இல்லாமை இல்லை!?

தானத்தில் சிறந்த தானம் எது?

சமாதானம், நிதானம், பிரதானம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்.

வரவில்லாத சேவை நிறுவனங்கள் (Non-profit organisation) பற்றியோ அல்லது உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்ற விஷயங்கள் பற்றியது என்று எதிர்பார்த்து விடாதீர்கள்.

நான் சொல்ல இல்ல இல்ல எழுத வருவது நம்மால முடிந்த செய்ய கூடிய சின்ன தரும சிந்தனைகள் பற்றியது.

தானம் என்கிற இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் அடங்கி இருக்கின்றன். ஆனால் தானத்தின் அடிப்படையென்று பார்த்தால் அன்பு செலுத்துவதிலிருந்து ஆரம்பமாகுகிறது.

ம்ருதுவாக்ய ப்ரதாநேந
ஸர்வே துஷ்யந்தி ஜந்தவா:
தஸ்மாத் ததேவ வக்தவ்யம்
வசநே கா தரித்ரதா

(பயந்துவிடாதீர்கள். ஹந்தி இலவசமாக படிக்க வேண்டுமென்றால் கட்டாயம் சமஸ்கிரதம் படிக்க வேண்டுமென்பதால் கற்றது. கற்றதை அகராதியில் கண்டபோது புகுத்த வேண்டுமென்பதால், மன்னிக்கவும் பதிக்க வேண்டுமென்பதால்...) அதாவது தாழ்ந்த குரலில் அன்புடன் இனிமையாகப் பேசினால் எல்லா பிராணிகளும் மகிழ்ச்சியடைகின்றன. பாய வரும் பசுவை 'பா, பா' என்று அன்புடன் அழைத்துத் தட்டிக் கொடுத்தால் நாக்கால் நம்மை நக்கிக் கொடுக்குமன்றோ! (முட்டாமல் விட்டால் சரி, என்று சொல்வது கேட்கிறது). ஆகவே, இனிமையாகப் பேசுதலென்ற தானத்தைச் செய்ய வேண்டும். இனிய பேச்சுக்கென்ன ஏழ்மை வந்து விட்டது?

இதையே தான் இரண்டு வரியில் சுருங்க சொல்கிறார் நம்ம திருவள்ளுவர்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என்னடா தானம் என்று ஆரம்பித்து விட்டு அதன் அடிப்படையில் திசை திரும்பிவிட்டேன் என்று எண்ணலாம். எண்ணும் எண்ணத்தில் தான் தானம் உருவாகுகிறது. ஒருவர் மீது அன்பு செலுத்துவதில், இரக்கப்படுவதில்தான் 'தானம்' பிறக்கிறது.

வேண்டுதல், நேர்த்திக்கடனுக்காக உணவளிப்பது இவைகள் தான- தர்மத்தில் அடங்காது. தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அதில் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது என்று உணர்ந்ததுண்டா?

அதற்காக பேகனாக, பாரியாக, சீதகாதியாக, கர்ணனாக இருக்க சொல்லவில்லை. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும், ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும், அதைதான் ஒளவையார் வானம் கருக்கின் தானம் சுருங்கும் என்று சொல்லியிருக்கிறார். வறட்சி, பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் அதை மீறி தானம் செய்ய முடியாதுதான். ஆனால் வறட்சியே வராமலிருக்க சிறந்த வழியும் தானம்தான். என்ன குழப்புகிறேனா? உண்மைதான்.

நம் சம்பாத்தியத்தில், மாத வருமானத்தில் 5 அல்லது 10 சதவீதம் கட்டாயமாக இல்லாதவர்களுக்கு வழங்கி வாருங்கள் வறட்சி, பற்றாக்குறை, இல்லாமை, கடன் என்ற வார்த்தைகளைக்கூட மறந்தவர்களாகி விடுவீர்கள்.

அதற்காக அந்த பணத்தை CRY, UNICEF, உதவும் கரங்கள் என்று தேடிபிடித்து அனுப்ப சொல்லவில்லை. வீட்டிலிருந்துதான் உதவி ஆரம்பிக்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அயலார்கள், தெரிந்தவர்கள், அவர்களை சூழ்ந்தவர்கள் என்று தேவைகள் அருகாமையிலேயே இருக்கும். அதற்காக உதவும் நிறுவனங்களுக்கு அனுப்ப அவசியம் இல்லை என்று சொல்லவரவில்லை, இந்த மாதம் இவர்களுக்கென்றால் அடுத்த மாதம் அவர்களுக்கு அவ்வளவுதான்.

இப்படி எல்லோரும் ஒரு கொள்கையாக, செயற்திட்டமாக கொண்டுவிட்டால் நமக்கும் துன்பமில்லை பிறருக்கும் இன்னல் இல்லை.

வலது கையால் கொடுப்பது இடது கையிற்கு கூட தெரியாமல் கொடுங்கள். பண உதவியை நமக்கு நாமே கட்டாயமாக்கிக் கொண்டோமானால் தானாக வரவு பெருகும். எப்படின்னு கேட்காதீர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பண உதவியை தவிர அறிவு தானம் தரலாம், ஓய்வு நேரத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி சொல்லி தரலாம். நமது பழைய உடுப்பை சுத்தம் செய்து இல்லாதவர்களுக்கு தரலாம். அலுவலகத்தை பழுதடைந்த கருவிகளை, கணினிகளை இலவச பாடசாலைகளுக்கோ, பிற உதவி நிறுவனங்களுக்கோ தந்து உதவலாம். உதவி என்று ஆரம்பித்து விட்டாலே தானாக சிக்கனம் கூடி, பிறருக்கு கொடுக்க கை நீளும்.

