்படுவது போல் தமிழ்மணமும் தேன்கூடும் தடை செய்ய ஆரம்பித்தால், மக்களும் நமது வலைப்பூவை தடை செய்துவிடுவார்களோ என்று பயந்து ஒழுங்காக எழுத ஆரம்பித்து விடுவார்கள். கருத்துச் சுதந்திரம் என்று கண்டபடி எழுத சுதந்திரம் கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தடிசாக்கில் நான் சொன்னேன். அதே போல் பெண் வலைப்பதிவாளர்கள் புகைப்படம் போட்டால் சில அபாயம் இருப்பதாக அறிந்து நீக்கிவிட்டதையும் சொன்னேன். அதற்கு நிர்மலா 'இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்று. ஆண்கள் அவர்கள் படத்தைப் போட்டுக் கொள்ளலாம் சுதந்திரமாக. ஆனால் பெண்கள் படம் போட்டால் கூட பயப்பட வேண்டி இருக்கு' என்று வலையுலக நிலவரத்தைக் குறித்து வேதனைப்பட்டார்கள்.
நிர்மலா, வலைப்பூவை தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்து கடிந்து கொண்டார்கள். தேவையில்லாத குப்பைகளுக்கு நடுவே அவர்கள் எழுதியது வரும் போது இது தேவையா நமக்கு, தமிழ்மணத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போதெல்லாம் வளர்த்துவிட்ட ஏணியை விரட்டியடிக்க மனமில்லை என்று கவலைப்பட்டார்கள். (நிர்மலா முகத்தில் ஓடும் ரேகையை வைத்து அவர்கள் மனம் படித்து, அழைத்து பேசி, என்னைப் போலவே உங்களுக்கும் பெரிய ஏமாற்றம்தானே என்று கேட்டேன். 'அடடா, அப்படியே என் முகம் காட்டிக் கொடுத்துவிட்டதா' என்று உண்மையை ஒப்புக் கொண்டார்கள்).
வைகை செல்வி, பெண்ணாக ஒரு அரசு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள். பெண் என்பதால் ஏற்படும் அலட்சியத்தையும், இப்போதெல்லாம் நிறைய வாசிக்க எழுத முடியவில்லை, காரணம் வேலைப் பளு என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் சுற்றுப்புறச் சூழல் பிரிவில் இருப்பதால் அது தொடர்பான 'வானகமே வையகமே' இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் இதழை எல்லோருக்கும் தந்தார்கள். அது அவர்கள் தொழில் ரீதியான பத்திரிக்கை. நிறைய பேர் வருவார்கள் என்று நிறைய பிரதி எடுத்து வந்திருந்தார்கள்.
நால்வருக்குமே நிறைய பேர் கலந்து கொள்ளாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொருவரையாக அழைத்தேன் யாரும் பதிலளிக்கவில்லை. பொன்ஸ் சாவகாசமாக எடுத்து 'ஹலோ ஜெஸிலாவா, எங்க வீட்டுல உறவினர்களெல்லாம் வந்துவிட்டார்கள், சொல்லனும்னு நினச்சேன்...' என்று இழுத்தார்கள். 'ஆமா, தமிழ்நதி என்னாச்சு' என்றேன். 'அவங்க நேற்றே வரமுடியாதுன்னு என்கிட்ட சொன்னார்கள் நான்தான் சொல்ல மறந்துட்டேன்' என்று அலட்சிய பதில் தந்தார்கள். அழைக்கத்தான் முடியவில்லை ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பியிருக்கலாம் என்று நான் கடிந்து கொண்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டேன். "பெண்கள் பெரும்பாலும் 'professional'களாக நடந்து கொள்வதில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்" என்றார்கள் நிர்மலா.
மதுமிதா சென்னையில் இல்லாததால் மிகுந்த ஆர்வமிருந்தும் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்தியதோடு மட்டுமில்லாமல், சந்திப்பு முடிந்த பிறகும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் விசாரித்தார்கள்.
பொது இடத்தில் கூட்டம் வைக்காததும், நிறைய 'அஜெண்டா' வைத்திருந்ததும்தான் பெரும்பாலானவர்கள் வரத் தவறியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 'ரொம்ப சீரியஸான கூட்டம் போல' என்று பலரும் நினைத்திருக்கலாம். இதற்காகவா அவ்வளவு தூரம் போக வேண்டுமென்றும் எண்ணியிருக்கலாம். பெண்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாக வருவார்கள் என்றெல்லாம் பெரிதாகக் கற்பனை செய்தது என் தவறுதான். எழுத்தாளர்கள், பதிவர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரையும் அவியல் போல அழைத்தது கூட நிறைய பேர் வராமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சிலருக்கு நிஜமாகவே காரணங்கள் இருந்திருக்கலாம் எது எப்படியோ வரமுடியாததை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் எதிர்பார்ப்பால் 'பெரிய' ஏமாற்றம் இருந்திருக்காது.
இந்த கெட்ட அனுபவத்தால் அடுத்த முறை கண்டிப்பாக எல்லா பதிவர்களையும் சந்திப்பது என்று முடிவுசெய்துவிட்டேன். பெண்கள் வேஸ்ட். அதற்காக ஆண்கள் பெஸ்ட் என்று சொல்லமாட்டேன்.
18 comments:
//பெண்கள் வேஸ்ட். அதற்காக ஆண்கள் பெஸ்ட் என்று சொல்லமாட்டேன்.//
இந்த வரிகளை ரொம்பவும் ரசித்தேன் :-))))
உங்கள் கவிதைகளை வலையிலும், குங்குமம் இதழிலும் வாசித்திருக்கிறேன். உங்களை சந்திக்க எண்ணியதுண்டு. எனினும் நீங்கள் தான் "பெண்" வலைப்பதிவர் மாநாடு என்று அறிவித்து விட்டீர்களே?
என் நண்பர் சுகுணா திவாகருக்கு நீங்கள் மாநாட்டுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாக கேள்விப்பட்டேன். நிரம்ப மகிழ்ச்சி :-)))))
"இரும்பு அடிக்கு ஈ-க்கு என்ன வேலை?" நான் என்னச் சொன்னேன்.
//பெண்கள் வேஸ்ட். அதற்காக ஆண்கள் பெஸ்ட் என்று சொல்லமாட்டேன். //
:)))
:(((
சென்ஷி
உள்ளேன் அய்யா :))
ஓ அம்மா போடணுமில்ல
உள்ளேன் அம்மா!
ஜெஸிலா, முதலில் பெண்கள் சந்திப்பிற்கு நான் வருவதாகத்தான் எண்ணியிருந்தேன். ஆனால், இடையில் ஏற்பட்ட சில மனவுளைச்சல்களால்(அனானி மடல்கள்) வரும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கவலையினால் விளைந்த விரக்தி என்று சொல்லலாம். உங்களுக்கு நான் ஏற்படுத்திய ஏமாற்றத்திற்கு மனம் வருந்துகிறேன்.
என்னங்க ஜெஸிலா,
இப்படிச் சொல்லிட்டீங்க(-: உண்மையிலேயே பெண்ணுங்க 'வேஸ்ட்'டா?
சமய சந்தர்ப்பம் சரியா அமைஞ்சிருக்காதுன்னு வச்சுக்கலாம்.
நான் ச்சென்னை வந்தபோது இப்படித்தான் ஒரு சந்திப்பு( அஜெண்டா எல்லாம்
பிரமாதமா ஒண்ணும் இல்லை) வச்சோம்.
அன்னிக்கு டில்லியிலே இருந்துவந்த ஒரு வலைப்பதிவரும், அப்போது வலை பதியத்
தொடங்கியிராத ஒரு ரசிகையும்கூட வந்து கலந்துக்கிட்டாங்க. மொத்தம் ஏழுபேர்
இருந்தோம். ( அதைப் பத்தி பதிவு போடவேண்டாமுன்னு இருந்துட்டோம்)
பார்க்கலாம், அடுத்தமுறை நமக்கெல்லாம் ஒண்ணா இந்தியா போக முடியுதான்னு!
அடுத்த தடவையாவது "பதிவர்கள் சந்திப்பு - எல்லாருக்கும்"னு அழைப்புப்பதிவு போடுவீங்கன்னு நெனக்கிறேன் :))
கடைசி ஸ்டேட்மெண்ட் சூப்பர்...
//என் நண்பர் சுகுணா திவாகருக்கு நீங்கள் மாநாட்டுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாக கேள்விப்பட்டேன். நிரம்ப மகிழ்ச்சி// நக்கல்தானே ;-) அப்பாவி பொண்ணுப்பா நான். இப்படி ஏதாவது செய்து மாட்டிக்கிறேன் ;-)
// நான் என்னச் சொன்னேன். // லொடுக்கு, 'என்னச் சொன்னேன்' என்பது கேள்வியா அல்லது 'என்னைச் சொன்னேன்' என்ற பதிலா ;-)
பெண்களை வேஸ்ட் என்றால் எத்தனை பேர் இரசிக்கிறாங்கப் பாருங்க.
//இடையில் ஏற்பட்ட சில மனவுளைச்சல்களால்(அனானி மடல்கள்) வரும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கவலையினால் விளைந்த விரக்தி என்று சொல்லலாம். // அனானி மடல்களுக்கெல்லாம் மனவுளைச்சல் வரலாமா? குப்பையில் தட்டிவிட்டு, துடைத்துப் போட்டுட்டு போவீங்களா அதவிட்டுட்டு... சரி அடுத்த முறை சந்திக்கிறோம்.
