சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போது
கிடைத்த சங்கை காதில் வைத்தால்
ஓ என்று எழும் சத்தம்
ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்
என்று அறியாது இருந்து விட்டோம்.

வான நிறத்தை எடுத்துக் கொண்டு
நீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்
கொடிய எண்ணத்தை கொண்டதனால்
அது உனக்கு கிடைத்த நிறம்
என்று அறியாது இருந்து விட்டோம்

உன்னிடம் உள்ள கடலினங்களை
நாங்கள் கொன்று தின்றோமென்றால்
உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்
அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

உணர்வுகள் நாங்கள் அறிய
உப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்
நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்
நீ உப்பாக கரிக்கின்றாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

தாய் மடியாக நினைத்து உன்னுடன்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை நீ

வங்கியாக நினைத்து உன்னிடம்
வாழவை என்று கையேந்தி நின்றவர்களையும்
விட்டுவைக்கவில்லை நீ

மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு
உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு
உடலை ஓரம்கட்டும் வித்தையை
எங்கே கற்றுக் கொண்டாயோ?

ஆழி பேய்க்கடலாய்
ஆட்களை அழித்துவிட்டாய்
பலி தீர்க்கும் பாவத்தை
இனியாவது செய்யாமல் இருப்பாயோ?

http://www.thisaigal.com/jan05/poem_jazeelabanu.html

Blog Widget by LinkWithin