இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம்.
கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள்.
மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லா பூக்களையும் வைத்து அலங்கரித்து வைத்திருந்தது ஏதோ ஒன்றை. 'போக்கிரி பொங்கல்' பாடலும் சத்தமாக ஒலிபெருக்கியில் ஒலித்து காதுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காங்கிரஸ் கட்சி விழா என்று ஒருகணம் நினைத்து விட்டேன் காரணம் கை சின்னம் ஆங்காங்கே காணப்பட்டது. கடைசியில் ஏதோ இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. ஏனென்றால் ஒரு சிறுவன் குரான் படிப்பது போல் பிரம்மாண்ட உருவம் வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
"இன்று முஹர்ரம் ஏழுல அதான் 'பஞ்சா' ஊர்வலம் போகுது" என்றார் என் கணவர். 'பஞ்சா' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் மாமியாரிடம் கேட்க. அது 'நக்கோபா' கூட்டம் செய்யும் சாங்கியம் என்றார்கள். 'நக்கோபா' என்றால் 'வேண்டாம்' என்பதற்கு உருது பேசுபவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை. அடிக்கடி உபயோகிப்பதால் அவர்களை நாங்கள் அன்புடன் 'நக்கோபா' கூட்டம் என்று அழைப்போம். "முஹர்ரம் பத்துக்கு இன்னும் விசேசமா கெடக்கும், அப்ப பார்க்க போலாம்" என்றார்கள் மாமி.
'பஞ்சா' பற்றி விசாரித்தலில், அதன் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாமே இஸ்லாத்திற்கு மாறானது என்று புலப்பட்டது.
'முஹர்ரம் 10'ஆம் தேதியும் வந்தது, எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருந்தது. அமீரகத்தில் கூட முஹ்ரம் 10 அன்று விடுமுறையில்லை. இஸ்லாமிய வருடப் பிறப்பான 'முஹர்ரம் 1' அன்றுதான் விடுமுறை தருவார்கள். இந்த வழக்கம் சவுதியிலும் கூட இல்லை. ஆனால் நம்ம சென்னையில் சிறுவயதில் இராயப்பேட்டையில் இருந்த வரை இந்த விடுமுறை நாளை மார் அடிப்பவர்களை வேடிக்கை பார்க்க அளித்த விடுமுறை என்று தவறாமல் அந்தக் கொடுமையைப் பார்த்து. இது 'பொய் இரத்தம்', 'சாயம்' என்றெல்லாம் தோழிகளுடன் நின்று கேலி செய்தாலும் அக்கம் பக்கத்தில் 'ஷியா'க்கள் இல்லையே என்று ஒருமுறை பார்த்துக் கொள்வேன்.
'ஷியா'களின் நம்பிக்கையே வேடிக்கையானது. இறைவன் ஒருவனே அவனுக்கு இணையும் வைக்கக் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை வேடிக்கைதானே? 'பஞ்சா' என்ற சொல் பாஞ்ச் (ஐந்து) என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதாவது ஐந்து புனிதர்களை வணங்குவதுதான் ஷியாக்களின் நம்பிக்கை.
முஹர்ரம் 10-ஆம் நாளில் தீமிதிப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு சிறிய பந்தல் போட்டு சின்ன மேடையமைத்து அதில் நிறைய வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு அதன் மத்தியில் காங்கிரஸ் சின்னமும் இருந்தது. அதாங்க கைச்சின்னம்.
முதல் முறையாகப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தீமிதிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததால் ஒரே புகை மண்டலமாக இருந்தது. சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்தும் மற்றொரு ஏற்பாடாகவே தெரிந்தது எனக்கு. இருமிக் கொண்டே அந்த பந்தல் பக்கம் சென்று பார்த்தேன். அங்கு சாம்பிராணி புகை போட்டு வருபவர்கள் தலையில் ஒருவர் மயிலிறகை அந்தச் சாம்பிராணியில் காட்டி அவர்கள் தலையில் வைத்தார். பயபக்தியாக குடும்பமே அந்த மயிலிறகில் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தது. வைத்திருக்கும் சந்தனத்தையும் கழுத்தில் தேய்த்துக் கொண்டார்கள். மடச் சாம்பிராணிகள் என்று நினைத்துக் கொண்டேன்.
சிலர் மெனக்கெட்டு தீமிதிக்க ஆயத்தமாகும் தீக்கணலில் உப்பு, மிளகு என்று பொட்டலத்தில் எடுத்து வந்து அந்தத் தீயில் போட்டார்கள். இப்படி போடுவதன் மூலம் முகத்தில், உடலில் வரும் கொறுகொறுப்பு, திருஷ்டியால் வரும் பருக்கள் எல்லாம் மறைந்து விடுமாம், இதுவும் ஒருவகையான முட்டாள்தனமான நம்பிக்கை. நகைப்பாக இருந்தது. இதில் பூமிதி வேறு, வெயிலில் செருப்பில்லாமல் இருந்தவர்களையே நபிகள் கண்டித்ததாக ஆதாரங்கள் இருக்கும் போது தீமிதிப்பு இஸ்லாத்திற்கு எதிரானதுதானே? ஊர்வலம் போவது, கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா எல்லாமே இஸ்லாத்திற்கு ஏற்றது அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ? இதெல்லாம் அறியாமை செயல்களாகத் தெரியவில்லை யாருடனோ போட்டி போடும் அறிவின்மையாகவே தெரிகிறது எனக்கு
'ஷியா' முஸ்லிம்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில். அவர்கள் கறுப்பாடை அணியாதிருப்பதை கவனித்தேன். ஷியாக்கள் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் (ரலி) இழப்பை துக்க நாளாகச் சித்தரித்து கறுப்பாடையை முஹ்ரம் நாட்களில் அணிந்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போர்கள் எத்தனையோ, அதில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் ஹுசைன் (ரலி) மறைவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? ஏன் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள்? எதிரிகள் ஹுஸைன் (ரலி) அவர்களின் தலை, கைகள், கால்கள், விரல்களை வெட்டி, பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்ட செயலை போல் இவர்களும் கை விரல்களை ஏந்தி ஊர்வலம் போவது பெரிய முரண்பாடு தானே? ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் பக்தி பரவசமாக மார் அடித்து, தங்களையே குத்தி வதைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தையும் இன்னும் செய்து வருகிறார்கள். 'அமைதி' என்று பொருட்படும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு இடமில்லை என்று அறியாமலா இருப்பார்கள் இவர்கள்?
கறுப்பாடைகள் தென்படாததால் மெதுவாக சென்று விசாரித்தேன். "நாங்க 'ஷியா' இல்லீங்க' 'சன்னி' முஸ்லிம்தான். நம்பதான் பஞ்சாலாம் வைக்கிறது" என்றதும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. "அந்த பூப்போட்டு ஏதோ வச்சிருக்காங்களே அதற்குள் என்ன இருக்கிறது" என்று ஆர்வமாக கேட்டேன். "அதுங்களா, அது ஒரு ஸ்டீல் பாத்திரம் கணக்கா இருக்கும். அத முஹர்ரம் பொறக்கும் போது எடுத்து ஓதி, பந்தல் கட்டி, பூப்போட்டு இப்படி வச்சிருவோம். .
ஏழாம் நாள் குதிரையில் ஊர்வலம் போய் கொண்டு வந்து மறுபடியும் பந்தலில் வச்சிருவோம். அப்புறம் எல்லாம் முடிச்சிட்டு அதுக்குன்னு ஒரு பெட்டியிருக்கு அதுக்குள்ள வச்சிருவோம்" என்றாள் குதூகலத்தோடு. நான் வியப்பாக "ஒரு பாத்திரத்திற்கு பூப்போட்டு அலங்காரம் செய்து, அதுக்கிட்ட வேற மக்கள் போய் ஆசிர்வாதம் வாங்குறாங்க, இஸ்லாத்தில் இதெல்லாம் கூடாதுதானே" என்றேன். அவள் ஒரு முறை முறைத்து விட்டு விலகிச் சென்றாள். பக்கத்தில் இருந்த மற்ற பெண் "நாங்க கால காலமா செய்றது மாத்திக்க முடியாது" என்று என் காதில் கேட்க முணுமுணுத்தாள். 'இவர்களுக்காவது ஏதோ வெறும் சம்பிரதாயம் மற்றப்படி நம்பிக்கையில்லை' என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன்.
கால காலமாகச் செய்கிறார்கள் என்றால் இவர்கள் 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா? ஏனெனில் 'சன்னி' முஸ்லிம்கள் வழக்கப்படி பஞ்சாவெல்லாம் கிடையாது. 'சன்னி'யோ' 'ஷியா'வோ யாராக இருந்தாலும் சரி, முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளை தருகிறது. இதையெல்லாம் நிறுத்தினால் இப்படி தேவையற்ற ஊர்வலமும், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறும், வீண் விரயங்களும் தானாக நின்றுவிடும்.
18 comments:
நீங்கள் P.J வின் கருத்துகளை படித்து தெளிவாக இருப்பதால் தெளிவாக இருக்கீங்க, அவங்க அதை படிக்காததால் தெளிவாக இல்லை. (நான் தான் first)
படைத்தவனை வணங்குவதை விட்டு படைப்புகளை வணங்குவதை நானும் சென்னையில் கண்டு தலையில் அடித்துக் கொண்டதுண்டு.