//உண்மையிலேயே பெண்ணுங்க 'வேஸ்ட்'டா?// என்ன திடீர் சந்தேகம் ;-)
//மொத்தம் ஏழுபேர்
இருந்தோம்.// பெரிய சாதனைப் போங்க ;-) அடுத்த முறை சந்திக்க முயற்சிப்போம்.
//எல்லாருக்கும்"னு அழைப்புப்பதிவு போடுவீங்கன்னு நெனக்கிறேன்// கண்டிப்பா ஜி. நல்ல பாடம் கத்துக்கொடுத்துட்டாங்கல.
//// நான் என்னச் சொன்னேன். // லொடுக்கு, 'என்னச் சொன்னேன்' என்பது கேள்வியா அல்லது 'என்னைச் சொன்னேன்' என்ற பதிலா ;-)
//
அட, அது என்னைச் சொன்னதுங்க. நான் எதுக்குங்க தேவையில்லாம கேள்வில்லாம் கேட்கப்போறேன்.
ஜெஸிலா,
சீரியஸாகப் பின்னூட்டுவதற்கு மன்னிக்கவும்.
நீங்கள் எழுதியபடி பார்த்தால் ஏழு பேர் வந்திருந்திருக்கிறார்கள், ஒருங்குறிக்காலம், பெண்ணியம், ஆபாச எதிர்ப்பு என விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள். சொல்லப்பட்ட ஓர்ரிருவர் வராததால் இதை சொதப்பல் என்று சொல்வது அதீதம் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஊருக்குச் செல்லும் குறுகிய காலத்தில், இருக்கும் ஓரிரு வார இறுதிகளில், யார் வரலாம்(;-)) எனத் தெளிவாகச் சொல்லப்பட்டு ஆடியன்ஸைக் குறைத்துவிட்டு, சொதப்பல் என்று சொல்வது நியாயமா?
//பெண்கள் வேஸ்ட்// இதைச் சொல்வதற்கு இந்த அனுபவம் உதாரணமாக எனக்குத் தோன்றவில்லை. வேறு உதாரணக்கள் கொட்டிக்கிடக்கின்றன:-)))))
ஜெசிலா , இரண்டே இரண்டு ஆண் வலைபதிவர்கள் சந்தித்தால் கூட வலை மாநாடு கண்டோம் என சொல்லி அதிலும் ஏதோ ஒரு விசயத்தை பேசியதாக பதிவிடுகிறார்கள். நீங்கள் சந்தித்தவர்கள் எல்லாரும் பெரிய பதிவர்கள்.அப்படி இருக்கையில் தலைப்பை இப்படி வைத்திருக்க வேண்டியதில்லை. சுரேஷ் சொன்னது போல விசயங்களும் நன்றாக தான் பேசி இருக்கிறீர்கள். பிறகு ஏன்?
பெண்கள் சில சமயங்களில் குடும்பத்துக்கும் மனநிலைகளுக்கும் முக்கியத்துவம் குடுப்பதும் தவறென்று சொல்லமுடியாது. பொறுப்பானவர்கள் எது முக்கியம் எனும்போது குடும்பம் காரணமாக இருந்திருக்கலாம்.மற்றும் நீங்கள் போன நாளும் அவர்களின் மனநிலை மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை பொருந்தாமல் போயிருக்கிறது அவ்வளவே. உங்கள் அழைப்பிலேயே ஆண்களைப் போல வெட்டி அரட்டை இல்லாமல் என்று வேண்டாத ஒரு வார்த்தையை சேர்த்திருந்தீர்கள்.இப்போதும் பெண்கள் வேஸ்ட் எனும் வார்த்தை சேர்த்து இருக்க வேண்டியதில்லை. வருந்துகிறேன் என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.
இப்படி எதிர்மறையாக ஒரு பின்னூட்டம் இட வேண்டியது வந்ததை எண்ணி வருந்துகிறேன்.
சுரேஷ்,
கிண்டலாகப் பின்னூட்டுவதற்கு மன்னிக்கவும். ;-)
//
நீங்கள் எழுதியபடி பார்த்தால் ஏழு பேர் வந்திருந்திருக்கிறார்கள், //
கணக்கில் நீங்க இவ்வளவு பலவீனமா?
//ஒருங்குறிக்காலம், பெண்ணியம், ஆபாச எதிர்ப்பு என விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள்.// எப்ப பேசினோம்? ஒழுங்காக பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டிருக்கலாம்.
//சொல்லப்பட்ட ஓர்ரிருவர் வராததால் இதை சொதப்பல் என்று சொல்வது அதீதம் என்று எனக்குத் தோன்றுகிறது.// அதீதமல்ல அவசியம்.
