
வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு. அதனைப் பற்றி மேலும் அறிய அந்த பயிற்சியாளரை கேள்வி கேட்டே துளைத்துவிட்டேன்.
இந்த வல்லூறு அரேபிய பாரம்பரிய பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இதனை தானே பிடித்து பயிற்சி தருவது இவர்களுக்கு பெரும் கௌரவமாக விளங்குகிறதாம். பல நாள் கண்காணித்து, அதன் போக்கை அறிந்து, இரையைத் தந்து தூரத்திலிருந்து மறைந்து தாக்கி ஒரு வல்லூறுவை சேதமில்லாமல் பிடிப்பது அவர்களின் வீரத்திற்குச் சவாலாக விளங்குவதால் இந்த விளையாட்டை விரும்பி விளையாடுகிறார்கள். ஆனால் எல்லாராலும் இதனை விளையாட முடியாது, காரணம் இது விலை உயர்ந்த பொழுதுபோக்கு விளையாட்டு. இந்த விளையாட்டைப் பெரிய ஷேக்மார்கள்தான் விளையாடுகிறார்கள். பெரும்பாலும் வல்லூறுகளை மற்றவர்களிடமிருந்து கெளரவப் பரிசாக கிடைத்ததாகவோ அல்லது திறமையால் பிடித்ததாகவோதான் வைத்திருப்பார்கள். இப்போதெல்லாம் இந்தப் பறவைகள் மத்திய கிழக்கு அரபுநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதாம். நல்ல ரக வல்லூறுவை விலை கொடுத்து வாங்கினால் கிட்டத்தட்ட 30000 டாலராகுமாம். அப்ப ஒரு பறவைக்கு இவ்வளவு விலையா என்று நான் கண் விரித்ததில் என்னைப் பார்த்து பயந்தேவிட்டார் அந்தப் பயிற்சியாளர். வல்லூறு பயிற்சியாளர்களை 'சாகர்' என்று அழைக்கிறார்கள்.

பயிற்சியின் போது அந்த பறவையுடனே முழு நேரமும் செலவிட வேண்டுமாம். இதனை வெறும் கையால் மற்றப் பறவைகளை பிடிப்பதுப் போல் பிடிக்க முடியாது, மிகக் கூரிய நகங்கள் கொண்டதால் தோலாலான கைக்கவசத்தைவிட கடினமான கையுறை அணிந்து அதன் மேல்தான் அதன் கால்களைப் பதிய வைக்கிறார்கள். பார்க்க கையை கார்பெட்டால் சுற்றியிருந்ததுபோல் இருந்தது.
இரண்டு முக்கிய வகைகளான பைரி (Peregrine) மற்றும் வைரி (Saker - cherruq) வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லதாம். இதில் பெண் வைரி வல்லூறு வகை, ஆண் வகையைக் காட்டிலும் மிகவும் வல்லமை கொண்டதாம் (தெரிஞ்ச விஷயம்தானே, எப்பவும் பெண் இனம்தானே சிறப்புமிக்கது).
இந்தப் பறவைகளுக்கு பயிற்சி காலத்தின் போது அவர்களே புறாவையோ வேறு பறவையையோ பறக்க விட்டு அதனைப் பிடிக்க பயிற்சி தருகிறார்கள். இது மிகவும் புதிய முறையாகத் தெரிந்தது. பெரும்பாலும் துப்பாக்கி வேட்டையாடுவது, வில்-அம்பு வைத்து வேட்டையாடுவது கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன பறவை மூலம் பறவையை பிடிக்கும் வித்தை, என்ன வேறுபாடு? என்று கேட்டதற்கு. இஸ்லாமிய முறைப்படி இறந்தவைகளை உண்ணக் கூடாது. ஆகையால் உயிருடன் பிடித்து வருவதற்குத் தக்க பயிற்சி தருகிறார்களாம். அப்படி பிடித்து வரும் வல்லூறுக்கு உடனே அதன் உணவைப் பயிற்சியாளர் பரிசளித்து விடுவார்களாம். வேட்டையாடிய உயிரை வெல்லும் பிராணி பசியாறுமென்று தெரியும் ஆனால் இந்தப் பறவை பயிற்சியாளரின் பரிசுக்காக தம் பசியை தள்ளிப் போடுவது விச்சித்தரமாகவும் அதன் தனிச் சிறப்பாகவும் தோன்றியது.

