தலையெழுத்தை மாற்ற முடியுமா?

எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே.

ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது. இதில் எந்த நாட்டுப் பெண்களும் விதிவிலக்கல்ல. பிறந்தவுடன் தந்தையை, தந்தையில்லாமல் போனால் குடும்பத்தில் உள்ள ஆண்களை அதாவது அண்ணன்- தம்பி / மாமன் -மச்சான் என்று யாராவது, திருமணத்திற்குப் பிறகு கணவனை, கடைசி காலத்தில் பிள்ளையை. அதுவும் ஆண் பிள்ளை இல்லாத, கணவன் இல்லாத பெண்ணாகப் போனால் மருமகனைச் சார்ந்தவள் என்று ஆகிவிடுகிறது.

பெண் பெருமை என்று ஆரம்பித்துவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன். அதான் பெண்ணைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் இப்படித்தான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடியும். பெண்ணுக்குப் பெருமை அவள் பெயருக்கு முன்னால் தந்தையின் முதல் எழுத்தை காணாமலாக்கிவிட்டு திருமணத்திற்குப் பிறகு கணவனின் முதல் எழுத்தைப் போட்டுக் கொள்வதாம். இப்படியும் சில பெண்கள்.

இப்படித்தான் என் அக்கா 'S'-இல் தொடங்கும் என் தந்தையின் முதல் எழுத்தை நீக்கிவிட்டு திருமணத்திற்கு பிறகு கணவனின் பெயரில் 'C.N.' என்று மாற்றிக் கொண்டாள். பாஸ்போர்ட்டில் அவள் பெயர் கணவனின் பெயருக்குப் பிறகுதான் அவள் பெயர் வரும். மருத்துவ பரிசோதனை, ஓட்டுனர் உரிமம் என்று எந்த இடத்திற்குச் சென்றாலும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரை வைத்துத்தான் அழைப்பார்கள். அவளை எப்படி அழைப்பார்கள் தெரியுமா? 'காடரலி' என்று 'ஸ்டைலாக' அழைப்பார்கள் காரணம் அவள் கணவனின் பெயர் காதர் அலி நஜிமுதீன் (Cader Aly Nagemudeen). அவளுக்கே தன்னை அழைக்கிறார்கள் என்று தெரியாமல் உட்கார்ந்திருப்பாள். இப்போது அவள் பெயரே மறைந்து கொண்டும், மற்ற பெயரில் விளித்தால்தான் திரும்புவேன் என்ற நிலைக்கும் வந்தாச்சு. அக்கா இப்படியென்றால் அம்மா அதற்கும் மேல். அம்மாவின் பெயரை யாராவது கேட்டால் திருமதி. சாகுல் அமீது என்பார்கள். ஒருநாள் நான் கேட்டேவிட்டேன். ஏன் இப்படி என்று? இவர்கள் உண்மையான காரணம் சொன்னார்களா அல்லது எனக்காக, நான் சண்டைக்கு வருவேன் என்று காரணம் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன காரணம் அவர்கள் பெயர் அவர்களுக்கே பிடிக்கவில்லையாம். அப்படியே அவர்கள் பெயர் சொன்னாலும் உங்க பெயரைச் சொல்லுங்க என்று கேட்பார்கள் ஏனெனில் அம்மாவின் பெயர் 'ஷாஜகான்' மகள் ஒரு ஆணைப் போல் தைரியமானவளாக இருக்கட்டும் என்று தாத்தா வைத்த பெயர் அப்படி.

சில பத்தாம்பசலிகள் கணவனின் பெயரை வாயால் சொல்லி விடுவதும் குற்றம் என்று இன்றைய சூழலிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவாவது இப்போது கொஞ்சம் மறைந்து வருகிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இன்னாரின் திருமதி என்றும் தந்தை பெயரை நீக்கிக் கணவர் பெயரின் முதல் எழுத்தை 'இன்னிஷியலாக' சூட்டிக் கொள்வது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது எனக்கு. மொத்த அடையாளத்தையும் மறைத்து, மாற்றிக் கொள்வது அதிகம்தானே? நீ நீயாக இரு, உனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள் என்று சொல்வதில் தவறிருக்கா என்ன?

தந்தையுடைய முதல் எழுத்தைப் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் எப்போதிலிருந்து வந்தது, ஏன் வந்தது? மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே பெயரில் பலரிருந்தால் பெயர் குழப்பம் வராமலிருக்க இப்படி சேர்த்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இது உண்மை காரணமாக இருக்க முடியாது இரட்டைப் பெயர் கொண்டவர்களுக்குமா பெயர் குழப்பம் வரும் அப்படிப் பார்த்தால் தாய் தன் கற்பை நிரூபிக்கவே குழந்தையின் பெயருக்கு தந்தையின் முதல் எழுத்தை வைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. என் நண்பர் ஒருவர் தன் தாயின் பெயரின் முதல் எழுத்தை 'இனிஷியலாகவும்' தன் தந்தையின் பெயரை பெயருக்குப் பின்னாலும் போட்டுக் கொள்வார் - வ. முரளி சண்முகவேலன் என்று. தாய் தந்தை இருவருமே தன் பெயரில் வைத்துக் கொள்ள இப்படிச் செய்யலாம். அப்படியே நடைமுறையுமாக்கலாம் அல்லது தன் பெயரை மட்டுமே எழுதலாம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடப்பது சாத்தியமா?

Blog Widget by LinkWithin