திருமணம் - வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.

திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.

திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல ஒற்றுமைகளை விட வேற்றுமைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து அதன்படி நம்மை மாற்றிக் கொண்டு விட்டுக்கொடுத்து போவதுதான் நுண்ணறிவுள்ள செயல்.

பெரும்பாலான இன்றைய தலைமுறைகள் திருமண வாழ்வின் நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், தான் திட்டமிட்ட கனவு உலகை காண மட்டுமே ஆயுத்தமாகுகிறார்கள்.

நிச்சயித்த திருமணமோ, காதலித்து திருமணமோ, திருமணத்திற்கு முன்பு லட்சக் கேள்விகள் கேட்டு அதில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டதாக திருப்த்தியடைந்து அதுவே வாழ்விற்கு தேவையான எல்லா பதில்கள் என்று மகிழ்ச்சிக் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லோருமே தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள். இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா?’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள். எதிர்பார்ப்பைவிட இருப்பதை அப்படியே நேசிக்க கற்றுக் கொண்டாலே வாழ்விற்கு வெளிச்சம்தான்.

வேற்றுமையா ஒரு திருமணமுறிவிற்கான காரணம்? அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள்? யோசித்திருக்கிறீர்களா?

வாக்குவாதம், விவாதத்தின் பிறகு செய்ய வேண்டியவை எல்லாம்:


  • மன்னித்து மறந்து விட வேண்டும் (இருவரும் ஒரே விஷயத்தை மனதில் வைத்திருப்பதில் பயனில்லை பாருங்க).
  • தவறிலிருந்து திருத்திக் கொள்வது (வாயே திறக்க கூடாதுன்னு திருத்திக்கிட்டா பிரச்சனையே இல்லை)
  • புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்குவது (புரியா விட்டாலும் புரிந்தது போல் சமாதானப்படுத்தி முடித்து விட வேண்டும், சண்டையை.)
  • இருப்பதை அப்படியே நேசிப்பது (வேற வழி!)
  • சிநேகபாவமாக விட்டுக்கொடுப்பது (விட்டுக்கொடுக்கலன்னா வாங்கி தர வேண்டி இருக்கும், அன்பளிப்பு).

கருத்து வேறுபாடு என்பது எப்போது வருமானால்

  • மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்காத போது (என்றுதான் பேசுவதை கேட்டிருக்காங்க, அவங்களே பேசிக்கிட்டிருந்தா?)
  • மற்றவர் கருத்தை மதிக்காத போது (மனுஷன மதிச்சாதானே கருத்தை மதிக்க!)
  • மற்றவர் கருத்தை ஏற்க முடியாத போது (கேட்டாதானே ஏற்பதைப் பற்றி பேச)
  • மற்றவர் கருத்தை சரியென தெரிந்தும் மனம் ஒப்பாமல் மறுக்கும் போது (எகத்தாளம், அகங்காரம்.)

திறமையாளர்களுக்கு தெரியும் திருமணத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டுமென்று, எப்படிப்பட்ட துணை அமைய வேண்டுமென்று, எந்த மாதிரியயன குணநலம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமென்று.

ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு நெருக்கடி, பொறாமை, சந்தேகம், உரிமை கொண்டாடுதல் (Possessiveness) இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே போதுமானது.

சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது.

‘என்னைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா’ என்று துணைவி கேட்டால்.

‘நீதானே தேவையில்லாதவற்றிக்கு எல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொன்ன’ என்று நையாண்டியாக பேசினால். கிண்டல் என்று புரிந்துக் கொள்ளும் தன்மை இருத்தல் வேண்டும்.

அறிவாளிகளுக்கு தெரியும், காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும். (கொடுக்கல்- வாங்கல் வியாபாரம் மாதிரிதான்).

கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.

Blog Widget by LinkWithin