பிப்ரவரி 2003-ல் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதின் வல்லூறு தன் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக எடையுள்ள ஒரு மானை வேட்டையாடியுள்ளது. பல முறை மானைத் தூக்கியதாகவும் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு வல்லூறு மானைத் தூக்குவது இதுதான் முதல்முறையென்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளது. வல்லூறுவை சிறந்த முறையில் பாதுகாத்தாலும், சிறப்பு பராமரிப்பு அளித்தாலும், குளிர்காலத்தில் மட்டுமே வேட்டைக்கு உபயோகித்தாலும், பறவைக்கான சுதந்திரத்தைத் தர நல்ல மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு அதன் காலில் ஒரு 'சிப்' போல பொருத்தி பறக்க விட்டுவிடுவதனால் அதன் போக்கும் நலனும் கணினியிலேயே அறிந்துக் கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது என்று வியந்தார் அந்தப் பயற்சியாளர்.
என் கேள்விகளால் துவண்டுவிடாமல் மிகவும் ஆர்வத்துடன் அவர் கூறிய விளக்கத்திலிருந்து அவர் அந்தப் பறவை இனத்தின் மேல் வைத்திருந்த பற்றும் ஈடுபாடும் தெரிந்தது. மேலும் கேள்விகள் கேட்டு அவரைத் துன்புறுத்த விரும்பாததால் விடைபெற்றேன். வெளியே வந்த பிறகு தொண்டையில் தொக்கி நின்ற கேள்வி, 'ப்ளூ கிராஸ்' பார்த்தால் நல்லமுறையில்தான் வளர்கிறது வல்லூறு என்று சந்தோஷப்படுவார்களா அல்லது அதிலும் ஏதாவது குறைக் கண்டுப்பிடிப்பார்களா என்பது.
8 comments:
அந்த புளூகிராசுக்கு வல்லூருவால் வேட்டையாடப்பட்ட மான்கள் பத்தி ஏதும் கவலை வருமா?
//அந்த புளூகிராசுக்கு வல்லூருவால் வேட்டையாடப்பட்ட மான்கள் பத்தி ஏதும் கவலை வருமா?// நீங்க வேற இல்லாத யோசனைய சொல்லிக் கொடுத்திடாதீங்க ;-) எல்லா உயிரினங்களுமே மற்ற உயிரை சார்ந்துதானே இருக்கிறது?
விடுமுறை சிற்றுலாவைப்பற்றி ஆரம்பித்து வல்லூறு கதையாக மாறியிருந்தாலும் வல்லூறுவை பற்றி அறிந்துக்கொள்ளும் ஒரு பதிவாக மிளிர்கிறது. அதற்காக நன்றி.
கேரளத்தவர்களுக்கு யானையை போல அரபிகளுக்கு வல்லூறு ஒரு அந்தஸ்தின் அடையாளம் என்பது உண்மையே.
//வல்லூறுவை பற்றி அறிந்துக்கொள்ளும் ஒரு பதிவாக மிளிர்கிறது. // நன்றி சுந்தர். ரொம்ப சீரியஸா ஏதாவது எழுதினா ஒருவரும் அந்த பதிவு பக்கம் போய்டமாட்டாங்கன்னு தெரிந்தும் தைரியமா போட்டேன் இந்த பதிவை. இரண்டு பேராவது வந்து தலையக் காட்டினீங்களே. மிக்க நன்றி.
வல்லூறு என்றால் Falcon முக்கியமான இந்த விஷயத்தை சேர்க்க மறந்துட்டேன். நம்ம ஆட்கள் பீட்டருங்கள, அப்புறம் என்ன ஏதுன்னு தெரியாம போய்டப் போகுது அதான் ;-)
அரேபிய மணம்கமழும் ஒரு நல்ல பதிவு. தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
//இதில் பெண் வைரி வல்லூறு வகை, ஆண் வகையைக் காட்டிலும் மிகவும் வல்லமை கொண்டதாம் (தெரிஞ்ச விஷயம்தானே, எப்பவும் பெண் இனம்தானே சிறப்புமிக்கது).
//
இதற்கு கண்டனம்.
நன்றி ஃபாஸ்ட். கண்டனம் கண்டுக் கொள்ளப்படாது ;-)
நல்ல பதிவு,
காசு நிறைய இருந்தால் எப்படி எல்லாம் விளையாட்டுகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்! நம்ம தமிழ் இலக்கணத்திலும் வல்லூறு பாலை நிலத்துப் பறவையாகத்தான் வரையறுக்கப்பட்டிருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
//நம்ம தமிழ் இலக்கணத்திலும் வல்லூறு பாலை நிலத்துப் பறவையாகத்தான் வரையறுக்கப்பட்டிருக்கும்.// அறிவேன். நன்றி சிவகுமார் அண்ணா.
Post a Comment