Wednesday, October 12, 2022

துபாய் வேலை

 நான் வேலை தேடி துபாய்க்கு மூன்று மாத கால விசாவில் வந்திருந்தபோது, அந்தக் காலத்தில் எல்லோருமே ஒரே மாதிரியான பதிலையே எனக்குத் தந்தனர் - ‘திருமணம் முடித்து இங்கு வா அதன் பிறகு வேலைக்கான விசா தருகிறோம்' என்று. பெரிய நிறுவனங்களிலேயே கூட, திருமணம் ஆகாதவர்களுக்கு வேலைக்கான விசா தருவதில் சிக்கல் இருந்தது. விசிட் விசாவே திருமணமாகாதவர்களுக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நான் சொல்வது 1997-இல். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்தேன். அதிலேயே பலவித அனுபவத்தையும் பெற்றிருந்தேன். என் குடும்பத்தைத் தவிர வெளி நபர் என்று என்னை ஆதரித்தது நஸீரா மாமியும் ஹாஜா மாமாவும்தான். ’நல்ல வேலையா கிடைக்கத்தான் தாமதமாகுது, கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்’ என்ற உற்சாக வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய மகள் Sameema Mansoor எனக்கு உற்ற தோழியானாள். வார இறுதிகள் அவர்களுடனான சுற்றுப்பயணங்களென நாட்கள் நகர்ந்தன.

’வேலைக்கான விசா கிடைக்காவிட்டாலும், நீ வந்ததற்கான செலவையாவது பெற்றுவிட்டுப் போவதற்கான வழி செய்யவேண்டு’மென்று தனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் என்னை வேலையில் சேர்த்துவிட்டார்கள் ஹாஜா மாமா. அப்போது அவர்கள் ஈடிஏவில் நல்ல பொறுப்பில் இருந்தார்கள். ஒரு மாத காலம் அங்கு வேலையில் இருந்தேன். அதன்பின் ஜீனத் பேப்பர் நிறுவனத்திலும் ஒரு மாதம் வேலையில் இருந்தேன். அந்த மேலாளரும் ‘நம்ம பையனுவ உன்கிட்ட திறமையக் காட்ட நிக்கிறானுவ, வேலையப் பார்க்க மாட்றானுங்க. உன் நல்லதுக்குதாம்மா சொல்றேன், நீ கல்யாணத்த முடிச்சிட்டு வா, உன் மாப்பிள்ளைக்கும் சேர்த்தே வேலை தரோம்’ என்று வேலை தர இயலாமையை நாசூக்காகச் சொல்லி விட்டார். தற்காலிகப் பணியில் இருக்கும்போது ‘இது நிரந்தரமல்ல’ என்று மனது எனக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தது, நாட்களும் கரைந்து கொண்டே சென்றன.
தொன்னூறு நாட்கள் முடிவதற்கு இரண்டு தினங்களே இருந்த நிலையில். மற்றொரு விசிட் விசா எடுத்து இன்னும் வெவ்வேறு இடங்களில் முயற்சி செய்யலாம்தான். ஆனால் விசா யார் தருவார்கள்? ஹாஜா மாமாவிடம் முறையிட்டேன். அவர்களுக்கும் தெரிந்தே இருந்தது, என் நாட்கள் முடிவு பெறப் போகின்றன என்று. என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் தன் சக்திக்குட்பட்டுத்தானே எதனையும் செய்ய இயலும்?
திருமணமாகாதவருக்கு விசிட் விசா என்பது பிரச்சனையான விஷயம், தனி நபராக விசிட் விசா எடுக்க இயலாது, ஏதேனும் பெரிய நிறுவனத்தால் மட்டுமே விசா தர இயலும். அப்படியான சூழலில் இருக்கும் போது ஒரு நேர்முகத்திற்கான அழைப்பு வந்தது. சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தில் எனக்கான வேலை உறுதியானது. வேலைக்கான விசாவிற்கும் பிரச்சனையில்லை என்றார்கள். காரணம் அது ஷார்ஜா ஆட்சியாளரின் குழுமம் - அல் காசிமியா குரூப். ஆனால் அவர்கள் வேலைக்கான விசா விண்ணப்பித்து வர ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகும், ஆகையால் மற்றொரு விசிட் விசா எடுத்துவிடு என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள்.
வேலை கிடைத்துவிட்டது என்று சந்தோஷத்தையுமே அனுபவிக்க இயலவில்லை, குழப்பத்தில் இருந்தேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ‘ச்சீ ச்சீ துபாய்ப் பழம் புளிக்கும்’ என்று ஊருக்குச் சென்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன், வேறு வழியில்லாமல். இன்னும் ஓரிரு நாட்களில் வெளியேற வேண்டுமென்ற நிலையில், திடீரென்று ஹாஜா மாமா அவதரித்தார்கள். ஆம், எனக்கு அப்படித்தான் தோன்றியது. இறைவன் உதவி செய்ய நினைத்துவிட்டால், ஒரு சிறந்த கருவியைத் தேர்ந்தெடுப்பானாம், அப்படித் தோன்றியதுதானே அவதாரங்களெல்லாம்? அப்படியான அவதாரமாக அவர் வந்து ஒரு ’கவர்’ தந்து, உடனே டிக்கெட் எடு என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கவரினுள் பார்த்தால் எனக்கான விசிட் விசா. அதிர்ச்சியும் பேரானந்தமும் இணைந்ததில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தேன். கண் மூடி நான் கண்ட கனவெல்லாம் கண் முன்னே நடக்கவிருக்கிறது. வாய்ப்பிருக்கிறது, எனக்கு இங்கு ‘ரிஸ்க்’ இருக்கிறது என்று புரிந்தவளாக இறைவனுக்கு நன்றி செலுத்தியவளாகப் பயணத்தைத் திட்டமிட்டேன்.
இப்போது உள்ளது போல் அப்போதெல்லாம் நாட்டிற்கு உள்ளிருந்தே விசாவை மாற்ற இயலாது. ‘கிஷ்’ என்ற நாட்டிற்கோ அல்லது ஓமான் நாட்டிற்கோ சென்று புதிய நுழைமதியில் நாட்டிற்குள் வர வேண்டும். கிஷ்ஷுக்கு செல்வதே விலை குறைவாக இருந்தது. அங்கே சென்று விசா மாற்றி வந்து, அதன்பிறகு சில வாரங்களில் வேலைக்கான விசாவில் மாறினேன். வேலையும் ஓட்டமுமாக நாட்கள் கழிந்தன. இயந்திர வாழ்க்கைக்குப் பழகிப்போனேன். என் கணவரும் துபாய் வர ஹாஜா மாமாதான் காரணம் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். இப்படிப் பலரை உயர்த்தி விட்டிருக்கிறார் அவர்.
என் வாழ்க்கையில் இது மிக முக்கியமான அத்தியாயம். அன்று சரியான நேரத்தில் ஹாஜா மாமா விசா பாடுபட்டு வாங்கித் தராமல் இருந்திருந்தால் இன்று நான் துபாயில் இருந்திருக்க முடியாது, துபாயில் நிறுவனம் தொடங்கியிருந்திருக்க முடியாது, அதுவும் பிறருக்கு விசா தரும் டிராவல்ஸ் நிறுவனமே நடத்துவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவையும் மாமியையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே. நானும் சமீமாவும் இன்னும் தோழிகளாக இருப்பதால் இந்தச் சந்திப்பு சாத்தியமானது.


No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி