கன்னத்தில் முத்தமிட்டால்...

சின்ன வயதில் தாய்மை என்பது பெரிய புதிராக தோன்றும் எனக்கு. என் மூத்த அக்காவுக்கு குழந்தை பிறந்த போது அவள் இரசித்து குழந்தையை கொஞ்சுவதைப் பார்த்து எனக்குள்ளே பல கேள்விகள் அதில் ஒன்றே ஒன்றை அவளிடம் உதிர்த்தே விட்டேன் இப்படி "பெத்த குழந்தன்னா பாசம் பொத்துக்கிட்டு தன்னால வந்திடுமோ? நீ பாக்க நானும்தான் பொறந்து வளர்ந்தேன், என்ன இத்தன வருஷமா தெரியும் உனக்கு, ஆனாலும் என்ன விட இப்ப வந்த புள்ள மேலதான் உனக்கு பாசம் அதிகம்" என்று பொறாமையின் வெளிப்பாடு தெரித்தது. அவள் பதிலுக்கு மெளனம் தந்தாள். எனக்கு அதன் பொருள் என்னவென்று அப்போது புரியவில்லை. குழந்தை பருவத்தில் புது புது வார்த்தைகள் அறிய வரும் போது தெரிந்த சில வார்த்தையை வைத்து புது வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்வது பழக்கமாகயிருந்தது, அப்போது திருக்குறளில் வந்த 'வாய்மை' அதிகாரத்தில் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்ற குறளை 'வாய்மை'க்கு பதில் 'தாய்மை'ப் போட்டுக் கொண்டால் நினைவில் எளிதில் நிற்கும் அதற்கு காரணம் என்னவென்றும் அப்போது புரியவில்லை. விடை 2004-ல் நான் தாய்மை அடைந்த போது தான் கிடைத்தது. அந்த இனம்புரியாத மனநிறைவை வார்த்தையில் வடிக்க இயலாது.

திருமணத்திற்கு முன்பே நான் வைத்த முதல் கோரிக்கை இரு குழந்தை என்றால் ஒரு குழந்தை தத்தெடுத்த பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று. எனது கோரிக்கையை என் கணவரும் ஏற்றுக் கொண்டார். ஆண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரம் பேர் இருப்பார்கள் இல்லையென்றாலும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் பெண் குழந்தைகள் அப்படியில்லை. பெண் என்பதால் கூட அவர்கள் அனாதையாக்கப்பட்டிருக்கலாம் என்பதாலே அப்படியொரு கோரிக்கை. பெற்றெடுக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மற்றுமொரு பெண் குழந்தை தத்தெடுக்க வேண்டாமே என்ற என் கணவரது கோரிக்கையையும் நியாயமென்று நானும் ஏற்றுக் கொண்டேன். 'கன்னத்தில் முத்தமிட்டால்' பார்த்த போது தத்தெடுப்பதிலும் உள்ள சில வகையான சிரமங்கள் புரிந்தது. இருப்பினும் அதற்கு ஆயுத்தமாகத்தான் இருந்தோம். பிறந்தது பெண் என்பதால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனது.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் எல்லா பாடல்களும் அற்புதமென்றாலும் என்றுமே ஆனந்த அவஸ்தையாக நான் உணர்வது இந்த பாடலைக் கேட்கும் போதுதான். வைரமுத்துவின் வரிகளை சின்மயியின் வசீகர குரல் உச்சரிக்க ஏ.ஆர். ரகுமான் இசை தவழ்ந்து வந்து காதுக்கு புதுவித இன்பத்தை தந்து மனதை நிரப்பி என்னையும் அறியாமல் கண்களையும் பனித்துவிட செய்யும் இந்த பாடல். முதல் முறை கேட்ட போது மட்டுமல்ல அவ்வகை உணர்வு எந்த மனநிலையில் கேட்டாலும், எத்தனை முறைக் கேட்டாலும் எனக்கு ஏனோ இதே மாதிரியான உணர்வுதான். தன் முதல் பாடலிலேயே தனக்கான ஒரு நல்ல பெயரை தக்கவைத்துக் கொண்டார் சின்மயியும். ஏ.ஆர்.ஆர். எத்தனையோ தமிழ் கொலை செய்யும் பாடகர்களை தமிழ் பாட அழைத்து வந்திருந்தாலும் சில நல்ல பாடகிகளையும் அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டவர். அந்த வகையில் இசையுலகுக்கு சின்மயியின் குரல் ஒரு வரப்பரசாதம்தான். சில பாடல்களை கேட்கும் போது பார்க்க ஆசை தோன்றும். பார்த்த பிறகு பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றும். ஆனால் இந்த பாடல் அப்படியல்ல. இந்த பாடல் படத்தில் இருமுறை பெண்- ஆண் குரலில் வெவ்வேறு சூழலில் ஒலிக்கும். இரு பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவும், காட்சியமைப்புகளும், கலை அம்சங்களும், வண்ண தேர்வில் எடுத்துக் கொண்ட சிரமங்களும் அதன் நுனுக்கங்களும் அந்த பாடலை காதலிக்க செய்ய தூண்டும். இரு பாடல்களுமே தண்ணீரிலிருந்துதான் காட்சி விரிவடையும். பெண் என்பதால் என்னவோ தாய் தன் குழந்தையை வர்ணித்து சிலாகிக்கும் அந்த வைர வரிகள் கொண்ட பாடலே எனக்கு மிக பிடித்தமானது.

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2)

எத்தனையோ அற்புதமான பாடல்களை பாடிய பி.ஜெயசந்திரன் தான் அந்த ஆண் குரலின் சொந்தக்காரர்.

இசையோடு ஒலிக்கும் ரம்ய குரலுக்கேற்ப வாயசைக்கும் சிம்ரனின் முகபாவமும், குழந்தை கீர்தனாவின் முகபாவமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே (2)


என்று பாடியவுடன் அந்த குழந்தை தன் தாயை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு மனதை லேசாக்கி காற்றில் பறப்பாள். அந்த கணம்தான் என் கண்களும் பனிக்கும்.

வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

வானத்தின் ஒரு பகுதியை உடுத்தியதுப் போல் நீல சேலையில் தரையில் படர்ந்து தன் மகளை மார்பில் சாய்த்துக் கொண்டு பாடல் வரிகளுக்கேற்ப தாய் சேய்க்கு உண்டான நெருக்கத்தை உணர்த்தும் காட்சி பரிமாணம் அபாரம்.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)

ஆனந்த கீதம் ஒலிக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் மகளுடன் அலைகள் இல்லாத கடல் நீரின் நடுவே அலைமோதி விளையாடுவது அழகு.

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

குழந்தை கீர்த்தனாவின் விறைத்த பார்வை, சிம்ரன் எறியப்படும் கல்லுக்கா அல்லது 'எனது பகை' என்று விளித்தமையாலா?

காதல் மலரும் நீ, கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ (2)

ஆவலான அணைப்புக்காக கையை அகல விரித்து ஓடும் தாயை விளையாட்டாக ஏமாற்றும் குழந்தை.

பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ (2)
மரணம் மீண்ட ஜனனம் நீ,


அற்புதமான வார்த்தை செறிவு.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


ஆண் குரலில் ஒலிக்கும் சரணம்:

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ (2)
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ (2)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


குழந்தையை எழுத்துப் பிழை, நான் தூக்கி வளர்த்த துயரம் என்று சொல்லியிருப்பது படச்சூழலுக்கு சரியென்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

பலமுறை சொன்ன விஷயங்களை வெவ்வேறு விதமாக புதிய பாடலாக உருவெடுத்து வந்திருந்தாலும், இந்த பாடலில் வரும் கருத்தும் விஷயமும் வேறு எந்த பாடலிலும் வந்ததாக தெரியவில்லை. நிறையப் பாடல்கள் வார்த்தைகள் தொலைந்தே போகும் அளவுக்கு இசையின் இரைச்சல் மிஞ்சும் ஆனால் அமைதியான திகட்டாத மெல்லிசையோடு உணர்வுபூர்வமான குரல், வலிமை மிகுந்த வரிகள், அழகிய ஒளிப்பதிவு, இயக்கம் என்று
இந்தப் பாடல் என் பார்வையில் வித்தியாசப்பட பல காரணங்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலைக் கேட்கும் போது இல்லாத அமைதியில் மனதை கொண்டு செலுத்துவதாகவும் உணர்வேன்.

புது பாடலாக இருந்தால் பரவாயில்லை ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த பாடலைப் பற்றி என்ன விவரிப்பு என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு என்றும் திகட்டாத எப்போதும் சுவைக்கும் பாடல் இது.

நீங்களும் பார்த்துக் கேட்டு மகிழுங்கள்:

ஒரு தெய்வம் தந்த பூவே...

Blog Widget by LinkWithin