அப்புடிப் போடு அறுவாள!
பஞ்சா பெயரில் ஏய்த்துப் பிழைக்கும் ஒரு கூட்டம்; ஊக்கம் கொடுக்கும் அரசாங்கம். இரத்தம் வடிப்பது மட்டும் ஒன்றுமறியா மக்களில் ஒரு கூட்டம்.
இவற்றையெல்லாம் தற்கொலை முயற்சி என்று கூறி, தடை வாங்குவதற்குச் சட்டத்தில் இடமுள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டும்.
சிறப்பான, சீர்திருத்தக் கருத்துகளையும் சினத்தையும் உள்ளடக்கிய பதிவு.
வாழ்த்துகள்!
மூடத்தனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, படங்களை அக்கறையுடன் பதியும் நம் ஜனநாயகத் தூண்களையும் இந்தப் படங்களையும் பாருங்கள்:
http://mdfazlulilahi.blogspot.com/2007/02/blog-post.html
http://mdfazlulilahi.blogspot.com/2007/01/httpwww.html
விழித்து எழுவதிலும் நாம ரொம்ப ரொம்ப லேட்டுதான்:
http://mdfazlulilahi.blogspot.com/2007/01/blog-post_26.html
//நீங்கள் P.J வின் கருத்துகளை படித்து தெளிவாக இருப்பதால் தெளிவாக இருக்கீங்க// தெளிவாக இருப்பதற்கு PJ / TMMK என்று யாருடைய கருத்துக்களும் தேவையில்லை அபி அப்பா, மார்கத்தை ஒழுங்காக தெரிந்திருந்தாலே போதும். பின்னூட்டமிட முந்துவதில் உங்களுக்குள்ள ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி.
//படைத்தவனை வணங்குவதை விட்டு படைப்புகளை வணங்குவதை நானும் சென்னையில் கண்டு தலையில் அடித்துக் கொண்டதுண்டு.// ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஃபாஸ்ட்.
நன்றி ஜமீல். நீங்க தந்த சுட்டியில் உள்ள படங்கள் கதிக்கலங்க செய்துவிட்டது. அந்த பெண்ணுடைய கையில் சிகப்பு கயிறு வேறு. அந்த மூட(ர்) நம்பிக்கை பட்டியலில் 'கயிறு காப்பாத்தும்' என்று கையில் கட்டிக் கொள்ளும் கதை விட்டுப் போச்சு.
ஆஹா! கோபமிருக்கும் இடத்தில்தானே குணமும் இருக்கும்.(சக்திFM தொடர்ச்சி) ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
நல்ல பதிவு நன்றி.
//முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளை தருகிறது.//
அவர்களின் செயல்கள் மூட நம்பிக்கைகள்தான். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை மக்களில் ஒரு பிரிவினர் இதை நம்பிக்கையாக கொண்டுள்ளார்கள். அவர்களும் வரி கட்டுபவர்கள். அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி போன்றவற்றைத் தருவதுதானே முறையானதாயிருக்கும்.
அவர்களது நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள்தான் என்பதை நாம்தான் அவர்களிடம் (குறிப்பாகவும் மற்றவர்களிடம் பொதுவாகவும்) எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் பங்குக்கு நீங்கள் சொல்லியுள்ளீர்கள் அதனால் வாழ்த்துக்கள்.
நன்றி சுல்தான் பாய். //ஆஹா! கோபமிருக்கும் இடத்தில்தானே குணமும் இருக்கும்.(சக்திFM தொடர்ச்சி) ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.// நான் கோபக்காரின்னு முடிவே கட்டிட்டீங்க போலருக்கு? ம்ஹும் நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்.
அன்புச் சகோதரி,
அருமையாகஎழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ஷிய்யாகளின் பழக்க வழக்கங்கள் பல-. தர்கா, தரீக்கா, ஸூஃபிஸம் போன்றவை- இன்றளவும் ஸுன்னிகளால் பயபக்தியுடன் பின்பற்றப் பட்டு வருகின்றன. பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது போன்றன மட்டும் இஸ்லாமிற்கு முரணனவை அல்ல; மேற்சொன்னவையும்தான். இவற்றையும் அலசி நல்ல ஆக்கங்களைத் தருக.
முஹர்ரம் ஏழுல 'பஞ்சா' நக்கோபா' தீமிதிப்பிற்கு வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு கைச்சின்னம் சாம்பிராணி புகை மயிலிறகை ஆசிர்வாதம் வாங்கி தீக்கணலில் உப்பு, மிளகு பூமிதி கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா கறுப்பாடை மார் அடித்து பாத்திரம் கணக்கா 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா?
****
தல சுத்துது...
இந்திய இஸ்லாமிய அகராதியிலுள்ள வார்த்தைகளைப் பார்க்கும் பொழுது...
இந்த மாதிரி ஒரு இஸ்லாமியத்தைப் பார்க்காமலே வளர்ந்தது எனது பாக்கியங்களில் ஒன்று தான் என்று சொல்ல வேண்டும்....
// நீங்கள் P.J வின் கருத்துகளை படித்து தெளிவாக இருப்பதால் தெளிவாக இருக்கீங்க, அவங்க அதை படிக்காததால் தெளிவாக இல்லை. (நான் தான் first) //
அபி அப்பா -
PJ is at the other end of the spectrum - watch out!!!
To learn Islam, do not rely on preachers - try and reach Islam by doing reasearch on your own - Possible - Quite Possible!!!
//அருமையாகஎழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.// நன்று புதுச்சுவடி. //இவற்றையும் அலசி நல்ல ஆக்கங்களைத் தருக.// இறைவன் நாடினால்.
//try and reach Islam by doing reasearch on your own//சரியாக சொன்னீர்கள் நண்பன் நன்றி.
Nanraaga eshuti irukeenga ,naanum ithai patri kaelvi pattathundu ;-)
அன்புச் சகோதரி
மிக அருமையாக மன ஆதங்கத்தைக் கொட்டியுள்ளீர்கள்.
இஸ்லாம் என்பது பலருக்கு வெறும் ஏடாகவே இன்னும் உள்ளது.
எவ்வளவு தான் இஸ்லாமிய பிரச்சாரங்கள் நடந்தாலும் இன்னும் பரம்பரை பழக்கவழக்கங்களிலேயே ஊறிப்போய் இருக்கும் மக்களை நினைத்து வேதனை தான் விஞ்சுகிறது.
சில பரம்பரை முஸ்லிம்களின் மூடச்செயல்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் கூட்டமும் இதனிடையே உள்ளும் புறமும் அலைமோதுகின்றன.
தெளிவான நடையில் மிக அழகாக நிலைமையை விளக்கியுள்ளீர்கள்.
மேலும் பல நல்ல ஆக்கங்களை கொடுக்க வாழ்த்துக்கள்.
/- try and reach Islam by doing reasearch on your own/
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரரே.
பேசுபவர்கள் சில வேளைகளில் வெறும் மேடைப்பேச்சாளர்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பேசுபவரை வைத்து மார்க்கத்தை தேர்ந்தெடுக்கப்போனால் பின்னர் அவரின் சொந்த வாழ்வைப் பார்த்து நாம் தடுமாறவும் வாய்ப்புள்ளது. அதுவே வாழ்வை சீர்குலைத்து தவறான பாதைக்கும் இட்டுச் செல்லலாம்.
எனவே எதையும் தீர அலசி ஆய்ந்து தேர்ந்தெடுங்கள். அது தான் உறுதியான முடிவுக்கு இட்டுச் செல்லும்.
தேடியவன் தேடியதை பெறுவான்.
அன்புடன்
இறை நேசன்
விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி இறை நேசன் அவர்களே.
எல்லா மதங்களிலும் ஏன் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மூடப்பழக்கவழக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை நம் வாழ்வின் மறுக்கமுடியாத -மறுக்கவேண்டிய- விசயங்களாக இருந்துகொண்டேயிருக்கின்றன.
நல்ல நடை. நல்ல பதிவு.
இந்த பதிவு "பூங்கா"வில் வந்துள்ளது. வாழ்த்துக்கள்:-)
நன்றி முத்து.
//இந்த பதிவு "பூங்கா"வில் வந்துள்ளது. வாழ்த்துக்கள்:-)//
அபி அப்பா இந்த வாரத்தில் எழுதிய பதிவுகளில் இது ஒன்னுதான் உருப்படின்னு வச்சிக்கலாமா? ;-)
எல்லாமே சூப்பர், இந்த பதிவு சூப்பர் ஸ்டார்:-)
ஜெசிலா ,உங்கள் வலைப்பூவை தற்போதுதான் பார்க்க நேர்ந்தது.நிறைய நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.பாராட்டுகள் & நன்றி
இஸ்லாமியர்களும் மூடநம்பிக்கையில் உழல்வது வருத்தமாகதான் இருக்கிறது.இன்னும் சில தலைமுறைகள் சென்றால் இந்த மூட நம்பிக்கைகள் அனைத்தும் ஓழியும் என்பதில் சந்தேகமில்லை.
சகோதரி ஸலாம்,
அருமையான சிறப்பான, சீர்திருத்தக் கருத்து.
இவர்களின் அறியாமைக்காக இறைவனை பிரார்த்திப்போம்.
Post a Comment