Saturday, October 08, 2022

தெரிசை சிவாவின் ருபினி

போன வாரம் நடந்த நிகழ்வாக இருந்தாலும் நேற்று நடந்ததுபோல் இன்னும் பசுமையாக உள்ளது. அஃபீனாவின் Afina Arul பாடல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தெரிசை சிவாவின் Siva Sai ருபினி பற்றி ஒவ்வொருவரும் பேசியதும் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது.


சிவாவின் 'சன்னதம்' வாசித்துவிட்டு அதே சாயலில் வரவிருக்கும் ருபினியை ஆவலாக எதிர்நோக்கினேன். வாசிக்கும் முன்பே அதைப் பற்றி பேச வேண்டுமென்று இருந்தேன். காரணம் சிவாவின் எழுத்து மீதான நம்பிக்கை. அவருடைய ‘குட்டிக்கோரா’ பற்றியும் எழுதியிருக்கிறேன். அதில் தென்பட்ட குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாக அதே போன்று ‘திமில்’ வந்தது. நூலாசிரியரின் பலமே அவருடைய வட்டார வழக்கும், நகைச்சுவையும்தான். அதையெல்லாம் முற்றும் தொலைத்து வேறொரு பரிமாணம் எடுத்திருக்கிறார். மொழிநடை வாசிக்கக் கூடியதாகவும், ஒவ்வொரு அத்தியாயத்தையும் முன்னோக்கிச் செல்வதாகவும் இருந்தது. ஆனால் அவர் உருவாக்கிய புதிய உலகத்தில் என்னால் சஞ்சரிக்கவே முடியவில்லை. மாறாக அந்த உலகத்தினால் வரும் பலன்கள் என்னவென்று கேள்வியெழுப்பவே முடிந்தது.
‘ஹாரி பாட்டர்’ வாசிக்கும் போது அலாதியான கற்பனையோடு வாசித்தேன். என் கற்பனையைக் கொஞ்சம் திருப்திப்படுத்தும் வகையில் திரையில் வந்ததைக் கண்டு வியந்தேன். ’ஸ்டிரேஞ்சர்ஸ் திங்’, ‘லாக் & கீ’, ‘பிஹைண்ட் ஹெர் ஐஸ்’ இப்படியான வெப் சீரீஸ் பார்க்கும்போது எப்படி இப்படிலாம் யோசிக்கிறாங்க, இப்படியான உலகம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்ற கற்பனை விரியும். அதில் அப்படியான வேறு உலகம் இருப்பதாக அல்லது அப்படியெல்லாம் உலகத்தில் ஏதோவொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படும் விதத்தில் நம்ப வைத்திருப்பார்கள். கே. என். சிவராமன் சிவராமனின் ‘கர்ணணின் கவசம்’ வாசிக்கும்போதும், இப்படித்தான் கோவில்களைக் கட்டி இருப்பார்களோ, இன்னும் தெரியாத ரகசியங்களை யாரோ ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று அதைச் சுற்றியே மனதில் எண்ணங்கள் தோன்றும்.
அப்படி நம்பும்படியாக, அல்லது இப்படியான காமமில்லா உலகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்கும் அளவிற்கு ‘ருபினி’ உலகம் அமையவில்லை. அமானுஷ்யம், அறிவியல் ஆராய்ச்சி, வசியம், கூடுவிட்டு கூடு மாறுதல், நாடி ஜோசியம், புதிய உலகம் என்று ’ருபினி’ புதினத்தை வாசிக்கும்போது இயல்பாகவே மற்றதோடு ஒப்பிடாவிட்டாலும் இப்படியான உலகத்தின் பயனைச் சரியாக விவரிக்கவில்லையோ, அல்லது பிரமிக்க வைக்கும் அவர் கற்பனையை அவருடைய எழுத்து கடத்தவில்லையோ என்ற ஐயம் எழுகிறது. அதுமட்டுமல்லாது வலிந்து திரிந்து சேர்த்த உருவகங்கள் - உதாரணமாக, புழுதியில் சிக்கிவிட்ட மீன் வலையைப்போல் ஏராளமான மர்ம முடிச்சுகள். குப்பைத்தொட்டியில் கிடந்துருளும் அழுக்குப் பூனையைப் போல்... மனமெங்கும் பற்பல கேள்விகள் உருண்டெழும்பிய வண்ணமிருந்தன. மீன் தொட்டியில் பரிதவிக்கும் மீன் குஞ்சாய் அங்குமிங்கும் படபடத்துக் கொண்டது, இப்படியான வாக்கியங்கள் ஏதோ ஒட்டாது தனித்து நிற்பதாகத் தோன்றியது. சொன்னதே திரும்பத் திரும்பச் சொல்லி வலியுறுத்துவதான அல்லது பிரச்சாரத் தொனியும் எழுத்து நடையில் உள்ளதால் உள்வாங்கவும் கடினமாக இருந்தது.
ருபினியை வாசிக்கும் உங்களால் இதையே வேறுவிதமாகப் பார்க்கவும் முடியும். வாசியுங்கள். வாசித்து உங்கள் கருத்தையும் பகிருங்கள். வாழ்த்துகள் சிவா. இன்னும் நிறையப் புதினங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

PC: Subhan Peer Mohamed 



No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி