முருங்க இலை பறிக்க மரமேறி
முழங்கால் சிராய்த்தும் அழாமல்
ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனை
பதறியடித்து தடவிக் கொடுத்த
பல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லை
கோலி உருட்டி விளையாடி
எறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்க
பாவம் என்று பரிதாபப்பட்டு
விஷக்கடியாய் பாவித்து வலிபோக்கிய
வழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லை
காய்ச்சலில் சுருண்டதும்
கோவில் வேண்டுதல்களும்
பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா
·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்
பெரிய விஷயமாகப்பட வில்லை
பழுத்த முகத்தோடு
பார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறி
முகம் தெரியாத நபர்களெல்லாம்
விசாரித்து பக்குவம் சொல்லியது
எப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லை
பெருநகர நெரிசலில்
இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனை
பல்லவன் தட்டிச் செல்ல
ஓரமாகக் குருதி வலிய உயிர் ஊசலாடக் கிடப்பவனைக்
கேட்பாரில்லை
உச்சுக்கொட்டி விட்டு
ஒதுங்கி நின்று பார்க்கக்கூட
நேரமில்லாமல் விரைந்து செல்லும் நகர மனிதர்களுக்கு
மனித நேயம் மரத்து போய்விட்டதா
மறந்து போய்விட்டதா?
No comments:
Post a Comment