'எங்க வாங்குவது கையிற்கும், வாயிற்கும் தான் சரியாக இருக்கு' என்று நினைத்துக்கூட விட வேண்டாம். அந்த ஐந்து சதவீதம் நீங்கதான் கையில் கிடைப்பதாக எடுத்துக் கொள்ளுங்களேன். கடன்கள் எல்லாம் முடிவடையட்டும் பிறகு கொடை கொள்கையை ஆரம்பிப்போம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை என்பது எப்போதும் வராத இன்றின் நேற்று. ஆகவே நல்ல காரியத்தை தள்ளிப் போடாமல் உங்கள் வருவாயிலிருந்து மாத மாதம் 5 அல்லது 10 சதவீதத்தை உதவிக்கு என்று எடுத்து வையுங்கள்.

இப்படி எல்லோரும் செய்ய தொடங்கி விட்டாலே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும், இல்லாமை இல்லாத நிலையும் இருக்கும்.

7 மறுமொழிகள்

சொன்னது...

விழுக்காடுகளை அவரவர் விருப்பத்துக்கு விடுதல் நலம். முதலில் குறைந்த விழுக்காட்டில் தொடங்கி, ஈகையின் இன்பத்தை அனுபவிப்பவர்கள் தாமாகவே கூட்டிக் கொள்வர்.

சிந்திக்கவும் செயலாற்றவும் தூண்டக் கூடிய பதிவு. வாழ்த்துகள்!

அருகாமை=அருகிப் போகாதது; எனவே அண்மை என்றெழுதுக!

என் வேண்டுகோளை ஏற்று, எழுத்தை வெளுத்துப் போட்டதற்கு நன்றி!

சொன்னது...

//விழுக்காடுகளை அவரவர் விருப்பத்துக்கு விடுதல் நலம். // அதுவும் சரிதான்.

//முதலில் குறைந்த விழுக்காட்டில் தொடங்கி, ஈகையின் இன்பத்தை அனுபவிப்பவர்கள் தாமாகவே கூட்டிக் கொள்வர்.// கூட்டினால் சரி.

வாழ்த்துக்கு நன்றி. அண்மை என்று திருத்திக் கொள்கிறேன். எழுத்தின் நிறம் மாற்றியதால்தான் என்னாலேயே ஒழுங்கா படிக்க முடியுது. நன்றி.

சொன்னது...

ஒரு திருக்குறள், ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் இரண்டையும் வைத்துக் கொண்டு ஒரு அழகான கட்டுரையை சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் கருத்துக்கள் பலரை சென்றடையும். நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டிய தானம் இதுதான்
அதற்கான சொல்'வளம்' உங்களிடம் இருக்கிறது.
நன்றி

சொன்னது...

ஜெஸிலா,

அருமையான சிந்தனை. நம்மால் என்ன முடியும் என்று இருக்காமல், வருவது செலவுக்கே சரியாக இருக்கிறது என்று மடிக்காமல் முடிந்ததை கைக்கெட்டிய தூரத்தில் இருப்பவருக்குச் செய்தால் உலகம் கண்டிப்பாக வளம் பெறும். அதற்கு பெரிய புரட்சியோ, பெரிய இயக்கங்களோ தேவையில்லை. தனிமனித மன மாறுதல் போதும்.

அன்புடன்,

மா சிவகுமார்

சொன்னது...

நல்ல சிந்தனை.. நான் எனக்குள் நினைத்து செய்துகொண்டிருக்கும் விசயம்...;-)

சொன்னது...

//நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டிய தானம் இதுதான்
அதற்கான சொல்'வளம்' உங்களிடம் இருக்கிறது.// மிக்க நன்றி நண்பரே.

//தனிமனித மன மாறுதல் போதும்.// சரியா சொன்னீங்க. அந்த மன மாற்றம்தான் எப்ப வரும் ஒவ்வொருவருக்கும்ன்னு தெரியல.

செல்வேந்திரன் கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள்.

சொன்னது...

தானம் என்றால் பணம் கொடு்த்து மட்டும் உதவுதல் என்று இல்லாமல்
கீழே குறிப்பிட்டுள்ளது போல எந்த வகையிலும் தானம் செய்யலாம் என்று உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் சிறந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

//பண உதவியை தவிர அறிவு தானம் தரலாம், ஓய்வு நேரத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி சொல்லி தரலாம். நமது பழைய உடுப்பை சுத்தம் செய்து இல்லாதவர்களுக்கு தரலாம். அலுவலகத்தை பழுதடைந்த கருவிகளை, கணினிகளை இலவச பாடசாலைகளுக்கோ, பிற உதவி நிறுவனங்களுக்கோ தந்து உதவலாம். உதவி என்று ஆரம்பித்து விட்டாலே தானாக சிக்கனம் கூடி, பிறருக்கு கொடுக்க கை நீளும்//

Blog Widget by LinkWithin