//ஊருக்குச் செல்லும் குறுகிய காலத்தில், இருக்கும் ஓரிரு வார இறுதிகளில், யார் வரலாம்(;-)) எனத் தெளிவாகச் சொல்லப்பட்டு ஆடியன்ஸைக் குறைத்துவிட்டு, சொதப்பல் என்று சொல்வது நியாயமா?
//
10+ பேர் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெறும் மூன்று பேர் வந்தால் சொதப்பல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
//////பெண்கள் வேஸ்ட்// இதைச் சொல்வதற்கு இந்த அனுபவம் உதாரணமாக எனக்குத் தோன்றவில்லை. வேறு உதாரணக்கள் கொட்டிக்கிடக்கின்றன:-))))) //
மன்னிக்க வேண்டும் தல!
தடித்து காட்டப்பட்ட வார்த்தைகளில் எனக்கு உடன் பாடு இல்லை.தவிரவும் அதை நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்ல முடியாது.
மேலும், ஜெசிலா அவர்களே பொது இடத்தில் கூட்டம் வைக்காததும், என்று சொல்லும் போதே.. அவர் அழைத்திருந்த எல்லா பதிவர்களும் இலகுவாக போய்/வர முடியாத தொலைவில் வைத்திருந்திருக்கலாம் என்று புலப்படுகிறது. மேலும் முத்துலெட்சுமி அவர்கள் சொல்லுவதுபோல சூழல்கள் ஏற்பட்டிருக்கலாம். சில சூழல்களை நாம் உருவாக்குவதில்லை என்பது திண்ணம்.
///அப்படி இருக்கையில் தலைப்பை இப்படி வைத்திருக்க வேண்டியதில்லை// நாலு பெண்களாவது வந்து திட்டிவிட்டு போகிறார்களா இல்லை அதற்கும் சுணங்குகிறார்களா என்று பார்க்கவே இந்த தலைப்பு. மன்னிச்சிக்கோங்க லட்சுமி.
//குடும்பம் காரணமாக இருந்திருக்கலாம்.மற்றும் நீங்கள் போன நாளும் அவர்களின் மனநிலை மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை பொருந்தாமல் போயிருக்கிறது அவ்வளவே.// இருந்திருக்கலாம்தான். அதை தெரிவித்திருக்கலாமே?
Jessila,
Organizing plays one of the vital role in the success of the meeting. Hope u can learn better event management & planning from this experience.
Agree with Balabharathi for the reason.
-Sekar, SG
ஜெஸிலா,
ஆமாம், கணக்கிலே வீக்தான். நாலு பேரு வந்திருக்காங்களே..
துபாய் சந்திப்புன்னு ஒரு வாரம் முன்னாடியே ஆரம்பிச்சு பதிவுகள், எல்லாருடைய செல் எண்கள், தொடர்ந்த துரத்தல் எல்லாத்தையும் மீறியும் 8 பேர்தான் வந்தாங்க:-( அதுக்காக, அரட்டை அடிக்காம விட்டுட்டோமா?
சொதப்பல் என்பது அதிகமாகப்படவே எழுதினேன்.. அவ்ளோதான்!
பாபா (செ), என்னத்துக்கு இப்ப டென்சன்:-) சரி இப்படி மாத்திப்படிங்க:
பெண்கள் வேஸ்ட் என்று நீங்கள் கூறுவதை இந்நீதிமன்றம் குறிப்பிலெடுத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் இந்த வாதம், உங்கள் பதிவினால் சரிவர நிறுவப்படுவதில்லை என்றாலும், அவ்வாதத்தை இந்நீதிமன்றம் முற்றாக மறுக்க இயலாத நிலை இருப்பதற்கு முந்தைய பல வழக்குகளின் தீர்ப்புகள் காரணமாய் இருக்கின்றன:-)
ஜெஸிலா,
சந்திப்பு நல்லபடி நடந்தமைக்கு வாழ்த்துக்கள். முன்னமே போனில் சொன்னபடி திடீரென வந்துவிட்ட முக்கியமான வேலைகளால், அத்தனை தூரம் வர முடியாமல் போய்விட்டது. போனில் சொன்னது தவிர இங்கும் ஒரு சாரி...
வராமல் போன ஏழு(ஆறு?) பெண்கள் காரணமாக, எல்லாப் பெண்களுமே ப்ரோபஷனல் இல்லை என்று முடிவெடுத்த உங்களின் சாம்ப்ளிங் திறமைக்கும் என் வாழ்த்துக்கள்...
ஜெஸிலா, உங்கள் முயர்ச்சி வெற்றியில் தான் முடிஞ்சிருக்கு, உங்களுடைய எதிர் பார்ப்பு தான் தோழ்வி அடைந்திருக்கு, வருத்தப்படாதிங்க, நல்ல முயற்ச்சிக்கு வாழ்துக்கள்.
Post a Comment